கடந்த நூறு ஆண்டுகளின் முக்கிய அமெரிக்க பெண் எழுத்தாளர்கள்

பொதுவாக எனக்கு பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர் என்று பிரிப்பதெல்லாம் பிடிக்காது. இருந்தாலும் சில சமயங்களில் வசதிக்காக இந்த மாதிரி பட்டியல்கள் தேவைப்படுகின்றன. யூஎஸ்ஏ டுடே பத்திரிகை கடந்த நூறு ஆண்டுகளின் முக்கிய அமெரிக்கப் பெண்கள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறது. அதிலிருந்து எழுத்தாளர்கள் பட்டியல் மட்டும் கீழே.

 1. மாயா ஏஞ்சலோ
 2. ஜூலியா ஆல்வாரெஸ்
 3. லொர்ரெய்ன் ஹன்ஸ்பெர்ரி
 4. ஜோரா நீல் ஹர்ஸ்டன்
 5. டோனி மாரிசன்
 6. ஏமி டான்

நீங்கள் முக்கியமான அமெரிக்க பெண் எழுத்தாளர் என்று யாரையாவது கருதுகிறீர்களா? சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express’

(மீள்பதிவு)

agatha_christieகஷ்டமான விடுகதை. பதிலை கண்டுபிடிக்கத் தேவையான எல்லா க்ளூக்களும் இருக்கின்றன. ஆனால் கண்டுபிடிப்பது ரொம்பவே சிரமம். பதில் இதுதான் என்று சொல்லும்போது அட, இதுதானா, இது நமக்குத் தோன்றவில்லையே என்று நினைக்க வைக்க வேண்டும். இதுதான் அகதா கிறிஸ்டியின் ஃபார்முலா. ஒரு கோணத்தில் பார்த்தால் எல்லா துப்பறியும் கதைகளுக்கும் இதுதான் ஃபார்முலா. அதில் அவர் மீண்டும் மீண்டும் வெற்றி அடைந்திருக்கிறார்.

இலக்கியம், தரிசனம் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் அகதா கிறிஸ்டியை புறக்கணித்துவிடலாம். ஆனால் அவர் சிறந்த craftswoman. துப்பறியும் கதைகளின் ஃபார்முலாவுக்குள் என்ன பெரிதாக எழுதிவிட முடியும்? அவரால் சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் வெகு சுவாரசியமான கதைகளை எழுத முடிந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் ‘red herring’ என்று சொல்வார்கள். யார் குற்றவாளி என்பதற்கு பல சாத்தியங்கள் இருக்கும். சாட்சியங்கள், கதைப் போக்கு மூலம் இவர்தான் குற்றவாளி என்று காட்டுவார், ஆனால் அவர் இல்லை என்று பின்னால் தெரியும். கிறிஸ்டியின் கதைகளில் red herring after red herring என்பது மீண்டும் மீண்டும் வரும் ஒரு உத்தி. அதை உல்டாவாகவும் பயன்படுத்துவார். இவர் குற்றவாளி இல்லை, இவர் இல்லை என்று ஷோ காட்டுவார். கடைசியில் அவர்தான் குற்றவாளியாக இருப்பார்.

அவரது நாவல்களைப் பதின்ம வயதில் படிக்க வேண்டும். அவரது உத்திகளை ரசிப்பதற்கு சரியான வயது அதுதான். பதின்ம வயதைத் தாண்டியவர்களுக்கு நான் பரிந்துரைப்பது நான்கு புத்தகங்கள் – Murder in the Orient Express, And Then There Were None (கும்நாம் என்று ஹிந்தியில் திரைப்படமாகவும் வந்தது), Murder of Roger Ackroyd, Mysterious Affair at Styles. அவற்றிலும் ‘first among equals’ என்று நான் கருதுவது Murder in the Orient Express-ஐத்தான்.

ஐரோப்பாவின் ஒரு மூலையிலிருந்து (துருக்கி) இன்னொரு மூலைக்குப் (பாரிஸ்) போகும் ரயில் Orient Express. இரண்டாம் உலகப் போருக்கு முன் ஐரோப்பாவில் இது பெரிய இணைப்பாக இருந்தது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் கொலை. கொலை நடந்த சில மணி நேரத்தில் கடுமையான பனிப்பொழிவால் ரயில் நின்றுவிடுகிறது. பெட்டியில் கிறிஸ்டியின் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் போய்ரோ பயணிக்கிறார். 12 பயணிகளில் யார் கொலை செய்தது என்பதுதான் மர்மம்.

murder_in_the_orient_express12 பயணிகளும் ஒரு கலவையான கூட்டம். கொலை செய்யப்பட்டவனின் செகரட்டரி, வேலைக்காரன்; கொலை செய்யப்பட்டவன் தன் பாதுகாப்புக்காக அமர்த்தி இருக்கும் ஒரு detective; ஆங்கிலேய ஆர்மி மேஜர்; ஆங்கிலேய governess; ஒரு சீமாட்டி மற்றும் சீமான் (Count and Countess); சீமாட்டியின் பணிப்பெண்; ஒரு அமெரிக்க அம்மா; ஒரு இத்தாலியன்; இன்னொரு வயதான சீமாட்டி.

கொலையோ படு விசித்திரமாக இருக்கிறது. பல கத்திக் குத்துக்கள். சில பலமானவை, சில பலமற்றவை. சில் இடது கைக்காரன் குத்தியதோ என்று சந்தேகம். அங்கே ஒரு கர்ச்சீஃப் கிடக்கிறது. எப்போது இறந்தான் என்று கணிக்க முடியவில்லை. சிவப்பு கிமோனோ அணிந்த ஒருவன் கடந்து போனதை அமெரிக்க அம்மா பார்த்திருக்கிறாள். கொலை நடந்த நேரத்துக்கு எல்லோருக்கும் alibi இருக்கிறது.

போய்ரோ துப்பறிகிறார். அவர் கடைசியில் தரும் விளக்கத்தை யாராலும் ஊகிக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். மிகவும் திருப்தியான விளக்கம். மிகக் கஷ்டமான விடுகதைக்கு மிகவும் பொருத்தமான, அதே நேரத்தில் சிம்பிளான, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கக் கூடிய பதில் தெரியும்போது கிடைக்கும் திருப்தி போய்ரோவின் விளக்கத்தைப் படிக்கும்போது ஏற்படுகிறது.

உண்மையில் இது துப்பறியும் கதைகளில் ஒரு classic. Tour de force என்றுதான் சொல்ல வேண்டும்.

1934-இல் எழுதப்பட்ட புத்தகம். சிட்னி லூமெட் இயக்கத்தில் 1974-இல் திரைப்படமாகவும் வந்தது.

துப்பறியும் கதைப் பிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

பரத நாட்டியப் பதம் – அதுவும் சொல்லுவாள்

ஓரிரு வருஷங்களுக்கு முன் என் உறவுக்காரப் பெண்ணின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. மதுமிதாவுக்கு அப்போது இரண்டு மூன்று வயதில் குழந்தை. அப்போதும் விடாமல் பயிற்சி செய்து அரங்கேற்றம் செய்த மதுமிதாவுக்கு ஒரு சலாம்!

அரங்கேற்றத்தில் ஒரு பதத்தை முதல்முறையாகக் கேட்டேன். கேட்டவுடன் இது பரதநாட்டியம் தேவதாசிகளின் ஏரியாவாக மட்டும் இருந்த காலத்தில் – 18, 19-ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் – சதிர்களில் ஆடுவதற்காக எழுதப்பட்ட பதம் என்று தெளிவாகத் தெரிந்தது. நாயகன் இன்னொரு பெண்ணுடன் (தாசியுடன்) குலவுகிறான், அவள் செல்வத்தில் கொழிக்கிறாள் என்ற ஆங்காரத்தை வெளிப்படுத்தும் பதம். நாயகன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதில் கூட பிரச்சினை இல்லை, ஆனால் அதன் விளைவாக அவள் பட்டும் நகையுமாக மினுக்குவதில்தான் பிரச்சினை. அதனால்தான் இருவரும் தாசிகளாக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

எழுதியவர் வைத்தீஸ்வரன்கோவில் சுப்பராம ஐயர். சுப்பராம ஐயர் பல பதங்களை எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் அவரது காலம் எதுவென்று தெரியவில்லை. பதத்திலும் வைத்தீஸ்வரன் கோவில் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் சதிர் மிகவும் பிரபலமாக இருந்தது என்று கேள்வி.

நாட்டியம் ஆட நல்ல ஸ்கோப் உள்ள பதம். மதுவின் வீடியோ இல்லாததால், சுதாராணி ரகுபதியின் வீடியோவை இணைத்திருக்கிறேன். சு. ரகுபதிக்கு கொஞ்சம் வயதான களை இருப்பதால், நாயகன் அவளை விட்டு நீங்கவும் காரணம் இருக்கிறது என்று நம் கற்பனையை ஓட விட்டுக் கொள்ளலாம்.

பாடல் வரிகள்:
அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

மதியும் நதி அணைந்த வைத்தீஸ்வரன் நாட்டின்
பதியான முருகேசன் செய்த காரியத்திற்கு

அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

எந்நேரமும் இங்கே வந்து நகை என்றும் துணி என்றும் இரவல் கேட்ட நாள் போச்சே!
எனக்கெதிரியாக அவள் சன்னக்காரையிட்ட மெத்தை வீடும் உண்டாச்சே!
உன்னதம் உன்னதமான கட்டிலாச்சு மெத்தையாச்சு
உயர்ந்த மக்மல் தெண்டு பட்டுப் புடவையுமாச்சு
தன்னை விட பாக்யசாலி கிடையாதென்று எண்ணமாச்சு
தனியே இருந்தவளுக்கு தாதிமார் உண்டாச்சு

அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

கையில் இல்லாதவள் ரெண்டு காசைக் கண்டவுடன் கர்வம் மீறிப் போச்சே!
கருமணிக்கும் வழி இல்லாது நின்றவளுக்கு கழுத்தில் கண்டசரம் உண்டாச்சே!
ரெண்டு கைக்கும் தங்கத்தினால் காப்பும் கொலுசுமாச்சு
ரத்தினங்கள் இழைத்த ஜடை பில்லை நாகமாச்சு
கண்ட இடத்தில் நின்றவளுக்கு கட்டுக்காவல் உண்டாச்சு
கறந்து குடிக்க ஒரு கொட்டில் மாடும் உண்டாச்சு

அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

சௌராஷ்டிர ராகம், ஆதி தாளம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இசை

அ. மார்க்ஸ்

(மீள்பதிவு, முதல் பதிவு 2014-இல்)

a_marxஅ. மார்க்ஸ் எல்லாம் எனக்கு வெறும் பேர்தான். அவரது சில புத்தகங்களை சமீபத்தில் படித்தேன். மார்க்ஸைப் பற்றிய என் எண்ணங்கள் எல்லாம் இந்தப் புத்தகங்கள் மூலம் உருவானவையே. மூன்று புத்தகங்கள் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு மேல் படிக்க எனக்குப் பொறுமை இல்லை. அரசியல் சித்தாந்த விளக்கம் எல்லாம் படிக்க நிறையவே பொறுமை வேண்டும்.

அ. மார்க்ஸ் கம்யூனிச சார்புடைய பெரியாரிஸ்ட் என்று தெரிகிறது. கம்யூனிசம் வேலைக்காகாது என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஈ.வெ.ரா. மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், திராவிட இயக்கமும், அவரது சித்தாந்தங்களும் தோல்வி அடைந்துவிட்டன என்று நினைத்தாலும் அவர் ஒரு காலகட்டத்தின் தேவை, தமிழகத்தில் ஜாதியின் தாக்கம் வட மாநிலங்களை விட குறைவாக இருக்க ஈ.வெ.ரா. ஒரு முக்கிய காரணம் என்றும் கருதுகிறேன். அதாவது எனக்கும் சில முன்முடிவுகள் இருக்கின்றன.

ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் என்ற ஒரு புத்தகமே மார்க்ஸைப் புரிந்துக் கொள்ளப் போதும் என்று நினைக்கிறேன். இவை எல்லாம் 2004-2008 காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள். மார்க்ஸ் இடதுசாரி பெரியாரிஸ்ட் சட்டகத்தின் மூலமே எந்தப் பிரச்சினையையும் அணுகினாலும், கம்யூனிச, திராவிடக் கட்சிகளையும் விமரிசிக்கிறார் – மென்மையான விமர்சனம்தான், ஆனால் அதையே நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு இடதுசாரி சார்புடையவர் லெனின், ஸ்டாலினின் தவறுகள் பற்றி வாயைத் திறந்திருப்பதே எனக்கு ஆச்சரியம்தான். மேற்கு வங்க கம்யூனிச அரசை நந்திகிராமம் பிரச்சினைக்காக கண்டிக்கிறார். அமெரிக்க எதிர்ப்பு எப்போதும் உள்ளாடுகிறது. கருணாநிதிக்கு மறைமுகமான ஆதரவு. (புத்தகம் வெளிவந்த பிறகு நிலை மாறி இருக்கலாம்.) ஜெயலலிதாவிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன, ஆனால் இவருக்குத் தெரியும் ஒரே குறை அவர் பிராமணர் என்பதுதான். அதை ஈ.வெ.ரா. மாதிரி நேரடியாக சொல்லவும் தைரியம் கிடையாது, நாமேதான் between the lines படித்துக் கொள்ள வேண்டும். சில பல இடங்களில் ஊரோடு ஒத்து ஊதாமல் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார். (குஷ்புவின் safe sex கருத்துக்கு ஆதரவு, மும்பை நடன பார்களை மூடுவதற்கு எதிர்ப்பு இத்யாதி)

சில ஸ்டேட்மெண்டுகள் சிரிக்கவும் வைக்கின்றன – “திராவிட” என்று அடைமொழி வைத்துக் கொண்டதால் inclusive nationalism-த்தை திராவிடக் கட்சிகள் நடைமுறைப்படுத்துகின்றனவாம்! 2G, 3G என்று வந்தால்தான் inclusive nationalism எல்லாம் மேடைக்கு வருகிறது என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தும் இப்படி அடித்துவிடும் வாத்யாரே, நீ மேதை!

நான் புரிந்து கொண்ட நபிகள் மாதிரி ஒரு சப்பைக்கட்டை நான் பார்த்ததே இல்லை. முகமதின் சர்ச்சைக்குரிய செயல்கள் (மருமகள் உறவுள்ளவளை மணந்தது, சிறு குழந்தைகள் உட்பட்ட யூதர் குழுக்களை முழுமையாக வெட்டிச் சாய்த்தது…) எல்லாம் அவருக்கு வேறு வழியில்லாததால் செய்யப்பட்டவை என்று சுலபமாக முடித்துவிடுகிறார். என்னதான் நடந்திருந்தாலும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்.பெரியாரிஸ்ட் எப்படி ஒரு மதத்தை தூக்கிப் பிடிக்கிறார் என்றே புரியவில்லை. ஆனால் ஈ.வெ.ரா.வே அப்படி இஸ்லாமை புகழ்ந்து பேசினார் என்று அவர் காட்டுகிற மேற்கோள்களைப் பார்த்தபோது புரிந்தது.

ஈழத்தமிழ் சமூக உறவுகளும் அரசியல் தீர்வும் ஓரளவு சமநிலையோடு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இன்றைய சூழ்நிலையில் ராஜபக்சேயின் ஒத்துழைப்பு இல்லாமல் முன்னேற்றமோ, தீர்வோ இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார். புலிகளின் ஃபாசிச அணுகுமுறையை சுட்டிக் காட்டுகிறார்.

எதையும் சுயமாக சிந்தியுங்கள் என்று சொன்ன ஈ.வெ.ரா.வை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் அவரது raison d’etre-யே கேலிக்கூத்தாக்கிவிடுகிறார்கள். மார்க்ஸ் அப்படி முழுமையாக ஜோதியில் ஐக்கியமாகிவிடவில்லை. அதே நேரத்தில் ஈ.வெ.ரா. என்னதான் சொல்ல் வந்தார் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார். அதுதான் அவரது முக்கியத்துவம் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

பிடித்த கவிதை – அவரோ இல்லை, பூத்த முல்லை

கம்பராமாயணம் பற்றி எழுதும்போது கண்ணில் பட்டதால் மீள்பதிவு


அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னி
சூடிய எல்லாம் சிறுபசு முகையே
– குறுந்தொகை 221(உறையூர் முதுகொற்றனார்)

அவரோ வாரார் முல்லையும் பூத்தன‘ என்ற வரியை விட சிறந்த கவிதையை அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். இடையர்கள் பாதி மொட்டாகவே இருக்கும் முல்லையைச் சூடிக் கொண்டு செல்கிறார்கள் என்ற வரிகளும் பிரமாதம்தான். ஆனால் முதல் வரியே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த வரியில் தெரியும் ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் தனிமையையும் ஆற்றாமையையும் தாண்டி அடுத்த வரிக்குக் கூட போக முடியவில்லை. இடையர்களைப் பற்றிய வர்ணனை எத்தனைதான் பிரமாதமாக இருந்தாலும் அது எனக்கு ஆன்டி-க்ளைமாக்சாகத்தான் இருக்கிறது.

அவரோ வாரார். ஏன்? பணம் சம்பாதிக்க வெளியூருக்கு போயிருக்கிறானா, வசந்த காலம் பிறந்த பிறகும் வரவில்லையா? ஊடலா, இன்னும் வந்து சமாதானம் செய்யவில்லையா? இல்லை ஏதோ தற்செயலாக கொஞ்சம் தாமதம் ஆனதைக் கூட இவளால் தாங்க முடியவில்லையா, நை நை என்று நச்சரிக்கும் ஜாதியா? இல்லை விஷயம் கொஞ்சம் சீரியசா? இவளைக் கழற்றி விட்டுவிட்டானா படுபாவி? வேறு பெண் பின்னால் சுற்றுகிறானா? அவரோ வாரார், முல்லையும் பூத்தன, கண்டவனும் பூ வச்சுக்கிட்டு சுத்தறீங்க, எல்லாரும் நாசமாப் போங்கடா மயிராண்டிங்களா!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

2020க்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு வழங்கப்படுகிறது.

விஷ்ணுபுரம் விருது பெறுவது இன்றைய தமிழ் சூழலில் எழுத்தாளனுக்குப் பெரிய கௌரவம். தேர்வுக்குழுவினர் தங்கள் தேர்வுகளால் விருதுக்கும் கௌரவம் பெற்றுத் தருகிறார்கள் என்பதுதான் அதற்கு முக்கியக் காரணம்.

ஜெயமோகன் தனது seminal சிறுகதைகள் பட்டியலில் இவரது விரித்த கூந்தல் மற்றும் பிம்பங்கள் சிறுகதைகளை தேர்வு செய்திருக்கிறார். எஸ்ரா பட்டியலில் மறைந்து திரியும் கிழவன். பாவண்ணன் அவரது ஒரு சிறுகதையை – அலையும் சிறகுகள்இங்கே விலாவாரியாக அலசுகிறார்.

நான் இந்திரஜித்தின் எழுத்துக்களை படித்ததில்லை. விருது பற்றிய செய்தி தெரிந்ததும் அழியாச்சுடர்களில் தேடினேன். விரித்த கூந்தல், மறைந்து திரியும் கிழவன், சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் என்று மூன்று சிறுகதைகள் கிடைத்தன. இந்த மாதிரி magical realism எல்லாம் எனக்கு அபூர்வமாகவே செட்டாகிறது.

சில சமயம் அப்படித்தான். காஃப்காவின் Metamorphosis-உம், மௌனியின் சிறுகதைகளும் கூட எனக்கானவை அல்லதான். Metamorphosis-ஆவது பிறரை ஏன் ஈர்க்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. மௌனி இப்போதும் எப்போதும் ததிங்கிணத்தோம்தான். இந்திரஜித்தின் சிறுகதைகள் ஏன் ரசிக்கப்படுகின்றன என்று கொஞ்சம் புரிகிறது, எனக்கு அதுவே அதிகம்.

சில சமயங்களில் விருது பெறுபவர்கள் எனக்கான எழுத்தாளர்களாக இல்லை. தேவதேவன் போன்ற கவிஞர்களின் கற்பூர வாசனை எனக்கு இன்னும் எட்டவில்லைதான். இந்திரஜித்தும் எனக்கான எழுத்தாளர் இல்லையோ என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

கம்ப ராமாயணம் படிக்க

என் கல்லூரி நண்பன் கணேஷின் மகன் ஆதித்யன் கொஞ்சம் விசித்திரப் பேர்வழி. பதின்ம வயதில் கம்ப ராமாயணம், பாஞ்சாலி சபதம் என்று படிக்க விரும்புகிறான். கணேஷ் நல்ல உரை ஏதாவது இருந்தால் சொல்லு என்று என்னைக் கேட்டான். நானோ . இப்போதுதான் குறுந்தொகை, நற்றிணை என்று ஆரம்பித்திருக்கிறேன்.

சிலிகன் ஷெல்ஃப் தளத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பெரிய கொடை வாசகர்களின் நட்புதான். எனக்குத் ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் ஒரு பிரச்சினையுமில்லை, தெரிந்தவர்கள் நாலைந்து பேராவது இருப்பார்கள். உதாரணமாக நாஞ்சில் நாடன். அவர் கம்பராமாயணத்தை மும்பையில் ஒரு தமிழறிஞரிடம் பாடமாகப் படித்தவர். கம்பனின் அம்புறாத்தூணி என்று புத்தகமே எழுதியவர். ஜடாயு கற்பூர வாசனை தெரியாத எனக்கே கம்பராமாயணத்தில் கொஞ்சம் ஆர்வத்தை உருவாக்கியவர். விசு இரண்டு வருஷமாக கம்ப ராமாயணத்தை வரிவரியாகத் உரைகளின் உதவியோடு தானே படித்தவன். இவர்களிடம் கேட்டேன. விசு, ஜடாயுவிடம் கிடைத்த பதில்களை எல்லாருக்கும் பயன்படும் என்று ஒரு பதிவாகத் தொகுத்திருக்கிறேன்.

நாஞ்சில் ஒரு படி மேலேயே போய் என் நண்பனைக் கூப்பிட்டு 15 நிமிஷம் பேசி இருக்கிறார். மேன்மக்கள்! கணேஷும் ஆதித்யனும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

 • வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – விசு, ஜடாயு இருவரும் பரிந்துரைக்கும் புத்தகம்
 • கம்பன் கழகம் – அ.ச.ஞானசம்பந்தன் உரை இணையத்தில் கிடைக்கிறது – விசுவின் பரிந்துரை
 • இணையத்தில் இன்னொரு உரை (ஜடாயு)
 • ஜடாயு, ஹரிகிருஷ்ணன் இருவரும் உள்ள பெங்களூர் இலக்கிய அமர்வுகளின் வீடியோக்கள் – கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாஞ்சாலி சபதம்
 • பாஞ்சாலி சபதம், ஹரிகிருஷ்ணன் உரை

என் இளமைக்காலத்தில் தமிழகத்தில் கம்பனைப் பற்றி மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். காரைக்குடி கம்பன் கழகம் செயலாக இருந்தது. கவிதைகளில் ஆர்வமில்லாத நானே சா. கணேசன், மு.மு. இஸ்மாயில் என்று பலரும் கம்பன் பற்றி எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. கம்பன் கழகம் செயலாக இருந்ததும் கம்பன் விழா என்று ஒன்று நடந்ததும் மங்கலாக நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் அப்படி கம்பனில் ஊறித் திளைத்திருக்கும் தமிழறிஞர்கள் யாரும் இல்லையா?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

சிறுவர்களுக்கான புத்தகங்கள்

(மீள்பதிவு)

எனக்கு ஆறேழு வயது இருக்கும்போது என் அம்மா உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டாள். முதன்முதலாக நானே படித்த கதையில் ஒரு ஓநாய் பன்றிக்குட்டிகளை வாக் கூட்டிக்கொண்டு போகிறேனே என்று அம்மா பன்றியிடம் கேட்கும், அம்மா பன்றி போ போ என்று துரத்திவிடும். புத்தகம் பேர் நினைவில்லை.

நூலகம் பள்ளிக்கு அடுத்த கட்டிடம். பத்து நிமிஷம் இன்டர்வல் விட்டால் கூட நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். அங்கே ஒரு நூறு நூற்றைம்பது சிறுவர் புஸ்தகம் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் படித்தேன். அப்புறம் அம்மா கை காட்டியவற்றை படிக்க ஆரம்பித்தேன்.

என் வாழ்க்கையின் முதல் ஸ்டார் எழுத்தாளர் வாண்டு மாமாதான். அவருடைய கதைகள் எல்லாவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அதுவும் நூலகத்தில் இருந்த காட்டுச்சிறுவன் கந்தன் புத்தகம் எனது ஃபேவரிட். கந்தனின் சித்தப்பா ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டு கந்தனை விரட்டிவிட, கந்தன் காட்டில் வளர்வான். அங்கே அவனுக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கும். பல மிருகங்கள் அவனுக்கு உதவி செய்யும். சித்தப்பா செய்யும் கொடுமைகளை எதிர்ப்பதும், மக்களுக்கு உதவி செய்வதும்தான் கதை. இன்று கிடைத்தால் நாஸ்டால்ஜியாவுக்காகவே வாங்கி வைப்பேன்.

அப்புறம் கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போது வரும். அதற்கு அவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். அதை விரும்பிப் படித்தேன். பலே பாலு என்ற ஒரு காமிக்ஸ் சீரிஸ் வரும். படங்களும் கதையும் ரொம்பவே பிடிக்கும். அதில் வந்த மந்திரக் கம்பளம் என்ற புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.

வாண்டு மாமாவைப் பற்றி தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் ஒரு விவரமான பதிவு இருக்கிறது. (புகைப்படமும் அங்கே கிடைத்ததுதான்) அவர் எழுதிய எல்லா புத்தக விவரங்களும் அங்கே இருக்கின்றன.

அம்புலி மாமாவில் வரும் சித்திரங்கள் பிரமாதமாக இருக்கும். ஆனால் ஏனோ வாங்கியதில்லை. எப்போதாவது நண்பர்கள் வீட்டில் கிடைத்தால் படித்ததோடு சரி. ரத்னபாலா என்ற ஒரு பத்திரிகையும் நினைவிருக்கிறது.

வாண்டு மாமாவுக்கு அடுத்தபடியாக கல்வி கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் எழுதும் புத்தகங்கள் பிடித்திருந்தன. இன்னும் நினைவிருப்பது ஏதோ மருந்தைக் குடித்து மிகச்சிறு உருவம் ஆகிவிட்ட ஒரு சிறுவன் பற்றிய கதைதான். அறிவியலை அந்த சிறுவனுக்கு ஏற்படும் நிகழ்ச்சிகளை வைத்து சொல்லித் தருவார். டாக்டர் அப்பா மாற்று மருந்து கண்டுபிடிப்பதுடன் கதை முடியும்.

காட்டுச்சிறுவன் கந்தன் தவிர படித்த புத்தகங்களில் எனக்கு நன்றாக நினைவிருப்பது இரண்டுதான் – காவேரியின் அன்பு, ஆலம் விழுது. இரண்டுமே பூவண்ணன் எழுதியவை. காவேரி கொஞ்சம் கோரமான உருவம் படைத்த கோபக்கார டீனேஜ் சிறுவனின் மீது செலுத்தும் அன்பு அவனை மாற்றுவது என்று முதல் கதை. ஆலம்விழுதிலோ குடும்பத்தில் பற்றாக்குறை. குழந்தைகள் பட்ஜெட் போட்டு குடும்பத்தை சிறப்பாக நடத்துகிறார்கள். இது கன்னடத்தில் நம்ம மக்களு என்று சினிமாவாகவும் வந்தது. ((அதில் ஒரு நல்ல காட்சி – ஸ்கூலில் ராமாயணம் டிராமா. ராவணன் சீதையின் சுயம்வரத்துக்கு வருவான். தோளைத் தட்டி என்னை போல பலசாலி உண்டா என்று நாலு வரி பாடிவிட்டு பிறகு தெரியாத்தனமாக வில்லை எடுத்து உடைத்துவிடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் டீச்சர் திரை போட்டுவிட்டு பிறகு அது சும்மா முதல் ரவுண்ட், லுலுலாயி வில்தான், இதோ உண்மையான வில் என்று சமாளிப்பார்)

அதைத் தவிர முத்து காமிக்ஸ். இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ என்று மூன்று மனம் கவர்ந்த ஹீரோக்கள். அதுவும் மாயாவிதான் டாப். அப்புறம் பலர் – ரிப் கேர்பி, ஃ பாண்டம், மாண்ட்ரேக் – என்று வந்தாலும் இவர்கள் போல ஆகுமா?

சிறுவர்களுக்காக கவிதை எழுதியவர்களில் தூரன், அழ. வள்ளியப்பா இருவர் பேர்தான் நினைவிருக்கிறது. ( அழ. வள்ளியப்பா எழுதிய பர்மா ராணி என்ற புத்தகத்தையும் படித்திருக்கிறேன்.) ஆனால் ஒரு கவிதை கூட நினைவில்லை. நினைவிருக்கும் ஒரே சிறுவர் கவிதை – அதுவும் நாலடிதான் நினைவிருக்கிறது – எழுதியது யார் என்று தெரியவில்லை.

தினம் தினமும் காலையில் நீ பேப்பர் படிக்கிறே
அம்மா அதை தேடி எடுத்து தினம் தினமும் குப்பை அள்ளுறா
எனக்குக் கொடுத்த புத்த்கத்தில் தாளைக் கிழித்து
நான் இத்துனூண்டு கப்பல் செய்தா ஏனோ திட்டுறே!

என் பெண்களுக்காக பனிமனிதன் என்று ஜெயமோகன் எழுதிய ஒரு புத்தகத்தை சில வருஷம் முன்னால் வாங்கினேன். அவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது, அதனால் நான்தான் படித்து கதை சொன்னேன். அவர்களுக்கு இப்போது சுத்தமாக மறந்துவிட்டாலும் கதை கேட்கும்போது மிகுந்த ஆர்வத்தோடு கேட்டார்கள்.

என்ன ஒரு சோகம் பாருங்கள்! மிகுந்த ஆர்வத்தோடு படித்த நாட்கள். ஆனால் மூன்று நான்கு புத்தகங்கள், சில காமிக்ஸ் தவிர வேறு எதுவும் நினைவில் தங்கவில்லை.

ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சோகம் இன்னும் அதிகமாகிறது. நான் 13, 14 வயதில்தான் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடன் (Enid Blyton) எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து ஆரம்பித்தேன். இந்த மாதிரி புத்தகங்களை கடந்தாயிற்று என்று அப்போதே தெரிந்தது. இருந்தாலும் இங்கிலீஷ் புஸ்தகம், சீன் காட்டலாம் என்று ஒரு பத்து புத்தகம் படித்திருப்பேன். இந்த மாதிரி எல்லாம் தமிழில் புத்தகம் இல்லையே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இன்றும் Just So Stories மாதிரி ஒரு புத்தகத்தை என் பெண்களுக்கு படித்துக் காட்டும்போது குதுகலமாக இருக்கிறது. ரொவால்ட் டால் எழுதிய BFG புத்தகம் என் பெண்ணுக்கு லிடரேச்சர் கிளாசில் பாடம், அதைப் படித்துவிட்டு சின்ன வயதில் படிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்.Wind in the Willows, Peter Pan, Pinnochio, Treasure Island, Wizard of Oz, Narnia, Jungle Book, Hobbit, Lord of the Rings என்று பல புத்தகங்கள் இருக்கின்றன. தற்காலத்திலோ ஹாரி பாட்டர், ஆர்டமிஸ் ஃபவுல், ரிக் ரியோர்டான் எழுதும் கதைகள் என்று எக்கச்சக்கமாக இருக்கின்றன. தமிழில்?

அது சரி, பெரியவர்கள் புத்தகங்களே விற்பதில்லையாம், சிறுவர் புத்தகங்களை எழுதி எழுத்தாளன் எப்படி பிழைப்பது?

இன்றைய நிலை எனக்குத் தெரியாது. மாறி இருந்தால் சொல்லுங்கள், சந்தோஷமாக இருக்கும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய பதிவுகள்:
வாண்டு மாமா பற்றிய தமிழ் காமிக்ஸ் உலகம்
ஆன்லைனில் வாண்டு மாமாவின் “மந்திரக் கம்பளம்” கதை

சுதந்திரப் போராட்ட நாவல்கள்

மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்!

ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே!

கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை)
கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்)
கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி
கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்
கு. ராஜவேலு: 1942
கோவி. மணிசேகரன்: மறவர் குல மாணிக்கங்கள்
சாண்டில்யன்: புரட்சிப் பெண்
சி.சு. செல்லப்பா: சுதந்திர தாகம்
சிதம்பர சுப்ரமணியன்: மண்ணில் தெரியுது வானம்
சுஜாதா: ரத்தம் ஒரே நிறம்
நா.பா.: ஆத்மாவின் ராகங்கள்
ப. சிங்காரம்: கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி
ர.சு. நல்லபெருமாள்: கல்லுக்குள் ஈரம்

இவற்றில் ஊமையன் கோட்டை, கொங்குத் தங்கம், மகுடபதி, மறவர் குல மாணிக்கங்கள், புரட்சிப் பெண் ஆகியவற்றை தவிர்த்துவிடலாம். அலை ஓசை, தியாகபூமி, முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன், மண்ணில் தெரியுது வானம், கல்லுக்குள் ஈரம் எல்லாம் சுமார் ரகம். 1942, ஆத்மாவின் ராகங்கள், கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி, சுதந்திர தாகம் இவற்றை நான் படித்ததில்லை.

இத்தனைதான் ஞாபகம் இருக்கிறது. நிச்சயமாக இன்னும் வந்திருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

வண்ணநிலவன்

வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானது என் இருபத்து சொச்சம் வயதில் – கடல்புரத்தில் நாவல் மூலமாக. அன்று நாவல் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை அன்பு காட்டும் ஃபிலோமி போன்ற ஒரு பெண் கிடைப்பாளா என்று ஏக்கம் எழுந்தது. பல வருஷம் கழித்து மீண்டும் படித்தபோது எல்லாருக்கும் எப்போதும் பாசம் பொங்கி வழிந்து கொண்டே இருக்கிறது என்றால் கதாசிரியர் எந்த உலகத்தில் இருக்கிறார், அவர் கால் எப்போதுதான் மண்ணில் படப்போகிறது என்றுதான் தோன்றியது. எனக்கிருந்த பிம்பம் உடைந்துவிட்டாலும் கடல்புரத்தில் இலக்கியமே என்ற கணிப்பில் மாற்றமில்லை, என்ன மனதில் அது இரண்டாம், மூன்றாம் வரிசைக்குப் போய்விட்டது.

பிற்காலத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் உதவி ஆசிரியராக இருந்தார், துர்வாசர் என்ற பேரில் எழுதினார் என்று தெரிந்தது. அவள் அப்படித்தான் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் (திருத்திய  சுந்தரராமன் சிந்தாமணிக்கு நன்றி!) என்றும் தெரிந்தது. அவள் அப்படித்தான் நல்ல திரைப்படம், எழுபதுகளுக்கு அபாரமான திரைப்படம். இவை எல்லாம் அவருக்கு இருந்த கவர்ச்சியை அதிகப்படுத்தின.

ஆனால் அன்றும் இன்றும் அனேகமாக என்றும் உயர்ந்த இடத்தில் இருக்கும் சிறுகதை எஸ்தர்.பஞ்சம் பிழைக்க ஊரை விட்டு போகும் குடும்பம்; வயதான பாட்டியை என்ன செய்வது? கதையை மேலும் விவரித்து உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை, படிக்கவில்லை என்றால் அதிர்ஷ்டசாலிகள், படித்துக் கொள்ளுங்கள்!

ஆனால் பலரும் சிலாகிக்கும் மிருகம் சிறுகதை எனக்கு பெரிதாக அப்பீல் ஆகவில்லை. பஞ்சம் என்பதை நான் second-hand கூட அனுபவித்ததில்லை. அனுபவித்திருந்தால் ஒரு வேளை என் எண்ணம் மாறுமோ என்னவோ. ஆனால் நாயைக் கொல்ல முயலும் தருண சித்தரிப்பில், வீட்டுக்குள் ஒடுங்கி இருக்கும் சித்தரிப்பில் அவரது திறமை தெரிகிறது.

அதே போல பலாப்பழம் சிறுகதையையும் நான் பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு காலத்தில் கடைசி வரிகள் புரிய வேறு இல்லை, கணவன் மட்டும் பலாச்சுளையை சாப்பிட்டானோ என்றே தோன்றியது. இன்று படிக்கும்போது அந்த ஏக்கம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது, ஆனால் நிச்சயமாக என் டாப் தமிழ் சிறுகதைகளில் வராது.

துன்பக்கேணி சிறுகதையும் அப்படித்தான். கணவன் சிறையில் இருக்கும்போது கூலி கிடைக்குமே என்று சாராயம் கடத்த வரும் கர்ப்பிணிப் பெண்ணை சித்தரிக்கிறது. சாரதா சிறுகதையில் உலகம் அறியாத பெண் விபச்சாரக் கேஸில் மாட்டிக் கொள்ள ஒரு வேசி அவளை விடுவ்க்கிறாள். அவரது திறமை தெரிந்தாலும் ஒன்ற முடியவில்லை.

ஜெயமோகன் எஸ்தர், பலாப்பழம், மிருகம், துன்பக்கேணி ஆகிய சிறுகதைகளை தன் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்.ரா. பட்டியலில் எஸ்தர், பலாப்பழம், மிருகம் இடம் பெறுகின்றன.

வண்ணநிலவனின் சிறுகதைகள், நாவல்கள் அனேகமாக ஏழ்மை, அதிலும் ஐந்துக்கும் பத்துக்கும் – சில சமயம் உணவுக்கே – ஆலாகப் பறக்கும் ஏழ்மையைப் பின்புலமாக வைத்து அதில் அன்பையும் ஏழ்மையையும் சித்தரிக்கின்றன. சில சமயம் திகட்டிவிடுகிறது. அவர் இலக்கியம்தான் படைத்திருக்கிறார், ஆனால் என் கண்ணில் இரண்டாம், மூன்றாம் வரிசையில்தான் இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்