ஜான் லெ காரே மறைந்தார் என்ற செய்தி வருத்தம் தந்தது.
லெ காரே உளவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரது நாவல்கள் பலவும் ஒற்றர் பின்புலத்தைக் கொண்டவை. (இதே போல உளவுத் துறையில் பணிபுரிந்து அந்தப் பின்புலத்தை வைத்து Ashenden என்ற சிறப்பான புத்தகத்தை எழுதியவர் சாமர்செட் மாம்.) ஆனால் அவை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் அல்ல.அவற்றின் நோக்கம் விறுவிறுப்போ, அல்லது மர்மத்தை சுவாரசியமாக கட்டவிழ்ப்பதோ அல்ல. அவை இலக்கியப் படைப்புகள். ஆழ்மனதின் பிரச்சினைகளை, ஒற்றுத் தொழில் புரிபவர்களின் அகச்சிக்கல்களைக் காட்டுபவை. உங்கள் தொழிலின் அடிப்படையே “எதிரி” அரசுகளை ஏமாற்றி, “எதிரி” நாட்டு குடிமகன்களை அவர்கள் அரசுக்கு துரோகம் செய்ய வைத்து அந்த அரசுகளின் ரகசியங்களைக் கைப்பற்றுவதாக இருந்தால், உங்கள் மனதில் அறம் உயிரோடு இருக்க முடியுமா? உங்களுக்கு “எதிரி” அரசின் ஒற்றர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? இந்த அறக் குழப்பத்தை – moral ambiguities – சிறப்பாக சித்தரிப்பதில்தான் லெ காரேவின் வெற்றி இருக்கிறது, அதனால்தான் அவர் எழுத்து இலக்கியமாக உயர்கிறது.
லெ காரேவின் இன்னொரு முக்கியமான கரு நடந்த வரலாறு. இரண்டாம் உலகப் போருக்கு பின் ஒரு முப்பது வருஷங்கள் வரையாவது ஆங்கிலேயர்கள் பலர் சோவியத் ரஷியாவுக்காக உளவு வேலை பார்த்தார்கள். சிலர் ஆங்கிலேய உளவுத் துறையிலேயே உயர் அதிகாரிகளாக இருந்தார்கள். கிம் ஃபில்பி இவர்களில் மிகவும் பிரபலமானவர். மாட்டிக் கொள்ளும் நிலை வரும்போது சோவியத் ரஷியாவில் அடைக்கலம் ஆகிவிட்டார். உளவுத்துறையில் உயர்பதவியில் இருப்பவர் எதிரி அரசுக்காக உளவு பார்க்கிறார் என்பது எத்தனை பலமான கரு, எப்பேர்ப்பட்ட நகைமுரண் (irony)! லெ காரேவின் பல புத்தகங்களின் இந்தக் கரு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. எதிரி அரசின் உளவுத்துறையிலிருந்து தனக்காக ஆள் பிடிப்பது, தங்கள் உளவுத்துறையில் இருந்து கொண்டு எதிரி அரசுக்காக வேலை பார்ப்பவர்களை கண்டுபிடிப்பது இவை பல புத்தகங்களின் அடித்தளமாக இருக்கின்றன.
சோவியத் ரஷியா உடைந்த பிறகு இந்தக் கரு கொஞ்சம் காலாவதி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் சில எனக்கு அத்தனை சுவாரசியப்படவில்லை. Constant Gardener (2001) போன்ற சில நல்ல புத்தகங்களும் உண்டு.
லெ காரேவின் சிறந்த பாத்திரப் படைப்பு ஜார்ஜ் ஸ்மைலி. நிறைய புத்தகங்களில் வருபவர், பல புத்தகங்களின் நாயகன். ஆங்கில அரசின் உளவுத்துறையின் தலைவராக இருந்தவர். கம்யூனிச ரஷியா, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளின் உளவுத் துறையோடு எப்போதும் “போர்”. ரஷிய உளவுத்துறையில் அவருக்கு எதிரியாக இருக்கும் கார்லாவும் அவரும் மிகவும் பிரமாதமாக ஆடுவார்கள். ஜார்ஜ் ஸ்மைலியின் வாழ்க்கை வரலாறு என்று ஒரு பதிவு எழுத ஆரம்பித்து சில வருஷமாகவே அரைகுறையாக நிற்கிறது.
லெ காரே பிரபலமானது Spy Who Came in from the Cold (1963) நாவலுக்குப் பிறகுதான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த நாவல் Tinker Tailor Soldier Spy (1974).
Spy Who Came in from the Cold, Tinker Tailor Soldier Spy, Smiley’s People (1974), Constant Gardener ஆகிய புத்தகங்களை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். எந்தப் புத்தகமும் தவிர்க்க வேண்டியதில்லை, ஆனால் இவை நான்கும் எனக்கு டாப்பில் இருக்கின்றன.
லெ காரேவின் பல புத்தகங்கள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. நான் பரிந்துரைப்பது ரால்ஃப் ஃபியன்னஸ் நடித்த Constant Gardener (2005), காரி ஓல்ட்மன் நடித்த Tinker Tailor Soldier Spy (2011)
அவருக்கு அஞ்சலியாக Spy Who Came in from the Cold பற்றி எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன். அதை நானே மீண்டும் படிக்கும்போது கதைச்சுருக்கம்தான் தெரிகிறது, என் எண்ணங்கள் தெளிவாக வெளிப்படவில்லை. திருத்தி எழுத நேரமில்லை…
வண்டியை கொஞ்ச நாளைக்கு த்ரில்லர்கள் பக்கம் ஓட்டுகிறேன்.
ஜான் லெ காரே அறியப்பட்ட எழுத்தாளரானது Spy Who Came in from the Cold (1963) நாவலுக்குப் பிறகுதான். Well crafted novel.
கம்யூனிஸ்ட் கிழக்கு பெர்லினையும் மேற்கு பெர்லினையும் பிரிக்கும் சுவர் இப்போதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. அது வரையில் கிழக்கு ஜெர்மனியில் மேற்குக்காக உளவு பார்த்தவர்கள் மாட்டிக் கொள்வோம் என்று தெரியும்போது சுலபமாக மேற்கு பெர்லினுக்கு ஓடிவிடுவது இப்போது கஷ்டமாகிவிட்டது. இங்கிலாந்துக்காக உளவு பார்க்கும் கார்ல் ரீமெக் சுவரைத் தாண்டி மேற்கு பெர்லினுக்கு ஒரேயடியாக வந்துவிட முயற்சி செய்யும்போது சுடப்படுகிறான். இதற்கெல்லாம் காரணம் கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறை அதிகாரி முண்ட் என்று தெரிகிறது.
ரீமெக்கின் “வழிகாட்டி” லீமாஸ். லீமாசின் கடைசி ஒற்றன் ரீமெக். கடைசி ஒற்றனும் போன பிறகு லீமாசுக்கு பெர்லினில் வேலையில்லை. அவன் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்படுகிறான். அங்கே உளவு வேலை எதுவும் கிடையாது, மேஜையில் உட்கார்ந்து காகிதங்களில் கையெழுத்திடுவதுதான் வேலை. லீமாசின் உலகம் தெருவில் இறங்கி ஒற்று வேலை பார்க்கும் உலகம், இந்த paper-pushing சூழல் லீமாசுக்கு ஏற்ற உலகமல்ல. லீமாஸ் சொதப்ப ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் வேலை போய்விடுகிறது. சின்னச் சின்ன வேலைகளைப் பார்க்கும்போது லிஸ்ஸுடன் தொடர்பு ஏற்படுகிறது. லிஸ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.
ஆனால் இது எல்லாமே செட்டப். லீமாஸ் ரஷ்யா/கிழக்கு ஜெர்மனி கண்களில் துரோகியாக மாறி முண்ட் உண்மையில் இங்கிலாந்துக்காக வேலை பார்க்கும் ஒரு double agent என்று நாடகம் ஆட வேண்டும் என்பதுதான் லீமாஸின் உயர் அதிகாரியான “கண்ட்ரோலின்” திட்டம். நினைத்தபடியே லீமாஸை எதிரி நாட்டுக்காரர்கள் தொடர்பு கொள்கிறார்கள். பணத்துக்காக லீமாஸ் கட்சி மாறுவதாக நாடகமாடுகிறான். கிழக்கு ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். முண்ட் மீது சந்தேகமே இல்லாததாக காட்டிக் கொள்கிறான், ஆனால் மெதுமெதுவாக முண்டின் துணை அதிகாரி ஃபீட்லரை முண்ட் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறான். ஃபீட்லர் முண்ட் துரோகி என்று புகார் கொடுக்கிறான். முண்டுக்கு எதிராக கேஸ் பலமாக இருக்கிறது.
ஆனால் கடைசி நேரத்தில் முண்ட் தரப்பு வக்கீல் லீமாசின் காதலி லிஸ்சை சாட்சியாகக் கொண்டு வருகிறார். லீமாஸ் சில பொய்களை சொல்லி இருக்கிறான் என்று நிரூபிக்கிறார். லிஸ்ஸை காப்பாறுவதற்காக லீமாஸ் இது அத்தனையும் நாடகம் என்று ஒப்புக் கொள்கிறான். ஃபீட்லர் கதி அதோகதி ஆகிறது.
தான் முதலில் சொன்னதை பொய்யாக்கியது கண்ட்ரோல்தான் என்பதை லீமாஸ் உணர்கிறான். முண்ட் உண்மையிலேயே இங்கிலாந்துக்குத்தான் உளவு பார்க்கிறான், முண்ட் மேல் ஏற்கனவே சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த ஃபீட்லரை ஒழிக்க கண்ட்ரோல் போட்ட திட்டம்தான் இது என்பதை உணர்கிறான்.
கதையைப் படித்துவிட்டு பிறகு சாவகாசமாக யோசித்துப் பார்த்தால் முடிச்சு சாதாரணமானதுதான் என்பது புரிகிறது. ஆனால் கதையைப் படிக்கும்போது அது புரிவதில்லை. 🙂 மெதுமெதுவாக உண்மையை வெளிப்படுத்துவதில்தான் இந்தப் புத்தகத்தின் வெற்றி இருக்கிறது.
முண்டைக் காப்பாற்ற ரீமெக்கை பலி கொடுக்க கண்ட்ரோல் தயங்குவதில்லை. முண்ட் போன்ற ஒரு வில்லனைக் காப்பாற்ற ஃபீட்லர் போன்ற நேர்மையான அதிகாரியை ஒழிக்க வேண்டுமா என்று லீமாசை மட்டுமல்ல நம்மையும்தான் யோசிக்க வைக்கிறார். உளவுத்துறையில் amoral மனநிலை சிறப்பாக வெளிப்படுகிறது.
இந்தக் கதையிலும் ஜார்ஜ் ஸ்மைலிக்கு ஒரு சின்ன ரோல் உண்டு. ஸ்மைலியைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
ரிச்சர்ட் பர்ட்டன் நடித்து 1965-இல் திரைப்படமாகவும் வந்தது.
படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜான் லெ காரே பக்கம், அஞ்சலிகள்
தொடர்புடைய சுட்டிகள்:
ஜான் லெ காரே எழுதிய Our Kind of Traitor
லெ காரேவின் தளம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...