நண்பர் விசு நாஞ்சில்நாடனோடு பழகிய நாட்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஓவர் டு விசு!
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து :
***
கம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கனும்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன ஒரு பூனை, மொத்த பாற்கடலையும் நக்கிக் குடிச்சுடுவேன்னு நினைக்கறது மாதிரி, ராம காவியத்தை பாட வந்திருக்கேன்னு கம்பன் சொல்றான்” என்று ஆரம்பித்தவர், அடுத்த இரண்டு நாட்கள் ‘ராவணன்’ என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். தலைப்பு ராவணனாக இருந்தாலும், அவர் உரையில் வந்த கும்பகர்ணனின் பாடல்கள் என் நினைவை விட்டு நீங்கவேயில்லை.
‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்கு போகேன்;’
‘தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண் மேல்?’
‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;’
‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை;’
“வான்மீகியும், கம்பனும் கையாண்டது செவ்வியல் வடிவம். ராமாயணத்திற்கு நாட்டாரியல் கதைகளில் நிறைய version உள்ளது. ஏதாவது பல்கலை, அனைத்து வடிவங்களையும் திரட்டி ஆராயவேண்டும்” என்றார். மூன்றாம் நாள், மரபிலக்கியம் பற்றி ஒரு அறிமுக வகுப்பெடுத்தார். முதல் நாள் வந்தவர்கள் பெரும்பாலும் மூன்று நாட்களும் வந்திருந்தார்கள். அவர் சொல்வதையே வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த எங்களிடம் “இப்ப வெறும் சக்கையதாங்க மெல்றோம். சாற தொலச்சிட்டோம். நிறைய பண்டிதர்கள் இருந்தாங்க. சில சமயம் என் மனசுல ஒரு வரி ஓடிட்டே இருக்கும். எந்த பாட்டுல அந்த வரி வருதுன்னு சட்டுனு பிடிபடாது. அவங்ககிட்ட கேட்டா உடனே சொல்லிடுவாங்க. அதே பொருள் வர்ற மத்த பாட்டும் சொல்லுவாங்க. எல்லோருக்கும் எண்பதுக்கு மேல வயசாயிடுச்சு. இனி அந்த மாதிரி யார் இருப்பாங்கன்னு தெரியலை” என்றார். கணினி இருக்கும்போது, வரி கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அது போலவே நல்ல தமிழ் அகராதியும், பதம் பிரிக்கப்பட்ட பாடல்களையும் வைத்து, reference பாடல்களையும், கணினி துணை கொண்டு அடையாளம் காண முடியும். நாஞ்சில் இருக்கும்போது, அவருடைய படைப்புகளைப் பற்றி பேசாமல், பழந்தமிழ் வகுப்பெடுக்கச் சொல்கிறோமே என்று ஒரு சிறிய வருத்தம் இருந்தது. ஆனால், நாஞ்சில் படைப்புகள் உள்ளிட்ட நவீன இலக்கியம், மண் மேல் இருக்கும் நீர்த்தடாகம் போல. எங்கள் சிலிக்கன் ஷெல்ஃப் வட்டத்து ஆட்களுக்கு அதை கண்டடைவது கடினமல்ல. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் நிலத்தடி நீர் போல, நீர் நோட்டம் பார்த்துச்சொல்லும் ஆசான் இல்லாமல் வாய்ப்பே இல்லை.
முதல் நாள் முடிவில், மரபிலக்கியத்தை புதிதாக துவங்க வேண்டுமென்றால் எங்கிருந்து துவங்க என்று கேட்டேன். ஆத்திச்சூடியிலிருந்து இருந்து துவங்கலாம் என்றார். ஒரு கணம், சார்.. ஆத்திச்சூடியா.. அறம் செய்ய விரும்பெல்லாம் தெரியுமே என்று நினைத்தபோதே, நாஞ்சில், ஆத்திச்சூடியில் ‘ஔவியம் பேசேல்’ என்று வருகிறது, ‘ஔவியம்’ என்றால் என்ன ? எத்தனை பேருக்கு தெரியும், நீங்கள் மரபிலக்கியத்தை எதற்காக படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அழகியலுக்கா, கவிதைக்கா, சொற்களுக்கா, உவமைகளுக்கா, வாழ்வனுபத்திற்கா என்பதைப் பொறுத்து, நீங்கள் நூல்களை தேர்வு செய்யவேண்டும். ஔவையிலும், வள்ளுவனிலும் துவங்கலாம். பக்தி இலக்கியம், நவீனத் தமிழிற்கு அருகிலேயே உள்ளது; பதம் பிரிக்க கற்றுக் கொண்டீர்களென்றால், கம்ப ராமாயணத்தில், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் முக்கால்வாசி உங்களுக்கு புரியும்; அகராதி துணையுடன் மற்ற சொற்களுக்கும் பொருள் கொள்ளலாம்; சங்க இலக்கியத்திற்கு உரை ஆசிரியர்கள் துணை வேண்டும் என்றார்.
பிறகு, எழுத்தாளனாக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார். “விற்போர்ல ஈடுபடறவனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அவன் கூடவே ஒருத்தன் இருப்பான். எதிரியோட தரம், தூரம், ரதத்தோட வேகம்ன்னு பல கணக்குபோட்டு, அவன் அம்பறாத்தூளியில அம்ப நிரப்புவான். வில்லாளி, தூளியில கை வச்சான்னா, அந்தக் கனத்துக்கேத்த மாதிரி அம்பு இருக்கனும். அப்பதான் ஜெயிக்கமுடியும். அந்த மாதிரி, ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ ஒரு இடத்தில ஒரு வார்த்தை போடணும்னா, அவனுக்கு அந்த இடத்தில போடறதுக்கான சரியான சொல் வரணும். கம்பன் அந்த மாதிரியான ஒரு கவிஞன். அவனோட காவியத்தில எந்த இடத்திலயும், அங்க இருக்கிற சொல்ல விட வேற ஒரு சொல்ல யோசிக்க முடியாது. சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்துன்னு சொல்லியிருக்கானே வள்ளுவன். காவியங்களையும், மரபிலக்கியத்தையும் படிங்க, உங்க அம்பறாத்தூளி நிறையும்” என்றார். அதை ஒட்டி, முத்துகிருஷ்ணன் நவீன கவிதைகளை பற்றி நாஞ்சிலின் கருத்தை கேட்டார். “மரபுக் கவிதைகளில் இருக்கிற இலக்கணம் வேண்டாம்னா, இவங்க சங்க இலக்கியத்த நோக்கி போயிருக்கனும். அதில எதுக மோன இல்ல, கடுமையான இலக்கிய விதிகள் இல்ல. ஆனா, கவித்துவம் இருக்கு. இவன், ஒரு வரிய உடச்சி உடச்சி கவிதைன்னு எழுதறான். மொத்தமா எழுதினா, முப்பது பத்தி தாண்டாது. அத கவிதைன்னு போட்டுக்கறான். ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உபயோகபடுத்த மாட்டேங்குறான். என்ன மயித்துக்கு இவன் பத்து லட்சம் சொல் இருக்கிற மொழில எழுதறான்” என்று ஒரு பிடிபிடித்தார். கெட்ட வார்த்தைகளோ, வில்லங்கமான பழமொழிகளோ சொல்லும்போது, “பெண்கள் யாரும் இல்லைதான” என்று ஒரு தடவை சுற்றும்முற்றும் பார்த்துக்கொள்வார். “எக்ஸ்க்யூஸ் மி ஃபார் மை லாங்வேஜ்” என்று ஒரு முன்னறிவிப்பும் வந்துவிடும். (கவிதையா, காவியமா அப்படீன்னா என்று கேட்டு பல மைல் தூரம் ஓடும் நான், இவர் மந்திரித்து விட்டதில், வை.மூ.கோ.வின் கம்ப ராமாயண உரையை உடுமலை தளத்தில் வாங்கிவிட்டேன். தனியாக படித்து முடிப்பதற்கு கம்பனின் அருளும், நாஞ்சிலின் ஆசியும்தான் துணை புரிய வேண்டும்.)
மூன்றாம் நாள் பேசும்போது, ‘பெரியாழ்வாருடைய டபுள் ஆக்ட் ஆண்டாள்’ என்று சொல்வது தவறு என்றவர், ஆண்டாளின் பாடல்களை சுட்டி, இவற்றை ஒரு பெண் மட்டுமே எழுதியிருக்கமுடியும் என்றார். சமீபத்திய – நெல்லை பல்கலை கழகத்தில் பாடதிட்டத்தின் ஆண்டாள் கதை controversy பற்றி கேட்டபோது, ஆண்டாள் நந்தவனத்தில் கிடைத்த குழந்தை; எந்த குலம் என்று தெரியாது, தாய் தந்தை தெரியாது; அன்றைய சமூகம் அவளை முறை தவறிய குழந்தையாக கருதியிருக்கும்; தன்னை யார் திருமணம் செய்ய வருவார்கள் என்று நினைத்து, அவள் எவ்வளவு வேதனைபட்டிருப்பாள்; அந்த சோகத்தை முன்னிலைப்படுத்தாமல், அவள் பிறப்பை மட்டுமே இழிவுபடுத்துவது தனக்கு உவப்பல்ல என்றார்; ஆண்டாள் எழுதிய மொழியில், இன்று பெண்கள், சுதந்திரமாக எழுவதற்கு உகந்த சூழல் இல்லை; சில எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய வாசகர்களிடமும் இருந்து, ஆபாச குறுஞ்செய்திகளில் தொடங்கி பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று சில உதாரணங்களைச் சொன்னார். செம்மொழியான தமிழ்மொழியில் எழுத ஒன்று கிழவியாக (அவ்வை) இருக்கவேண்டும், இல்லையென்றால் பேயாக (காரைக்கால் அம்மையார்) இருக்க வேண்டும் என்றார்.
பின்பு ஒரு நாள் ‘சொல்’ பற்றி பேசும்போது, ‘தெரிவை’ (மாமனார், கைத்தலம் பற்ற கனாக் காணும் கதை) என்ற கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். தெரிவைன்னா என்னான்னு தெரியாது, அதனால, கதை தலைப்ப ‘நீலவேணி டீச்சர்’ ன்னு மாத்திட்டான் எடிட்டர். பல சொல் நம்ம மொழியில் இருந்து அழிந்துவிட்டது. உதாரணமாக ‘அவ்வ’ என்ற சொல். வயதான முதாட்டியை குறிக்கும் சொல். (‘அவ்வையாரின்’ வேர்ச்சொல்). தமிழில் அது புழக்கத்தில் இல்லை. ஆனால், படுக மொழியிலும், தெலுங்கிலும் இருக்கு. நாம் பத்தாம் நூற்றாண்டில் பயன்படுத்திய பல சொற்கள் மலையாளத்தில் இன்றும் உள்ளது. நம்மால் இந்த சொற்களை ஆவணப்படுத்தக்கூட முடியல. 1920களில் வந்த அகராதியை விட அதிக சொற்கள் கொண்ட அகராதி அதுக்கு பிறகு வரலை. கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்லகராதி’, ‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு’, தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட ஒரு நெசவுத் தொழிலாளியின் ‘எதுகை அகராதி‘ என்று அமைப்பின் உதவியில்லாமல், தனி நபர்கள் தங்கள் உழைப்பால் அகராதி உருவாக்குகிறார்கள். அரசோ, பல்கலைக்கழகங்களோ அவர்களை அங்கீகரிப்பதில்லை என்றார்.
முதல் நாள் சொற்பொழிவில் வந்த நண்பரை (இளங்கோ?) அறிமுகப்படுத்திய ராஜன், இவர் சிறுகதைகள் எழுதுவார் என்றார். “கதைகள அனுப்புங்க, ராயல்டி கேக்காத எழுத்தாளர்கள நம்ம பப்ளிஷ்ர்கள் தேடிட்டு இருக்காங்க” என்று சொன்னவர், “முதல் பதிப்புக்கு ஏதோ ராயல்டி தருவாங்க. இரண்டாவது, மூணாவது பதிப்புக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது” என்றார். “தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை புடுங்கி வச்சுட்டா. ஏம்மா, கிழிஞ்சா பரவாயில்ல, வேற புத்தகம் வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். குழந்தைகள பாடப்புத்தகங்கள் தவிர வேற புத்தகங்களை தொட விடமாட்டேங்குறாங்க பெற்றோர்கள். அவங்க கிட்டதான் பிரச்சனை” என்றார்.
நீங்க கடந்த சில வருடங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள், அமெரிக்கா என்று பல வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள், அங்கு தமிழர்களின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். மலேசியத் தமிழர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள்; அமெரிக்காவில் ஒரு சாரார் தங்கள் வேரோடு/மரபோடு தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்கள், மற்றொரு சாரார் முழுக்க அமெரிக்கர்களாகவே மாறிவிட்டார்கள்; வளைகுடா நாடுகளில்தான் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றார். (தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, அவள் முதலாளியோ, யாரோ ஓங்கி முதுகில் அடித்தான் என்றார்.) வேறோரு நாளில், பாலாஜி இங்குள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு, “எனக்கு உங்களைப் பத்தி கவலையில்லங்க. நீங்க யாரும் வழி தவறிய ஆடுங்க இல்ல, வழியைத் தேடிக்கிட்ட ஆடுகள், நீங்களும், உங்க புள்ளங்களும் பொழச்சுக்கும். நான் என் நாட்டப் பத்தி கவலைப்படுறேன். நேத்து இரண்டு நூலகத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க, அத பாத்த பின்னாடி, எங்கேயாவது மூலையில உக்காந்து ஓன்னு அழலாம் போல இருக்கு. இங்க புக்கெல்லாம் எப்படி அடுக்கி வெச்சிருக்கான். நம்ம ஊர் லைப்பரரில போய் ஒரு புத்தகத்த தேடினா ஆஸ்துமா வந்துடும்” என்று வருத்தப்பட்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, இளைய தளபதி விஜய் தன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக Bay Area வந்திருந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நாற்பது டாலர்கள் கட்டணம் கட்டி, ஐந்நூறு-அறுநூறு தமிழர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்து பேதியடைந்த இளைய தளபதி பாதியிலேயே போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார். இதை நாஞ்சிலிடம் தெரிவித்தபோது உண்மையிலேயே நொந்துவிட்டார். “கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் விழாவுக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அதுக்கு முந்தய வருஷம் சிறப்பு விருந்தினர், எட்டாம் கிளாஸ் படித்த ‘காதல்’ பட நாயகி. மேடையிலேயே, ‘ஏண்டா, அவகிட்டருந்து என்னடா கத்துகிட்டீங்கன்னு’ ஒரு பிடி பிடிச்சேன். ஒரு அழுகல் கேக்க பாதி நம்ம ஊர்ல திங்கறான். மீதிய நீங்க திங்கிறீங்க. தமிழர்களுக்கு எப்ப சினிமா மோகம் குறையுமோ தெரியலை” என்றார். இயக்குனர் பாலாவின் ‘பரதேசி‘ படத்தில் கதை-வசனம் எழுதுவதாக சொன்னவர், “நாம் ஒரு சீன எழுதிக் குடுப்போம். டைரக்டர் அவரு கற்பனைக்கு ஏத்த மாதிரி, அத வேற லெவலுக்கு எடுத்துட்டு போவார்” என்று ஒரு உதாரணம் சொன்னார். (வெள்ளித்திரையில் காண்க – அது பட க்ளைமேக்ஸ்.) சில இயக்குனர்கள், தன் நாவல்களிலிருந்து பல பகுதிகள், க்ளைமேக்ஸ் போன்றவற்றை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள் என்றவர், “சம்பளமெல்லாம் பேசலீங்க. ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்தான். படம் பேர் போடும்போது, நம்ம பேர் வந்தா சரி. நான் அதத் தவர வேற எதயும் எதிர்பார்க்கல” என்றார்.
தொண்ணூறுகளின் இறுதியில், புலமைப் பூசல், எழுத்தரசியல் காரணங்களுக்காக, ஜெயமோகனை விட்டுவிட்டு தங்கள் தரப்பிற்கு வருமாறு சொன்னவர்களிடம், “ஜெயமோகன் கொலையே பண்ணிருந்தாலும், நான் அவனோடதான் இருப்பேன். உங்களோட வரமுடியாதுன்னுட்டேன்” என்றவர், “இவன் வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு வந்த நாளெல்லாம் இருந்திருக்கு, ஆனா, அடுத்த நாளே திரும்ப போயிருக்கேன். ஏன்னா, அவன் என் மொழியில தோன்றின அபூர்வமான கலைஞன்” என்று மேலும் சில நிகழ்வுகளை சொன்னார். ஜெயமோகனுக்கும் நாஞ்சிலுக்கும் உள்ள நட்பை அறிந்திருந்தாலும், அவர் சொல்லும்போதே, அதில் நட்பை மீறிய பாசமும் தெரிந்தது. தான் எழுதத் துவங்கிய காலத்தில் தன்னை ஊக்கப்படுத்திய மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்.
“தன்ராம்சிங் மாதிரி கதைகள படிச்சு, அதன் பாதிப்பிலிருந்து வெளிவர நாங்கள்லாம் சிரமப்படறோம், நீங்க எழுதும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும், நேரம், இடம்ன்னு தேர்ந்தெடுத்து எழுதுவீங்களா” என்ற கேள்விக்கு, “உக்கிரமான பகுதிகள், முக்கியமா காமம் சார்ந்த பகுதிகள் எழுதும்போது, காதெல்லாம் சிவந்து, மனசு வேறேங்கயோ இருக்கும். யாராவது அப்ப வந்து டிஸ்டர்ப் பண்ணா, கடும் கோபம் வந்து எரிஞ்சு விழுவேன். எழுதறதுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. நிறைய முறை ஆஃபீஸ்லயே உக்காந்து எழுதிருக்கேன். எவனாது வந்து கேட்டான்னா, போடா மயிரு, நீ குடுக்குற சம்பளத்த விடவே அதிகமாவே வேலை செஞ்சுட்டேன்னு சொல்லிடுவேன்” என்றார்.
“என்னால உணர்ச்சிகரமாக பேசமுடியும், ஆனா பேசமாட்டேன். என் தொழில் எழுத்து. அதனால, பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி எதிர்பார்க்க வேண்டாம்” என்று கம்ப ராமாயண உரைகளின்போது சொன்னவர், பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த பாராட்டு விழாவின் ஏற்புரையின்போது, ஒரு உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார். அதற்கு முன் நாங்கள் ஏழு பேர் பேசி, வந்தவர்கள் பொறுமையை சோதித்தோம். முதலில் ஏற்புரை வழங்கிய பி.ஏ.கே.வின் செறிவார்ந்த உரை, கூட்டத்தை சென்று சேர்ந்தா என்று தெரியவில்லை. ஆனால், அன்றைய விழா நாயகன் கடைசியாக பேசிய நாஞ்சில்தான். அவர் உரையை, சிறு சலனம் கூட இல்லாமல் மொத்தக் கூட்டமும் கேட்டது. (வீடியோ வடிவம் வலையேற்றப்படும்).
***
ஸ்டான்ஃபோர்ட் வானொலி நேர்காணலுக்காக, “நீங்கள் எழுதத் துவங்கியதற்கு என்ன காரணம்” என்று கேட்டோம். ஒரு கலைஞனுக்கே உரிய பெருமிதத்துடன் “நான் எழுதலைனா, என் மொழியில் சிலது எழுதப்படாமலேயே போயிடும். அதை என்னால் மட்டுமே சொல்லமுடியும். அதனால் எழுத வந்தேன்” என்றார். இந்தியா என்றால் வெளிநாட்டினருக்கு இருக்கும் பொது பிம்பம் எதிர்மறையானது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்‘, அர்விந்த் அடிகாவின் ‘White Tiger‘ போன்றவை வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம், அவை அந்த பொதுப் புத்தியை பிரதிபலிப்பதனாலேயே. அதே சமயம் இந்தியாவிற்கு வந்து சென்ற வெளிநாட்டு நண்பர்கள், தங்கள் வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இந்திய பயணத்தை நினைக்கிறார்கள். “நாங்க பிரச்சனைன்னு நினைக்கறதெல்லாம், ஒரு பிரச்சனையே இல்லைன்னு இங்க வந்து பாத்தப்ப புரியுது. இந்தளவு ஏற்றத்தாழ்வு இருந்தும், மக்களப் பாத்தா சந்தோஷமா இருக்காங்க. இது எப்படின்னு புரியலை” என்றார் ஒரு அமெரிக்கர். அவரை மீண்டும் சந்தித்தால், நாஞ்சிலின் “யாம் உண்பேம்“, “வனம்” போன்ற கதைகளை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கதைகளில் கடைசி வரி/பத்தியை தவிர்த்தால், அது கீழ்/நடுத்தர வர்க்கத்து நெருக்கடிகளை சொல்லும் பல நூறு படைப்புகளோடு ஒன்றாக இருந்திருக்கும். முந்தைய தலைமுறையின் பசி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை பேசும் மற்றுமொரு படைப்பாளியாக மட்டுமே இருந்திருப்பார். “என் நாக்கில கசப்ப தொட்டு வச்ச சித்தன் யாருன்னு தெரியலை” என்று சொல்லும் நாஞ்சிலின் படைப்புகளில், ஆலகால விஷத்தின் ஊடே அமுது திரள்வது போல, பொங்கி வரும் கசப்பின் ஊடே, கனிவு எனும் மானுட தரிசனமும், இந்தியாவின் ஆன்மீக சாரமும் திரண்டு வருகிறது. நாஞ்சிலை மிக முக்கிய இலக்கியவாதியாக நான் நினைப்பது அதனாலேயே.
அதே நிகழ்ச்சியில், “உரிய காலத்தில் அங்கீகரிக்கல, அல்லது மிகத் தாமதமாக அங்கீகரிச்சிருக்காங்கன்னு வருத்தமுண்டா ? உங்களுக்கு எப்பொழுதாவது எழுதுவதை விட்டுவிட்டு, உங்கள் தொழிலிலேயே கவனம் செலுத்தலாம் என்று தோன்றியிருக்கிறதா” என்ற கேட்டேன். “இல்லங்க.. வருத்தமெல்லாம் இல்லை. நியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” என்றார். வேறோரு நாள், நானும் அருணும், ஸ்டான்ஃபோர்டு பல்கலை அருகே, அவரை ஒரு இனிப்பு கடைக்கு அழைத்து செல்லும்போது, “ஞானபீடம் வாங்கிட்டு, ஸ்டான்ஃபோர்டு உள்ள பேச வேண்டியவரை, பல்கலைக்கு வெளியே கூட்டிட்டு சுத்தறோம்” என்றேன். “ஞானபீடம்லாம் குடுக்கமாட்டானுங்க. விருது குழூல இருக்கவங்க எல்லாம் எழுதி தோத்துபோனவனுங்க. அவங்களால, வெற்றிகரமா எழுதறவங்கள சகிச்சிக்க முடியாது” என்றார். “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” என்று அவருடைய தளத்தில் உள்ள வாசகங்களை நினைத்துக்கொண்டேன்.
வளர்ந்த நாடுகளில் முக்கால்வாசி இலக்கியவாதிகள் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள்; ஏதோ ஒரு வகையில் அமைப்போடு (பள்ளி, பல்கலை, அரசு) தொடர்புடையவர்கள். சில விதிவிலக்குகளை தவிர்த்தால், தமிழ்/இந்திய அமைப்பு, பெயர் சொல்லும்படியான இலக்கியவாதிகளை உருவாக்கவில்லை. தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே, அமைப்பிற்கு வெளியே இருந்து வந்தவர்கள்தான்.அந்த விதிக்கு நாஞ்சிலும் விலக்கல்ல. நாஞ்சில், கணிதத்தில் பட்டம் பெற்றவர் (தமிழில் அல்ல) ; தொழிலோ, ஓயாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்க வேண்டிய விற்பனை பிரதிநிதி; வாழ்விடமோ ‘யாதும் ஊரே’ வகைதான். இருப்பினும், அன்றாட நெருக்கடிகளுக்கிடையே, எப்படியோ அவருக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்திருக்கிறது; எப்படியோ தரம் வாய்ந்த படைப்புகளை எழுத முடிந்திருக்கிறது; இந்த ‘எப்படியோ’வை தேடிக் கொண்டிருக்கும் என் போன்றோருக்கு, நாஞ்சிலோடு செலவிட்ட இந்த சில நாட்கள், பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல.
பின்குறிப்பு: தோழி காவேரி விஜய் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டது, ஒரு வேளை உணவுக்கும் விஜயை சந்திப்பதற்கும் ஃபோட்டோவுக்கும் சேர்த்தும் இருபது டாலர் என்று சொன்னார். ஒரு வேளை சாப்பாட்டுக்கு பத்து பதினைந்து டாலர் ஆகலாம், இந்த ஊரில் ஃபோட்டோவை யாராவது எடுத்தால் அதை வாங்கவே பத்து பதினைந்து டாலர் ஆகும்.
நண்பர் முத்துகிருஷ்ணன் தரும் தகவல் – எதுகை அகராதியை தொகுத்த நெசவாளர் – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை என்ற ஊரில் பிறந்த பசுபுல இராமசாமி அப்பாய் செட்டியார் – வருடம் 1938. இப்போது சந்தியா பதிப்பகம் மீள் பதிப்பு வெளியிட்டுள்ளது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...