குஷ்வந்த் சிங்: Why I Supported the Emergency

குஷ்வந்த் சிங் இந்திய வாசகர்களுக்கு பரிச்சயமான பேர். இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். Train to Pakistan என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். சீக்கியர்களின் வரலாறு பற்றி நிறைய எழுதி இருக்கிறார். பொழுதுபோக்கு பத்திகளை (With Malice towards One and All) தான் இறக்கும் வரை எழுதினார் என்று நினைக்கிறேன்.

சிங் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா சோபா சிங் சர் பட்டம் பெற்றவர். ரியல் எஸ்டேட்டில் கொழித்திருக்கிறார்.  ஒரு காலத்தில் பாதி டில்லி அவருக்குத்தான் சொந்தமாம். டில்லியின் முதல் இந்திய நகராட்சித் தலைவர் அவர்தான். அவரது சித்தப்பா உஜ்ஜல் சிங் ஒரு காலத்தில் தமிழகத்தின் கவர்னராக இருந்தவர். குஷ்வந்த் லண்டனில் படித்து வக்கீல் பட்டம் பெற்றவர். 1947-இல் இந்திய அயல்நாட்டு தூதரகங்களில் பணி புரிந்திருக்கிறார். (நேரு-எட்வினா மவுண்ட்பாட்டன் உறவுக்கான நேரடி சாட்சிகளில் ஒருவர்). இந்திரா காந்தியை அவசரநிலை காலத்தில் முழுமனதாக ஆதரித்திருக்கிறார். இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையை ஒரு காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் முதன்மையானதாக ஆக்கினார். 1974-இல் பத்மபூஷன் (operation blue star-இன் போது திருப்பிவிட்டார்), 1984-இல் சீக்கியர்கள் டில்லியில் கொல்லப்பட்டதை கடைசி வரை எதிர்த்து குரல் கொடுத்தவர் (ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கடைசி வரை வருத்தம் இருந்திருக்கிறது), 2007-இல் பத்மவிபூஷன். 99 வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து இறந்திருக்கிறார்.

Why I Supported Emergency (2009) அவரது பத்திகளின் தொகுப்பு. படிக்கலாம்.

அவரது பத்திகளின் சுவாரசியம் மூன்று வகையானது.

முதலாவதாக, அவருக்கு உயர்மட்டத்தில் இருந்த தொடர்புகள்,  வரலாற்றை அருகில் இருந்து நேரடியாக, தானே பார்த்த அனுபவங்கள் இருக்கின்றன என்பதால் நம்பகத்தன்மை மிகுந்த் நினைவுகளை எழுதி இருக்கிறார்.

இரண்டாவது அவர் பிம்பங்களை சர்வசாதாரணமாகக் கட்டுடைப்பது. The way he brings down famous people to earth. உதாரணமாக ஆக் கி தரியா என்ற சிறந்த நாவலை எழுதிய க்வாரதுலைன் ஹைதரை “ஆன்டி சப்ஜாந்திவாலி” என்று குறிப்பிடுகிறார். ஒரு அடைமொழியில் ஹைதரின் பெரிய எழுத்தாளர் என்ற பிம்பத்தை உடைத்து சாதாரண மனிதர் ஆக்கிவிடுகிறார்.

மூன்றாவதாகஅவருக்கு sex sells என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதனால் அங்கங்கே சில நினைவுகளை எழுதுகிறார். நேரு-எட்வினா உறவு பற்றி நானூறு பக்கத்தில் நாலு பாரா வரும். ஓவியர் அம்ரிதா ஷெர்-கில்லைப் பற்றி ஒரு பத்தி எழுதினால் அவரது தனிப்பட்ட காம வாழ்வைப் பற்றி பாதி பத்தி இருக்கிறது. நடனக் கலைஞர் ப்ரோதிமா பேடி பற்றி எழுதினால் அவரது கட்டற்ற காம வாழ்வைப் பற்றித்தான் பத்தியே. ஆனால் இதை அந்த அளவுக்கு எழுத வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. நானூறு பக்கப் புத்தகத்தில் இருபது இருபத்தைந்து பக்கம்தான் இப்படி இருக்கும், ஆனால் (என் போன்ற) சாதாரணர்களுக்கு அது நினைவில் நிற்கும், மிச்ச பத்திகளையும் படிப்பார்கள் என்று உணர்ந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் அவர் எழுத்தாளர்களைப் பற்றி எழுதியவைதான். அவர்களை with all their foibles சித்தரிக்கிறார். உதாரணமாக சுத்த சைவ உணவுக்காரரான ஆர்.கே. நாராயணுடன் ஹவாயில் சில நாட்கள் ஏதோ செமினாருக்காக தங்கி இருக்கிறார். நாராயண் தயிர் சாதம் மட்டுமே சாப்பிட, இவர் கதை கந்தலாகி இருக்கிறது. நாராயணுடன் சேர்ந்து ஒரு நீலப்படம் வேறு பார்த்திருக்கிறார். நாராயண் முன்னோடி எழுத்தாளர், ஆனால் ஹெமிங்வேயோ ஃபாக்னரோ அல்லர், க்ரஹாம் க்ரீனின் ஆதரவில்தான் அவர் வெற்றி பெற்றார் என்கிறார். உண்மைதான். பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களைப் பற்றி அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. சல்மான் ரஷ்டி வரும் வரை இதெல்லாம் இரண்டாம் தர எழுத்துத்தான் என்கிறார்.

க்வாரதுலைன் ஹைதர் ஆக் கி தரியாவை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்து மொழிபெயர்த்திருக்கிறார். குஷ்வந்தின் வார்த்தைகளிலேயே –

So we have thees, thous along with yeah, yep, omigosh and get lost. But no one dared tell Annie Appa that she should allow someone else to handle her fiction. She was the Subjantiwalli. If River of Fire did not become the rage in English that it was in Urdu, she had only herself to blame.

வி.எஸ். நைபால் அவருக்கு பிடித்த எழுத்தாளர். நைபாலுக்கு ராமர் கோவிலுக்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லையாம். நைபால் இந்தியாவுக்கு வந்தபோது அவரை நாலு இடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் காட்டி இருக்கிறார். நைபாலுக்கு அழகை விட அசுத்தங்கள்தான் கண்ணில் பட்டன என்கிறார். அவரது வார்த்தைகளிலேயே

He had less to say about the autumn crocus (saffron) scent pervading the atmosphere and more about Kashmiri women lifting their pherans and squatting to defecate. Squalor and stench attracted his attention more than scenic beauty and fragrance.

முல்க் ராஜ் ஆனந்த் பேசிப் பேசியே கழுத்தறுப்பாராம். ஒரு முறை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கட்டுரை கேட்க, இவர் வேறு ஒரு கட்டுரையை வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடித்துக் கொடுத்துவிட்டு பிறகு மாட்டிக் கொண்டாராம்.

அம்ரிதா ப்ரீதம் நன்றாகத் தெரிந்தவர். அவரது புத்தகங்கள் விற்கவில்லை, ஆனால் அரசிடம் பெற்ற பரிசுகளை வைத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்கிறார். அவரது ஒரு கவிதையை (வாரிஸ் ஷா பற்றி) மட்டுமே நல்ல படைப்பு என்கிறார். இத்தனைக்கும் இவர்தான் பிஞ்சர் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மிர்சா காலிப் வாழ்வின் இன்பங்களை ரசித்தவராம்.

When someone warned him (Ghalib) that the prayers of persons who drank wine were never granted, he said: ‘My friend, if a man has wine, what else does he need to pray for?’

இந்திரா காந்தியை எப்போதும் ஆதரித்திருக்கிறார். சஞ்சய் காந்தியைக் கண்டு இந்திரா அஞ்சினார் என்கிறார். வேறு வழியில்லாமல்தான் அவசரநிலையின் அதிகார துஷ்பிரயோகங்களை வேண்டாவெறுப்பாக குறிப்பிடுகிறார். 1984-இல் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக – குறிப்பாக அத்வானி – ஆதரவு தந்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார். மசூதி இடிக்கப்பட்ட பின் அத்வானியோடு மனக்கசப்பு.

மொத்தத்தில் சுவாரசியமான, ஆனால் பொழுதுபோக்கு புத்தகம் மட்டுமே. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: குஷ்வந்த் சிங் விக்கி குறிப்பு

2 thoughts on “குஷ்வந்த் சிங்: Why I Supported the Emergency

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.