தலித் தலைவர்: இரட்டைமலை சீனிவாசன் ஜீவிய சரித்திரம்

இரட்டைமலை சீனிவாசன் என்ற பெயரை அங்கும் இங்கும் கேட்டிருந்தாலும் அவர் தமிழக தலித் தலைவர்களில் ஒருவர் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. சமீபத்தில் இரட்டைமலை சீனிவாசன் ஜீவிய சரித்திர சுருக்கம் (1939) என்ற அவரது புத்தகத்தின் மின்பிரதி கிடைத்தது. காப்புரிமை மீறல் என்றுதான் நினைக்கிறேன், இருந்தாலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் படித்துவிட்டேன். புலவர் வே. பிரபாகரன் என்பவர் தொகுத்திருக்கிறார்.

சீனிவாசனுக்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டிருக்கிறது. கோட் சூட் மீசையோடு கம்பீரமாக முன்னால் இருப்பவர்தான் அவர். (அம்பேத்கர் பின்னால்)

ஜீவிய சரித்திரம் மிகச் சிறிய புத்தகம். 40 பக்கம் இருக்கலாம். விவரங்கள் அதிகமாக இல்லை. ஆனால் அங்கங்கே அவர் எழுதி இருக்கும் வரிகள் மிகச் செறிவானவை, பலதும் யோசிக்க வைக்கின்றன.

  1. சீனிவாசன் 1860-இல் மதுராந்தகம் அருகே உள்ள கோழியாலம் என்ற ஊரில் பிறந்தவர். சிலர் 1859 என்கிறார்கள், ஆனால் அவரது புத்தகத்தில் 1860 என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரது குடும்பம் தஞ்சாவூருக்கும் பிறகு கோவைக்கும் குடிபெயர்ந்திருக்கிறது.
  2. குடும்பத்தின் செல்வ விவரங்களைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை, சிலர் ஏழைக் குடும்பம் என்கிறார்கள் சிலர் செல்வந்தர் குடும்பம் என்கிறார்கள். ஆனால் பள்ளிப் படிப்பிற்கு ஓரளவு பணம் தேவைப்பட்ட அந்த நாட்களில் அவர் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்.
  3. 400 மாணவர்கள் கொண்ட பள்ளியாம் அதில் இவரையும் சேர்த்து 10 பேர்தான் அபிராமணர்களாம். தன் ஜாதி தெரிந்தால் தன்னை இழிவுபடுத்துவார்கள் என்று யாருடனும் பழகமாட்டாராம். எல்லா ஜாதியினருக்கும் கல்வி கிடைத்தது என்று தரம்பால் ஆவணங்களை முன் வைப்பதற்கும் இவர் அனுபவத்துக்கும் எத்தனை வேறுபாடு? 70-80 வருஷத்திற்குள் இத்தனை மாறிவிட்டதா?
  4. சிலர் இவர்தான் முதல் தலித் பட்டதாரி என்கிறார்கள். ஆனால் சீனிவாசன் தன் கல்லூரி நாட்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அதனால் கல்லூரியில் படிக்கவில்லை என்றே யூகிக்கிறேன்.
  5. பிறகு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். தலித் (அவர் காலத்தில் பறையர், சாம்பவர்) நிலை குறித்து தீவிரப் பிரக்ஞை இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பறையர்கள் ஓரளவு உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக இடிந்த நந்தன் கோட்டை என்று எதையெல்லாமோ பார்த்திருக்கிறார். (ஸ்டாலின் ராஜாங்கம் இதை நந்தன் என்ற மாமன்னன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாகக் கொள்கிறார்). 1772-இல் தலித் குடியானவர்களின் நிலையைப் பற்றி அன்றைய ஆங்கில அரசு கவலை கொண்டது என்று ஆவணம் இருக்கிறதாம்/இருந்ததாம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்கிறார்.
  6. பறையர் மகாஜன சபையை 1891-இல் ஆரம்பித்திருக்கிறார்.
  7. 1893-இல் பறையன் என்ற பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். பறையன் என்பதில் தாழ்வில்லை என்று வலியுறுத்தவே பறையன் என்று பத்திரிகைக்கு பெயர் வைத்திருக்கிறார். விலை ஒரு அணா. அந்தக் காலத்திற்கு இது மிக அதிகமான விலை என்று நினைக்கிறேன். முதல் இதழ் வெளியிட பத்து ரூபாய் செலவானதாம். நானூறு பிரதிகள் விற்றனவாம்.
  8. பத்திரிகை பிரபலமாகி இருக்கிறது. ஒரு அவதூறு வழக்கில் நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாம், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை, அபராதம் கட்டப்பட்டுவிட்டது என்கிறார்.
  9. 1893-இல் இந்தியாவில் ஐசிஎஸ் பரீட்சை நடத்தப்பட வேண்டும் என்று முயற்சி நடந்திருக்கிறது. அப்படி நடந்தால் “உயர்ஜாதியினர்” தலித்களை அடக்கி ஆள்வார்கள் என்று எதிர்த்திருக்கிறார். அவர் இதற்காகப் பெற்ற 3000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் 112 அடி நீள காகிதத்தை நிறைத்திருந்தனவாம்.
  10. அந்த மனுவில் இருந்ததாக அவர் சொல்லும் இரண்டு செய்திகள்; அன்று மயிலாப்பூரில் பிராமணர் வாழும் தெரு ஒன்றில் இங்கே பறையர் நுழையக் கூடாது என்று அறிவிப்பு இருந்ததாம். பச்சையப்பன் கல்லூரியில் அன்று பறையருக்கு அனுமதி இல்லையாம். பின்னாளில் இவை இரண்டும் ஒழிய அந்த மனுவே காரணம் என்கிறார்.
  11. 1895-இல் அன்றைய வைசிராய் எல்ஜின் பிரபு சென்னை வந்திருக்கிறார். பறையர் மஹாஜன சபை சார்பில் இவர் ஆறேழு பேரை அழைத்துக் கொண்டுபோய் வைசிராயை சந்தித்திருக்கிறார். பறையர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது அதுதான் முதல் தடவையாம். அது வரை ஜாதி ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் போன்ற “இனங்களுக்குத்தான்” அப்படி அங்கீகாரம் இருந்ததாம்.
  12. லண்டன் வரை சென்று தலித் மக்களின் துயரத்தை விளக்கி இருக்கிறார். லண்டன் போகவே சில வருஷங்கள் பிரயாணம் செய்திருக்கிறார். நோய், பணமின்மை காரணத்தால் அங்கங்கே தங்க வேண்டி இருந்திருக்கிறது.
  13. புத்தகத்தில் சொல்லப்படவில்லை; ஆனால் அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் பல வருஷம் இருந்திருக்கிறார். காந்திக்கு குறளை அறிமுகம் செய்து வைத்தார், தமிழ் கற்றுக் கொடுத்தார் என்கிறார்கள். உண்மையா, மிகைப்படுத்துதலா தெரியவில்லை.
  14. சட்டசபை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கிணறுகள், சாலைகள், பொது கட்டிடங்கள் ஆகியவற்றிலிருந்து “தாழ்த்தப்பட்ட” ஜாதியினரை விலக்கக் கூடாது என்று ஒரு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார். பல சீர்திருத்தங்களை முயன்றிருக்கிறார், சில வெற்றி. உப்புக்கு வரி மிகக் குறைவாகத்தான் இருக்கிறது, அதனால் ஏழைகளுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை, உப்பு வரியை விலக்கக் கூடாது, வரிப்பணத்தை வைத்து தலித்களுக்கு ஏதேனும் உதவி செய்யலாம் என்றும் போராடி இருக்கிறார். இது உப்பு சத்தியாகிரகத்துக்கு முன்பா பின்பா என்று தெரியவில்லை.
  15. 1926-இல் ராவ்சாஹிப் பட்டம், 1930-இல் ராவ்பஹதூர் பட்டம், 1936-இல் திவான்பஹதூர் பட்டம்.
  16. 1928-29-இல் தானும் அம்பேத்கரும் தலித் பிரதிநிதிகளாக வட்ட மேஜை மாநாட்டுக்குப் போனோம், 1930-இல் அம்பேத்கர் மட்டும் போனார் என்கிறார். எனக்குத் தெரிந்த வரை 1930, 31, 32-ஆம் ஆண்டுகளில்தான் வட்டமேஜை மாநாடுகள் நடந்தன. இது என்ன குழப்பமோ தெரியவில்லை. அப்போது ஜார்ஜ் மன்னரை சந்தித்திருக்கிறார், மன்னருக்கு தீண்டாமை என்றால் என்ன என்றே தெரியவில்லை. சீனிவாசன் விளக்கியதும் அதிர்ந்துவிட்டாராம். மன்னரை தன் போன்ற அஒரு “தீண்டத் தகாதவர்” சந்தித்தது குறியீட்டு ரீதியாக பெரிய விஷயமாக உணர்ந்திருக்கிறார்.
  17. காந்தியை தென்னாப்பிரிக்காவிலிருந்தே தெரியுமாம். தீண்டாமையை ஒழிக்க காந்தி எடுத்த முயற்சிகளை “உயர்ஜாதியினர்” ஏற்றுக் கொள்வதாக நடிக்கிறார்கள், உண்மையில் அவர்கள் மனம் மாறவில்லை என்று கருதி இருக்கிறார். அம்பேத்கரோடு சேர்ந்து தலித்களுக்கு தனித் தொகுதிகள் வேண்டும் என்று காந்தியை எதிர்த்திருக்கிறார். ஆனால் அவரது வார்த்தைகளிலேயே: வாதாடி வெற்றி பெறுவதை இவர் தவிர்த்து உண்ணாவிரதமிருப்பது வீரத்தன்மையை இழந்து இரக்கத்தைத் தேட வேண்டியவரானார் என்பதைக் கண்டு என் மனமிரங்கி (பூனா) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டேன்.
  18. புத்தகத்தில் இல்லை; ஆனால் இவரது தங்கை அயோத்திதாசரை மணந்தாராம்.
  19. புத்தகத்தில் இல்லை; 85-86 வயது வரை வாழ்ந்திருக்கிறார். தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டிருக்கிறாராம்.

இன்னும் விவரமாக எழுதி இருக்கக் கூடாதா என்று நினைக்க வைத்துவிட்டார்.

ஸ்டாலின் ராஜாங்கம் பதிப்பித்த வடிவத்தை காலச்சுவடு பதிப்பகத்தில் (125 ரூபாய் விலை) வாங்கலாம். நான் ஊருக்குப் போகும்போது கட்டாயம் வாங்கிவிடுவேன். வாங்குங்கள், குறைந்த பட்சம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டி: இரட்டைமலை சீனிவாசன் விக்கி குறிப்பு