காந்தி கொடுத்த பேட்டி – வீடியோ, காந்தி குரலைக் கேட்கலாம்

நான் மிகச் சிறந்த தலைவராகக் கருதுபவர்களில் காந்தி முதன்மையானவர். (மிகச் சிறந்த மனிதர் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை) அவர் வீடியோவில் கொடுக்கும் ஒரு பேட்டி – சுட்டி கொடுத்த நண்பர்களுக்கு நன்றி! இந்த தளத்தில் பொதுவாக புத்தகங்கள் பற்றித்தான் என்றாலும் காந்தி வீடியோவை பகிர ஆசை. இன்று காந்தி நினைவு நாள் வேறு…

2013 புத்தகக் கண்காட்சியில் முத்துகிருஷ்ணன்

Muthukrishnanஇந்த வருடம் புத்தக கண்காட்சியின் பொழுது சென்னையில் இருந்தேன். ஒரு நாள் சுற்றிப் பார்க்க நேரம் வைத்தது. முதல் தடவை என்பதால் நன்றாகவே பராக்கு பார்த்தேன். என்ன, ஒரு காபி 20 ரூபாய் என்பது சகிக்க முடியவில்லை. ஆனால் சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ 60 ரூபாய் என்று பார்த்தவுடன் புத்தக கண்காட்சி எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.

சில அவதானிப்புகள்:

  1. பல தொலைக்காட்சி சானல்கள் சிறு குழந்தைகளையும், மற்ற வாடிக்கையாளர்களையும் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
  2. எஃப்எம் வானொலியில் தினமும் கண்காட்சியை பற்றிய நேர்காணல்களும், அறிவிப்புகளும் சொல்லிய வண்ணம் இருந்தனர்.
  3. வளைத்து வளைத்து “பொன்னியின் செல்வனை” எல்லா கடைகளிலும் பல விதமான புத்தக வடிவமைப்பில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
  4. அதற்கு அடுத்ததாக எங்கும் சுஜாதா, எதிலும் சுஜாதா…
  5. சாஹித்ய அகாடமி புத்தக ஸ்டாலில் எல்லா புத்தகங்களும் ஒப்பு நோக்கையில் சகாய விலைக்கு வைத்திருந்தார்கள்.
  6. “சார் உங்களோட குழந்தைகளுக்கு ஐ க்யூ குறைவா இருக்கானு செக் பண்ணலாம். அதுக்கு நம்ம ஸ்டாலுக்குள்ள வாங்க சார்” என்று கூப்பிட்டு கொண்டிருந்தார்கள். அது ஏதோ competitive exam பயிற்சி தொடர்பானது என புரிந்து கொண்டேன். பெற்றோர்களிடம் கேள்வி கேட்டே பிள்ளைகளின் அறிவை கணித்துவிடும் எதோ புதிய தொழில் நுட்பம் போல இருக்கு. என்னிடம் 3, 4 தடவை வரும்போதும் போகும்போதும் கேட்டார்கள். கடைசியில் “நமக்கு குழந்தைகள் இருக்கோ” அப்படின்னு சின்ன ஐயம் வந்துவிட்டது.
  7. மனுஷ்யபுத்திரன் யாருக்கோ காணொளி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
  8. காற்றோட்டம் சரில்லை. பின் மாலை கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் வெப்பமும், காற்று பற்றாக்குறையும் உணர முடிந்தது.

இனி நான் வாங்கிய புத்தகங்கள்.

  1. காந்தி எல்லைகளுக்கு அப்பால் – சொல்புதிது பதிப்பகம் – சுனில் கிருஷ்ணன் தொகுத்தவர்
  2. அனுபவங்கள், அறிதல்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில் ஜெயமோகன்) – United Writers பதிப்பகம்
  3. வாழிய நிலனே – கட்டுரைகள் சுகுமாரன் – உயிர்மை பதிப்பு
  4. எல்லா நாளும் கார்த்திகை – அனுபவங்கள் பவா செல்லத்துரை – வம்சி பதிப்பு
  5. உணவுப் பண்பாடு – அ.கா. பெருமாள் – New Century Book House
  6. அர்ஜுனனின் தமிழ் காதலிகள் – அ.கா. பெருமாள் – காலச்சுவடு பதிப்பகம்
  7. ராமன் எத்தனை ராமனடி – அ.கா. பெருமாள் – காலச்சுவடு பதிப்பகம்
  8. நடந்தாய் வாழி, காவேரி! – சிட்டி & தி. ஜானகிராமன் – காலச்சுவடு
  9. இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் (தமிழில் ஆ.மாதவன்) – சாஹித்ய அகாடமி
  10. வரலாறு, சமூகம், நிலா உறவுகள் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் – பாரதி புத்தகாலயம்
  11. மீன்காரத் தெரு – கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி பதிப்பகம்
  12. கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி பதிப்பகம்
  13. அஞ்சுவண்ணம் தெரு – தோப்பில் முகமது மீரான் – அடையாளம் பதிப்பகம்
  14. கு.அழகிரிசாமி கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்கள் – உயிர்மை பதிப்பகம்
  15. உயரப் பறத்தல் – வண்ணதாசன் சிறுகதைகள் – சந்தியா பதிப்பகம்
  16. பெயர் தெரியாமல் ஒரு பறவை – வண்ணதாசன் சிறுகதைகள் – சந்தியா பதிப்பகம்
  17. கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் – மகத்தான நாவல் வரிசை, நற்றிணை பதிப்பகம்
  18. ஆத்மாநாம் படைப்புகள் – காலச்சுவடு பதிப்பகம்
  19. நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா – சந்தியா பதிப்பகம்
  20. பூரணி பொற்கலை – சிறுகதைகள், கண்மணி குணசேகரன் – தமிழினி பதிப்பகம்
  21. உயிர்த்தண்ணீர் – சிறுகதைகள், கண்மணி குணசேகரன் – தமிழினி பதிப்பகம்
  22. பண்டைக்கால இந்திய – எஸ்.ஏ. டாங்கே (தமிழில் எஸ். ராமகிருஷ்ணன்) – New Century Book House

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், புத்தக சிபாரிசுகள்

2013 பத்மபூஷன்+பத்மஸ்ரீ விருது பெற்ற “எழுத்தாளர்கள்”

இந்த விருதுகளுக்கு இலக்கியம் + கல்வி என்று ஒரே உட்பிரிவுதான் போலிருக்கிறது. யார் எழுத்தாளர், யார் கல்வியாளர் என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.

வழக்கம் போல அசோகமித்ரனை கண்டுகொள்ளவில்லை. போய்டப் போறாருய்யா! செத்த பிறகு சிலை வைத்து என்ன பயன்?

கண்டுபிடிக்க முடிந்தவர்களைப் பற்றி சின்ன சின்னக் குறிப்புகள் கீழே.

Mangesh_Padgaonkarமங்கேஷ் பட்காவோங்கர் (உச்சரிப்பு சரிதானா?) பத்மபூஷன் விருது பெற்றிருக்கிறார். மராத்தியக் கவிஞராம். சாஹித்ய அகாடமி விருதை 1980இல் பெற்றிருக்கிறார்.

Gayatri_Chakravorty_Spivakகாயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர். பத்மபூஷன் விருது பெற்றிருக்கிறார். இலக்கியம் பற்றி நிறைய எழுதுவார் போலிருக்கிறது. அவரது கட்டுரைகளில் Can the Subaltern Speak? என்பது புகழ் பெற்ற ஒன்றாம். (எனக்கு இன்னும் படிக்க பொறுமை இல்லை, யாராவது படித்து என்னதான் எழுதுகிறார் என்று சொல்லுங்க!)

முஹம்மது ஷராஃபே ஆலம் பீகாரின் மஜ்லுல் ஹக் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவராம். பத்மஸ்ரீ. பாரசீக மொழி வல்லுநராம்.

radhika_herzbergerராதிகா ஹெர்ஸ்பெர்கர் பூபுல் ஜெயகரின் மகள். பத்மஸ்ரீ விருது. ரிஷி valley பள்ளியின் தலைவி. நான் தேடியவரையில் Bharthari and the Buddhists என்று ஒரே ஒரே புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஜே. மல்சாமா மிஜோ எழுத்தாளராம். பத்மஸ்ரீ. Zozia என்ற புத்தகத்தில் மிஜோக்களின் நீதி முறைகள், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறாராம். Mizo Poems Old and New ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய பல வாய்மொழியாக வந்த பாடல்களின் தொகுதியாம். கிருஸ்துவ பாதிரிமார்கள் அதை “அப்பாலே போ சாத்தானே!” என்று அமுக்கப் பார்த்திருக்கிறார்கள், இவர் தேடித் பிடித்து பதித்திருக்கிறார். மிஜோக்களின் நா. வானமாமலை போலிருக்கிறது. இந்த விருது பெற்றவர்களில் நான் படிக்க விரும்புவது இவரைத்தான். புகைப்படம் கிடைக்கவில்லை.

தேவேந்திர படேல் (குஜராத், பத்மஸ்ரீ) ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ramakanth_shuklaரமாகாந்த் சுக்லா (பத்மஸ்ரீ) சம்ஸ்கிருத வல்லுநர். லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் அவருக்கு ஒரு பக்கம் இருக்கிறது.

akhtarul_waseyஅக்தாருல் வாசே (பத்மஸ்ரீ) ஜாமியா மிலியா பல்கலைக்கழக பேராசிரியர். உருது வல்லுநர் என்று தெரிகிறது.

Anvita Abbiஅன்விதா அப்பி (பத்மஸ்ரீ) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழியியல் (linguistics) பேராசிரியர். அவரைப் பற்றி இங்கே கொஞ்சம் விவரங்கள்

nida_fazliநிதா ஃபஜ்லி (பத்மஸ்ரீ) உருதுக் கவிஞர். 1998இல் சாஹித்ய அகாடமி விருது. சினிமா பாட்டு கூட ஓரளவு எழுதி இருக்கிறாராம்.

சுரேந்தர் குமார் ஷர்மா (பத்மஸ்ரீ, டெல்லி) பற்றி எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜகதீஷ் பிரசாத் சிங் (பத்மஸ்ரீ, பீஹார்) பற்றி எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

(மறைந்த) சலிக் லக்னவி (பத்மஸ்ரீ, மேற்கு வங்காளம்) உருது கவிஞர் என்று தெரிகிறது.

noboru_karashimaநொபொரு கராஷிமா (பத்மஸ்ரீ) ஜப்பானியர். தமிழறிஞர்! கருணாநிதி நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கிறார்!

christopher_penneyகிரிஸ்டோஃபர் பின்னி (பத்மஸ்ரீ) லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர். அவரது தளம் இங்கே.

விருது பெற்றவர்களின் முழு பட்டியல் இங்கே.


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

அட்ஜஸ்ட்மெண்ட் பீரோ – திரைப்படம்

adjustment bureauபொதுவாக புத்தகங்கள்+எழுத்தாளர்கள் பற்றி மட்டும்தான் இந்தத் தளத்தில் என்றாலும் இன்றும் ஒரு விதிவிலக்கு. இது ஒரு புத்திசாலித்தனமான திரைப்படம், ஃபிலிப் கே. டிக் எழுதிய ஒரு SF சிறுகதையை மூலமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை. அதனால் முழுதும் விதிவிலக்கு என்றும் சொல்வதற்கில்லை.

philip_k_dickடிக்கின் சிறுகதையின் premise சிம்பிளானது. உலகத்தை வழி நடத்தும் ஒரு டீம். ஒரு விதத்தில் கடவுளின் டீம் மாதிரி. இந்த டீம் அவ்வப்போது மனிதர்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் பெரிய விளைவுகளை உண்டாக்குகிறது. ஒரு முறை ஒரு சின்ன clerical error. மாற்றப்பட வேண்டிய ஒரு மனிதன் மற்றவர்கள் மாற்றப்படுவதை பார்த்துவிடுகிறான். பிறகு என்ன என்பதுதான் கதை. சுவாரசியமான premise. ஆனால் கதை சுமார்தான்.

இதை வைத்து ஜார்ஜ் நோல்ஃபி ஒரு clever திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். டேவிட் நாரிஸ் செனட்டர் தேர்தலில் தோற்கிறான். அன்று இரவு எலீஸ் என்ற ஒரு பெண்ணை சந்திக்கிறான். ஏறக்குறைய “கண்டதும் காதல்”. ஆனால் கடவுள் டீமின் திட்டப்படி அந்த ஒரு முறைதான் அவர்கள் சந்திக்க வேண்டும். ஒரு சின்னத் தவறு மூலம் அவர்கள் இரண்டாம் முறை சந்திக்கிறார்கள். அந்த நினைவுகளை மாற்ற கடவுள் டீம் முனையும்போது நாரிஸ் அதைப் பார்த்துவிடுகிறான். அவனை சமாளிப்பதற்காக அந்த டீம் தங்கள் இருப்பை அவனுக்குச் சொல்கிறது, தங்கள் திட்டப்படி எலீசை அவன் மறந்துவிட வேண்டும் என்றும் கட்டளை இடுகிறது. ஆனால் இருவராலும் மறக்க முடியவில்லை. மூன்று வருஷங்கள் கழித்து அவர்கள் மீண்டும் தற்செயலாகச் சந்திக்கிறார்கள். இந்த முறை நாரிஸ் தடைகளை மீறி அவளோடு இணைகிறான். ஆனால் அவன் எலீசொடு தொடர்ந்தால் எலீசின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று அவன் மிரட்டப்படுகிறான், பிரிவு. பிறகு என்ன ஆகிறது என்பதுதான் திரைப்படம்.

எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மாட் டேமன். படம் visual ஆகச் சிறப்பாக வந்திருக்கிறது. நோல்ஃபியே இயக்கி இருக்கிறார். 2011இல் வந்த திரைப்படம். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
IMDB குறிப்பு
ஃபிலிப் கே. டிக் எழுதிய சிறுகதை – Adjustment Team

அந்தோணி ஹோப்பின் சாகசக் கதைகள்

anthony_hopeஎன்னைக் கவர்ந்த திரைப்படங்களில் நாடோடி மன்னனும் ஒன்று. எம்ஜிஆரின் எல்லா சாகசப் படங்களுக்கும் பின்னால் ஏதோ ஒரு ஆங்கிலத் திரைப்படமோஅல்லது புத்தகமோ இருக்கும் என்பதை பின்னால்தான் புரிந்து கொண்டேன். பிற்காலத்தில் Prisoner of Zenda புத்தகத்தைப் படித்தபோது நாடோடி மன்னனின் மூலக்கதையை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

Zenda இத்தனைக்கும் அசகாய சூரத்தனம் நிறைந்த கதை அல்ல. என் கண்ணில் அதன் கவர்ச்சியே கதை நம்பக் கூடிய விதத்தில்தான் எடுத்துச் செல்லப்படுவதுதான். ஒரே ஆள் நூறு பேரை சுற்றி சுற்றி அடிப்பது போன்ற மிகைப்படுத்தல்கள் எல்லாம் கிடையாது. கதையில் ஒரே ஒரு அதிசயம்தான். அதற்கும் ஹோப் பலமான அடிப்படை போட்டிருப்பார். Zenda-வை விட அதன் தொடர்ச்சியான Rupert of Hentzau இன்னும் திறமையாகப் பின்னப்பட்ட கதை. இரண்டையும் minor classics என்று சொல்லலாம்.

prisoner_of_zendadouglas_fairbanks_as_rupert_ofhentzauZenda நாவல் 1894-இல் வெளிவந்தது. ரூபர்ட் 1898-இல் வெளிவந்தது. கூடன்பர்க் தளத்தில் இரண்டு புத்தகத்தையும் படிக்கலாம்.

Zenda நாவல் பல முறை திரைப்படமாக்கப்பட்டது. 1937-இல் ரொனால்ட் கோல்மன், டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ், டேவிட் நிவன் நடித்து வெளியான படம்தான் சிறந்தது என்று சொல்வார்கள். பார்க்கக் கூடிய படம்தான். ஆனால் எனக்கு எப்போதும் நாடோடி மன்னன்தான் டாப்!

nadodi_mannanபதின்ம வயதில் படிக்க சுவையான சாகசக் கதைகள். அந்த வயதில் இருக்கும் பையன்களுக்கு வாங்கிக் கொடுங்கள்!

பிற்சேர்க்கை: நண்பர் ரெங்கசுப்ரமணி அசோகமித்திரன் இந்த genre திரைப்படங்களைப் பற்றி எழுதியதை ஒரு பின்னூட்டத்தில் கொஞ்சம் சுருக்கமாகத் தந்திருக்கிறார். அது கீழே:

அசோகமித்திரன் அவரது ஆதி நாடோடி மன்னன் கட்டுரையில்

இரட்டை வேட கத்திச்சண்டை படங்களுக்கு முன் மாதிரியான படங்கள் மூன்று, Corsican Brothers, Man in the Iron Mask, Prisoner of Zenda. முதலிரண்டு நாவல்களில் கதாநாயகனின் அச்சாக இன்னொருவர் இருக்க முக்கியக் காரணம், அவர்கள் இரட்டையர்கள். ப்ரிஸனரில் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள். பிரிஸனரில் காதலர்கள் காதலை தியாகம் செய்து விடுவார்கள். வில்லன் சாகாமல் எங்கோ ஓடி விடுவான்

ஆறாம் ஜார்ஜ் பட்டம் தரித்ததை ஒட்டி எடுக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு, இன்னொரு பிரிட்டிஷ் முடிசூட்டு விழா நடந்தது. அப்போதும் இன்னொரு Prisoner of Zenda படம் வண்ணத்தில் வந்தது. இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை.

ஹிந்தியில் அப்படம் கைதி என்ற பெயரில் உப்புச்சப்பில்லாமல் வந்தது. அது பத்மினியின் முதல் அசல் ஹிந்திப்படம். நாடோடி மன்னன் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு அசல் படத்தின் கதியை அடைந்தது.

அந்தோணி ஹோப் வக்கீல் தொழிலை விட்டு முழு நேர நாவலாசிரியரானார். Rupert of Hentzau என்ற நாவலை எழுதினார். ரூபர்ட், பிரிஸனரின் வில்லன்.

இது சுருக்கம், அவரது வரிகளல்ல. அடுத்து வருவது அவரது வரிகள் அப்படியே.

//ஒரு மோசமான நாவல் கூட ஓரளவு சுவாரசியமான திரைப்படமாக மாற்றப்படலாம் என்பதற்கு Prisoner of Zenda ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.//


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்தை இணையத்தில் படிக்க
Prisoner of Zenda – IMDB குறிப்பு

தி. ஜானகிராமனின் சிறுகதை – துணை

thi_janakiramanதி.ஜா.வின் ஒரு பிரமாதமான சிறுகதையை ஆபிதீன் மீண்டும் பதித்திருக்கிறார். எப்போது படித்தாலும் புன்னகை வரவழைக்கும் சிறுகதை. தாத்தாக்களுக்கு துணையாகப் போகும் ஒரு “இளைஞனின்” அனுபவம். கட்டாயம் படியுங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், தி.ஜா. பக்கம்

தொடர்புடைய சுட்டி: துணை பற்றி நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி

மிட்நைட் இன் பாரிஸ் – திரைப்பட விமர்சனம்

midnight_in_parisரொம்ப நாளாயிற்று இப்படி ஒரு படத்தை என்ஜாய் செய்து. உட்டி ஆலன் திரைக்கதையில் கலக்கிவிட்டார். திரைக்கதைக்காக அவருக்கு கிடைத்த ஆஸ்கார் முற்றிலும் சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

woody_allenஇன்றைய பாரிசில் ஒரு எழுத்தாளன். திருமணம் ஆகப் போகிறது. ஹாலிவுட்டில் திரைக்கதை ஆசிரியனாக நன்றாக சம்பாதிக்கிறான். ஆனால் அவனுக்கு இலக்கியம் படைக்க ஆசை. மனைவி ஆகப் போகிறவளுக்கு இலக்கியம் கிலக்கியம் எல்லாம் ஒரு விஷயம் இல்லை. 1920களின் பாரிஸ் – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்ட், ஹெமிங்வே, பிகாசோ, கோல் போர்ட்டர், சால்வடார் டாலி, லூயி புனுவெல், கெர்ட்ரூட் ஸ்டெய்ன், டி.எஸ். எலியட் போன்றவர்களின் பாரிஸ் – அவனைப் பொறுத்த வரை ஒரு லட்சிய உலகம். ஒரு நாள் இரவு பாரிசில் அவனுக்கு வழி தவறிவிடுகிறது. இரவு பனிரண்டு மணிக்கு ஒரு காரில் வரும் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்ட்! பிறகு அவன் தினமும் அந்த இடத்துக்கு வந்து இரவு 12 மணிக்கு 1920களின் பாரிசுக்குப் பயணிக்கிறான். ஹெமிங்க்வேயை சந்திக்கிறான். கெர்ட்ரூட் ஸ்டெய்ன் அவனது நாவலைப் படிக்க வாங்கிக் கொள்கிறாள். பிகாசோவின் காதலிக்கும் அவனுக்கும் பரஸ்பர ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு அவர்கள் இருவரும் 1920களின் பாரிசிலிருந்து அவளது லட்சிய உலகத்துக்கு – La Belle Epoque – 1890களின், பால் காகின், டூலோஸ்-லாட்ரெக் ஆகியோரின் பாரிஸ் – பயணிக்கிறார்கள். பால் காகினுக்கோ மைக்கேலான்ஜெலோவின் உலகம்தான் லட்சிய உலகம்!

ஓவன் வில்சன் இத்தனை சிறப்பாக நடிப்பார் என்று நான் நினைத்ததில்லை. டாலி வரும் காட்சி simply superb! கீழே அந்தக் காட்சியைக் கொடுத்திருக்கிறேன். படத்தின் நடுவில் இந்தக் காட்சி வருவதால் முழுதும் புரியாமல் போகலாம்; இருந்தாலும் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

2011இல் வந்த திரைப்படம். உட்டி ஆலன் இயக்கம். ஓவன் வில்சன், ரேச்சல் மக்காடம்ஸ், கேத்தி பேட்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். நான் டிவிடியைப் பார்த்தேன், ஆனால் யூட்யூபிலேயே கிடைக்கிறதாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: IMDB குறிப்பு

காதரின் ஸ்டாக்கெட் எழுதிய “ஹெல்ப்”

The_Help_movieஹெல்ப் போன வருஷம் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது. ஆக்டேவியா ஸ்பென்சருக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான ஆஸ்கார் கிடைத்தது. வயோலா டேவிசுக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். இவர்கள் இருவரைத் தவிர ஹில்லியாக நடித்த ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்டும் கலக்கி இருந்தார். சிறந்த நடிப்பு, சுவாரசியமான கதை இரண்டும் திரைப்படத்தை உயர்த்தின. ஆனால் படம் உலக மகா சிறந்தது இல்லை, அதற்கு அடுத்த படியில்தான் இருந்தது.

kathryn_stockettபடத்தைப் பார்த்ததிலிருந்து நாவலையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். புத்தகமும் அப்படித்தான். சுவாரசியமானது, ஒரு காலகட்டத்தை/சூழலை நமக்கு காட்டுகிறது, ஆனால் உலக மகா புத்தகம் இல்லை.

ஐம்பதுகள். அமெரிக்காவில் மிஸ்சிசிபி மாநிலம் கறுப்பர்களுக்கு எதிரான இன வெறியில் முன்னணியில் இருந்தது. ஒரு டிபிகல் சிறு நகரம். வெள்ளையர்கள் நகரத்துக்கு கறுப்பர்கள் “சேரி”யிலிருந்து தலைமுறைகளாக சென்று வீட்டு வேலை செய்கிறார்கள். ஹில்லி என்ற குடும்பத் தலைவி ஒரு டிபிகல் bully. அவளைப் பின்பற்றும் ஒரு கூட்டம். பல விதங்களில் அவமானப்படுத்தப்படும், ஒடுக்கப்படும் கறுப்பு வேலைக்காரிகள். தற்செயலாக ஸ்கீட்டர் என்ற பெண் கறுப்பு வேலைக்காரிகளின் கண்ணோட்டத்தை புத்தகமாக எழுத முனைகிறாள். அவளுக்கு தகவல் தருவதாகத் தெரிந்தால் இவர்கள் ஒழிந்தார்கள். ஆனாலும் ஒருவர் இருவர் என்று ஆரம்பித்து பலரும் அவளுக்கு “பேட்டி” கொடுக்கிறார்கள். புத்தகம் தங்களைச் சித்தரிக்கிறது என்று உணரும் வெள்ளை எஜமானிகள் தவிக்கிறார்கள்.

கதையின் உச்சக்கட்டம் என்று ஆசிரியர் நினைத்திருப்பது மின்னி என்ற வேலைக்காரி ஹில்லிக்கு கேக் செய்து கொடுக்கும் நிகழ்ச்சிதான். ஆனால் எனக்கு உச்சக்கட்டமாகத் தெரிவது பலரும் ஸ்கீடடரிடம் பேச வரும் இடம்தான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

பிடித்த சிறுகதை – நதிக்கரையில்

நதிக்கரையில் சிறுகதை எனக்குப் பிடித்தமான ஒன்று. பீமன், யுதிஷ்டிரன் ஆகியோரின் சித்திரங்களும், உள்ளே ஆறாத காயமாக இருக்கும் சோகமும் என்ன அற்புதமாக வந்திருக்கின்றன! கடோத்கஜனைத் தழுவ பீமன் ஏங்குவது எந்த அப்பனாலும் உணரக் கூடியது. அந்த சோக நேரத்தில் என் மனதில் ஓடிக் கொண்டிருந்த வரிகள் – “உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி!”

எனக்கு மகாபாரதப் பித்து அதிகம் என்று ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது சொல்லிக் கொள்வேன். 🙂 மீண்டும் அப்படி பீற்றிக் கொள்ள வாய்ப்பளித்த ஜெயமோகனுக்கு நன்றி!

அகிலனின் “வெற்றித் திருநகர்”

அகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். அதுவும் சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.

அகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂

கிருஷ்ணதேவராயரை தீர்க்க தரிசனம் நிறைந்த ஒரு மன்னராக – அதுவும் ஒன்றான பாரத நாடு என்ற எண்ணம் உடையவராகவும், ராஜபுதன நாடுகளோடு சேர்ந்து முகலாயரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராகவும் சித்தரித்திருக்கிறார். அவரது சபையில் இருக்கும் பிரபுக்கள் அதை உணர முடியாததால் முட்டுக்கட்டை போடுகிறார்கள். ராயரால் அவர்களின் மனதை மாற்ற முடியவில்லை.

அமைச்சராக இருக்கும் சாளுவர் ராயருக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிற்காது என்பதை உணர்கிறார். மதுரையைத் தலைநகராகக் கொண்ட இன்னொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதற்கு தன் மாப்பிள்ளையை மன்னராக்க பல சதிகளை செய்கிறார். விஸ்வநாதனுக்கும் தன் மகள் லக்ஷ்மிக்கும் உள்ள ஈர்ப்பை ஊக்குவிக்கிறார். நாகமரைத் தூண்டிவிடுவதே அவர்தான். ராயர் விஸ்வநாதனையே மதுரை மன்னன் ஆக்கிய பிறகும் அவரது சதிக்கு பொருளே இல்லாமல் போய்விடுகிறது. இருந்தாலும் தான் வில்லன், அதனால் சதி செய்தாக வேண்டும் என்று தொடர்ந்து சதி செய்து கொண்டே இருக்கிறார். அவர் கடைசியில் லக்ஷ்மியை மணக்கக் கூடாது என்று விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொள்வது ஒன்றுதான் உருப்படியான வில்லத்தனமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வருவது போல (ராஜராஜ சோழன் திரைப்படத்தில் சிவகுமாரும் முத்துராமனும் இப்படி சண்டை போட்டுக் கொள்வதாக எனக்கு மங்கலான ஒரு நினைவு) நாகமரும் விஸ்வநாதனும் படைகளை மோதவிடாமல் தாங்கள் இருவரும் தனியாக கத்தி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எதற்கு வீண் சண்டை என்று கோலி பம்பரம் ஏதாவது விளையாடி அதில் வெல்பவருக்கு தோற்றவர் அடிமை என்று சொல்லி இருக்கலாம். அகிலனுக்கு அது தோன்றாமல் போய்விட்டது.

கிருஷ்ணதேவராயரிடம் பல இன்றைய விழுமியங்களை – ஒன்றான பாரத நாடு இத்யாதி – ஏற்றி இருக்கிறார். ஜெயமோகனிடம் சமீபத்தில் இப்படி இன்றைய விழுமியம் அன்றைய மனிதர்களிடம் இருக்கிறதே என்று கமென்ட் அடிப்பதைப் பற்றி கொஞ்சம் இடி வாங்கினேன். நடக்கவே முடியாத விஷயம் என்று ஒன்றுமில்லை, அதற்கான சாத்தியக் கூறு இருந்தால் அது ஆசிரியரின் கற்பனை என்று விட்டுவிட வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்கான சாத்தியக் கூறு உண்டு என்று நிறுவ கொஞ்சம் வலுவான ஆதாரம் வேண்டும் என்றுதான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. ராயர் ராணா சங்காவுக்கு உதவி செய்தார் என்று ஏதாவது இருந்தால் சரி, இல்லாவிட்டால் இப்படி எழுதுவது எனக்கு உறுத்தத்தான் செய்கிறது.

வெற்றித் திருநகர் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

ஆனால் என்ன குறை சொன்னாலும் இதுதான் எனக்கு அகிலனின் சிறந்த சரித்திர நாவல். இது மட்டுமே எனக்கு கொஞ்சமாவது அப்பீல் ஆகிறது.

வெற்றித் திருநகர் ஜெயமோகனின் வணிக சரித்திர நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இடம் பெறுகிறது. என் கண்ணில் அது முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேங்கையின் மைந்தனை விட நல்ல நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்