வாசந்தியின் சில கதைகள்

Vaasanthiவாசந்தியை இலக்கியவாதி அல்லது வணிக எழுத்தாளர் என்று சுலபமாக வகைப்படுத்திவிட முடியவில்லை. இலக்கியவாதி என்றால் எங்கோ கடைசி வரிசையில் நிற்கிறார். வணிக எழுத்தாளர் என்று பார்த்தால் பொருட்படுத்தக் கூடிய வணிக எழுத்தாளர். இந்தப் பதிவுக்காக அவரது சில பல புத்தகங்களைப் படிக்கும் வரையில் நானும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வகையறா, ஆனால் அந்த வரிசையில் முதல்வர் என்றுதான் நினைத்திருந்தேன். நிச்சயமாக இல்லை, கிருத்திகா, அம்பை, பாமா, ஹெப்சிபா ஜேசுதாசன் அளவுக்கு வரவில்லை என்றாலும் அவருக்கு பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் தேவையில்லை. எழுத்தாளர் என்று சொன்னால் போதும்.

ஜெயமோகன் இவரது மௌனப்புயல், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன நாவல்களை தனது இரண்டாம் வரிசை இலக்கியப் பட்டியலிலும், ஜெய்ப்பூர் நெக்லஸ், நிற்க நிழல் வேண்டும் ஆகிய நாவல்களை தன் பரப்பிலக்கியப் பட்டியலிலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்த வரை நிற்க நிழல் வேண்டும், மூங்கில் பூக்கள் இரண்டும் இலக்கியம். ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவல் வணிக நாவல் இல்லைதான், ஆனால் பெரிய இலக்கியமும் இல்லை.

வாசந்தியின் பாத்திரங்கள் பொதுவாக மேல்மட்டத்தவர்கள். ஓரளவு மென்மையானவர்கள். ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் திருப்பி திருப்பி வருபவர்கள். அதனால் முதல் சில நாவல்களுக்குப் பிறகு அலுத்துவிடுகிறார்கள். என் பதின்ம வயதில் அவரது பாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் ஓ போடுவதால் அவரது புத்தகங்களைப் பார்த்தாலே ஓ என்று கிண்டல் செய்வேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது மூங்கில் பூக்கள் என்ற குறுநாவலைத்தான். மிசோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண். ராணுவ அதிகாரி ராஜீவுடன் காதல், உறவு. அவள் வகுப்பில் “டெரரிஸ்ட்” தலைவர் லால்கங்காவின் மகன் சுங்கா வந்து சேருகிறான். டெரரிஸ்ட் தலைவர் என்றாலும் லால்கங்கா மிசோரத்தில் சாதாரணமாக புழங்குபவர். சுங்கா தொல்லை தரும் மாணவன் என்று அவனுக்கு பெயர் இருக்கிறது. உண்மையில் அவன் சாதாரணமான, அழகை ரசிக்கும் மாணவன். தன் அப்பா மீது கொஞ்சம் வெறுப்பு வேறு. டீச்சருக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பொறாமை கொண்ட ராஜீவ் சுங்கா மீது ஜீப்பை ஏற்றி கொன்றுவிடுகிறான். டீச்சருக்கு அங்கிருந்து தப்பிக்க வேண்டிய நிலை. மிஜோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால்கங்காதான் என்று தெரிய வருகிறது.

மிஜோரப் பின்புலம், அழகான பூக்கள், அன்பு ஆகியவற்றை வைத்து ஒரு நல்ல கதை பின்னி இருக்கிறார். இது மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி கூடெவிடே என்ற திரைப்படமாகவும் வந்தது.

எனக்கு இதைத்தான் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்க நினைத்து தவறுதலாக ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவலைக் குறிப்பிட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

மற்ற நாவல்களில் கடைசி வரை எனக்கு ஓரளவு பிடித்த நாவல். அப்பாவோடு வாழும் டாக்டர் பெண். தான் மகனாகப் பிறக்கவில்லை என்று அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு என்று அவளுக்குத் தெரிகிறது. அது chip on the shoulder ஆக இருக்கிறது. அவளுடைய மனநிலையை நன்றாக சித்தரித்திருக்கிறார்.

சிறை என்ற நாவலும் பரவாயில்லை. மும்பை குண்டுவீச்சு பின்னணியில் ஒரு நிரபராதி நிருபன் மாட்டிக் கொள்கிறான்.

கடை பொம்மைகள் என்ற நாவலையும் குறிப்பிடலாம். பெண் குழந்தை வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட குழந்தையை வெள்ளைக்கார அம்மா ஒருவர் எடுத்து வளர்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெண் குழந்தைகளுக்கான இல்லமாகவே மாறிவிடுகிறது. வளர்ந்த பெண் தனக்குப் பிறகு இந்த இல்லத்தை எடுத்து நடத்துவாள் என்று அந்த வெள்ளைக்கார அம்மா எதிர்பார்க்க, இவள் உள்ளம் தடுமாறுகிறது.

ஆகாச வீடுகள் என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. கிராமம், அக்ரஹாரம். ஆணாதிக்கம். மாமா சபேசனுக்கு தன் எட்டு வயது மகன் ராஜு மீது அதீத அன்பு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திட்டிக் கொண்டே இருப்பார்.

யுகசந்தி என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. சம்பிரதாயமான பிராமணக் குடும்பம். முதல் பையன் போலந்துக்காரியை மணந்து கொள்கிறார். இரண்டாமவர் ஒரு முஸ்லிம் பெண்ணை. முதல் பையன் ஐம்பது வயதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறார். விதவை அம்மா, முதல் பையனின் பெண் என்று கதாபாத்திரங்கள். நடுவில் இடதுசாரி சார்புடைய வள்ளியின் கிளைக்கதை.

டைம் பாஸ் என்ற அளவில் ஆர்த்திக்கு முகம் சிவந்தது (நேபாளத்தில் ஒரு பணக்காரக் குடும்ப இளைஞனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடுகிறது. பார்த்துக் கொள்ளப் போகும் தமிழ்நாட்டு நர்சுக்கும் அவனுக்கும் காதல்), அக்னிக்குஞ்சு (வீண் சந்தேகத்தால் பிரிந்த அம்மா-அப்பா பெண்ணுக்கு பதினெட்டு வயதாகும்போது சமாதானம் ஆகிறார்கள்), இடைவெளிகள் தொடர்கின்றன (ஒரு கல்லூரி நகரம். அங்கே புது லைப்ரரியனாக வரும் அழகான இளம் பெண். எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்), காதலெனும் வானவில் (அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் குடும்பத்தின் பதின்ம வயதுப் பெண்), மீண்டும் நாளை வரை (அவசரப்பட்டு சந்தேகப் பிராணி கணவனை மணக்கும் பெண் அவனைப் பிரிந்து சொந்தக் காலில் நிற்கிறாள்), நான் புத்தனில்லை (மேல் தட்டு குடும்பத்தின் அம்மா இன்னொருவனை விரும்புகிறாள்), நழுவும் நேரங்கள் (அப்பாவின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியால் குடும்பத்தில் குழப்பம். தோழிக்கு கான்சர். மகள் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறாள்), பொய்யில் பூத்த நிஜம் (சேர்ந்து வாழும் பெண்ணையும் மகனையும் விபத்தில் பட்ட அடியால் மறந்து போகும் ஆண்), சந்தியா (பெற்றோர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நார்வே செல்லும் பெண் அந்தக் கலாசாரத்தின் வெறுமையைப் புரிந்து கொள்வது), வசந்தம் கசந்தது (குடும்பத்தைப் புறக்கணிக்கும் அரசியல் தலைவி மீண்டும் குடும்பத்தில் ஒன்றுவது), வீடு வரை உறவு (ஒரு சம்பல் கொள்ளைக்காரனின் – டாகுவின் – மனமாற்றம்), வேர்களைத் தேடி (உயர் மத்தியதரக் குடும்பம். விவாகரத்து ஆன பெண். அயோத்தியாக் கலவர பின்புலம்), யாதுமாகி (அதே பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலா, அதே பெண்களை யாரும் புரிந்து கொள்வதில்லை புலம்பல். நடப்பது கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களில். ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைப்பதை புருஷன் விரும்பவில்லை. ஆணாதிக்கக் குடும்பம். எதிலோ தொடர்கதையாக வந்திருக்க வேண்டும், உதவி ஆசிரியர் யூஸ்லெஸ். ஒரு பாத்திரத்தின் பெயர் பாதியில் மாறிவிடுகிறது, அதை புத்தகமாகப் போட்ட பிறகும் யாரும் கவனிக்கவில்லை) ஆகிய நாவல்/குறுநாவல்கள் இருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை எல்லைகளின் விளிம்பில் (மேல்மட்ட ஊழல் அதிகாரியின் பெண்ணை மணக்கும் மத்தியதர வர்க்க பாலு, அவனுடைய புதுமைப்பெண் தங்கை மாலு) இன்றே நேசியுங்கள் (முதலாளியால் கொலை செய்யப்பட்ட யூனியன் லீடரின் மனைவிக்கு நூல் விடும் முதலாளியின் வாரிசு).

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் ஜனனம் அதைத் தனியாக குறிப்பிட காரணம் ஒன்றுதான். இது “யாரோ எழுதிய கவிதை” என்று சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. என் போதாத காலம், நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் அம்னீஷியா என்பது பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. இந்த கதையிலும் அதுதான். விபத்து, ஒரு அழகான பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவளுக்கு அம்னீஷியா வந்து பேர் கூட மறந்து போக வேண்டுமே? போகிறது. வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கும் அவளுக்கும் காதல் வர வேண்டுமே! வருகிறது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்க வேண்டுமே? ஆகி இருக்கிறது. அவளைத் தேடும் கணவனுக்கு அவளுக்கு காதல் ஏற்பட்ட பிறகுதான் அவள் இருக்கும் இடம் தெரிய வேண்டுமே? தெரிகிறது. அவளைத் தேடி வரும் கணவன் அவள் காதலைக் கண்டு விலகுவதோடு கதை முடிகிறது. புத்தகமே cliched என்னும்போது சினிமாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி இன்னிலே என்ற திரைப்படமாகவும் வந்தது.

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் வேர் பிடிக்கும் மண். நண்பன் இரண்டு பெண்களை மணந்து வாழ்வதைக் கண்டு ஏற்கனவே மணமான ரமேஷுக்கும் கொஞ்சம் நப்பாசை. கரெக்டாக அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கதை போகிறது. இது பாலகுமாரனை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று ஒரு கிசுகிசுவை எங்கோ படித்திருக்கிறேன். வம்பு பேசும் ஆசையில்தான் இதை தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தேடல் என்று சிறுகதை நினைவிருக்கிறது. பல இன்னல்கள் கண்ட பத்தினி மனநிலை பிறழ்ந்துவிடும் என்று போகும். ஏன் நினைவிருக்கிறது என்றே தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

வண்ணதாசனின் ‘சமவெளி’

வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். சாஹித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர். 2016-க்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிஞராகவும் புகழ் பெற்றவர். பிரபல விமர்சகர் தி.க. சிவசங்கரனின் மகன். சொல்லப் போனால் இந்தக் காலத்தில் தி.க.சி.யைத்தான் வண்ணதாசனின் அப்பா என்று குறிப்பிட வேண்டும்.

அவருக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது அவரது சிறுகதைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். என் வாழ்வோ சாண் ஏறினால் முழம் சறுக்கல் என்றுதான் சில வருஷங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. எதையும் நினைத்த உடனே செய்தாக வேண்டும் இல்லை என்றால் நடப்பதே இல்லை. ஏதோ இப்போதாவது முடிந்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.

சமவெளி சிறுகதைத் தொகுப்பு 1983-இல் விஜயா பதிப்பகம் வேலாயுதத்தால் முதல் முறை வெளியிடப்பட்டிருக்கிறது. நான் படித்தது சந்தியா பதிப்பகம் 2011-இல் வெளியிட்ட பதிப்பு. விஜயா வேலாயுதத்தைப் பற்றி வண்ணதாசன் முகவுரையில் எழுதி இருப்பதைப் படித்தபோது அந்தப் பதிப்பு கிடைக்காதா என்று இருந்தது. வண்ணதாசன் effect-ஏதானோ, படிக்கும் என் மனமும் நெகிழ்கிறதோ என்றும் தோன்றியது.

வண்ணதாசனின் எழுத்தை நான் ஒரே வார்த்தையில் கனிவு என்றுதான் சுருக்குவேன். அவரது கதைகளில் – அனேகமாக எல்லாக் கதைகளிலுமே – கனிவும் நெகிழ்ச்சியும் அன்பும் ஒருவரை ஒருவர் எல்லா குறை நிறைகளோடும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும்தான் வேறு வேறு கோணங்களில் காட்டப்படுகின்றன. சில சமயம் இது பக்குவம் இல்லை, கையாலாகாத்தனத்தை பூசி மெழுகும் முயற்சி என்று கூடத் தோன்றுகிறது. அவரது கதைகளில் ரஜோகுணம் நிறைந்த மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள். விசையும் பலமும் ஆக்ரோஷமும் கோபமும் இழிகுணங்களும் காணப்படுவதே இல்லை. ஆனாலும் அந்தக் கதைகள் தன்னளவில் முழுமையாகவே இருக்கின்றன. அதுவே அவரது பலம்.

வண்ணதாசனை பலரும் திருநெல்வேலி எழுத்தாளர் என்று சுருக்கிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் அவர் மனிதர்களை திருநெல்வேலி பின்புலத்தில் சித்தரித்திருக்கிறார், அவ்வளவுதான். அவரது கதைகளில் தாமிரபரணிக்கு பதிலாக தேம்ஸ் நதி ஓடினால் ஒரு வித்தியாசமும் இருக்காது. அவரது எல்லைகள் மனிதர்களின் குணங்களைப் பொறுத்த வரை குறுகியவையே. ஆனால் புவியியல் ரீதியாக திருநெல்வேலி என்று வருவது தற்செயலே, அது ஒரு விஷயமே இல்லை.

வண்ணதாசனின் கதைகளில் மாபெரும் வரலாற்று தரிசனங்களோ தத்துவ விசாரங்களோ மனிதர்களை தோலுரித்துக் காட்டிவிடுவதோ இல்லைதான். ஆனால் அதெல்லாம் எனக்கு ஒரு குறை அல்ல, அவர் என்ன எழுத முனைந்தாரோ, அதை மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

வண்ணதாசனின் சிறுகதைகளைப் பற்றி எழுத உட்கார்ந்தபோது அவரது சிறுகதைகளை விவரிப்பது மகா கஷ்டம் என்பதை உணர்ந்தேன். அன்பையும் கனிவையும் பற்றி திருப்பி திருப்பி என்ன எழுத? உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்!

வண்ணதாசனை இத்தனை ரசித்தாலும் பாராட்டினாலும் அவர் எனக்கான எழுத்தாளர் இல்லை. எல்லாரும் ரொம்ப நல்லவராக இருந்துவிட்டால் எனக்கு அது ஒட்டுவதில்லை. கர்ணனும் பீமனும் கிருஷ்ணனும் துரியோதனனுமே எனக்கு மகாபாரதத்தை மாபெரும் காவியமாக்குகிறார்கள், ரொம்ப நல்லவனான யுதிஷ்டிரன் அல்ல. Of course, இது வண்ணதாசனின் குறை அல்ல. என் வாசிப்பின் குறையேதான்.

சமவெளி சிறுகதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் மிகச் சிறப்பானதாக நான் கருதுவது ‘நிலை‘. கதை முக்கியமே இல்லை, அதில் வெளிப்படுத்தும் உணர்வு மட்டுமே முக்கியம். நான் விவரிக்கப் போவதில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த இன்னொரு சிறுகதையான சமவெளி இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. என் கண்ணில் சமவெளி சிறப்பான கதை அல்லதான். இந்தச் சிறுகதையைப் படித்தபோது அட இதை நான் கூட எழுதுவேனே என்று தோன்றியது. என்னாலேயே ஒரு சிறுகதையை எழுத முடியும் என்று தோன்றினால் அதை நான் சிறப்பானதாகக் கருதுவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அதை ஏன் ஜெயமோகன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மற்ற சிறுகதைகளில் எனக்குப் பிடித்தவை சில பழைய பாடல்கள், விசாலம், வருகை. சில பழைய பாடல்கள், வருகை போன்ற சிறுகதைகளை எல்லாம் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் என்னால் ஒரு நாளும் எழுத முடியாது. சிறுகதை எழுதுவதை விடுங்கள், கதைச் சுருக்கம் கூட எழுத முடியவில்லை. இதை எல்லாம் எழுத ஒரு மாஸ்டரால்தான் முடியும். இது வரை படித்ததில்லை என்றால் நேரடியாக படித்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

வருகை சிறுகதையில் இரண்டு தோழிகள் சந்திக்கிறார்கள். அப்புறம் என்ன? அன்புதான்!

விசாலம் அவரது ட்ரேட்மார்க் சிறுகதை. விரும்பிய மாமாவின் பெண்ணோடு திருமணம் நடக்கவில்லை. மாமாவின் குடும்பம் நொடித்துப் போய் அந்தப் பெண்ணுக்கு திருமணமே நடக்கவில்லை. அதனால் ஒருவருக்கொருவர் அன்பு விட்டுபோய்விடுமா என்ன? – அதுவும் வண்ணதாசனின் உலகத்தில்?

தாகமாய் இருக்கிறவர்கள் சிறுகதையும் விசாலத்தின் இன்னொரு வடிவம்தான். ஆனால் சில வலுவான பாத்திரங்களை வைத்து தாளிப்பு வேலை செய்திருக்கிறார்.

அவருக்கு வரும் போகும் சிறுகதை பிடித்தமான ஒன்று என்று தோன்றியது. அவருக்கு கொஞ்சம் நீளமான சிறுகதை. கணவன்-மனைவிக்குள் சிறு மனஸ்தாபம் என்று சுருக்குகிறேன்.

உதிரி இன்னொரு நல்ல சிறுகதை. இறந்தவர் மேல் நெகிழ்ச்சி என்று சுருக்கலாம்.

கூறல் இன்னொரு நல்ல சிறுகதை. ஆனால் விவரிப்பது மகா கஷ்டம். படித்துக் கொள்ளுங்கள்!

பளு சுமாரான சிறுகதைதான். வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர் மணம் முறிந்த பெண்ண மணக்கிறேன், வேலை கிடைக்குமா என்று பார்க்கிறார். வெளியேற்றம், பூனைகள் சிறுகதைகளும் என் பார்வையில் சுமார்தான். நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும் ஓவர் குறியீடாக இருக்கிறது

இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்னால் அவரது தளத்தில் சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். என் பதிவு ஒன்றை அங்கே எடுத்துப் போட்டிருப்பதைக் கண்டு அப்படியே ஷாக்காயிட்டேன். என்னை எல்லாம் ஒரு பொருட்டாக நினைத்தார் (நினைத்தது அவரா அல்லது சுல்தானா என்று நிச்சயமாகத் தெரியாது) என்றால் அது அவர் கதைகளில் நிரம்பி இருக்கும் கனிவின் இன்னொரு வெளிப்பாடுதான்.

ஜெயமோகனின் seminal சிறுகதைத் தேர்வுகளில் வண்ணதாசனின் ஆறு சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

  1. தனுமை – அவரது மிகச் சிறந்த சிறுகதைளில் ஒன்று. இதை விவரிப்பது கஷ்டம், படித்துக் கொள்ளுங்கள்!
  2. நிலை
  3. சமவெளி
  4. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் படியுங்கள் என்பதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
  5. போய்க்கொண்டிருப்பவள் Moving on என்பதை சிறப்பாக காட்டிவிடுகிறார்.
  6. வடிகால் – இன்னும் ஒரு சிறந்த சிறுகதை. படியுங்கள் என்பதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும் என்ற சிறுகதையும் மனதைத் தொடுகிறது. மனிதர்கள் கஷ்டத்தில் இருக்கும் சூழ்நிலை சிறப்பாக வந்திருக்கிறது. ஒட்டுதல் சிறுகதையும் துக்கத்தை, நட்பை சிறப்பாக விவரிக்கிறது. போர்த்திக் கொள்ளுதல் மனம் வெறுத்துப் போகும் ஒரு தருணத்தை நன்றாக விவரிக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணதாசன் பக்கம்

அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் அசோகமித்திரன் மீது வைத்திருக்கும் மதிப்பை விட ஜெயமோகன் பல மடங்கு அதிக மதிப்பு வைத்திருப்பவர். எனக்கு அசோகமித்திரன் வெறும் எழுத்தாளர் மட்டுமே. ஜெயமோகனுக்கு அவர் ரோல் மாடல். அவரது அறையில் இருக்கும் ஒரே எழுத்தாளரின் படம் அசோகமித்திரனுடையதுதான் என்று சொல்லி இருக்கிறார். வாசகராகவும் அவர் என்னை விடவும் அசோகமித்திரனை சிறப்பாக புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் என்னை விடவும் சிறப்பாகப் புரிந்து கொண்டிருப்பார் என்று நான் சொல்வது அவையடக்கத்தால் அல்ல. அவையடக்கம் பொய்க்கு ஒரு euphemism, பொய் சொல்லி எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஜெயமோகன் என்னை விடத் தேர்ந்த வாசகர் என்பதை நான் நன்றாகவே அறிவேன், அவ்வளவுதான்.

ஆனால் அசோகமித்திரனைப் பற்றி அவர் சமீபத்தில் முன் வைத்திருக்கும் கருத்துக்களை நான் வன்மையாக மறுக்கிறேன். அவருடைய தவறான அணுகுமுறையின் ஊற்றுக்கண் இந்த வரிகளில் முழுமையாக வெளிப்படுகிறது.

அசோகமித்திரனால் … வரலாற்றின் பெருந்தோற்றத்தை அளிக்கும் ஒரு நாவலை எழுதிவிடமுடியுமா? அல்லது அவ்வரலாற்றை பிறிதொன்றாக மாற்றி எழுதிவிடமுடியுமா? இவற்றினூடாகச் சென்று மானுடதரிசனம் ஒன்றை முன்வைக்க முடியுமா? முடியாது.

இது கேனத்தனமான கேள்வி. அடுத்த கேள்வி என்ன? பிராட்மனால் வேகமாக பந்து வீச முடியுமா என்று கேட்கப் போகிறாரா? பிராட்மனால் முடியாதுதான், அதனால் அவர் முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என்று முடிவெடுப்பாரா? ஜேசுதாசால் ஹிந்துஸ்தானி சங்கீதம் பாட முடியாது, அதனால் அவர் குறை உள்ள பாடகரா? பிகாசோ இம்ப்ரஷனிச முறையில் வரையவில்லை அதனால் அவரது மேதமை குறைப்பட்டதா? சரி விடுங்கள் ஜெயமோகனுக்கு கத்தி சண்டை போடத்தெரியாது, அதனால் அவரது மேதமை குறை உள்ளதா?

அசோகமித்திரன் எந்தப் பாணியில் எழுதுவார், எதைப் பற்றி எழுதுவார் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஜெயமோகன், வேண்டாம் டால்ஸ்டாய் ஏன் தண்ணீர் போன்ற ஒரு நாவல் எழுதவில்லை என்று கேட்பது எத்தனை பிதற்றலாக இருக்குமோ அதே அளவு பிதற்றல்தான் இது.

மேலும்

இப்போது சில ஆண்டுகளாக அசோகமித்திரன் கதைகளை உதாரணமாகக்கொண்டு ஒருவகையான மேட்டிமைவாதம் இலக்கியத்தில் மறைமுகமாக முன்வைக்கப்படுகிறது. அது நகர்சார் மேட்டிமைவாதம், உள்ளடங்கிய சாதிய மேட்டிமைவாதம். தங்களை அதிநுட்பர்களாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பின் ஒரு பகுதி. கூடவே நடுத்தரவர்க்க, நகர்ப்புற வாழ்க்கை அன்றி எதையும் அறியாத மொண்ணைத்தனத்தின் வெளிப்பாடு.

என்கிறார். எனக்குத் தெரியாது, இருக்கலாம். அப்படிப்பட்ட மேட்டிமை வாதத்தை விமர்சிக்க ஜெயமோகனே தன்னை அறியாமல் மேட்டிமைவாதத்தை பயன்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது. கடல் தேன் துளியை விடப் பெரியது என்பது மேட்டிமைவாதமேதான்.

ஜெயமோகன்

ஆனால் பார்வை, கதைச்சூழல் ஆகிய இரண்டினாலும் எல்லை வகுக்கப்பட்டது அசோகமித்திரனின் உலகம். அதில் பெரிய தத்துவ தரிசனங்கள் நிகழமுடியாது. ஒட்டுமொத்த வரலாற்றுச் சித்திரம் உருவாக முடியாது. கவித்துவம் மிகக்குறைந்த அளவிலேயே நிகழ முடியும். மானுட உள்ளத்தின் அரிதான சிடுக்குகளும் கொந்தளிப்புகளும் வெளிப்பட முடியாது. உலகமெங்கும் பேரிலக்கிய ஆக்கங்கள் இவற்றால் ஆனவை. அவற்றுக்கு வெளியேதான் அசோகமித்திரனின் உலகம் நிலைகொள்ளமுடியும்.ஒரு மாற்றாக.

என்கிறார். சில வரிகளை – அசோகமித்திரனின் உலகத்திற்கு எல்லைகள் உண்டு, அதில் ஒட்டுமொத்த வரலாற்று சித்திரம் இல்லை – என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால் அவரது உலகத்தில் பெரிய தத்துவ தரிசனங்கள் நிகழ முடியாதா? என்ன சொல்கிறீர்க்ள் ஜெயமோகன்? ‘காலமும் ஐந்து குழந்தைகளும்‘-இல் இல்லாத தத்துவ தரிசனமா? ‘பார்வை‘ சிறுகதையில் இல்லாத தரிசனமா? (அந்த சிறுகதையில் உள்ள தரிசனத்தை எனக்குக் காட்டிக் கொடுத்ததே நீங்கள்தான்) கவித்துவம் மிகக் குறைந்த அளவில் நிகழுமா? கவிதை அறியாத என்னையே அசோகமித்திரனின் எழுத்தில் உள்ள கவித்துவம் கவர்கிறது, நீங்கள் இப்படி சொல்கிறீர்களே? மானுட உள்ளத்தின் அரிதான சிடுக்குகளை மட்டுமே அசோகமித்திரன் எழுதி இருக்கிறார், அதுவே அவரது கதைக்களம், subtle சிடுக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா என்ன? அசோகமித்திரனின் எழுத்து பேரிலக்கியம், அவர் எதற்காக பேரிலக்கியத்துக்கு வெளியே மாற்றாக நிற்க வேண்டும்?

இன்றைய இலக்கியம் இவ்வியல்புகளுக்கு நேர் எதிரானது. இவற்றை மறுத்து முன்னகர்வது. அவர் சென்றகாலத்தின் இலக்கியச் சாதனையாளர். இன்றைய எழுத்தின் முன்மாதிரியாக எவ்வகையிலும் அவரைக் கொள்ளவியலாது.

நான் இந்த கருத்தை கடுமையாக மறுக்கிறேன். அசோகமித்திரன் நவீனத்துவத்தின் முகம்தான். இன்றைய இலக்கியம் நவீனத்துவத்தை விட்டு நகர்ந்திருக்கிறதுதான். ஆனால் அவர் எல்லா காலத்துக்குமான சாதனையாளர். விக்டர் ஹ்யூகோவின் காலத்திற்குப் பிறகு இலக்கியம் Romanticism-த்தை விட்டு நகர்ந்தது என்பதால் ஹ்யூகோ சென்ற காலத்தின் இலக்கிய சாதனையாளர் என்று சொல்ல மாட்டீர்கள். ஷேக்ஸ்பியர் நாடகம் போலக் கூடத்தான் இன்று யாரும் எழுதுவதில்லை, அதனால் ஷேக்ஸ்பியர் காலாவதி ஆகிவிடவில்லை. நாளை உணர்ச்சி கொந்தளிக்கும் எழுத்தை விட்டு கூட இலக்கியம் நகரலாம். அதற்காக நீங்கள் நேற்றைய உலகின் இலக்கிய சாதனையாளர் ஆகிவிட மாட்டீர்கள், என்றைக்குமான சாதனையாளராகத்தான் நின்றிருப்பீர்க்ள்.

Current literary trends – nay, current literary fads – cannot determine literary achievement.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

இலக்கிய அழகியல் தேவைதானா?

ஜெயமோகனின் ஒரு பதிவில் ஒரு வாசகர்

நான் இந்தக்கதை இந்தவகையான அழகியல்கொண்டது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உண்டா? இந்த விமர்சன முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் வாசித்தால் இலக்கியம் புரியாதா? இவை ஏன் எனக்கும் இலக்கியத்திற்கும் நடுவே வர வேண்டும்?

என்று கேட்டிருந்தார். ஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவருடைய நாவல் என்ற புத்தகத்தின் தேவை என்ன, இந்த மாதிரி புத்தகங்களை வகைப்படுத்தி என்ன ஆகப் போகிறது என்று கேட்டேன். கொஞ்சம் கூட எரிச்சல் அடையாமல் பதில் சொன்னார். இத்தனை வருஷம் கழித்தும் ஏறக்குறைய அதே கேள்வி-பதிலைப் படிக்கும்போது கொஞ்சம் புன்முறுவல் வந்தது. எனக்கு முன்னால் பத்து பேர் கேட்டிருப்பார்கள், இன்னும் பத்து பேர் கேட்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அன்றும் சரி இன்றும் சரி நான் ஜெயமோகனிடமிருந்து வேறுபடும் புள்ளி இது. ஜெயமோகன்

நீங்கள் ஒரு தாய் உணவகத்துக்குச் செல்கிறீர்கள். அங்கே சீன உணவுக்குரிய சுவைச்சாறை [sauce ] எதிர்பார்க்க மாட்டீர்கள். அந்த தாய் உணவு என்ன வகை, அதன் தனிச்சுவை என்ன என்று தெரிந்திருப்பீர்கள். அதைச் சுவைக்க தயாராக இருப்பீர்கள். என் நாக்கு ஒன்றுதான், எளிய சுவைஞன் நான், நான் ஏன் சமையற்கலை பற்றியும் சமையல்வடிவங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்க மாட்டீர்கள். அங்கே இட்லிச்சுவையை எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு கோமாளி.

என்று oversimplify செய்கிறார். அந்த வாசகர் – எந்த வாசகருமே சரி – அசோகமித்திரன் பாணியை எதிர்பார்த்து ஜெயமோகனைப் படித்தேன், ஏமாற்றம் அடைந்தேன் என்றா சொல்கிறார்? கிடைப்பதை சாப்பிடுவேன், எனக்கு சுவை பிடித்திருந்தால் போதும் என்கிறார். சீன உணவகத்தில் இட்லி நன்றாக இருந்தால் சாப்பிடக் கூடாது என்று என்ன விதி?

அவரது இன்னொரு oversimplification –

பிரியாணி நல்லது, பால்பாயசமும் சுவையானது. பால்பாயசத்தில் ஒருதுண்டு பிரியாணி விழுந்தால் சாப்பிடமுடியாது.

பிரியாணி துண்டு விழுந்த பாயசத்தை சாப்பிட முடியாதுதான், ஆனால் அந்த முடிவுக்கு வர பாயசத்திற்கு பசும்பால் பயன்படுத்தப்பட்ட்தா, எருமைப்பாலா, சிக்கன் பிரியாணியா, மட்டனா, பிரியாணி மொகலாயர் காலத்தில் முதன்முதலாக சமைக்கப்பட்டதா, இல்லை வேத காலத்திலா, என்ற ஆராய்ச்சி தேவையற்றது என்று அவர் பாணியிலேயே நானும் oversimplify செய்கிறேன்.

ஜெயமோகன் பாணியிலேயே சொன்னால் சோற்றை சுவைத்தால் மட்டும் போதாது, அரிசி பொன்னி அரிசியா இல்லை சோனா மசூரியா என்று தெரிந்து கொள்வதில் ஜெயமோகனுக்கு ஆர்வம் இருக்கிறது. அது அவருக்குத் தேவையாகவும் இருக்கிறது. எல்லாருக்கும் ஆர்வம் இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? சுவை மட்டுமே போதும் என்பவர்களுக்கு சோறு நன்றாக இருந்தால் போதும்!

ஜெயமோகனின் சிறப்பான வாதமாக நான் கருதுவது

அவ்வாறு இலக்கணத்தை ஓரளவேனும் அறியாவிட்டால் நமக்குப் பழகிய, நாம் ஏற்கனவே ரசித்த ஒன்றை ஒவ்வொரு படைப்பிலும் எதிர்பார்ப்போம். ஏதேனும் ஒன்றை அளவுகோலாகக் கொண்டு பிறவற்றை நிராகரிப்போம். அதைவிடப் பெரும்பிழை ஓர் அழகியல்வடிவம் எதை தன் தனிச்சிறப்பாக்க் கொண்டுள்ளதோ அதையே அதன் குறைபாடு என்று புரிந்துகொள்வோம். அவ்வாறு எழுதப்படும் சக்கைவிமர்சனங்கள் இன்று ஏராளமாக உருவாகின்றன. இலக்கியத்திற்கு இவை பெருந்தடைகள்.

வாதம் சிறப்பானதுதான், ஆனால் அது universal truth அல்ல. ஆனால் அது அவருடைய வாசிப்பு உலகத்தில் உண்மையாக இருக்கலாம், அது எல்லாருக்கும் பொருந்துவது அல்ல என்பதைத்தான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் வாசிப்பில் அப்படி படைப்பில் புதிய ஒன்றைப் பார்க்கும் தருணம்தான் எனக்கு வாசிப்பின் உச்சக்கட்டமாக இருக்கிறது. குமுதம் விகடன் படித்து வளர்ந்த காலத்தில் எனக்கு சாயாவனம் கண்திறப்பாக இருந்தது. புதுமைப்பித்தனை முதன்முதலாக துணைப்பாடத்தில் வாசித்தபோது – ஒரு நாள் கழிந்தது சிறுகதை – உன்னதமான அனுபவமாக இருந்தது. அவ்வளவு ஏன் பி.ஜி. வுட்ஹவுசை முதன் முறையாகப் படித்தது கூட மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருக்கிறது – படித்து முப்பது முப்பதைந்து வருஷம் இருக்கும், இன்னும் அப்பாவின் நண்பர் வீட்டில் கெக்கெபிக்கே என்று வாய்விட்டு சிரித்தது தெள்ளத் தெளிவாக நினைவிருக்கும் சிறப்பான வாசிப்பு அனுபவம். கவிதையக் கண்டால் ஓடுபவன்தான், ஆனால் சமீபத்தில்தான் சங்கப் பாடல்களை கண்டுபிடித்திருக்கிறேன். ‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன’ என்ற ஒரு வரிதான் மேலும் சங்கப் பாடல்களைத் தேட வைக்கிறது. கவிதை எனக்கு பழக்கம் இல்லாதது என்பதற்காக நான் எந்த அளவுகோலையும் முதுகில் சுமந்து கொண்டு அந்த வரியைப் படிக்கவில்லை. ஜெயமோகனே அப்படி எந்த அளவுகோலையும் சுமந்துகொண்டுதான் படைப்புகளைப் படிக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. என் நினைப்பு தவறாக இருந்தாலும் கூட அதை அவர் universal truth ஆகப் புரிந்து கொள்வதும் முன்வைப்பதும் குறுகிய கண்ணோட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறது.

இவ்வளவு ஏன், விஷ்ணுபுரம் மாதிரி ஒரு நாவலை அதற்கு முன் படித்ததே இல்லைதான், இத்தனைக்கு விஷ்ணுபுரம் மாதிரி ஒரு காவியப் படைப்பை முழுமையாக உள்வாங்க பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்றே கருதுகிறேன், ஆனால் விஷ்ணுபுரத்தில் சுஜாதா பாணி தெரியவில்லை, அசோகமித்திரன் தளத்தைக் காணவில்லை என்றெல்லாம் ஒரு கணம் கூட எந்த எண்ணமும் எழவில்லை. அப்படி குறைப்படும் யாரையும், விஷ்ணுபுரத்தை அது சுஜாதா பாணியில் இல்லை என்று புறம் தள்ளும் இலக்கிய ஆர்வம் உள்ள எவரையும் நான் கண்டதில்லை. ஜெயமோகனும் அப்படி யாரையும் பார்த்திருக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

அடாணா ராகத்தின் ஸ்வர வரிசை என்ன, ஆரோஹண அவரோஹணம் என்ன, அது 72 மேளகர்த்தா ராகங்களில் எங்கே இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு ‘பாலகனகமய‘ கீர்த்தனையை கேட்டு ரசிக்கலாம். ‘யார் தருவார் இந்த அரியாசனம்‘, ‘வருகிறாள் உன்னைத் தேடி‘, ‘ஆப் கி நஜரோன்னே சம்ஜா‘ எல்லாம் அடாணா ராகத்தில் இருக்கின்றன் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். இல்லை ‘யார் தருவார்’, ‘பாலகனகமய’, ‘ஆப் கி நஜரோன்’ மாதிரி பாடல்களை கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். நாலு முறை கேட்டால் அவை ஒரே பாணியில் இருப்பது தெரியும். அதன் side-effect ஆக அவற்றை வைத்து அடாணா ராகத்தை அடையாளப் படுத்தலாம். என் போன்றவர்கள் இரண்டாவது வகை. நான் நவீனத்துவம் என்றால் என்ன என்று இலக்கியக் கோட்பாடுகளைப் படித்துவிட்டு அதற்கு உதாரணமாக அசோகமித்திரனைப் படிக்கவில்லை, அசோகமித்திரனைப் படித்துத்தான் நவீனத்துவம் என்ன என்று புரிந்து கொண்டேன். அப்படி புரிந்து கொண்டது ஒரு afterthought மட்டுமே. நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியாதது (இன்னும் கூட சரியாகத் தெரியாது, யாராவது கேட்டால் அசோகமித்திரன் மாதிரி எழுத்துப்பா என்றுதான் சிம்பிளாக சொல்லிவிடுவேன்) அசோகமித்திரனைப் படிக்க, அவரது மேதமையைப் புரிந்து கொள்ள எந்த விதத்திலும் தடையாகவும் இல்லை.

ஜெயமோகன் தன் ஸ்டைலுக்கு ஒத்து வரும் அணுகுமுறையே எல்லாருக்கும் சரியானது என்று கருதுகிறார். இலக்கியமும் வாசிப்பும் அப்படி சட்டகத்தில் பொருத்திவிடக் கூடியவை அல்ல என்பதே என் அனுபவத்தால் நான் உணர்ந்திருக்கும் உண்மை.

ஜெயமோகன் மேலும் விளக்குகிறார் –

வெவ்வேறு வகையான இலக்கிய அழகியல் முறைகள் வாழ்க்கையை வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு நோக்கங்களுக்காக அணுகும்பொருட்டு உருவானவை. அவற்றை அறிந்து வாசிப்பதற்குப்பெயர்தான் இலக்கியவாசிப்பு. எல்லாவற்றையும் ‘கதையாக’ வாசிப்பது இலக்கியத்திற்கு எதிரானது. ஓர் இலக்கிய அழகியல் முறையின் இலக்கணத்தை அறிவது அதைக் கையாண்டுள்ள படைப்பை முழுமையாக அறிய உதவக்கூடியது.

அழகியல்வடிவங்களை கொஞ்சம் புரிந்துகொள்ளும்போது நாம் படைப்புக்கு அணுக்கமான வாசகர்களாக ஆகிறோம்

ஜெயமோகனின் அணுகுமுறையில் நான் பிழை காணவில்லை. அழகியல் வடிவங்களை புரிந்து கொண்டால்தான் வாசிப்பு முழுமை அடைகிறது என்பது அவருக்கு சரியான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் நேரடியாக இலக்கியத்தை அணுகுவதும் இன்னொரு, equally valid முறை என்பதை மட்டுமே அழுத்திச் சொல்கிறேன். உதாரணமாக, ‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன‘ என்பது எனக்கு உன்னதமான கவிதை. அது முல்லைத் திணையா பாலைத் திணையா என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பத்தாம் பட்சம். அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் ஒரு அணு கூட குறைந்துவிடப் போவதில்லை. கவிதையைப் படித்து ஓரிரு வருஷத்துக்குப் பிறகுதான் ஏ.கே. ராமானுஜன் புண்ணியத்தில் அது எந்தத் திணை என்று தெரிந்தது. ‘அப்படியா’ என்று மனதில் ஒரு நொடி தோன்றியது. இன்று படித்ததெல்லாம் மறந்துவிட்டாலும் முல்லைப்பூ சொல்லப்படுவதால் அது முல்லைத் திணை என்று தெரிகிறது, அடுத்த இரண்டு வரியில் இடையர்கள் வருவதால் அது முல்லைத்திணை என்பது உறுதிப்படுகிறது. ஆனால் இது முல்லைத் திணையா என்ற யோசனை ஓடும் ஒவ்வொரு கணமும் ஒரு distraction-தான். I resent/begrudge every second I spend away from the poem proper. கவிதையை மனதில் அசை போடுவதை விட்டுவிட்டு திணையைப் பற்றி சிந்திப்பதெல்லாம் சாரத்தை விட்டுவிட்டு சக்கையில் கவனம் செலுத்துவதுதான்.

இந்த வாதம் எங்களுக்குள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. தன் தரப்பை ஜெயமோகனும் என் தரப்பை நானும் முழுமையாகச் சொல்லிவிட்டோம். அவர் பாவம், திருப்பி திருப்பி கேட்கிறார்கள், சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்னை யாரும் கேட்பதில்லை, இருந்தாலும் ‘எல்லாரும் நல்லா பாத்துக்கங்க, நானும் ரௌடிதான்’ என்று நானும் அவ்வப்போது திருப்பி திருப்பி சொல்கிறேன், அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கியக் கோட்பாடுகள்

காவஸ்கரின் சுயசரிதை – ‘Sunny Days’

என் பதின்ம வயதுகளில் – எழுபது-எண்பதுகளில் – கிரிக்கெட் பைத்தியம் இல்லாத நடுத்தர வர்க்க இந்திய இளைஞன் கிடையாது. காவஸ்கரா-விஸ்வநாத்தா, பேடியா-சந்திரசேகரா, பிரசன்னாவா-வெங்கட்டா என்று விவாதிக்காதவர்கள் அபூர்வம். அன்று காவஸ்கர் வெளிப்படையாக, politically incorrect-ஆக, பேசிவிடுவார். அன்றைய சிஸ்டத்தில் அது அபூர்வம். அப்படி பேசியபோதும் அவருக்கு எந்தப் பின்விளைவும் ஏற்பட்டதில்லை. அவரை டீமிலிருந்து விலக்க முடியாத நிலையில் அவர் ஒரு பத்து பனிரண்டு வருஷமாவது இருந்தார். அப்படி பல வெளிப்படையான கருத்துக்களை அவர் எழுதி இருக்கும் புத்தகம் Sunny Days. அந்த நாளில் சர்ச்சைக்குள்ளான புத்தகம். சக விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் போர்ட் நிர்வாகிகள் எல்லாரையும் பற்றி விமர்சித்திருக்கிறார். அங்கங்கே அடக்கி வாசித்திருப்பது தெரிந்தாலும் – குறிப்பாக பட்டோடி-வடேகர்-பேடி பூசல்கள் பற்றி – இத்தனை வெளிப்படையாக இன்று கூட பேசுவது அபூர்வமே.

Sunny Days வெளிவந்தபோது அவருக்கு முப்பது வயது கூட ஆகி இருக்காது. 1976-இல் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு டூர் சென்ற வரைதான் எழுதப்பட்டிருக்கிறது.

அன்றைய சிஸ்டத்தில் – ஏன் இன்று கூட – இந்திய கிரிக்கெட் ஒரு feudal அமைப்பு. நிர்வாகிகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் ஏறக்குறைய பயப்பட வேண்டிய நிலை. கிரிக்கெட் வீரர்களுக்கு புகழ் இருந்தது, ஆனால் பணம் குறைவு. கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிட்டால் பணத்துக்காக அவஸ்தைப்பட வேண்டி இருக்கலாம். ஒரு காலத்தின் ஸ்டாரான சலீம் துரானி பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். சோல்கர் அன்று ஒரு ஸ்டார். ஆனால் ஏதோ ஒரு சோட்டா நிர்வாகிக்கு பயந்து அற்ப விஷயத்துக்காக பொய் சொல்கிறார். சீனியர் வீரர்களைப் பற்றி ஜூனியர்கள் பேசக்கூடாது. வெளிநாட்டு வீரர்களைக் கண்டால் – அதுவும் குறிப்பாக இங்கிலாந்து வீரர்களைக் கண்டால் – கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை பரவலாக இருந்த நேரம்.

காவஸ்கரால் இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தைரியமாகப் பேசுகிறார். எஞ்சினியர் போன்ற சீனியர் வீரர்கள் எப்படி தங்கள் தவறுகள் வெளிப்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறார். தன் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்ட முயற்சிப்பதில்லை. (ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக மெதுவாக ஆடி 36 ரன் எடுத்த உலக மகா சொதப்பலைப் பற்றி தன்னால் அவுட் ஆகக் கூட முடியவில்லை என்று சொல்கிறார்.) 1974 இங்கிலாந்து டூரில் சுதீர் நாயக் தான் shoplift செய்தேன் என்று ஒப்புக்கொண்டது நிர்வாகிகளின் தவறான அறிவுரையால்தான் என்று கருதுவதை வெளிப்படையாக எழுதுகிறார். அவர் அடக்கி வாசித்திருப்பது 1974 இங்கிலாந்து டூரின் போது பெரிதாக வெடித்த வடேகர்-பேடி பூசலைப் பற்றித்தான்.

காவஸ்கர் இந்தக் காலகட்டத்தில் மிகப் பிரமாதமாக விளையாடினார். அவர் கொஞ்சம் கோட்டை விட்டிருந்தாலும் அவரை கிரிக்கெட் நிர்வாகம் இப்படி வெளிப்படையாக எழுதியதற்கு டீமிலிருந்து தூக்கி இருக்கும். அவருக்கு ஏதோ தண்டனை கிடைத்தது என்று நினைவு, ஆனால் சரியாக நினைவில்லை.

காவஸ்கரின் இன்னொரு சிறந்த புத்தகம் One Day Wonders. 1984-85 காலகட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவில் ஒரு உலக அளவிலான கிரிக்கெட் போட்டியை வென்றது. அதை மிகவும் சிறப்பாக விவரித்திருப்பார்.

Idols அவரது புகழ் பெற்ற இன்னொரு புத்தகம். அவர் கண்ணில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைப் பற்றி விவரித்திருப்பார்.

இந்தப் புத்தகங்கள் கிரிக்கெட் அபிமானிகளுக்குத்தான். என் போன்ற கிரிக்கெட் பைத்தியங்க்ள் தவறவிடக்கூடாத நூல்.

படித்த வேறு சில கிரிக்கெட் புத்தகத்தைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை.

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் எழுதிய ‘Cricket As I See It‘. நமக்கு நம்மூர் கிரிக்கெட்தான் சுவாரசியமாக இருக்கிறது, இதைத் தவிர்த்திருக்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கிரிக்கெட்

அரதப்பழசு திரைப்படம் – அசூத் கன்யா (1936)

நான் ஹிந்திப் படங்களைப் பார்க்க ஆரம்பித்ததே என் பதின்ம வயதுகள் முடிந்த பிறகுதான். அப்போதே அசூத் கன்யா திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அதன் பின்கதை அத்தனை சுவாரசியமாக இருந்தது.

அஷோக் குமார் நடித்த முதல் திரைப்படம். அவருக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய கதை. அசூத் கன்யா திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருந்த தேவிகா ராணி – தயாரிப்பாளர் ஹிமான்ஷு ராயின் மனைவி – கணவனை கழற்றிவிட்டுவிட்டு ஹீரோவோடு ஓடிப் போய்விட்டார். தேவிகா ராணி அன்று ஒரு பிரபல நட்சத்திரம். ஹிமான்ஷு ராய் நல்ல பிசினஸ்மான் போலிருக்கிறது. நீ என்னை விட்டு இன்னொருவனுடன் போனால் என்ன, பிரபல நட்சத்திரமான நீதான் படத்தின் நாயகி, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால் ஹீரோவை கைகழுவிவிட்டு அஷோக் குமாரை ஹீரோவாகப் போட்டிருக்கிறார்.

இசை அமைத்த சரஸ்வதி தேவி – நிஜப் பெயர் குர்ஷித் மினோசர்-ஹோம்ஜி – பார்சி மதத்தவர். ஹிமான்ஷு ராய் அவர் பாடியதை ரேடியோவில் கேட்டுவிட்டு அவரைத் தேடிப் போய் இசை அமைக்க அழைத்திருக்கிறார். அன்றைய பார்சி சமூகம் பம்பாயில் பெரும் தாக்கம் உடையது. நம்ம மதத்துப் பெண் டாக்கிகளிலா என்று ஆட்சேபித்திருக்கிறார்கள். சென்சார் போர்டிலும் சில பார்சிகள் இருந்திருக்கிறார்கள். ஏதாவது பிர்ச்சினை வந்துவிடப் போகிறது என்று பெயரை சரஸ்வதி தேவி என்று மாற்றிக் கொண்டு இசை அமைத்திருக்கிறார். இந்தியாவின் முதல் பெண் இசை அமைப்பாளர் இவர்தானாம்.

படம் பெரும் வெற்றி. இன்றும் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நினைவு கூரப்படுகிறது.

பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்தான், ஆனால் பார்க்கும் தைரியம் இல்லை. நான் பழைய படங்களைப் பார்ப்பதே அனேகமாக பாட்டுக்களுக்காகத்தான். ஆனால் முப்பதுகளில் வந்த கே.எல். சைகல் வகைப் பாடல்கள் என்னைக் கவர்வதில்லை. ஊமைப்படங்களின் காலம் முடிந்து டாக்கிகள் – அதாவது பேசும் படங்கள் – வந்த ஐந்தாறு வருஷத்திற்குள் வந்த படம். வழக்கமான கதையோடு சுவாரசியமே இல்லாத திரைப்படமாக இருக்கும் என்ற பயம். படத்தின் ஸ்டில்களில் அஷோக் குமார் அச்சு அசல் பெண் மாதிரியே இருப்பார். மனத்தை திடப்படுத்திக் கொண்டு சமீபத்தில்தான் பார்த்தேன். யூட்யூபில் கிடைக்கிறது.

என்னைப் பொறுத்த வரையில் படத்தின் நாயகி இசை அமைப்பாளர் சரஸ்வதி தேவிதான். வேறு எதையும் கேட்கவில்லை என்றாலும் கேத் கி மூலி பாட்டைக் கேளுங்கள். அஷோக் குமாரும் தேவிகா ராணியும் சொந்தக் குரலில் பாடி இருக்கிறார்கள். சின்னப் பாட்டு, ஒன்றரை நிமிஷம் இருந்தால் அதிகம்.

எனக்கு மிகவும் பிடித்திருந்த இன்னொரு பாட்டு கித் கயே ஹோ கேவன்ஹார். (கேவன்ஹார் என்ற வார்த்தையை நான் இதற்கு முன்னால் கேள்விப்பட்டதில்லை, அதற்கு கோனார் நோட்ஸ் கொடுத்த எழுத்தாளர் அம்பைக்கு நன்றி!) சரஸ்வதி தேவியே பாடி இருக்கிறார். Haunting melody and song, ஆனால் slow tempo உள்ள இந்தப் பாட்டு அனைவரையும் கவரும் என்று எனக்கு தோன்றவில்லை.

அனேகப் பாட்டுகளை ரசித்தேன். சூடி மே லாயா அன்மோல் ரே என்ற பாட்டை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றைய லாவணி நாடகம் போல படமாக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பாட்டுக்கு ஆடுபவர் பின்னாளில் பிரபலமான நகைச்சுவை நடிகரான மெஹ்மூதின் அப்பாவாம்!

திரைக்கதையில் எத்தனை தூரம் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை. படம் வெளிவந்த 1936-இன் கிராமங்களைப் பற்றியே எனக்கு எதுவும் தெரியாது. கதையின் களமோ அன்றைக்கு இருபது முப்பது வருஷங்களுக்கு முற்பட்டது. அதாவது 1900-1910 காலகட்டத்து கிராமத்தில் நடக்கும் கதையாம். தீண்டத் தகாதவர்களுக்கு ரயில்வேயில் சுலபமாக வேலை கிடைத்தது என்று காட்டுகிறார்கள்.

நாயகன் அஷோக் குமார் பிராமண ஜாதி. நாயகி தேவிகா ராணி தீண்டத் தகாத ஜாதி. ஆனால் நாயகனின் அப்பாவும் நாயகியும் அப்பாவும் நண்பர்கள். (அதற்கும் ஒரு பின்கதையாக அஷோக் குமாரின் அப்பாவை தேவிகா ராணியின் அப்பா பாம்பு கடியிலிருந்து காப்பாற்றுகிறார்). சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த அஷோக் குமாருக்கும் தேவிகா ராணிக்கும் ஈர்ப்பு இருக்கிறது, ஆனால் நடக்காத காரியம் என்றும் தெரிகிறது. இருவருக்கும் வேறு யாரோடோ திருமணம் ஆகிறது. ஏதோ சதியால் நாயகியின் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு அஷோக் குமாரைத் தாக்க முற்பட தேவிகா ராணி தன் உயிரைக் கொடுத்து இருவரையும் காக்கிறாள். அஷோக் குமார் அவளுக்கு ஒரு சிலை வடித்து அங்கேயே தன் காலத்தைக் கழிக்கிறார்.

நான் பயப்பட்ட அளவுக்கு கதையோ, அது படமாக்கப்பட்ட விதமோ ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. என் கண்ணோட்டத்தில் எண்பதுகளில் வந்த அலைகள் ஓய்வதில்லை மாதிரி திரைப்படங்களை விட இதன் திரைக்கதை எத்தனையோ பரவாயில்லை. அஷோக் குமார் தன் இயல்பான நடிப்புக்காக புகழ் பெற்றவர், ஆரம்பக் காட்சிகளில் மிகைநடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இயல்பான நடிப்பும் பின்னால் வெளிப்படுகிறது. தேவிகா ராணி நன்றாகவே நடித்திருந்தார். மற்றவர்களும் சொதப்பவில்லை. ஆனால் மெதுவாக இழுத்து இழுத்து வசனம் பேசுவது எனக்குப் பழக கொஞ்சம் நேரம் ஆயிற்று.

இது பழைய படங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். ஆனால் நான் குறிப்பிட்ட பாட்டுகளையாவது பாருங்கள்/கேளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பிடித்திருந்தால் பிற பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

ஹிந்தி நாவல் பரிந்துரைகள்

பிற இந்திய மொழிகளின் இலக்கியம் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. என் பதின்ம வயதுகளில் காண்டேகர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆகியோரின் சில நாவல்களை மட்டும்தான் நான் வளர்ந்த கிராமங்களின் நூலகங்களில் பார்த்திருக்கிறேன். இருபது வயது வரைக்கும் நான் கேள்விப்பட்டிருந்த எழுத்தாளர்கள் இவர்கள் இருவர், தாகூர், தேவதாஸ் புகழ் சரத் சந்திர சாட்டர்ஜி, மற்றும் பிரேம்சந்த் மட்டுமே. அதற்குப் பிறகும் கன்னட, மலையாள, வங்காள இலக்கியத்தோடு கொஞ்சம் பரிச்சயம் ஏற்பட்டது. தெலுகு, வடகிழக்கு மாநிலங்கள், ஒரியா, மராத்தி, குஜராத்தி, ஏன் ஹிந்தி, உருது கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ படித்ததுதான். பிரேம்சந்த், ஃபனீஸ்வர்நாத் ரேணு, மாணிக் பந்தோபாத்யாய், பைரப்பா, அனந்தமூர்த்தி, தகழி, பஷீர், காண்டேகர், தாகூர், இஸ்மத் சுக்டை, மாண்டோ, ஃபகீர் மோஹன் சேனாபதி ஆகியோரைத்தான் ஓரளவாவது படித்திருக்கிறேன்.

ஏன்? இரண்டு காரணங்கள். ஒன்று மொழிபெயர்ப்புகள் சுலபமாக கிடைப்பதில்லை. இரண்டாவது என்ன படிப்பது என்று தெரிவதும் இல்லை. India Novels Collective என்ற இந்தத் தளம் இந்தக் குறையை கொஞ்சம் நிவர்த்தி செய்கிறது. பல இந்திய மொழிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களை மொழிபெயர்க்கப் போகிறார்களாம். இப்போதைக்கு ஹிந்தி தேர்வுகளை மட்டும் பட்டியல் போட்டிருக்கிறார்கள். வசதிக்காக பட்டியல் கீழே.

Year of Publication Author Novel
1936 Premchand Godan
1937 Jainendra Tyagpatra
1940-44 Agyeya Shekar: Ek Jeevani
1946 Hazari Prasad Dwivedi Banbhatt Ki Aatmakatha
1949 Dharamvir Bharathi Gunahon Ki Devata
1954 Phanishwarnath Renu Maila Aanchal
1958 Yashpal Jhoota Sach
1966 Krisna Sobti Mitro Marjani
1966 Mohan Rakesh Andhere Band Kamre
1966 Rahi Masoom Raza Aadha Gaon
1968 Srilal Shukla Raag Darbari
1974 Bhisham Sahni Tamas
1976 Govind Mishra Lal Pili Zameen
1982 Manohar Shyam Joshi Kasap
1986 Abdul Bismillah Jhini Jhini Bini Chadariya
1992 Vishnu Prabhkar Ardhanarishwar
1993 Surendra Varma Mujhe Chand Chahiye
Nagarjun Ratinath Ki Chachi
Usta Priyamvada Pachpan Khambhe Laal Deewaarein

இவற்றில் நான் தமஸ்ஸையும் கோதானையும் மட்டுமே அரைகுறையாகப் படித்திருக்கிறேன். நீங்கள் யாராவது எதையாவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் தவறாமல் மறுமொழி எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பல ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘On Golden Pond’

சில திரைப்படங்களைப் பார்க்கும்போது அதன் மூலக்கதையை, மூல நாடகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி தோன்ற வைத்த திரைப்படம் On Golden Pond (1981). எர்னெஸ்ட் தாம்ப்ஸன் 1979-இல் எழுதி வெற்றி பெற்ற நாடகம், இரண்டே வருடங்களில் திரைப்படமாக்கப்பட்டது. தாம்ப்ஸனே திரைக்கதையையும் எழுதினார். ஹென்றி ஃபோண்டா நாயகனாகவும் காதரின் ஹெப்பர்ன் நாயகியாகவும் நடித்தனர். ஹென்றி ஃபோண்டாவின் மகள் ஜேன் ஃபோண்டாவே திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தார். அந்த வருடத்துக்கான சிறந்த திரைப்படம், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, சிறந்த திரைக்கதைக்கான விருதுகளை தட்டிச் சென்றது. ஜேன் ஃபோண்டா சிறந்த குணசித்திர நடிகைக்கான nominate செய்யப்பட்டார்.

ஜேன் ஃபோண்டா தன் அப்பா நடிக்க வேண்டும் என்பதற்காகவே நாடகத்தின் திரைப்படமாக்கும் உரிமையை வாங்கினாராம். நாடகத்தில் சித்தரிக்கப்படும் தந்தை-மகள் உறவு ஹென்றி-ஜேன் ஃபோண்டாக்களின் நிஜ உலக உறவை பிரதிபலிக்கிறதாம்.

சிறந்த திரைப்படம், கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

மூலக்கதையைப் படிக்காவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று, புத்தகத்துக்கும் திரைப்படத்துக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதில்லை. அல்லது, திரைப்படம் கதையை அப்படியே எடுத்திருப்பதால் படித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. முதல் வகைக்கு உதாரணமாக, சேதன் பகத் எழுதிய ‘Five Point Something‘-க்கும் ‘3 Idiots‘ திரைப்படத்துக்கும் உள்ள தொடர்பை யோசித்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். On Golden Pond இரண்டாவது வகை.

நல்ல நாடகம்தான், நான் குறை சொல்லவில்லை, படிக்காதீர்கள் என்ற தவிர்த்துரை அல்ல. ஆனால் திரைப்படம் தரும் அனுபவம் புத்தகத்தை விட பிரமாதமானது. ஹென்றி ஃபோண்டா ஒரு cantankerous கிழவனாக – Norman Thayer – எல்லாரையும் தூக்கி சாப்பிடும் நடிப்பு. அப்படி ஒரு dominant performance கூட ஹெப்பர்னின் நடிப்பை பின் தள்ளிவிட முடியவில்லை, கிழவனை நன்றாகப் புரிந்து கொண்ட, அவரது எல்லா குறைகளோடும் நிறைகளோடும் அவரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் மனைவியாக அசத்தி இருக்கிறார். தேயர் தன் மனைவி அப்படி தன் நிறைகுறைகளோடு தன்னை ஏற்றுக் கொண்டவர் என்பதை உணர்ந்திருக்கிறார். தன் பெற்றோரைப் பற்றி – குறிப்பாக அப்பாவைப் பற்றி பல மனக்குறைகள் உள்ள பெண்ணாக ஜேன் ஃபோண்டா, 13 வயது சிறுவன் பில்லியாக நடிப்பவர், ஒரே காட்சியில் வந்தாலும் தபால்காரர் சார்லி வேடத்தில் நடிப்பவர், பெண்ணின் காதலனான பில்லியாக நடிப்பவர் எல்லாரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மிக சிம்பிளான கதை. கிழவன்-கிழவி-மகள். கிழவன் தன் பொறுப்பில் விடப்படும் 13 வயது சிறுவனோடு மீன் பிடிக்கிறான் – அதில் ஏற்படும் bond கிழவனுக்கு வாழ்வில் மீண்டும் கொஞ்சம் பிடிப்பைக் கொடுக்கிறது. அவ்வளவுதான்.

சுஜாதா, இ.பா. போன்றவர்கள் சிறந்த நாடகங்களின் தரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் எர்னஸ்ட் தாம்ப்சன் நாடக எழுத்தாளராக பெரும் புகழ் பெற்றவர் அல்லர். இரண்டாம் நிலை நாடக எழுத்தாளர்தான்.

என் பெற்றோர்களிடமும் இதைத்தான் புரிய வைகக் முயற்சிக்கிறேன். அன்றாட வாழ்வைத் தாண்டி ஏதாவது இருந்தால்தான் வாழ்வில் பிடிப்பு இருக்கும் என்று. நான் (இன்னும்) கிழவனாகும்போது நானே புரிந்து கொள்வேனோ என்னவோ தெரியவில்லை. 🙂

புத்தகத்தைப் படிக்கலாம். ஆனால் திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள், திரைப்படங்கள்