சத்தியமூர்த்தி

விடுதலைப் போராட்டத்தின் இரண்டாம் நிலை தலைவர்கள் – வ.உ.சி., சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசஃப், திரு.வி.க., நாரிமன், அரவிந்தர், சரத்சந்திர போஸ், பிபின் சந்திர பால், அன்சாரி, புலாபாய் தேசாய், ஜம்னாலால் பஜாஜ், டாக்டர் கிச்லூ போன்றவர்கள் – என்னை fascinate செய்பவர்கள். இவர்கள் அனேகமாக எந்தப் பெரிய பதவியையும் அடையாதவர்கள். சிறு வட்டத்திற்குள் பிரகாசித்தவர்கள். பலரும் விடுதலைக்கு முன்னே இறந்தே போய்விட்டார்கள். இன்று அனேகமாக மறக்கப்பட்டவர்கள். என்ன கிடைக்கும் என்று நினைத்துப் போராடினார்கள்? எதற்காக சிறை சென்றார்கள்? சொத்து சுகத்தை இழந்தார்கள்?

அதுவும் சத்தியமூர்த்தி! அவர் சுகமாக வாழ விரும்பி இருக்கிறார். சுகவாழ்வு என்றால் ருசியான உணவு,  நேர்த்தியான ஆடை, வாசனை திரவியம், சங்கீதக் கச்சேரி, நாடகம்,  மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வீடு, கார் அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. அதற்கே உல்லாசி என்று அன்று திட்டி இருக்கிறார்கள்.

அவரிடம் எந்த போலித்தனமும் இல்லை.  நாலு பேர் என்னை வாழ்த்தினால் எனக்கு உற்சாகம் கிடைக்கிறது என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக புகழ்ச்சிக்கு மயங்குபவர் என்று திட்டு வாங்கி இருக்கிறார்.

பதவி வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். காமராஜே என்ன பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டுவிடுவார் என்று சொல்லி இருக்கிறார். தன் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம் அவ்வப்போது சுதந்திர இந்தியாவின் தூதராக இங்கிலாந்தில் பணியாற்ற வேண்டும் என்ற தன் விருப்பத்தை சொல்லி இருக்கிறார். போலித்தனமற்றவர். ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் நேரு தன்னால் எத்தனை முடியுமோ அத்தனை தூரம் காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்பதை எதிர்ப்பேன் என்றாராம். உடனே என்னால் எத்தனை முடியுமோ அத்தனை தூரம் காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்க வேண்டும் என்று போராடுவேன் என்று அதே பொதுக்கூட்டத்தில் மறுத்துப் பேசி இருக்கிறார். இந்த மாதிரி வெளிப்படையாகப் பேசிவிடுவதால் பதவி ஆசை பிடித்தவர் என்றும் திட்டு.

சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட மூத்த மகனான இவர்தான் படித்து குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார். இண்டர்மீடியட் படித்த பிறகு மேலே படிக்க ஆசை ஆனால் நிறைய பணப் பிரச்சினை. ஏதோ நிலத்தை விற்றுத்தான் படித்தார் என்று அவர் தம்பி சொல்கிறார். வக்கீலுக்குப் படித்தாலும் தொழில் நடத்தவில்லை. எஸ். ஸ்ரீனிவாச ஐயங்காரின் உதவியால்தான் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அரசியலில் ஈடுபட முடிந்ததாம். ஐயங்கார் பிரபல வக்கீல், காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார், திரு.வி.க.வுக்கும் உதவி இருக்கிறார். சத்தியமூர்த்தியின் தம்பி மைலாப்பூர் பி.எஸ். பள்ளி ஆசிரியராகத்தான் வாழ்ந்திருக்கிறார். பெரிய வக்கீல் படிப்பு எல்லாம் படிக்கவில்லை. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தை நடத்தவே கொஞ்சம் சிரமப்பட்டாரோ என்று தோன்றுகிறது. அவரைப் பார்க்க நிறைய தொண்டர்கள் வருவார்களாம், சாப்பாடு எல்லாம் போட முடியாதாம், காப்பி கொடுக்கவே கஷ்டமாம். சில சமயங்களில் பணம் பெற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் கேள்வி கேட்டிருக்கிறேன் என்று அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். கே.பி. சுந்தராம்பாள்தான் இவரது நிலையை கவனித்து ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று எங்கேயோ படித்த நினைவு இருக்கிறது. தான் தரித்திரன், அதனால் தன் நேர்மை சந்தேகிக்கப்படுகிறது என்று அவரே வருத்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்.

சுகமாக வாழ ஆசைப்படவர்தான், அவர் ஆசைப்பட்ட மாதிரி வாழ பணம் பற்றவில்லைதான், ஆனால் மீண்டும் மீண்டும் சிறைவாசம். 1931-இலிருந்து இறப்பது வரை நாலு முறை சிறை. ஒவ்வொரு முறையும் உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடைசி முறை அமராவதி சிறையிலிருந்து ஏற்பட்ட உடல் நலப் பாதிப்பிலிருந்து மீளவில்லை, இறந்தே போனார்.

1937-இல் அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள் என்கிறார் சாண்டில்யன். ஆனால் ராஜாஜிக்குத்தான் மேலிடத்தில் நெருக்கம், செல்வாக்கு. காந்தியும் காங்கிரஸ் மேலிடமும் கொடுத்த அழுத்தத்தால் சத்தியமூர்த்தி எப்போதும் போட்டியிடும், சுலபமாக வெல்லும் பல்கலைக்கழகத் தொகுதியையே ராஜாஜிக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையும் அப்படி விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறார். ராஜாஜியே ஒரு பொதுக்கூட்டத்தில் இதற்கு ஏதோ சாக்குப்போக்கு சொன்னதாகவும் அதே பொதுக்கூட்டத்தில் சத்தியமூர்த்தியும் உற்சாகம் இல்லாமல் அதை ஆமோதித்துப் பேசியதாகவும் தி.ஜ.ர. குறிப்பிடுகிறார்.  சத்தியமூர்த்தி அப்போது மத்திய சட்டசபை உறுப்பினர், அதை சாக்காக வைத்து அவருக்கு மாநில அளவில் போட்டி போட வாய்ப்பளிக்கவில்லையாம். அவரை மத்திய சட்டசபைக்கு அனுப்பியது ராஜாஜிக்குப் போட்டி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தால்தான் என்று தெரிகிறது. இதே போலத்தான் பம்பாய் மாநிலத்திலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நாரிமனை விட்டுவிட்டு பி.ஜி. கெர்ரை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக படேல் – முதல்வர் ஆக்கினார், நாரிமன் வெறுத்துப் போய் காங்கிரசை விட்டு விலகிவிட்டார் என்று படித்திருக்கிறேன்.

குறைந்த பட்சம் மந்திரி பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று காமராஜே சொல்கிறார். ராஜாஜி தன்னிடமிருந்து பிணக்கு கொண்டு விலகி மத்திய சட்டசபையில் உறுப்பினராக இருந்த டி.எஸ்.எஸ். ராஜனை அழைத்து மந்திரி பதவி கொடுத்தார், ஆனால் இவரை கண்டுகொள்ளவில்லை. இவருக்கு மந்திரி பதவி கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாராம். தனக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்று நினைத்தாரோ என்னவோ. காமராஜுக்கு ராஜாஜி மேல் இருந்த கசப்பு அங்கேதான் ஆரம்பித்தது என்று எங்கோ படித்திருக்கிறேன்.

அந்தத் தருணத்தில் ராஜாஜி திரு.வி.க.வையும் மந்திரி ஆக்கி இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். ராஜாஜி திரு.வி.க.வையும் இதே போல ஓரம் கட்டினார் என்று யாரோ (சக்திதாசன்?) சொன்னதைப் படித்திருக்கிறேன்.

சத்தியமூர்த்திக்கு கிடைத்த அதிகபட்ச பதவி சென்னை மேயர் என்பதுதான். அதுவும் அப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அமலில் இருந்திருக்கிறது, ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் ஒரு மேயர் ஒரு வருஷம் மட்டுமே பதவி வகிக்கலாம் என்று விதியாம். அதனால் ஒரே வருஷம்தான் பதவி. மத்திய சட்டசபை உறுப்பினர், மாநில சட்டசபை உறுப்பினர், கார்ப்பரேஷன் கவுன்சிலர், பல்கலைக்கழக senate உறுப்பினர் என்று சில பொறுப்புகள்.

எப்படி பதவி ஆசை உள்ள ஒருவரால் இப்படி மீண்டும் மீண்டும் தியாகம் செய்ய முடிந்தது? சுகவாழ்வு வாழ விரும்பிய ஒருவரால் எப்படி மீண்டும் மீண்டும் சிறை செல்ல முடிந்தது? காந்தி சொடுக்கு போட்டால், ஆடுரா ராமா, லங்கையைத் தாண்டுரா ராமா என்றால் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்ய இவர்கள் எல்லாம் தயாராக இருந்திருக்கிறார்கள்! அந்தக் கிழவரும் விட்டுக் கொடு, தியாகம் செய் என்று சொல்லத் தயங்குவதே இல்லை.

காந்தியின் மீது பெருமதிப்பு இருந்தாலும் காந்தீயத்தில் முழு நம்பிக்கை இல்லையாம். காந்தியின் பெரும் பங்களிப்பு என்பது மக்கள் எழுச்சியை உண்டாக்கியதுதான், ஆனால் காந்தி தன் விழுமியங்களை அரசியலில் புகுத்தி குட்டையைக் குழப்பக் கூடாது என்று கருதி இருக்கிறார். ஆனால் அப்படி குட்டையை குழப்புவதால்தான் காந்திக்கு பின்னால் ஒளிவட்டம் இருக்கிறது, அந்த ஒளிவட்டத்தால்தான் மக்கள் எழுச்சி உண்டானது என்பதையும் உணர்ந்திருந்ததாகத் தெரிகிறது. சட்டசபை, பதவி என்பது பலம் வாய்ந்த ஆயுதம், காந்தியின் விழுமியங்கள் சில சமயம் காங்கிரசை பலவீனப்படுத்திவிடுகிறது என்று நினைத்திருக்கிறார். ஆனால் யாருடன் முரண்பட்டாலும் – காந்தி, நேருவாக இருந்தாலும் சரி – நேரடியாக தன் கருத்தைச் சொல்லி அவர்கள் மனதை மாற்றத்தான் முயன்றிருக்கிறார். முன்னரே சொன்ன மாதிரி போலித்தனம் அற்றவர்.

சத்தியமூர்த்தி விடுதலை கிடைத்துவிட்டால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நம்பி இருக்கிறார். குறைந்தபட்சம் தன் பிரசங்கங்களில் அப்படித்தான் சொல்லி இருக்கிறார். நல்ல வேளை 47-க்கு முன்னாலேயே போய்விட்டார்.

அவரது பேச்சுக்கள் – சட்டமன்றத்திலும் சரி, பொதுக்கூட்டங்களிலும் சரி – பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய சட்டசபையிலும் சரி, மாநில சட்டசபையிலும் சரி கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருக்கிறார். காந்தி சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஒருவர் இருந்தால் போதும் என்று சொல்லி இருக்கிறார். டி.எஸ்.எஸ். ராஜன் தனக்கு சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அவர்தான் சொல்லிக் கொடுத்தார் என்கிறார். சி. சுப்ரமணியம் வாலிபர்களைக் கண்டால் அவருக்கு குஷி, அவர்களை சேவை செய்ய ஊக்குவிப்பார், ஒரு நாளைக்கு 10-20 கூட்டங்களில் பேசுவார் என்கிறார். சத்தியமூர்த்தியே பஞ்சாயத்து போர்டு தேர்தல் என்றால் கூட என்னைக் கூப்பிட்டு பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள், நான் எங்கே தொழில் நடத்துவது, என் குடும்பம் என்ன வாயு பட்சணமா செய்யும்  என்று அலுத்துக் கொண்டிருக்கிறார். எஸ்.எஸ். வாசன், சிட்டி, பெ.நா. அப்புசாமி, கல்கி, சங்கு சுப்ரமணியம், தி.ஜ.ர. மாதிரி பலரும் அவரது பேச்சைக் கேட்டு புல்லரித்திருக்கிறார்கள். பல வருஷங்களுக்கு முன் கேட்ட பேச்சைக் கூட நினைவு கூர்கிறார்கள். 1937-ஆம் ஆண்டு தேர்தலில் அவரது பேச்சை ஒலிப்பதிவு செய்து எல்லா பொதுக்கூட்டங்களிலும் போட்டார்களாம். முதல்வராகப் போகும் ராஜாஜியின் பேச்சைக் கூட இப்படி பதிவு செய்திருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஓட்டு கேட்க வீடு வீடாகப் போவார் என்கிறார் கல்கி. உண்மையிலேயே பெரிய பிரச்சார பீரங்கியாக இருந்திருக்கிறார்.

வாலிபர்களிடம், மாணவர்களிடம் கிரிக்கெட்டும் டென்னிஸும் ஹாக்கியும் விளையாடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். மலை ஏறுங்கள், சைக்கிளில், கால்நடையாக நாலு இடத்துக்குப் போங்கள், தேசம் பூராவும் சுற்றுங்கள், நாடகம், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள், சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொல்லி இருக்கிறார். இப்படி எல்லாம் ராஜாஜி சொல்லி இருக்க மாட்டார்! அதனால்தான் வாலிபர்களிடம் அவருக்கு செல்வாக்கு அதிகம் இருந்ததோ என்று தோன்றுகிறது. வாலிபர்களை விடுங்கள், வேலை பார்ப்பவர்களும் விடுமுறை எடுத்துக் கொண்டு நாலு இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கோவில் குளம் அல்ல, மலை வாசஸ்தலம் மாதிரி இடங்களுக்கு போங்கள் என்கிறார். அவரே பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்களில் – குறிப்பாக மனோகரா நாடகத்தில் மனோகரனாகவே நடித்தும் இருக்கிறார்.

கலை பற்றி அவருக்கு சில நவீன எண்ணங்கள் இருந்திருக்கின்றன. புராணங்களையே நாடகமாகவும் திரைப்படமாகவும் நடிக்காதீர்கள், நாடகத்தை பாட்டால் நிரப்பாதீர்கள், சில நாடகங்களை opera போல மாற்றிக் கொள்ளுங்கள், ஆனால் பெருவாரியானவை புதிய கதைகளாகவும் வசனம், காட்சிகள் மூலம் முன் நகர்வதாகவும் இருக்க வேண்டும், தெம்மாங்கு கச்சேரிகளில் பாடப்பட வேண்டும், ஓரிரு பாட்டுகளை பாடகரும் ரசிகர்களும் கோஷ்டியாகப் பாடலாம்…

சத்தியமூர்த்தியைப் பற்றி குறை சொல்பவர்கள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு அவர் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்தார் என்பதுதான். நான் படித்த வரையில் அவர் பரத நாட்டியம் ஒழிந்துவிடக் கூடாது என்றுதான் கவலைப்பட்ட மாதிரி தெரிகிறது. அன்றைய “மேல் குலப்பெண்கள்” பரதநாட்டியம் கற்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அதை ஊக்குவித்தும் இருக்கிறார்.

தன் மகள் லட்சுமியிடம் அசாத்தியப் பிரியமாம். லட்சுமி அவருக்கு காலம் தாழ்ந்து – 38 வயதில் – பிறந்தவர். முதல் முறை அவர் சிறை சென்றதை லட்சுமி விவரிப்பது மிகவும் poignant ஆக இருக்கிறது. லட்சுமிக்கு ஐந்தரை வயது இருக்கும்போது கச்சேரிக்கு குடும்பத்தோடு சென்றாராம், இவர் திரும்பவில்லை, கைது. லட்சுமி அவரை கைதியாகப் பார்த்ததை தன்னால் என்றும் மறக்க முடியாது என்கிறார். லட்சுமி அவ்வப்போது சிறைக்கு சென்று அவரைப் பார்ப்பாராம், அப்படி லட்சுமி வரும் நாளெல்லாம் சத்தியமூர்த்திக்குத் திருநாள்தான் என்கிறார் கல்கி. தன் மகள் நாலு நாளில் வரப் போகிறாள், இரண்டு நாளில் வரப் போகிறாள் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொள்வாராம். பதின்ம வயது லட்சுமிக்கு அவர் எழுதிய கடிதங்கள் எல்லாம் அவர்களுக்குள் இருந்த ஆழமான பந்தத்தைக் காட்டுகின்றன. 1941-இல் சிறையில் இருந்தபோது தினமும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்!

சத்தியமூர்த்திக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். வால்டர் ஸ்காட் நாவல்களும் ரொம்பப் பிடிக்குமாம். டிக்கன்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட், ஷெர்லக் ஹோம்ஸ் பிடிக்குமாம். ரயில் பயணங்களில் படிக்க எட்கர் வாலசாம். தமிழில் கமலாம்பாளும் பத்மாவதியும் மட்டும்தானாம். புதுமைப்பித்தனைப் படிக்கவில்லை என்றாலும் கல்கியையும் புறம் தள்ளி இருப்பது வியப்பளித்தது. பாரதி, ஷெல்லி எல்லாம் பிடிக்குமாம்.

இந்தப் பதிவை எழுதக் காரணம் இணையத்தில் கிடைத்த மின்னூல்கள்தான் – குறிப்பாக சத்தியமூர்த்திக்காக டெல்லி தமிழ்ச்சங்கம் 1963-இல் வெளியிட்ட ஒரு இதழ். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  1. டெல்லி தமிழ்ச் சங்கம் இதழ் (1963)
  2. சத்தியமூர்த்தி நூற்றாண்டு சிறப்பிதழ் (1986)
  3. சத்தியமூர்த்தி பற்றி பிரபலஸ்தர்கள் (1944)
  4. சத்தியமூர்த்தி தன் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு (1945)
  5. சத்தியமூர்த்தியின் பேச்சுகள், கட்டுரைகளின் தொகுப்பு (1945)
  6. சத்தியமூர்த்தியின் மகள் – லட்சுமி கிருஷ்ணமூர்த்தி: புத்தகங்களைக் காதலித்தவர்

2 thoughts on “சத்தியமூர்த்தி

  1. //சிறு வட்டத்திற்குள் பிரகாசித்தவர்கள். பலரும் விடுதலைக்கு முன்னே இறந்தே போய்விட்டார்கள். இன்று அனேகமாக மறக்கப்பட்டவர்கள். என்ன கிடைக்கும் என்று நினைத்துப் போராடினார்கள்? எதற்காக சிறை சென்றார்கள்? சொத்து சுகத்தை இழந்தார்கள்?// காந்தி கூட இந்தப் கேள்விக்குள் அடங்குவார். அரசியல் கிட்டத்தட்ட அவர்களை மறந்து, விடுதலைக்குப் பின்தோன்றிய பயனாளிகளுக்கொண்டு முன்னேறிக்கொண்டுள்ளது. அரசியலுக்குச் சற்றும் குறைவில்லாதது பதிப்பு உலகமும். எத்தனை பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் காகிதங்களின் குப்பைக்குள் முடங்கிப் போயினர்? இந்த அரசியல், பதிப்புலகம் ஒரு வித மயக்கம் என்று நினைக்கிறேன். அதில் வீழ்ந்தவர்கள் மீள்வதி்ல்லை.

    Like

  2. ராஜாஜிக்கும் சத்தியமூர்த்திக்கும் ஆகாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். காமராஜ் சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக மதித்தவர் என்பது மறைக்கடிக்கப்பட்ட உண்மை. காமராஜ்-ராஜாஜி பிணக்கிற்கு ராஜாஜி சத்தியமூர்த்திக்குச் செய்த துரோகமும் ஒரு காரணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.