பழைய நாவல்: பொற்றொடி

இப்போதெல்லாம் பொழுது போகவில்லை என்றால் தமிழ்.விக்கி தளத்தில் ஏதாவது ஒன்றிரண்டு பக்கத்தைப் படிக்கிறேன். அப்படிப் பார்த்த பக்கங்களில் ஒன்று பொற்றொடி – 1911-இல் எழுதப்பட்ட நாவல். மின்னூல் வேறு கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன்.

உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன். நாவலின் பழமை ஒன்றே அதை படிக்க வைத்தது. உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

ஆனால் பொற்றொடியின் நடை கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டால் அது சாண்டில்யன் எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். ஏன், லட்சுமி எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். முப்பது நாற்பதுகளில் பாய்ஸ் கம்பெனி நாடகமாக, ஏன் ஐம்பது அறுபதுகளில் திரைப்படமாக நடிக்கக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது.

மிக எளிமையான கதைதான். பொற்றொடிக்கு பதினாறு வயது. “படித்த பெண்”. அதுவும் 1911க்கு முந்தைய காலகட்டத்திலேயே. பன்னிரண்டு வயதிலிருந்து சீராளனோடு காதல். அப்பா பிடிவாதமாக பணக்கார வெள்ளையப்பனுடன் திருமணம் ஏற்பாடு செய்கிறார். சீராளன் அவனது குருவான பக்கா சுவாமிகள், சுவாமிகளின் நண்பரான சப்-ஜட்ஜ் ராயர் ஆகியோரின் உதவியோடு முகூர்த்தத்துக்கு முன்னால் பெண்ணைத் தூக்கிவிடுகிறான். அதே முகூர்த்தத்தில் திருமணமும் நடந்துவிடுகிறது. வெள்ளையப்பன் அன்றிரவே ஆயிரக்கணக்கானவர் உள்ள படையோடு திருமண வீடு மீது தாக்குதல் நடத்துகிறான். சீராளனுக்கு அடி, அவனைத் தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். சீராளன் இறந்ததாக நம்பி சுவாமிகளும் ராயரும் வழக்கு நடத்துகிறார்கள். அனேகருக்கு தண்டனை, லஞ்சம் கொடுதது தப்பிக்கும் வெள்ளையப்பனுக்கும் உயர்நீதிமன்றத்தில் தண்டனை. தூக்கிச் செல்லப்பட்ட சீராளன் உயிர் பிழைக்கிறான், பத்து பனிரண்டு நாளைக்குப் பின் வந்து பார்த்தால் பொற்றொடி துயரத்தில் சாகக் கிடக்கிறாள். சீராளனைப் பார்த்ததும் புனர்ஜன்மம். சுவாமிகள் பணத்துக்காக மணம் செய்து கொள்ளக் கூடாது, குணத்துக்காகத்தான் என்று ஒரு சொற்பொழிவு ஆற்றுகிறார். சுபம்!

“படித்த பெண்ணின்” சித்தரிப்பு, அவள் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை எல்லாம் அப்போது புரட்சியாக இருந்திருக்க வேண்டும். இதை அன்று படித்தவர்கள் பெண்களைப் படிக்க வைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள், அப்பா அம்மாவை எதிர்ப்பார்கள் என்று நினைத்திருந்தால் நான் வியப்படைய மாட்டேன்.

நாவலின் சிறந்த பகுதி கொள்ளையர்களின் தாக்குதல்தான். அதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். நாற்பது ஐம்பது பேர் தங்களை தற்காத்துக் கொள்வது ஓரளவு படிக்கும்படி இருக்கிறது. ஆனால் அன்று சீராளனிடம் துப்பாக்கி – அதுவும் நாலைந்து இருப்பது – எல்லாம் கொஞ்சம் அதிகப்படிதான்.

பொற்றொடியும் சீராளனும் பேச ஆரம்பித்தால் நாலைந்து பக்கம் மூச்சு விடாமல் பேசுகிறார்கள். சீராளன் பத்து பனிரண்டு நாளைக்குள் திரும்பிவிடுகிறான். ஆனால் அதற்குள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, அப்பீல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத்திலும் வழக்கு முடிகிறது. அதாவது 12 நாட்களுக்குள் இரண்டு வழக்கு முடிவடைந்துவிடுகிறது. இத்தனைக்கும் இந்த நாவலை எழுதியவர் வழக்கறிஞர்!

நாவலை எழுதியவர் ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை. சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். ஜி. சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். திருநெல்வேலியில் கோலோச்சிய ‘சர்வஜனமித்திரன்’ பத்திரிகையின் தூண்களில் ஒருவராம்

நாவலின் முன்னோடித்தனம் என்பது பெண் கல்வி நல்லது, பெண்ணுக்கு தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை மிக இயல்பாக முன்வைப்பதுதான். 1911-இல் இதற்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என்பதை பிள்ளைவாள் உணர்ந்திருப்பாரா என்றே கேள்வி எழுந்தது.

மீண்டும் சொல்கிறேன், நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன்.உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்னூல்
தமிழ் விக்கி குறிப்பு

தமிழ்பிரபா: பேட்டை

பேட்டை (2018) நாவலில் எழுத்தாளரின் திறமை தெரிகிறது. ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது.

பேட்டை சிந்தாதிரிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சியில் குடியேறிய பள்ளர் ஜாதியினர் – அங்கே பல பரம்பரைகளாக வாழ்ந்தவர்களின் – வாழ்க்கையை நுண்ணுலகமாக (microcosm) காட்டுகிறது. வாழ்க்கை முறை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கப்படுவதுதான் நாவலின் வெற்றி. ஆனால் தரிசனங்களோ, இல்லை வரலாற்றின் வீச்சோ எதுவுமில்லை. அது பற்றாக்குறை உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.

நாவல் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நெசவாளர்களை சென்னைக்கு அருகில் குடியேற்றுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. சுத்திகரிப்பு வேலைகளுக்காக சில தலித்களும் வருகிறார்கள். ஜாதி முறைப்படி வீடுகள் கட்டப்படுகின்றன. தலித்களுக்கு ஊரில் இடமில்லை, அவர்கள் ஊருக்கு வெளியேதான். பிறகு நாவல் நேராக சமகாலத்துக்கு வந்துவிடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதி என்று வைத்துக் கொள்ளலாம். இன்று நாறும் கூவத்தின் அருகில் வீட்டு வசதி வாரியக் டியிருப்புகள். அனேகரும் தலித்கள். கணிசமானவர்கள் கிறிஸ்துவர்கள். புதிதாக திருமணம் ஆன ரெஜினா. அவள் உடலில் அவள் மாமியாரின் ஆவி புகுந்து கொள்கிறது. பாதிரியார் பேயை ஓட்டுகிறார். ரெஜினா தீவிர மத நம்பிக்கை உடையவளாக மாறுகிறாள். மகன் ரூபன். நண்பர்கள். சிலர் கேரம் விளையாடுகிறார்கள். ரூபன் பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்கிறான். பொருளாதார ரீதியில் பிறந்த சூழலுக்கு அடுத்த படிநிலையில் இருக்கிறான். கம்பெனிக்கு அழைத்துச் செல்ல தினமும் கார் வருகிறது. அவனுக்கு ஒரு மடிக்கணினி தரப்படுகிறது. ஒரு பெண்ணோடு உறவு ஏற்பட்டு முறிகிறது. நண்பர்களின் வாழ்வு திசைதிரும்புகிறது. காதல். அவனையும் ஒரு பேய் பிடிக்கிறது. குண்மாகிறது…

நாவல் எப்படியோ ரூபனின் சூழலை காட்டிவிடுகிறது. அது சென்னைத் தமிழில் கெட்ட வார்த்தைகள் விரவிய பேச்சா, அதிதீவிரமாக மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் கிறிஸ்துவ சபைகளின் சித்தரிப்பா, மதுவும் போதையும் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதா, கேரம் போர்ட் விளையாட்டுப் பின்புலத்தின் விவரிப்பா, ரூபனின், அவன் நண்பன் சௌமியனின், குடிகார யோசப்பின் அகச்சிக்கல்களா என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

நாவலின் சிறந்த பகுதி ரூபன்-இவாஞ்சலின் காதல். இயற்கையாக இருக்கிறது. இன்னொரு சிறந்த பகுதி பாதிரியார் மிக இயல்பாக தன் வட்டத்துக்குள் வருபவர்களின் மத நம்பிக்கைய தீவிரப்படுத்துவது. பெரிய பாத்திரங்களான நகோமி ஆயா, இறந்து போகும் நண்பன் சௌமியன் போன்றவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு பாத்திரங்கள் கூட – டிஜிடல் யுகத்தில் முக்கியத்துவத்தை இழக்கும் ஓவியர் பூபாலன், குடித்துவிட்டு லந்து செய்யும் ரூபனின் அப்பா, கொஞ்சம் லூசான ஆமோஸ், செத்துப் போன மாமியார் கிளியாம்பா – நல்ல படைப்புகள்

சரித்திர வீச்சு இல்லை என்றால் முதல் ஓரிரு அத்தியாயங்களுக்கு – சிந்தாதிரிப்பேட்டை எப்படி நிறுவப்பட்டது – அவசியமே இல்லை. நாவலில் இன்னும் ஒருங்கமைதி (coherence) அதிகரித்திருக்கும். நாயகன் ரூபனுக்கு பேய் பிடிக்கும் இடம் எனக்கு ஒட்டவில்லை. அதுவும் அவன் சொல்லும் காரணம் செயற்கையாக இருக்கிறது. நாயகன் நாவல் எழுத விழைவது, ஃபேஸ்புக்கில் பதிவு போடுவது எல்லாமே நாவலோடு ஒட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றில் கொஞ்சம் தன்வரலாற்றுச் சாயல் இருக்குமோ என்று தோன்ற வைத்தது.

நாவல் எனக்கு மெரினா எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அதே பாணி எழுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளில் வாழும் கிறிஸ்துவ தலித் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட மாதிரி இருக்கிறது.

நல்ல எழுத்துதான். ஆனால் ஏதோ – இல்லை நிறையவே குறைகிறது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. படித்தே ஆக வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் சராசரிக்கு மேலான எழுத்துதான். உங்கள் நூலகத்துக்கு வாங்கலாம்தான். ஆனால் இன்னும் தரமான இலக்கியம் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: நண்பர் ரெங்காவின் விமர்சனம்

நூறாண்டு பழைய நாவல்: இந்துலீகா

தவறுதலாக – பி.ஆர். ராஜம் ஐயர் எழுதியது என்று நினைத்துத்தான் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இதை எழுதியவரோ டி.எஸ். ராஜம் ஐயர். நான் கேள்விப்பட்டதே இல்லை.

1912-இல் வெளிவந்த நாவல். (அன்றைய விலை ஐம்பது பைசா) மொழியைக் கொஞ்சம் புதுப்பித்தால் ஐம்பதுகளின் லக்ஷ்மி நாவல் போல இருக்கும். நாவலின் புதுமை என்பது பத்து பனிரண்டு வயது இந்துலீகாவுக்கு 32 வயது நரேந்திரபாபு, அவள் வயதுக்கு ஓரளவு நெருக்கமான சுகுமாரன் இருவர் மேலும் ஈர்ப்பு ஏற்படுவதுதான். இன்று கூட ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இருவர் மீது ஈர்ப்பு என்று வருவது அபூர்வம்தான்.

ஐம்பது அறுபது பக்கம் படிக்கும்வரை இந்த நாவலைப் பற்றி எல்லாம் எழுதமாட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். (நாவல் நூறு பக்கம் இருந்தால் அதிகம்). அப்போது படித்த வரிகள்:

பால்ய விவாகம் கூடாதென்றும் சமபந்தி போஜனம் வேண்டுமென்றும் விதவாவிவாகம் செய்வது உசிதமென்றும் ஸ்த்ரீகளுக்கு கல்வி அத்யாவஸ்யமென்றும் மாத்திரம் முறையிடும் ஆசார சீர்திருத்தக்காரர்களைக் கண்டு அனேகர் பயப்படுவதோடு அவர்களுக்கு ஒத்தாசையும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆசார சீர்திருத்தக்காரர்களில் ஒருவரையும் நமது சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்றுணர்ந்த மற்றொருவரையும் நம்முடைய பிரதிநிதிகளாக ஏற்பாடு செய்தால் அவர்கள் இருவரும் கலந்து எந்தெந்த சாஸ்திரங்கள் ஆதிகாலம் முதல் மாற்றப்படாமல் இருக்கின்றனவோ அவற்றைத் தொடாமல் எவைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு நம்முடைய சௌர்ய சௌகர்யங்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனவோ அவைகள் அனைத்தையும் சம்யோஜிதமாக மாற்ற வேண்டியது. இவைகளினால் மட்டுமே நாம் முன்னுக்கு வந்து பழைய ஞானத்தை அடைந்து அஞ்ஞானமாகிய இருளை வென்று நான் ஆரியன் என்று கௌரதையாக சொல்லிக் கொள்ளலாம்

உதாரணமாக அந்தணர்கள் சிரார்த்தங்களில் மது மாமிசம் படையல் வைத்தார்கள், இப்போது இல்லை என்கிறார்.மாறாத அறநெறி, மாற்றக் கூடிய சடங்குகள்/பழக்கங்கள் என்று அவர் சிந்தித்திருப்பது எனக்கு வியப்பை உண்டாக்கியது. இன்று கூட முன்னோர் சொல்லிவிட்டார்கள் என்ற ஒரு காரணம் போதும், சடங்குகளை மாற்றவே கூடாது என்று சொல்பவர்களைப் பார்க்கலாம். “பால்ய விவாகம் நல்ல விஷயம்” என்றே ஒருவர் 2021-இல் – இந்தப் புத்தகம் வந்து 109 வருஷம் கழித்து – சொன்னதைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன். ராஜம் ஐயருக்கு மனதார ஜே போட்டதை பதிவு செய்யத்தான் இதை எழுதுகிறேன்.

இந்த ராஜம் ஐயர் பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரிந்தால் எழுதுங்கள்!

பழைய புத்தகம் என்ற curiosity உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

ச. பாலமுருகன்: சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி அருமையான நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சோளகர் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர். இன்று 20000 பேர்தான் இருக்கிறார்களாம். அவர்கள் பேசும் மொழி சோளகம். இது திராவிட மொழிகளில் ஒன்றாம். தொட்டி என்றால் அவர்கள் மொழியில் கிராமமாம். லிங்காயத்துக்களை ஒரு வகையில் தங்கள் பங்காளிகளாக நினைக்கிறார்கள். மாதேஸ்வரனை வழிபடுகிறார்கள். பிலிகிரி ரங்கநாதரை தங்கள் குலத்து மாப்பிள்ளையாக சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

சோளகர்களின் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் புத்தகம். தொட்டி, கொத்தல்லி என்று அழைக்கப்படும் தொட்டியின் தலைவன், கோல்காரன் என்று அழைக்கப்படும் பூசாரி. ராகி விவசாயம் உண்டு. தேன் எடுக்கிறார்கள். வேட்டை. ஆனால் இப்போது வனத்துறை அதிகாரிகளுக்கு பயந்து பயந்து வேட்டை. “நாகரீகம்” மெதுமெதுவாக அவர்களை கொள்ளை அடிக்கிறது, அவர்களது பாரம்பரிய உரிமைகளை, நிலத்தை பறித்துக் கொள்கிறது. குறிப்பாக வேட்டை வீரன் சிக்குமாதாவை ஏமாற்றி போலீஸ் துறை அடித்து அவர்கள் நிலத்தை பிடுங்கிக் கொள்ளும் காட்சி உண்மையாக இருக்கிறது. சுலபமான திருமணங்கள். இறப்பு சடங்குகள். கும்பிடும் தெய்வம் மணிராசன், மாதேஸ்வரன், லிங்காயத்துக்களுடான தொன்மம். யானைகள், புலி, (புலிக்கு அவர்கள் பெயர்: பெருநரி!) கரடி, பன்றிகள், மான்கள், எறும்புத்தின்னிகள். சந்தன மரத்தைத் தொடாத பாரம்பரியம் மெதுமெதுவாக பணத் தேவைகளுக்காக சந்தன மரத்தை, அதன் வேர்களை, மரப் பிசிர்களை விற்கும் மாற்றங்கள். வீரப்பன். அவனைத் தேடும் காவல்துறை…

நுண்விவரங்கள் நிறைந்து கிடக்கின்றன. விவரிக்க முடியாது, படிக்கத்தான் வேண்டும். ஆழிசூழ் உலகை ஒரு வகையில் நினைவுபடுத்தியது. ஆழிசூழ் உலகில் நமக்குத் தோன்றும் பெரும் மானுடத் தொடர்ச்சி இதில் குறைவு. சில விதிவிலக்குகள் இருந்தாலும் இது ஒரு குறுகிய காலகட்டத்தை மட்டுமே விவரிப்பது போலத் தோன்றியது.

வீரப்பனைத் தேடும் காவல்துறை கையில் கிடைத்தவர்கள் எல்லாம் சந்தேகப்பட்டு செய்யும் சித்திரவதைகள் விவரமாக எழுதப்பட்டிருக்கின்றன. இதில் பாதியாவது உண்மையாக இருக்கும். அதுதான் பெரிய சோகம், அரசு எந்திரம் சட்டத்தை உடைத்தால் எந்த எல்லைக்கும் போகும் என்பதை உணர வைக்கும் பக்கங்கள்.

எழுதியவர் ச. பாலமுருகன். வேறு ஏதாவது எழுதி இருக்கிறாரா தெரியவில்லை.

அருமையான நாவல், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

க.நா.சு. பரிந்துரை – ஜடாவல்லவர்

இருபது இருபத்திரண்டு வயது வரை தமிழில் படிக்க பெரிதாக எதுவுமில்லை என்றுதான் எண்ணி இருந்தேன். நற்றிணையையும், நல்ல குறுந்தொகையையும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் கம்ப ராமாயணத்தையும் என்னால் அந்த வயதில் படிக்க முடியவில்லை. (திருக்குறளை இன்னமும் படிக்க முடியவில்லை.) புதுமைப்பித்தன் மேதை என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், சாயாவனம், கோபல்ல கிராமம், சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சிலவற்றைப் படித்திருந்தாலும் தமிழ் வாசிப்பு என்றால் சுஜாதாவும் கல்கியும் விகடனும் குமுதமும்தான், டைம் பாஸ் வாசிப்புதான், தமிழில் படித்து பழகிவிட்ட ஒரே காரணத்தால்தால் நிறுத்த முடியவில்லை, படித்து தொலைக்க வேண்டி இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். அந்த மாதிரி வாசிப்புக்கும் பெர்னார்ட் ஷாவுக்கும் இப்சனுக்கும்  ஹ்யூகோவுக்கும் ஹெமிங்க்வேக்கும் மார்க்வசுக்கும் ஆலன் பேடனுக்கும் ஹார்பர் லீக்கும், ஏன் டிக்கன்சுக்கும், தாக்கரேவுக்கும், எமிலி ப்ரான்டேவுக்கும் கூட நிறைய தூரம் இருந்தது.

அப்போது செகந்தராபாத்தில் (முதல்) வேலை. மாரட்பள்ளியில் கீஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்பட்டேன். நான் வசித்ததும் மாரட்பள்ளிதான். கையில் முதல் முறையாக புத்தகம் வாங்கும் அளவுக்கெல்லாம் காசு இருந்தது. சுப்ரபாரதிமணியன் கஷ்டப்பட்டு வருஷாவருஷம் அதை நடத்தி வந்தார். போனவன் வழக்கமான சுஜாதா புத்தகங்களோடு சாயாவனத்தையும் வாங்கினேன். அவர் கண்ணில் பல்ப் எரிந்தது. சின்னப் பையனுக்கு சாயாவனம் பற்றி தெரிந்திருக்கிறதே என்று அவருக்கு சின்ன சந்தோஷம். அவருடைய பரிந்துரையில் சில பல புத்தகங்களை வாங்கினேன்.

அப்போது கண்ணில் பட்ட புத்தகம் க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தை வாங்கிய கையோடு அங்கேயே பள்ளி வராந்தாவில் படித்து முடித்தேன். எனக்கு அந்தப் புத்தகம் பெரிய கண்திறப்பு. எந்த உலக மொழிக்கும் இணையான நவீன இலக்கியம் தமிழில் உண்டு என்று உணர்ந்த தருணம். அவர் போட்டிருந்த பட்டியலில் ஒன்றோ இரண்டோ கூட அப்போது படித்திருக்கவில்லை. ஆனாலும் அவரது விவரிப்பிலிருந்தே தமிழ் வாசிப்பு பற்றிய எனது எண்ணம் வெறும் அறியாமை என்று தெரிந்தது. இன்னும் கூட கிழிந்த ஒரு பிரதி என் அலமாரியில் எங்கோ இருக்கிறது, வாங்கி முப்பது வருஷமாவது இருக்கும்.

க.நா.சுவின் பரிந்துரை பாணி – இது என ரசனைக்கு ஒத்து வருகிறது, இந்த மாதிரி புத்தகம் – என்னைப் பொறுத்தவரை மிகச் சரியான அணுகுமுறை. எனக்கு ஏற்ற அணுகுமுறை. ஆனால் பின்னால் அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் பல என் ரசனைக்கு ஒத்தே போகாது என்பது புரிந்தது. அவர் பரிந்துரைத்த இதயநாதம், உல்லாச வேளை, கரித்துண்டு போன்றவை எனக்கு சரிப்படாது. படிக்கலாம், ஆனால் க.நா.சு. பரிந்துரைக்காவிட்டால் படித்திருக்கமாட்டேன், படிக்கவில்லை என்றால் எந்த வருத்தமும் இராது. அதாவது அவரது அணுகுமுறை எனக்கு சரிப்படுகிறது, அவரது ரசனை எனக்கு ஒத்துப் போகவில்லை. அவர் பரிந்துரைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றோ இரண்டோ எனக்கு நல்ல இலக்கியமாக இருந்தால் அதிகம். அனேகம் வெறும் fluff மட்டுமே. என் கண்ணைத் திறந்த பரிந்துரைப் பட்டியல், ஆனால் பரிந்துரைகளில் வெகு சிலவே எனக்குத் தேறும் என்பது பெரிய நகைமுரண்.

அவர் பட்டியலில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்த புத்தகம் ஜடாவல்லவர் (1939).

ஏதோ ஒரு தஞ்சாவூர் கிராமத்தில் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன். ஆங்கிலம் படிக்கவில்லை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி. விவசாயம், ஆனால் தங்கைகள் திருமணம், செலவுகள் என்று சொத்து கரைந்து கொண்டிருக்கிறது. முன்சீப் வேலை, கடன், திருமணம், மாமியார்-மருமகள் தகராறு, கடன் தீர்வது, மகள், மகளுக்குத் திருமணம், சுபம் என்று போகிறது.

மகா மோசமான கதை. ஒவ்வொரு அத்தியாயத்தில் முதல் இரண்டு பக்கம் உபதேசம், மேற்கோள்கள். திடீரென்று கதாநாயகன் காசிக்கு குடும்பத்தோடு போகிறான். அதனால் கதை எப்படி நகர்கிறது என்றால் ஒன்றுமில்லை. பாத்திரங்களோ வெறும் தேய்வழக்குகள். மாமியார் மோசமானவள்; “நாகரீக” மாற்றங்களால் வைதிக பழக்கங்கள் சிலவற்றை கைவிடும் மாப்பிள்ளை முட்டாள், மூர்க்கன். நாயகனும் நாயகியும் உலக மகா உத்தமர்கள். கொடுமை செய்யும் மாமியார் கிணற்றில் மருமகளை பிடித்துத் தள்ளப் போனால் அவள் தலையில் சரியாக தேங்காய் விழுகிறது. பிரதாப முதலியார் சரித்திரம் எத்தனையோ ramble ஆகும். அதற்கு ஐம்பது வருஷம் கழித்து வெளியான புத்தகம் கொஞ்சமாவது முன்னேற வேண்டாமா? இது பின்னேறி இருக்கிறது!

கதையின் சுவாரசியம் இன்று ஒன்றுதான். என்னவெல்லாம் ஆசிரியருக்கு தவறாகத் தெரிகிறது! மீசை வைத்த பிராமணன்; குருக்கள் தாழ்ந்த ஜாதி (பிராமணர்களுக்குள் தாழ்ந்தவர்களா? எனக்குத் தெரியவில்லை); காப்பி குடிப்பது, அதிலும் சீப்பிக் குடிப்பது; ஆங்கிலக் கல்வி; சுருட்டு பிடிக்கும் மேலதிகாரி. சொல்லிக் கொண்டே போகலாம்.

க.நா.சு. தன் சிறு வயதில் பார்த்த தஞ்சாவூர் கிராமங்களை, வைதிகப் பிராமணர் குடும்பங்களை ஓரளவு உண்மையாகப் பிரதிபலிக்கும் நாவல் என்று நினைக்கிறேன். மெய்நிகர் அனுபவம் என்று நினைத்து பரிந்துரைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.

நாவலை எழுதியவர் வரகவி என்று பட்டம் பெற்ற அ. சுப்ரமணிய பாரதி. இவர் கவிஞர் பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படித்தான் ஒத்துப் போயிற்றோ தெரியவில்லை. இவர் இந்தப் புத்தகத்தில் நாகரீக வளர்ச்சியின் பின்விளைவுகள் என்று சொல்லும் அத்தனையும் கவிஞருக்கு உண்டு – மீசை, ஜாதி ஆசாரம் பார்க்காமல் இருத்தல்…

அ. சுப்ரமணிய பாரதியைப் பற்றி க.நா.சு. தவிர வேறு யாரும் குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. நீங்கள் யாராவது ஏதாவது கேள்விப்பட்டிருந்தால் சொல்லுங்கள்!

அவர் எழுதிய மாயாவதி (1911) என்ற நாடகமும் கிடைத்தது. பிரத்யும்னன் – சம்பராசுரன் கதை. 1911க்கு நிறைய உரைநடை. அன்று வெற்றி பெற்றிருக்கலாம். பக்த மஹிமை (1920) புண்டரீகன், நாம்தேவ், கோரா கும்பார் ஆகியோர், இரண்டு பக்த சிரோன்மணிகள் (1925) மாணிக்கவாசகர், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் சுருக்கமான “வரலாறு”. பாண்டவ வனவாசம் (1923), பாலகோபால லீலை என்றும் சில புத்தகங்களைப் படித்தேன்.

தஙகளைத் தாங்களே வருத்திக் கொள்ள நினைக்கும் masochist-களுக்காக – ஜடாவல்லவர், மாயாவதி இரண்டும் இணையத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

சிவாஜி கணேசனைத் தாக்கும் நாவலுக்கு சாஹித்ய அகடமி விருது

மீள்பதிவு, முதல் பதிவு 2010-இல்.

நா.பா. எழுதிய சமுதாய வீதி 1968-இல் வெளிவந்தது. 1971-இல் சாஹித்ய அகடமி பரிசு பெற்றது.

இந்தப் புத்தகம் சிவாஜி கணேசனை கடுமையாகத் தாக்குகிறது. நாவலின் “வில்லன்” கோபால் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறான். போக் ரோட்டில் வசிக்கிறான். நாடக மன்றம் வைத்து பலருக்கு சம்பளம் தருகிறான். நாவலின் நாயகன் முத்துக்குமரன் நா.பா.வேதான் என்பதும் தெளிவு. கதாசிரியன், அழகன், நீண்ட பாகவதர் ஸ்டைல் முடி, தான் சிறந்த எழுத்தாளன் என்ற செருக்குடையவன். கதை நா.பா.வின் wish fulfilment fantasy மாதிரி இருக்கிறது.

காமராஜின் காங்கிரசில் அந்தக் காலத்தில் சிவாஜி பெரும் சக்தி. ஜெயகாந்தன், நா.பா. போன்றவர்கள் ஸ்டார் பேச்சாளர்கள். 68-இல், காமராஜின் தோல்விக்குப் பிறகு வெளிவந்த புத்தகம். ஒரு வருஷம் முன்னால் கூட இருவரும் ஒரே மேடையில் முழங்கி இருப்பார்கள். என்ன தகராறோ? ஒரு வேளை சிவாஜி நா.பா.வை தனக்காக ஒரு நாடகம் எழுதச் சொல்லி அதில் இரண்டு பேருக்கும் ஏதாவது உரசலா, யாருக்காவது தெரியுமா? திருப்பூர் கிருஷ்ணன் மாதிரி யாருக்காவது தெரிந்தால் உண்டு.

அறுபதுகளில் நா.பா. ஒரு ஸ்டார் எழுத்தாளர். அவருடைய குறிஞ்சி மலர் எக்கச்சக்க பிரபலம். அதைப் படித்துவிட்டு குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பேர் வைத்தவர்கள் நிறைய பேர் உண்டு. அப்படி பேர் இருந்தால் அவர்களுக்கு அனேகமாக நாற்பத்து சொச்சம் வயது இருக்கும். ராணி மங்கம்மாள், பொன் விலங்கு, மணிபல்லவம் போன்ற புத்தகங்களும் புகழ் பெற்றவை. சமுதாய வீதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.

நா.பா.வின் புத்தகங்களில் நாயகன் எப்போதுமே லட்சியவாதி. சமுதாய அவலங்களைக் கண்டு பொங்குவான். இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்களே என்று பக்கம் பக்கமாக பொருமுவான். அவருடைய கனவு நாயகி “காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவையும் கை கொடுப்பவள்”. நாயகனின் அழகு, ஆண்மை, திமிர், லட்சியங்கள் எல்லாவற்றையும் கண்டு சொக்கிக் கொண்டே இருப்பாள். சுதந்திரத்துக்குப் பிறகு தெருக்களில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவு உடைந்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்களை அவர் தன் எழுத்தில் கொண்டு வந்தது ஒன்றே அவரது எழுத்தின் பலம். ஆனால் எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறாக இருக்கின்றன.

இன்று கறாராக மதிப்பிட்டால் என் கண்ணில் அவர் ஒரு வணிக எழுத்தாளரே. சில சமயம் சுவாரசியமாக இருக்கும், அன்றைய தமிழ் உலகம் எதை விரும்பியது என்று தெரிந்து கொள்ள உதவும் கதைகளை எழுதி இருக்கிறார். வணிக எழுத்தாகக் கூட அவர் எழுத்து காலாவதி ஆகிவிட்டது. சமுதாய வீதி போன்ற நாவலுக்கெல்லாம் சாஹித்ய அகடமி பரிசா என்றுதான் தோன்றுகிறது. 71-இல் க.நா.சு.வுக்கும், சி.சு. செல்லப்பாவுக்கும், எம்.வி. வெங்கட்ராமுக்கும், லா.ச.ரா.வுக்கும், பிச்சமூர்த்திக்கும் கூட கொடுக்கப்படவில்லை. இதை விட நல்ல நாவல்களை நா.பா.வே. எழுதி இருக்கிறார்.

ஆனால் நா.பா. நல்ல எழுத்து என்றால் என்ன என்று நன்றாகவே அறிந்தவர். அவர் சாஹித்ய அகடமி விருதுக் குழுவில் இருந்தபோது இலக்கியம் படைப்பவர்களுக்கு பரிசு கிடைக்கப் பாடுபட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவரால் நல்ல இலக்கியத்தைப் படைக்கவே முடியவில்லை என்பதுதான் வாழ்வின் நகைமுரண்.

எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறு என்றால் சுவாரசியத்துக்கு வேறு ஏதாவது காரணம்தான் தேட வேண்டி இருக்கிறது. சமுதாய வீதியின் சுவாரசியம் கதைப்பின்னல் அல்ல, பாத்திரங்கள் மிகவும் வெளிப்படையாக நிஜ மனிதர்களைத் தாக்குவதுதான் என்று கருதுகிறேன்.

நாவலில் முத்துக்குமரன் ஒரு நாடக ஆசிரியன். அவன் குழுவில் அந்தக் காலத்தில் ஸ்திரீபார்ட் வேஷங்களில் நடித்த கோபால் – இவனுடன் நெருங்கிப் பழகிய நண்பன் – இன்றைக்கு பெரிய திரைப்பட கதாநாயகன். முத்துக்குமரன் கோபாலைப் பார்க்க வருகிறான். கோபால் முத்துவை ஒரு நாடகம் எழுதித் தரச் சொல்கிறான். கதாநாயகி மாதவிதான் நாடகத்திற்கு நாயகி. அவள் முத்துவைப் பார்த்த அடுத்த நிமிஷத்திலிருந்து அவன் அழகிலும் திமிரிலும் மயங்குகிறாள், மாதவிக்கும் முத்துவுக்கும் காதல் உருவாகிறது. கோபாலின் “போலித்தனம்” மெதுமெதுவாகத் தெரிகிறது. முத்து கோபாலிடம் சில சமயம் முறைத்துக் கொள்கிறான். கோபாலுக்கு பழகிய தோஷத்தாலும், முத்து மீது அந்தக் காலத்திலிருந்து இருக்கும் பயம் கலந்த மரியாதையாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. முத்து அங்கங்கே கோபாலின் “சின்னத்தனத்தை” கண்டு பொருமுகிறான். கோபாலுக்கு விபத்து ஏற்படும்போது முத்துக்குமரன் தானே நாடகத்தில் நாயகனாக நடிக்கிறான். அப்புறம் தன் வழியே காதலியுடன் போய்விடுகிறான். இதுதான் கதை.

கோபால் அப்படி ஒன்றும் தவறாக நடந்துகொண்ட மாதிரியும் தெரியவில்லை. கோபால் தன்னை மரியாதையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் முத்து, கோபாலை மரியாதையாக நடத்துவதில்லை. பலர் முன் எடுத்தெறிந்து பேசுகிறான். மாதவி முத்துவைக் கண்டு மயங்கிய பிறகு கற்புக்கரசி மாதிரி நடந்தாலும் அதற்கு முன் அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. கோபால் முன் மாதிரியே பெரிய மனிதர்களிடம் மாதவி “அட்ஜஸ்ட்” செய்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது முத்துவுக்கு தவறாகத் தெரிகிறது. மாதவியின் மனம் மாறும் என்று கோபால் எப்படி யூகிப்பது?

நாவல் காலாவதி ஆகிவிட்டது, படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிவாஜியை வம்புக்கு இழுத்திருப்பது கிசுகிசு படிப்பதைப் போல சுவாரசியமாக இருக்கிறது.

சமுதாய வீதி இணையத்தில் கிடைக்கிறது. ஜெயமோகன் இந்த நாவலை நல்ல social romance என்று குறிப்பிடுகிறார்.

சில வருஷங்களுக்கு முன் ஜெயமோகன் தொந்தி தொப்பி என்று எழுதியதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் கொதித்தெழுந்தது. அன்றைக்கு சிவாஜி ரசிகர் மன்றங்கள் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கிய காலத்தில் இதைப் பற்றி சர்ச்சை எதுவும் எழவில்லையா? நினைவிருப்பவர் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
சமுதாய வீதி – மின் புத்தகம்
எஸ். கிருஷ்ணமூர்த்தியின் விலாவாரியான அலசல்

மதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’

1981 வாக்கில் மீனாட்சிபுரம் என்ற கிராமமே இஸ்லாமுக்கு மாறியது. தலித்கள் பெருவாரியாக வாழ்ந்த கிராமம். ஜாதி அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவே இது நடந்தது என்று கூறப்பட்டது. பண ஆசை காட்டி மதம் மாற்றினார்கள் என்று இன்னொரு தரப்பு கூறியது. சில வருஷங்கள் கழித்து அனேகம் பேர் மீண்டும் ஹிந்து மதத்திற்கே திரும்பிவிட்டார்கள் என்று நினைவு.

அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம். அன்றைய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான வாஜ்பேயி வந்து பார்த்து அறிக்கை எல்லாம் சமர்ப்பித்தார். தமிழக் அரசு விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. ஜெயகாந்தன் இந்தப் பின்புலத்தை வைத்து ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற (சுமாரான) நாவலை எழுதினார்.

அதே பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட குறுநாவல் கருப்பாயி என்கிற நூர்ஜஹான். இங்கே கிராமத்தின் பேர் காமாட்சிபுரம். 25 வருஷங்களுக்குப் பிறகு மதம் மாறியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. புத்தகம் மதம் மாறியவர்களுக்கும் மாற இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பேர் அன்வர் பாலசிங்கம் என்று இருப்பதால் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கருப்பாயியாகப் பிறந்து ஆறேழு வயதில் மதம் மாறிய நூர்ஜஹானுக்கு 40 வயதாகியும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அப்பா தனக்கு மாப்பிள்ளை தேடி அனுபவிக்கும் அவமானங்களின் பளு தாங்க முடியாமல் நூர்ஜஹான் தற்கொலை செய்து கொள்வதுடன் குறுநாவல் ஆரம்பிக்கிறது. மதம் மாறியவர்கள் என்றாலே ஒரு படி குறைவாகத்தான் பார்க்கிறார்கள்; அதுவும் தலித் – இல்லை இல்லை பள்ளக்குடி பறையக்குடி என்றால் – விலகி ஓடுகிறார்கள். காமாட்சிபுரத்தில் இப்படி மதம் மாறிய குடும்பங்களில் ஐம்பது அறுபது முதிர்கன்னிகள் மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். முஸ்லிம்களாக மாறினாலும் இன்னும் அவர்கள் தலித்துகளாகவோ அல்லது ‘நவ் முஸ்லிம்களாகவோ’தான் இருக்கிறார்கள். நூர்ஜஹான் இறந்த பிறகு முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை எல்லாரும் நிற்க வைத்து நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்வி கேட்கிறார்கள். நாவல் அவ்வளவுதான்.

நாவலில் கொஞ்சமாவது உண்மை இருக்கத்தான் இருக்கும். நம்மூரில் மதம் மாறினால் ஜாதி ஒழிந்துவிடுவதில்லை என்பது நிதர்சனம். எதற்காக மதம் மாறி இருந்தாலும் அதை வைத்து பெருமை அடித்துக் கொள்ளவும், அது மனமாற்றம் அல்ல, மதம் மாறியவர்களை உசுப்பிவிட்டு குளிர்காய்கிறார்கள் என்று குற்றம் சாட்டவும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கேட்கப்படும் கேள்வியும் நியாயமானதுதான்.

ஆனால்: காமாட்சிபுரத்தில் என்ன பெண் குழந்தைகள் மட்டும்தான் பிறப்பார்களா? உள்ளூரிலேயே வேறு மதம் மாறிய குடும்பங்களிலிருந்து மாப்பிள்ளை கிடைக்காதா? ஏதோ 55 சதவிகிதம் பெண் குழந்தைகள் 45 சதவிகிதம் ஆண் குழந்தைகள் என்றால் பரவாயில்லை, ஆனால் எக்கச்சக்க பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றால் லாஜிக் இடிக்கிறதே!

இந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது அப்படி லாஜிக் இடிப்பதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமே இல்லாமல் கதை போவதுதான். கேள்வி அவ்வளவு உக்கிரமாக கேட்கப்படுகிறது. இலக்கிய நயம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சமீபத்தில் மீனாட்சிபுரம் சென்று பார்த்தவர்கள் மதம் மாறியவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், விலக்கி வைக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன். புனைவுக்கு plausibility இருந்தால் போதும், அது முழு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதுதான் எப்போதுமே என் தரப்பு. அது பெருமாள் முருகனின் மாதொருபாகனாக இருந்தாலும் சரி, இல்லை கருப்பாயி என்கிற நூர்ஜஹானாக இருந்தாலும் சரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

சுஜாதாவின் “வசந்த காலக் குற்றங்கள்”

சுஜாதாவை இலக்கியவாதி என்றோ பொழுதுபோக்கு எழுத்தாளர் என்றோ சுலபமாக வகைப்படுத்த முடியாது. வணிக எழுத்தை வாரப் பத்திரிகைகளில் தொடர்கதையாக எழுதுவார், அதில் இலக்கியத்தின் சாயை தெரியும். சில சமயம் இலக்கியம் படைக்க வேண்டும் என்று முயன்று எழுதுவார், ஆனால் வெற்றி பெறமாட்டார். (மத்யமர் சிறுகதைகள் ஒரு நல்ல் உதாரணம்).

எனக்கு அவரிடம் இருக்கும் ஈர்ப்புக்கு மூன்று காரணங்கள் உண்டு. முதல் காரணம் நாஸ்டால்ஜியா. சிறு வயதில் ஏற்படும் ஈர்ப்பு சுலபமாக அழிவதில்லை. குறைந்தபட்சம் எனக்கு அழிவதில்லை. இரண்டாவது நடை. சுஜாதாவின் நவீன நடை இன்று வரை எவருக்கும் கை வந்ததாக எனக்குத் தெரியவில்லை. மூன்றாவது விறுவிறுப்பு. பல புத்தகங்களை எடுத்தால் கீழே வைக்க முடியாது.

புகழ் பெற்ற எழுத்தாளர்தான், ஆனால் அவரது கணேஷ்-வசந்த் நாவல்கள் அவருக்குத் தந்திருக்கும் ஒளிவட்டத்தில் பிரமாதமான சில முயற்சிகள் கண்டுகொள்ளப் படுவதில்லை. அவரை இலக்கியவாதியாகப் பார்ப்பவர்களும் ஸ்ரீரங்கத்துக் கதைகளையும் அவரது நாடகங்களையும் தாண்டுவதில்லை. கணேஷும் வசந்தும் இல்லாமல் வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகவோ அல்லது மாத நாவல்களாகவோ வந்ததாலேயே வைரங்கள், ஒரே ஒரு துரோகம், பூக்குட்டி, ஜன்னல் மலர், குருபிரசாதின் கடைசி தினம், மண்மகன், 24 ரூபாய் தீவு என்று பல இலக்கியத் தரமுள்ள படைப்புகள் சுஜாதாவின் பரம ரசிகர்களாலும், இலக்கிய விமர்சகர்களாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. (வேறு நாவல்களை நினைவு கூர்பவர்கள் தவறாமல் பின்னூட்டம் எழுதுங்கள்!)

என் கண்ணில் அவர் ஒரு (இரண்டாம் பென்ச்) இலக்கியவாதியாகத் தெரிவது இந்த மாதிரி நாவல்களால்தான். வசந்த காலக் குற்றங்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். Arthur Haileysque நாவல் எழுத முயற்சித்திருக்கிறார். அதாவது ஒரு பின்புலத்தை எடுத்துக்கொண்டு கதை என்னும் சட்டத்தில் பல நுண்விவரங்களை காட்டி நம்மை பிரமிக்க வைப்பது. Police Procedural என்றும் சொல்லலாம். அதாவது போலீஸ் துறையின் தினசரி வாழ்க்கையின் நுண்விவரங்களை நிறைய கொடுத்து போலீஸ் எப்படி வேலை செய்கிறது என்று நமக்கு உணர்த்துவது. மொத்தத்தில் நல்ல புத்தகம். ஆங்கிலத்தில் இந்த மாதிரி நாவல்கள் பிரபலம்.

களம்: எண்பதுகளின் பெங்களூர். ஒரு லோகல் கால் எண்பது பைசா. இந்திரா நகரே நகரத்துக்கு வெளியே இருந்திருக்கும். டெக்னாலஜி கிடையாது. இந்த நிலையில் போலீசுக்கு வரும் சவால்கள்.

மூன்று கிளைக்கதைகள்.
ஆறுமுகம் திறமை வாய்ந்த திருடன். திறக்க முடியாத பூட்டே கிடையாது. பூட்டுக்கு மறு சாவி தயாரித்து திறந்து வேண்டியதை எடுத்துக்கொண்டு மீண்டும் பூட்டிவிட்டு செல்வது இவன் ஸ்டைல், முத்திரை. இந்த முத்திரையை வைத்தே போலீஸ் இவன்தான் திருடினான் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஜெயிலிலிருந்து திரும்பி வந்திருக்கிறான், இந்த முறை சாவியை தான் தயாரித்து, தனக்கு ஒரு அலைபி உருவாக்கிக் கொண்டு, கூட்டாளியை வைத்து அதே முத்திரையுடன் திருட திட்டமிடுகிறான். கூட்டாளி ஒரு “கேஸ்”.
சுனில் பணக்கார வீட்டுப் பையன். கஞ்சா கேஸ். பொழுது போகாமல் கிக்குக்காக பிரேமலதா என்று பெண்ணை ஃபோனில் கூப்பிட்டு ஆபாசமாக மிரட்டுகிறான். விவகாரம் முற்றிப் போய் பிரேமலதாவின் ஏழு வயதுப் பெண்ணை கடத்துகிறான்.
ரேகா-பிரசன்னா காதல். அப்பா அம்மாவுக்கு பிடிக்கவில்லை. போலீஸ் உதவியை நாடுகிறார்கள்.

இந்த மூன்றும் போலீஸ் கமிஷனர் கவனத்துக்கே வருகிறது. ரேகா-பிரசன்னா கேசில் கோட்டை விடுகிறார்கள். கடத்தல் கேசை சிறப்பாக கண்டுபிடிக்கிறார்கள். திருட்டு கேஸ் குற்றவாளிகளின் திறமையின்மையால் மாட்டிக் கொள்கிறது.

மிக அருமையாக எழுதி இருக்கிறார். அவரது சாதனைகளில் ஒன்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா

இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”

மீள்பதிப்பு, முதல் பதிப்பு செப்டம்பர் 2010-இல்.

இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பிரபலமானது என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு.

இ.பா.வின் நாவல்களில் இது சிறந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு இ.பா.வைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை. அவருடைய அங்கதம், எழுத்து பொதுவாக என் ரசனைக்கு ஒத்து வருவதில்லை.

குருதிப்புனல் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது நம் வரலாற்றில் அழியாத களங்கம். கூலி அதிகமாக கேட்டதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்த கோபால கிருஷ்ண நாயுடு நிரபராதி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது!

இதைப் பற்றி எனக்கு தெரிந்து மூன்று நாவல்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று குருதிப்புனல், இரண்டு சோலை சுந்தரப் பெருமாளின்செந்நெல்“, மூன்று பாட்டாளி எழுதி சமீபத்தில் வந்த “கீழைத்தீ“. இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியம்தான்.

குருதிப்புனலில் டெல்லிவாசியான சிவா இரண்டு வருஷத்துக்கு முன் கீழ்வெண்மணி மாதிரி ஒரு கிராமத்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருவதுடன் தொடங்குகிறது. கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும் காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கூலி அதிகம் வேண்டுமென்று போராடுபவர்களுக்கு ராமையாதான் de facto தலைவர். அவருடன்தான் கோபால் தங்கி இருக்கிறான். நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு. தான் வீரியத்தை நிரூபிக்க அவர் நிறைய வைப்பாட்டி வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார். பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டுமென்று எண்ணி அவரிடம் பேசிப் பார்க்கப் போகும்போது ஆண்மையைப் பற்றி கோபால் இரண்டு வார்த்தை விடுகிறான். நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு, ஒரு ஹரிஜனப் பெண் கடத்தப்படுகிறார்கள். துப்பறிவதற்காக கோபால் நாயுடுவின் ஷோ வைப்பாட்டி பங்கஜத்தை சந்திக்கப் போகிறான். பங்கஜத்துக்கு எப்போதுமே கோபால் மேல் கண். கடத்தப்பட்டவர்கள் பங்கஜத்தின் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போது ஏற்படும் அடிதடியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். ராமையா மேல் பழி போட்டு அரெஸ்ட். தகராறு வலுத்துக்கொண்டே போகிறது. ஒரு “பறையன்” நாயுடுவை அடிக்கிறான். கடைசியில் நாயுடுவின் ஆட்கள் போலீஸ் பாதுகாப்போடு குழந்தைகளும் பெண்களும் நிரம்பி இருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறார்கள், கோபால் வன்முறையே வழி என்று தீர்மானிக்கிறான்.

நாயுடுவுக்கு கொலை வெறி கிளம்ப மூன்று காரணங்கள்: கூலிக்கார பசங்க நம்மை எதிர்த்து பேசுவதா என்ற ஆத்திரம்; உயர்ந்த ஜாதியில் பிறந்த தன்னை ஒரு பறப் பையன் அடித்துவிட்டானே என்ற வெறி; எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் குறையை சுட்டிக்காட்டும்போது வரும் கையாலாகாத கோபம். கூலிக்காரர்களின் “புரட்சி” தோற்க நாயுடு தரப்பின் பண, அரசியல், ஜாதி பலமும், தற்செயலாக புரட்சிக்கு தலைமை ஏற்கும் கோபால்/சிவாவின் அனுபவமின்மையும் காரணங்கள்.

புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது. படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள் இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம். அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம். 🙂

ஜெயமோகன் இதை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

குறைகள் இருந்தாலும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.

பிற்சேர்க்கை: நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்கள்:

ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து இந்த நாவலை 80களில் திரைப்படமாக்கினார். கதாநாயகி இல்லாமல் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது.

குருதிப்புனல் முன்னுரையில் இ.பா.

தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப்படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் க.நா. சுப்ரமண்யம்

.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:

 • கீழ்வெண்மணி நாவல்கள்
 • ஜெயகாந்தனின் “கங்கை எங்கே போகிறாள்?”

  படிக்கும்போது நிறைவாக இருக்கிறது.

  சில நேரங்களில் சில மனிதர்களின் sequel. குமுதத்தில் தொடர்கதையாக வந்தது.

  கதை ஒன்றும் பெரும் சிக்கல்கள் நிறைந்தது இல்லை. பிரபு நொடிந்து போய் சென்னையை விட்டு ஓடிவிடுகிறான். தற்செயலாக தன் காரில் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்வது அவள் உயிரைக் காப்பாற்றுகிறது. அதில் ஞானோதயம் பெறும் அவன் தன் மேல்தட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு மெக்கானிக்காக தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறான். எழுத்தாளர் ஆர்கேவி அவனைப் பற்றி ஒரு கதை எழுத கங்கா, பத்மா எல்லாரும் அவனை மீண்டும் கண்டுபிடிக்கிறார்கள். ரிடையர் ஆகும் கங்கா பிரபுவோடு தன் இறுதிக் காலத்தை கங்கைக் கரையில் கழிக்கிறாள்.

  புத்தகம் முழுவதும் தெரிவது அன்பு. ஒருவரை ஒருவர் மாற்ற முயலாத, மாற்ற விரும்பாத, அவரவர் குற்றம் குறைகளோடு ஒருவரை ஒருவர் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் அன்பு. கங்கா, பத்மா, மஞ்சு, கங்காவின் அண்ணா, மன்னி, பிரபு, பிரபுவின் வளர்ப்பு மகன் பாபு என்று எல்லாரும் குறை உள்ளவர்களே. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் சப்போர்ட் செய்கிறார்கள். அது மிக நிறைவாக இருக்கிறது.

  இந்த சீரிசைப் பற்றி ஜெயகாந்தனே சொல்கிறார்:

  ஒரிஜினல் கதை ‘அக்கினிப் பிரவேசம் ‘ தான். அதன் முடிவை மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பிறந்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘. அந்த முடிவு பிடிக்காததால் அது முடிவு வரைக்கும் சென்று பார்ப்பது ‘கங்கை எங்கே போகிறாள் ‘. கங்கையில் போய் விட்டாள் என்றுதான் சொன்னேனே ஒழிய, அவள் இன்னொரு புறம் கரையேறியும் வரலாம். அவள் சுய தன்மையை அவள் இழந்ததாய் எனக்குத் தோன்றவில்லை. ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ இன் duration ஒரு வருஷம் தான். பனிரெண்டு வருஷத்திற்குப் பிறகு ஒரு வருஷம். ‘கங்கை எங்கே போகிறாள் ‘ அவளுடைய அறுபது வயது வரையில் செல்கிறது.

  ஜெயகாந்தனின் பலமே அவர் உருவாக்கும் பாத்திரங்கள்தான். அவரது சாதனைகளில் இன்னொன்று.

  தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

  தொடர்புடைய பக்கங்கள்:

 • ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி
 • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, ஜெயமோகன்
 • சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்