நாராயண் தேசாய் – காந்தி வளர்த்த சிறுவன்

narayan_desaimahadev_desai_gandhi(மீள்பதிவு)

காந்தியின் உதவியாளராக இருந்தவர் மகாதேவ் தேசாய். அவரது மகன் நாராயண் தேசாய் தன் சிறு வயதை காந்தியோடுதான் கழித்திருக்கிறார். காந்தியைத்தான் அப்பா என்று அழைத்திருக்கிறார். (தன் அப்பாவை காக்கா என்று அழைத்திருக்கிறார்.)

தேசாய் பிற்காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண், வினோபா ஆகியோரோடு நெருக்கமாகப் பணியாற்றி இருக்கிறார். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்தான் மறைந்திருக்கிறார். நமது ஊடகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையிலேயே உன்னதமான மனிதர்களைப் பற்றி நமக்கு தெரியப்படுத்துவதே இல்லை என்று வருத்தமாக இருக்கிறது.

தேசாய் காந்தி ஆசிரமத்தில் வளர்ந்த தன் சிறு வயது நினைவுகளை (1930-44) புத்தகமாக எழுதி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.  இந்தப் புத்தகத்துக்கும் தன் தந்தை மஹாதேவ் தேசாய் பற்றி எழுதிய புத்தகத்துக்கும் இரண்டு முறை சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.

தொகுக்கப்பட்ட பக்கம் – காந்தி பக்கம்

தொடர்புடைய சுட்டி – காந்தியின் விளையாட்டுத் தோழர் நாராயண் தேசாய்

ரஷ்யா ஹவுஸ் – ராஜனின் திரைப்பட விமர்சனம்

john_le_carreEspionage நாவல்களின் அரசன் ஜான் லீ காரின் பரம ரசிகன் நான். அனேகமாக அவரது அனைத்து நாவல்களை படித்து விட்டு அதன் சினிமா மற்றும் சீரியல் வெர்ஷன்களையும் தேடிப் பிடித்துப் பார்ப்பவன். மீண்டும் மீண்டும் பார்த்தும் வருபவன். அந்த வகையில் ஜான் லீ காரின் அற்புதமான romantic espionage நாவல்களில் ஒன்று இந்த Russia House. இது பின்னாளில் பழைய ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியும் மிஷைல் ஃபிஃபைரும் நடிக்க சினிமாவாகவும் வந்தது.

அந்த நாள் தொடங்கி நமது பழைய எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர்களின் சிஐடி/ஒற்றர்கள் படங்களில் எல்லாம் ஒற்றர்களின் தனி வாழ்க்கை அவர்களது சாகசங்களுடன் இணைந்தே தொடரும். ஒற்றர்களின் காதலி (ஜேம்ஸ் பாண்ட் வழக்கப்படி மனைவியாக இருக்க மாட்டார், அந்த நாள் தவிர) அம்மா, தங்கை இத்யாதிகளை எதிரிகள் கடத்திக் கொண்டு போய் மிரட்டி கடைசியில் ஹீரோ சண்டை போட்டு எதிரிகளை அழித்து மீட்டுக் கொண்டு வருவார். ஜேம்ஸ் பாண்ட் படமாக இருந்தால் காதலியைத் தியாகம் செய்து விடுவார்கள். அவருக்கோ புதுக் காதலிகள் நூற்றுக் கணக்கில் கிடைக்கும், தமிழ்ப் படங்களில் அப்படியெல்லாம் விட்டு விட முடியாது பாருங்கள்!

ஆக ஒற்றர்களின் தனி வாழ்க்கைக்கும் அவர்கள் தொழில் முறை வாழ்க்கைக்கும் தொடர்பு இருந்து கொண்டேயிருக்கும். அந்த நாளுக்குப் பிறகு தமிழில் உருப்படியான espionage படங்கள் எதுவும் வந்ததாக நினைவில்லை.

RAW ஒற்றர்களை வைத்து மிகைப்படுத்தப் பட்ட கற்பனைக் கதைகள் ஒரு சில எழுதப் பட்டுள்ளன. Patriotic Games போன்ற ஹாலிவுட் ஒற்றர் படங்களிலும் கூட ஒற்றர்களின் மனைவி குடும்பம் கதைக்குள் இழுக்கப்படுவதும் உண்டு. பெரும்பாலும் honey trap எனப்படும் உத்தி – பெண்களை வைத்து ஆட்களைக் கவர்ந்து மிரட்டி தகவல்களைப் பெறுவது – இந்தத் தொழிலில் சகஜமான ஒன்றுதான். அப்படித்தான் நம்ம சீனாத்தானா கூட எம்ஐ-5 இடம் மாட்டிக் கொண்டிருப்பதாக மன்மோகனிடம் சுப்ரமணிய சுவாமி புகார் கொடுத்திருக்கிறார்.

ஒற்றர்களின் தனிப்பட்ட உறவுகளைத் தங்களது சதித் திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமான கதைகளும் பல வந்துள்ளன. ஜான் லீ காரின் பல நாவல்களிலும் இந்தத் தனி மனிதப் பலவீனங்களையும் காதல் போன்ற உறவுகளையும் பிரிட்டிஷ் உளவு நிறுவனம் தன் வசதிக்குப் பயன் படுத்திக் கொள்வது குறித்து வருகின்றன. Smiley’s People என்னும் நீண்ட பெரும் நாவல் ரஷ்யாவின் உளவுத் தலைவரின் தனிப் பட்ட பலவீனத்தைக் கண்டுபிடித்து அதை வைத்து அவரை மிரட்டி இவர்கள் பக்கம் மாறச் செய்வது பற்றிய ஒரு முத்தொடர் நாவல்களில் ஒன்று. அது போலவே Tinker Tailor Soldier Spy என்ற கதையும் (இது இப்பொழுது ஹாலிவுட் படமாக வந்துள்ளது). லீ காரின் பிரபலமான நாவலும் சினிமாவுமான The Spy Who Came in from the Cold அந்த வகையில் ஒற்றனது காதல் வாழ்வைத் தங்கள் திட்டத்துக்குப் பயன் படுத்திக் கொண்டு காதலியைக் காவு கொடுத்து விடும் தந்திரமான ஒரு கதை. அதே பாணியில் வந்துள்ள இன்னுமொரு படம்தான் இந்த ரஷ்யா ஹவுஸ்.

russia_houseரஷ்யா ஹவுஸ் லீக்காரின் Cold War நாவல்களில் ஒன்று. சோவியத் யூனியனின் பிளவுக்கு முன்னால் நடக்கும் கதை. சோவியத்தின் அணு ஆயுத முஸ்தீபுகள் எவையும் காயலான் கடைச் சமாச்சாரம் என்பதையும் அவர்கள் சும்மா பூச்சாண்டி காட்டுகிறார்கள் ஆகவே அமெரிக்காவும் மேற்கும் சோவியத்தைப் பொருட்படுத்தித் தங்கள் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என்றும் விளக்கி ஒரு ரகசிய manuscript-ஐ ரஷ்யாவின் ஒரு அணு விஞ்ஞானி பிரிட்டனின் புத்தகப் பதிப்பாளர் ஒருவருக்குக் கொடுத்து அதை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறார்.

நம்ம கிழக்கு பத்ரி போன்ற ஒரு பப்ளிஷரான ஷான் கானரி தானுண்டு தன் ஸ்காட்ச் உண்டு என்று இருக்கிறார். அவருக்கு வர வேண்டிய பார்சல் எம்ஐ-5 இடம் போய் விட அவர்களும் அவர்களது பங்காளிகளான சிஐஏவும் சேர்ந்து இவரை வைத்து ரஷ்ய விஞ்ஞானியிடமிருந்து அனைத்து விஷயங்களையும் கறந்து விட வேண்டும் என்று தீர்மானித்து பதிப்பாளரான கானரியை அழைத்து வந்து அவரை ஒரு ஒற்றராக மாற்றி மாஸ்கோவுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

மாஸ்கோவுக்குப் போகும் கானரிக்கு வேறொரு அதிர்ஷடம் அடித்து விடுகிறது. அவர் தன்னை அனுப்பியவர்களைக் கிறுக்கர்களாக்கி விடுகிறார். எந்தவொரு லீ காரின் சினிமா போலவே ஒரு ஆர்ட் ஃபிலிமுக்குரிய நிதானத்துடன் நகரும் ஒரு வித்தியாசமான espionage காதல். பதிப்பகத்தார்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வரலாம் என்பதை நம் ஊர் பதிப்பகத்தார்கள் கவனத்தில் கொண்டு காத்திருக்கவும் :))

சோவியத் நாடுகளும், நேச நாடுகளும் மீண்டும் மீண்டும் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இடையில் மாட்டிய சிலர் அதைப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒற்று வேலை பார்க்கப் போகும் கானரிக்கு அருமையான அழகான காதலி ஒருத்திக் கிடைத்து விடுகிறாள். எம்ஐ-5 கொடுத்த காசில் புதுக் குடித்தனம் அமைத்து லிஸ்பனில் செட்டிலாகி விடுகிறார் படத்தை லிஸ்பனிலும் மாஸ்கோவிலும் எடுத்திருக்கிறார்கள். அருமையான காட்சிகளும் இசையும் நிரம்பிய ஷான் கானரி வித்தியாசமான ஒரு ரோலில் நடித்திருக்கும் படம். மிஷைல் ஃபைஃபர் போன்ற பேரழகி கிடைக்கும் என்றால் நம் பதிப்பகத்தார்களும் ஒற்றர்களாக மாறி உளவு பார்க்க கிளம்பி விடலாம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ராஜன் பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சினிமாவான இன்னொரு லெ கார் புத்தகம் – A Most Wanted Man
இன்னொரு லெ கார் புத்தகம் – Our Kind of Traitor

பழைய வம்பு – பாரதிதாசன் அண்ணா தகராறு

annabharathidasanநாலு தமிழன் சேர்ந்தால் போதும் சண்டை ஆரம்பித்துவிடும். இதற்கு உதாரணம் தமிழ் ஹிந்து தளத்தில் இருக்கும் இந்தப் பழைய கட்டுரை. இன்று பாரதிதாசன், அண்ணா ஆகியோர் மீது ஒளிவட்டம் சுமத்தப்பட்டிருந்தாலும் ஒரு காலத்தில் எப்படி எல்லாம் சண்டை போட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். சுவாரசியமான வம்பு! தனக்கு வர வேண்டிய பணத்தை அண்ணா லவட்டிக் கொண்டு போய்விட்டார் என்று பாரதிதாசனுக்கு கோபம். உண்மையோ, பொய்யோ, பாரதிதாசன் அண்ணாவை பிரமாதமாகத் திட்டுகிறார். குழாயடி சண்டை கெட்டது!

ma_venkatesanஈ.வெ.ரா. அண்ணா மனக்கசப்புக்கு அண்ணா பாரதிதாசனுக்கு நிதி திரட்டியதும் ஒரு காரணம் என்று எங்கோ படித்திருக்கிறேன்.

Disclaimer : பாரதிதாசன் ஜாதியை எதிர்க்கவில்லை என்று கட்டுரை ஆசிரியர் ம. வெங்கடேசன் வரும் முடிவுக்கு ஆதாரம் போதாது. ஆனால் அவரது ஆராய்ச்சி, ஆவணப்படுத்தும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

பி.எஸ். ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்” சிறுகதை

பி.எஸ். ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்” சிறுகதை பற்றி பாவண்ணன் “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” சீரிஸில் குறிப்பிட்டிருந்தார். அப்போது இதன் மின்வடிவம் கிடைக்கவில்லை, இப்போது அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைக்கிறது. சீரிஸ் பதிவை அப்டேட் செய்திருக்கிறேன்.

சிறுகதைக்கு வேண்டிய வடிவம், சிறுகதையாக ஆக்கும் வரி எல்லாம் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் கதை என் கண்ணில் சுமார்தான்.

பாவண்ணன் அலசி இருக்கும் மிச்சக் கதைகளுக்கு மின்வடிவம் இருக்கிறதா? உங்கள் கண்களில் பட்டால் சொல்லுங்கள், சுட்டிகளை இணைத்துவிடலாம்.

தொடபுர்டைய சுட்டிகள்:
அழியாச்சுடர்கள் தளத்தில் சிறுகதை
பாவண்ணனின் எனக்குப் பிடித்த சிறுகதைகள் சீரிஸ்

பாரதிதாசன்

bharathidasanஎனக்கு கவிதை என்றால் அலர்ஜி. பாரதிதாசனின் கவிதைகள் எனக்கு பொருட்படுத்த வேண்டியவையாகத் தெரியவும் இல்லை.

ஆனால் பாரதிதாசனுக்கு நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் – ஒரு தலைமுறையாவது – பெரிய தாக்கம் இருந்தது. அவர் பாணியில் கவிதை எழுத ஒரு பரம்பரையே உருவாகி வந்தது. கம்பதாசன், சுரதா, வாணிதாசன் ஆகியோரைக் குறிப்பிடலாம். யாரும் பெரிய அளவில் சாதித்ததாகத் தெரியவில்லை. அவரது தாக்கம் இன்று தமிழ்நாட்டில் இல்லைதான், ஆனாலும் அவரது தாக்கம் இருந்த காலம் ஒரு முக்கியமான கால கட்டம்.

பாரதிதாசனின் பெரிய பலம் சந்தம். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்பதை யாராலும் சும்மா படிக்க முடியாது. மனதிற்குள்ளாவது அதன் இசை வடிவம் ஓடத்தான் செய்யும். சந்தம் செயற்கையாக, வலிந்து புகுத்தப்பட்டதாகவும் தெரியாது. ஆனால் சந்தம் மட்டுமே பலமாக இருப்பதுதான் பலவீனம். கவித்துவம், இரண்டு வரிக்குள் பெரும் உலகைக் காட்டும் திறன் எதுவும் அவரிடமில்லை. அலங்காரத் தமிழ் இருக்கும். ஆனால் கருத்துகள் எதுவும் சொல்லிக் கொள்வது போல இருக்காது. மேலும் அவரே சொல்லிக் கொள்வது போல “சுயமரியாதைக்காரர்”. பிரச்சார நெடி அடிக்கும். திராவிடக் கழக சார்பு இல்லை என்றால் பிரச்சார நெடி குறைந்து இன்னும் சிறப்பாக எழுதி இருப்பாரோ என்று தோன்றுகிறது.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (1930), புரட்சிக்கவி (1937), எதிர்பாராத முத்தம் (1941), குடும்ப விளக்கு (1942), பாண்டியன் பரிசு (1943), இருண்ட வீடு (1944), அழகின் சிரிப்பு (1944) போன்றவை அவர் எழுதிய முக்கியக் கவிதை நூல்களாகக் கருதப்படுகின்றன. இரணியன் அல்லது இணையற்ற வீரன் (1939), பிசிராந்தையார் (1967) என்று சில நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.

பிசிராந்தையாருக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது. பிசிராந்தையார் ஒரு மோசமான நாடகம். இதற்கு விருது கிடைத்தது விருதுக்கும் இழிவு, பாரதிதாசனுக்கும் இழிவு. வெங்கட் சாமிநாதன் தகுதி உள்ளவர் எழுதிய தகுதி அற்ற நாவலுக்கு பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இதைப் பற்றி எங்கோ சொல்லி இருக்கிறார். ‘அமைதி‘ போன்ற சில “புனைவுகளையும்” எழுதி இருக்கிறார். எதுவும் தேறாது.

இரணியன் நாடகம் என்னை வாயைப் பிளக்க வைத்தது. பார்ப்பன ஆரிய சதி என்பதை இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று வியக்க வைத்துவிட்டார். அப்பட்டமான பிராமண துவேஷம். பிரகலாதன் ஏன் அப்பாவை எதிர்க்கிறான்? ஏனென்றால் ஒரு பிராமணப் பெண் இல்லை இல்லை ஆரியப் பெண் பிரகலாதனை மயக்கிவிடுகிறாள். அத்தோடு விட்டாளா? எதற்கும் இருக்கட்டும் என்று இரணியனின் தளபதியையும் மயக்கி கைக்குள் வைத்திருக்கிறாள். அவள் அப்பாவும் அண்ணனுமே பார்ப்பன மேலாதிக்கம் ஏற்பட வேண்டும், இரணியனை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவளை அப்படிக் கூட்டிக் கொடுக்கிறார்கள். எங்கேயோ போய்விட்டார்.

பாரதிதாசனின் வேறு சில நாடகங்களும் – கற்கண்டு, பொறுமை கடலினும் பெரிது, இன்பக்கடல், சத்திமுத்தப்புலவர் – கிடைத்தன். காலாவதி ஆகிவிட்டவைதான், ஆனால் இரணியன் போல வாயைப் பிளக்க வைக்கவில்லை.

பாரதிதாசனுக்கு தமிழ் உயிர். பாரதி மேல் பெருமதிப்பு. பார்ப்பன வெறுப்பு பிற்காலத்தில் அதீதமாகவே இருந்திருக்கிறது. ஆனால் எந்த முடிவு என்றாலும் நேர்மையாக, தன் மனதுக்கு உண்மையாக இருந்திருக்கிறார். அவரது உரைகள் சில பாரதிதாசன் பேசுகிறார் என்ற பேரில் தொகுக்கப்படிருக்கின்றன, அதில் இவை தெளிவாகத் தெரிகின்றன.

சிறு வயதில் இருண்ட வீடு என்ற ஒரு புத்தகத்தைப் படித்து சிரித்திருக்கிறேன். வீட்டுக்கு வரும் திருடனை பொம்மைத் துப்பாக்கியை வைத்து அப்பா மிரட்டி சமாளித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சின்னப் பையன்

அப்பா அப்பா அது பொய்த் துப்பாக்கி
தக்கை வெடிப்பது தானே என்றான்

என்று சத்தமாக சொல்லும் வரிகள் இன்னும் நினைவிருக்கின்றன.

பாரதிதாசனோடு ஓரளவு நெருங்கிப் பழகிய முருகுசுந்தரத்தின் புத்தகங்களிலிருந்து அவரது ஆளுமை நமக்கு ஓரளவு புரிய வருகிறது. தான் நல்ல கவிஞன் என்ற பெருமிதம் கொண்டவர். குழந்தை மாதிரி மனம் கொண்டவர், உலக ஞானம் குறைவு.

எனக்குப் பிடித்த இரண்டு பாரதிதாசன் பாடல்கள் – ஒன்று “தலை வாரி பூச்சூடி உன்னை”. அவரது கடைசி மகள் ரமணி பள்ளிக்கு மட்டம் போடுவது தெரிய வந்ததும் இதை எழுதினாராம். இன்னொன்று – “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” வீடியோ கீழே.

வரிகள்:

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
நல்லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா?
கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?

துன்பம் நேர்கையில்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க
எம் வாழ்வில் உணர்வு சேர்க்க
நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?
கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா?

துன்பம் நேர்கையில்…

அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாதபோது
யாம் அறிகிலாதபோது
தமிழ் இறையனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா?
நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?

துன்பம் நேர்கையில்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின்
தமிழ்ப் புலவர் கண்ட நூலின்
நல்திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா?
தமிழ்ச் செல்வம் ஆக மாடடாயா?

துன்பம் நேர்கையில்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதை பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

ராமையா அரியா சிறுகதை – உப்புக் காங்கிரசின் தோற்றமும் முடிவும்

சொல்வனம் இணைய இதழில் இந்த சிறுகதையைப் படித்தேன். புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். சிறுவர்களின் உலகத்தை தமிழ்க் கதைகளில் காண்பது அபூர்வம். ராமையா அரியா அதைக் காண்பிப்பத்தில் வெற்றி அடைந்திருக்கிறார். படித்துப் பாருங்களேன்!

ராமையா அரியாவின் இன்னொரு சிறுகதையும் – தந்திப் புரட்சி – எனக்குப் பிடித்திருந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படைப்புகள்