ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதை சீரிஸ்

சில வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும், ஓரளவு அந்த வேலைகள் நிறைவேறும்வரை இணையம் போன்ற distraction-களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் இந்த பதிவை எழுதாமல் இருக்க முடியவில்லை.

ஜெயமோகனின் சமீபத்திய நிஜ மனிதர்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதை சீரிசை விரும்பிப் படித்தேன். தினமும் காலை பதினோரு மணி வாக்கில் எப்படா தளம் அப்டேட் ஆகும் என்று காத்திருப்பேன். கதை வந்தால் ஒரே மூச்சில் படித்துவிடுவேன். (பெருவலி தவிர – அந்தக் கதை வந்தபோது எனக்கும் முதுகுவலி. கதையும் முதுகுவலி என்று ஆரம்பித்ததும் சரி இந்த கதையை மட்டும் நாலு நாள் கழித்துப் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்துவிட்டேன்.) பல கதைகளில் கண் கலங்கியது. கதையைப் படித்து அழுதெல்லாம் பல காலம் ஆகிவிட்டது, புண்யாத்மா எத்தனை பேரை அழ வைத்தாரோ தெரியவில்லை. 🙂

எத்தனையோ பிரச்சினை; குடும்பம், வேலை, பணம், சாப்பாடு, தூக்கம், commute என்று ஒரு முடிவில்லாத வட்டத்தில் (infinite loop) ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை மும்முரத்தில் நாம் மேன்மை சாத்தியம் என்பதையே மறந்துவிடுகிறோம். துனியா க நாரா ஜமே ரஹோ என்று கிளம்பிவிடுகிறோம். டி.எஸ். எலியட் சொன்ன மாதிரி – Here we go round the prickly pear at five o’clock in the morning – அறத்துக்கும் மேன்மைக்கும் ஏது நேரம்? திரும்பிப் பார்த்தால் தொந்தி சரிந்து மயிரே வெளிர்ந்து (என் கேசில் உதிர்ந்து) காலம் ஓடிவிட்டிருக்கிறது.

இந்தக் கதைகளிலிருந்து நான் பெற்றது ஒன்றுதான் – மனிதனுக்கு மேன்மை, அறம், லட்சியவாதம் எல்லாம் சாத்தியமே. எல்லாரும் காந்தி, புத்தன், ராமனுஜன் ஆக முடியாது, அந்த மாதிரி கோடியில் ஒருவர்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் வேண்டாம். நூற்றில் ஒருவராக இருக்கலாம் – முயற்சியாவது செய்யலாம். உண்மை மனிதர்களை மூலமாக வைத்து பாத்திரங்களைப் படைத்து, “small scale” லட்சியவாதிகளை காட்டி, விதவிதமான லட்சியவாதிகளை காட்டி இதைத்தான் சொல்கிறார். என்னால் என்றும் காந்தியாக ஆகமுடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் பணம் போனால் மயிரே போச்சு என்று எண்ணும் கோட்டிக்கார பூமேடையாக இருக்கலாம். முடியாதா, அநீதிக்கு தலை வணங்காத கறுத்தான் நாடாராக இருக்க முயற்சிக்கலாம். முடியாதா, அநீதிகளை அலட்சியம் செய்து தன் தொழிலில் நிறைவு காணும் யானை டாக்டராக இருக்கலாம்; பெருவலியைத் தாண்டி பத்திரிகை நடத்தும் கோமலாக இருக்கலாம். நடக்காதா, மாணவர்களே வாழ்க்கை என்று இருக்கும் பேராசிரியராக இருக்கலாம், பலனை எதிர்பாராத கெத்தேல் சாஹிபாக இருக்கலாம், அட ஒன்றும் வேண்டாம், ஏமாற்றக் கூடாது என்று நினைக்கும் ஆச்சியாக இருக்க முடியாதா?

ஆயிரம் தவறு செய்தாலும், எத்தனை வயது ஆகி இருந்தாலும், மேன்மை இன்னும் சாத்தியமே. தளராதீர்கள் என்று இந்தக் கதைகள் எனக்கு சொல்கின்றன. நன்றி, ஜெயமோகன்!

இனி கதைகளைப் பற்றி:
பொதுவாக எல்லா கதைகளிலும் பாத்திரங்கள் மிக நன்றாக படைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கோட்டி கதையின் பூமேடை, அறம் கதையின் ஆச்சி மற்றும் எழுத்தாளர், மத்துறுதயிர் கதையின் பேராசிரியர் மற்றும் குமார், வணங்கான் கதையின் கறுத்தான் நாடார் மற்றும் நேசமணி, யானை டாக்டர் கே, நூறு நாற்காலிகள் கதையின் தர்மா மற்றும் அம்மா ஆகியவை superb!

எல்லாமே படிக்க வேண்டிய கதைகள்தான். என்றாலும் கருத்து, வடிவம் எல்லாமே கச்சிதமாக அமைந்திருப்பது அறம், வணங்கான், யானை டாக்டர் ஆகியவற்றில்தான் என்றே கருதுகிறேன். ஜெயமோகனுக்கும் யானைக்கும் ஏதோ ஒரு ராசி உண்டு. வணங்கான், யானை டாக்டர் இரண்டிலும் உச்சக்கட்டம் யானையோடு நிகழ்வது தற்செயல் இல்லை. 🙂

பூமேடையின் பாத்திரப் படைப்பு, நூறு நாற்காலிகள் தர்மாவின் நாயாடி பின்புலத்தால் அவன் படும் சித்திரவதையின் விவரிப்பு ஆகியவை அவற்றை உயர்த்துகிறது.

Inspiring கதைகள் என்று நான் கருதுவது சோற்றுக்கணக்கு, வணங்கான், யானை டாக்டர், மெல்லிய நூல் ஆகியவை.

சிறப்பான தரிசனம் உள்ளவை என்று நான் கருதுவது மயில்கழுத்து, மெல்லிய நூல், யானை டாக்டர். மயில்கழுத்தில் அழகுக்கான தேடலும், அந்த தேடல் தரும் துயரமும் இல்லாவிட்டால் தான் இல்லை என்று சொல்வது மனித வாழ்க்கையின் சாரத்தையே சுருக்கமாக சொல்கிறது. புதுமைப்பித்தனின் ஒரு கதையில் (கதை பேர் என்ன?) மனிதன் கடவுளை புறக்கணித்து இரும்பை ஊத ஆரம்பிக்கும் ஒரு இடத்தை நினைவுபடுத்தியது. இன்னொரு விதத்தில் மணிக் பந்தோபாத்யாய் எழுதிய ப்ரொகொதிஹாசிக் (Primeval) என்ற கதையை நினைவுபடுத்தியது. மெல்லிய நூல் சமரசங்களைப் பற்றி சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். மிகவும் சிம்பிளான கருத்து, நடைமுறைப்படுத்துவதுதான் உலகமகா கஷ்டமாக இருக்கிறது. யானை டாக்டரில் யானைகள் டாக்டரை உரிமையோடு அணுகக்கூடிய நண்பராக ஏற்கும் உச்சக்கட்டம், எல்லாம் ஒன்றுதான் என்று உணர்த்தும் இடம் மிக அற்புதமானது.

என்னை சிந்திக்க வைத்த கதை ஓலைச்சிலுவை. டாக்டர் சாமர்வெலின் சேவை மகத்தானது. ஆனால் பிணத்தை புதைக்க வேண்டுமென்றால் கூட அதை கிருஸ்துவப் பிணமாக மாற்றித்தான் புதைக்க வேண்டும் என்று நினைப்பதில், இல்லை அப்படி நினைக்கும் லண்டன் மிஷனை ஏற்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. குழந்தைகளோடு சாகப் போகிறவளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என்ற நிலையைப் பற்றி அவரிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஒரு superiority complex – காட்டுமிராண்டி கும்பலை கடைத்தேற்ற வந்தவர் என்ற நிலையில்தான் இருக்கிறார் என்று தோன்றியது. அவரது சேவை இந்த அணுகுமுறையை மறைக்கக்கூடாது. அவரும் அவர் காட்டும் ஏசுவும் சோற்றுக்கணக்கு பார்ப்பவர்கள். அவருடைய மனமாற்றம் சுட்டப்படுகிறது (அவர் மெல்ல மெல்ல இந்தியராக மாறிக்கொண்டே இருப்பது), ஆனாலும் அது இன்னும் விவரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சாமர்வெல் என்ற உண்மை மனிதரின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தது, அவர் மதமாற்ற முயற்சிகளையே கடைசி வருஷங்களில் நிறுத்தினார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா தெரியாது. அப்படி இல்லை என்றால் ஒரு எழுத்தாளர் இவ்வளவுதான் அவரது மாற்றத்தைப் பற்றி சொல்ல முடியும் என்பதையும் உணர்கிறேன்.

என்னுடைய டாப் மூன்று கதைகள் – வணங்கான், அறம், யானை டாக்டர்

அத்தனை கதைகளிலும் சிறந்த வரி“இல்ல, போன மாசம் பணம் கெட்டி மாத்தியாச்சு. இப்பம் தோட்டியாக்கும்’ (கோட்டி)

என்னை மிகவும் inspire செய்த வரிகள்“சமரசங்களில் வெல்வது நமது பலவீனம். சமரசங்களுக்குப் பிறகு நாம் கோபமும் துவேஷமும் கொண்டவர்களாகிறோம். வன்முறை அவ்வுணர்வுகளின் வெளிப்பாடுதான். பிறர் மீது மட்டுமல்ல, நம் மீதே அவ்வன்முறை திரும்புகிறது.” (மெல்லிய நூல்)

நான் கண்ட குறைகள்:
பத்திரிகைகளுக்கு எழுதுவதில் ஒரு லாபம் உண்டு. யாராவது ப்ரூஃப் பார்ப்பார்கள். இணையத்தில் தானே ராஜா தானே மந்திரி. இதனால் சில பிழைகள் தப்பிவிடுகின்றன. அவை typo-க்களாக இருக்கலாம். (உலகம் யாவையும் கதையில் ஓம் என்பது ஆங்கிலத்தில் ohm என்று எழுதப்பட்டிருக்கிறது) வார்த்தைப் பிழைகளாக இருக்கலாம். (அதே கதையில் “நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்பருவத்தில் இருந்தார்.” என்பது “நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்புழுப் பருவத்தில் இருந்தார்.” என்று இருக்க வேண்டும். அறம் கதையில் முதலில் செட்டியார் 25000 ரூபாய் தரவேண்டும் என்று எழுதி இருந்தார், அதை ஐம்பதுகளுக்கு பொருத்தமாக மூவாயிரம் என்று திருத்தினார். ஆனால் பியூனின் சம்பளம் நூறு ரூபாய் என்று எழுதி இருந்ததை மாற்ற மறந்துவிட்டார். சில இடங்களில் வட்டார வழக்கு சரியாக இல்லை. (பிராமண வழக்கில் கழுவி-அலம்பி, அத்தை-அம்மா பற்றி நானே அவரிடம் குறை சொன்னேன், அவரும் அதற்கு பதில் சொன்னார். இருந்தாலும் நான் convince ஆகவில்லை. 🙂 ) ஜெயமோகன் எங்கோ பிராமண மொழி அழிந்துகொண்டிருக்கிறது, அதைத்தான் தன் கதைகளில் பிரதிபலித்திருக்கிறேன் என்று விளக்கம் சொன்னார். அவர் ஐம்பதுகளில் அமைத்திருக்கும் தாயார் பாதம், மயில் கழுத்து கதைகளுக்கு அந்த விளக்கம் பொருந்தாது, இன்றைக்கு நடப்பதாக ஒரு கதை எழுதினால்தான் அந்த விளக்கத்தைத் ஏற்றுக் கொள்ள முடியும்.
இந்த குறைகள் எல்லாம் ப்ரூஃப் பார்ப்பவர் அளவில் உள்ள குறைகளே. பெரிய விஷயம் இல்லை. nitpicking-தான். இருந்தாலும் இவையும் இருக்கக்கூடாது என்றுதான் விரும்புகிறேன்.

உண்மை, பிரபல மனிதர்களை வைத்து எழுதப்படும் கதைகளில் ஒரு பிரச்சினை உண்டு. பாத்திரத்துக்கும் உண்மை மனிதரை எவ்வளவு தூரம் பிரதிபலிக்க வேண்டும்? எழுத்தாளருக்கு poetic license என்பது எவ்வளவு உண்டு? கோமல் எட்டடி உயரம் என்று எழுத முடியாது. ஆனால் கோமலுக்கு பூண்டு ரசம் உண்மையில் பிடிக்குமோ பிடிக்காதோ, பிடிக்கும் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். அதாவது யாராலும் ஆதாரங்களோடு மறுக்க முடியாத மாதிரி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கதை என்று வந்துவிட்டால் அவர்கள் கதாபாத்திரங்களே, உண்மை மனிதர்கள் இல்லை. கோமலுக்கும் ஜெயமோகனுக்கும் நடுவே நெருங்கிய நட்பு இல்லை, ஆனால் ஒரு bond இருந்தது, அதனால் ஜெயமோகனிடம் (மட்டும்) அவர் தன் தரிசனத்தை பகிரிந்துகொண்டார் என்பது நிஜ வாழ்க்கையில் உண்மையாக இருக்கலாம். அந்த bond-ஐ படிப்பவர்கள் யூகத்துக்கு விட்டுவிடக்கூடாது, அதை கதையில் விளக்கியாக வேண்டும். இல்லாவிட்டால் கதையின் நம்பகத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். என் கருத்தில் இதை ஜெயமோகனே புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டப்படுகிறார். கதையின் நம்பகத்தன்மை குறைவு என்று நான் சொன்னதை ஏறக்குறைய தனது நம்பகத்தன்மை குறைவு, தான் பீலா விடுகிறேன் என்று நான் சொன்னதாக புரிந்துகொண்டு எனக்கு பதில் அளித்திருந்தார்.

பல கதைகளை என்னால் யூகிக்க முடிந்தது. சோற்றுக்கணக்கு கதையில் ராமலக்ஷ்மி என்று வந்ததும் சரி இவன் ராமலக்ஷ்மியைத்தான் மணக்கப் போகிறான் என்று புரிந்துகொள்ள முடிந்தது. தாயார் பாதத்தில் அலம்பி விட்டுக்கொண்டே இருக்கும் பாட்டி என்று படித்ததும் எப்போதோ தாத்தா சாக்கடையில் தள்ளி இருப்பார் என்று யூகிக்க முடிந்தது. யானை டாக்டர் அந்த யானையில் காலிலிருந்து பியர் புட்டியை எடுத்ததும் Androcles and the lion மாதிரி யானை மீண்டும் இவரை சந்தித்து இவரை அடையாளம் கண்டு இவருக்கு உதவி செய்யும் இல்லை கேட்கும் என்று தெரிந்தது. உலகம் யாவையும் கதையில் கொஞ்ச தூரம் போனதும் சரி டேவிஸ் அடுத்த லெவலுக்கு – ஒரே பிரபஞ்சம் – என்று சொல்லப்போவதுதான் தரிசனம் என்று தெரிந்தது. சில சமயம் கதை எப்படிப் போகும் என்று தெரிந்தாலும் (அறம் நிகழ்ச்சியை ஜெயமோகனே நான் உள்ளிட்ட சில நண்பர்களிடம் நேரடியாக சொல்லி இருக்கிறார்; யானை டாக்டர்) கதை இத்தனை powerful ஆக இருந்தால் அது ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால் யூகிக்க முடிவது பொதுவாக கதையின் சுவாரசியத்தை குறைத்தது.

மத்துறுதயிர், நூறு நாற்காலிகள், உலகம் யாவையும் போன்ற கதைகளில் தரிசனம்/உச்சக்கட்டம் கதையின் பில்டப் அளவுக்கு சிறப்பாக இல்லை.

பெருவலியில் கோமல் முதுகுவலியை மீறி பத்திரிகை நடத்தியதும், இமயம் வரை நடந்ததும்தான் என்னை கவர்கின்றன. அவரது தரிசனம் இல்லை. எனக்கு அது அற்புதமான தருணம் என்று தெரிந்தாலும், அது ஒரு மாதிரி theoretical ஆக தெரிவது.

கதைகளின் உண்மை மனிதர்கள்:

  1. அறம்எம்.வி. வெங்கட்ராம் எழுத்தாளர்; கரிச்சான் குஞ்சு, ஜெயமோகன் அவரவர் பேரிலேயே வருகிறார்கள். பழனியப்பா பிரதர்ஸ் புத்தக பதிப்பாளர்கள். சாமிநாதன் யார்?
  2. சோற்றுக்கணக்குகெத்தேல் சாஹிப்
  3. மத்துறு தயிர் – பேராசிரியர்-ஜேசுதாசன்; ராஜம் – ராஜ மார்த்தாண்டன்; குமார்-வேதசகாயகுமார்; டெய்சிபாய் – ஹெப்சிபா ஜேசுதாசன்; பச்சைமால், ஜெயமோகன், சுந்தர ராமசாமி, அ.கா. பெருமாள் அவரவர் பேரில்; , குமாரபிள்ளை யார்?
  4. வணங்கான்மார்ஷல் நேசமணி
  5. தாயார் பாதம் – ராமன்-தி. ஜானகிராமன்; பாலு-சுந்தர ராமசாமி
  6. யானை டாக்டர் – டாக்டர் கிருஷ்ணசாமி கிருஷ்ணமூர்த்தி (திருத்திய தியாகராஜனுக்கு நன்றி!) அவர் பேரிலேயே; கதைசொல்லி யார்?
  7. மயில்கழுத்து – ராமன்-தி. ஜானகிராமன்; பாலு-சுந்தர ராமசாமி; மதுரை சுப்பு ஐயர் – மதுரை மணி ஐயர், சந்திரா-சந்திரலேகா, கிருஷ்ணன் – கிருஷ்ணன் நம்பி cameo
  8. நூறு நாற்காலிகள் – கதைசொல்லி யார்? சுந்தர ராமசாமி, ஜெயமோகன் cameos
  9. ஓலைச்சிலுவை – டாக்டர் சாமர்வெல் அவர் பேரிலேயே. ஜேம்ஸ் யார்?
  10. மெல்லிய நூல் – காந்தி, அய்யன்காளி அவர்கள் பேரிலேயே. சிண்டன், சோகன்ராம் யார்?
  11. பெருவலிகோமல், ஜெயமோகன்
  12. கோட்டிபூமேடை ராமையா. கதைசொல்லி யார்?
  13. உலகம் யாவையும்காரி டேவிஸ், நடராஜகுரு, ஜெயமோகன்

இங்கே நிஜ மனிதர்கள் என்று நான் குறிப்பிட்டிருப்பவர்கள் எல்லாம் என் யூகங்களே. ஜெயமோகனே வெளிப்படையாக சொன்னால்தான் அது செய்தி. இந்த விளக்கம் எல்லாம் தேவை இல்லை, எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் என்று நினைத்திருந்தேன். எதற்கு வம்பு?

24 thoughts on “ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதை சீரிஸ்

  1. // எல்லாரும் காந்தி, புத்தன், ராமனுஜன் ஆக முடியாது, அந்த மாதிரி கோடியில் ஒருவர்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் வேண்டாம். //

    ஆர், வி.. வழக்கமாக நம்ம ஊரில் காந்தி, புத்தன் என்ற பின்பு ஆட்டமேட்டிக்காக ஒரு மூன்றாவது பெயர் வரும்..

    அப்படி மந்தைத் தனமாக எழுதாமல் சுயமாக எழுதியிருக்கிறீர்களே.. இதற்காகவே உங்களை மனம் திறந்து பாராட்டுகிறேன்..

    Like

  2. மற்றவை அப்புறம் .

    நூறுநாட்காலிகள் – உச்சத்தை வார்த்தைகளால், சம்பவங்களால் விளக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் ,

    “அமர வேண்டும்” என முடிவெடுப்பதுதான் உச்சம் , பின் வாசகன்தானே வளர்த்துக்கொள்ள வேணுடும் ?

    Like

  3. ஜடாயு, // // எல்லாரும் காந்தி, புத்தன், ராமனுஜன் ஆக முடியாது, அந்த மாதிரி கோடியில் ஒருவர்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் வேண்டாம். //
    ஆர், வி.. வழக்கமாக நம்ம ஊரில் காந்தி, புத்தன் என்ற பின்பு ஆட்டமேட்டிக்காக ஒரு மூன்றாவது பெயர் வரும். அப்படி மந்தைத் தனமாக எழுதாமல் சுயமாக எழுதியிருக்கிறீர்களே. இதற்காகவே உங்களை மனம் திறந்து பாராட்டுகிறேன்.//
    அது ஒரு flow-வில் வந்தது, இதிலெல்லாம் sub-text இருப்பது நீங்கள் சொன்னால்தான் தெரிகிறது. 🙂

    அரங்கசாமி, // நூறுநாட்காலிகள் – உச்சத்தை வார்த்தைகளால், சம்பவங்களால் விளக்க வேண்டும் என நினைக்கிறீர்கள், “அமர வேண்டும்” என முடிவெடுப்பதுதான் உச்சம், பின் வாசகன்தானே வளர்த்துக்கொள்ள வேணுடும் ? //
    இல்லைங்க, விளக்கம் எல்லாம் தேவை இல்லை. வெறும் நாற்காலி, அதுவும் அதிகாரம் இல்லாத ஒரு குறியீட்டை தீர்வாக நினைப்பது எனக்கு நிறைவாக இல்லை. அது தலித்துக்கு ஒரு மந்திரி பதவி கொடுப்பது போல – ஜஸ்ட் tokenism. குறைந்தபட்சம் அதிகாரத்தையாவது தீர்வாக உணர்ந்திருக்கலாம் என்றே நினைத்தேன்.

    தங்கவேல், ராஜமார்த்தாண்டன் மட்டும் இல்லை, ஜி. நாகராஜன் கூட அந்த சித்திரத்தை உருவாக்க உதவி இருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் பேராசிரியரின் மாணவர்கள் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் ராஜம் வேறு யாரோதான் என்று தோன்றுகிறது.

    Like

  4. பாரட்டத்தக்கத் தொடர். சமுதாய நெருக்கடியால் வாழ்வில் சிறு சிறு தோல்விகளால் துவண்டு போனவர்கள் இந்தக் கதைத் தொகுதியிலிருந்து சில நல்ல விஷயங்களை எடுத்துச் செல்வார்கள்.

    தனிப்பட்ட முறையில் குறையென்று சொல்ல வேண்டுமென்றால் இந்தியக் கதைகள் அறம் நேர்மை நெறி நியாயம் என்கிற வட்டத்திற்குள் சுழல்வது சற்று அலுப்பாக இருக்கிறது. ஆனால் ஊழல் செய்திகள் மிகுந்த இக்காலக்கட்டத்தில் இத்தொகுதி நல்ல வரவேற்பைப் பெறும் என நினைக்கிறேன். காலத்தில் பின்னோக்கிப் பார்ப்பது போல் வரும் காலத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விஷயங்களையும் கதையாக்கலாம்.

    படித்ததில் வணங்கான் சிறப்பு. மெல்லிய நூலில் காந்தியுடன் அய்யன்காளி தோழர்கள் நடத்தும் விவாதம் மறக்கவியலாது. அறத்தில் வெங்கட்ராம் செட்டியாரிடம் பணத்தை முன்பே பேசி பெற்றிருக்க வேண்டும் என்று உணரும் வரிகள் இன்றைய தர்க்கத்திற்குப் பொருந்துகிறது.

    Like

  5. ஆர்வி, நீ எழுதாவிட்டால் நான் எழுதியிருப்பேன். ஆனால் நீ எழுதிய அளவிற்கு நான் எழுதியிருப்பேனா என்று தெரியாது. ஆனாலும் நானும் ஒன்று எழுதுவேன் என்று தோன்றுகிறது.

    Like

  6. நான் இந்த ‘நம்பகத்தன்மை’ பத்தி மட்டும் ஒரு விஷயம் சொல்லிக்க ஆசைப்படறேன். நீங்க கதாசிரியரையும் கதையில் வர கதை சொல்லியையும் (narrator) குழப்பிக்கறீங்க என்று நினைக்கிறேன்- கதாசிரியர் கதைக்கு வெளியே நிக்கறவர். தன்னோட படத்தையோ இல்லை ரெஸ்யூமையோகூட கதைக்குள்ள போட்டுக்கிட்டாலும் அவர் கதைல கற்பனைப் பாத்திரமா மட்டும்தான் இருக்க முடியும். ஏதோ காசு பணம் அவார்டு கிவார்டு கிடைச்சா வாங்கிக்கலாம். அந்த அளவுலதான் அவர் தன்னை கதையோட சம்பந்தப்படுத்திக்க முடியும்.

    ௦௦

    வட்டார பாஷை- நிச்சயமா இது நல்ல சோத்துல இருக்கற கல்லு மாதிரி நெருடலாதான் இருக்கு. சந்தேகமே இல்லை. ஆனா இப்படி பாருங்க- அறம் கதைல நரேட்டர் நிச்சயமா ஒரு தஞ்சாவூர்காரர் கிடையாது. அவர் அப்படி இருக்கும்போது அவர் மத்தவங்க பேசிக்கிட்டதைத் தப்பும் தவறுமா எழுதுவது கதைக்கு நம்பகத்தன்மையைக் கூட்டத்தான் வேண்டுமே தவிர, குறைக்கக் கூடாது.

    அதே மாதிரி தாயார் பாதம், மயில் கழுத்து கதைகள்ல நரேட்டர் தன்னை எங்கயாவது பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறாரா? அவர் பிராமண வகுப்பினரின் பேச்சுவழக்கை தப்பும் தவறுமா பதிவு செய்யறதுல எப்படி நீங்க குத்தம் கண்டு பிடிக்க முடியும்?

    எல்லாம் தெரிஞ்ச நர்ரேட்டர்லாம் எப்பவோ உலக இலக்கியத்துல செத்துப் போயாச்சுங்க. இன்னும் சொல்லப் போனா இப்பல்லாம் பர்ஸ்ட் பெர்சன்ல எழுதற கதைல வர நரேட்டர் ஏறத்தாழ எப்பவுமே அன்ரிலையபிள் நரேட்டர்னுதான் எடுத்துக்கறாங்க. “நீ ஏன் இப்படி ஒரு நம்பமுடியாத கதைய சொல்றே?” யாரும் கேக்கறதில்லை. தீவிர இலக்கியம் எழுதற யாராவது இப்ப எல்லாம் தெரிஞ்ச நரேட்டர் மாதிரி கதை சொன்னா, “என்ன இவனுக்குப் புனைவோட இலக்கணமே தேர்லியே!” அப்படின்னு சந்தேகமாகூட பாத்தாலும் பாப்பாங்க. இலக்கியம் இப்ப அப்படி அந்த மாதிரியா போய்க்கிட்டிருக்கு.

    ————-

    என்னைப் பொருத்தவரை, ஒரு கதையோட முழுமான இம்பாக்ட் எப்படி இருக்குன்னு பாத்துட்டு அதுக்குத் தகுந்த மாதிரிதான் அதோட பகுதிகளை அணுகணும். கதை பிடிச்சிருக்கா, அதில் இருக்கும் முரண்பாடுகள் எப்படி கதைக்கு வலு/ அழகு சேர்க்குதுன்னுதான் பாக்கணும். ஒரு பேச்சுக்கு சொல்றேன், கதை என்பது நல்ல சமையல் மாதிரி. எல்லாம் பொருந்தி வந்தாதான் முழுமையா ரசிச்சு சாப்பிட முடியும்.

    சாலட் சாப்பிடறீங்க. சாப்பிட்டு முடிச்சுட்டு, “சாலட் சூப்பர். ஆனா திராட்சை ரொம்ப தித்திப்பு. பைன் ஆப்பிள் கொஞ்சம் புளிப்பு. நீங்க ரெண்டு மூணு நாவல் பழத்தை சேத்திருக்கலாம். கலர்புல்லா இருந்திருக்கும்,” இப்படியெல்லாம் சொல்லுவீங்களா?

    கதை நல்லா இருக்குன்னு நீங்க பீல் பண்ணினா, அதில் உள்ள விஷயங்கள் எப்படி அந்த நல்ல அனுபவத்தைக் கொடுக்குதுன்னு பொருத்திப் பார்க்க முயல்வதுதான் சரி. அப்படி நல்லா இல்லைன்னு சொன்னாதான், இன்ன இன்ன காரணங்களால நல்லா இல்லை, அப்படின்னு பேசணும். கதைங்கறது டேபிள் சேர் மாதிரி பர்னிச்சர் இல்ல பாருங்க, பார்ட் பார்த்தா கழட்டி இது இப்படி இருக்குன்னு பேச முடியாது.

    கதை நல்லா இருக்குது- ஆனா இதெல்லாம் இடிக்குதுன்னு நீங்க சொன்னா ஒண்ணு, உங்களுக்குக் கதை பிடிக்கலைன்னு அர்த்தம், அல்லது நீங்க கதை தந்த நல்ல அனுபவத்தைப் பொருத்தமா இல்லாத விஷயங்களைப் பெரிசாப் பேசி கேடுத்துக்கறீங்க என்று அர்த்தம்.

    —–

    ரொம்ப அதிகமா பேசிட்டேன்னு நினைக்கறேன். யாரையும் எதுக்கும் எப்படியும் தாக்கணும்னு எதுவும் சொல்லலே. என் மனசுக்கு சரின்னு தோணினதை சொல்றேன், அவ்வளவுதான்.

    Like

  7. முரளி, உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.
    // இந்தியக் கதைகள் அறம் நேர்மை நெறி நியாயம் என்கிற வட்டத்திற்குள் சுழல்வது… // எனக்கு அப்படித் தெரியவில்லையே? இந்தக் கதைகளில் கூட பெருவலி, மயில்கழுத்து, மத்துறுதயிர் போன்றவை அப்படி இல்லையே?

    பாஸ்கர், உங்களைப் பார்ப்பதிலும் மகிழ்ச்சி!
    // தாயார் பாதம், மயில் கழுத்து கதைகள்ல நரேட்டர் தன்னை எங்கயாவது பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறாரா? அவர் பிராமண வகுப்பினரின் பேச்சுவழக்கை தப்பும் தவறுமா பதிவு செய்யறதுல எப்படி நீங்க குத்தம் கண்டு பிடிக்க முடியும்? // இந்தக் கதைகளில் ஆசிரியர்தான் narrator. narrator என்று தனியாக யாருமில்லை. அதனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. இந்தக் கதைகளில் கதாசிரியர் பிராமண வழக்கை பயன்படுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார். அப்படி பயன்படுத்துவதில் இருக்கும் தவறுகளை சொல்கிறேன்/சொல்கிறோம். அவர் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானித்திருந்தால் எதுவும் சொல்லப் போவதில்லை. இந்தக் கதைகள் first person-இல் எழுதப்படவில்லை. அறம் சிறுகதையில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. இதற்காகவே தேடினால் கிடைக்கலாம், அப்படி நான் படிப்பதில்லை. நெருடல் அதிகமாக இருக்கும்போதுதான் சொல்லும் பழக்கம். அதுதான் சொன்னேனே சார், nitpicking என்று?

    // யாரையும் எதுக்கும் எப்படியும் தாக்கணும்னு எதுவும் சொல்லலே. என் மனசுக்கு சரின்னு தோணினதை சொல்றேன், அவ்வளவுதான். // எதுக்குங்க இன்னும் இந்த தன்னிலை விளக்கம் எல்லாம் கொடுத்துக்கிட்டு?

    Like

    1. நான் படித்தது நான்கு கதைகள் தான். மேல் சொன்ன 3 மற்றும் பெருவலி.

      பெருவலியில் கோமலின் முதுகுவலி – கைலாய யாத்திரை – கதையின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. தனிமை…இதனை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும். கொடுமைகளை பார்த்து கடந்து செல்லாமல் கொட்டித்தீர்த்தால் ‘தனிமை’ தனியுமா ?

      9/12 கதைகள் நான் சொல்லும் சூழலில் வருவனதானே ? பெருவலியிலும் அதர்மத்தைக் கண்டித்து எழுதாமல் இருந்ததால் ஏற்படும் வலி என சரடு வருகிறது. ஆத்திசூடி காலத்திலிருந்து தொடரும் தீம் இது..

      Like

  8. ஆர்வி,
    “நான் கண்ட குறைகள்” – முழுமையாக ஒத்துப்போகிறேன்.
    ஒரு பேட்டியில் ஜெமோ (அ.முத்துலிங்கம் தளத்தில் படித்ததாக நினைவு) எழுதியவைகளை திருப்பிப்படிக்க விரும்பவில்லை, வார்த்தைகள் மாற்றி எழுத மாட்டேன், அப்படி எழுத ஆரம்பித்தால் மாற்றிக்கொண்டே நாள் பூராகவும் மாற்றிக்கொண்டே இருக்கலாம் என்று சொன்னார். இது அவரது approach.
    எனக்கு என்ன பட்டதென்றால், ஜெமோ எழுத்துகள் போன்ற நுண்ணிய, துல்லிய, கூர்மையான எழுத்துகளைப்படிக்கும் போது, நாமும் கதாபாத்திரங்களும் கூட ஒன்றியே இருப்போம். கதாபாத்திரம் கிழக்கு நோக்கி திரும்பினால் நாமும் கழுத்தைத்திருப்பி கிழக்கை நோக்குவோம். அவன் கண்கள் மட்டும் அல்ல, நமது கண்களும் கூசும்.
    அப்போது ஒரு சின்ன typo கூட நம்மை ‘புஸ்’ என்று தற்காலத்திற்கு இறக்கிவிடும். உலோகத்தில் ஒரு இடத்தில் அப்படி உணர்ந்ததாக ஒரு நினைவு. கதாநாயகன் கூடவே போய்கொண்டுருந்தேன்…எங்கயோ ஒரு இடத்தில் மாலை 7:30 மணிக்கு சூரியன் மறைந்து கொண்டிருப்பதாக படித்தவுடன் கொஞ்சம் ‘மலை’யிறங்கி விட்டேன், அலுவலக மேலாளர் கூப்பிடுவது கூட லேசாக கேட்க ஆரம்பித்தது:)
    “சொல்லவந்ததை கவனிக்காமல் இந்த cosmetics எல்லாம் கவனிக்கானே இந்தப்பய” என்று அவர் நினைக்கலாம் 🙂
    13, 14 வருடங்களுக்கு முன் முதல் முறை வெளி நாட்டுப்பயணம் மலேஷியா. போன வாரத்திலேயே, அப்போதுதான் வெளிவந்திருந்த Oracle Reportsல் சில complex querries join செய்து ரிப்போர்டை கனத்த (என்னைவிட) கண்ணாடி போட்ட பெண்மணியிடம் காட்டிய போது, அவர் சில நிமிடங்கள் பார்த்திருந்து விட்டு ரிப்போர்ட் தலைப்பு Font, size don’t follow standard மற்றும் date format is wrong (date separator should not be ‘/’, but ‘-‘).
    எனக்கு பற்றிக்கொண்டு வந்தது! நடு மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைக்கவேண்டும் போல தோன்றியது 🙂

    Essex சிவா

    Like

  9. என்னை சிந்திக்க வைத்த கதை ஓலைச்சிலுவை. டாக்டர் சாமர்வெலின் சேவை மகத்தானது. ஆனால் பிணத்தை புதைக்க வேண்டுமென்றால் கூட அதை கிருஸ்துவப் பிணமாக மாற்றித்தான் புதைக்க வேண்டும் என்று நினைப்பதில், இல்லை அப்படி நினைக்கும் லண்டன் மிஷனை ஏற்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. குழந்தைகளோடு சாகப் போகிறவளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என்ற நிலையைப் பற்றி அவரிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஒரு superiority complex – காட்டுமிராண்டி கும்பலை கடைத்தேற்ற வந்தவர் என்ற நிலையில்தான் இருக்கிறார் என்று தோன்றியது. அவரது சேவை இந்த அணுகுமுறையை மறைக்கக்கூடாது. அவரும் அவர் காட்டும் ஏசுவும் சோற்றுக்கணக்கு பார்ப்பவர்கள். அவருடைய மனமாற்றம் சுட்டப்படுகிறது (அவர் மெல்ல மெல்ல இந்தியராக மாறிக்கொண்டே இருப்பது), ஆனாலும் அது இன்னும் விவரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சாமர்வெல் என்ற உண்மை மனிதரின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தது, அவர் மதமாற்ற முயற்சிகளையே கடைசி வருஷங்களில் நிறுத்தினார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா தெரியாது. அப்படி இல்லை என்றால் ஒரு எழுத்தாளர் இவ்வளவுதான் அவரது மாற்றத்தைப் பற்றி சொல்ல முடியும் என்பதையும் உணர்கிறேன்.

    Like

  10. RV, Natbas,

    கதைகள் படிக்கும்போது காட்சிகள் மனதில் விரிகின்றன (எனக்கு அப்படித்தான்). loosely speaking, இந்தக் கதைகள் கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திற்கு முன்பே நடந்த ஒருசில விஷயங்களை சொல்வது போன்ற அமைப்பைக் கொண்டவை. அந்த பிளாஷ்பேக் காட்சிகள் படத்தில் வரும்போது அதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அவற்றின் இயல்புபடியே வரும் – நடை, உடை, பேச்சு, பாவனை, குணங்கள். அப்படித்தான் படமாக்கப்பட்டிருக்கும். அப்படி வரவில்லை என்றால் படம் பார்க்க நன்றாக இருக்காது.

    RV

    \\அறம் சிறுகதையில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை.\\

    ஒன்றிரண்டு இடங்களில் வரும் வார்த்தைகளை MVV நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார் என்று அவருடைய பேரன் சொல்கிறார்! (எம்விவியின் பேரன் எனக்கு ஜூனியர், நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்). நான் எந்த இடங்கள் என்று கேட்டுக்கொள்ளவில்லை.

    Essex Siva

    ஒரு நிறுவனத்தின் brand அப்படித்தான் உருவாகிறது. மின்னஞ்சல் எப்படி எழுதவேண்டும், எழுத்துரு அளவு என்ன என்பது குறித்தெல்லாம் பத்து பக்கங்களுக்கு ஒரு guide உண்டு இப்போது நான் பணிபுரியும் அலுவலகத்தில்.

    நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்குமுன் விடைத்தாளை ஆசிரியர் மறுபடியும் ஒருமுறை பார்ப்பார். overwriting, ரூபாய், பைசா போடாமல் விடுதல் போன்றவற்றிற்கு மதிப்பெண்கள் குறைக்கப்படலாம்!

    Like

    1. கோபி, இதைத்தான் நான் மூலத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் உள்ள வித்தியாசம், எழுத்தாளரின் poetic licence என்று குறிப்பிட்டேன். எம்விவி சில குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதவராக இருக்கலாம். அதனால் கதையில் வரும் பெரியவர் – எம்விவியை மனதில் கொண்டு படைக்கப்பட்டவர் – பயன்படுத்தக்கூடாது என்பதில்லை. கதைக்குள் அவர் consistent ஆக பேசி நடக்க வேண்டும், அவ்வளவுதான். முதல் பாதியில் தஞ்சாவூர் வழக்கில் பேசிவிட்டு பிற்பாதியில் நாஞ்சில் வழக்கில் பேசக்கூடாது, அந்த inconsistency நெருடும்.

      Like

    2. @கோபி சுவையான விவாதம்.

      நீங்க இப்படி பாருங்க- உங்க நண்பர் ஒருத்தர் மெட்ராஸ்காரர். அவரு கோவை போன அனுபவத்தை சொல்றாரு- அங்க ஏதோ ஒண்ணு பெரிசா நடந்திருக்கு. அதை சொல்லும்போது கோவை மக்கள் மாதிரி பேசிக் காட்டறார். அவர் சொல்ற கதை/ அனுபவம் ரொம்ப ஆழமான, உள்ளத்தை தொடும் ஒன்று என்று வெச்சுக்குங்க.

      நீங்க அவர் பேசி முடிச்சதும், “என்னப்பா நீ, கோயமுத்தூர்காரங்க நீ சொல்ற மாதிரி எல்லாம் பேச மாட்டாங்க. உன்னோட கதையை நம்ப மாட்டேன் போ!” அப்படின்னு சொல்வீங்களா என்ன?

      இதுல ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கணும்.

      இது MVVயின் வாழ்க்கை வரலாறு இல்லை. அவர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை ஆரம்பப் புள்ளியா வெச்சுக்கிட்டு எழுதப்பட்ட புனைவு. இதை எம்விவி பேரை சொல்லாமலே செஞ்சிருக்கலாம். ஆனா ஏன் செய்ய வேண்டி வருது? நமக்கு கதை படிச்சு படிச்சு எந்தக் கதையையும் நாம வாழ்க்கையோட தொடர்பு பண்ணிப் பாக்கறதில்லை. ஏதோ அல்ஜீப்ரா மாதிரி, “தொடக்கம் நல்லா இருக்கு, நடுவுல தொய்வு வருது, ஆனா முடிவுல சூப்பரா ட்விஸ்ட் குடுத்து கதையை எழுப்பி நிக்க வெக்கறார்” அப்படின்னு பேசிப் பழகிட்டோம். நம்மோட இந்த தூக்கத்தைக் கலைக்கறதுக்காக மட்டுமே நிஜ மனிதர்களை நிஜ மனிதர்கள் மாதிரி பயன்படுத்த வேண்டி வருது.

      நீங்களே உங்களுக்கும் உங்க நண்பர் ஒருத்தருக்கும் தெரிந்த நபர் பத்தி அவர் பெயரை, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் சேத்தி நிறைய கற்பனை கலந்து எழுதிப் பாருங்க- அந்தக் கதையை அவர் உங்களோட மத்த கதைகளைப் படிக்கற மாதிரி படிக்க மாட்டார். ரொம்ப டிஸ்டர்ப் ஆகிடுவார். இதைதான் இப்ப இந்த அறம் கதைகளும் பண்ணுது.

      கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நான் சொன்னது எதையும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நம்பறேன். அப்படி ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கணும்.

      Like

    3. விஷயம் ரொம்ப சிம்பிள்ங்க. திரிச்சு படிக்கறதுல இருக்கற சுவாரசியம் நமக்கு திருத்திப் படிக்கறதுல இல்ல.

      நமக்கு வேண்டியவங்கன்னா திருத்திப் படிப்போம்- அவங்க சொன்னதை இல்லை, அவங்க சொல்றதை நாம எப்படி எடுத்துக்கறோம் என்பதை. ஆனா அதே வாசகன் எழுத்தாளனுக்கு சமமா சேரை இழுத்துப் போட்டு உட்கார ஆசைப்படும்போது இந்த மாதிரி திரித்தும் படிப்போம்.

      நெஞ்சத் தொட்டு சொல்லுங்க- அறம் கதையை ஒரு ‘கதையா’ நீங்க நம்பலையா? இது கதைன்னு நீங்க நம்பிட்டா கதை ஜெயிச்சிடுச்சு. அவ்வளவுதான் விஷயம்.

      இது எம்விவி கதையா, தஞ்சாவூர் கதையா என்பதெல்லாம் அவ்வளவா முக்கியமில்லாத கேள்வி. கதை அதைப் பத்தி இல்லை, இல்லீங்களா?

      எதுக்கும் நீங்க நான் சொன்ன மாதிரி ஒரு கதை எழுதி டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க- நான் ஆவலுடன் உங்க அனுபவத்தைத் தெரிஞ்சுக்கக் காத்திருக்கேன்.

      Like

  11. natbas

    \\உங்க நண்பர் ஒருத்தர் மெட்ராஸ்காரர். அவரு கோவை போன அனுபவத்தை சொல்றாரு- அங்க ஏதோ ஒண்ணு பெரிசா நடந்திருக்கு. அதை சொல்லும்போது கோவை மக்கள் மாதிரி பேசிக் காட்டறார். \\

    நீங்க சொல்ற மாதிரி கதையில் இல்லை. ஜெமோ, எம்விவியை சந்தித்துவிட்டு நாகர்கோவிலுக்குப் போய் அங்குள்ள வேறொருவரிடம் அதைச் சொல்வது போல இல்லை இந்தக் கதை. அவரும் ஒரு பாத்திரம் இதில். எல்லாப் பாத்திரங்களும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறுதான் இருந்தாகவேண்டும். பேசியாக வேண்டும் என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

    Like

    1. நான் வேற மாதிரியும் படிக்க இடமிருக்குன்னு சொன்னேன், அவ்வளவுதான். அது கதையை நம்ப முடியலைன்னு நிராகரிக்காம ஏத்துக்க உதவலாம், அவ்வளவுதான்.

      “உண்மையில் என்ன இருக்கிறதோ அதை அப்பட்டமாக புறவயமாக ’அப்படியே’ சொல்வதாக அது நடிக்கிறது,” என்று ஜெயமோகன் நாச்சுரலிசம் பத்தி சொன்னது இங்கே குறிப்பிடத்தக்கது- http://www.jeyamohan.in/?p=13400

      இந்தக் கதை நாச்சுரலிச கதை இல்லைன்னு நினைக்கறேன். அதனாலதான் அதை வேற மாதிரி படிக்க வேணும்னு சொல்றேன்.

      உங்களுக்கு நீங்க படிக்கற விதம் பொருத்தமானதா இருந்தா அப்படியே வெச்சிக்குங்க, அதுக்காக சண்டைக்கு வர மாட்டேன் 🙂

      நன்றி.

      Like

  12. // யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, // தியாகராஜன், திருத்திவிட்டேன்.

    பாஸ்கர், நானும் கோபி மாதிரிதான் நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வருவது எனக்கு சரியாக பிடிபடவில்லை.

    ரவி, உங்களுக்கு கதைகளும் பதிவும் பிடித்திருப்பது மகிழ்ச்சி!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.