கம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு

ஜடாயுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். சிறந்த வாசகர், தமிழ் ஹிந்து தளத்தில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். (அவருடைய அரசியல் கண்ணோட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன்.)

ஊட்டியில் ஜெயமோகன் முன்னின்று நடத்திய காவிய முகாமில் கம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு பெரிய உரை நிகழ்த்தி இருக்கிறார். அவர் சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்தபோது இதுதான் சான்ஸ் என்று இங்கேயும் அவரை ஒரு நாள் கம்பன் கவிதைகள் பற்றி பேசுங்களேன் என்று சிலிகான் ஷெல்ஃப் குழுமம் சார்பில் கேட்டோம். அவரும் பிகு பண்ணிக் கொள்ளாமல் சம்மதித்தார். சுந்தர காண்டத்திலிருந்து ஒரு பதினைந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கினார்.

என்னதான் எனக்கு கவிதை அலர்ஜி என்றாலும் கவித்துவம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது என்ன என்று என்னால் வரையறுக்க முடிவதில்லை. நல்ல கவிதை என்றால் என்ன என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. சில விஷயங்களை கவிதையாக எழுதினால்தான் ரசிக்க முடிகிறது. அது என்ன விஷயம், எப்போது கவிதை தேவைப்படுகிறது, எப்போது கவிதை பிடிக்கிறது, எப்போது பிடிப்பதில்லை என்றெல்லாம் என்னால் வரையறுக்க முடிவதில்லை.

குகனொடும் ஐவரானோம் என்பதுதான் எனக்கு உயர்ந்த மானிட தரிசனம். அது கவிதையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன, உரைநடையாக இருந்தால் என்ன குடி முழுகிவிடும் என்று எனக்குப் புரிவதில்லை. அதனால்தானோ என்னவோ, ஒரு கவிதை எனக்குப் பிடிப்பது அபூர்வம். ஆயிரம் கவிதை படித்தால் ஒன்று பிடிக்கலாம். மிச்ச 999 கவிதைகளை ஏன் நிராகரிக்கிறேன் என்று articulate செய்யக் கூடத் தெரியவில்லை. ஒரு கவிதைக்காக ஆயிரம் கவிதை படிப்பது inefficient process ஆகத் தெரிகிறது. எல்லாரும் கம்பன் கம்பன் என்கிறார்களே, ஏதாவது புரிந்துவிடுமோ என்று கொஞ்சம் நப்பாசையோடு இந்த நிகழ்ச்சியை அணுகினேன்.

மேலும் எனக்கு கொஞ்சம் குதர்க்க புத்தி உண்டு. அடுத்தவர்கள், அதுவும் நண்பர்கள், ரசனை, பக்தி என்று பேசும்போது நான் கிண்டலாக ஏதாவது கமென்ட் அடித்துவிடுவேனோ என்று கொஞ்சம் தயக்கம் இருந்தது.

ஜடாயு

கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கை நின்று அகத்தின்!

என்று ஆரம்பித்தார். நயம் உள்ள கவிதை. சுழல் காற்றும் வெயிலும் மரணமும் புக முடியாத கோட்டைக்குள் அறம் எப்படிப் புகும் என்று ஹனுமான் நினைப்பதாக எழுதுவதில் கவித்துவம் இருப்பது எனக்கே தெரிகிறது. கதிரவன் ஒளி புகா என்பதை கோட்டையின் பெருமையாக சொல்வதைப் பார்த்ததும் என் குதர்க்க புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. இதை வெய்யிலை உணர்ந்த ஒருவன்தான் பெருமையாகச் சொல்ல முடியும். காஷ்மீரி பண்டிட்டோ, ஸ்வீடன் நாட்டுக்காரனோ சொல்ல முடியாது. 🙂

எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையிலும் இதே ஐடியா இருக்கிறது. இன்று போய் நாளை வா என்று ராமன் சொன்னதும் ராவணன்

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்

இன்னொரு கவிதை. கல்மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா நல்மருந்து (அரக்கியர் நடுவில் சீதையை ஒரு துளி தண்ணீரைக் கூட காணாத பாறையின் நடுவில் முளைத்திருக்கும் நல்ல மூலிகைச் செடிக்கு ஒப்பிடுகிறார்) என்ற உவமை அழகானது. ஆனால் வேறுள அங்கமும் மெலிந்தாள் என்பதில் கவித்துவம் கீழே போய்விடுகிறது. ஏதோ filler மாதிரி இருக்கிறது.

வன்மருங்குல் வாழ் அரக்கியர் நெருக்க அங்கிருந்தாள்
கல்மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல்மருந்து போல் நலன் அர உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்

பல கவிதைகள் சொல் நயத்துக்காக, சந்தத்துக்காக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று நினைக்கிறேன்.

தோள் ஆற்றல் என் ஆம்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்றல் கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே!

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தில்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள்; குளிர்ந்தனள் ; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள்; இது இன்னது எனல் ஆமே!

இந்த மாதிரி பாடல்களை சிவாஜி கணேசன் மாதிரி யாராவது ஒருவர் சிம்மக் குரலில் படித்தால் கேட்க நன்றாக இருக்கும்.

ஜடாயுவின் உரையில் நான் மிகவும் ரசித்த இடம் அந்த வாங்கினள் என்று ஆரம்பிக்கும் கவிதையையும்

ஒரு கணத்திரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
திருமுலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ நின்பால்
விரகம் என்பதனின் வந்த வெங்கொழுந்தீயில்
உருகியது; உடனே ஆறி வளைத்தது, குளிர்ப்பு உள் ஊற

என்ற கவிதையையும் லிங்க் செய்த இடம்தான்.

மத்துறு தயிர் என்பது இன்னொரு அழகான உவமை.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளும்
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை
எத்தனை உலா? அவை எண்ணும் ஈட்டவோ?

பொதுவாக பாட்டுகள் ஜடாயு விளக்குவதற்கு முன்பே ஒரு மாதிரி குன்சாகப் புரிந்துவிட்டது. எப்பவோ எழுதின பாட்டு கோனார் நோட்ஸ் இல்லாமல் இப்போதும் புரிவதில் இப்படி நீண்ட பாரம்பரியம் உள்ள தமிழ் என் தாய்மொழி என்று ஒரு சின்ன பெருமிதம், சந்தோஷம் உண்டானது.

சின்ன சாம்பிளை வைத்துக் கொண்டு கம்பன் பாடல்களைப் பற்றி தீர்ப்பு எழுதுவது முட்டாள்தனமே. ஆனால் இந்த உரையை வைத்து மட்டும் பார்த்தால் கம்பன் கவிதையை ரசிப்பது என்பது கொஞ்சம் elaborate விதிகள் உள்ள ஒரு விளையாட்டு போல இருக்கிறது. நல்ல உவமை வந்தால் உயர்ந்த கவிதை ஆகிவிடுகிறது, மேற்கோள் காட்டப்படுகிறது. காற்றும் ஒளியும் மரணமும் புகாத கோட்டையில் அறம் எப்படிப் புகும் என்று உயர்வு நவிற்சி அணியில் வியப்பது உயர்ந்த கவிதை ஆகிவிடுகிறது. சொல் நயம் இருந்தால் மேடைப் பேச்சில் உயர்த்திப் பேச முடிகிறது. உதாரணமாக:

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

இதுதான் கவிதையா? சொல் நயமோ அல்லது பொருள் நயமோ இருந்தால் அது உயர்ந்த கவிதையா? இதில் எனக்கு மீண்டும் மீண்டும் யோசிக்க என்ன இருக்கிறது? சொல் நயம், சந்தம் மட்டுமே உள்ளவற்றை மொழிபெயர்க்க முடியாது. தமிழனுக்கு மட்டும்தான் அது கவிதையாக இருக்க முடியும்.

பி.ஜி. வுட்ஹவுஸ் I was not disgruntled, but I was not exactly gruntled either என்று எழுதுவார். அருமையான வார்த்தை விளையாட்டு. அதை நான் உயர்ந்த எழுத்தாக நினைத்த காலம் உண்டு. இன்று தொந்தி சரிந்து மயிரே உதிர்ந்த பின்னும் அதை நினைத்தால் புன்னகைக்கிறேன். ஆனால் அதை பெரிய இலக்கியமாகக் கருதுவதில்லை.

மனித வாழ்க்கையின் தரிசனம் (Telephone Conversation கவிதையில் How Dark? என்று கேட்கும் இடம்), வாழ்க்கையின் அனுபவத்தை நாலு வரியில் காட்டுவது (குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்) இப்படி ஏதாவது இருந்தால்தான் எனக்கு அது உயர்ந்த கவிதை என்று தோன்றுகிறது.

ஜடாயுவின் உரையில் எனக்குக் கிடைத்த லாபம் இதுதான். கவிதையைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன், நல்ல கவிதையில் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கு இப்போதுதான் ஓரளவு புரிய ஆரம்பித்திருக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜி ஸ்ரீனிவாசன் எழுதுகிறார்:

சென்ற வெள்ளிக்கிழமை இரவு, ஆர்வி வீட்டில் ஜடாயு கம்ப ராமாயணத்திலிருந்து சில பாடல்களை வழங்கினார். இருபது பேர் வந்திருந்தனர். ஜடாயு எடுத்துக்கொண்டது சுந்தர காண்டத்திலிருந்து சில பாடல்கள். அருமையாக நடத்திச் சென்றார். ஒவ்வொரு பாடலையும் உரக்க வாசித்து, பொருள் விளக்கி, அதன் நுணுக்கங்களை சுட்டிக்காட்டி, விவாதித்து, அதை ஏன் தேர்ந்தெடுத்தேனென்றும் கூறினார். சில பாடல்களின் மூலமே கம்ப ராமாயணத்தின் பல சிறப்புகளையும் தொட்டுக் காட்டிட முடிந்தது. ஜடாயு மிகவும் confident ஆக, அதே நேரம் எல்லாருக்கும் புரியும் படியாகவும் பேசினார். கம்ப ராமாயணத்தைப் பற்றிய பொதுவான கருத்துக்களும், காளிதாசனின் கவிதைகளுடன் (ரகுவம்சம்) ஒப்பீடும் நன்றாக இருந்தன. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஜடாயுவுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பேசிய அத்தனை பாடலையும் இங்கே போடவில்லை. நீங்கள் கொடுத்த காகிதம் எல்லாம் எங்கே போயிற்றோ தெரியாது. முடிந்தால் அவற்றை ஈமெயிலில் அனுப்பினால் இங்கே ஒரு பிற்சேர்க்கையாகப் பதித்துவிடுகிறேன்.
ஜடாயுவின் உதவியால் பாடல்களை ஒரு அனுபந்தமாகப் பதித்திருக்கிறேன்.

அனுபந்தம் 1 – ஜடாயு தேர்ந்தெடுத்த எல்லா கவிதைகளும்

கம்பராமாயணம்: சுந்தர காண்டம் – சில பாடல்கள்

இலங்கை மாநகர மதிளைக் கண்டு அனுமன் வியத்தல்
கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே;
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது, இந்த அணி மதிள் கிடக்கை நின்று அகத்தின். (1)

இராவணன் அரண்மனையில் உறங்கும் இயக்க மகளிர்
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். (2)

உறங்கும் இராவணைக் கண்டு அனுமன் எண்ணம்
தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்றல் கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே. (3)
(ஊர்தேடு படலம்)

அசோகவனத்தில் சீதையின் நிலை
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளிவரக் காணா
நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். (4)

சீதையின் தூய்மையை அனுமன் வியத்தல்
பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மை போல்
நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றிலன், அவன் கமலக் கண்களால்! (6)

இராவணன் சீதையை இரத்தல்
இன்று இறந்தன; நாளை இறந்தன;
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ – குழை
சென்று, இரங்கி மறம் தரு செங்கணாய்! (7)
(காட்சிப் படலம்)

கணையாழியைக் கண்ட சீதை நிலை
வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? (8)

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! (9)
(உருக்காட்டு படலம்)

அனுமனிடம் சீதை கூறியது
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். (10)

ஆரம் தாழ் திருமாற்பற்கு அமைந்ததோர்
தாரம் தான் அலளேனும், தயா எனும்
ஈரம் தான் அகத்து இல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலை வேண்டென்று வேண்டுவாய். (11)

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய். (12)

அனுமன் சீதையைத் தேற்றுதல்
மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? (13)
(சூடாமணிப் படலம்)

இராவணன் அரசவையில் வீற்றிருக்கும் காட்சி
நரம்பு கண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில்
நிரம்பு சில்லரிப் பாணியும், குறடும் நின்று இசைப்ப,
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
வரம்பு இல் இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க.. (14)
(பிணி வீட்டு படலம்)

சீதையைக் கண்டதை அனுமன் இராமனிடம் கூறுதல்
ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
திருமுலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ நின்பால்
விரகம் என்பதனின் வந்த வெங் கொழுந் தீயில் வெந்து
உருகியது; உடனே ஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற. (15)
(திருவடி தொழுத படலம்)

அனுபந்தம் 2 – மேற்கோள் காட்டப்பட்ட எனக்குப் பிடித்த கவிதைகள்

A Telephone Conversation by Wole Soyinka

The price seemed reasonable, location
Indifferent. The landlady swore she lived
Off premises. Nothing remained
But self-confession. “Madame,” I warned,
“I hate a wasted journey—I am African.”
Silence. Silenced transmission of
Pressurized good breeding. Voice, when it came,
Lipstick coated, long gold-rolled
Cigarette-holder pipped. Caught I was, foully.
“HOW DARK?”… I had not misheard… “ARE YOU LIGHT
OR VERY DARK?” Button B. Button A. Stench
Of rancid breath of public hide-and-speak.
Red booth. Red pillar box. Red double-tiered
Omnibus squelching tar. It was real! Shamed
By ill-mannered silence, surrender
Pushed dumbfoundment to beg simplification.
Considerate she was, varying the emphasis —
“ARE YOU DARK? OR VERY LIGHT?” Revelation came.
“You mean — like plain or milk chocolate?”
Her assent was clinical, crushing in its light
Impersonality. Rapidly, wave-length adjusted,
I chose. “West African Sepia” — and as afterthought,
“Down in my passport.” Silence for spectroscopic
Flight of fancy, till truthfulness clanged her accent
Hard on the mouthpiece. “WHAT’S THAT?” conceding
“DON’T KNOW WHAT THAT IS.” “Like brunette.”
“THAT’S DARK, ISN’T IT?” “Not altogether.
Facially, I am brunette, but madam, you should see
The rest of me. Palm of my hand, soles of my feet
Are a peroxide blonde. Friction, caused —
Foolishly madam — by sitting down, has turned
My bottom raven black — One moment madam!” — sensing
Her receiver rearing on the thunderclap
About my ears — “Madam,” I pleaded, “wouldn’t you rather
See for yourself?”

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
      – பாண்டியன் அறிவுடை நம்பி

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
எனக்குப் பிடித்த சில கவிதைகள்
ஜடாயு கட்டுரைகள்

8 thoughts on “கம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு

  1. கம்பனுக்கு மிக நல்ல அறிமுகம், மிக்க நன்றி.

    ஆனால்,

    // சொல் நயமோ அல்லது பொருள் நயமோ இருந்தால் அது உயர்ந்த கவிதையா? இதில் எனக்கு மீண்டும் மீண்டும் யோசிக்க என்ன இருக்கிறது? சொல் நயம், சந்தம் மட்டுமே உள்ளவற்றை மொழிபெயர்க்க முடியாது. தமிழனுக்கு மட்டும்தான் அது கவிதையாக இருக்க முடியும்.//

    என்ற தடாலடியைத் தவிர்த்திருக்கலாம்.

    Robert Frost, “Poetry is what gets lost in translation,” என்று சொல்கிறாரே, அதற்கென்ன சொல்ல? இத்தனைக்கும் நானறிந்தவரை அவர் தமிழரல்ல, ஆனால் வேற்று மொழியில் மட்டுமல்ல, தன் மொழியிலும் மொழியப்பட முடியாததுதான், மொழிகையில் தொலைவதுதான் கவிதை என்று அவர் நம்புகிறார்!

    நல்ல கவிதை என்பது எத்தனை பேசினாலும் அதற்கு வெளியே இன்னும் கொஞ்சம் மர்மத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு நிற்கும் – அது நம் உள்ளத்தின் உணர்வெழுச்சியால் தன்னைப் புலப்படுத்திக் கொள்கிறது. தமிழார்வம் உள்ளவர்களுக்கு, அதன் ஓசை நயத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு, நீங்கள் சுட்டிக்காட்டிய கவிதை எத்தனை பேசினாலும் அலுக்காத உணர்வெழுசசியைத் தருவதாக இருக்கலாமல்லவா?

    நமது அனுபவங்களின் அடிப்படையில் நாம் சில விழுமியங்களை உருவாக்கிக் கொள்கிறோம், அது போலவே நமது வாசிப்பின் அடிப்படையில் நம் ரசனை உருவாகிறது- இது போல்தானே அனைவரும்?

    Like

  2. //இதுதான் கவிதையா? சொல் நயமோ அல்லது பொருள் நயமோ இருந்தால் அது உயர்ந்த கவிதையா? //

    நீங்கள் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் இணையத்திலும், உங்கள் ஊர் ’தென்றல்’ போன்ற இதழ்களிலும் எழுதுவதைப் படித்ததில்லையா?

    //நல்ல உவமை வந்தால் உயர்ந்த கவிதை ஆகிவிடுகிறது//

    இந்த விதி எல்லா கவிதைகளுக்கும் பொருந்தாது. அப்புறம் மீசையைக் கவிழ்த்துப் போட்டதெல்லாம் நல்ல உவமை என்று ஆகி விடும்.

    // எப்பவோ எழுதின பாட்டு கோனார் நோட்ஸ் இல்லாமல் இப்போதும் புரிவதில் இப்படி நீண்ட பாரம்பரியம் உள்ள தமிழ் என் தாய்மொழி என்று ஒரு சின்ன பெருமிதம், சந்தோஷம் //

    கம்பராமாயணம் இப்படி அனுபவித்துப் படிக்க வேண்டிய ஒன்றுதான்.

    சொல்நயம், பொருள் நயம், உவமை, உருவக நயங்கள், அக்காலத்துப் புலவர்கள் யாருக்கும் தோன்றாத கற்பனைகள், என்றைக்கும் வியக்க வைக்கும் சொல்லாட்சிகள் என்று கம்ப ராமாயணம் ஒரு பொக்கிஷம்.

    கண்ணதாசன் தனது மொழி ஆளுமைக்கு கம்பராமாயணத்தை முழுமையாகப் படித்ததும் ஒரு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

    கம்பனை ஆழ்ந்து படித்தால் நீங்களும் ஒரு கவி ஆகி விடுவீர்கள். இது திண்ணம். கவிஞர் ஆர்வி… கேட்கவே இனிமையாக இருக்கிறது. 🙂

    Like

  3. //இந்த மாதிரி பாடல்களை சிவாஜி கணேசன் மாதிரி யாராவது ஒருவர் சிம்மக் குரலில் படித்தால் கேட்க நன்றாக இருக்கும்.//

    சிவாஜி கணேசனுக்கு அடுத்தவர் எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசத்தான் தெரியும்! கவிதை??

    ஆர்வி! ஏனிந்தக் கொலைவெறி அல்லது கெட்ட எண்ணம்? ஜெமோ பித்து அதிகமானாலே இப்படித்தான் தப்புத்தப்பாய்த் தோன்றுமோ?

    Like

  4. பதிவுக்கு மிக்க நன்றி ஆர்.வி.

    கம்பராமாயணம் போன்ற மாபெரும் பழைய நூல்களைப் படிக்கும் போது ஒருவித காப்பியச் சோர்வு (Epic fatigue!) உண்டாவது இயல்பே, அதன் அளவே (12,000 பாடல்கள்!) பயமுறுத்தக் கூடியது .. அதை மீறிச் சென்று காவியத்துக்கு உள் நுழைந்து ரசிப்பதற்கு பயிற்சி தேவைப் படுகிறது. ஆயிரம் ஆண்டு பழைய காவியத்திற்கும் நமக்கும் உள்ள காலம், மொழி, இன்னபிற பல இடைவெளிகளையும் தாண்டி, நாம் அதை இன்று வாசித்து, பேச முடிகிறது என்பதே ஒரு பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். உலகின் எத்தனை மொழிகளில் இன்று இது சாத்தியம்?

    //இந்த மாதிரி பாடல்களை சிவாஜி கணேசன் மாதிரி யாராவது ஒருவர் சிம்மக் குரலில் படித்தால் கேட்க நன்றாக இருக்கும்.//

    துரதிர்ஷ்டவசமாக, கம்பனைப் பற்றி பொதுவான அறிமுகம் பலருக்கும் மேடைப் பேச்சு வழியாகவே ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான பேச்சாளர்கள் “*க*ம்*ப*ன்* என்ன சொல்கிறான் *எ*ன்*றா*ல்*…” என்று மேசையைக் குத்திக் கொண்டே அடித்தொண்டையில் கத்தும் ரகம். மென்மையான காதல் உணர்வுகள் கொண்ட கம்பராமாயணப் பாடல்களைக் கூட சிம்மகர்ஜனை போலவே முழங்குபவர்கள் இவர்கள் :)) அதனால் உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

    பொதுவாக நான் வாசிக்கும்போது, குறிப்பிட்ட பாடலை அதில் உள்ள உணர்ச்சி நிலைக்கு ஏற்ப tone, modulation கொடுத்தே வாசிப்பது வழக்கம்.

    Like

  5. ஜடாயு, நன்றி எல்லாம் நாங்கள்தான் சொல்ல வேண்டும்.
    காப்பியச் சோர்வு என்றெல்லாம் இல்லை. எனக்கு கவிதையில் இன்னும் ஏதோ தேவைப்படுகிறது (என்று நினைக்கிறேன்) // ஆயிரம் ஆண்டு பழைய காவியத்திற்கும் நமக்கும் உள்ள காலம், மொழி, இன்னபிற பல இடைவெளிகளையும் தாண்டி, நாம் அதை இன்று வாசித்து, பேச முடிகிறது என்பதே ஒரு பெரிய விஷயம் // உண்மைதான், எனக்கும் கொஞ்சம் பெருமிதம்தான். ஆனால் அந்த பெருமித உணர்வுக்கும் நல்ல இலக்கியமா இல்லையா என்ற முடிவெடுப்பதற்கும் தொடர்பில்லை – என்னைப் பொறுத்த வரை. // பொதுவாக நான் வாசிக்கும்போது, குறிப்பிட்ட பாடலை அதில் உள்ள உணர்ச்சி நிலைக்கு ஏற்ப tone, modulation கொடுத்தே வாசிப்பது வழக்கம். // ஆம், இதை நான்தான் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

    பாஸ்கர், // தடாலடியைத் தவிர்த்திருக்கலாம். // எனக்குத் தெரிந்த கற்பூர வாசனை அவ்வளவுதான். 🙂

    // Robert Frost, “Poetry is what gets lost in translation,” என்று சொல்கிறாரே, // எனக்கென்னவோ மொழி என்ற எல்லையைத் தாண்டி நிற்பதே நல்ல இலக்கியம் என்று தோன்றுகிறது. இதில் கவிதைக்கு மட்டும் விதிவிலக்கு தருவதில் எனக்கு இசைவில்லை.

    ரமணன், // கம்பனை ஆழ்ந்து படித்தால் நீங்களும் ஒரு கவி ஆகி விடுவீர்கள். // இப்பவே ஏ குரங்கே(கவி) என்றுதான் சில சமயம் கூப்பிடுகிறார்கள். 🙂 ஹேமா சொல்வது போல ஏன் இந்த கொலவெறி?

    கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜடாயு, சிவாஜி கணேசன் போல சிறந்த தமிழ் உச்சரிப்பு உள்ளவர்கள் குறைவு என்று நான் கருதுகிறேன்.

    Like

  6. செய்யுட்களின் தொகுப்பு படிக்க ரஸமாக இருந்தது. வ்யாக்யானமும் ரஸமாக இருந்திருக்கும். பதிவு செய்திருக்கலாமே.

    வால்மீகி ராமாயணமோ துளசி ராமாயணமோ நவாஹமாக பாரயணம் செய்கிறார்கள். இந்த ராமாயணங்களில் உள்ள இலக்கிய ரஸங்களைப் பற்றிய ப்ரசங்கங்களைக் அபூர்வமாகவே கேட்டதுண்டு. கம்பராமாயணமும் க்ரமபாராயண வழக்கில் உண்டா தெரியவில்லை.

    \\\\\\\\\ கதிரவன் ஒளி புகா என்பதை கோட்டையின் பெருமையாக சொல்வதைப் பார்த்ததும் என் குதர்க்க புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. இதை வெய்யிலை உணர்ந்த ஒருவன்தான் பெருமையாகச் சொல்ல முடியும். காஷ்மீரி பண்டிட்டோ, ஸ்வீடன் நாட்டுக்காரனோ சொல்ல முடியாது. \\\\\\\\\

    ம்……ஒரு இருபது முப்பது வருஷம் முன்னர் என்றால் காஷ்மீர பண்டிதர்கள் பற்றி நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம். இன்று அல்ல. இன்று காஷ்மீர பண்டிதர்கள் இருப்பது வேறு வழியில்லாது ஜம்முவிலோ அல்லது தில்லியிலோ. ஆக காஷ்மீர பண்டிதர்கள் வெய்யிலின் அருமையை உணர்வது என்பதை விட இன்று உணர்வதெல்லாம் ஜம்மு மற்றும் தில்லியின் வெய்யிலின் கொடுமை என்றால் மிகையாகாது.

    காஷ்மீரின் பல பகுதிகளில் ஐந்து வருஷங்களில் வேலை செய்ததில் ஸ்ரீ நகர் உட்பட வெய்யில் காலத்தில் சுள்ளென்ற வெய்யிலை அனுபவித்ததையும் மறக்க இயலாது. கர்கில் ( நம் வழக்கில் கார்கில்) மற்றும் லே யில் கூட பத்து அடி பனிப்பொழிவு இருக்கும் போது கூட கடும் ultra violet rays மூலம் பாதிப்பு ஏற்படுத்தவல்ல சுள்ளென்ற வெய்யில் அடிக்குமே! கண்களைக் கூச வைக்கும் சூரிய ப்ரகாசத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க கருப்பு கண்ணாடி அணியவும் வேண்டுமே! கடும் பனிப்பொழின் ஊடேயும் உணரமுடிந்த வெய்யிலின் வெம்மையும் கண்ணைக்கூசும் ஒளியும் உண்டே!

    Like

  7. கிருஷ்ணகுமார், // கடும் பனிப்பொழின் ஊடேயும் உணரமுடிந்த வெய்யிலின் வெம்மையும் கண்ணைக்கூசும் ஒளியும் உண்டே! // உண்மைதான்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.