ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள்

(மீள்பதிவு, திருத்தங்களுடன்)

\இந்து சுந்தரேசன் புத்தகங்களைப் பற்றிய பதிவில் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றி இரா. முருகன் “Vernacular (Tamil, Malayalam, Kannada, Marathi etc) writing is miles ahead of these.” என்று சொல்லி இருந்தார். உண்மையே. இருந்தாலும் அத்தனையும் குப்பை என்று சொல்லிவிடுவதற்கில்லை. பொதுவாக இந்தியர்கள் எழுதும் ஆங்கில இலக்கியம் சுமார்தான். நினைவு வரும் சில நல்ல புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி இந்தப் பதிவில்.

என்னைப் பொறுத்த வரையில் முதன்மையானவர் ஆர்.கே. நாராயண்தான். இத்தனைக்கும் பொதுவாக அவரது கதைகளில் எல்லாம் சுவாரசியம் குறைவுதான். சில நாவல்களை – Swami and Friends, English Teacher, Waiting for the Mahatma – ரசித்திருக்கிறேன். சுவாமியின் உலகம் மிகவும் சுவாரசியமானது. நிறைய நம்பகத்தன்மை உடையது. மனைவியை இழந்தவரின் துக்கம் English Teacher-இல் genuine ஆக வெளிப்பட்டிருக்கும். Waiting for the Mahatma எனக்குப் பிடித்த “சுதந்திரப் போராட்ட நாவல்களில்” ஒன்று. அவருடைய புகழ் பெற்ற பல புத்தகங்கள் – Guide, Man-Eater of Malgudi, Mr. Sampath, Vendor of Sweets, Financial Expert மாதிரி – எனக்கு கொஞ்சம் போர் அடித்தன. ஆனால் அவை எல்லாம் சேர்ந்து தரும் ஒரு சிறு நகர ambience எனக்கு மிகவும் பிடிக்கும். கொஞ்சம் படித்த, professional மற்றும் சிறுதொழில் அதிபர்கள் வர்க்கத்தின் கண்களிலிருந்து அந்த சிறு நகரத்தை பார்த்து அதை நமக்கும் சொல்கிறார். (அந்த நகரம் மைசூராகத்தான் இருக்க வேண்டும்.)

முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய கதைகள் – கூலி, Untouchable – இரண்டு படித்திருக்கிறேன். இரண்டுமே இப்போது மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. ஒரு கதையில் கக்கூஸ் கழுவும் பங்கி ஜாதியைச் சேர்ந்த ஒருவன் வாழ்க்கையில் ஒரு நாள் விவரிக்கப்படுகிறது – அவன் காந்தியின் ஒரு பேச்சை கேட்பது நினைவிருக்கிறது. நல்ல framework உள்ள கதை என்று அப்போது நினைத்தேன்.

ராஜாராவ் எழுதிய ஒரே ஒரு புத்தகம் – காந்தபுரா – படித்திருக்கிறேன். நன்றாக ஆரம்பித்து நன்றாகப் போகும். ஆனால் என்னவோ பாதியில் முடித்துவிட்ட மாதிரி இருக்கும். இன்னும் ஒரு சுதந்திரப் போராட்ட நாவல்.

நாராயண், ஆனந்த், ராவ் மூவரும் இந்திய ஆங்கில புனைவுலகத்தின் “முதல் மூவர்” என்று கருதப்படுகிறார்கள். இரா. முருகன் சொல்வது போல மூவரையும் விஞ்சும் பல இந்திய மொழி எழுத்தாளர்கள் உண்டு. உதாரணமாக ராஜாராவ் பைரப்பாவின் அருகே கூட வரமுடியாது. ஆர்.கே. நாராயண் ஒருவர்தான் – அதுவும் Swami and Friends மட்டும்தான் – இன்னொரு ஐம்பது வருஷம் போனாலும் நினைவில் இருப்பார்/இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜிம் கார்பெட் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் “முதல் மூவரில்” ஒருவர் இல்லைதான். ஆனால் நல்ல, விறுவிறுப்பான புத்தகங்களை எழுதி இருக்கிறார். Maneater of Kumaon ஒரு கிளாசிக். அதை மட்டுமாவது கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். ராஜாராவை விட, முல்க் ராஜ் ஆனந்தை விட இவர்தான் நினைவில் இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. கார்பெட் ஒரு ஆங்கிலேய அதிகாரி. “வேட்டைக்காரர்”. மனிதர்களை சாப்பிட ஆரம்பித்துவிட்ட பல புலிகளை, சிறுத்தைகளை சுட்டுக் கொன்றிருக்கிறார். அவர் எழுதியவை எல்லாம் அந்த வேட்டை அனுபவங்கள்தான் (non-fiction).

குஷ்வந்த் சிங்கின் கதைகளில் Train to Pakistan மட்டுமே படித்திருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்புலக் கதை. படிக்கலாம். அவரது மிச்ச புனைவுகளை புரட்டித்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நல்ல அபிப்ராயம் இல்லை.

மனோகர் மல்கோங்கர் ஆறேழு மாதங்களுக்கு முன்தான் இறந்துபோனார். அவர் இறந்தபோது நான் எழுதிய அஞ்சலியை இங்கே படிக்கலாம். எனக்கு Bend in the Ganges புத்தகம் பிடித்திருந்தது.

பதின்ம வயதில் ரஸ்கின் பாண்ட் சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். பாண்ட் ஆங்கிலோ-இந்தியர். அவர் எழுதிய என்ற கதை ஜூனூன் என்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படமாக வந்தது. அதைப் படிக்க வேண்டும் பார்க்கிறேன், இன்னும் கிடைக்கவில்லை. படத்தை ஷ்யாம் பெனகல் இயக்கி இருந்தார். சஷி கபூர், ஷபனா ஆஸ்மி, நசீருதின் ஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். நல்ல படம்.

சேதன் பகத் இன்றைய கூல் எழுத்தாளர். என் கண்ணில் படுசுமார். ஐஐடி பின்புலத்தில் எழுதப்பட்ட Five Point Someone புத்தகம்தான் 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மூலக்கதை. இன்றைய நகர்ப்புற, IT இளைஞர் கூட்டத்தை குறி வைத்து எழுதுகிறார், அந்த மார்க்கெட்டில் ஒரு ஸ்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னாள் அமைச்சர், ஐ.நா. சபையில் பெரிய பதவியில் இருந்த சஷி தரூர் Great Indian Novel என்ற மகாபாரதம் சார்ந்த ஒரு படைப்பை எழுதி இருக்கிறார். அந்தக் காலத்தில் பிடித்திருந்தது.

சல்மான் ரஷ்டியின் Haroun and the Sea of Stories படிக்க ஆரம்பித்தேன். மிக நன்றாக இருந்தது. சரியான மூட் வர வேண்டும் என்று மூடி வைத்துவிட்டேன், பல வருஷம் ஆகியும் மூட் இன்னும் வரவில்லை. அவரது புகழ் பெற்ற Midnight’s Children புத்தகத்தை யாராவது படித்திருக்கிறீர்களா? எப்படி இருக்கிறது?

சுகேது மேத்தாவின் Maximum City புத்தகத்தை (Non-Fiction) நான் விரும்பிப் படித்தேன். மும்பைக்கு (கொஞ்ச நாள்) திரும்பி வரும் ஒரு அமெரிக்க இந்தியனின் வாழ்க்கை. எப்படியோ மிஷன் காஷ்மீர் என்ற படத்தில் வேறு பணி புரிவார். கொஞ்சம் நீளமான புத்தகம் என்றாலும் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

விக்ரம் சந்த்ராவின் Sacred Games நன்றாக ஆரம்பித்தது. பெரிய புத்தகம், பாதியில் நிறுத்தினேன், இன்னும் தொடர முடியவில்லை. இது ஒரு விதத்தில் Maximum City புத்தகத்தின் companion volume என்று தோன்றுகிறது.

உபமன்யு சாட்டர்ஜியின் English, August எனக்கு பிடித்திருந்தது. ஒரு ஹை கிளாஸ் குடும்பத்தில் பிறந்து கலெக்டர் ஆகும் ஒருவனின் அனுபவங்கள். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சாம்ராட் உபாத்யாய் என்ற நேபாளி எழுத்தாளரை எனக்கு கொஞ்சம் பிடிக்கும். Royal Ghosts என்ற சிறுகதைத் தொகுப்பு கொஞ்சம் subtle ஆக இருந்தது. ஆனால் இப்போது சட்டென்று கதைகள் எதுவும் நினைவு வரவில்லை.

அனுராக் மாத்தூரின் Inscrutable Americans கொஞ்ச நாள் பாப்புலராக இருந்தது. ஒரு இந்திய சிறு நகர சூழலிலிருந்து அமெரிக்காவில் படிக்க வரும் ஒருவனின் அனுபவங்கள். சூப்பர்மார்க்கெட்டில் பேரம் பேச முயற்சிப்பது, வாஷிங் மெஷினைப் பார்த்துக் கொண்டே இருப்பது என்று ஜோக்குகள் வரும். அந்தக் காலத்தில் சிரித்தேன்.

அசோக் பாங்கர் ராமாயணத்தை science fiction பாணியில் (Prince of Ayodhya, Siege of Mithila, Demons of Chitrakut, Armies of Hanuman, Bridge of Rama, King of Ayodhya)எழுதிக் கொண்டு வருகிறார். எனக்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒரு சூப்பர்ஹீரோ காமிக்ஸ் புத்தகத்தின் ambience-ஐ கொண்டு வந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். அதற்கு தொழில் திறமை வேண்டும்.

அமிஷ் திரிபாதி இன்னும் பிரபலமானவர். அவருடைய மெலுஹா-சிவா புத்தகங்கள் சக்கைப்போடு போட்டிருக்கின்றன. மார்வெல் காமிக்ஸ் தரத்தில் இருக்கும், சுமாரான புத்தகங்களே. ஆனால் அவரது கற்ப்னை வளத்துக்கு ஒரு ஜே!

வேத் மேத்தா சிறு வயதிலேயே கண்களை இழந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்தது நிலைமையை சமாளிக்க ஓரளவு உதவியது. நிறைய எழுதி இருக்கிறார். அனேகமாக தான் பிறந்து வளர்ந்தது, உறவினர்கள் பற்றிய Non-fictionதான். எனக்குப் பிடித்தது Daddyji. டாடிஜியை படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

விகாஸ் ஸ்வரூப்பின் Q and A என்ற புத்தகம்தான் ஸ்லம்டாக் மில்லியனர் படமாக வந்தது. அவரைப் பற்றி கொஞ்சம் விவரமாக இங்கே.

டார்க்வின் ஹால் சில சுமாரான துப்பறியும் கதைகளை, ஆனால் நல்ல இந்திய சித்தரிப்பு உள்ள கதைகளை எழுதி இருக்கிறார்.

ஷோபா தே எழுதுவதெல்லாம் குப்பை. இளம் வயதில் செக்ஸ் பற்றி நிறைய எழுதுவார் என்று Sisters, Socialite Evenings மாதிரி சில புத்தகங்களை தேடிப் பிடித்து படித்திருக்கிறேன்.

ஜும்பா லாஹிரியை எனக்கு கொஞ்சம் பிடிக்கும். இப்போது கதைகள் எதுவும் நினைவு வரவில்லை என்றாலும் அவரது Interpreter of Maladies சிறுகதைத் தொகுப்பு ஓரளவு பிடித்திருந்தது. பாரதி முகர்ஜி (Middleman and Other Stories, Jasmine) இன்று ஓரளவு புகழ் பெற்ற இந்திய-அமெரிக்க எழுத்தாளர். எனக்கு அவர் கதைகள் எல்லாம் சுமாராகத்தான் இருக்கிறது. சித்ரா பானர்ஜி திவாகருணி கொஞ்சம் பிரபலமான அமெரிக்க இந்தியன் எழுத்தாளர். என் கண்ணில் சுமார்தான். இவர்கள் மூவருமே NRI எழுத்தாளர்கள். அவர்களின் கதைகளின் களம் அமெரிக்காதான். இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியினரை வைத்து கதைகள் எழுதப்பட்டிருக்கும். இன்னொரு NRI எழுத்தாளரான இந்து சுந்தரேசன் பற்றி பதிவே போட்டுவிட்டேன்.

கவிதா தாஸ்வானி ஒரு அமெரிக்க இந்திய எழுத்தாளர். என் பனிரண்டு வயது பெண்ணுக்குப் பிடிக்குமோ என்று For Matrimonial Purposes புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன், கடைசியில் நான்தான் படித்தேன். இதெல்லாம் டீனேஜர்களுக்காக எழுதப்படும் மில்ஸ் அண்ட் பூன் பாணி (காதல் இல்லை) புத்தகங்கள்.

ஷாமினி ஃப்ளிண்ட் ஒரு மலேசிய/சிங்கப்பூர் இந்திய வம்சாவளி எழுத்தாளர். இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் சில நாவலகளை எழுதி இருக்கிறார். A Most Peculiar Malaysian Murder (2009), A Curious Indian Cadaver (2012). இந்திய வம்சாவளி எழுத்தாளர் என்றுதான் படித்தேன். நீங்களும் அந்தத் தவறை செய்யாதீர்கள்.

கா.சி. வேங்கடரமணி பழைய காலத்து தமிழ் எழுத்தாளர். தேசபக்தன் கந்தன், முருகன் ஒரு உழவன் என்று இரண்டு நாவல்கள் ஓரளவு பிரபலமானவை. அவற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு பிறகு தமிழில் அவரே மீண்டும் எழுதினாராம். இவரைப் போலவே மாதவையா, எஸ்.வி.வி. போன்றவர்களும் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்களாம். சமீபத்தில் பி.ஏ. கிருஷ்ணன் கூட புலிநகக்கொன்றை நாவலை முதலில் ஆங்கிலத்தில் “Tiger Claw Tree” என்று எழுதிவிட்டு பிறகுதான் தமிழில் மொழிபெயர்த்தாராம். வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரின் சில நாடகங்களைத்தான் அவரது மருமகன் வி.சி. கோபாலரத்தினம் தமிழ்ப்படுத்தி இருக்கிறார். அப்படி தமிழ்படுத்தப்பட்ட நாடகத்தைப் பற்றி சமீபத்தில்தான் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.

அமிதவ் கோஷ் எழுதிய Countdown எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. அணு ஆயுதங்கள் இந்தியாவுக்கு தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகிறார். நாவல்களை இனி மேல்தான் படிக்க வேண்டும்.

இவர்களைத் தவிர இந்திய பின்புலத்தில் எழுதும் பிற நாட்டவர்களும் உண்டு. ஹெச்.ஆர். எஃப். கீட்டிங்(H.R.F. Keating) இன்ஸ்பெக்டர் கோடே(Ghote) என்ற பாத்திரத்தை வைத்து துப்பறியும் கதைகள் எழுதி இருக்கிறார். ஜான் மாஸ்டர்ஸ் ஆங்கிலேயர் அல்லது ஆங்கிலோ-இந்தியர்களை வைத்து சில நல்ல கதைகளை (Bhowani Junction) எழுதி இருக்கிறார். கிப்ளிங்கைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அமித் வர்மா (My Friend Sancho), த்ரிடி உம்ரீகர், மனில் சூரி(Death of Vishnu, Age of Shiva), இந்திரா சின்ஹா (Animal People), விக்ரம் சேத் (Golden Gate, Suitable Boy), நயனதாரா செகால், ஆலன் சீலி (Trotternama), அருந்ததி ராய்(God of Small Things), ரோஹின்டன் மிஸ்திரி(Such a Long Journey), ஹரி குன்ஸ்ரு (Transmission), பல இஸ்மாயில் மெர்ச்சன்ட் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய ருத் ஜப்வாலா, சஷி தேஷ்பாண்டே (Long Silence – இதை வாஸந்தி தமிழில் மவுனப்புயல் என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார்), அனிதா தேசாய் (Bye Bye Blackbird), கிரண் தேசாய் (அனிதா தேசாயின் மகள் – Hulabaloo in the Guava Orchard), ஜி.வி. தேசானி (All About H. Hatterr), குர்சரண் தாஸ் (A Fine Family), நிரத் சவுதுரி (Autobiography of an Unknown Indian), அர்விந்த் அடிகா (White Tiger) ஆகிய புத்தகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. நீங்கள் யாராவது?

உயர்தர புத்தகம் என்று சொல்லக் கூடியவை மிகக் குறைவே (Swami and Friends, Man-Eater of Kumaon). படிக்கக் கூடியவை என்று பல உண்டு. உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் அவற்றைப் பற்றியும் சொல்லுங்களேன்! என்னுடைய “படிக்கலாம்” லிஸ்டை வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன். நான் சிறு வயதில் படித்து இப்போது மங்கலாக மட்டுமே நினைவிருப்பதை சேர்க்கவில்லை.

  1. R.K. Narayan – Swami and Friends, English Teacher, Waiting for the Mahatma
  2. Jim Corbett – Man-Eater of Kumaon
  3. Manohar Malgonkar – Bend in the Ganges
  4. Khushwant Singh – Train to Pakistan
  5. Sashi Tharoor – Great Indian Novel
  6. Salman Rushdie – Haroun and the Sea of Stories
  7. Suketu Mehta – Maximum City
  8. Vikram Chandra – Sacred Games
  9. Upamanyu Chatterji – English, August
  10. Ved Mehta – Daddyji
  11. Samrat Upadhyay – Royal Ghosts
  12. Jhumpa Lahiri – Interpreter of Maladies

தொடர்புடைய சுட்டி:
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் – பரிதோஷ் உத்தமின் லிஸ்ட்

காமிக்ஸ்: க்ரான்ட் ஸ்னைடர்

சாம்பிளுக்கு ஒன்று கொடுத்திருக்கிறேன். தளத்தில் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே இருக்கிறேன்.சித்திரமும் சரி, கருத்தும் சரி, truly enjoyable! கட்டாயம் பாருங்கள்…

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்

Best First Lines in Fiction

பிபிசி தளத்தில் Best First Lines in Fiction என்று ஒரு சுட்டி கண்ணில் பட்டது. எனக்குப் பிடித்த சில வரிகள் அதிலிருந்து.

ஜேன் ஆஸ்டன், Pride and Prejudice:

It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.

டிக்கன்ஸ், A Tale of Two Cities:

It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.

ஹெர்மன் மெல்வில், Moby Dick:

Call me Ishmael.

டால்ஸ்டாய், Anna Karenina:

All happy families are alike; each unhappy family is unhappy in its own way.

ஜார்ஜ் ஆர்வெல், 1984:

It was a bright cold day in April, and the clocks were striking thirteen.

இடாலோ கால்வினோ, If on a Winter’s Night a Traveller:

You are about to begin reading Italo Calvino’s new novel, If on a winter’s night a traveller.

கொசுறாக, ஒரு நாவலின் கடைசி வரி

டிக்கன்ஸ், A Tale of Two Cities:

It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest that I go to than I have ever known

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

தொடர்புடைய சுட்டி: பிபிசியின் ஒரிஜினல் சுட்டி

2010-களின் பெஸ்ட்செல்லர்ஸ்

இவைதான் போன தசாப்தத்தின் பெஸ்ட்செல்லர்ஸாம்

Mockingjay தவிர்த்த வேறு எதையும் நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

பழைய புத்தகங்களின் வாசனை

எனக்கு புத்தகங்களின் வாசனை பிடிக்கும். ஆனால் அதை எல்லாம் விவரிக்கும் அளவுக்கு எனக்கு vocabulary இல்லை. வாசனை பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். புத்தகங்களின் வாசனை என்பது – அதுவும் பழைய புத்தகங்களின் வாசனை என்பது ஏறக்குறைய மட்கிக் கொண்டிருக்கும் காகிதங்களின் வாசனைதான் போலிருக்கிறது. அதில் என்ன என்ன எல்லாம் இருக்கின்றன?

Using the olfactogram method, Bembibre and Strlič created their old-book odor wheel (Heritage Sci. 2017, DOI:10.1186/s40494-016-0114-1). The woody odors were thanks to the furfural in the decaying paper. d-Limonene gave the old books the sharp tang of an orange, and benzaldehyde provided rich, foodlike odors. Lactones added more fruity notes.

Furfural என்றால்? – பாதாம், ப்ரெட் கலந்து இனிப்பு வாசனையாம். அகராதிப்படி: a colorless, oily liquid, C5H4O2, having an aromatic odor, obtained from bran, sugar, wood, corncobs, or the like, by distillation: used chiefly in the manufacture of plastics and as a solvent in the refining of lubricating oils.

இந்த வாசனையை எப்படி ஆராய்ந்தார்கள் என்பதும் சுவாரசியம். சுத்தமான ப்ளாஸ்டிக் பை ஒன்றில் புத்தகத்தை ஒரு கார்பன் ஸ்பாஞ்சுடன் போட்டிருக்கிறார்கள். ஸ்பாஞ்சில் இந்த furfural, d-Limonene இத்யாதி கொஞ்சம் சேர்ந்திருக்கிறது. அதை gas chromatogram போன்ற ஒன்றை வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள். ஒரு நூலகத்தின் வாசனையையே ஆராய வேண்டுமென்றால்? சுத்தமான கார்பன் ஸ்பாஞ்சை நூலகத்தில் வைத்துவிட்டு சில பல மணி நேரத்துக்குப் பிறகு அதை ஆராய்ந்திருக்கிறார்கள்.

கொஞ்சம் பாதாம், ப்ரெட் மாதிரி வாசனை இருக்கிறதுதான். ஆனால் இந்த ஆரஞ்சு, பிற பழ வாசனைகள் எதுவும் என் ரேடாரில் இது வரை பதிவானதில்லை. உங்களுக்கு?

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

நாடார்கள் பற்றி ஆய்வு

(மீள்பதிவு)

nadars_of_tamil_naduஇன்று நாடார்கள் தமிழகத்தில் ஒரு பெரும் சக்தி. ஜாதி உணர்வை முன்னேற்ற சக்தியாக பயன்படுத்த முடியும் என்பதற்கு நாடார் ஜாதியினரைத்தான் ‘poster boys’ என்று சொல்ல வேண்டும். அவர்கள் ஜாதியால் ஒன்றுபடுவதற்கு குறுக்கே மதம் கூட நிற்பதில்லை. கிறிஸ்துவ நாடார் என்பது தமிழ்நாட்டு சூழலை அறியாதவர்களுக்கு oxymoron ஆக இருக்கலாம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘கிறிஸ்துவ நாடார்’ என்பதில் நாடார் என்ற வார்த்தைக்குத்தான் முன்னுரிமை.

robert_l_hardgravveநாடார்களின் எழுச்சி பற்றிய இந்தப் புத்தகத்தை – ‘Nadars of Tamil Nadu‘ – ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதி இருக்கிறார். பெர்க்லி பல்கலைக்கழகம் பதித்திருக்கிறது. ஹார்ட்க்ரேவ் உண்மையான ஆய்வாளர். இந்தப் புத்தகத்தில் commentary என்பது கிடையாது. தான் படித்து, பேட்டி கண்டு, நேரில் சென்று அறிந்த உண்மைகளை மட்டுமே தொகுத்திருக்கிறார்.

நாடார்கள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் ஒன்றாகத் திரண்டு ஒரு சக்தியாக உருவெடுத்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. இந்தப் புத்தகமோ ஆய்வுப் புத்தகம். வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுக்கும் புத்தகம். கொஞ்சம் dry ஆகத்தான் இருக்கிறது. இருந்தாலும் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளின் சுவாரசியம் இதை என்னைப் பொறுத்த வரையில் unputdowanable புத்தகமாகத்தான் ஆக்குகிறது.

நாடார்கள் தென்கிழக்குத் தமிழகத்தில் – குறிப்பாக திருச்செந்தூர் பகுதிகளில் – பனைமரத்தை நம்பிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அவர்களை சாணார் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அனேக கிராமங்கள் நாடார்/சாணார் மட்டுமே வசித்த கிராமங்களாகத்தான் இருந்திருக்கின்றன. ஐந்து குடும்பங்கள் – அதில் ஒன்று இன்றும் பிரபலமாக இருக்கும் ஆதித்தன் குடும்பம் – முக்கால்வாசி நிலத்தை வைத்திருந்திருக்கிறது. அவர்கள்தான் நாடான்கள் – நாடார்கள் அல்ல, நாடான்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நாடார்/சாணார்களுக்குள் அவர்கள்தான் உயர்ந்த உள்ஜாதி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தேங்கிக் கிடந்திருக்கிறார்கள்.

நாடார்/சாணார்கள் சூத்திரர்களுக்குக் கீழே ஆனால் தலித்களுக்கு மேலே உள்ள ஒரு ஜாதியினராக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடார்களின் நிலை உயர்ந்த பின்னர் பிற்காலத்தில் தாங்கள் ஒரிஜினலாக க்ஷத்ரியர்கள்தான் என்று நிறுவ படாதபாடு பட்டிருக்கிறார்கள்.

மிஷனரிகளின் வரவுதான் நாடார்/சாணார் எழுச்சிக்கு உந்துவிசையாக இருந்திருக்கிறது. பல இடங்களில் முழு கிராமமே கிறிஸ்துவ மதத்துக்கு மாறி இருக்கிறது. எல்லாருமே கிறிஸ்துவர், ஆனால் எல்லாருமே ஒரே ஜாதி என்னும்போது பெரிதாக ஜாதி மத டென்ஷன்கள் உருவாகவில்லை. பெரிதாக எதிர்ப்பு இல்லை. கிறிஸ்துவ நாடார்கள் ஏறக்குறைய ஒரு உபஜாதியினராகத்தான் கருதப்பட்டிருக்கிறார்கள். திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. உயர்ந்த உள்ஜாதியினரான ஐந்து நாடான் குடும்பங்கள்தான் கொஞ்சம் எதிர்த்திருக்கின்றன. பின்னாளில் கால்ட்வெல் போன்றவர்கள் பெரிய தாக்கமாக இருந்திருக்கிறார்கள். (கால்ட்வெல்லின் ஆவண முயற்சிகளை மறுத்தும் புத்தகங்கள் வந்திருக்கின்றன)

கிறிஸ்துவ நாடார்கள் கிராமங்களுக்கு வெளியே செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பனை வெல்லத்தை வைத்து வியாபாரம் ஆரம்பித்திருக்கிறது. மெல்ல மெல்ல நிலை மாற ஆரம்பித்திருக்கிறது. வியாபாரம் வளர்ந்ததும் ஆறு ஊர்கள் – சிவகாசி, விருதுப்பட்டி, திருமங்கலம், சாத்தான்குடி, பாளையம்பேட்டை, அருப்புக்கோட்டை – நாடார்களின் மையங்களாக உருவாகி வந்திருக்கின்றன. உறவின்முறை என்ற அமைப்பு அவர்களை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது. நடுவில் மறவர்களோடு மட்டும் கொஞ்சம் தகராறு. மறவர்கள் சிவகாசி மீது 1899-இல் ஏறக்குறைய படையே எடுத்திருக்கிறார்கள். அதுவும் நாடார்கள் மறவனுக்குப் பிறந்திருந்தால் எப்போது வந்து தாக்குவாய் என்று சொல்லிவிட்டு தாக்கு, குறவனுக்குப் பிறந்திருந்தால் சொல்லாமல் தாக்கு என்று சவால் விட, இந்த தேதியில் இந்த நேரத்தில் வருவேன் என்று 5000 மறவர்கள் வந்திருக்கிறார்கள்.

நாடார் மஹாஜன சபை உருவாகி இருக்கிறது. மேலும் மேலும் பள்ளிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம் உயர்ந்தததும் தாங்களும் ‘உயர்ந்த ஜாதியினரே’ என்று நிறுவ முயற்சிகள். சாணார்கள் என்ற பெயரை ஒதுக்கி நாடார் என்ற பெயருக்கு மாறி இருக்கிறார்கள். கோவில் பிரவேசத்துக்கான முயற்சிகள். ஆனால் இவை எல்லாம் தாங்கள் இடைநிலை ஜாதியினர் என்று நிறுவத்தான், தங்களுக்குக் கீழே உள்ள தலித்களைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

தோள்சீலைக் கலகம் பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் அது நாயர்-நாடார் தகராறு, தமிழக நாடார் பெண்கள் போலவே அன்றைய திருவாங்கூர் நாடார் பெண்களும் மார்புத்துணி அணிய ஆரம்பித்தார்களாம். அந்தத் துணி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதில்தான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

சுயமரியாதை இயக்கம் நாடார்களை ஈர்த்திருக்கிறது. டபிள்யூ. பி. ஏ. சௌந்தரபாண்டியன் முக்கியத் தலைவர். ஆனால் காமராஜ் முதல்வர் ஆனதும் எல்லாம் நம்ம ஜாதிக்காரன் முதல்வர் என்ற பெருமையில் எல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. இத்தனைக்கும் காமராஜ் தன் ஜாதிக்காரன் என்று ஒரு துரும்பைக் கூட அசைத்திருக்க மாட்டார்.

தி.மு.க.வும் அவர்களை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது என்று முடித்திருக்கிறார். புத்தகம் 1969-இல் எழுதப்பட்டது.

மிஷனரிகளையும் மத மாற்ற முயற்சிகளையும் எத்தனையோ விமர்சிக்கிறோம். ஆனால் நாடார்களைப் பொறுத்த வரையில் கிறிஸ்துவம்தான் அவர்கள் எழுச்சிக்கு உந்துவிசை. மதம் மாறினாலும் ஜாதி அவர்களது வேர்களை இன்னும் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். புத்தகம் கிடைப்பது கஷ்டமாக இருக்கலாம். இந்தத் தளத்தில் பதிவு செய்தால் இரவலாக மின்பிரதி கிடைக்கிறது.

பின்குறிப்பு: இந்தப் பதிவுக்கு ஒரே ஒரு பின்னூட்டம் வந்தது. நாடார் மேட்ரிமனிக்கான விளம்பரம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

(முழு) மஹாபாரதம் தமிழில் முழுமை பெற்றது

கிட்டத்தட்ட ஏழு வருஷம் முன்னால் அருட்செல்வப் பேரரசனின் முயற்சி பற்றி கேள்விப்பட்டேன். அப்போது ஆதிபர்வத்தின் ஆரம்பத்தில் இருந்தார். அனேகமாக அவரைப் பற்றி முதலில் பதிவு செய்தது நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் கூட என் மூலம்தான் கேள்விப்பட்டார் என்று நினைவு. (என் நினைவு தவறாகவும் இருக்கலாம்.) நான் எழுதியதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது வேறு விஷயம். 🙂

ஏழெட்டு வருஷம் அயராத உழைத்து இன்று முழுவதையும் மொழிபெயர்த்தும் முடித்துவிட்டார். அவரது தளராத முயற்சியைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. சிலிகன் ஷெல்ஃபில் நாலு நாளைக்கு ஒரு பதிவு போடவே நுரை தள்ளுகிறது, எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நிறுத்துவது இங்கே எழுதவதைத்தான். பாருங்கள் அவர் முடித்து ஓரிரு மாதம் இருக்கும், இப்போதுதான் அவரை வாழ்த்தி இங்கே நாலு வரி எழுத முடிந்திருக்கிறது. அவரை எத்தனை பாராட்டினாலும் தகும். மஹானுபாவுலு!

இப்போது ஹரிவம்சத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

2013 மே மாதம் எழுதிய ஒரிஜினல் வரிகள் கீழே…

mahabharathamஎனக்கு மகாபாரதம் அறிமுகமானது எனது பாட்டி மற்றும் அம்மா மூலமாகத்தான். அது ஒரு குழந்தைக்கேற்ப எளிமையாக்கப்பட்ட கதை. பதின்ம வயதில் ராஜாஜியின் சுருக்கத்தைப் படிக்கும்போதுதான் பிரமித்துப் போனேன். அப்புறம் வில்லிபாரதத்தைப் படித்தேன். அதில் இருந்த சின்னச் சின்ன மாற்றங்கள் தெரிந்தது. மூலத்தைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பியது, ஆனால் சமஸ்கிருதம் தெரியாது. அங்கும் இங்குமாகப் பல பிரதி பேதங்களைப் படித்தேன். மனம் நிறைவு அடையவே இல்லை.

arul_selvap_perarasanகிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுதான் மூலத்துக்கு மிகவும் நெருக்கமானது என்று கேள்விப்பட்டேன். இப்போது அருள் செல்வப் பேரரசன் என்பவர் இதை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இது வரை ஆதி பர்வத்தில் நூற்றி சொச்சம் அத்தியாயங்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு ஒரு ஜே!

கங்குலின் மொழிபெயர்ப்பு இணையத்தில் கிடைக்கிறது ஆனால் படிக்க கை கூடி வரவில்லை. பிரச்சினை என்னவென்றால் அது எடிட் செய்யப்படாத ஒரு படைப்பு போல இருப்பதுதான். எக்கச்சக்க கூறியது கூறல், பிராமணர்களை வலிந்து புகழ்தல் எல்லாம் நிரடுகின்றன. இருந்தாலும் ஒரு நாள் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்கு எப்போதுமே தமிழில் படிப்பது ஆங்கிலத்தில் படிப்பதை விட ஒரு மடங்கு சுலபம். எனவே தனிப்பட்ட முறையிலும் அவருக்கு நன்றி!


தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

மதன் ஜோக்ஸ்

(மீள்பதிவு)

ஆனந்த விகடன் ஜோக்ஸ் அவற்றோடு சேர்ந்த சித்திரங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருந்தது. நாற்பதுகளில் மாலியிலிருந்து ஆரம்பித்த அந்த பொற்காலத்தின் கடைசி கண்ணி மதன். என் தலைமுறையினர் பலருக்கு விகடன் என்றால் சுஜாதா தொடர்கதை மற்றும் மதன் ஜோக்ஸ், கார்ட்டூன்கள்தான்.

மதன் எழுதிய இன்னொரு சுவாரசியமான புத்தகம் வந்தார்கள் வென்றார்கள். என்னைக் கேட்டால் சரித்திரப் பாடப் புத்தகங்களுக்கு பதிலாக இதை எல்லாம் பள்ளிகளில் படிக்கலாம். எல்லாரும் வரலாற்றை விரும்பிப் படிப்பார்கள்! Enough said.

ஆனால் மனிதனுக்குள் ஒரு மிருகம் எல்லாம் வன்முறையை sensationalize செய்யும் தண்டப் புத்தகம்.

பாஸ்டன் பாலாவின் தளத்தில் பார்த்த பழைய பதிவுகளிலிருந்து (பதிவு 1, பதிவு 2). வசதிக்காக இங்கே ஜோக்குகளை கட்-பேஸ்ட் செய்திருக்கிறேன்.

madhan_jokes_rettai_vaal_rengudu_1

madhan_jokes_rettai_vaal_rengudu_2

madhan_jokes_rettai_vaal_rengudu_3

madhan_jokes_rettai_vaal_rengudu_4

madhan_jokes_rettai_vaal_rengudu_5

madhan_jokes_rettai_vaal_rengudu_6

madhan_jokes_rettai_vaal_rengudu_7

madhan_jokes_rettai_vaal_rengudu_8

madhan_jokes_siripputh_thirudan_singaravelu

madhan_jokes_munjakkirathai_mutthana

madhan_jokes_politics_1

madhan_jokes_politics_2

madhan_jokes_politics_3

madhan_jokes_politics_4

madhan_jokes_politics_5

madhan_jokes_politics_6

madhan_jokes_kaccheri

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணியின் மதன் ஜோக்ஸ் தொகுப்பு

தமிழின் முதல் செய்திப் பத்திரிகை

சீனி. வேங்கடசாமியின் சொற்களில்:

1855, தினவர்த்தமானி: பெயரைக் கண்டு தினசரி பத்திரிகை எனக் கருத வேண்டாம். இது வாரப் பத்திரிகை. வியாழக்கிழமைதோறும் வெளிவந்தது. பெர்சிவல் பாதிரியார் (Rev P. Percival) இதைத் தொடங்கி இதன் ஆசிரியராக இருந்தார். தினசரி பத்திரிகையின் பெரிய அளவில் அச்சிடப்பட்டது. செய்திகளுடன் இலக்கியம், விஞ்ஞானம் முதலிய கட்டுரைகளும் வெளிவந்தன. அரசாங்கத்தார் மாதம் 200 ரூபாய் இப்பத்திரிகைக்கு நன்கொடை அளித்தனர். பெர்சிவல் ஐயர் விலகிக் கொண்ட பிறகு இந்நன்கொடை நிறுத்தப்பட்டது. அவருக்குப் பிறகு ஏட்டுச் சுவடியிலிருந்து பல நூல்களைப் பதிப்பித்தவரான சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இதன் ஆசிரியராக சில காலம் இருந்தார். பிறகு விசுவநாத பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார். தமிழில் செய்திகளை வெளியிட்ட முதல் பத்திரிகை இதுவே.

தினவர்த்தமானி தெலுங்கிலும் 1856-இலிருந்து வரத் தொடங்கி இருக்கிறது. தெலுங்குப் பத்திரிகை 700 பிரதிகள் விற்றதாம். தமிழ் எத்தனை பிரதிகள் விற்றது என்று தகவல் இல்லை, எத்தனை காலம் பத்திரிகை வெளிவந்தது என்றும் தெரியவில்லை.

முதல் செய்திப் பத்திரிகை தினவர்த்தமானி; முதல் பத்திரிகை? சீனி. வே. சொற்களில்:

1831, தமிழ்ப் பத்திரிகை: திங்கள் இதழ். கிறிஸ்துவ சமயப் பத்திரிகை. ‘Madras Religious Tract Society’-ஆல் சென்னையில் அச்சிடப்பட்டது. கிறிஸ்துவ மத சம்பந்தமான கட்டுரைகள் இதில் எழுதப்பட்டன. தமிழில் முதன்முதல் வெளிவந்த பத்திரிகை இதுவே. அடிக்கடி ஆசிரியர்கள் மாறியபடியால் வெளிவருவதில் தவக்கம் ஏற்பட்டது.

முதல் சிறுவர் பத்திரிகை? சீனி. வே. சொற்களில்:

1840, பாலதீபிகை: சிறுவர்களுக்கான பத்திரிகை. ‘மூன்று மாதத்துக்கு ஒரு முறை நாகர்கோவிலிலிருந்து வெளிவந்தது. 1852 வரையில் நடந்தது.

ஆதாரம்: சீனி. வேங்கடசாமி எழுதிய 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பத்திரிகைகள்

திரைப்படமான புத்தகம்: Crazy Rich Asians

இரண்டு வருஷத்துக்கு முன்னால் வெளியான இந்தப் படம் சக்கைப்போடு போட்டது. 3 கோடி டாலர்கள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 24 கோடி டாலர்கள் வரவு கண்டது. ஆஸ்கர் விருது வாங்கும் திரைப்படங்களைத் தவிர பிறவற்றைப் பற்றி அவ்வளவு பிரக்ஞை இல்லாத நான் கூட இதன் பேரைக் கேட்டிருந்தேன். ஒரு முறை விமானத்தில் பார்க்கவும் பார்த்தேன்.

திரைப்படம் ஒன்றும் நன்றாக இல்லை. எனக்கு திரைப்படத்தின் மூலம் புத்தகமாக இருந்தால் அந்தப் புத்தகம் நன்றாக இருக்கும் என்று ஒரு (மூட) நம்பிக்கை உண்டு. மோசமான புத்தகத்தை யாரும் திரைப்படமாக எடுக்கமாட்டார்கள் என்று ஒரு குருட்டு நம்பிக்கை. சரி, எப்போதாவது கையில் வந்து விழுந்தால் படிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

என் துரதிருஷ்டம், கையில் வந்து விழுந்துவிட்டது. அந்தக் காலத்து மணியன் கதைகளை விட மோசமாக இருந்தது. நாவல் முழுவதும் Brand name dropping மட்டுமே. அவன் ஆஸ்டன் மார்ட்டின் காரை ஓட்டினான், இவள் இந்த டிசைனர் கைப்பையை வாங்கினாள் என்று பக்கத்துக்கு இரண்டு brand name.Brand name-இல் ஆர்வம் உடையவர்களுக்கு இந்த நுண்விவரங்கள் சுவாரசியமாக இருக்கலாம். நான் எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கூட நான் அனேகமாக பழைய புத்தகக் கடையில்தான் வாங்குபவன், எனக்கு போர்தான் அடித்தது.

கதையோ ஐம்பது அறுபதுகளின் தமிழ் சினிமாவிலேயே பழையதாகிவிட்ட கதை. சிங்கப்பூரில் அதிபணக்காரக் குடும்பத்தில் பிறந்த – டாடா பிர்லா அம்பானி ரேஞ்ச் – நாயகன். மேல் மத்தியதர வர்க்க நாயகியைக் காதலிக்கிறான். அவன் பெரிய பணக்காரன் என்று அவளுக்குத் தெரியாது. வா சிங்கப்பூர் போகலாம் என்று அழைத்துக் கொண்டு போகிறான். பணம், அந்தஸ்து பிரிக்கிறது, பிறகு சேர்ந்துவிடுகிறார்கள்…

எனக்கு ஒரு அசட்டுப் பழக்கம். எத்தனை மோசமான புத்தகத்திலும் ஐம்பது பக்கம் படித்துவிட்டால் தம் கட்டி படித்துவிடுவேன். அதே போல ஒரு சீரிசை ஆரம்பித்துவிட்டால் முடித்தாக வேண்டும். Sunk Cost Fallacy. அதனால் இதன் தொடர்ச்சியான China Rich Girlfriend (2015), Rich People Problems (2017) இரண்டையும் வேறு படித்துத் தொலைத்தேன். இந்த வருஷமாவது இந்த அசட்டுப் பழக்கத்தை தலை முழுக வேண்டும்.

புத்தகங்களை எழுதியவர் கெவின் க்வான். அவருடைய சொந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதினாராம்.

தவிருங்கள். திரைப்படம், புத்தகங்கள் எல்லாவற்றையும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்