சிறுகதை பரிந்துரை

சக்கரி கரபஷ்லியவ் பல்கேரிய எழுத்தாளர். அவரது சிறுகதை ஒன்றைப் படித்தேன். கடைசி வரியைப் படித்து புன்னகைத்துக் கொண்டே இருந்தேன்.

இந்தத் தரத்தில்தான் சிறுகதை எழுத ஆசைப்படுகிறேன். நான் எழுதி வெளியே விடாமல் வைத்திருக்கும் அனேக சிறுகதைகள் புலம் பெயர்ந்தவர்கள் பின்புலத்தில்தான். இது என்னால் முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் பாதி நேரம் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய்த்தான் முடிகிறது. நினைத்த விதத்தில் எழுத முடியவில்லை. பால்வண்ணம் பிள்ளை தரத்தில் எழுத வேண்டும் என்று நினைத்த கதை எல்லாம் கடைசியில் இப்படி வந்து முடிகிறது. எழுதும் கலை கைவரவில்லை என்பதுதான் உண்மை…

கரபஷ்லியவின் படைப்புகளை யாராவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் சொல்லுங்கள்…

பின்குறிப்பு: நானே இன்னொரு நாவலை – 18% Gray (2013) – தேடிப் பிடித்து படித்தேன். சுமாரான நாவல். தன் காதலி ஸ்டெல்லாவை பிரிவதால் பெரும் மன அழுத்தத்தில் விழும் நாயகன் Zack கலிஃபோர்னியாவிலிருந்து நியூ யார்க் நகரத்துக்கு காரிலேயே போகிறான். தற்செயலாக அவனுக்கு கஞ்சா நிறைந்த ஒரு பை வேறு கிடைக்கிறது. இதை ஒரு திரைப்படமாக எடுத்தால் நன்றாக வரலாம், புத்தகமாக சுமார்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

நோபல் பரிசை மறுத்த சார்த்ரே

இன்று நோபல் பரிசுதான் இலக்கியத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுகிறது, உலகம் எங்கும் அதைப் பற்றிய பிரக்ஞை இருக்கிறது. இத்தனைக்கும் டால்ஸ்டாய்க்கும் செகாவுக்கும் கூட விருது அளிக்கப்படவில்லை, அப்படியும் இதுதான் உரைகல்லாக இருக்கிறது.

அப்படிப்பட்ட நோபல் பரிசை மறுத்த ஒரே இலக்கியவாதி – ழான் பால் சார்த்ரே. ஏன் மறுத்தார்? எந்த விருதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற பிடிவாதம்; பரிசை ஏற்றுக் கொள்வது அவரை அமைப்பு சார்ந்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிவிடுமோ என்ற தயக்கம்; நோபல் பரிசு மேலை நாட்டு நாகரீகத்தின் பரிசு என்ற எண்ணம். விரிவாக இங்கே படிக்கலாம்.

போரிஸ் பாஸ்டர்நாக், மற்றும் அலெக்சாண்டர் சோல்ஷெனிட்சின் இருவராலும் அறிவிக்கப்பட்ட வருஷத்தில் நோபல் பரிசை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்றைய சோவியத் அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. சில வருஷங்கள் கழித்து அவர்கள் ரஷியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள், அப்போதுதான் அந்த விருதை ஏற்றுக் கொண்டார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்