Arms and the Man (1894) நாடகத்தை விவரிக்க ஒரு வார்த்தை போதும். Delightful.
ஷா எனக்குப் பிடித்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். எனக்கு நாடகத்தின் சாத்தியங்களைப் புரிய வைத்த முதல் ஆசிரியர் அவர்தான். வசனம் மூலமாக மட்டுமே நாடகத்தை நகர்த்துபவர் என்று அவர் விமர்சிக்கப்படுகிறார்தான். ஆனால் என் கண்ணோட்டத்தில் இதெல்லாம் ஒரு குறையே அல்ல. இத்தனை ஆண்டுகள் கழித்து நகைமுரணுக்காக (irony) மிகவும் முயற்சிக்கிறார், நகைமுரண் மட்டுமே நாடகம் அல்ல என்று ஒரு குறை தெரிகிறது. அப்படிப்பட்ட அணுகுமுறை மானுட தரிசனங்களைக் குறைத்துவிடுகிறதுதான். ஆனாலும் ஷா சாதனையாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஷாவின் நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது Arms and the Man-தான். ஸ்டீரியோடைப் கதாபாத்திரங்களை வைத்து ஸ்டீரியோடைப்களை மேலும் பொலியச் செய்வதும் அவ்வப்போது அந்த ஸ்டீரியோடைப்களை உடைப்பதும் ஷாவுக்கு கைவந்த கலை. இந்த நாடகத்தில் அது மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. நகைச்சுவை மிளிர்கிறது. பற்றாக்குறைக்கு போரில் வெற்றி என்பதில் ஏற்படும் பெருமிதம் என்பது – romanticizing war and victories – எத்தனை பொய்யான பிம்பம் என்பதையும் தெளிவாகக் காட்டிவிடுகிறார். பொதுவாக இப்படி போரையும் வெற்றியையும் கட்டுடைப்பவர்கள் மிக சீரியசாக எழுதுவார்கள். ஷா போரை ஒரு கேலிக்கூத்தாகக் காட்டுகிறார். எந்தக் குழுவுக்கும் தலைமை வகித்தவர்களுக்குத் தெரியும், எத்தனை மடத்தனமான விஷயங்கள் திட்டங்களை முறியடிக்கும் என்று. ஷா அதைத்தான் முன்வைக்கிறார்.
நாடகத்தின் பின்புலம் செர்பியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையே 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த போர். இன்னும் குதிரைப்படைகள் போரில் பயன்படுகின்றன. நாயகி ரெய்னாவுக்கும் பல்கேரியப் படையின் கேப்டன் செர்ஜியசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.செர்ஜியசின் வீர சாகசத்தால் பல்கேரியப் படை வென்றுவிட்டது. தோற்ற செர்பியப் படையின் கூலிப்படை வீரன் (mercenary soldier) ப்ளண்ட்ஷிலி தப்பி ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ரெய்னாவின் படுக்கை அறைக்குள் புகுந்து ஒளிந்து கொள்கிறான். ரெய்னாவுக்கு அவன் மேல் பரிதாபம், தன் காதலனின் வீரச் செயலால்தான் இவன் ஓடினான் என்ற பெருமை. ஆனால் ப்ளண்ட்ஷிலி அவளுக்கு இருக்கும் பிம்பங்களை உடைக்கிறான். ரெய்னாவுக்கு இந்தப் வெற்றிப் பெருமிதம் எல்லாம் அடிப்படை அற்ற பிம்பம் என்று கொஞ்சம் புரிகிறது. ப்ளண்ட்ஷிலி தப்ப உதவுகிறாள்.
ப்ளண்ட்ஷிலி தன்னைப் பற்றிய எந்த மாயைகளும் இல்லை. அவனுக்கு ரெய்னாவின் romantic மனநிலை புரிகிறது. அவள் பந்தா காட்டும்போது, வீரவசனம் பேசும்போது எல்லாம் தனக்கு உண்மையில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியும் என்பதை ரெய்னாவுக்கு உணர்த்துகிறான். இருவருக்கும் நடுவில் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் ப்ளண்ட்ஷிலியின் கண்ணில் ரெய்னா சிறு பெண்.
ரெய்னாவுக்கு தனக்கு செர்ஜியஸ் மேல் இருக்கும் ஈர்ப்பு வலுவான அஸ்திவாரம் இல்லாதது என்று புரிகிறது. ஆனால் சமூகநிலையால் சீன் காட்டிக் கொண்டிருக்கிறாள். செர்ஜியசுக்கும் அதே நிலைதான். இந்த சமயத்தில் ப்ளண்ட்ஷிலி திரும்பி வருகிறான். பி.ஜி. வுட்ஹவுஸ், க்ரேசி மோகன் நிலை குழப்பங்களுக்குப் பிறகு பளண்ட்ஷிலியும் ரெய்னாவுக்கும் திருமணம் உறுதியாகிறது.
ப்ளண்ட்ஷிலியின் தன்னை அறிந்திருக்கும் குணமும், ரெய்னாவும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளாத பாத்திரமாக பரிணமிப்பதும் சிறப்பாக எழுதப்பட்டவை. ரெய்னா ஸ்டீரியோடைப்பை உடைக்கும் பாத்திரம் என்றால், பல துணைப்பாத்திரங்கள் – ரெய்னாவின் தாய் தந்தையர், “பட்லர்” நிகோலா, இரண்டாம் நாயகி லௌகா – போன்றவை ஸ்டீரியோடைப்களை மேலும் பொலிவாகக் காட்டுகின்றன. செர்ஜியஸ் பாத்திரத்தில் ஷா மிகக் கடினமான ஒன்றை நிகழ்த்துகிறார் – ஸ்டீரியோடைப் பாத்திரத்தை மேலும் பொலியவும் செய்கிறார், ஸ்டீரியோடைப்படை உடைக்கவும் செய்கிறார்.
பொதுவாக ஷாவின் பாத்திரங்கள் நிறைய பேசுவார்கள். சான்ஸ் கிடைத்தால் பக்கம் பக்கமாகப் பேசுவார்கள். இதில் குறைவாகத்தான் பேசுகிறார்கள்! அரைப் பக்கத்துக்கு மேல் வசனம் கிடையாது என்று நினைக்கிறேன்.
கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். நான் நாலைந்து வருஷத்துக்கு ஒரு முறையாவாது திரும்பப் திரும்பப் படிக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் ஷா பக்கம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...