மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு முன்பதிவு

ma_vee_ramanujacharyar_mahabharatha

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றது. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கும்போது இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும்.

விலை ரூ. 5000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம்.

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரை பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எப்படிச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
பா.மாரியப்பன்

இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள். புத்தகம் வராவிட்டால் நமக்குத்தான் நஷ்டம். எஸ்.ரா. மகாபாரதம் படிப்பது எப்படி என்ற பதிவில் இந்த மொழிபெயர்ப்பை ஒரு முக்கியமான படியாகக் குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

மகாபாரதம் வெளியிடுவதில் இராமானுஜாசாரியார் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார், 1930களில் மகாபாரதம் வெளியிடுவதற்கு பதினைந்து ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார், அன்று ஒருவரின் மாத சம்பளம் 60 ரூபாய், மகாபாரதத்திற்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர் இராமானுஜாசாரியார்.

புகைப்படம் அருட்செல்வன் கந்தசாமியின் இணையதளத்தில் கிடைத்தது. மனிதர் ஒரிஜினல் பதிவையே வைத்திருக்கிறார்! ம.வீ.ரா. மொழிபெயர்ப்பு என்கிறார்களே, ஆனால் வேறு பெயர் போட்டிருக்கிறதே என்று கேட்டிருக்கிறார். மாரியப்பன் எங்கோ இது பலரின் கூட்டு முயற்சி, ம.வீ.ரா. தொகுப்பாளர், ம.வீ.ரா. பதிப்பு என்று அறியப்படுகிறது என்று விளக்கி இருந்தார்.

ம.வீ. ராமானுஜாசாரியாரின் கும்பகோணம் பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது என்று நண்பர் செல்வராஜு தகவல் தருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள், தொன்மங்கள்

பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சி

BATS_IIN_2013அன்பான தமிழ் ஆர்வமிக்க நண்பர்களுக்கு: (Dear Tamil Friends of Bay Area):

வணக்கம். I would like to share some important information on a Tamil event being organized by பாரதி தமிழ்ச் சங்கம் (Bharati Tamil Sangam) in the Bay Area.

The name of the event is Iyal, Isai, Naatiyam (இயல், இசை, நாட்டியம்) covering all three important tracks of Tamil Literature as explained below.

Iyal (இயல் – Speech/Eloquence) Track: Isaikavi Ramanan (Podhigai TV fame) is coming from India to deliver speech on “Vaazhkai Vaazhvatharkee…” (வாழ்க்கை வாழ்வதற்கே…)

Isai (இசை – Music) Track: Malavika Sriram, Bay Area Musical Prodigy, is giving a musical performance on Ramayanan Epic (இராமாயணம்).

Naatiyam (நாட்டியம் – Dance) Track: Radica Giri, Bay Area based Classical Dancer is giving a performance on the beauty of Tamil God Lord Muruga (முருகனின் அழகு).

Date/Time: Saturday, August 10, 2013 – 4 to 8 PM

Location: Mexican Heritage Plaza, 1700 Alum Rock Road, San Jose CA.

Please come and support this Tamil literarture event. You can buy tickets online at Bharathi Tamil Sangam and it is only $15 per person. Please find us on Facebook – LIKE our page to get regular updates on our Tamil events. Attached flier has more details on this event.


தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

க்ரஹாம் கிரீன் எழுதிய “தர்ட் மான்”

Third Man பெரிய இலக்கியம் இல்லை. பிரமாதமான மர்மம் கூட இல்லை. இதைப் பற்றி இங்கே எழுத முக்கியக் காரணம் கராஸ் திரைப்படத்துக்கு அமைத்துக் கொடுத்த பின்னணி இசைதான். Zither-இல் மனிதர் என்னமாய் விளையாடி இருக்கிறார்!

third_man_sewer_scenethird_man_amusement_park_scene

என் கண்ணில் புத்தகத்தை விட திரைப்படமே பார்க்க வேண்டியது. கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு, இசை மூன்றும் படத்தை உயர்த்துகின்றன. அதுவும் சில நிமிடங்களே வரும் ஆர்சன் வெல்ஸ் கலக்குவார். கரோல் ரீட் இயக்கிய திரைப்படம்.

முதலில் திரைக்கதையை எழுதிவிட்டு பிறகுதான் அதை நாவலாக க்ரீன் எழுதினார் என்று பின்னால் தெரிந்துகொண்டேன்.

கதையின் முடிச்சு ரொம்ப சிம்பிள். வியன்னா. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருக்கிறது. பிளாக் மார்க்கெட். அதில் குழந்தைகளின் உயிர்களோடு விளையாடும் ஹாரி லைம். தன் இளமைக் கால நண்பனை வியன்னாவுக்கு அழைக்கிறான். நண்பன் வியன்னாவுக்கு வந்தால் ஹாரி லைம் முந்திய நாள்தான் இறந்து போய் புதைக்கப்பட்டிருக்கிறான். அவன் இறந்தபோது கூட இருந்தது இருவரா மூவரா என்று சின்ன குழப்பம். அதுதான் முடிச்சே.

third_man

graham_greeneகதையில் நான் மிகவும் ரசித்த இடம் நண்பனை பெரிய எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு ஒரு வாசகர் சந்திப்பு நடத்துவதுதான்.

படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், த்ரில்லர்கள்

இரா. முருகனுக்குப் பிடித்த குறுநாவல்கள்

ஃபேஸ்புக்கில் இரா. முருகன்:

சார்வாகனின் ‘அமர பண்டிதன்’ படித்திருக்கிறீர்களா? விஷ்ணு நாகராஜனின் ‘கொடுகொட்டியாட்டம்’ படித்திருக்கிறீர்களா? பொ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’ படித்திருக்கிறீர்களா? ராஜநாராயணனின் ‘கிடை’ படித்திருக்கிறீர்களா? ஸ்ரீதரனின் ‘ராமாயணக் கலகம்’ படித்திருக்கிறீர்களா? நாகூர் ரூமியின் ‘குட்டி யாப்பா‘ படித்திருக்கிறீர்களா? ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’? ஜெயமோகன் பாலசங்கராக அவதாரம் எடுத்துக் கணையாழியில் எழுதிய ‘அம்மன் மரம்’?

எனக்குப் பிடித்த குறுநாவல்களில் இவையெல்லாம் (இன்னும் குறிப்பிட அவகாசம் இல்லாத பலவும் – என்னுடைய ‘விஷம்’ உட்பட) அடங்கும்.

நான் குறத்தி முடுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். குறத்தி முடுக்கை விட நாளை மற்றொரு நாளே எனக்கு இன்னும் பிடித்தமானது.


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தமிழ் நாடகம்: மெரினாவின் படைப்புகள்

ஒரு காலத்தில் மெரினாவின் நாடகங்கள் மிகவும் பாப்புலர். தாம்பரத்தைத் தாண்டாத சபா நாடக சர்க்யூட்டில் பிரகாசித்தார்.தனிக்குடித்தனம், கால்கட்டு, ஊர் வம்பு மாதிரி நிறைய. அவை ஒரு காலகட்டத்தின் – குறிப்பாக எழுபதுகளின், நகர்ப்புற பிராமணர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டு வந்தன. அவர் விவரிக்கும் குடும்பத்துக்குள் நடக்கும் சண்டைகள் ஏறக்குறைய அதே மொழியில் நடந்துகொண்டிருந்தன. இப்போது இன்னும் கொஞ்சம் பாலிஷ்டாக சண்டை நடக்கும் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் புன்முறுவல் வரும். அவர் எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தை நான் மிகவும் ரசித்தேன். ஒரு அன்றைய பிராமண மத்திய தரக் குடும்பத்தை தத்ரூபமாகச் சித்தரித்தது.

பாத்திரங்கள் உண்மையாக இருந்தாலும் பொதுவாக கதை, முடிச்சு என்றெல்லாம் எதுவும் இருக்காது. அப்படியே முடிச்சு இருந்தாலும் அது வலிந்து புகுந்தப்பட்டதாக இருக்கும். நாடகத்தின் வெற்றி, சுவாரசியம் எல்லாம் அந்தக் கால ரசிகர்கள் தங்களையே நாடகத்தில் பார்ப்பதுதான்.

அவர் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு தீம் கலப்புத் திருமணம், அதனால் வரும் பிரச்சினைகள்.

marinabharani.com என்று ஒரு தளம் நடத்திக் கொண்டிருந்தார், இப்போது இல்லை போலிருக்கிறது.

சமீபத்தில் அவரது சில நாடகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனிக்குடித்தனம்: இதுதான் மெரினாவின் மாஸ்டர்பீஸ் என சொல்லப்படுகிறது. இரண்டு நண்பர்கள். அவர்களுக்கு கல்யாணம் நடப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் இதுதான் நாடகம். நாராயணன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று துடிக்கிறான், கடைசியில் அவன் அப்பா அம்மா தனிக்குடித்தனம் போய்விடுகிறார்கள்!

ஊர் வம்பு அவருடைய புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று. வம்பு பேசும் அய்யாசாமி ஐயரின் பெண்ணுக்கும் இன்னொரு வம்புக்கார அத்தையின் மருமகனுக்கும் கல்யாணம். ஒரு காலத்து பிராமண milieu தத்ரூபமாக இருக்கிறது. ஆனால் இது என் காலத்துக்கும் முற்பட்ட milieu, அவ்வளவாக ஒட்ட முடியவில்லை.

கால்கட்டு: அவரது இன்னொரு புகழ் பெற்ற நாடகம். சும்மா சத்தமாக மிரட்டிக் கொண்டே இருக்கும் அப்பா, அவர் ஸ்டைல் அது என்பதை நன்றாக உணர்ந்த குடும்பத்தினர், குடும்ப உறுப்பினரான தூரத்து உறவுக்காரர் அம்மாஞ்சி. இப்படிப்பட்ட குடும்பங்கள் நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அருகிக் கொண்டு இருந்தன. பாத்திரப் படைப்பு உண்மையாக இருந்தாலும் கதையைத்தான் காணோம். நாடகத்தை இணையத்தில் படிக்கலாம்.

மாமியார் மெச்சிய மாப்பிள்ளை: பிள்ளையை வரப் போகும் பெண்டாட்டி பிரித்துவிடப் போகிறாள் என்று அம்மாவுக்கு பயம், அதனால் கல்யாணம் பண்ணிக் கொல்லாதே என்று பிள்ளைக்கு உபதேசிக்கிறாள். எப்படியோ கல்யாணம் நடக்கிறது. மருமகள் மாமியார் மேல் உயிராக இருக்கிறாள். பிறகு?

கல்யாண மார்க்கெட்: காதல், மறுக்கும் அப்பா, எப்படியோ சேரும் ஜோடி. தண்டம்.

வடபழனியில் வால்மீகி: தண்டம். வால்மீகி இன்றைய (அறுபதுகளின்) சென்னைக்குத் திரும்பி வருகிறார்.

எங்கம்மா: பிராமணக் குடும்பம், மூன்று பிள்ளைகள். முதல் பையன் மனைவிக்கு அடங்கினவன், தனிக்குடித்தனம் போய்விட்டான். இரண்டாமவன் ஜாதி விட்டு கல்யாணம் செய்துகொண்டவன், தனியாக இருக்கிறான். கடைசி பையனுக்கு ஜாதிக்குள்ளேயே பெண் பார்க்கிறார்கள். கல்யாணம், சச்சரவுகள், குடும்பத்துக்குள் பிரச்சினைகள் என்று போகிறது. அப்பா இறந்ததும் ஆசாரமான அம்மா தன் தலித் மருமகளுடன் போய் இருப்பதாக கதை முடிகிறது.

காதலென்ன கத்திரிக்காயா: இளைஞன் காதல் காதல் என்று அலைய எதுவும் வொர்க் அவுட் ஆகமாட்டேன் என்கிறது. வாரப்பத்திரிகை தொடர்கதை என்று தெளிவாகத் தெரிகிறது. அறுபதுகளில் ஸ்டவ் ஜோசியம் என்று (உய்ஜா மாதிரி இருக்கிறது, ஸ்டவ் நகருமாம்!) ஒன்று பரபரப்பாக இருந்ததாமே! இந்த நாவலில் வருகிறது.

பொதுவாக தமிழ் நாடகங்களின் தரம் குறைவு. ஷேக்ஸ்பியரும் இப்சனும் ஷாவும் ப்ரெக்டும் மில்லரும் இங்கே இன்னும் அவதரிக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்போது மெரினாவின் உண்மையான சித்தரிப்புகளுக்கு தமிழ் நாடக வரலாற்றில் நிச்சயமாக இடம் உண்டு என்றுதான் சொல்வேன். மாப்பிள்ளை முறுக்கு, தனிக்குடித்தனம், ஊர் வம்பு, கால்கட்டு ஆகியவற்றை படிக்கலாம், பார்க்கலாம் என்று சொல்வேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மெரினாவின் “மாப்பிள்ளை முறுக்கு” நாடகம்
மெரினாவுக்கு நாடக சூடாமணி விருது
தனிக்குடித்தனம் நாடக விமர்சனம் மற்றும் மெரினாவுக்கு பாராட்டு
மெரினாவைப் பற்றிய ஒரு கட்டுரை
இணையத்தில் “கால்கட்டு” நாடகம்

டோரிஸ் கியர்ன்ஸ் (குட்வின்) எழுதிய “லிண்டன் ஜான்சன் அண்ட் த அமெரிக்கன் ட்ரீம்”

Lyndon_Johnsonஜான்சன் என்னை fascinate செய்யும் ஒரு ஆளுமை. ஏறக்குறைய நம்மூர் கருணாநிதி மாதிரி மனிதர். வாய்ப்பு கிடைத்தால் அடுத்தவர்களை அமுக்கிக் கொண்டே இருப்பது, சின்னத்தனம், ஊழல், கள்ள ஓட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கூஜா தூக்குவது, தனக்குக் கீழே பணி செய்பவர்களை ஏறி மிதிப்பது, அதிகார ஆசை என்ற பல வித பலவீனங்கள் உள்ளவர். அதே நேரத்தில் சிறு கூட்டங்களில், நேருக்கு நேராக, நன்றாகப் பேசத் தெரிந்தவர். மனிதர்களை புரிந்து கொண்டு அவர்கள் மூலம் காரியம் நடத்திக் கொள்ளத் தெரிந்தவர். ஏழைகளின் மீது உண்மையான பரிவு உள்ளவர். தான் ஏழையாக இருந்தபோது பட்ட அவமானங்களை மறக்காதவர். பல பலவீனங்கள் இருந்தாலும் தலைமைப் பண்பு உடையவர்.

இந்த மாதிரி ஒரு மனிதர்தான் லிங்கனுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கறுப்பர்களுக்கு ஆதரவாக இருந்தவர், சட்டங்கள் இயற்றியவர் என்றால் நம்ப முடிகிறதா? ஜான்சனின் இந்த முரண்பாடுகள்தான் என்னை fascinate செய்கின்றன. அமெரிக்க அரசியல் அமைப்பில் அப்படி என்ன மாயம் இருக்கிறது? இந்திய அரசியல் அமைப்பில் அப்படி என்ன இல்லாமல் போய்விட்டது? ஏன் ஜான்சன் கருணாநிதி போல வெற்றுவேட்டாக முடியவில்லை? ஏன் கருணாநிதி எத்தனையோ கொள்ளைகளுக்கு நடுவில் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை?

doris_kearnsகியர்ன்சின் இந்தப் புத்தகம் ஜான்சனின் சாதனைகள், தோல்விகள் எல்லாவற்றுக்கும் காரணம் அவரது ஆளுமையே, அவரது சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள், ஏழ்மை, எல்லாம் அவரை ஒரு manipulator ஆக மாற்றியது, அதுதான் அவரை பெரிய பதவிக்கும் கொண்டு வந்தது, வியட்நாமில் தோல்வி அடையவும் வைத்தது என்று வாதிடுகிறார்.

கியர்ண்ஸ் ஜான்சனின் உதவியாளர் மாதிரி ஒரு பதவியில் இருந்தவர். ஹார்வர்டில் படித்தவர்கள் என்றால் பிஸ்தா என்று ஜான்சனுக்கு ஒரு எண்ணம் உண்டு. பதவிக்காலம் முடிந்த பின் கியர்ன்ஸுடன் தன் வாழ்க்கையை ஆவணப்படுத்த முயற்சித்திருக்கிறார். கியர்ன்சுக்கு ஜான்சன் மீது அன்பு இருந்தாலும் அவரது பலவீனங்களை மறைக்கவில்லை. விமர்சங்கள் நிறைய. அவருக்கும் ஜான்சன் ஏன் இன்னும் சாதிக்கவில்லை என்ற கேள்விதான் மண்டையைக் குடைகிறது.

lyndon_johnson_and_the_american_dreamராபர்ட் காரோவின் புத்தகங்களில் (1, 2) இன்னும் விவரமாக இருப்பதால் எனக்கு இந்தப் புத்தகம் பெரிதாக அப்பீல் ஆகவில்லை. ஆனால் தண்டி தண்டியாக காரோவின் புத்தகங்களைப் படிக்க சோம்பேறித்தனமாக இருந்தால் இதைப் படிக்கலாம். மேலும் காரோ இப்போதுதான் 1964 வரை வந்திருக்கிறார். இன்னும் ஜான்சனுக்கு 4 வருஷம் ஜனாதிபதி பதவி இருக்கிறது. 🙂

கியர்ண்சின் மிகவும் புகழ் பெற்ற புத்தகம் “Team of Rivals“. லிங்கனின் “மந்திரிசபை” பற்றிய புத்தகம். இதில் ஒரு சிறு பகுதிதான் சமீபத்தில் லிங்கன் என்று ஸ்பீல்பர்க் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அதுவும் காரோவின் புத்தகங்களைப் படிக்காதவர்கள் கட்டாயமாகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய பதிவுகள்: ராபர்ட் காரோ எழுதிய Master of the Senate மற்றும் Passage to Power

கமலா தாசின் “எண்டே கதா”

கமலா தாசின் பேரையும் இந்த சுயசரிதையைப் பற்றியும் சிறு வயதிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படிக்க 35 வருஷங்கள் ஆகிவிட்டன.

இந்தப் புத்தகத்தை நான் என் பதின்ம வயதில் படித்திருந்தால் நிச்சயமாக ஒரு மறக்க முடியாத புத்தகமாக இருந்திருக்கும். பெண், அதுவும் மணமான ஒரு பெண், தனக்கு பிற பெண்கள் எழுதிய காதல் கடிதங்கள், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் பற்றி எல்லாம் இவ்வளவு தூரம் வெளிப்படையாக எழுதுவது என்னைத் தாக்கி இருக்கும். இன்று இத்தனை சின்ன புத்தகமாக இருந்தாலும் இவ்வளவு இழுவையாக இருக்கிறதே, புத்தகம் முடிய இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கடைசி பக்கத்துக்குப் போய் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன்.

kamala_das_youngகமலா தான் பெரிய அழகி இல்லை என்று அடிக்கடி இந்தப் புத்தகத்தில் சொல்லிக் கொள்கிறார். அவரது இளமைக்கால புகைப்படத்தைப் பார்த்தால் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை.

சரி, நேர்மையாக எழுதப்பட்ட சுயசரிதை என்றாவது கொஞ்சம் மதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் பதிவை எழுதும் முன் விக்கியில் கமலா தாஸ் பற்றி படித்தேன். சுயசரிதை என்று பேரே தவிர நிறைய கற்பனை சேர்த்து எழுதி இருக்கிறாராம். இருந்த மரியாதையில் பாதி போய்விட்டது.

1973-இல் வெளிவந்த புத்தகம். எழுபதுகளில் குமுதத்தில் ஒரு மொழிபெயர்ப்பு வந்தது என்று ஞாபகம். எங்கள் வீட்டில் எழுபது-எண்பதுகளில் ரெகுலராக குமுதம், விகடன் வாங்குவோம், அப்படித்தான் இதைப் பற்றி கேள்விப்பட்டேன் என்று நினைக்கிறேன். அப்போது நிச்சயம் பெரிய ஷாக் வால்யூ இருந்திருக்கும். இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமே அதுதான்.

kamala_das_oldபெரிய கவிஞர் என்று கேள்வி. எனக்கும் கவிதைக்கும் காத தூரம். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இருக்கும் கவிதைகளையே என்னால் படிக்க முடியவில்லை.

கமலா தாஸ் எனக்கான எழுத்தாளர் அல்லர் என்றுதான் நினைக்கிறேன். அவரது தாக்கம், எழுத்து பற்றி மாற்று கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவல். ஜெயமோகன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று தேடினேன். ஜெயமோகன் அவரது ஆளுமை பற்றி எல்லாம் நிறைய எழுதி இருக்கிறார். நான் ஒரு minimalist, எனக்கு எழுத்துதான் முக்கியம், எழுத்தாளர் இல்லை. என் கண்ணில் ஜெயமோகனின் முக்கியமான கருத்து இதுதான்:

‘மாதவிக்குட்டி’ ஒரு நல்ல சிறுகதையாசிரியர். அவரது கலைத்திறனுக்கு அந்தக் கிறுக்கு – மதுரமான கிறுக்கு என்று நித்யா சொல்வார் – ஒரு வகையில் பலம் சேர்த்தது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் உணர்ச்சிகரமான மனம் கொண்டவர் அவர். காம இச்சையும் சுயவலியுறுத்தலுமே அவரது ஆளுமையின் சாரம். அவற்றின் மூலம் அவர் அறிந்த ஒரு வாழ்க்கையை அவர் எழுதினார். அது அவரது தனித்தன்மை கொண்ட அழகியலை உருவாக்கியது. அது ஓர் இலக்கிய சாதனை. நிலையில்லாது அலைந்த பேரிலக்கியவாதிகள் பலர் உண்டு. நிலைத்த ஞானம் கொண்ட பேரிலக்கியவாதிகளும் உண்டு. இலக்கியம் என்பது பார்வையினால் அல்ல வெளிப்பாட்டினால்தான் இலக்கியத்தன்மையை அடைகிறது.

இலக்கிய சாதனை போன்ற வார்த்தைகளை ஜெயமோகன் casual ஆகப் பயன்படுத்த மாட்டார். அவரது சிறுகதைகளை என்றாவது படித்துப் பார்க்க வேண்டும்.

கமலா தாஸின் ஆக்கங்களை வேறு யாராவது படித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
கமலா தாஸ் பற்றிய விக்கி குறிப்பு
ஜெயமோகனின் அஞ்சலி, இரு கட்டுரைகள் – 1, 2