சங்கர்லால் (தமிழ்வாணன்)

ஆங்கில மர்மப் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கும் முன் சங்கர்லால் எங்களுக்கு பெரிய ஹீரோ. அதுவும் எஸ்.எஸ். 66 என்ற நாவலை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். இன்றும் தேடிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ்வாணன் புத்தகம் அதுவே. ஆனால் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாகத்தான் சங்கர்லால் இருந்திருக்க வேண்டும்.

சில சங்கர்லால் புத்தகங்கள் இணையத்தில் கிடைத்தன. நாஸ்டால்ஜியாவால் படித்துப் பார்த்தேன். பத்து வயதில் என் பெண்கள் பள்ளியில் Young Author போட்டிக்காக பள்ளியில் எழுதிய கதைகளே இதை விடப் பரவாயில்லை. ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் இவருக்கு எவ்வளவோ தேவலாம். சங்கர்லால் பின்தொடரும் ஒருவர் மறைந்துவிடுகிறாரா? பிரச்சினையே இல்லை, சங்கர்லால் எங்காவது தேனீர் அருந்தப் போனால் அங்கே அவரும் உட்கார்ந்திருப்பார். இதில் அந்தக் காலத்து பதின்ம வயதினரைக் கவர சங்கர்லால் ஹாங்காங், டோக்கியோ, நியூ யார்க் என்று ஊர் ஊராகப் போகிறார். அங்கே போய் ஒன்றும் கிழிக்கமாட்டார், தேனீர் பருகுவார், அவ்வளவுதான். அந்த ஊருக்கு மர்மத்துக்கும் (கதையில் என்ன மர்மம் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பெரிய மர்மம்) தொடர்பே இருக்காது.

ஆனால் 40-45 வருஷங்களுக்கு முன் ஹாங்காங், டோக்கியோ பற்றி எழுதப்பட்டவை ஆவலைத் தூண்டின என்பதும் உண்மையே. கார்களை வாடகைக்கு எடுக்கலாம் (rental cars), எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகும் ட்ரைவிங் லைசன்ஸ் (International Driving License), ஸ்போர்ட்ஸ் கார்களின் பேர்கள் (ஃபோர்ட் மஸ்டாங்), நிர்வாண நடனம் (strip tease) போன்றவற்றை விவரிப்பது ஆர்வமூட்டியது.

தமிழ்வாணனுக்கு ஒரு முத்திரை உண்டு. பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் வைப்பார். இன்மொழி, மலையரசு, சொல்லழகன் மாதிரி. அவர்களும் நல்ல தமிழில் பேசுவார்கள் – “துன்பம் கொள்ள வேண்டாம்”, “தாழ்வில்லை” மாதிரி. இன்று கவர்வது அந்த ஒரு அம்சமே.

இருப்பதில் சுமாரான (குறு)நாவல்கள் என்று இருண்ட இரவுகள், டோக்கியோ ரோஜா ஆகியவற்றை சொல்லலாம். பிற படைப்புகளுடன் ஒப்பிடும்போது பரவாயில்லையே தவிர, எந்த விதத்திலும் படிக்க வேண்டியதில்லை. ஆனால் ரொம்ப சின்ன வயதில் – ஒரு ஏழெட்டு வயதில் – அப்பீல் ஆகக் கூடும்.

நான் மீண்டும் படித்த தண்டமான சங்கர்லால் நாவல்களில் சில: ஆந்தை விழிகள்,  ஹலோ சங்கர்லால், இன்னொரு செருப்பு எங்கே?, கொலை எக்ஸ்ப்ரஸ், மர்ம மனிதன், மர்மத் தீவு (1974), நாற்பதினாயிரம் ரூபாய், ரகசியம், சங்கர்லால் வந்துவிட்டார், விடியாத இரவுகள் மற்றும் பெர்லினில் சங்கர்லால், ஜெனீவாவில் சங்கர்லால், ஹாங்காங்கில் சங்கர்லால் (1975), நேபிள்சில் சங்கர்லால், நியூ யார்க்கில் சங்கர்லால், பாரிசில் சங்கர்லால்.

பற்றாக்குறைக்கு சங்கர்லாலுக்கு அடுத்தபடி தமிழ்வாணனே துப்பறியும் கதைகள் வரத் தொடங்கின. எம்ஜிஆர் துப்பறியும் படங்களே தேவலாம். சிகாகோவில் தமிழ்வாணன், டயல் தமிழ்வாணன், ஃப்ராங்க்ஃபர்ட்டில் தமிழ்வாணன், ஹவாயில் தமிழ்வாணன் எல்லாம் உலக மகா தண்டம். தண்டங்களில் சிறந்தது கெய்ரோவில் தமிழ்வாணன்.

சங்கர்லால் வராத நாவல்களும் உண்டு. மணிமொழி நீ என்னை மறந்துவிடு போன்ற நாவல்களை நாம் மறந்துவிடுவது நலம். இரும்புக்கை மனிதன், கதவு திறந்தது கை தெரிந்ததுமருதமலைச் சாரலிலே, மலையில் மறைந்த மனிதன், முரட்டுப்பெண், நடுவிரல், ஒரு குரல், பேய், பேய் மழை, பெயர் இல்லாத தெரு, விலகி நில் ஆகியவை அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் மாதிரி இருக்கின்றன. என்னைத் தேட வேண்டாம் குற்றப் பின்னணி இல்லாத புத்தகம், இவர்தான் எழுதினாரா என்ற வியப்பைத் தவிர வேறு எதுவுமில்லை.

ஆனால் தமிழ்வாணன் எல்லாத் துறைகளிலும் முயற்சி செய்தது அந்தக் காலத்தில் கொஞ்சூண்டு inspiration ஆகவும் இருந்தது. கல்கண்டு என்ற பத்திரிகை நடத்தினார், திரைப்படம் தயாரித்திருக்கிறார், மணிமேகலை பிரசுரம் கண்ட மேனிக்கு எல்லா துறைகளிலும் புத்தகம் வெளியிட்டது – “தேனீ வளர்ப்பது எப்படி”, “தேள்கடிக்கு மருந்து” மாதிரி. உடலுறவு பற்றி கூட புத்தகம் எழுதி இருப்பதாக மூத்த மாணவர்கள் பேசிக் கொள்வார்கள்.

தமிழ்வாணன் தமிழ் வணிக எழுத்தின் வரலாற்றில் அடிக்குறிப்பாக வரக் கூடிய இதழாளர். ஆனால் பொருட்படுத்தப்பட வேண்டிய எழுத்தாளர் அல்லர். நாஸ்டால்ஜியாவுக்காக “எஸ்.எஸ். 66”-ஐயும், ஒரு வேளை ஏதாவது உருப்படியாக எழுதி இருப்பாரோ என்ற சந்தேகத்துக்காக “கட்டபொம்மன் கொள்ளைக்காரனா?” என்ற புத்தகத்தையும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாரிடமாவது மின்பிரதி இருந்தால் கொடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கி குறிப்பு

பில் கேட்ஸ் டாப் 5 புத்தகங்கள்

பில் கேட்ஸ் வருஷாவருஷம் அந்த வருஷத்தின் சிறந்த புத்தகங்கள் என்று ஒரு புத்தகப் பட்டியலைப் பதிப்பார். இந்த முறை மாறுதலுக்காக தனது ஆல்டைம் ஃபேவரிட் புத்தகங்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டிருக்கிறார். ஒவ்வொரு genre-க்கும் ஒன்று.

வசதிக்காக பட்டியல் மட்டும் கீழே:

இவற்றில் Stranger in a Strange Land, மற்றும் Team of Rivals ஆகியவற்றைப் படித்திருக்கிறேன், பரிந்துரைக்கிறேன். அதிலும் Team of Rivals ஒரு கிளாசிக்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

டம்பாச்சாரி விலாசம்

டம்பாச்சாரி விலாசம் 1847-இல் எழுதப்பட்ட ரொம்பப் பழைய நாடகம். (தமிழ் விக்கி தளம் 1867 என்கிறது, ஆனால் என் குறிப்புகளின்படி 1847தான், எங்கே பார்த்தேன் என்பதுதான் நினைவில்லை) பாய்ஸ் கம்பெனி பாணி நாடகங்களில் இதுவே முதல் நாடகம் என்று எங்கோ படித்த நினைவு. தகவல் அல்லது நினைவு தவறாக இருக்க வாய்ப்புண்டு. பம்மல் சம்பந்த முதலியார் போன்ற முன்னோடியே இந்த நாடகத்தை முன்னோடி நாடகம் என்று குறிப்பிடுகிறார். ரத்தக்கண்ணீர் நாடகம்/திரைப்படத்தின் மூல வடிவம் இதுவே என்றும் சொல்லப்படுகிறது.

எனக்கு பழைய நாடகங்களில் ஈர்ப்பு உண்டு. அதுவும் எத்தனை அரதப்பழசோ அத்தனை தூரம் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது 🙂 டம்பாச்சாரி விலாசம் திரைப்படமாக மறு ஆக்கம் செய்யப்பட்டதும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. (ஆனால் ரத்தக்கண்ணீர் திரைப்படமே எனக்கு பெரிதாக சுவாரசியப்படவில்லை.) ஒரே பிரச்சினை, ஆர்க்கைவ் தளத்தில் கிடைக்கும் மின்பிரதியின் தரம் கொஞ்சம் மோசம். படிப்பது கஷ்டம். தம் கட்டிப் படித்தாலோ அவ்வப்போது கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது.

டம்பாச்சாரி விலாசம் அந்தக் காலத்திற்கு பெரும் புரட்சியாக இருந்திருக்க வேண்டும். ராமன், கிருஷ்ணன் என்று தெரிந்த கதை இல்லை; ராஜா ராணி கிடையாது; அன்றைய சமூகம்தான் பின்புலம் (மிகைப்படுத்தப்பட்ட பின்புலமாக இருக்கலாம்.)

நாடகத்தின் நடை பெரிய மாற்றமாக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன். பாட்டுகளும் வசனங்களும் கலந்து வருகின்றன. பல முறை ஒரு பாடலை விளக்கியே வசனம் வருகிறது. அன்றைய பேச்சு மொழி நிறையவே பயன்படுத்தப்படுகிறது. பல மொழி வார்த்தைகள் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. தெலுகு வேலைக்காரன் – பெத்தபோயி – என்றால் அவன் தெலுங்கில்தான் பேசுகிறான். சோக்ரா உருதுவில். ஆங்கிலம் பீட்டர் விடுவது போல அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் மொழியே தமிழ் நாடகத் துறையில் முன்னடியாக இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளிலேயே (எழுத்துப் பிழைகளைத் திருத்தி இருக்கிறேன்.)

இந்நூலில் தெலுங்கு, பார்சி, இங்கிலீஷ் முதலாகிய தேசிய மொழிகளும் வாராங்க போராங்க வாராங்கோ போராங்கோ அவங்கோ இவங்கோ முதலாகிய கிராமிய மொழிகளும் ஸமஸ்கிருத நாடகங்கள் போலவும் தமிழ்க் குறவஞ்சி முதலானவைக்கள் போலவும் வேண்டிய இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

டம்பாச்சாரியும் அவன் நண்பர்களும் பீட்டர் விடுவதற்கு ஒரே ஒரு உதாரணம் கீழே.

வெயிட்டு செய் சட்டுவாஜீ
கெயிட்டுபோற் பறந்தே ஓடி
ஃபெயிட்டனைப் போட்டுக் கொண்டென்
ரயிட்டரை வரச் சொல்வாயே

ஆங்கிலத்தில் – “Wait, my assistant! Fly like a kite and ask my clerk to come back in the pheaton!”

கதைப் பின்னல் இன்று காலாவதியாகிவிட்ட ஒன்றுதான். என்ன நடக்கப் போகிறது என்பது மிக வெளிப்படை, கதையின் போக்கு வெகு சுலபமாகப் புரிந்திருக்கும். உதாரணமாக வில்லன் பேர்கள் எல்லாம் குடிகேடன், ஆயிரப் புளுகன் என்றுதான் இருக்கும். அவர்கள் அறிமுகக் காட்சியில் தான் எத்தனை குடும்பத்தைக் கெடுத்தேன், தான் எப்படிப்பட்ட பொய்களைச் சொல்வேன் எனறு விளக்கி பாட்டு பாடுவார்க்ள். டம்பாச்சாரியும் அவர்கள் வில்லத்தனத்தை மெச்சி எதிர்பாட்டு பாடுவார். எதற்கு குடிகேடனை தன் நண்பராகக் கொள்கிறார் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பாத்திரப் படைப்புகளில் எந்த நுணுக்கமும் கிடையாது. ஆனால் டம்பாச்சாரி போன்ற ஒரு ஜமீந்தார், அவனை ஏமாற்றி வாழும் ஒட்டுண்ணி வில்லன்கள், தாசி, தாசியின் அம்மா, தாசிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் “மாமா”, வைத்தியர், சில பல வேலைக்காரர்கள், நேர்மையான பணியாட்கள், உத்தம மனைவி என்று பல சமூகத் தட்டுகளில் பாத்திரங்களை படைத்ததே பெரும் புரட்சியாக இருக்க வேண்டும். (மிருச்சகடிகம், மத்தவிலாசப் பிரகசனம் போன்ற விதிவிலக்குகளில் இப்படிப்பட்ட பாத்திரங்கள் இருக்கலாம்.)

ஒரு வரியில் சொன்னால் – உண்மையான முன்னோடி நாடகம்.

நாடகத்தை எழுதியவர் காசி விஸ்வநாத முதலியார். சைதாபுரத்துக்காரர், அதாவது இன்றைய சைதாப்பேட்டைக்காரர். 1806இல் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். முதலில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பிறகு மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார். டம்பாச்சாரி விலாசம் தவிர, தாசில்தார் விலாசம், பிரம்ம சமாஜ விலாசம் ஆகிய நாடகங்களை எழுதி இருக்கிறார்.

1880க்குப் பிறகு புகழ் பெற்று விளங்கிய பாலாமணி அம்மாள் குழுவினர் இந்த நடிகத்தை அடிக்கடி நடத்துவார்களாம். வசூல் குறையும்போதெல்லாம் இந்த நாடகத்தை போட்டுவிடுவார்களாம். தாசி மதனசுந்தரியாக பாலாமணி அம்மாளும் டம்பாச்சாரி பாத்திரத்தில் ராஜாம்பாள்/கோகிலாம்பாள்/வடிவாம்பாள் ஆகியோரும் நடித்தனர், பிற்காலத்தில் சி.எஸ். சாமண்ணா ஐயர் ஒரே நாளில் பல பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார் என்றும் மூத்த நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கடராமன் தகவல் தருகிறார். (அவர் இன்னொரு மூத்த நடிகரான சாரங்கபாணியிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.)

எளிய கதைதான்; டம்பாச்சாரி வீண் டம்பத்துக்காக பரம்பரையாக வந்த பணத்தை கோட்டை விடுகிறான். ஒட்டுண்ணி நண்பர்கள், தாசி மதனசுந்தரி அவனை சுத்தமாக மொட்டை அடித்துவிடுகிறார்கள். ஆனாலும் கடனை வாங்கி இவர்களுக்காக செலவழித்துக் கொண்டே இருக்கிறான். மனைவி மக்களைத் துரத்திவிடுகிறான். கடனைத் திருப்ப முடியாமல் சிறை. தப்பித்து வந்தால் தாசியும் நண்பர் என்று நினைத்தவர்களும் அவஐ அவமதிக்கிறார்கள், மனம் திருந்துகிறான். அப்பர் சுவாமிகள் உபதேசம் செய்கிறார். அவன் அப்பா அவனுக்கு தான் சேர்த்து வைத்ததில் கொஞ்சம்தான் கண்ணில் காட்டி இருக்கிறார், அதனால் முன் போலவே சொகுசு வாழ்க்கை, சுபம்! (ரத்தக் கண்ணீர் போல நோய், பிச்சை எடுக்கும் நிலை எல்லாம் வரவில்லை)

நாடகத்தில் அங்கங்கே ஒரு வரியைப் படித்ததும் நிறுத்திவிடுவேன். அதிலிருந்து அன்றைய சமூகச் சூழ்நிலை பற்றி கீற்று போல ஒரு குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது.

முதல் பக்கத்திலேயே எனக்கு களைகட்டிவிட்டது. எழுதியவர் முதலியார், மெய்ப்பு பார்த்து பதித்தவர் ராவுத்தர். ஜாதி ஆசாரம் மிகுந்த காலத்தில் கூட இப்படி எல்லாம் தொழில் முறை உறவு இருந்திருக்கிறது.

வடமொழி, தமிழ், தெலுகு ஆகியவற்றில் பெரும் புலவர்கள் என்று முதல் பக்கத்தில் ஒரு பட்டியல் போடுகிறார், அதாவது அன்று இந்த மூன்று மொழிகளுமே படித்தவர்களுக்கு முக்கியமாக இருந்திருக்க வேண்டும்.

கை வறண்ட பிறகு கடன் வாங்கப் பகல் வேஷம் போட்டு டிஸ்கவுண்டு செய்வதால் டிஸ்கவுண்டு மேஸ்டராகி கோர்ட்டு வழக்குகளாடி இன்ஸால்வெண்டு ஆக்டில் வருவதால் இன்ஸால்வேண்டு மேஸ்டராகி பின்பு பிழைக்க வகை தெரியாதவர்களாததால் ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, குடிகேடன், இவர்களில் ஒருவாராகி…

இந்த வரியில் அப்படியே நின்றுவிட்டேன். அது என்ன டிஸ்கவுண்டு மேஸ்டர், தலைப்பாகை மாற்றி? (தலைப்பாகை மாற்றிக்கு பின்னால் விளக்கம் வருகிறது, அவன் தொப்பியை கழற்றி இவனுக்கும் இவன் தொப்பியைக் கழற்றி அவனுக்கும் போடுபவனாம், குல்லா போடுபவன் என்று பிற்காலத்தில் மாறி இருக்க வேண்டும்) திவால் ஆவது 1850களிலேயே சாதாரண நிகழ்ச்சியா? அப்படி என்றால் ஆங்கிலேய ஆட்சி, சட்டம், நீதிமன்றங்கள் எல்லாம் அப்போதே எத்தனை வலுவாக நிறுவப்பட்டிருக்க வேண்டும்? நீதிமன்றங்களில் முதலியார் நிறையப் பார்த்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

அப்புறம் நிறைய disclaimer – அதில் ஒன்று.

சற்பிராமண… அந்தணர்களை நான் தூஷிக்கவில்லை. பிராமண ஆசாரங்களிலிருந்து வழுவி… தாழ்ந்த குலத்தாருக்கு ஸ்தீரிகளை பிணைத்து வைக்கிற அப்படிப்பட்ட மகா நீசமான சீவனம் செய்கிறவர்களை மாத்திரமே எடுத்துச் சொல்ல வந்தது

அப்படி என்றால் இதையே பிழைப்பாக சில பல பிராமணர்களாவது கொண்டிருக்க வேண்டும்! இந்த நாடகத்தின் கும்பகோணம் ஐயரின் மறுவடிவம்தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி!

சில வர்த்தகர்கள்… குஜராத்திப் பேட்டையில் நடப்பது போல அதிக வட்டி முதலாகியா லாபத்தை இச்சித்து

குஜராத்திப் பேட்டைதான் இன்றைய சௌகார்பேட்டையா? 200 வருஷங்களுக்கு முன்பே வட்டி வியாபாரம் செய்யும் குஜராத்திகள் குடியிருப்பு சென்னையில் இருந்ததா?

வினோதரசமஞ்சரி புத்தகத்தை எழுதிய அஷ்டாவதனம் வீராசாமி செட்டியார், நன்னூலைப் பதிப்பித்த திருத்தணிகை விசாகப் பெருமாளையர் உட்பட்ட 20-30 பேர் சாற்றுக்கவிகள் (வாழ்த்துக்கள்) கொடுத்திருக்கிறார்கள். முதலியார் அன்று சென்னை பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியர்கள் பலரிடமிருந்தும் சாற்றுக்கவிகளை பெற்றிருக்கிறார். வேலூர் சுப்பராய முதலியார் மகாபாரதத்தை கீர்த்தனையாகப் பாடி இருக்கிறாராம், யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (லலிதாராமிடம் விசாரித்தேன், அவரே கேள்விப்பட்டதில்லை. தேடிப் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.)

விசாகப் பெருமாளையர்தான் அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் தலைமை தமிழாசிரியராம். முதலியாரின் வார்த்தைகளிலேயே –

மகா-ஸ்ரீ-ஸ்ரீ கம்பெனியாரால் ஏற்படுத்தப்பட்ட யூனிவர்சிடி எனும் சென்னை சகலசாஸ்திரசாலை தமிழ்த் தலைமை புலமை நடாத்தும் இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர்

கம்பெனி என்று இங்கே சொல்லி இருப்பது இந்த நாடகம் கம்பெனி நாட்களில், அதாவது 1857-க்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற என் குறிப்புக்கு வலு சேர்க்கிறது. மேலும் கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன் என்று ஒரு இடத்தில் வருகிறது. எல்ஃபின்ஸ்டோன் 1842 வரைதான் சென்னை கவர்னராக இருந்தவர்.

சென்னை கவர்மெண்டு நார்மல் ஸ்கூல் தமிழ்த் தலைமைப் புலவர் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை வாழ்த்துப்பா கொடுத்திருக்கிறார், அது என்ன நார்மல் ஸ்கூல், இன்று என்ன பெயர் என்று தெரியவில்லை. பச்சையப்பா கல்லூரி அப்போதே இருந்தது என்று தெரிகிறது, பச்சையப்ப முதலியாரது சென்னைப் பலகலைச்சாலையில் தமிழ்த்தலைமை புலமை நடாத்தும் வித்துவான் சுப்பராயப் பிள்ளையும் கொடுத்திருக்கிறார். அதே பல்கலையில் தமிழ்ப் புலமை நடாத்தும் கூவம் ராஜா திரிபுராந்தக முதலியாரும், கூவம் சுப்பராய முதலியாரும் கொடுத்திருக்கிறார்கள். கூவம் என்று அப்போது ஒரு ஊர் இருந்திருக்கிறது! பல்கலை என்ற வார்த்தை அப்போதே புழக்கத்தில் இருந்திருக்கிறது.

சாற்றுக்கவிகளில் பாதி எனக்கு புரியவில்லை, கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது. அதுவும் செட்டியார் சிலேடையில் புகுந்து விளையாடுகிறார். அவர் “கற்பனை” என்ற வார்த்தையை நான்கு விதத்தில் பயன்படுத்துகிறார், எனக்கு மூன்றுதான் புரிந்தது. (கல் பனை மரம் போன்ற துதிக்கை உள்ள பிள்ளையார், கற்பு நெறி, கற்பனை..)

அங்குசபாசனுக்கும் அருள் குமரேசனுக்கும் மங்களம் என்று தொடங்குபவர் மகுட விக்டோரியா, மஹா பார்லிமெண்டார், அகில போர்ட் ஆஃப் கன்ட்ரோல், ஹானரபில் கம்பெனி, தகவு மைசூர் கர்த்தர் (மைசூர் மஹாராஜா), தஞ்சாவூர்க் கொற்றவர், புகழு நவாப், புனித கவர்னர், சுப்ரீம் கோர்ட்டார், சதர் கோர்ட்டார் என்று எல்லாருக்கும் மங்களத்தை அடுக்கிக் கொண்டே போகிறார்.

அங்கங்கே அன்றைய பெரிய மனிதர்கள் – கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன், கவுன்சில் மெம்பர் (காஜுலு) லக்ஷ்மிநரசு, செல்வந்தர்கள் பச்சையப்ப முதலியார், மணலி சின்னையா பிள்ளை, கோமள சீனிவாசப் பிள்ளை, திருத்தணிகை விசாகப் பெருமாளையர், (மழவை) மகாலிங்க ஐயர் – ஆகியோரின் பேரை நுழைத்துவிடுகிறார். சில இடங்களில் அவர் பெயரையும் நுழைத்துக் கொள்கிறார். வீட்டில் திருடியவன் அதிகெட்டிக்காரன் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்டு அன்றைய பெயர் பெற்ற திருடர்களின் பட்டியல் ஒன்று தருகிறார் – தண்டையார்பேட்டை குமரன், ஏரிவாய் தாண்டவராயன், தலைவிரிச்சான் ரத்னசபாபதி, தீவட்டிச் செல்லன் அப்புக்காத்தான்….

டம்பாச்சாரி அறிமுகக் காட்சியில் காதில் பச்சை முருகு காந்தி வீசும் சீமை ரவைக் கடுக்கன்; திருத்தமாக வாரப்பட்ட கன்னக் கருத்த ஜுலுப்பா (தலைமுடி என்று புரிகிறது, அனேகமாக உருது வார்த்தையான ஜுல்ஃப் என்று நினைக்கிறேன்), காதுக்கு கீழே கிருதா, முறுக்கிய மீசை, செஞ்சாய வேஷ்டி, கொக்கி மாட்டிய இஸ்திரி ஜாக்கெட்டு, சரிகை ஷால், நவாத்தின மோதிரம், கைக்குள் டப்பி (பொடி டப்பியா?), அக்கிள் (கைக்)குட்டை, வாட்ச், நெக்கில் (கழுத்தில்) செயின், ஜோடுகள், புனுகு ஜவ்வாது அணிந்து வருகிறான். இதுதான் அன்றைய ஸ்டைல் போலிருக்கிறது.

அவனிடம் சிப்பந்திகளாக சட்டுவாஜி (அப்படி என்றால்?), சோக்ரா, தவசுப்பிள்ளை, உக்காபர்தார் (ஹூக்காக்களை தயார் செய்பவர்), பெத்தபோயி (வீட்டு சாமான்களை சுத்தம் செய்பவர்), ரயிட்டர் (ரைட்டர், இவர்தான் சம்பளப் பட்டுவாடா செய்கிறவர் போலிருக்கிறது), தாருகா (சிப்பந்திகளின் மேலாளர் என்று நினைக்கிறேன்), கணக்கப் பிள்ளை, கோச்சுமான், வாட்ச்மேக்கர் (கடிகாரங்களுக்கு சாவி கொடுக்கும் பணியைச் செய்பவர்), பாரா சவுக் சேவகர் (வாயிற்காவல்), மஸால்ஜீக்கள் (வாசலில் லாந்தர் ஏற்றுபவர்கள்), பியூன்கள் என்று ஒரு பட்டாளமே வேலை செய்கிறது. இதில் உக்காபர்தார் சர்வசாதாரணமாக பான்சோத் (பெஹன்சோத், தமிழில் வக்காளவோழி) என்று வ்சனம் பேசுகிறார்! சிப்பந்திகள் திருடுகிறார்கள், ஆனால் எஜமானர் பொருட்படுத்துவதில்லை. டம்பாச்சாரி கணக்கரிடம் கைமாற்று வேண்டி இருந்தால் குஜராத்தி பேட்டையில் வாங்காதே, அவர்கள் ஒரே நாளில் எல்லா சொத்தையும் ஜப்தி செய்து அபகரித்துவிடுவார்கள் என்கிறான்.

முதல் காட்சியில் டம்பாச்சாரியின் நண்பர்கள் – குடிகேடன், ஜகஜாலப் புரட்டன், ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, இன்சால்வெண்டு மேஸ்டர், டிஸ்கவுண்டு மேஸ்டர், பகல் வேஷக்காரன், கவிராஜசிங்கம் கதிரைவேல் பண்டிதர் – விருந்துண்ண வருகிறார்கள். டம்பாச்சாரியின் சிற்றப்பா. மகா கஞ்சனான பரமலோபன் அவர்களுடன் சண்டை போடுகிறான். ஆனால் டம்பாச்சாரி சுகங்களை அனுபவிக்க மட்டும் ஒரு சங்கமே அமைக்கத் திட்டமிடுகிறான். அவனை மயக்க வேண்டும் என்று மதனசுந்தரி என்ற தாசி திட்டம் போடுகிறாள். கும்பகோணம் ஐயர் தூது போகிறார். மதனசுந்தரிக்கு மிட்டா, ஜமீன், கம்பெனி பத்திரங்கள் எல்லாவற்றையும் விற்று, முன்னோர் கட்டிய சத்திரங்களை இடித்து, அதிலிருந்து உத்தரங்கள் எல்லாவற்றையும் எடுத்து மெத்தை வீடு கட்டித் தருகிறான். கவர்ச்சிக் காட்சிக்காக நீ நிர்வாணமாக நின்றுகொண்டு எனக்கு எண்ணெய் தேய்த்துவிடு என்கிறான். (பிற்காலத்தில் பாலாமணி அம்மாள் என்ற அன்றைய நட்சத்திர நாடக நடிகை தாராசசாங்கம் என்ற நாடகத்தில் பார்ப்பவர்களுக்கு உடையே இல்லாத மாதிரி தோன்றும் மெல்லிய உடை அணிந்து எண்ணெய் தேய்த்துவிடும் காட்சி படுபிரபலம் என்று எம்.ஆர். ராதா எங்கோ எழுதி இருப்பதாக நினைவு.)

பூரி, ரொட்டி, ஆப்பம், வெண்ணெய், முட்டை, டீ ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். டீ என்றால் தேநீர்தானா என்று தெரியவில்லை! ரொட்டியை வெட்டு என்பதிலிருந்து அது இன்றைய unsliced bread ஆக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

நண்பர்களில் ஆயிரப் புளுகன் என்ற பாத்திரம் பேசும் வசனம் –

அகப்பட்டவர்களை ஏமாற்றி அவர்களுக்கு ஆயிரம் பொய்களைச் சொல்லி ஜகஜல்லி அடித்து கையிலிருப்பதைத் தட்டிக் கொண்டு சடகோபம் வைத்து வருகிறேன்

ஏமாற்றுவதற்கு சடகோபம் வைப்பது என்று சொல்வதை இது வரை பார்த்ததில்லை. ஜல்லி அடிப்பது என்று சுஜாதாவைத் தவிர வேறு யாரும் பய்ன்படுத்திப் பார்த்ததில்லை.

தலைப்பாகை மாற்றி காப்பிரைட்டுகளைத் திருடுவான் என்று ஒரு வரி வருகிறது. அப்படி என்றால் 1850களுக்கு முன்பே காப்பிரைட் சட்டங்கள் வழக்கில் இருந்திருக்கின்றன.

கவிராஜ பண்டிதர்

ஆசுபத்திரியில் கடிக்கவிடுவது அட்டை

என்று ஒரு இடத்தில் சொல்கிறார். அட்டைகளை கடிக்கவிட்டு மாசுள்ள ரத்தத்தை வெளியேற்றுவது அப்போதும் பழக்கத்தில் இருந்திருக்கிறது.

நண்பர்களுக்கு ஏற்படுத்திய விருந்தில் சீஸ்கேக், ஸ்பஞ்ச் கேக், பட்டர் கேக், ஃப்ரெஞ்சு மகரூன், மாகரோனி, ஃபிங்கர்கேக், மஃபின் பரிமாறப்படுகின்றன. இவற்றில் அனேகமானவற்றை நான் அமெரிக்கா வந்த பிறகுதான் கேள்வியே பட்டேன். 1850களிலேயே இவை சென்னையில் கிடைத்தனவா?

தாசி மதனசுந்தரிக்கு அவள் தாய் சொல்லித் தரும் உத்திகளில் ஒன்று –

மார்பின் மீதும் எந்தன் உத்தரீயம் போடு ஒரு பக்கம் தெரியவே

டம்பாச்சாரிக்கு கடன் கொடுப்பவர்களில் கோமுட்டி செட்டியார் புல்லையா செட்டியும் ஒருவர். அவர் எப்படி முன்னேறினார் என்பதை விவரிக்கிறார்.

முருக்கிலை தைத்து விற்றும் ஊசற்பட்டாணி விற்றும்
சரக்குள மளிகை வைத்தும் சராப்பு பேரங்கள் செய்தும்…

முதல் முதல் அரிசி போட்டு முருக்கிலை வாங்கி தைத்து விற்று துட்டாக்கி அந்தத் துட்டுக்கு பட்டாணி வாங்கி வறுத்து விற்றுப் பணமாக்கி அந்தப் பணத்துக்கு மிளகாய் புளி வாங்கி விற்று ரூபாயாக்கி, அந்த ரூபாய்க்கு கருமாந்திரத்தில் கொடுக்கப்பட்ட வஸ்திரங்களை குச்சிலிக் கடையில் பார்ப்பார் கொண்டு வந்து விற்க, அதுகளை வாங்கி ஜவுளி பேரம் செய்து ரூபாயை வராகனாக்கி அந்த வராகனைக் கொண்டு சராப்புக் கடை வைத்து வாங்கும்போது ஒன்பது மாற்றை ஏழு மாற்றுப் பொன்னென்றும் விற்கும்போது ஏழு மாற்றை ஒன்பது மாற்றென்றும் சொல்லி விற்று மேற்படி வராகன் மொத்தத்தை ஆயிரம் பதினாயிரம் லட்சமாகப் பெருக்கி அதைக் கோடிக்கணக்காக்க பேராசை பூண்டு டம்பாச்சாரிக்கு டிஸ்கவுண்டு கடன் கொடுத்து ஏமாந்து போக புல்லைய செட்டியார் வருகிற விதம் காண்க

கடன் கொடுக்கும் இன்னொருவர் கப்பல் வியாபாரம் செய்யும் ஷேக் மீரா லப்பை. லப்பை வியாபாரம் செய்யும் பொருட்களில் ஒன்று மயிர்முளைஞ்சான் கட்டை (வசம்பாம்!). இன்னொன்று குண்டி கிளிஞ்சாலும் கிளியாத முத்து வண்ணச் சேலை. அதைத் தவிர முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம், பச்சை, கெம்புக்கல், வைடூரியம், சீப்பு சிக்காங்கோல், சவுரி மயிர், குங்குமப்பூ, கோரோஜனம், ஜாதிக்காய், சாபத்திரி, லவங்கம், மொட்டைக் கொப்பரை, ருத்திராட்சம் என்று எல்லாவற்றையும் இறக்குமதி செய்கிறார். கடன் திருப்பி வரவில்லை என்றதும் வக்காளவோளி, கண்டாரோளி, தாயோளி என்றெல்லாம் டம்பாச்சாரியை திட்டுகிறார். இருவரும் டம்பாச்சாரி மீது கேஸ் போட, “படித்த” லாயர் துபாஷி அவர்களை சுலபமாக ஏமாற்றுகிறார்.

பண்டாரங்கள் பத்ரகிரி பாணியில்

ஆங்காரம் உள்ளெழுப்பி ஐம்புலனில் மனம் செல்ல
தூங்காமல் வேசியுடன் சுகித்திருப்பது எக்காலம்?

என்று பாடுகிறார்கள்.

நாடகத்தின் நடுவில் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் எழுதிய சமையல் நூலை வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்போம் என்று ஒரு வரி வருகிறது. சமையல் புத்தகங்கள் வர ஆரம்பித்துவிட்டன் போலிருக்கிறது!

முன்னோடி நாடகம். ஆனால் நாடகத்தில் அதைத் தவிரவும் கவர்கிறது. பிரதாப முதலியார் சரித்திரம் போல. கறாராகப் பார்த்தால் காலாவதி ஆகிவிட்டதுதான், ஆனால் I found it charming. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

ஜெயமோகன் நாவலை மொழிபெயர்க்க நிதிக்கொடை

வெள்ளை யானை எனக்குப் பிடித்த ஜெயமோகன் நாவல்களில் ஒன்று. அது சரி, பிடிக்காத ஜெயமோகன் நாவல் அபூர்வ்ம்தான்.

வெள்ளை யானை நாவலை மொழிபெயர்க்க PEN அமைப்பு நிதிக்கொடை அளித்துள்ளது. அறிவிப்பிலிருந்து:

Priyamvada Ramkumar’s translation from the Tamil of White Elephant by B. Jeyamohan

From the judges’ citation: Within the vast sub-genre of anticolonialism literature, White Elephant, a novel by the Tamil author and literary activist B. Jeyamohan, is a rarity because it gives us a fictionalized account of, arguably, the earliest Dalit uprising in India. Set in 1878 against the backdrop of the great famines in British India, the story unfolds, interestingly, from the point of view of an Irish police officer of the British Crown. Most importantly, through the character of Kathavarayan, the novel brings to the fore the forgotten legacy of Pandit C. Iyothee Thass, the first anti-caste leader from the Madras Presidency, who laid the groundwork for several other Dalit leaders like B. R. Ambedkar. Jeyamohan is a prolific and much-lauded Tamil writer, but he is mostly unknown to the Anglophone readership. This landmark historical novel, translated with much care by Priyamvada Ramkumar (who recently published the first ever book-length English translation of Jeyamohan) is a crucial intervention in our understanding of subaltern lives in India and a much-needed inclusion in anticolonial literature.

PEN அமைப்பு இலக்கியம் + மனித உரிமை, அதிலும் குறிப்பாக கருத்துரிமை இரண்டும் ஒன்றின் மூலம் மற்றொன்று முன்னே செல்லவேண்டும் என்ற நோக்கம் உள்ளது. ஆனால் இவர்களுக்கு மாதொருபாகனுக்கும் வெள்ளை யானைக்கும் உள்ள தர வித்தியாசம் தெரியுமா என்று ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் எந்த வழியாக ஜெயமோகனின் எழுத்து ஆங்கிலம் பேசும் மேலை உலகுக்கு சென்றாலும் அதை முழு மனதாக வர்வேற்கிறேன். பிரியம்வதாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்ப்ட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
PEN அமைப்பின் அறிவிப்பு
ஜெயமோகன் குறிப்பு

ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு”

மீள்மீள்பதிவு. குற்றவாளிகள் விடுதலை ஆகி இருப்பதால் மீள்பதித்திருக்கிறேன். ஒரிஜினல் பதிவு இங்கே.

சட்டரீதியாகத்தான் விடுதலை நடந்திருக்கிறது. குறை எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இசைவில்லை. ரகோத்தமன் தன் புத்தகத்தில் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். விடுதலை ஆனவர்கள் எல்லாருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தெரிந்தேதான் ஈடுபட்டிருக்கிறார்கள். என் கருத்தில், they crossed the line in sand.


இது ஒரு மீள்பதிவு. முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை பற்றி சர்ச்சை அடிபட்டுக் கொண்டிருப்பதால் மீண்டும் பதித்திருக்கிறேன்.

தமிழர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி ராஜீவ் படுகொலை. ராஜீவின் உடல் சின்னாபின்னமாகிக் கிடந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று.

அதுவும் ஓரிரு மாதங்களில் சிவராசனைப் பிடித்தார்களா, கேஸ் முடிந்ததா என்றால் அதுவுமில்லை. நாலைந்து வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” குற்றச்சாட்டுகள் என்று ஏதாவது நியூஸ் வந்துகொண்டே இருந்தது. இதில் வெளியே வராத விஷயங்கள் இருக்கிறது என்று தோன்ற வைத்தது.

வழக்கைத் துப்பறிந்த முக்கிய அதிகாரியான ரகோத்தமன் எழுதிய இந்தப் புத்தகம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ரகோத்தமன் தலைமை அதிகாரி கார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு புலனாய்வில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பதாவது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

ராஜீவ் இறந்த அன்று இதைச் செய்தது பஞ்சாப் தீவிரவாதிகளா, அஸ்ஸாம் தீவிரவாதிகளா என்றெல்லாம்தான் யோசித்திருக்கிறார்கள். புலிகளின் பேர் அவ்வளவாக அடிபடவில்லை. ராஜீவைக் கொன்று புலிகள் தமிழகத்தின் ஆதரவை இழக்கமாட்டார்கள் என்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஒரே க்ளூ ஹரிபாபுவின் காமிரா.

காமிராவை வைத்து ஹரிபாபுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஹரிபாபுவை வேலைக்கு வைத்திருந்த சுபா சுந்தரத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. நளினியைத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். முருகன், சின்ன சாந்தன், சிவராசன் என்று ஒவ்வொன்றாக கண்ணிகளைப் பிடித்திருக்கிறார்கள். திறமையான சதி, சிறப்பான புலனாய்வு.

ஆனால் ஹரிபாபுவின் காமிரா தற்செயலாகக் கிடைக்கவில்லை என்றால் புலனாய்வு தடுமாறிப் போயிருக்கும், எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை என்பதை ரகோத்தமனே ஒத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சதியின் ஒரு முனையை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன? ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை ஃபோட்டோ பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா? பயங்கர சைக்கோத்தனமாக இருக்கிறது.

ரகோத்தமனுக்கு புலனாய்வின் போக்கில் முழு திருப்தி இல்லை. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறார். குறிப்பாக மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தவர், கருணாநிதி, வைக்கோ, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டாம் என்று தான் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இது உண்மையாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். வைக்கோவுக்கு சதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நெருக்கமானவர் அவர் என்பது தெரியாத தமிழன் கிடையாது. புலிகள் இப்படி தமிழ்நாட்டில் புகுந்து ராஜீவை படுகொலை செய்திருக்கிறார்கள், உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றாவது விசாரிக்க வேண்டாமா? நாலைந்து வருஷம் கழித்து ஜெயின் கமிஷன் மட்டும்தான் அவரை விசாரித்ததாம். மரகதம் சந்திரசேகர் இந்திரா-ராஜீவுக்கு நெருக்கமானவராம். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வந்ததே ம. சந்திரசேகர் மேல் இருந்த அன்பினால்தானாம். ஆனால் அவரது குடும்பத்தவரை ஏமாற்றிதான் ராஜீவுக்கு அருகே வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் யாரையும் எம்பராஸ் செய்ய வேண்டாமென்று மேல் அதிகாரிகள் நினைத்ததால் அவர்களை நெருங்க முடியவில்லையாம். கருணாநிதி அதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்னால் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மேற்பார்வைக்கு இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி போலத் தெரியலாம். கருணாநிதியும் இது சாதரணமாக நடப்பதுதானே என்று சொன்னாராம். ரகோத்தமன் அப்படி கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டம் ரத்து என்பது நடந்ததே இல்லை என்கிறார். இது நிச்சயமாக ஒரு சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சி. ஆனால் விசாரிக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடப்பட்டதாம். சிவராசனை தன்னால் உயிரோடு பிடித்திருக்க முடியும், ஆனால் கமாண்டோ படைகளோடு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டேன், அதற்குள் சிவராசன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்கிறார்.

ரகோத்தமன் வைக்கும் இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு மெத்தனம் – குறிப்பாக ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளில். ராஜீவ் வர வேண்டிய விமானம் சில பிரச்சினைகளால் மெதுவாக கிளம்பி இருக்கிறது, கூட்டத்துக்கு தாமதமாக வந்திருக்கிறார். அவர் அப்படி தாமதமாக வருவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் போலீசுக்குத் தெரியவில்லை, ஆனால் சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவுக்கு யார் யார் மாலை போடுவார்கள் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், என்ன அட்ரஸ் என்று ஒரு அடிப்படை விவரமும் போலீசிடம் கிடையாது.

புத்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்படும் விவரங்களை வைத்துப் பார்த்தால்:

  1. ராஜீவைக் கொலை செய்ய இவ்வளவு திறமையாக சதி செய்ய முடியும் என்ற பிரக்ஞையே நமக்கு அப்போது இல்லை. பாதுகாப்பு என்றால் பத்து போலீஸ்காரர்கள் பழைய போல்ட் ஆக்ஷன் துப்பாக்கிகளோடு கீழே நிற்பார்கள். அதி முக்கியத் தலைவர், நிறைய பாதுகாப்பு என்றால் நூறு போலீஸ்காரர்கள். இப்படிப்பட்ட ஒரு சதியை தடுக்கும் வல்லமை நமக்கு அப்போது இல்லை.
  2. ராஜீவ் கொல்லப்படுவதை ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், ஃபோட்டோ எடுத்த ஹரிபாபு இறந்திருக்காவிட்டால், காமிரா ஸ்தலத்திலேயே விட்டுப் போயிருக்காவிட்டால், கொலையாளிகள் தப்பி இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.
  3. தமிழ்நாட்டில் அப்போது புலிகளுக்கு எல்லா லெவலிலும் தொடர்பு இருந்திருக்கிறது – இந்திரா குடும்பத்தின் மீது பக்திப் பரவசத்தோடு இருந்த மணிசங்கர் ஐயர், வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உட்பட. அன்று ஈழத் தமிழர்களிடம் இருந்த அனுதாபத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
  4. வைக்கோ போன்றவர்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடக்கப் போகிறது என்று தெரிந்திருக்கலாம். இல்லை பிரபாகரன் புத்திசாலித்தனமாக யாருக்கும் விஷயத்தைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. அரசியல் தலைவர்களை soft ஆகத்தான் நடத்தி இருக்கிறார்கள்.
  5. எனக்கு இந்திய தரப்பில் சதி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியர்களுக்கே உரிய மெத்தனம், பழைய தொடர்புகள் இன்று வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் சிறப்பாகத் துப்பறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரகோத்தமன் சுட்டிக் காட்டும் குறைகள் இன்றாவது நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நல்ல ஆவணம், சுவாரசியமாகவும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் பற்றி சில பதிவுகள்

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே. அதுவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதித்ததுதான். மீள்பதிக்க காரணம் அழிசி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை மீண்டும் கொண்டு வருவதுதான். அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கு ஒரு ஜே!

ஃபேஸ்புக்கிலிருந்து:

புதிய வெளியீடு
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளியான கட்டுரைத் தொடர் ‘படித்திருக்கிறீர்களா?’ மூன்று தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இது முதல் தொகுதியின் மறுபதிப்பு. இரண்டாவது தொகுதியின் மறுபதிப்பும் விரைவில் வெளியாகும்.
*
‘தமிழ் விக்கி’ இணையக் கலைக்களஞ்சியத்திலிருந்து…
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்நூல் தமிழில் ஒரு மூலநூல்தொகை (Modern Tamil Canon) ஒன்றை உருவாக்கும் முயற்சி. அப்பட்டியலை தொடர்ந்து தன் வாழ்நாள் முழுக்க க.நா.சுப்ரமணியம் விரிவாக்கிக் கொண்டே இருந்தார். அதில் அவர் புதிய படைப்பாளிகளைச் சேர்த்தார், பழையவர்கள் சிலரை தவிர்த்தார். அவர் பரிந்துரைத்தவர் களில் ஷண்முகசுப்பையா, அநுத்தமா போன்ற சிலர் பின்னாட்களில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலும் அவரை ஏற்கும் வாசகர் களாலும்கூட ஏற்கப்படாது மறைந்தனர். அவரால் முதன்மைப் படுத்தப்பட்ட ஆர். ஷண்முகசுந்தரம் போன்ற சிலர் அவர் அளித்த இடத்தை அடையவில்லை. அவர் பொருட்படுத்தாத ப. சிங்காரம் போன்றவர்கள் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர் களாலேயே முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் இந்த மாறுபாடுகளை கடந்து க. நா. சுப்ரமணியம் உருவகித்த அந்த மூலநூல்தொகையே நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என இன்றும் மறுக்கப்படாமல் நிலைகொள்கிறது.
*
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
விலை ரூ.170
தொடர்புக்கு: 70194-26274


(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

முத்துலிங்கத்துக்குப் பிடித்த சிறுகதைகள்

அ. முத்துலிங்கம் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் காலம் இதழுக்கு (மார்ச் 2005-இல்) அளித்த பேட்டியிலிருந்து:

உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல சிறுகதையைக் குறிப்பிட முடியுமா?

ஒரு கதையல்ல. ஞாபகத்தில் இருந்த பல கதைகளைச் சொல்ல முடியும்.

இவை நீங்கள் கேட்ட இந்தக் கணத்தில் நினைவில் இருப்பவை. இன்னும் பல உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி முடித்த அடுத்த நிமிடத்தில் நினைவு வரும்.

ஒரு நல்ல சிறுகதையை உதாரணம் காட்டி விளக்க முடியுமா?

புதுமைப்பித்தனுடைய பல கதைகள் ‘அன்று சம்பளம் போடவில்லை’ என்று ஆரம்பிக்கும். அவர் எழுதிய பொய்க்குதிரை என்ற கதையும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. அவருடைய அலுவலகத்தில் சம்பளம் போடாத ஒரு பட்டினி இரவு அவர் அதை எழுதியிருக்கலாம். இந்தக் கதையை நான் பத்து தடவையாவது படித்திருப்பேன். 11வது தரம் படித்தபோதுதான் திடீரென்று அது எவ்வளவு பெரிய கதை என்பது என் மூளையைச் சென்றடைந்தது. அதில் ஓடிய துயரம் சாம்பல் மூடிய நெருப்பு போல கண்ணுக்குத் தெரியாமலே கனன்று கொண்டிருக்கும். நடுத்தர குடும்பத்தில் புதிய கணவன் மனைவி. கணவன் வேலையிலிருந்து இன்னும் திரும்பவில்லை. மனைவி சமைப்பதற்கு காத்திருக்கிறாள். அன்றும் சம்பளம் போடவில்லை. அவர்கள் ஒரு பணக்கார நண்பன் வீட்டுக்கு நவராத்திரி கொலுவுக்கு போகிறார்கள். அங்கே சாப்பிட உட்காரும்போது மனைவி பரிமாறுகிறாள். ஒருவர் அவளிடம் ‘ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே’ என்று பரிகாசமாகக் கூறுகிறார். வீடு வந்த பிறகு அவள் விம்மி அழுகிறாள். அவளால் நிறுத்த முடியவில்லை. இதுதான் கதை.

சிலர் கதையை மூளையிலிருந்து எழுதுவார்கள். சிலர் இதயத்தில் இருந்து எழுதுவார்கள். இது இதயத்தில் இருந்து பிறந்தது. இதில் தொழில் நுட்ப வெற்றி இல்லை; நேர்த்தியும் இல்லை. அதுதான் சிறப்பு. படித்து முடிக்கும்போது அதில் மறைந்திருக்கும் துயரம் பெரிதாக எழும்பி உங்களைத் தாக்கும். அந்தத் துயரம் கூட பல தடவை சாம்பலை ஊதிய பிறகுதான் தெரிகிறது. நல்ல ஒரு சிறுகதையின் அம்சம்.

புதுமைப்பித்தன் கதைகளில் எனக்குத் தெரியாத நுட்பமா என்று எனக்கு சின்னதாக கர்வம் இருந்தது. முத்துலிங்கம் அதை உடைத்துவிட்டார். இந்த சிறுகதை நன்றாக நினைவிருந்தாலும் அதை நான் பெரிதாக எண்ணவில்லை. நேர்த்தி இல்லை, தொழில் நுட்பம் இல்லை, எளிய சிறுகதை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முத்துலிங்கம் விளக்கும்போதுதான் புரிகிறது! அதுவும் பொதுவாக எனக்கு அடுத்தவர் சொல்லி இலக்கியத்தை விளங்கிக் கொள்ளும் சக்தி கிடையாது, ஆனால் இவர் சொல்வது நேராக மண்டையில் இடிக்கிறது. சரி முத்துலிங்கத்துக்கே 11வது தரம் படிக்கும்போதுதான் அது எவ்வளவு சிறப்பான சிறுகதை என்று புரிந்திருக்கிறது, என்னை மாதிரி சுண்டைக்காய்க்கு அது புரியாததில் வியப்பென்ன!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், முத்துலிங்கம் பக்கம்

நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து: எஸ்.டி. சுந்தரம்

எஸ்.டி. சுந்தரத்தின் எழுத்து நாட்டுடமை ஆகாவிட்டால் நான் இந்தப் பதிவை எழுதி இருக்க மாட்டேன், நீங்களும் பிழைத்திருப்பீர்கள். அவரது எழுத்து முற்றிலும் காலாவதியானதே.

சுந்தரம் 1921-இல் ஆத்தூரில் பிறந்தவர். 11, 12 வயதில் நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்துவிட்டார். பிறகு தமிழ் வித்வான் படிப்பு படித்திருக்கிறார். 1942-இல் விடுதலைப் போராட்டத்தில் சிறைவாசம். அவரது புகழ் அனேகமாக கவியின் கனவு (1945) நாடகத்தால்தான். அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்திருக்கிறது, சிவாஜி மற்றும் நம்பியார் நடித்திருக்கிறார்கள். நாடகம் பார்க்க சிறப்பு ரயில் பெட்டியே இருந்ததாம். அதாவது தஞ்சை-நாகப்பட்டினம் ரயிலில் ஒரு பெட்டி இந்த நாடகம் பார்க்கப் போகிறவர்களுக்கு மட்டுமாம். அதன் வெற்றியால் திரை உலகில் நுழைந்தார். மோகினி (1947), லைலா மஜ்னு (1948), கன்னியின் காதலி (1949), விப்ரநாராயணா (1950), மனிதனும் மிருகமும் (1953), கள்வனின் காதலி (1958) சாரஙகதாரா (1959?) ஆகிய திரைப்படங்களுக்கு வசனமும் சில பாடல்களும் எழுதி இருக்கிறார். ஒன்றிரண்டு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மனிதனும் மிருகமும் இவரது சொந்தத் தயாரிப்பும். கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்துக்கும் இவர்தான் வசனம் என்று படித்தேன், ஆனால் அது சக்தி கிருஷ்ணசாமி என்று நினைவு. பிறகு மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார், இயல் இசை நாடக மன்ற செயலாளர் பதவி. சங்கீத் நாடக அகடமி ஃபெல்லோஷிப் பெற்றிருக்கிறார். 1979-இல் மறைந்தார்.

1934-இல் நவாப் ராஜமாணிக்கமே கல்லூரியில் சேர்த்துவிட்டார் என்று படித்தேன். 13 வயதில் எப்படி கல்லூரியில் சேர்ந்திருக்க முடியும்? அப்போதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறைவாசம் என்றும் படித்தேன். எட்டு வருஷமா கல்லூரிப் படிப்பு? சரியான காலவிவரம் இல்லை.

பொதுவாக அவரது நாடகங்களில் எல்லாரும் நீள நீளமாக செந்தமிழில் வசனம் பேசுகிறார்கள், காதல் வயப்படுகிறார்கள், இந்தக் கால நடையில் சொல்வதென்றால் பஞ்ச் டயலாக பேசுகிறார்கள். துணை பாத்திரங்கள் மட்டும் சாதாரண தமிழில் பேசுகிறார்கள். ஒரு நாடகமும் – கவியின் கனவு உட்பட – ஐம்பதுகளுக்குப் பிறகு பார்த்திருப்பார்களா என்று சந்தேகம்தான்.

கவியின் கனவு இன்று தேய்வழக்காகத்தான் தெரிகிறது. விடுத்லைப் போர், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி, சர்வாதிகாரி, சிறையில் வாடும் கவிஞன்… ஆனால் அன்று ஏன் வெற்றி பெற்றது என்பது நன்றாகவே புரிகிறது. நல்ல தமிழ், அன்றைய “முற்போக்கு” கருத்துக்கள்…

நம் தாய் (1947) நாடகத்தில் புரட்சி வீரர்கள் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஐம்பதுகளில் எம்ஜிஆரோ சிவாஜியோ நடித்திருந்தால் ஓடி இருக்கலாம். இன்று தேய்வழக்குகள்தான் கண்ணில் படுகின்றன.

உலகம் சிரிக்கிறது நாடகத்தில் மணிமேகலை காப்பியத்தின் ஒரு பகுதியை நாடகமாக்கி இருக்கிறார்.

வீர சுதந்திரம் நாடகம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் (வாஞ்சிநாதன், லாலா லஜ்பத் ராய், பகத் சிங், திருப்பூர் குமரன்…) கதைகளைத் தொகுக்கிறது.

அவரது பலம் அவரது ஆளுமைதான் என்று தோன்றுகிறது. உண்மையான நாட்டுப் பற்று, தமிழ் இலக்கியங்களில் புலமை, எழுத வேண்டும் என்ற விழைவு. ஆனால் அவரால் அவர் வளர்ந்த காலத்தின் பாய்ஸ் கம்பெனி நாடகங்களைத் தாண்ட முடியவில்லை. அன்றைய நிலவரத்தின்படி அவரால் செவ்வியல் நாடகங்களை எழுத முடியும், ஓரளவு சாதாரணத் தமிழில் இயல்பான உரையாடல்களை எழுத முடியும். முன்னோடி என்று கூட சொல்ல முடியவில்லை, முன்னோடிகளின் நகல் மட்டுமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை பக்கம்

தொடர்புள்ள சுட்டி:
தமிழ் விக்கி குறிப்பு
மின்னூல்கள்

பழைய நாவல்: பொற்றொடி

இப்போதெல்லாம் பொழுது போகவில்லை என்றால் தமிழ்.விக்கி தளத்தில் ஏதாவது ஒன்றிரண்டு பக்கத்தைப் படிக்கிறேன். அப்படிப் பார்த்த பக்கங்களில் ஒன்று பொற்றொடி – 1911-இல் எழுதப்பட்ட நாவல். மின்னூல் வேறு கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன்.

உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன். நாவலின் பழமை ஒன்றே அதை படிக்க வைத்தது. உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

ஆனால் பொற்றொடியின் நடை கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டால் அது சாண்டில்யன் எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். ஏன், லட்சுமி எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். முப்பது நாற்பதுகளில் பாய்ஸ் கம்பெனி நாடகமாக, ஏன் ஐம்பது அறுபதுகளில் திரைப்படமாக நடிக்கக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது.

மிக எளிமையான கதைதான். பொற்றொடிக்கு பதினாறு வயது. “படித்த பெண்”. அதுவும் 1911க்கு முந்தைய காலகட்டத்திலேயே. பன்னிரண்டு வயதிலிருந்து சீராளனோடு காதல். அப்பா பிடிவாதமாக பணக்கார வெள்ளையப்பனுடன் திருமணம் ஏற்பாடு செய்கிறார். சீராளன் அவனது குருவான பக்கா சுவாமிகள், சுவாமிகளின் நண்பரான சப்-ஜட்ஜ் ராயர் ஆகியோரின் உதவியோடு முகூர்த்தத்துக்கு முன்னால் பெண்ணைத் தூக்கிவிடுகிறான். அதே முகூர்த்தத்தில் திருமணமும் நடந்துவிடுகிறது. வெள்ளையப்பன் அன்றிரவே ஆயிரக்கணக்கானவர் உள்ள படையோடு திருமண வீடு மீது தாக்குதல் நடத்துகிறான். சீராளனுக்கு அடி, அவனைத் தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். சீராளன் இறந்ததாக நம்பி சுவாமிகளும் ராயரும் வழக்கு நடத்துகிறார்கள். அனேகருக்கு தண்டனை, லஞ்சம் கொடுதது தப்பிக்கும் வெள்ளையப்பனுக்கும் உயர்நீதிமன்றத்தில் தண்டனை. தூக்கிச் செல்லப்பட்ட சீராளன் உயிர் பிழைக்கிறான், பத்து பனிரண்டு நாளைக்குப் பின் வந்து பார்த்தால் பொற்றொடி துயரத்தில் சாகக் கிடக்கிறாள். சீராளனைப் பார்த்ததும் புனர்ஜன்மம். சுவாமிகள் பணத்துக்காக மணம் செய்து கொள்ளக் கூடாது, குணத்துக்காகத்தான் என்று ஒரு சொற்பொழிவு ஆற்றுகிறார். சுபம்!

“படித்த பெண்ணின்” சித்தரிப்பு, அவள் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை எல்லாம் அப்போது புரட்சியாக இருந்திருக்க வேண்டும். இதை அன்று படித்தவர்கள் பெண்களைப் படிக்க வைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள், அப்பா அம்மாவை எதிர்ப்பார்கள் என்று நினைத்திருந்தால் நான் வியப்படைய மாட்டேன்.

நாவலின் சிறந்த பகுதி கொள்ளையர்களின் தாக்குதல்தான். அதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். நாற்பது ஐம்பது பேர் தங்களை தற்காத்துக் கொள்வது ஓரளவு படிக்கும்படி இருக்கிறது. ஆனால் அன்று சீராளனிடம் துப்பாக்கி – அதுவும் நாலைந்து இருப்பது – எல்லாம் கொஞ்சம் அதிகப்படிதான்.

பொற்றொடியும் சீராளனும் பேச ஆரம்பித்தால் நாலைந்து பக்கம் மூச்சு விடாமல் பேசுகிறார்கள். சீராளன் பத்து பனிரண்டு நாளைக்குள் திரும்பிவிடுகிறான். ஆனால் அதற்குள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, அப்பீல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத்திலும் வழக்கு முடிகிறது. அதாவது 12 நாட்களுக்குள் இரண்டு வழக்கு முடிவடைந்துவிடுகிறது. இத்தனைக்கும் இந்த நாவலை எழுதியவர் வழக்கறிஞர்!

நாவலை எழுதியவர் ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை. சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். ஜி. சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். திருநெல்வேலியில் கோலோச்சிய ‘சர்வஜனமித்திரன்’ பத்திரிகையின் தூண்களில் ஒருவராம்

நாவலின் முன்னோடித்தனம் என்பது பெண் கல்வி நல்லது, பெண்ணுக்கு தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை மிக இயல்பாக முன்வைப்பதுதான். 1911-இல் இதற்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என்பதை பிள்ளைவாள் உணர்ந்திருப்பாரா என்றே கேள்வி எழுந்தது.

மீண்டும் சொல்கிறேன், நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன்.உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்னூல்
தமிழ் விக்கி குறிப்பு

லூயி லமூர்: Sackett Brand

லூயி லமூர் எழுதிய கௌபாய் (Western) சாகச நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

லமூர் பல சாக்கெட் பெருகுடும்ப (clan) எழுதி இருக்கிறார். அவற்றின் பின்புலமாக கற்பனை வரலாறு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். சுருக்கமாக – அயர்லாந்திலிருந்து 1600களிலேயே அமெரிக்காவுக்கு குடியேறும் சாக்கெட்கள் பல்கிப் பெருகுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக நிலம் தேடி அலைபவர்கள். வந்த சண்டைகளை விடாதவர்கள். துப்பாக்கிகளை நன்றாக பயன்படுத்தக் கூடியவர்கள், காடு, மலை என்று வாழ்வதை விரும்புபவர்கள்.

இப்போது 1800கள். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு. டெல் சாக்கெட் அரிசோனா பக்கம் settle ஆக விரும்பி தன் புது மனைவி ஆங்கேயுடன் சென்று கொண்டிருக்கிறான். அவனுக்கு இரண்டு தம்பிகள், இருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். திடீரென்று அவனை சுடுகிறார்கள், அவன் அறுநூறு அடி கீழே உள்ள ஆற்றில் விழுகிறான். அவனைத் தேடி வருபவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறான், இரண்டு பெயர்கள் மட்டும் காதில் விழுகிறது. எப்படியோ பிழைத்து வந்தால் அவன் மனைவி கொல்லப்பட்டிருக்கிறாள், அவனது குதிரைகளையும் காணோம். வண்டி எரிக்கப்பட்டிருக்கிறது. மனைவியின் அழகில் மயங்கி யாரோ அவளை பலவந்தப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள், அவள் இணங்காததால் கொல்லப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. அந்த வில்லன் ஒரு “பண்ணையார்”, தன்னை டெல் கொல்லப் பார்த்ததாக பொய் சொல்லி தன்னிடம் வேலை பார்க்கும் கௌபாய்களை கிளப்பிவிடுகிறான். தங்கள் முதலாளியை கொலை செயய் முயற்சி செய்த டெல் சாக்கெட்டைக் கொல்ல எல்லாரும் துடிக்கிறார்கள். டெல் தன் மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறான். லமூரின் உலகத்தில் பெண் கொலையைப் – அதுவும் வெள்ளைத்தோல் பெண் கொலையைப் போன்ற கொடிய செயல் வேறெதுவும் இல்லை. அதனால் சில பேர் டெல் சாக்கெட்டை கொல்ல எடுக்கும் முயற்சி சரிதானா என்று ஊசலாடுகிறார்கள்.

இது வரை சர்வசாதாரணமான கதைதான். ஆனால் கதை குறிப்பிட வேண்டிய ஒன்றாக மாறுவது இங்கேதான். ஏதோ ஒரு சாக்கெட்டுக்கு பிரச்சினை என்று அரசல்புரசலாக செய்தி பரவுகிறது. எங்கோ சீட்டாடிக் கொண்டிருக்கும் ஆர்லாண்டோ சாக்கெட் என்ற தூரத்து உறவுக்காரன் காதில் செய்தி விழுகிறது. அவன் உடனே டெல் சாக்கெட்டுக்கு துணை நிற்க கிளம்புகிறான். நோலன் சாக்கெட்டும் அவ்வாறே. அவன் டெல்லின் சகோதரர்களுக்கு செய்தியும் அனுப்புகிறான். அவர்கள் போட்டது போட்டபடி கிளம்புகிறார்கள். அதே போல கிளம்பும் ஃப்ளாகன் மற்றும் காலோவே சாக்கெட் வழியில் ஃபால்கன் சாக்கெட்டை சந்திக்கிறார்கள். அவர்களிடமிருந்து செய்தியைத் தெரிந்து கொள்ளும் ஃபால்கன் அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். பர்மாலீ சாக்கெட்டும் கிளம்பி வருகிறான். கிளம்பி வருபவர்களில் பலர் டெல் சாக்கெட்டை பார்த்ததே இல்லை. அவன் பேரைக் கூட கேட்டதில்லை. ஆனால் ஒரு சாக்கெட்டுக்கு பிரச்சினை என்று கேட்ட அடுத்த நிமிஷம் எல்லா சாக்கெட்களும் அவனுக்கு துணை நிற்க கிளம்பி வரும் சித்திரம்தான், சாக்கெட் பெருகுடும்பத்தின் பந்தத்தின் சித்தரிப்புதான் இந்த நாவலை உயர்த்துகிறது.

அப்புறம் என்ன? தெரிந்ததுதான், வில்லன்கள் தோற்று சாக்கெட்கள் வெல்கிறார்கள்.

லமூரின் எழுத்துத் திறமை பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. அவர் தனது கருக்களை, கதைப் பின்னல்களை வெளிப்படுத்துவார். இதிலும் அப்படித்தான். ஆனால் அவருக்கு காடு மலை தனிமை மீது உண்மையிலேயே ஆசை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வர்ணனைகள் இத்தனை உண்மையாகத் தெரியாது.

சாக்கெட் என்ற பேர் மட்டுமே இப்படி பெருகுடும்பத்தினரை இணைக்கும் வலிமையான வலைப்பின்னல் என்ற கருவுக்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
லூயி லமூர் நாவல்கள்
ஹோண்டோ
லூயி லமூர் விக்கி குறிப்பு