அச்சிடப்பட்ட முதல் தமிழ் புத்தகம்

ஜீகன்பால்க் (Ziegenbalg) என்ற டென்மார்க் பாதிரியார்தான் தமிழில் முதல் புத்தகத்தை அச்சிட்டவர் – 1715 வாக்கில் – என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (வேறென்ன புத்தகம், புதிய ஏற்பாடுதான்) ஆனால் ஹென்றிக் ஹென்றிகஸ் (Henrique Henriques) என்ற போர்ச்சுகீசிய பாதிரியார்தான் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகத்தை 1578-இலேயே வெளியிட்டாராம். 24 பக்கங்கள் உள்ள புத்தகமாம், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளாம். இன்றைய கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லத்தில் போர்ச்சுகீசிய அச்சு எந்திரங்களை வைத்து இது அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில புத்தகங்களையும் அச்ச்சடித்திருக்கிறார். ஹென்றிகஸ் ஆமென் என்று சொல்வதற்கு பதில் ஓம் என்று சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தாராம்! அக்பர் டெல்லியிலும், நாயக்கர்கள் மதுரையிலும் தஞ்சையிலும் ஆட்சி செய்து வந்த காலம். ஹிந்துவில் சுவாரசியமான கட்டுரை ஒன்று கிடைக்கிறது.

மேலே உள்ள படத்தில் எனக்குப் புரிந்தது கடைசி மூன்று வரிகள் மட்டுமே – “பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்”

ஜீகன்பால்க் 1706-இல் தரங்கம்பாடிக்கு வந்திருக்கிறார். தமிழிலே புத்தகங்கள் அச்சடித்தால்தான் மத மாற்றத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நினைத்திருக்கிறார். உண்மையில் மத மாற்றத்தை விட தமிழ் கற்பதில்தான் அதிக நேரம் செலவிட்டாராம். அச்சு எந்திரம் ஒன்றை வரவழைத்து, தமிழுக்காக முதல் typeface உருவாக்கி, புதிய ஏற்பாட்டை அச்சடித்திருக்கிறார். மேல் விவரங்களுக்கு எஸ். முத்தையா எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்கலாம். (படத்தில் இருப்பதில் என்னால் சில எழுத்துக்களை மட்டுமே அடையாளம் காண முடிகிறது.)

தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புடைய சுட்டிகள்:
முதல் தமிழ் புத்தகம்
ஜீகன்பால்க் பற்றி எஸ். முத்தையா

2011 – திரும்பிப் பார்க்கிறேன்

வோர்ட்பிரஸ் இந்தத் தளத்தைப் பற்றி உருவாக்கிய 2011 ரிப்போர்ட்டைப் பார்த்தேன். போன வருஷம் எழுதியவற்றில் மிகப் பாப்புலரான பதிவு கல்கியின் வாரிசுகள் என்ற பதிவாம். அந்த சரித்திர நாவல்கள் சீரிஸ் பதிவுகளை எனக்கும் பிடிக்கும். மிச்ச டாப் பதிவுகள்:

ஜெயமோகன் தளத்திலிருந்தும், தமிழ்மணம் திரட்டியிலிருந்தும் நிறைய பேர் வந்து பார்த்திருக்கிறார்களாம். இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவிலும் வாசகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை, ஆனால் அர்ஜென்டினா, சிலி, அல்ஜீரியா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் படிக்கிறார்கள் என்பது வியப்புதான். நிறைய மறுமொழிகள் எழுதிய ரமணன், ஸ்ரீனிவாஸ், ஜெயமோகன், சாரதா, சிமுலேஷன், மற்ற எல்லாருக்கும் நன்றி!

படித்ததில் எது நல்ல படைப்பு என்பதுதான் முக்கியம், 2011-இல் என்னத்தைப் படித்தேன் என்பதெல்லாம் எனக்கே மேட்டர் இல்லை. இருந்தாலும் போன வருஷம் என்னதான் எழுதி இருக்கிறோம் என்று ஒரு அவசரப் பார்வை பார்த்தேன். போன வருஷம் எழுதிய பதிவுகளில் எது நல்ல நாவல் பற்றியது, எது நல்ல சிறுகதை பற்றியது என்று கீழே. சிறுகதைகள் பேரைக் கிளிக்கினால் அந்த சிறுகதையைப் படிக்கலாம்.

சிறுகதைகள்
எழுத்தாளர் சிறுகதை(கள்) பதிவு
லா.ச.ரா. பாற்கடல் என் பதிவு
சுந்தர ராமசாமி விகாசம் என் பதிவு
கு.ப.ரா. கனகாம்பரம் என் பதிவு
சுஜாதா ஒரு லட்சம் புத்தகங்கள் என் பதிவு
ஜெயமோகன் அறம் என் பதிவு
ஜெயமோகன் சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர், வணங்கான், தாயார்பாதம், யானை டாக்டர், மயில்கழுத்து, நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, மெல்லிய நூல், பெருவலி, கோட்டி, உலகம் யாவையும் அறம் சீரிஸ் சிறுகதைகள் – என் அலசல்
நாஞ்சில்நாடன் வனம் என் பதிவு
Jack London A Piece of Steak என் பதிவு
ஆலந்தூர் மள்ளன் சுமைதாங்கி என் பதிவு
ஆர்வி (நானேதான்) கிருஷ்ணனைப் பிடிக்காதவன்
ஜெயமோகன் மாடன் மோட்சம் என் பதிவு
பிரகாஷ் சங்கரன் ஞானலோலன், அன்னை, அன்னதாதா என் பதிவு
விவேக் ஷன்பாக் சுதீரின் அம்மா என் பதிவு
சந்திரா அறைக்குள் புகுந்த தனிமை என் பதிவு

நாவல், நாடகம், அபுனைவு இத்யாதி

நாவல்கள்:

 1. சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”
 2. லா.ச.ரா.வின் “அபிதா”
 3. சுஜாதாவின் “நைலான் கயிறு”
 4. அசோகமித்ரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”
 5. பாலகுமாரனின் “காதல் வெண்ணிலா”
 6. ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”
 7. கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானுடம்”
 8. ஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ் உலகு”
 9. பாலகுமாரனின் “அகல்யா”
 10. சம்பத்தின் “இடைவெளி”
 11. ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”
 12. இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்”

 
சரித்திர நாவல்கள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

நாடகங்கள்:
மெரினாவின் “மாப்பிள்ளை முறுக்கு”
சோ ராமசாமியின் “சாத்திரம் சொன்னதில்லை”
சுஜாதாவின் “டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு”

ஆங்கிலப் புத்தகங்கள்:
John Carlin’s “Playing the Enemy”
Jane Austen’s “Pride and Prejudice”
Stuart Neville’s “Ghosts of Belfast”
Frederick Forsyth’s “Dogs of War”

சிறுவர் புத்தகங்கள்:
Roald Dahl’s “BFG”, “Enormous Crocodile”, “Matilda”, “Fantastic Mr. Fox”
Rudyard Kipling’s “Junglebook”
Calvin and Hobbes
R.L. Stevenson’s “Treasure Island”

அபுனைவுகள்:
சுந்தர ராமசாமியின் நினைவோடை சீரிஸ் – “ஜீவா”
யதுகிரி அம்மாளின் “பாரதி நினைவுகள்”
அ.கா. பெருமாளின் “சுண்ணாம்பு கேட்ட இசக்கி”

ஓபன் ரீடிங் ரூம்

இன்னும் ஒரு புத்தகத் தளம். ஓபன் ரீடிங் ரூம் என்ற இந்தத் தளத்தில் காப்பிரைட் முடிந்த, அல்லது நாட்டுடமை ஆன புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. ரமேஷ் என்பவர் முயற்சி எடுத்துச் செய்கிறார். ரமேஷுக்கு வாழ்த்துக்கள்!

ஓபன் ரீடிங் ரூம், தமிழ் தொகுப்புகள், அழியாச்சுடர்கள் என்று இந்த மாதிரி முயற்சிகள் பெருகிக் கொண்டே போவது நல்ல விஷயம். இப்போது இவற்றை ஒருங்கிணைத்த ஒரு அட்டவணைதான் வேண்டி இருக்கிறது…

தொடர்புடைய சுட்டிகள்:
ஓபன் ரீடிங் ரூம் தளம்
தமிழ் தொகுப்புகள் தளம்
அழியாச்சுடர்கள் தளம்

2012 புத்தாண்டு திட்டங்கள் – RV

புது வருஷம் என்றால் திட்டங்கள் போடுவதும் இரண்டு நாள் போனதும் அவற்றை மறந்துவிடுவதும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து நடந்து வரும் பழக்கம். போன வருஷம் போட்ட திட்டங்கள் சிரிக்கத்தான் பயன்படுகின்றன. வழக்கம் போல கொஞ்சம்தான் நடந்தது. இந்த வருஷம் திட்டம் போட வேண்டிய வேலை மிச்சம்.

2012 -இல் எனக்கு முக்கியமாகத் தோன்றுபவை.

 1. கையில் கிடைத்ததைப் படிப்பதை எல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும். பதிவுகளின் quantity முக்கியம் இல்லை, quality-தான் முக்கியம். இந்தத் தளத்தைப் பார்ப்பவர்களுக்கும் அது கொஞ்சம் relief ஆக இருக்கும். 🙂
 2. முடிந்த வரை சீரிசாக எழுத வேண்டும். எழுதும் பதிவுகளுக்கு ஒரு தீம் இருக்க வேண்டும். அது என்ன என்று முடிவு செய்யவில்லை. ஜெயமோகன் சிபாரிசு செய்யும் நாவல்கள், எஸ்.ரா. சிபாரிசு செய்யும் நாவல்கள், மகாபாரதப் படைப்புகள், இல்லை நானே படித்த, படிக்க விரும்பும் புத்தகங்களை ஒரு லிஸ்ட் போட்டு அவற்றைப் பற்றி ஒரு சீரிசாக போட்டால் நன்றாக இருக்கும்.
 3. சிலிகான் ஷெல்ஃப் குழுமம் இங்கே ஓரளவு டெவலப் ஆகி இருக்கிறது. ஆனால் இந்தத் தளத்தில் எழுதுவது அனேகமாக நான் மட்டுமே. சக பொறுப்பாளனான பக்ஸ் கூட ஜகா வாங்கிவிட்டான். மற்ற குழும உறுப்பினர்களை எழுத வைக்க வேண்டும். ((அருணகிரி, திருமலைராஜன் ஆகியோர் பல இணைய தளங்களில் அவ்வப்போது எழுதுகிறார்கள். மயிலேறி ஒரு ப்ளாக் நடத்துகிறார்.)
 4. எழுதுவதை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

2011 திட்டங்கள், மற்றும் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள் என்று இரண்டு லிஸ்ட் போட்டிருந்தேன். மொத்தமாக 22 புத்தகங்களை சொல்லி இருந்தேன். அதில் படித்தது ஐந்துதான். (ஆழிசூழ் உலகு, வீரபாண்டியன் மனைவி, சுண்ணாம்பு கேட்ட இசக்கி, வீரபாண்டியன் மனைவி, வாசவேஸ்வரம், புளியமரத்தின் கதை (மறு வாசிப்பு). உண்மையில் மிச்சப் பதினேழு மற்றும் விஷ்ணுபுரம், Six Acres and a Third, சாஹேப் பீபி குலாம் புத்தகங்களை மட்டும் இந்த வருஷம் படித்தால் அதுவே போதும். பழக்க தோஷம் விடாது, அதனால் ஜனவரியில் பழைய பாணியில் இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்ற பாணி தொடரும். அதற்கப்புறம் தெரியாது.

இந்த வருஷம் படிக்க வேண்டிய புத்தகங்கள்:

 1. வார் அண்ட் பீஸ் (War and Peace)
 2. க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் (Crime and Punishment)
 3. ஐவோ ஆண்ட்ரிச் எழுதிய ப்ரிட்ஜ் ஆன் தி ட்ரினா (Bridge on the Drina)
 4. கோபோ அபே எழுதிய உமன் இன் த ட்யூன்ஸ் (Woman in the Dunes)
 5. பிபூதிபூஷன் பட்டாசார்யா எழுதிய பதேர் பாஞ்சாலி (Pather Panchali)
 6. கொற்றவை
 7. கடலுக்கு அப்பால் + புயலிலே ஒரு தோணி
 8. ஜே ஜே சில குறிப்புகள் (மறு வாசிப்பு)
 9. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 10. பாலகுமாரனின் உடையார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 11. நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 12. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 13. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 14. பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 15. பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 16. கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 17. தேவனின் சி.ஐ.டி. சந்துரு (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 18. விஷ்ணுபுரம் (மறுவாசிப்பு)
 19. ஃபகீர் மோகன் சேனாபதி எழுதிய Six Acres and a Third (ஒரிய மொழிப் புத்தகம் – கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
 20. பிமல் மித்ரா எழுதிய சாஹேப் பீபி குலாம்
 21. ஜெயமோகனின் இன்றைய காந்தி (முதல் முறை போட்ட லிஸ்டில் விட்டுப்போய்விட்டது, இதுவும் கைவசம் இல்லை)

தொடர்புள்ள சுட்டிகள்:
2011 திட்டங்கள்
படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள்
நண்பர் நட்பாசின் வாழ்த்து

நூலகம் தளம் – இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

நூலகம் என்ற தளத்தை சமீபத்தில் பார்த்தேன். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, ஆனந்த கெண்டிஷ் குமாரசாமி எழுதிய Dance of Siva போன்ற ஆங்கிலப் புத்தகங்களும் pdf வடிவில் கிடைக்கின்றன. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பொதுவாக தமிழகத்து தமிழர்களுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. நான் ஓரளவாவது படித்திருப்பது அ. முத்துலிங்கத்தை மட்டுமே. படிப்பதை விடுங்கள், எனக்கு தெரிந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் – அ. முத்துலிங்கம், மு. தளையசிங்கம், டொமினிக் ஜீவா, ஷோபா சக்தி, தேவகாந்தன். (தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் ஓரளவு எழுதி இருக்கிறார். சிறு வயதில் குமுதத்தில் டொமினிக் ஜீவாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஷோபா சக்தி எழுதிய கொரில்லா புத்தகம் சமீபத்தில் நிறைய பேசப்பட்டது. தேவகாந்தன் கதாகாலம் என்ற மகாபாரதப் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறாராம்.) சராசரிக்கு சற்று மேம்பட்ட வாசகனான, படிப்பில் மோகம் மற்றும் தேடல் உள்ள என் கதியே இதுதான்.

இந்தத் தளத்தை வைத்துக் கொண்டாவது இலங்கைப் படைப்புலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

பிற்சேர்க்கை: ராஜ்சந்திராவும் சித்திரவீதிக்காரனும் சில புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உங்களைக் கவர்ந்த, உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் புத்தகங்களை மறக்காமல் குறிப்பிடுங்கள்!

தொடர்புடைய சுட்டி: நூலகம் தளம்

எனக்கு எது இலக்கியம்?

தரையில் இறங்கும் விமானங்கள் எனக்கு இலக்கியமே என்று சொன்னதைக் கண்டு ரமணன், ராஜ்சந்திரா, எஸ்செக்ஸ் சிவா வியப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் ரியாக்ஷன் எனக்கு எது இலக்கியமாகத் தெரிகிறது என்று என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.

எனக்கு வணிக எழுத்து, சீரிய எழுத்து போன்ற பாகுபாடுகளில் நம்பிக்கை இல்லை. வசதிக்காக சில சமயம் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன், அவ்வளவுதான். இலக்கியம், இலக்கியம் இல்லை என்ற பாகுபாடுதான் எனக்கு அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது. எழுதியது விற்கிறதா இல்லையா என்பதை வைத்து அதன் தரத்தை நிர்ணயிப்பதில் எனக்கு சம்மதமில்லை. ஜெயகாந்தனும் அசோகமித்ரனும் விகடனில், குமுதத்தில் எழுதியது இலக்கியமே. சாண்டில்யன் கணையாழியில் எழுதி இருந்தாலும் அது எனக்கு இலக்கியம் ஆகாது. ராஜேஷ்குமார் டைப் எழுத்துகளை சுலபமாக அடையாளம் காட்டும் ஒரு பேர்தான் எனக்கு வணிக எழுத்து.

யோசிக்க வைக்கும் படைப்புகள்; சித்தாந்தங்கள்+பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை அசைக்கும் படைப்புகள்; உண்மையான மனிதர்கள், உணர்ச்சிகள், சூழல்களின் சித்தரிப்பு; மனிதர்களின் உயர்வுகளை, தாழ்வுகளை தோலுரித்துக் காட்டுவது; அபூர்வமாக, ஒரு அருமையான framework, அதை விவரிக்கும் படைப்புகள்; மனிதர்களின் பண்பாட்டை, அனுபவங்களை சில வரிகளில் காட்டும் கவிதைகள் இவை எல்லாம் எனக்கு இலக்கியமாகத் தெரிகின்றன. இவை எல்லாம் எனக்கு மன எழுச்சியைத் தருகின்றன, இல்லாவிட்டால் யோசிக்க வைக்கின்றன, இல்லாவிட்டால் நுணுக்கங்கள், நுட்பங்கள் நிறைந்த படைப்பாக இருக்கின்றன. மன எழுச்சியைத் தருபவற்றை நான் அனேகமாக மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறேன். என்னை யோசிக்க (மட்டும்) வைக்கும் படைப்புகளுக்கு அனேகமாக இரண்டாம் வரிசை. என் இதயம், புத்தி இரண்டையும் தொடாமல் என் ரசனை, அழகுணர்ச்சி வரை மட்டுமே வரும் படைப்புகளுக்கு அனேகமாக மூன்றாவது இடம் அளிக்கிறேன். இந்த மூன்றாவது வரிசையில் உட்காரும் படைப்புகளில் அனேகமாக நுட்பம், நுணுக்கம், framework என்று ஏதாவது ஒன்று இருக்கும். இன்னொரு விதமாகச் சொன்னால் நுட்பம், நுணுக்கம் இத்யாதியை நான் craft என்ற அளவில் மதிக்கிறேன். மன எழுச்சியைத் தூண்டுபவை எனக்கு art.

சுருக்கமாகச் சொன்னால் நான் இலக்கியம் என்று கருதும் எல்லாப் படைப்புகளுமே என் அழகுணர்ச்சி, ரசனை போன்றவற்றுக்கு அப்பீல் ஆக வேண்டும். அதோடு நின்றுவிடாமல் என் புத்தி வரைக்கும் போய் மீண்டும் மீண்டும் என்னை சிந்திக்க வைக்கும் படைப்புகள், எனக்கு மன எழுச்சியைத் தரும் படைப்புகளுக்கு இன்னும் உயர்ந்த இடம் தருகிறேன்.

அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் இருக்கக்கூடிய அருமையான உறவைக் காட்டும் To Kill A Mockingbird எனக்கு உயர்ந்த இலக்கியம். ஒவ்வொரு முறை படிக்கும்போது நான் மன எழுச்சி அடைகிறேன். இது எனக்குப் பெண்கள் பிறப்பதற்கு பல வருஷங்கள் முன்னாலேயே ஆரம்பித்த விஷயம். ஒரு காலத்தில் என் உறவினர்கள், நண்பிகள், நண்பர்களின் மனைவிகள் எல்லாரும் கர்ப்பம் ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பேன். என் தங்கைகள் உட்பட யாரும் படித்ததில்லை. 🙂 ஆனால் அது ஆய்வாளர்களின் லிஸ்டில் அநேகமாகத் தென்படுவதில்லை. ஜெயமோகன் போன்றவர்கள் அதை சீந்தக் கூட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அப்படி சீந்தாவிட்டால் அது ஜெயமோகனின் குறைபாடு என்றும் நினைக்கிறேன்.) Mockingbird மட்டுமல்ல, போரின் தேவையற்ற தன்மையை விவரிக்கும் All Quite on the Western Front, இரண்டு வார்த்தைகளில் விவரிக்க முடியாத விஷ்ணுபுரம், அமைப்புகளின் குரூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பின் தொடரும் நிழலின் குரல், புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள், புரியும்போதெல்லாம் டங்கென்று மண்டையில் அடிக்கும் அசோகமித்ரனின் பல படைப்புகள், அறம் சீரிஸ் சிறுகதைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை என் ரசனை வழியாக என்னைத் தாக்குகின்றன என்றே சொல்லலாம். இந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது எனக்கு பல முறை லிட்டரலாக ஜிவ்வென்று மண்டையில் ஏறும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பல முறை அப்படியே உட்கார்ந்து படித்ததை அசை போடத் தோன்றும். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற வரியைப் படித்த கணத்தில் பல காலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த கற்பு, ஆண்-பெண் உறவு கருத்தாக்கங்கள் சுக்குநூறாக உடைந்தன, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். எனக்கு மன எழுச்சியும் தந்து சிந்தனையையும் தூண்டிய படைப்பு இது. இது போன்ற படைப்புகளைத்தான் முதல் இடத்தில் வைக்கிறேன்.

யோசிக்க மட்டும் வைக்கும் படைப்புகள் என்பது பல முறை SF-இல் எனக்கு நேர்கிறது. உர்சுலா லே க்வின் எழுதிய ஒரு கதையில் மனிதர்களுக்கும் ஒரு சீசனில் மட்டும்தான் செக்ஸ் உணர்வுகள் வரும், அப்போது அவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இஷ்டம் போல மாறிக் கொள்ளலாம். அவர் எழுதியது கொஞ்சம்தான், ஆனால் எனக்கு அம்மா, அப்பா, குடும்பம், இதெல்லாம் இந்த செட்டப்பில் எப்படி இருக்கும் என்று நிறைய யோசனை வந்தது. பைரப்பாவின் பர்வா, தாண்டு, அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்று SF தவிர்த்தும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பர்வா, தாண்டு, அசோகமித்திரன் படைப்புகள் எனக்கு மன எழுச்சியையும் தருகின்றன என்பதால் அவை முதல் வரிசைக்குப் போய்விடுகின்றன.

ரசனைக்கு மட்டும் அப்பீல் ஆகும் கதைகள் என்று ஷெர்லாக் ஹோம்ஸ் (சுவாரசியம்), பொன்னியின் செல்வன் (கதைப்பின்னல் என்ற தொழில்நுட்பம்), வாசவேஸ்வரம் (உண்மையான சித்தரிப்பு), நிர்வாண நகரம் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. இவை Strand பத்திரிகையில், கல்கியில், சாவியில் வந்தவை என்பதால் மட்டுமே வணிக எழுத்து ஆகிவிடாது. இவற்றில் பலவற்றை நான் minor classic என்று வகைப்படுத்துவேன். அவற்றின் சாதனை ஒரு புதுமைப்பித்தனை விட குறைவு, அவ்வளவுதான். ஐம்பது செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் அளவுக்கு குண்டப்பா விஸ்வநாத் சாதிக்கவில்லை என்பதால் அவர் மோசமான பாட்ஸ்மன் ஆகிவிடுவாரா என்ன?

த.இ. விமானங்கள் எனக்கு மூன்றாவது வகை இலக்கியம். Minor classic. உண்மையான மனிதர்கள், சித்தரிப்பு, மனதைத் தொடும் சில சீன்கள் இருக்கின்றன. கதைக்கு யூனிவர்சல் அப்பீல் இருக்கிறது. இந்தக் கதை போலந்தில் ஒரு யூதக் குடும்பத்தில், என் பக்கத்து வீட்டில் ஒரு மெக்சிகன் குடும்பத்தில், தாய்லாந்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் நிகழலாம், நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அது விகடனில் வந்தது, இந்துமதி எழுதியது போன்ற சாரமற்ற காரணங்களுக்காக என்னால் நிராகரிக்க முடியாது.

நேரடியாகச் சொல்லப்படும் கதைதானே, அது எப்படி இலக்கியம் ஆகும் என்று சிலர் யோசிக்கலாம். ஜெயமோகன் போன்ற நான் மிகவும் மதிக்கும் விமர்சகர்கள் சில சமயம் நேரடியாகச் சொல்லப்படுவதை ஒரு குறையாகச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். எனக்கு இதில் கொஞ்சமும் சம்மதமில்லை. நேரடியாகக் கதை சொல்லுவது, subtle ஆக சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் ஒரு லிடரரி டெக்னிக். ஒரு டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாகாது.

மன எழுச்சி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடத்தான் செய்யும். அது subjective விஷயம். எனக்கு மன எழுச்சி தரும் படைப்பு உங்களுக்கு வெட்டியாகத் தெரியலாம். அதனால் இலக்கியமா இல்லையா என்று எப்படி பொதுவாக நிர்ணயிப்பது என்ற கேள்வி எழலாம். அது அர்த்தம் இல்லாத கேள்வி. ரசனைதானே தரம் பிரிப்பதன் அடிப்படை? இரட்டைப் பிறவிகளுக்கு கூட ரசனை நூறு சதவிகிதம் ஒத்துப் போகாது! காலப்போக்கில் தானாக அவ்வளவு தரம் இல்லாத, ஆனால் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நூல்கள் மறக்கப்படுகின்றன. அந்த ஜனநாயக முறையை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

உணர்ச்சிகளைத் தூண்டும் படைப்புகள் எல்லாம் மன எழுச்சி தரும் படைப்புகள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். என்னால் சிம்பிள் கதையான லவ் ஸ்டோரி-யின் கடைசி பக்கங்களை கண்ணில் நீர் வராமல் படிக்க முடிந்ததே இல்லை. அப்பா-பிள்ளை சீன் வந்துவிட்டால் ஒரு வேளை நான் உணர்ச்சிவசப்படுகிறேனோ என்னவோ. அதை நான் மன எழுச்சி லிஸ்டில் சேர்ப்பதில்லை. மூன்றாவது பட்டியலில்தான் சேர்ப்பேன்.

எது இலக்கியம் என்று என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். எது நூறு ஆண்டுகளுக்கு மேல் நிற்கும், எது காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடும் என்று கண்டுபிடிக்க ஃபார்முலா உண்டா என்று தேடி இருக்கிறேன். இதைப் பற்றிய எனது எண்ணங்கள் எதுவும் இறுதியானவை இல்லை. ஆனால் இந்தப் பதிவில் காலம் தாண்டி நிற்கும் இலக்கியம் என்பதை எல்லாம் அடையாளம் காண நான் முயற்சிக்கவில்லை. இன்று நான் எதை இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக்க மட்டும்தான் முயற்சி செய்திருக்கிறேன்.

இதைப் பற்றி எல்லாம் எழுதுவதின் ஒரே பயன் கருத்துப் பரிமாற்றம்தான். என் வரையறை உங்களுக்கு சரிப்படாமல் போகலாம். மன எழுச்சியாவது மயிராவது என்று நீங்கள் நினைக்கலாம். மேலே பேசுவோமே! இலக்கியத்துக்கு உங்கள் வரையறை என்ன? மறுமொழியிலோ இல்லை உங்கள் ப்ளாகிலோ எழுதி சுட்டி கொடுங்கள்!

அனுபந்தம்

சிரில் அலெக்சின் வரையறை:

நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.

நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

எது காலத்தை வெல்லும் இலக்கியம் பதிவுக்கு எழுதிய மறுமொழியில் ஜெயமோகன் சொன்னது:

நூறாண்டு தாங்கும் படைப்பு எது? இதுவரை தாங்கிய படைப்புகளை வைத்து இப்படிச் சொல்லலாம்.

 1. தொன்மமாக மாறும் படிமத் தன்மை கொண்டது
 2. கலாச்சாரம் சம்பந்தமான பேச்சுகளில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது
 3. எளிதில் வாயால் சொல்லத்தக்கது
 4. நடை, உத்தி போன்றவற்றை நம்பாமல் பண்பாட்டின் சாராம்சமான ஒன்றை வரையறுத்து கூறும் கருவாலேயே நிலைநிற்கும் படைப்பு

தொடர்புள்ள சுட்டிகள்:
ஏன் படிக்கிறேன்?
எது நல்ல இலக்கியம்?சிரில் அலெக்ஸ்
எது காலத்தை வெல்லும் இலக்கியம்?

தமிழ் தொகுப்புகள் தளம்

தமிழ் புனைவுகளைத் தொகுக்கும் இன்னொரு சிறப்பான தளம். கட்டாயம் உங்கள் லிஸ்டில் இருக்க வேண்டும்.

தொகுப்பாளர் சிங்கமணியின் வார்த்தைகளில்:

ஏராளமான தளங்கள் தமிழில் உள்ளன. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்க முடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன்.

அவருக்கு என் வாழ்த்துக்கள்!

எது நல்ல இலக்கியம்? – சிரில் அலெக்சின் விளக்கம்

நண்பர் சிரில் அலெக்ஸ் ஆழிசூழ் உலகு புத்தகத்தைப் பற்றி ஓர் அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறார். அதில் நல்ல இலக்கியத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக articulate செய்திருக்கிறார். அவர் வார்த்தைகளில்:

நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.

நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

என் பதிவில் நான் பார்க்கத் தவறிய பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

தொடர்புள்ள சுட்டி: ஆழிசூழ் உலகு – என் விமர்சனம்

காகிதப் புத்தகங்களை விட மின் புத்தகங்களே லாபகரமானவை!

சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் படித்த கட்டுரை.

மின் புத்தகங்கள் சராசரியாக 5.92 டாலர் லாபம், இது காகிதப் புத்தகங்களை விட 7 செண்டுகள் (கிட்டத்தட்ட மூன்றேகால் ரூபாய்) அதிகம். ஆனால் சதவிகிதப்படி பார்த்தால், மின் புத்தக வருமானத்தில் 46 சதவிகிதம் லாபம். காகித்தப் புத்தகத்திலோ 23 சதவிகிதம்தான் லாபம்! கீழே உள்ள படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நம்மூரில் மின் புத்தகங்களில் லாபம் என்ற பேச்சே இல்லை என்று நினைக்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: புத்தகங்களின் எதிர்காலம்

பத்திரிகைகளுக்கு (சிறுகதை) எழுதுதல்

என் சிறு வயதில் குமுதம், விகடன், கல்கி, கலைமகள் எல்லாவற்றிலும் சிறுகதைகள், தொடர்கதைகள் நிறைய வரும். அடுத்த வார இன்ஸ்டால்மென்ட் எப்போது வரும் என்று காத்திருந்து படித்தவர்கள் பலர் உண்டு – நான் உட்பட. சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி என்று பல நடக்கும்.

இப்போதெல்லாம் குமுதம் விகடனில் பேருக்குக் கூட கதைகள் வருவதில்லை போலிருக்கிறது. சிறு பத்திரிகைகள், இணையம்தான் கதைகளைப் பதிக்க ஒரே வழியோ என்று தோன்றுகிறது. எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்திருப்பவனுக்கு சிறு பத்திரிகைகள் அவ்வளவு viable இல்லை. ஜெயமோகன் போன்ற ஜாம்பவான்களே இணையம்தான் தோதான ஊடகம் என்று தீர்மானித்துவிட்டார்கள். என்னதான் இணையம் இணையம் என்றாலும் காகிதத்தில் வந்தால்தான் (எனக்கு) திருப்தி.

சிறுகதைகளைப் பதிக்க என்னதான் வழி? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? ஏதாவது போட்டிகள் நடந்தால் அதை எப்படித் தெரிந்து கொள்வது? எந்தப் பதிவராவது இந்தப் போட்டிகளைப் பற்றி தகவல் தருகிறாரா?

தன்னிலை விளக்கம் #1: நான் எழுதுவது எனக்காகத்தான், அடுத்தவர்கள் படிப்பது போனஸ் மட்டுமே என்று நான் சமீபத்தில்தான் உணர்ந்தேன். அதனால் பத்திரிகைகளில் என் கதை வரவில்லை என்றால் தூக்கம் பிடிக்காத நிலை என்றெல்லாம் இல்லை. போனஸ் கிடைத்தால் நல்லதுதானே, நாலு பேர் குறை சொன்னால் பிரச்சினைகள் தெரிந்து இன்னும் நன்றாக எழுத வருமோ என்ற ஆசைதான்.

தன்னிலை விளக்கம் #2: பய புள்ள நாலு கதைய, அதுவும் அவன் ப்ளாகிலய போட்டுட்டு கனா காணுதே என்று நினைக்காதீர்கள். எந்தக் கனவும் இல்லை. 🙂

தன்னிலை விளக்கம் #3: போட்டிகள் பற்றி யாராவது ரெகுலராக அப்டேட் செய்தால் நன்றாக இருக்கும், இது உள்ளூரில் இருப்பவர்தான் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. Any volunteers?