நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன்

தமிழ் நாட்டில் ஒரு பழக்கம் இருக்கிறது. திடீரென்று நினைத்துக் கொண்டு எழுத்தாளர்கள்/தமிழறிஞர்களின் எழுத்துக்களை நாட்டுடமை ஆக்குவது. சாதாரணமாக முதல்வராக இருப்பவரின் whims and fancies-ஐ அடிப்படையில்தான் இது நடக்கிறது. 2009-இல் அப்படி நாட்டுடமை ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய குறிப்புகளை மறைந்த சேதுராமன் எழுதினார். அப்போதிலிருந்தே அப்படி நாட்டுடமை ஆக்கப்பட்ட எல்லா எழுத்துக்களையும் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கொரு ஆசை.

சில முறை தரமற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாட்டுடமை ஆக்கிவிடுகிறார்கள். அதுவும் கட்சி சார்ந்தவர், தெரிந்தவர், எழுத்து எத்தனை குப்பையாக இருந்தாலும் சரி, செய்துவிடுவோம் என்று தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். ஏ.கே. வேலன் அந்த ரகம்.

ஏ.கே. வேலன் சினிமாக்காரர். தை பிறந்தால் வழி பிறக்கும், காவேரியின் கணவன் மற்றும் சில படங்களைத் தயாரித்தவர். சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருந்தாராம். வணங்காமுடி, குறத்தி மகன், மாட்டுக்கார வேலன் திரைப்படங்களின் கதை இவருடையதுதானாம். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

திராவிட இயக்கத்தில் இருந்திருக்கிறார். அண்ணா, கருணாநிதியோடு சிறை சென்றிருக்கிறாராம். பிற்காலத்தில் அனுமார் அனுபூதி என்றெல்லாம் புத்தகங்களும் எழுதி இருக்கிறார். காஞ்சி மகா பெரியவரின் பக்தராம்.

இரண்டு நாடகங்களை – காவேரிக் கரையினில், மீனாட்சி நாடகத் தமிழ் – படித்தேன். தண்டமாக இருந்தது. காவேரிக் கரையினில் ஐம்பது அறுபதுகளில் திரைப்படமாக வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். இவர் எழுதியதை எல்லாம் நாட்டுடமை ஆக்க ஒரு முகாந்தரமும் இல்லை. கருணாநிதி தமக்குத் தெரிந்தவர், திராவிட இயக்கத்தில் இருந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இதை செய்திருக்க வேண்டும். இந்தக் கொடுமை எல்லாம் என்றுதான் நிற்குமோ தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள்

ஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’

An Inspector Calls திறமையாக எழுதப்பட்ட நாடகம். கச்சிதமாக இருக்க வேண்டும், நாடகத்தில் எந்த இடத்திலும் தொய்வு இருக்கக் கூடாது என்று ப்ரீஸ்ட்லி முயன்றிருக்கிறார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஒரு மயிரிழை தப்பி இருந்தால் அந்த வெற்றி pyrrhic victory ஆக மாறி இருக்கும் – கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் நாடகத்தின் பல பகுதிகள் சுலபமாக ஊகிக்கக் கூடிய தேய்வழக்குகளாகத் தெரிகின்றன. நல்ல வேளையாக நாடகத்தின் denouement அந்த மெல்லிய கோட்டைத் தாண்டாமல் காப்பாற்றுகிறது.

நாடகத்தின் வில்லன்கள் மிகத் தெளிவாக – ஏறக்குறைய stock characters ஆகக் காட்டப்படுகிறார்கள். பணக்காரத் தொழிலதிபர் அப்பா ஒரு ‘வில்லன்’ – பல திரைப்படங்களின் மேஜர் சுந்தரராஜனேதான். மேட்டிமைத்தனம் உள்ள அம்மா ஒரு ‘வில்லி’ – பல திரைப்படங்களின் எஸ். வரலக்ஷ்மி. அவர்களுக்கு ஒரு பெண், அவள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை, அந்தப் பெண்ணுக்கு ஒரு தம்பி.

நாடகம் வரப் போகும் மாப்பிள்ளைக்கு விருந்து வைப்பதோடு ஆரம்பிக்கிறது. திடீரென்று ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு இளம் பெண்ணின் தற்கொலையைப் பற்றி விசாரிக்க வருகிறார். அந்தப் பெண் அப்பாவின் தொழிற்சாலையில் வேலை செய்தவள். கூலியை உயர்த்த்ச் சொல்லி வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியவள். அதனால் அப்பா வேலையை விட்டு துரத்துகிறார். ஜவுளிக் கடையில் அடுத்தபடி வேலை பார்க்கிறாள். துணி எடுக்க வரும் மகள் அவளிடம் எரிச்சல் அடைந்து புகார் கொடுத்து அவளுக்கு வேலை போய்விடுகிறது. அடுத்தபடி நடன கிளப்பில் வேலை, அங்கே மாப்பிள்ளை அவளை சந்தித்து வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அவளுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிடுகிறான். பணம் தீர்கிறது, அடுத்தபடி தம்பியோடு உறவு, கர்ப்பம். கர்ப்பமான ஏழைப் பெண்களுக்கு உதவும் ஒரு அமைப்பின் பொறுப்பாளரான அம்மா இவளுக்கு உதவியை மறுக்கிறாள்.

இந்தக் கதை எல்லாம் ஐம்பது-அறுபதுகளின் தமிழ் சினிமா மாதிரிதான் இருக்கிறது. அந்த தேய்வழக்குக் கதையை இன்ஸ்பெக்டர் பாத்திரம் விசாரணை செய்து வெளியே கொண்டு வரும் விதம்தான் ப்ரீஸ்ட்லியின் திறமையைக் காட்டுகிறது. இந்தக் கதை எல்லாம் வெளியே வந்த பின் இரண்டு திருப்பங்கள். அதை வெளிப்படையாகச் சொன்னால் நாடகத்தின் charm-ஏ போய்விடும், அதனால் மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க!

ப்ரீஸ்ட்லி இடதுசாரி மனநிலை உடையவர் என்று தெளிவாகத் தெரிகிறது. விக்டோரியன் விழுமியங்களை தோலுரித்துக் காட்டிவிட வேண்டும் என்று கிளம்பி இருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார். நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள நாடகம். படிப்பதை விட பார்ப்பது உத்தமம் என்று நினைக்கிறேன்.

ப்ரீஸ்ட்லி இன்றும் நினைவு கூரப்படுவதற்கு இந்த நாடகம்தான் காரணம் என்கிறார்கள். 1945-இல் எழுதி இருக்கிறார். இது நல்ல நாடகம்தான், இலக்கியம்தான், படியுங்கள்/பாருங்கள் என்று பரிந்துக்கிறேன்தான், ஆனால் 20-25 சிறந்த நாடகங்கள் என்று பட்டியல் போட்டால் நிச்சயமாக எனக்கு இந்த நாடகத்தின் நினைவு வராது. நாடக ஆசிரியராக என் கண்ணில் ப்ரீஸ்ட்லி இரண்டாம், மூன்றாம் வரிசையில்தான் இருக்கிறார்.

படிக்கும்போதெல்லாம் மனதில் ஒரு குறை. தமிழின் சிறுகதை வடிவும் நாவல் வடிவும் உலக இலக்கியத்தின் உச்சங்களை அடைந்துவிட்டது, அல்லது அருகிலாவது இருக்கிறது. நாடகம் மட்டும் ஏன் தேங்கிவிட்டது? முதல் தரப் படைப்பு என்று எதுவுமே இல்லையே? என் கண்ணில் சுஜாதா, இ.பா., ஜெயந்தன், ந. முத்துசாமி, சோ ராமசாமி எல்லாரும் எழுதிய நாடகங்களில் சிறந்தவை இந்த ரேஞ்சில்தான் இருக்கின்றன. இந்திய அளவில் கூட விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார் போன்றவர்கள் இந்த லெவலுக்கு மேலேதான் இருக்கிறார்கள். இப்சனுக்கும் பெர்னார்ட் ஷாவுக்கும் சவால் விடக் கூடிய தமிழ் நாடக எழுத்தாளர்கள் எங்கே?

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

குறுந்தொகை 7

உண்மையை ஒத்துக் கொள்கிறேன். எனக்கு இந்தக் கவிதை முதல் வரிசையில் இல்லை, நான் என்றாவது எனக்குப் பிடித்த கவிதைகள் என்று ஒரு தொகுப்பு போட்டால் அதில் இடம் பெறாது. ஆனால் இந்தக் கவிதையும் இன்றும் நாம் காணக் கூடிய காட்சிதான். பழக்க்கப்பட்ட காட்சிதான். என்ன, பாலைவனத்தில் அல்ல, வெளிநாட்டு விமான நிலையங்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஷாப்பிங் மால்களிலும் பார்க்கிறோம், அவ்வளவுதான்.

இந்தக் கவிதை காட்டும் காட்சி புது இடத்தில், பழக்கப்படாத இடத்தில், துணையாக வரும் ஆணைத் தவிர வேறு யாரையும் அறியாத பெண்; தனக்கு புது இடமோ இல்லையோ பழகிய இடம் மாதிரி கொஞ்சம் பந்தா காண்பிக்கும் ஆண். இன்னும் கொஞ்சம் யோசித்தால் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள். கவிதையைப் படிக்கும்போது அப்படி ஒரு backstory தோன்றுவதுதான் இந்தக் கவிதையின் வெற்றி.

பாடலை எழுதியவர்: பெரும்பதுமனார் திணை: பாலை

A.K. Ramanujan’s Translation:

This bowman has a warriors band
on the ankle;
the girl with the bracelet on her arm
has a virgin’s anklets
on her tender feet
They look like good people
In these places
the winds beat
upon the vakai tree
like drums for acrobats
dancing on the tightropes

Poor things, who could they be?
and what makes them walk
with all the others
through these desert ways
so filled with bamboos?

ஒரிஜினல் கவிதை:

கண்டோர் கூற்று:

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்றொலிக்கும்
வேய்பயிலழுவ முன்னியோரே.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

பாலகுமாரன் – அஞ்சலி

ஒரு காலத்தில் – சில மாதங்களாவது – நான் பாலகுமாரனை தி.ஜா.வுக்கும் மேலாக எடை போட்டிருந்தேன். பிறகு மூளை தெளிந்து நம்ம ரசனை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே என்று நொந்தும் கொண்டேன்.

என்ன தற்செயலோ தெரியவில்லை, அந்த நேரத்தில்தான் தி.ஜா.வின் சில படைப்புகள் – மரப்பசு, நளபாகம் – போன்றவை என்ன இந்த ஆள் அரைத்த மாவையே அரைக்கிறாரே என்று ஒரு சின்னக் கடுப்பை கிளப்பிவிட்டன. அப்போது நான் படித்த பாலகுமாரனின் புத்தகங்கள் – மெர்க்குரிப் பூக்கள், பந்தயப் புறா, ஆனந்த வயல், அகல்யா, பல தரப்பட்ட ஜாதி, ஊர், தொழில் பின்புலங்களில் எழுதப்பட்ட மாத நாவல்கள் (நீ பௌர்ணமி, இரவல் கவிதை, காதல் வெண்ணிலா, என்னருகே நீ இருந்தால்… ), சின்னச் சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள் போன்ற சிறுகதைகள் எல்லாமே பிடித்திருந்தன. இரும்பு குதிரைகள், கரையோர முதலைகள், கடல் பாலம் போன்றவற்றில் குறைகள் தென்பட்டாலும் நல்ல கூறுகள் இருந்தன.

இன்று அந்த பாலகுமாரனையே – தி.ஜா.வையே விஞ்சக் கூடியவர் என்று தோன்ற வைத்தவரையே – நினைவு கூர விரும்புகிறேன்.

பாலகுமாரனின் பலம் எந்தத் தருணத்திலும் மனதில் ஓடும் எண்ணங்களை சிறப்பாக எழுதுவது. பல சூழல்களை நம்பகத் தன்மையோடு விவரிப்பது. அவரது பலவீனம் கட்டுக்கோப்பான கதை இல்லாதது. ஆரம்ப காலத்தில் வாசகனை – குறிப்பாக அன்றைய விகடன்/குமுதம் வாசகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு. தொடர்கதை எழுதி பிரபலமான எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு.

அவருடைய பங்களிப்பை மூன்று பங்காகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் – வாரப் பத்திரிகையில் எழுதி வரும்போது அங்கங்கே செயற்கைத்தனம் தென்பட்டாலும் உணர்ச்சிகள் பொங்கும் மனிதர்களை நம்பகத்தன்மையோடு சித்தரித்தார். அனேகமாக அவை படிக்கக் கூடிய படைப்புகளே. குறைகள் உள்ள படைப்புகள்தான், ஆனால் இலக்கியம் என்றுதான் மதிப்பிடுவேன்.

இரண்டாம் பகுதியில் – மாத நாவல்களாக எழுதிக் குவித்த காலம் – பலதரப்பட்ட சூழல்களை, ஜாதிகளை, பின்புலங்களை, தொழில்களை சித்தரித்தார். ஒரு நாவல் வேர்க்கடலை – இல்லை இல்லை மல்லாட்டை – பயிரிடும் பின்புலத்தில் இருக்கும். இன்னொன்று மேல்மருவத்தூரை நினைவுபடுத்தும். ஒன்று அச்சுத் தொழிலைப் பற்றி இருக்கும். இன்னொன்று ஜெம்பை கோவில் கல்வெட்டைப் பற்றி இருக்கும். அடுத்தது அந்தக் காலத்தில் சென்னையில் கண்காட்சி (exhibition) என்று ஒன்று நடக்கும், அதைப் பற்றிய Arthur Haileysque நாவலாக இருக்கும். பெருங்களத்தூரின் ஸ்டாண்டர்ட் மோட்டார்சில் வேலை பார்க்கும் இரு தொழிலாளிகளைப் பற்றி ஒன்று வரும். வீட்டுத் தரகுத் தொழில், அபார்ட்மெண்ட் கட்டும் தொழில், பட்டிமன்றச் சூழல், கவிதை எழுதி பிரபலமாகும் கல்லூரி மாணவன் என்று ரவுண்ட் கட்டி அடித்தார். எனக்குத் தெரிந்த வரையில் யாருமே இத்தனை பின்புலங்களைப் பற்றி எழுதியதில்லை. அதே நேரத்தில் (அனேகமாக) தரமான படைப்புகள். இன்று பாலகுமாரனைப் புகழ்ந்து எழுதுபவர்கள் கூட அவரது இந்த முகத்தை கண்டுகொள்வதில்லை.

மூன்றாவது பகுதியை நான் நினைவு கூர விரும்பவில்லை. நினைவு கூரும் அளவுக்கு அது வொர்த்தும் இல்லை. முழுவதுமாக நீர்த்துப் போனார் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தக் காலத்தில்தான் உடையார் எழுதினார். எனக்கு திறக்க பயமாக இருக்கிறது, ஆனால் அதுதான் அவரது சாதனை என்று சொல்லப்படுகிறது. அப்படி சாதனையாகவே இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.

பாலகுமாரனின் இன்னொரு குறிப்பிட வேண்டிய பங்களிப்பு அவரது சரித்திர நாவல்கள். அரண்மனைச் சதி genre-இலிருந்து வெளியே வந்தார் என்பது தமிழ் சூழலில் பெரிய விஷயம்.

என் கண்ணில் அவர் இலக்கியவாதியே. ஆனால் அவர் இன்னும் சிறப்பாக எழுதி இருக்க முடியும். இன்று தமிழ் இலக்கியவாதிகளின் பட்டியலில் எங்கோ பின்னால்தான் வருவார். இலக்கியத்தில் அவருடைய தாக்கம் என்பது பெரிதாக இல்லை, நாள் செல்லச் செல்ல மறக்கப்படுவார் என்றுதான் மதிப்பிடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பதெல்லாம் அவன் எழுத்தைப் பற்றி பேசுவதுதான். ஆனால் எழுத்தைத் தாண்டி பாலகுமாரனை ஆசானாகக் கருதிய ஒரு கூட்டம் இருந்தது. ஆசானை இழந்து நிற்கும் வாசகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த இழப்பை எதிர்கொள்ளும் மனோதிடத்தை ஆண்டவன் அருளட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், பாலகுமாரன் பக்கம்

முதுமை

இன்று என் பெற்றோர்களின் திருமண நாள். (மே 17)

என் அப்பாவுக்கு 84 வயது. அம்மாவுக்கு 77. இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள். வேலையிலிருந்து ஓய்வு பெற்று பல வருஷங்கள் ஆகிவிட்டன. பேச ஆளில்லை, பிள்ளையும் பெண்களும் அவரவர் கவலைகளில், அவரவர் உலகத்தில். பிள்ளைகள் அடிக்கடி அதட்டுகிறோம். ‘வயசான காலத்திலே கிருஷ்ணா ராமான்னு ரெஸ்ட்ல இருக்காம ரெண்டு பேரும் அங்கயும் இங்கயும் அலையாதீங்க, உடம்புக்கு வந்தா பாத்துக்க ஆளில்ல’ என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம். பிள்ளைகளின் வாழ்க்கைக்கும் தங்கள் வாழ்க்கைக்கும் பொதுவான புள்ளிகள் குறைந்துகொண்டே போனாலும் பிள்ளைகள் மூலமாகத்தான் அவர்கள் இருவருக்கும் தங்கள் வாழ்வை சுவாரசியப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. தன் தோள் மீது வளர்ந்த குழந்தைகள் இன்று தோளை அல்ல, தலையையே மிஞ்சிப் பேசுவதை அவர்கள் எப்படி உணர்வார்கள்?

பொத்தூரி விஜயலட்சுமி என்று தெலுகு கவிஞர் எழுதிய இந்தக் கவிதை மிக அருமையாக விளக்குகிறது. என்னைப் பொறுத்த வரையில் கடைசி வரியை எடுத்துவிட்டால் இன்னும் நல்ல கவிதையாக இருக்கும்.

மொழிபெயர்த்தவர் சாஹித்ய அகடமி விருது பெற்ற தோழி கௌரி கிருபானந்தன். மே மாத அமுதசுரபி இதழில் வந்திருக்கிறது.

திருமண அழைப்பிதழை
கையில் கொடுத்து
நம் இல்லத்திலேயே புத்தாடைகளை
வழங்கி காலில் விழுந்து வணங்கி
அத்தனை தூரம் எப்படியும்
உங்களால் வர முடியாது,
ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று
சொல்லும்போது

அது நீங்கள் பார்க்கத் தகுந்த படம் இல்லை
என்று அவர்களே
முடிவு செய்யும்போது

பிறந்த நாள் பரிசாக
கைத்தடி, பகவத்கீதை
ஜபமாலை தரும்போது

பற்றைக் குறைத்துக்
கொள்ளுங்கள் என்று குழந்தைகள்
மெல்லிய குரலில்
கண்டிக்கும்போது

எதற்கு நல்லது யாராருக்கு
என்னென்னவென்று
ஒரு கடிதத்தில்
எழுதி வைத்து விடுங்கள் என்று
நலம் விரும்பிகள் அறிவுரை
வழங்கும்போது

அரை மணி நேரம் நாம்
சொன்ன வியாதிகளை
கேட்டுக் கொண்டு
பழைய மருந்துகளையே
தொடருங்கள் என்று
டாக்டர் முறுவலுடன்
சொல்லும்போது

பத்து நாட்களாக பேச்சு மூச்சையே
காணும் என்று நாம் கேட்டால்
பட்டும் படாமல் எதிராளி பதில்
சொல்லும்போது

எதன் மீதும் ஆர்வம் இல்லாமல்
எப்படியோ போகட்டும் என்று
நமக்கே நம் உணவு, உடைகள் மீது
அக்கறை இல்லாமல் போகும்போது

குழந்தைகள் சாப்பிட்டார்களோ
எப்படி இருக்கிறார்களோ
என்ற தவிப்பு குறைந்து
அவரவர் வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்ற வேதாந்த போக்கு படியும்போது

ஏதாவது இழவு செய்தி கேட்க
நேர்ந்தால் வருத்தத்திற்கு பதில்
இன்னொரு விக்கெட் போய்விட்டது
கொடுத்து வைத்தவன் கிடக்காமல்
போய்ச் சேர்ந்துவிட்டான்
என்ற திருப்தியோடு கடுகளவு
பொறாமையும்
ஏற்படும்போது

அர்த்தம் என்னவென்று
தெரியுமா?
நாம் அவுட்டரில் இருக்கிறோம் என்று

பின்குறிப்பு: அவுட்டர் என்றால் இந்தக் காலத்தில் புரிவது கஷ்டம் என்று நினைக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் ஏற்கனவே இருக்கும் வண்டி நகர்ந்தால்தான் அடுத்த வண்டி உள்ளே வர முடியும் என்ற நிலை இருந்தால் அந்த வண்டியை ஸ்டேஷனிலிருந்து ஒரு அரை மைல் தூரத்தில் நிறுத்திவிடுவார்கள். ‘அவுட்டர்ல போட்டாண்டா’ என்ற குரலை நான் ரயிலில் ஏறி பள்ளி சென்ற நாட்களில் அடிக்கடி கேட்கலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகை 6

இதுவும் சர்வசாதாரணமான விஷயம்தான். ஏறக்குறைய தேய்வழக்காகவே ஆகிவிட்ட விஷயம்தான். பல சினிமாப் பாடல்களில் கேட்டிருப்போம். உதாரணமாக வாலி படகோட்டி திரைப்படத்துக்காக ரத்தினச் சுருக்கமாக ‘ஊரெங்கும் தூங்கையிலே, நான் உள்மூச்சு வாங்கையிலே’ என்று எழுதி இருக்கிறார். ஹிந்தியில் கூட ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது – ஸோ கயா யே ஜஹான் (திரைப்படம்: தேசாப்). ஆனாலும் அதில் ஏதோ இருக்கிறது.

பாடலை எழுதியவர்: பதுமனார் திணை: நெய்தல்

A.K. Ramanujan’s Translation:

What She said:

The still drone of the time
past midnight.
All words put out,
men are sunk into the sweetness
of sleep. Even the far-flung world
has put aside its rages
for sleep.

Only I
am awake.

ஒரிஜினல் கவிதை:

தலைவி கூற்று:

நள்ளென்றன்றே யாமஞ் சொல்லவிந்து
இனிதடங்கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

2018-இல் இலக்கியத்துக்கு நோபல் பரிசு இல்லை

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக இந்த வருஷம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படப் போவதில்லை. தேர்வுக் குழுவின் உறுப்பினர் காதரினா ஃப்ராஸ்டன்சனின் கணவர் ழான்-க்ளாட் அர்னால்ட் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு, மற்றும் வெற்றி பெற்றவர்களின் பேரை அறிவிப்புக்கு முன்னாலேயே கசியவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. 18 தேர்வுக் குழு உறுப்பினர்களில் 7 பேர் ‘ராஜினாமா’ செய்துவிட்டார்கள். குறைந்தது 12 பேராவது ஓட்டு போட்டால்தான் அடுத்த வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க முடியுமாம். (ராஜினாமா செய்ய முடியாது, அதற்கான விதிமுறை இல்லை என்றும் தெரிகிறது.)

2019-இல் இரண்டு பரிசுகள் – 2018க்கு ஒன்று, 19க்கு ஒன்று – என்று வழங்கப்படுமாம்.

என்ன கொடுமை இது சரவணன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்