எஸ்விவியின் “உல்லாச வேளை”

க.நா.சு.வின் “படித்திருக்கிறீர்களா?” புத்தகம் எனக்கு ஒரு eye-opener. தமிழில் சுஜாதா, கல்கி தாண்டியும் இலக்கியம் உண்டு என்று நான் அந்தப் புத்தகம் மூலம்தான் தெரிந்துகொண்டேன். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவார். அங்கேதான் இந்த புத்தகத்தை வாங்கினேன். வாங்கிய உடனேயே வராந்தாவிலேயே உட்கார்ந்து புத்தகத்தை படித்தும் முடித்துவிட்டேன். ஆனால் அவர் சொல்லி இருந்த அநேக புத்தகங்கள் அந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே புத்தகம் “உல்லாச வேளை“.

உல்லாச வேளையில் கதை கிதை எதுவும் கிடையாது. ஒரு பணக்கார/மேல் மத்திய தர வர்க்க பிராமணக் குடும்பம். கணவர் வாசுதேவய்யர் ஜட்ஜ். மனைவி பெந்துக்கு (பெருந்தேவி) எழுதப் படிக்கத் தெரியாது. இரண்டு பெண்கள், இரண்டு பையன்கள். மனைவியின் அண்ணாவும் அவர்களோடு இருக்கிறார். ஊரில் நிலபுலம். அவர்கள் அடிக்கும் அரட்டையை கதையாக எழுதிவிட்டார்.

கதை கிடையாது என்றால் பின்னே என்னதான் இருக்கிறது? கதாபாத்திரங்கள்தான். பெந்து தனக்கு எழுதப் படிக்கத் தெரியாதது பற்றி குறைப்பட்டுக் கொள்வதும், வாசுதேவய்யர் அவளை கிண்டல் செய்வதும் திரும்பத் திரும்ப வரும் motifs. அன்றைய ஃபாஷன் (லுங்கிப் புடவை, தியாகபூமிப் புடவை), குடும்பத்தை விட்டுவிட்டு தேச சேவை செய்யும் பெண்கள் – இல்லை இல்லை ஸ்திரீகள், மாம்பலத்தின் குறைகள், லேடீஸ் கிளப், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். அவ்வளவுதான்.

இருபது வருஷத்துக்கு முன் படித்தபோது மிகவும் ரசித்தேன். இப்போதோ ரசிக்கவில்லை. Fluff, உயர் மத்திய வர்க்க பிராமண குடும்ப milieu-ஐ தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் அப்போதும் தோன்றியது, இப்போதும் தோன்றுகிறது. ஆனால் fluff-ஐ அன்று ரசிக்க முடிந்தது. Milieu தத்ரூபமாக இருந்தாலும் பிடித்து இழுத்து உட்கார வைக்கவில்லை. சுவாரசியம் பற்றவில்லை என்று தோன்றுகிறது. இன்னும் எத்தனை பக்கம் என்று புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் இவரது ஒரு புத்தகமாவது படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இதுதான் பெஸ்ட். பிற புத்தகங்கள் (ராமமூர்த்தி) அப்போதே ரசிக்கவில்லை.

போன தலைமுறையினருக்கு எஸ்விவியை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். சுஜாதா கூட இவரது நகைச்சுவையை மெச்சி இருக்கிறார் என்று நினைவு. ஜெரோம் கே. ஜெரோம், ஸ்டீஃபன் லீகாக், ஏ.ஜி. கார்டினர், ஜி.கே. செஸ்டர்டன், ஈ.வி. லூகஸ் போன்றவர்கள்தான் இவருடைய எழுத்துக்கு ரோல் மாடல் என்று நினைக்கிறேன். எனக்கு இந்த ஆங்கில எழுத்தாளர்கள் அவ்வளவு ரசித்ததில்லை. அவர்களுக்கு இவரே பெட்டர். 🙂

இவருடைய முழுப் பெயர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார். முதலில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தார் என்றும் கல்கி இவரை தமிழில் (விகடனில்) எழுத வைத்தார் என்றும் தெரிகிறது. வெங்கட் சாமிநாதன் இவரை மிகவும் சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் (பகுதி 1, பகுதி 2). நான் சொன்னேன் இல்லையா, பெரிசுங்களுக்கு(த்தான்) இவரை பிடிக்கும் என்று!

11 thoughts on “எஸ்விவியின் “உல்லாச வேளை”

  1. எஸ் வி வி ரொம்பவே போர் (எட்டு வருடங்களுக்கு முன் படித்தது). தேவனைப் படித்தவர்களுக்குப் பிற எழுத்தாளர்கள் எவ்வளவு ஹாஸ்யமாக எழுதினாலும் சிரிக்கத் தோன்றாது, சம்பந்தப்பட்ட எழுத்தாளர் வந்து கிச்சு கிச்சு மூட்டினாலும் கூட:-)

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.