சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும்

சந்திரபாபு வசீகரமான ஆளுமை. ஆனால் ஒரு நடிகராக அவர் என்னை பெரிதாக கவர்ந்ததில்லை. அவரது வீழ்ச்சியில் இருக்கும் கவர்ச்சிதான் அவர் இன்றும் பேசப்படுவதின் காரணமோ என்று சில சமய்ம் தோன்றுகிறது.

பாபு மிகைநடிப்பு பாணியை பின்பற்றியவர். இல்லாத கொனஷ்டை எல்லாம் செய்தார். நடிப்பு என்பதை விட அதை எப்படி ஸ்டைலாக செய்ய முடியும் என்பதில்தான் அவரது முனைப்பு இருந்தது. அவர் எழுதிய கதைகளும் (பாவமன்னிப்பு, தட்டுங்கள் திறக்கப்படும்…) அதி-மெலோட்ராமா கதைகள்தான். எனக்குத் தெரிந்து அப்படி மிகைநடிப்பும் கொனஷ்டையும் செயற்கையாகத் தெரியாத ஒரே நடிகர் எம்.ஆர். ராதாதான். இன்று பாபுவின் நடிப்பு பாணி காலாவதி ஆகிவிட்டது, அபூர்வமாகவே ரசிக்க முடிகிறது. (சபாஷ் மீனா, மணமகன் தேவை என்ற வெகு சில திரைப்படங்கள்தான் நினைவு வருகிறது)

ஆனால் அவரது வாழ்க்கை! சோற்றுக்கே திண்டாட்டம், வேலை கிடைக்காமல் தற்கொலை முயற்சி என்ற நிலையில் ஆரம்பித்து சில ஆண்டுகளாவது சூப்பர்ஸ்டாராக இருந்தார். சபாஷ் மீனாவில் நடிக்க சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம். சகோதரி திரைப்படம் மகாசோகம், நகைச்சுவை வேண்டுமென்று இவரைக் கேட்க அன்று ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டாராம். கவலை இல்லாத மனிதன் திரைப்படத்தை எடுத்த கண்ணதாசனை கவலையே உருவான தயாரிப்பாளர் என்ற நிலைக்கு தள்ளிவிட்டாராம். (பிற்காலத்தில் எம்ஜிஆர் இதை இவருக்கு திருப்பி செய்ததை பிராரப்த கர்மம் என்றுதான் சொல்ல வேண்டும்.) எம்ஜிஆரை வைத்து மாடி வீட்டு ஏழை திரைப்படம் எடுக்க முயற்சியில் பெரிய அடி, மணந்த பெண் வேறொருவனைக் காதலித்தாள் என்று தெரிந்ததும் அவனோடு சேர்த்து வைத்தது இன்னொரு அடி, சொந்தப் படம் எடுத்து பணம் எல்லாம் போனது இன்னொரு அடி, மீண்டும் சோற்றுக்கே திண்டாட்டம் என்ற நிலையில் முடிந்திருக்கிறார். குடிதான் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். கடைசி காலத்தில் தேங்காய் சீனிவாசன், பாலாஜி, எம்எஸ்வி எல்லாரும் உதவி இருக்கிறார்கள்.

முகிலின் கண்ணீரும் புன்னகையும் புத்தகம் இந்த நிகழ்ச்சிகளைத்தான் விவரிக்கிறது. அதுவும் எம்.ஜி. சக்ரபாணியுடன் போட்ட சண்டை, கடைசி காலத்தில் எம்ஜிஆரை சகட்டுமேனிக்கு தாக்கி எழுதியது எல்லாம் விவரமாக இருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அலுப்பு தட்டலாம்.

என் கண்ணில் பாபு அவரது பாடல்களால் மட்டும்தான் நினைவு கூரப்படுவார்.

Manorama
குன்றில் குமார் என்பவர் எழுதிய ஆச்சி மனோரமா (2016) என்ற புத்தகத்தைப் பற்றி தனியாக எதுவும் எழுதுவதற்கில்லை. மனோரமாவின் வாழ்க்கையை ஏறக்குறைய துணுக்குகளாகவே எழுதி இருக்கிறார், தீவிர தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

 

Merry Christmas திரைப்படத்தின் மூலக்கதை

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் பார்த்த திரைப்படம். மிகைப்படுத்தல்கள் இருந்தாலும், சில இடங்கள் நம்ப முடியாமல் இருந்தாலும், பிடித்திருந்தது. மூலம் ஒரு ஃப்ரெஞ்சு நாவல் என்று தெரிந்ததும் தேடிப் பிடித்துப் படித்தேன்.

Le Monte-charge 1961-இல் எழுதப்பட்ட நாவல். ஆனால் 2017க்கு முன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வரவில்லை போலிருக்கிறது.

1961-இல் அல்ஜீரியாவே விடுதலை அடையவில்லை, இன்னும் ஃப்ரானஸின் ஒரு பகுதிதான். அதைப் பற்றி ஒரு வரியில் போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.

நாவல் திரைப்படத்தை விட குறைவான அதிர்ச்சிகளும் அதிகமான நம்பகத்தன்மையும் உடையது. நல்ல மர்ம நாவல்.

படத்தை அனேகமாக எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதனால் வெகு சுருக்கமாக கதை. கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற கைதி ஆல்பர்ட் விடுதலை ஆகிறான், கிறிஸ்துமஸ் அன்றுதான் வீடு திரும்புகிறான். இரவு உணவுக்கு செல்லும் உணவு விடுதியில் தற்செயலாக ஒரு இளம் தாயையும் – திருமதி ட்ராவெட் – அவளது மூன்று நான்கு வயது மகளையும் சந்திக்கிறான்.திருமதி ட்ராவெட்டின் மணவாழ்வு சுகப்படவில்லை. ட்ராவெட்டுக்கும் ஆல்பர்ட்டுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. ட்ராவெட்டின் வீட்டுக்கு ஆல்பர்ட் செல்கிறான், மகளைத் தூங்க வைத்துவிட்டு ட்ராவெட் ஆல்பர்டின் வீட்டுக்கு வருகிறாள், பிறகு மீண்டும் ட் ராவெட்டின் வீட்டுக்கு போகிறார்கள். அங்கே அவளது கணவன் சுடப்பட்டு இறந்து கிடக்கிறான். ஆல்பர்ட் தான் விடுதலை ஆன கொலைக்கைதி, காவல் துறை தன்னை சந்தேகப்படும், ட்ராவெட்டையும் சந்தேகப்படும் என்கிறான். ட் ராவெட் அவனை ஏறக்குறைய துரத்தி விடுகிறாள். காவல் துறைக்கு கொலை பற்றி தகவல் தெரிவிக்காமல் சிறிது நேரத்தில் ட்ராவெட் தன் மகளுடன் ஒரு சர்ச்சுக்கு போகிறாள். ஆல்பர்ட் அவளைத் தொடர்கிறான். அங்கே மயங்கி விழுவது போல் நடித்து இன்னொருவனை வீட்டுக்கு அழைத்து வருகிறாள், ஆல்பர்ட்டும் கூட ஒட்டிக் கொள்கிறான். இப்போது பிணத்தைக் காணோம்!

இதற்கு மேல் நான் விவரிக்கப் போவதில்லை. படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் புத்தகத்தைப் படியுங்கள்.

ஆல்பர்ட் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்புவது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல முடிச்சு, மர்மம் அவிழ்வதும் பிரமாதம். ஆல்பர்ட்டுக்கும் ட்ராவெட்டுக்கும் நடுவே ஏற்படும் ஈர்ப்பு, கதையின் முத்தாய்ப்பு எல்லாம் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

கதையின் பலவீனம் என்று பார்த்தால் முடிச்சுதான் பிரதானமாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் – குறிப்பாக திருமதி ட்ராவெட் – ஜீவனற்றவை.

திரைப்படத்தில் இன்னும் இரண்டு மூன்று ட்விஸ்ட்கள் வைத்திருக்கிறார்கள். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

டர்த் கிட்டத்தட்ட 300 த்ரில்லர்களை எழுதி இருக்கிறார். பிரபலமான ஃப்ரெஞ்ச் எழுத்தாளராம். நான் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை…

நல்ல முடிச்சுக்காக படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். திரைப்படத்தையும் பாருங்கள்!

Wicked Go to Hell என்றும் ஒரு புத்தகம் கிடைத்தது. சிறைக்கைதி ஒருவனின் கும்பலைப் பிடிக்க போலீஸ்காரன் கைதியாக உள்ளே நுழைகிறான். தப்பிக்கிறார்கள், பல பிரச்சினைகள், ஆனால் அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. சுமார்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: ஃப்ரெடெரிக் டர்த் விக்கி குறிப்பு

கிறிஸ்துமஸ் நாவல்: Miracle on the 34th Street

Miracle on the 34th Street-ஐ நான் முதலில் திரைப்படமாகத்தான் (1947) பார்த்தேன். எளிய ஆனால் சரளமாகச் செல்லும், அங்கங்கே புன்னகைக்க வைக்கும் கதை, நல்ல முத்தாய்ப்பு (climax) உள்ளது, பார்க்கலாம். பிறகுதான் அது நாவலாகவும் வந்தது என்று தெரிகிறது. முதலில் நாவல் வந்ததா இல்லை திரைக்கதை நாவலாக எழுதப்பட்டதா என்று குழப்பமாக இருக்கிறது. வாலன்டைன் டேவிஸ் கதையாக எழுதினார், திரைப்படமாக வந்தது, பிறகு அவரே அதை நாவலாக எழுதினார் என்று தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் டேவிஸ் இந்தத் திரைப்படத்துக்காக சிறந்த கதாசிரியர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார்.

என்ன கதை? க்ரிஸ் க்ரிங்கிள் ஒரு முதியோர் இல்லத்தில் வாழ்கிறார். பார்ப்பதற்கு சான்டா கிளாஸ் போலவே மீசை, தாடி, தொப்பையுடன் இருப்பார். க்ரிஸ் க்ரிங்கிள் என்பது சான்டா கிளாசின் இன்னொரு பெயரும் கூட. தான் சான்டா கிளாஸேதான் என்று நம்புகிறார்.

கிறிஸ்துமஸ் சமயத்தில் நியூ யார்க்கில் நடக்கும் Macy’s Parade ஒரு பிரபல நிகழ்ச்சி. தற்செயலாக அங்கே சான்டாவாக “நடிக்கிறார்”. மேசி நிறுவனத்திலேயே அவருக்கு சான்டா வேலை கிடைக்கிறது. குழந்தைகள் சான்டாவிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பார்கள், இவரும் சரி சரி, நல்ல குழந்தைகளாக இருந்தால் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும்.

சில பொம்மைகள் மேசி கடையில் கிடைக்கவில்லை. க்ரிஸ் எந்த போட்டியாளர் கடையில் கிடைக்கும் என்று தகவல் தருகிறார். க்ரிஸ்ஸை வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று பார்த்தால் இப்படி உதவி செய்கிறாரே என்று மேசிக்கு மேலும் கூட்டம் வருகிறது. மேசிக்கு கிடைக்கும் நல்ல பெயரைப் பார்த்து பிற கடைகளிலும் தங்களிடம் இல்லாதவை எந்தக் கடையில் கிடைக்கும் என்று தகவல் சொல்கிறார்கள். நாடு முழுவதும் Christmas Spirit பரவுகிறது.

க்ரிஸ் தான் சான்டாதான் என்று சொல்லிக் கொள்வதால் அவருக்கு பைத்தியம் என்று வழக்கு நடக்கிறது. அவர் தான்தான் சான்டா என்று நிரூபிக்கிறார். எப்படி? வெள்ளித் திரையில் காண்க!

என் கண்ணில் திரைப்படத்தைப் பார்ப்பது உத்தமம். Feel good திரைப்படம். கிறிஸ்துமஸ் சமயம் வேறு, பாருங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: திரைப்படத்தைப் பற்றிய ஐஎம்டிபி குறிப்பு

இயக்குநர் திருலோகசந்தர்

திருலோகசந்தர் எழுதிய நெஞ்சம் நிறைந்த நினைவுகள் என்ற புத்தகம் கிடைத்தது.

திருலோகசந்தர் அறுப்து எழுபதுகளின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். எனக்கு முந்தைய தலைமுறையின் தொழில் தெரிந்த இயக்குனர்களில் ஒருவர். சிவாஜி/எம்ஜிஆர் போன்ற நட்சத்திரங்கள், அந்த காலகட்டத்துக்கு சுவாரசியமான திரைக்கதை எதையாவது வைத்துக் கொண்டு படத்தை வெற்றி பெறச் செய்யும் நுட்பம் தெரிந்தவர். அவரது நீட்சிதான் என் தலைமுறையில் எஸ்.பி. முத்துராமன், அடுத்த தலைமுறையில் கே.எஸ். ரவிகுமார் போன்றவர்கள். எஸ்பிஎம் திருலோகசந்தரின் நேரடி சீடர். பாலசந்தர் படம், பாரதிராஜா படம், மணிரத்னம் படம் என்றுதான் சொல்வோமே தவிர திருலோகசந்தர் படம், எஸ்பிஎம் படம் என்று சொல்வதில்லை. அவர்கள் சிவாஜி படம், ரஜினி படம், கமல் படத்தை திறமையாக இயக்கத் தெரிந்தவர்கள்.

திருலோகசந்தர் 1930-இல் பிறந்தவர். இறப்பு 2016. நிறைவாழ்வு வாழ்ந்தவர். மூன்று மகன்களுடன் சந்தோஷமான குடும்பம். திரைப்படத்துறையில் நிச்சயம் வாய்ப்புகள் இருந்திருக்கும், ஆனால் எந்த வம்புதும்புக்கும் போகாதவர்.

ஆஜானுபாகுவானவர். ஆறடிக்கு மேல் உயரம். பெரிய குழந்தையாக இருந்ததால் பிரசவமே கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறது. பிரசவம் பார்த்தவர் பின்னாளில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஏ.எல். முதலியார்! அவரது அப்பா தனது நண்பரும் குருவுமான திரிலோக்சந்த் என்பவரின் பெயரை இவருக்கு வைத்தாராம். வசதியான குடும்பப் பின்னணி. அம்மா நிறைய புத்தகங்கள் படிப்பாராம், இவருக்கும் பழக்கம் ஒட்டிக் கொண்டது. இவரிடம் புத்தகங்களைப் பற்றி நிறையப் பேசுவாராம்.

அந்தக் காலத்து எம்.ஏ. பச்சையப்பன் கல்லூரியில் படித்திருக்கிறார். மு.வ., பின்னாளில் தி.மு.க.விலிருந்து அமைச்சரான க. அன்பழகன் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். சிறு வயதிலிருந்தே நாடகங்களில் விருப்பம் இருந்திருக்கிறது, ஆனால் கூத்தாடித் தொழிலா என்று வீட்டில் கண்டிப்பு. வீட்டுக்குத் தெரியாமல் ரேடியோ நாடகங்களில் நடித்திருக்கிறார். குடும்பத்தவர்களுக்கு இவர் கலெக்டராக வேண்டும் என்று ஆசை. எம்.ஏ. இளம் வயதிலேயே முடித்துவிட்டார், ஐ.ஏ.எஸ். எழுத ஒரு வருஷம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை.

நண்பனின் அப்பா தயாரிப்பாளர்-இயக்குனர் ஆர். பத்மநாபன். ஒரு வருஷம் சும்மா இருப்பதற்கு எனக்கு உதவியாளனாக சேர்ந்து கொள் என்றிருக்கிறார். இவரும் சேர்ந்துவிட்டார். குமாரி (1952) என்ற எம்ஜிஆர் திரைப்படத்தில் பணி. எம்ஜிஆரோடு கொஞ்சம் நட்பு. ஆனால் சீனியர்கள் இவருக்கு வாய்ப்பு தரவே இல்லை. எம்.ஏ. பட்டமும் ஆங்கிலம் நன்றாகப் பேசுவதும் கசப்பை அதிகரித்திருகிறது. எதையும் சொல்லித் தர மறுத்திருக்கிறார்கள். இவர் தானே கன்னிமாரா நூலகத்தில் இருந்த புத்தகங்களின் வழியாக முட்டி மோதி கற்றிருக்கிறார்.

வீட்டில் கசப்பு. அப்பா நீ நடிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டிருக்கிறார். யாரும் பெண் தரவில்லை. பரவாயில்லை வேண்டாம் என்று திருமணத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார். கதாசிரியனாக, இயக்குனராக வர வேண்டும் என்று முழு மூச்சில் முயற்சி. 75-100 ரூபாய் சம்பளம், அதுவும் படம் இருக்கும்போதுதான். அன்று எம்.ஏ.வுக்கு இது குறைவுதான். ஆனாலும் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். எஸ். பாலசந்தர், எல்.வி. பிரசாத், ஜித்தன் பானர்ஜி ஆகியோரை தன் குருமார்கள் என்கிறார். இதில் எல்.வி. பிரசாத்தோடு வேலையே செய்ததில்லை, ஆனால் தான் அவருக்கு ஏகலைவன் என்கிறார்.

விஜயபுரி வீரன் (1960) திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனந்தன், அசோகன், ராம்தாஸ், எஸ். ராமராவ் போன்றவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அசோகன் நெருங்கிய நண்பராகிவிடுகிறார்.

அசோகன் இவரை ஏ.வி.எம். சரவணனிடம் அறிமுகப்படுத்துகிறார். பார்த்தால் பசி தீரும், வீரத்திருமகன் கதைகளை சொல்லி சம்மதத்தைப் பெறுகிறார். வீரத்திருமகனுக்கு இவரே இயக்குனரும் ஆகிறார். சரவணனின் நெருக்கமான நண்பராகிறார். இன்றும் சரவணன், இவர், ஆரூர்தாஸ் மூவரும் பேசாத நாளில்லையாம்.

இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் என்று உறுதியாக இருந்ததால் 30 வயதுக்கு மேல்தான், வீரத்திருமகனை இயக்கிக் கொண்டிருந்தபோதுதான், திருமணமும் நடந்திருக்கிறது.

வீரத்திருமகனில் நீலப்பட்டாடை கட்டி என்ற பாட்டை படமாக்க நிறைய உழைத்திருக்கிறார்கள். செட்டியாரின் முழு ஒத்துழைப்பு இல்லாவிட்டால் என் மனதிலிருந்த காட்சி திரைப்படமாகி இருக்காது என்கிறார்.

பிறகு ஏவிஎம்முக்கு சில படங்கள் – நானும் ஒரு பெண், காக்கும் கரங்கள், ராமு – முத்தாய்ப்பாக அன்பே வா.

பாலாஜி பால்ய நண்பராம். முதல் படம் சரியாகப் போகவில்லை. இவரிடம் வந்து நீ இயக்கினால் ஃபைனான்ஸ் கிடைக்கும் என்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார். இவரோ அப்போது ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குனர், என்ன சொல்வார்களோ என்று தயக்கம். ஆனால் அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய் என்று அனுமதித்திருக்கிறார்கள். தங்கை, திருடன், என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா என்று ஐந்து படங்களை சிவாஜி-பாலாஜி காம்பினேஷனில்.

சிவாஜி வெகு நெருங்கிய நண்பராகி இருக்கிறார். ஒரே அறையில் தங்கி, ஒரே படுக்கையில் படுத்து இவர் குறட்டையால் அவர் தூங்காமல் அவர் குறட்டையால் இவர் தூங்காமல் அவஸ்தைப்படும் அளவுக்கு நண்பர்களாம். சிவாஜி உரிமையோடு இவர் வீட்டில் சாப்பிடுவாராம். மட்டன் பிரியாணி என்றால் இருவருக்கும் ரொம்ப இஷ்டமாம்.

ஏவிஎம்முக்கும் படங்கள் இயக்குவதை தொடர்ந்திருக்கிறார். அதே கண்கள் பெரிய வெற்றி.

சிவாஜிக்கும் தனியாக படங்கள் – இரு மலர்கள், தெய்வ மகன், தர்மம் எங்கே, அன்பளிப்பு, பாபு, பாரதவிலாஸ் மேலும் பல படங்கள். 1987 வரை சிவாஜியை நாயகனாக வைத்து படம் இயக்கி இருக்கிறார். பாபு திரைப்படத்தில் அவரும் ஏவிஎம்மும் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். பாரதவிலாசை அவர் மட்டும்.

தனியாக அவள், தீர்க்கசுமங்கலி, பத்ரகாளி. பத்ரகாளி திரைப்படத்தின் நாயகி ராணி சந்திரா 75 சதவிகிதம் படம் முடிந்த நிலையில் இறந்துவிட, ஏதோ ஒரு டூப்பைப் போட்டே படத்தை முடித்திருக்கிறார். (சிவகுமார் தந்த யோசனையாம்)

தன் திரைப்படங்களின் ஹிந்தி, தெலுகு மொழி வடிவங்களையும் ஓரளவு இயக்கி இருக்கிறார். குறிப்பாக என்டிஆரை வைத்து சில படங்கள்.

ஒரு காலத்தின் நட்சத்திரங்களை வைத்து சிறப்பாக படம் எடுக்கும் இயக்குனர்கள் காலம் போகப் போக முக்கியத்துவம் இழப்பது எல்லா ஊரிலும் நடக்கும் காட்சி. ஹிட்ச்காக்குக்கு கூட Birds (1963) திரைப்படத்துக்குப் பின் எதுவும் சரியாக அமையவில்லை. இவருக்கும் அதே நிலைதான். 1975-க்குப் பிறகு குறிப்பிடக் கூடிய திரைப்படம் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் 1990 வரை அவ்வப்போது படங்கள். கடைசியாக தொலைக்காட்சி தொடர்கள் பக்கம் போயிருக்கிறார்.

திருலோக்சந்தர் இயக்கிய/பங்களித்த படங்களில் பல இன்னும் பார்க்கக் கூடியவையே. குறிப்பாக நானும் ஒரு பெண், தெய்வமகன், அன்பே வா, அதே கண்கள். பார்த்தால் பசி தீரும், இரு மலர்கள், திருடன், என் தம்பி, ராமு, அன்பளிப்பு, எங்க மாமா, பாபு, பாரதவிலாஸ், தீர்க்கசுமங்கலி, பத்ரகாளி என்று இன்னும் ஒரு பத்து படமாவது பார்க்கலாம். இவற்றில் சிலவற்றையாவது ஓரளவு ரசித்தவர்கள் இந்தப் புத்தகத்தை விரும்பிப் படிப்பீர்கள். மற்றவர்கள் பற்றி எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

Road to Perdition

Road to Perdition (2002) நல்ல திரைப்படம். சமீபத்தில் மீண்டும் பார்த்தபோதுதான் இது முதலில் ஒரு புத்தகமாக – காமிக்ஸ் புத்தகமாக – வந்தது, பிறகு திரைப்படமாக்கப்பட்டது என்று தெரிந்தது. புத்தகம் நூலகத்தில் கிடைக்கவும் கிடைத்தது.

எழுதியவர் மாக்ஸ் ஆலன் காலின்ஸ்.

கதை கிரேக்க துன்பியல் நாடகம் போல; பாத்திரங்களின் குணாதிசயங்களால் ஒரு நிகழ்ச்சி, அதனால் தவிர்க்க முடியாத எதிர்வினை, அதனால் தவிர்க்க முடியாத எதிர்-எதிர்வினை என்று நிகழ்வுகளால் கட்டப்பட்டிருப்பது சிறப்பு.

என்ன கதை? சிகாகோவில் அல் கபோன், ஃப்ராங்க் நிட்டி போன்ற மாஃபியா டான்கள் கொடி கட்டிப் பறந்த காலம். சிறு நகரம் ஒன்றிலும் ஒரு டான் – ஜான் லூனி – அவர்களோடு தொழில் முறை கூட்டாளி. ஜானுக்கு வலது கரம் மைக்கேல். வழிக்கு வராதவர்களை அடிப்பது, சமயத்தில் கொல்வது எல்லாம் அவனே. மைக்கேலுக்கு அழகான குடும்பம். மூத்த மகன் – மைக்கேல் ஜூனியர், பத்து, பனிரண்டு வயது இருக்கலாம். அப்பாவைப் பற்றி அரசல் புரசலாகத் தெரியும், என்ன செய்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆவல். ஒரு நாள் இரவில் அப்பாவுக்குத் தெரியாமல் காரில் ஏறிக் கொள்கிறான். ஜானின் மகன் கானர் ஏதோ தகராறில் ஒருவனைக் கொல்வதைப் பார்த்துவிடுகிறான். அப்பாவும் கொலைகாரன்தான் என்பது தெரிந்துவிடுகிறது. சாட்சியாயிற்றே, அவனைக் கொல்ல வேண்டும் என்று கானர் நினைப்பது மைக்கேலுக்குத் தெரிகிறது. என் மகன் வெளியே சொல்லமாட்டான் என்று உறுதி கூறுகிறான்.

அடுத்த நாள் மைக்கேல் பணம் சரியாகத் தராமல் இழுத்தடிக்கும் ஒருவனைப் பார்க்க ஒரு கடிதத்தோடு அனுப்பப்படுகிறான். இதெல்லாம் வாடிக்கைதான். ஆனால் கடிதத்தில் மைக்கேலைக் கொன்றால் கடன் ரத்து என்று எழுதப்பட்டிருக்கிறது. தப்பி வீட்டுக்கு ஓடி வரும் மைக்கேல் தன் மனைவி, இரண்டாவது மகன் இருவரும் கொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறான். மூத்த மகன் ஜூனியர் – சாட்சி – மட்டும் தற்செயலாகத் தப்பி இருக்கிறான்.

மைக்கேல் ஜூனியருடன் சிகாகோவுக்குப் போகிறான். அங்கே பெரிய தலையான ஃப்ராங்க் நிட்டியை சந்திக்கிறான். தான் பழி வாங்கப் போவதாகவும், சிகோகா குறுக்கிடாவிட்டால், தன் முன்னாள் எஜமானுக்கு உதவிக்கரம் நீட்டாவிட்டால், காலம் முழுவதும் சிகாகோ மாஃபியாவுக்கு உழைப்பதாகவும் சொல்கிறான். ஃப்ராங்க் மைக்கேல் வேண்டும்தான், ஆனால் மைக்கேலின் எஜமான் இன்னும் தேவை. மைக்கேலை வருத்தத்துடன் நிராகரிக்கிறான். அவன் உயிரோடு இருந்தால் ஆபத்து என்பதால் அவனைச் சுட முயற்சி நடக்கிறது. மைக்கேல் தப்பிக்கிறான்.

ஜூனியர் காரோட்ட மைக்கேல் சிகாகோ மாஃபியா பணம் போட்டு வைத்திருக்கும் வங்கிகளை எல்லாம் கொள்ளை அடிக்கிறான். ஒரு கட்டத்தில் சிகாகோ மாஃபியாவுக்கு மைக்கேலை பழி வாங்க அனுமதிப்பது அதிக நஷ்டமா இல்லை பழைய தொழில் உறவுகளை காப்பாற்றுவது அதிக நஷ்டமா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

கடைசியில் கானர் கொல்லப்படுகிறான். மைக்கேலும். ஜூனியர் எதிர்காலத்தில் பாதிரியார் ஆகிறான்.

கதையின் சிறப்பு மைக்கேல் ஜூனியரும் தன் பாதையில் நடக்கக் கூடாது என்று துடிப்பதும், அந்தத் துடிப்பை வெளியே தெரியாமல் அடக்குவதும், தற்காலிகமாவது ஜூனியரை தனக்கு உதவியாக வைத்துக் கொள்வதும்தான். மைக்கேல், ஜூனியர் இருவரின் பாத்திரப் படைப்பும் அருமை. மாஃபியா நாட்கள் நம்பகத்தன்மையோடு சித்தரிக்கப்படுகிறது. காமிக்ஸ் வடிவத்தில் ஓவியங்களும் சிறப்பு.

ஆனால் நான் திரைப்படத்தை இன்னும் ஒரு மாற்று அதிகமாக மதிப்பிடுகிறேன். சிறு மாற்றங்கள். ஒரு மாற்றமான கொலைகார நிருபன் பாத்திரம் சிறப்பு. மிகச் சிறந்த நடிப்பு – டாம் ஹாங்க்ஸ், பால் நியூமன் நடித்தது. சிறந்த ஒளிப்பதிவு, கலை இயக்கம். சாம் மெண்டஸ் இயக்கம்.

இதற்கு இரண்டு மூன்று தொடர்ச்சிகளும் உண்டு.

  • On the Road to Perdition முதல் புத்தகத்தின் நிகழ்ச்சிகளையே இன்னும் கொஞ்சம் விலாவாரியாக விவரிக்கிறது. மைக்கேலைத் துரத்தும் இரண்டு கூலிப்படையினர், மைக்கேலுக்கு அடைக்கலம் தரும் இளமைப் பருவ காதலியின் குடும்பம் ஆகியவற்றுக்கு கொஞ்சம் பெரிய ரோல்.
  •  Return to Perdition மைக்கேலின் பேரன் வரை போகிறது. மைக்கேலின் மகன் வளர்ந்து பெரியவனான பிறகு மாஃபியா பிரச்சினைகள் தீரவில்லை. இப்போது FBI-யின் சில rogue agents-உம் சேர்ந்து குட்டையைக் குழப்புகிறார்கள்
  • காலின்ஸ் சிகாகோ மாஃபியா பின்புலத்தில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை எழுதி இருக்கிறார்.புத்தகத்தைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன், ஆனால் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: திரைப்படத்தைப் பற்றிய ஐஎம்டிபி குறிப்பு

MacKenna’s Gold

நான் கிராமங்களில் வளர்ந்தவன். எழுபதுகளின் சிறுவன். நான் வளர்ந்த கிராமங்களில் (லாடாகரணை எண்டத்தூர், மானாம்பதி) சினிமா பெரிய விஷயம். எண்டத்தூருக்கு நாங்கள் போன் இரண்டு மூன்று வருஷம் கழித்துத்தான் ஒரு டெண்டு கொட்டாய் திறக்கப்பட்டது. மானாம்பதியில் ஒரு கட்டிடம் இருந்தது. இரண்டிலும் எம்ஜிஆரும் சிவாஜியும் ஜெய்ஷங்கரும்தான் கொடி கட்டிப் பறந்தார்கள். புதுப்படம் பார்க்க வேண்டுமென்றால் காஞ்சிபுரம் போக வேண்டும்.

எப்போதாவது பக்கத்தில் இருக்கும் கொஞ்சம் பெரிய ஊரான உத்தரமேரூரிலோ அல்லது அதிசயமாக எங்கள் ஊரிலேயோ ஆங்கிலப் படம் வரும். அதுவும் இரண்டே இரண்டு ஆங்கிலப் படம்தான் அங்கெல்லாம் வரும். ஒன்று காப்டன் மார்வெல் (1941). இன்னொன்று மக்கென்னாஸ் கோல்ட். மக்கென்னாஸ் கோல்டை 20 வயதிற்குள் நாலு முறையாவது பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

மக்கென்னாஸ் கோல்ட் திரைப்படத்தை நண்பர்கள் திறந்த வாய் மூடாமல் பார்த்திருக்கிறோம். வசனம் எல்லாம் புரியாதுதான். கதையைப் பற்றியும் பெரிதாக அக்கறை இருந்ததில்லை.அந்த நீல ஏரிகளும் சிவந்த மலைகளும் மலைப்பாதைகளும் கண்ணைப் பறித்தன. (பற்றாக்குறைக்கு ஒரு குளிக்கும் காட்சி வேறு உண்டு.)

மானாம்பதிக்கு அருகில் உள்ள செய்யாறு ஆற்றில் ஒரு பக்கெட் தண்ணீர் கூட ஓடி நான் பார்த்ததில்லை. கிராமத்து ஏரி எல்லாம் வறண்டுதான் கிடக்கும். எங்களுக்குத் தெரிந்த பெரிய நீர்நிலை எல்லாம் நாங்கள் தினமும் நீந்தும் கோவில் கிணறுதான். – பதினைந்து அடி விட்டம் இருந்தால் அதிகம். அதனால்தானோ என்னவோ மக்கென்னாஸ் கோல்டின் நிலப்பரப்பு காட்சிகள் மனதில் ஆழமாகப் பதிந்தன, பெரிய ஏக்கத்தை ஏற்படுத்தின. பிற்காலத்தில் கிராண்ட் கான்யன், ப்ரைஸ் கான்யன் மாதிரி இடங்களில் சுற்றியபோதுதான் அந்த ஏக்கம் கொஞ்சம் குறைந்தது.

வியப்பு தரும் செய்தி ஒன்றையும் படித்தேன் – இந்தத் திரைப்படம் அமெரிக்காவில் தோல்வி அடைந்தது. நாயகன் கிரிகரி பெக் தண்டமான திரைப்படம் என்று அலுத்துக் கொண்டாராம். ஆனால் படம் வெளியான சில வருஷங்கள் கழித்து அன்றைய சோவியத் யூனியனிலும் இந்தியாவிலும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. பல வருஷங்களுக்கு இந்தியாவில் அதிக வசூல் தந்த அமெரிக்கத் திரைப்படம் இதுதானாம்.

சமீபத்தில்தான் திரைப்படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிந்தது. ஹெக் ஆலன் என்பவர் எழுதியது. புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்து படித்தேன்.

புத்தகம் இழுவை. கறாராகப் பார்த்தால் திரைப்படமே இழுவைதான். ஓமார் ஷெரிஃபுக்காக சிறு மாறுதல்கள் செய்திருக்கிறார்கள். நாவலைப் பெரிதாக மாற்றவில்லை. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு செவ்விந்தியன் தங்கம் கொட்டிக் கிடக்கும் ஒரு கணவாய் எங்கிருக்கிறது என்ற தன் குடியின் ரகசியத்தை சொல்லிவிட்டு இறக்கிறான். அந்தக் கணவாயைத் தேடி அலையும் பெலான், அவனது குழு மக்கென்னாவை வழிகாட்டியாக இழுத்துச் செல்கிறார்கள். பெலானைத் தேடும் சிறு ராணுவப் படையிலிருந்து ஒருவன் போக்குக் காட்டி இவர்களோடு சேர்ந்து கொள்கிறான். நடுவே காதல், மோதல். அங்கே போனதும் குழுவில் இருக்கும் செவ்விந்தியன் ஒருவனுக்கு ஞானோதயம் பிறந்து அவன் தங்கத்தின் ரகசியம் வெளியே போகக் கூடாது என்று எல்லாரையும் கொல்ல முயற்சிக்கிறான். திடீரென்று பூகம்பம் ஏற்பட்டு மலைச்சுவர் இடிந்து தங்கத்தை எல்லாம் மூடிவிடுகிறது. மக்கென்னாவும் அவன் காதலியும் மட்டும் தப்பிக்கிறார்கள்.

இது என்னைப் போல நாஸ்டால்ஜியா உள்ளவர்களுக்குத்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள், திரைப்படங்கள்

கமலஹாசன் வாழ்க்கை

கமல் தமிழகத்தின் முக்கிய ஆளுமை. என் இளமைக்காலத்தின் நாயகர்களில் ஒருவர். ஐந்தாறு வயதில் எம்ஜிஆரின் கத்திச் சண்டை ஈர்த்தது. ஏழெட்டு வயதில் ஜெய்ஷங்கரின் துப்பறியும் திரைப்படங்கள்; பத்து பனிரண்டு வயதில் சிவாஜியின் உணர்வு பொங்கும் (மிகை) நடிப்பு என்று தொடர்ந்த திரைப்பட நட்சத்திர மோகம் பதின்ம வயதுகளில் கமலின் அழகு/நடிப்பு/நடனம், ரஜினி ஸ்டைல், ஸ்ரீதேவி/ஜெயப்பிரதாவின் அழகோடு முடிவு பெற்றது. ரஜினி மோகம் ஒரு வருஷம் கூட நீடிக்கவில்லை, ஆனால் கமல் மோகம் மூன்று நான்கு வருஷமாவது நீடித்தது. மோகம் என்ற நிலை மாறிய பிறகும் அவ்வப்போது சில திரைப்படங்கள் கவனத்தை ஈர்க்கும் – நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் என்று சில.

கமலின் வாழ்க்கையும் – மச்சம்டா என்று சின்ன வயதில் பேசிக் கொள்வோம் – கவர்ச்சியாக இருந்தது. அவருடன் இணைத்து பேசப்படாத நடிகை இல்லை; ஸ்ரீவித்யா, ஸ்ரீப்ரியா, வாணி கணபதி, ஹிந்தி நடிகை ரேகா, சரிகா என்று அந்தக் காலத்தில் பெரிய பட்டியலே இருந்தது. கொஞ்சம் மனமுதிர்ச்சி வந்த பிறகு – வயதான பிறகு என்றும் வைத்துக் கொள்ளலாம் – இந்த மாதிரி கிசுகிசுக்களில் மனம் செல்வதில்லைதான். ஆனால் என் இளமையில் அது அவரது கவர்ச்சியை அதிகப்படுத்தியது.

நான் பழகிய உறவுக்காரப் பெண்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள், அடுத்த டெஸ்க் பெண்கள் எல்லாருக்கும் அவரை பிடித்திருந்தது. அவரும் ஆம்பளை ஜெயமாலினி போல நிறையப் படத்தில் உள்ளாடையோடு தரிசனம் கொடுப்பார்.

கமல் பற்றிய புத்தகம் என்றால் ஆர்வம் வருவது இயற்கைதானே! பா. தீனதயாளன் எழுதிய கமல் (2013) புத்தகத்தின் மின்பிரதியை நண்பர் ஒருவர் பல காலத்துக்கு முன் அனுப்பி இருந்தார். ஆனால் இப்போதுதான் படிக்க முடிந்தது.

உண்மையைச் சொல்வதென்றால் இது யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்று சர்வஜாக்கிரதையாக எழுதப்பட்ட புத்தகம். கறாராகச் சொன்னால் bowdlerized வாழ்க்கை வரலாறு. கமலின் சர்ச்சைக்குரிய பக்கங்களை தொட்டும் தொடாமல் செல்கிறார், தவிர்க்கவே முடியாது என்றால் மட்டுமே அவை குறிப்பிடப்படுகின்றன. அதனால் இது கமலின் திரைப்படங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாகவும் அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிய சிறு குறிப்பாகவும் மட்டுமே இருக்கிறது.

புத்தகத்தில் எனது takeaways:

  • கமலின் பெற்றோர் – குறிப்பாக அப்பா – அவரை ஒரு கலைஞனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முயன்றிருக்கிறார்கள். படிப்பு பற்றி கொஞ்சம் கவலை இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தவில்லை
  • இயக்குனராக வர வேண்டும் என்றுதான் விரும்பி இருக்கிறார். நடனத்துக்காகவே ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஜெமினி கணேசன் இவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று போராடி இருக்கிறார்.
  • ஸ்திரீலோலன் என்ற பெயர் சீக்கிரமே வந்துவிட்டது போலிருக்கிறது. சாவித்ரி அவரை மாதிரி ஆகிவிடாதே என்று எச்சரித்திருக்கிறார்.
  • எழுபதுகளின் பிற்பகுதியில் – ரஜினிக்கு முன்னாலேயே – நிலைபெற்றுவிட்டார் என்று நினைத்திருந்தேன். அப்போதும் கொஞ்சம் தள்ளாட்டம்தான் என்கிறார் தீனதயாளன்
  • முதல் மனைவி வாணி தன் மற்ற தொடர்புகளைப் பற்றி கண்டுகொள்ளக் கூடாது, அதுவும் சரிகா தன் குழந்தைக்கு கமல்தான் அப்பா என்று அறிவித்தபோதும் கூட என்று நினைத்திருக்கிறார்.
  • வாணியோடு மணமுறிவுக்குப் பிறகு குடும்பத்தோடு கசப்பு. வாணிக்கு அது வரை சம்பாதித்த எல்லா பணமுமே ஜீவனாம்சமாகப் போய்விட்டதாம்
  • சிவாஜிதான் உரைகல். அவரது இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றுதான் கனவு.
  • கமலுக்கு எம்ஜிஆரின் ஒரு tendency இருக்கிறது. நிறைய செலவழித்து பணம் எடுக்க வேண்டும். ஆனால் எம்ஜிஆருக்கு இது வியாபாரம் என்ற பிரக்ஞை நிறையவே இருந்தது. கமல் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே செலவு செய்தாரோ/செய்கிறாரோ என்று தோன்றுகிறது.

டைம்பாஸ், படிக்கலாம். ஆனால் ஒரு கலைஞனின் அகச்சிக்கல்கள் பற்றி ஏதாவது தரிசனம் கிடைக்கும் என்று நினைத்து படிக்காதீர்கள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படம்

ஒரு வழியாகத் திரைபப்டத்தைப் பார்த்துவிட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில் கதையின் நாயகர்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியும் நடன இயக்குனர் பிருந்தாவும்தான். தோட்டாவோடும் பிருந்தாவோடும் ஒப்பிட்டால் மற்றவர் எல்லாம் – மணிரத்னம் உட்பட – கொஞ்சம் சோட்டாவாகத்தான் தெரிகிறார்கள்..

மணிரத்னத்தின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எப்போதுமே அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அவர் இசை வீடியோக்களோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு சில சமயம் தோன்றியதுண்டு (உதாரணமாக காற்று வெளியிடை திரைப்படம்) நல்ல வேளையாக இந்தப் படத்தின் takeaway பாட்டுக்கள் மட்டும் அல்ல.

குறிப்பாக தேவராளன் ஆட்டம் வண்ணங்கள் நடனம் ஆடுவதைப் போல இருந்தது. ராட்சஸ மாமனே படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். Visual treat. இரண்டிற்கும் வீடியோ கிடைக்கவில்லை. யூட்யூபில் வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலிருக்கிறது.

ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!

திரைப்படத்தின் பல காட்சிகள் – உடையும் பாலத்தின் மீது செல்லும் தேர், ஆற்றை தெப்பத்தின் மேல் கடக்கும் குதிரை, பழுவேட்டரையர் அரணமனை, இலங்கை அரசன் மஹிந்தன் வரும் காட்சி போன்றவை அழகுணர்ச்சியுடன் படமாக்கப் பட்டிருந்தன.

வேறு எதுவுமே இல்லாவிட்டாலும் இவற்றுக்காகவே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இன்னும் இருக்கின்றன.

திரைக்கதை வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். கதை பொன்னியின் செல்வனை இம்மியும் மாற்றாமல் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. ராஷ்டிரகூடர்களுடன் போர், நுளம்பம்பாடி போர், குந்தவை பழுவேட்டரையரை மடக்குவது என்றெல்லாம் நாவலில் கிடையாது. பெரிய பழுவேட்டரையரும், அனிருத்த பிரம்மராயரும், ஏன் ஆழ்வார்க்கடியானும் கூட நாவலில் இன்னும் பெரிய பாத்திரங்கள். ஆனால் திரைப்படத்தின் பெரும் பகுதி நாவலை அடியொற்றித்தான் செல்கிறது. நாவல் சில ஆயிரம் பக்கம் உடையது, கொஞ்சம் ramble ஆகத்தான் செய்யும். திரைப்படத்தின் விடுபடல்கள் நாவலை இன்னும் coherent ஆக்கும் முயற்சிகள் அவ்வளவுதான்.

திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அப்படித்தான். உதாரணமாக நாவல் முழுவதும் குந்தவை ஒரு பெண் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்குத்தான் கல்கி விவரிப்பார். ஆனால் ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.

ராஷ்டிரகூடர்களோடு போர் என்பது இன்னொரு நிராயுதபாணியை கொல்லமாட்டேன் என்ற ஒரு நொடி வசனத்துக்காக கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சியோ என்று தோன்றுகிறது. வீரபாண்டியனைக் கொல்வதால் ஆதித்தகரிகாலனுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களை அந்த ஒரு நொடி வசனம் நன்றாகவே காட்டிவிடுகிறது.

மிக நீண்ட நாவலை கெடுக்காமல் நல்லபடி திரைக்கதை ஆக்குவது சிரமம். அதை மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மூவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வசனங்கள் மனோகரா வசனம் போல anachronism ஆகவும் இல்லை, அதே போல கொச்சையான பேச்சுத் தமிழாகவும் இல்லை. இயல்பாக இருக்கின்றன. அது ஜெயமோகனுக்கு ஜுஜுபி வேலைதான்.

முந்தைய பதிவிலிருந்து:

ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைக்கதையில் எனக்கு நொட்டை சொல்ல வேண்டுமென்றால்; வந்தியத்தேவனின் கதாபாத்திரம் நாவலில் முதலில் வீரன்; பிறகு கொஞ்சம் குறும்புத்தனம் உள்ளவன். திரைப்படத்தில் முதலில் பெண்களோடு flirt செய்யும் குறும்புக்காரன், அப்புறம்தான் வீரம் எல்லாம் என்ற சித்திரம் எழுகிறது. ஆ. கரிகாலன் பார்க்கும் இள வயது நந்தினிக்கும் வீரபாண்டியனின் மரணப்படுக்கையில் பார்க்கும் நந்தினிக்கும் உருவ வித்தியாசம் அதிகம். எப்படி பார்த்தவுடன் தெரிந்தது? வீரபாண்டியனே நந்தினி என்று அழைக்கிறார்தான், ஆனால் உலகத்தில் ஒரே நந்தினிதானா? ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவனைப் பார்த்து நீர் சோழ இளவரசியை மணப்பீர் என்று அருண்மொழி சொல்கிறார். கையில் இருப்பது நீ உடனே கிளம்பி வா என்று ஒரு ஓலை மட்டுமே; அதில் அக்காவின் உள்ளம் எப்படித் தெரியும்?

இரண்டாவதாக நடிப்பு; விக்ரமுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஜெயம் ரவி பொருத்தமான தேர்வுதானா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கார்த்தியும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் கலக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராயும், அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷாவும். மற்ற பாத்திரங்களில் ஜெயராமும், பார்த்திபனும், ஐஸ்வர்யா லட்சுமியும், கிஷோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஜெயராமின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம், அந்த மெல்லிய நகைச்சுவை கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும்.

ஆனால் முக்கிய நடிகர்களின் முதிர்ச்சியான தோற்றம் கொஞ்சம் உறுத்துகிறது. ஆதித்த கரிகாலன் இறக்கும்போது 30 வயது கூட இருக்காது. விக்ரமைப் பார்த்தால் நாற்பதாவது சொல்லலாம். அதே போல ஜெயம் ரவி கதையில் வரும் அருண்மொழியைப் போல இளைஞன் அல்ல. கார்த்தியும் மனதில் இருக்கும் வந்தியத்தேவனை விட கொஞ்சம் முதிர்ச்சியாகத்தான் தெரிகிறார்.

வந்த புதிதில் – ஒரு ஏழெட்டு வருஷமாவது – ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்களை முதல் முறை கேட்கும்போதே பிடித்துவிடும். சின்னச் சின்ன ஆசையாகாட்டும், போறாளே பொன்னுத்தாயியாகட்டும், பேட்டை ராப் ஆகட்டும், அப்படித்தான். அப்புறம் சில வருஷம் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்காது, ஆனால் கேட்க கேட்கப் பிடித்துவிடும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன. இது வரை அடிக்கடி கேட்கவில்லை, அதனால்தானோ என்னவோ எதுவும் சரியாக நினைவிலேயே இல்லை. பார்ப்போம்.

என்னா கூச்சல் போட்டார்கள்! ஆழ்வார்க்கடியான் நாராயணா என்று சொல்லவில்லை, நெற்றியில் நீறு இல்லை, ஹிந்துக்களை இழிவு செய்கிறார்கள் என்று வெறும் டீசரைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் கத்தியது. படம் வந்த பிறகு தானாக அடங்கி இருக்கிறது. ஆனால் பார்ப்பன ஆதரவு திரைப்படம், ராஜராஜன் ஹிந்துவே அல்ல என்று அடுத்த கும்பல் கிளம்பி இருக்கிறது. படத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்தாயிற்று, படம் எப்படி இருந்தால் என்ன, சும்மா கத்துவோம், என்று கிளம்பி இருக்கிறீர்களா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாடா?

இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!

பொ.செ. தமிழில் ஒரு cult நாவல். திரைப்படம் அப்படி ஒரு cult திரைப்படமாக அமையாது என்று நினைக்கிறேன். நன்றாக ஓடும், அடுத்த பாகம் வரும்போது நினைவிலிருக்கும், ஆனால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து மறந்தும் போய்விடும் என்று தோன்றுகிறது. விக்ரம் 2 திரைப்படம் போலத்தான் முடியும், பாஹுபலி போல cult திரைப்படமாக மாறாது என்று தோன்றுகிறது.

அதனால் என்ன? ஒரு குறைவுமில்லை. திரைப்படம் நன்றாகவே இருக்கிறது. அரங்கங்களில் சென்று பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

சில சினிமா புத்தகங்கள்

மீனாகுமாரி இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். சாவித்ரியோடு ஒப்பிடலாம். சொந்த வாழ்க்கையும் கொஞ்சம் சாவித்ரியைப் போலத்தான் இருக்கும். சிறு வயதிலேயே திரைப்படங்கள், அவர் ஊதியத்தை வைத்து வாழ்ந்த குடும்பம், 20-21 வயதிலேயே ஏற்கனவே திருமணமான கமல் அம்ரோஹியுடன் காதல், திருமணம், மணமுறிவு; வித்தியாசம், மணமுறிவுக்குப் பிறகு தர்மேந்திரா உட்பட்ட சில காதலர்கள் இருந்தார்கள், பகிரங்கமாகத்தான் உறவு இருந்தது. வினோத் மேத்தா மீனாகுமாரி மறைந்தபோது அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார். பெரிய தரிசனம் என்று எதுவுமில்லைதான், ஆனால் முழுமையான வாழ்க்கை வரலாறு.

மதுபாலா இன்றும் இந்திய நடிகைகளில் மிக அழகானவராகக் கருதப்படுகிறார். மஞ்சு குப்தா தொகுத்த “Madhubala: Her Real Life Story” சிறு வாழ்க்கை வரலாறு. பெரிய குடும்பம், அழகான மதுபாலாவை நடிக்க வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அப்பா தீர்மானித்திருக்கிறார். குழந்தையாகவே சில படங்கள், பிறகு கதாநாயகி. இருதய நோய் இருந்திருக்கிறது. திலீப்குமாரோடு காதல்; அப்பா சம்மதிக்காததால் பிரச்சினை பெரிதாகி காதல் முறிந்திருக்கிறது. கிஷோர் குமாரை மணந்திருக்கிறார். 34 வயதில் இறப்பு. சுவாரசியமான வாழ்க்கை வரலாறு இல்லை, ஆனால் அவர் வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

ராஜேஷ் கன்னா ஆராதனா வெளியான சமயத்திலிருந்து நாலைந்து வருஷம் புகழின் உச்சியில் இருந்தார். அதற்கு சமமாக எம்ஜிஆர்/ரஜினி மேல் தமிழர்களுக்கு இருந்த/இருக்கும் அன்பு, என்டிஆரை தேவுடுவாகவே பார்த்த தெலுங்கர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் கன்னாவுக்கு இருந்தது அகில இந்திய புகழ். அவரது உச்சங்களும் வீழ்ச்சியும் பெரிய நாவலின் கதைக்களனாக இருக்க சாத்தியம் உள்ளவை. நாலைந்து வருஷம் ராஜா, அதற்குப் பிறகு – முப்பது முப்பத்தைந்து வயதிலிருந்து பெருங்காயம் வைத்த டப்பா என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய அகச் சிக்கல்களை உருவாக்கும்? யாஸ்ஸர் உஸ்மான் எழுதிய Rajesh Khanna: The Untold Story of India’s First Superstar ராஜேஷ் கன்னாவின் அகச்சிக்கல்களை நன்றாகவே விவரிக்கிறது. இருந்தாலும் எனக்கு டைம் பாஸ்தான். காரணம் ராஜேஷ் கன்னா எனக்கு முக்கியமானவர் அல்லர். இத்தனைக்கும் “மேரே சப்னோன் கி ராணி” பாடலுக்கு பரம ரசிகன். அந்தப் பாடல் அவரை வைத்து படமாக்கப்பட்டிருக்கும் விதம் என் மனம் கவர்ந்தது. ஆனால் எனக்கு அவரது திரைப்படங்களில் பிடித்தது பாடல்கள்தான். என் நாயகர்கள் ஆர்.டி. பர்மனும் கிஷோர் குமாரும்தான். ஆனந்த் திரைப்படம் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்று, ஆனால் அது எனக்கு ரிஷிகேஷ் முகர்ஜியின் சாதனை. கௌதம் சிந்தாமணி எழுதிய “Dark Star: The Loneliness of Being Rajesh Khanna” அவரது திரைப்படங்களை விவரிக்கிறது.

சத்ருகன் சின்ஹா, Anything but Khamoshi (2016): பாரதி எஸ். ப்ரதான் எழுதி இருக்கிறார். சத்ருகன் சின்ஹாவின் தன்னம்பிக்கை, அவரது ஸ்டைல், வில்லன் நடிகராக இருந்தவரை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அவரது பாணி ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், மோகன்பாபு உட்பட்ட பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. புத்தகத்தில் கிடைக்கும் சித்திரம் அவர் போலித்தனங்கள் அற்ற மனிதர் என்பதுதான். குறைகள் அற்றவர் அல்லர், ஆனால் நிறைகளும் நிறைய உடையவர். ஆனால் யாருக்கும் தலை தாழ்த்தவில்லை. திருமணம் ஆன புதிதிலேயே கூட நடிகை ரீனா ராயோடு உறவு! பூனத்தோடு திருமணம், ரீனா ராயோடு தேனிலவு என்று இருந்திருக்கிறார். அரசியலில் பாஜகவுக்காக பெரும் கூட்டங்களை ஈர்ப்பவராக இருந்திருக்கிறார், ஆனால் மோதி அரசில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம். டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

ரிஷி கபூர், குல்லம் குல்லா (2017): மீனா ஐயரோடு எழுதியது. ரிஷி கபூர் ஹிந்தி சினிமாவின் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கிடைத்த லாபங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் அனுபவித்திருக்கிறார். சில பல குறைகள் உள்ளவர். ஆனால் அவற்றுக்காக வருத்தப்படுபவர் இல்லை. போலித்தனம் இல்லை. என் மனதில் பதிந்த ஒரு இடம் – அவரது மனைவி நீது சிங் ரிஷி கபூர் பிற பெண்களுடன் உறவு கொண்டிருப்பார் என்று கோடி காட்டுவதுதான். இது திரை உலகில் எத்தனை சாதாரணமாக இருந்திருக்கிறது? டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

கரண் ஜோஹர் வம்பு பேசும் வெட்டி பந்தாக்காரர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது அனேகமாக சில காஃபி வித் கரண் நிகழ்ச்சிகளைப் பார்த்ததால் உருவானது. அவருக்குப் பெரும் சாதனைகளாகத் தெரியும் தில்வாலே துனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம், ஸ்டூடண்ட் நம்பர் 1 போன்ற திரைப்படங்களைப் பற்றி எனக்கு கொஞ்சம் இளக்காரமே உண்டு. (ஆனால் கபி குஷி கபி கம் திரைப்படத்தைப் பார்த்து கண்ணீரும் வந்திருக்கிறது, என்னை அப்பா செண்டிமெண்ட் திரைப்படங்கள் எங்கோ தொடுகின்றன) ஆனால் அவரது An Unsuitable Boy புத்தகம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. திரை உலக சூழலில் வளர்ந்தது, DDLJ-யின் பாதிப்பு, ஆதித்யா சோப்ரா, ஷா ருக் கான், சல்மான் கான் போன்றவர்களின் நட்பு, தனது ஓரினச் சேர்க்கைத் தன்மை போன்றவற்றை ஓரளவு சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

விக்ரம்

பல மாதங்களுக்குப் பிறகு அரங்கத்தில் பார்த்த திரைப்படம். ஹேமா பார்க்கலாம் என்று சொன்னதால் முதல் நாளே போய்ப் பார்த்தோம். டிக்கெட் எக்கச்சக்க விலை. எக்கச்சக்கம் என்று தெரிந்ததால் என்ன என்று தெரிந்து கொள்ள கூட விரும்பவில்லை.

வியாழக்கிழமை இரவில் கூட ஓரளவு கூட்டம் இருந்தது. அதிலும் பக்கத்தில் இருந்தவர் அதிதீவிர கமல் ரசிகர் என்று நினைக்கிறேன், அவ்வப்போது கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். அது திரைப்படத்தை மேலும் ரசிக்க வைத்தது.

திரைப்படத்தின் சுருக்கத்தை எல்லாம் எழுதி இனி மேல் பார்ப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய அதிர்ச்சி/மகிழ்ச்சி/ஏமாற்றங்களை குறைக்க விரும்பவில்லை. ஆனால் படம் முழுவதும் நானும் ஹேமாவும் ஏன் இப்படி கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே இருந்தோம். சில இடங்களில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் படம் பார்ப்பது போல இருந்தது. லாஜிக் எல்லாம் பார்ப்பதாக இருந்தால் தவிர்க்கலாம். ஆனால் எதற்காகப் பார்க்க வேண்டும்? சும்மா ஜாலியாகப் பாருங்கள்!

லாஜிக் அங்கங்கே இடித்தாலும், சில இடங்களில் திரைக்கதை நன்றாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் குடும்பப் பாசம், கமலின் அந்தக் கால சக வீரர்கள் அவருக்குக் கூட்டாளிகளாக அமைவது, அதிலும் டினா என்ற கூட்டாளி சண்டையிடும் காட்சி, கொஞ்சம் மிகைப்படுத்தல் இருந்தாலும் சூரியா வரும் காட்சி, ஃபஹத்திடம் அவரது மனைவி ஒரு வழியாக நீ எங்கே வேலை பார்க்கிறாய் என்று கேட்கும் காட்சி, காலைத் தாக்கும் அந்தக் குள்ளமான வில்லன் என்று சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

கதையின் நாயகன் கமல் அல்லர், ஃபஹத் ஃபாசில்தான். ஃபஹத்தின் பாத்திரத்தில் மிகைகள் உண்டுதான். உதாரணமாக வேலை மும்முரத்தில் திருமணத்தை மறந்துவிடுவதெல்லாம் திரைப்படத்தில்தான் நடக்கும். ஆனால் அவர் நன்றாக நடித்திருக்கிறார்.

கமல் இன்றும் நன்றாக ஆடுகிறார். குறிப்பாக பத்தல பத்தல பாட்டுக்கு சாண்டி மாஸ்டரின் நடன அமைப்பும் சரி, அதற்கு கமல் ஆடி இருப்பதும் சரி, நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் “மாஸ்”, அதீத ஹீரோயிச காட்சிகளைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அனிருத்திற்கு இந்தப் பாட்டு இன்னும் ஒரு பெரிய வெற்றி. ஆனால் போதை மருந்துகளைப் பற்றி இத்தனை வெளிப்படையாகப் பாடுவது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. சின்னக் குழந்தைகள் பாட்டைத்தான் பாடும். நாளைக்கு ஒரு எட்டு வயதுக் குழந்தை சூப்ப்ர் சிங்கர் ஜூனியரில் வெள்ளைப் பௌடரை மூக்குறிஞ்சுவதைப் பற்றி பாடத்தான் போகிறது.

விஜய் சேதுபதிக்கு பெரிதாக வேலை இல்லை. கமலோடு நடிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாரோ என்னவோ. சும்மா தோற்றத்தை வைத்தே ஓட்டிவிடலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். ஏறக்குறைய எம்ஜிஆர் படத்து நம்பியார் மாதிரி இருக்கிறது.

ப்ரதீப் சக்தி, குமரவேல், நரேன் ஆகியோருக்கு ஓரளவு நல்ல ஸ்கோப். நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

லாஜிக் எல்லாம் பார்ப்பதில் அர்த்தமில்லைதான். இருந்தாலும் அருள்ராஜை அத்தனை அனாயாசமாக அணுக முடிகிறது, அப்புறம் எதற்காக கடத்திப் போய் கொல்ல வேண்டும்? மண்டபத்திலேயே கொல்ல வேண்டியதுதானே? கடத்தினால்தான் சேஸ் வைக்க முடியும், கமல் 40 பேரை அடித்து நொறுக்குவதாக காட்சி அமைக்க முடியும் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். கடைசி சண்டைக் காட்சியில் குமரவேலுக்கு தற்கொலை செய்து கொள்ள ஆசையா, இல்லாவிட்டால் குழந்தையைக் கொன்றுவிட ஆசையா? எதற்காக அப்படி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வில்லன்களை நோக்கிப் போகிறார்? கடைசி சண்டையில் வி. சேதுபதி மாத்திரையை விழுங்க ஏன் இத்தனை தாமதம் செய்கிறார்? முதலில் மூன்று நிமிஷம் அடி வாங்கின பிறகுதான் “ஊக்க மருந்து” சாப்பிடுவாரா? எதற்காக ஃபஹத் திரும்பி வந்து குழந்தையைக் காட்டுகிறார்? அந்தக் காலத் திரைப்படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகளில் நாயகன் குடும்பத்தினர் வலிய வந்து மாட்டிக் கொள்வார்கள், அதைத்தான் நினைவுபடுத்தியது.

நொட்டை சொன்னால் என்ன? படத்தை ஜாலியாகப் பார்க்கலாம். கமல் பல வருஷங்களுக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவருக்காக வடிவமைக்கப்படும் “அதீதக்” காட்சிகள் குறைவாக இருக்கின்றன. பொதுவாக நடிப்பு நன்றாக இருக்கிறது. பல துணைப் பாத்திரங்கள் வலுவானவை. குறைந்தபட்சம் ஒரு பாட்டாவது ஹிட். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்