நல்ல குறுந்தொகை

எனக்கு பத்து பனிரண்டு வயது இருக்கும்போது என் அம்மா தமிழ் இளங்கலை – அந்தக் காலத்தில் புலவர் பட்டப் படிப்பு – படித்தாள். அப்போது எனக்கு மளிகை சாமான் கட்டி வரும் பேப்பரைக் கூடப் படிக்கும் பழக்கம் உண்டு. என் அம்மாவின் பாடப் புத்தகங்களை புரிகிறதோ புரியவில்லையோ புரட்டியாவது பார்ப்பேன். எட்டுத்தொகையின் நூல்களை விவரிக்கும் வெண்பா இன்னும் நினைவிருக்கிறது.

நற்றிணை நல்ல குறுந்தொகை
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் – கற்றறிந்தார்
ஏத்தும் கலியோடு அகம் புறம் இரண்டும்
இத்திறத்த எட்டுத் தொகை

கடந்த சில வருஷங்களாக சங்கக் கவிதைகள்தான் கவிதைகளாகத் தெரிகின்றன. அதுவும் குறுந்தொகை வேறு லெவலில் இருக்கிறது. எடுத்துக் கொண்டிருப்பது குறுகிய களம் – காதலும், காமமும் பிரிவும் மட்டுமே. தலைவன், தலைவி, மிஞ்சிப் போனால் ஒரு தோழி, தாய், செவிலித்தாய் அவ்வளவுதான். இதில் எத்தனை எத்தனை உணர்வுகளைக் காட்டிவிடுகிறார்கள் நம் கவிஞர்கள்? நல்ல குறுந்தொகை என்பது எதுகை மோனைக்காக சொல்லப்பட்டதோ இல்லை போகிற போக்கில் சொல்லப்பட்டதோ – எனக்கு சத்தியமான வார்த்தையாகத் தெரிகிறது.

ஒரே ஒரு பிரச்சினை. சங்கத் தமிழ் சரியாகப் புரிவதில்லை. பல கவிதைகள் குன்சாகக் கூட புரிவதில்லை. தமிழ் தெளிவுரைகள் பொதுவாக வார்த்தைக்கு வார்த்தை பொருளை விளக்குகின்றன. சாரத்தை விட்டுவிட்டு சக்கையை மட்டுமே தரும் அணுகுமுறை. கவிதைக்கு அர்த்தம் அல்ல, கவிதை புரிய வேண்டும். இந்தத் தெளிவுரைகளில் அது மிக அபூர்வமாகவே நிகழ்கிறது.

ஏ.கே. ராமானுஜனின்Interior Landscape‘ அப்படிப்பட்ட ஒரு விளக்கம். சில இடங்களில் தமிழை விடவும் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் கவித்துவம் உள்ளதாக இருக்கிறது. இந்த மாதிரி ஒருவரிடம் தமிழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் எனக்கே கற்பூர வாசனை தெரிந்திருக்கும், நானே கவிதைகளை விரும்பிப் படித்திருப்பேன். அவர் திணைகளைப் பற்றி – குறிஞ்சி, முல்லை இத்யாதி – படிமங்களைப் பற்றி விளக்கி இருப்பது இந்த மாதிரி தியரியைக் கண்டாலே ஓடும் என்னையே இழுத்துப் பிடித்து வைக்கிறது.

எனக்கு ஒரே ஒரு குறை. ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அருகே தமிழ் வடிவத்தையும் கொடுத்திருந்தால் என் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். சரி நானே ஆரம்பித்து வைக்கிறேன். இன்றைக்கு குறுந்தொகை 3.

சாதாரண விஷயம். என் காதல் இவ்வளவு பெரியது என்று தலைவி இரண்டு கைகளையும் எத்தனை தூரம் விரிக்க முடியுமோ அதற்கு மேலும் கொஞ்சம் விரித்துக் காட்டுவது போன்ற ஒரு கவிதை.அப்படி எல்லாம் சிந்திக்கும் நாயகிக்கு என்ன வயதிருக்கும்? வாலிபத்தின் காதலாகத்தான் இருக்க முடியும். இளைஞர்களின் காதல் காதலிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் (அவர்கள் பெற்றோர்களாக இல்லாத பட்சத்தில்) புன்னகைக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு கணத்தைத்தான் கவிஞர் காட்டுகிறார்.

இரண்டாம் பகுதியாக நாயகன் எந்த ஊர்க்காரன் என்று சொல்வதுதான் எனக்கு இந்தக் கவிதையை இன்னும் உயர்த்துகிறது. கவிதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

எழுதியவர் தேவகுலத்தார், குறிஞ்சித் திணை. ஐந்து வரியில் ஒரு microcosm-த்தையே காட்டிவிடுகிறார்.

ராமானுஜன் ‘நிலத்தினும் பெரிதே’ என்பதை ‘Bigger than earth’ என்று மொழிபெயர்த்திருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும். ‘Bigger than earth, certainly,’ என்று மொழிபெயர்த்திருப்பது அபாரமாக இருக்கிறது. அதை நாயகி எப்படி சொல்லி இருப்பாள்? ‘Bigger than earth’ என்று ஆரம்பித்துவிட்டு, ஒரு நொடி அது உண்மைதானா, இல்லை மிகைப்படுத்திச் சொல்கிறோமா என்று யோசித்துவிட்டு, ‘certainly’ என்று தொடர்ந்திருக்க வேண்டும். ராமானுஜன் கவிதையை உள்வாங்கி அதைக் கவிதையாகவே மொழிபெயர்க்கிறார்.

A.K. Ramanujan’s Translation:

What She said:

Bigger than earth, certainly,
Higher than the sky,
More unfathomable than the waters
Is this love for this man

Of the mountain slopes
Where bees make rich honey
From the flowers of the Kurinji
That has such black stalks.

ஒரிஜினல் கவிதை:

தலைவி கூற்று:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பின்குறிப்பு:
எட்டுத்தொகை போலவே பத்துப்பாட்டு நூல்களையும் ஒரு வெண்பா விவரிக்கும். ஆனால் எனக்கு அதில் முதல் வரியும் கடைசி வரியும்தான் நினைவிருக்கிறது. யாருக்காவது தெரியுமா?

முதல் வரி: திருமுருகு பொருனாறு பாணிரண்டு முல்லை
கடைசி வரி: கடாத்தொடும் பத்து

நண்பர் ராஜ் சந்திராவுக்கு நன்றி!

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

குவிகம் சுந்தரராஜனுக்கு நன்றி! – பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

10 thoughts on “நல்ல குறுந்தொகை

  1. In my opinion NATRINAI is the best. It is more like a sonnet, and has more room for scenery, ULLURIA UVAMAM and profound thoughts.
    Pinnaththur Narayanaswamy Iyer wrote the first modern commentary for NATRINAI while being poor and suffering from diabetes. When I read his biographical note I felt the only homage we can pay to these selfless dedicated people was to read their writings.

    Like

  2. RV,
    >>எட்டுத்தொகை போலவே பத்துப்பாட்டு நூல்களையும் ஒரு வெண்பா விவரிக்கும். ஆனால் எனக்கு அதில் முதல் வரியும் கடைசி வரியும்தான் நினைவிருக்கிறது. யாருக்காவது தெரியுமா?

    முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
    பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
    கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
    பாலை கடாத்தொடும் பத்து

    Courtesy:
    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

    Like

  3. குறுந்தொகை மற்றும் பல அக சங்கப் பாடல்கள் உலகத் தரம் வாய்ந்தவை. ஆசிரியரோ மற்ற நண்பரோ விளக்கினால் தான் விளங்குகிறது. A K R நல்ல ரசிகமணி.

    பத்துப்பாட்டு எட்டுத்தொகை போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கும் ஒரு பாட்டு எஸ் எஸ் எல் சியில் படித்தது:

    நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
    பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
    இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
    கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு

    Like

  4. அமர்நாத், குறுந்தொகையை முடித்துவிட்டுத்தான் நற்றிணை பக்கம் எட்டிப் பார்க்க வேண்டும்.
    ராஜ் மற்றும் குவிகம் சுந்தரராஜன், உங்கள் தகவல்களையும் இணைத்துவிட்டேன்.
    நன்றி முத்துசாமி!

    Liked by 1 person

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.