என் சிறு வயதில் வீட்டில் காலையில் எழுந்து கந்தசஷ்டி கவசம் சொன்னால்தான் காப்பி கிடைக்கும். சுலோகம் சொல்வதற்கும் முன்னால் குளித்தாக வேண்டும். அதனால் சோப்பு போடும்போதே கடகடவென்று சொல்ல ஆரம்பித்துவிடுவோம். துணியை மாட்டிக் கொள்ளும்போது பாதியாவது முடிந்திருக்கும். இப்படி ஒரு கட்டுப்பாடு இருந்ததால் இன்றும் கந்தசஷ்டி கவசம் நினைவிருக்கிறது. அதே நேரத்தில் அதன் மீது சிறு வயதில் ஏற்பட்ட கடுப்பும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது.
அதிலும் டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு என்று சொல்லும்போது மனதுக்குள் கொஞ்சம் சிரிப்பு வரும். வட்டக் குதத்தைக் கூட விடமாட்டேன் என்கிறாரே என்று தோன்றும். கவிதை தெரியாத வயதுதான், (இன்று மட்டும் தெரியுமா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்) ஆனால் நயமே இல்லாத பாடல்/கவிதை என்று தோன்றியது. அம்மாவிடம் சொல்லிவிட முடியாது…
அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் பக்தி இருந்தது. வேறு ஏதாவது சுலோகம் சொல்லலாம் என்று தேடி இருக்கிறேன். விநாயகர் அகவல் (இன்றும் முக்கால்வாசி நினைவிருக்கிறது), கந்தர் அனுபூதி இரண்டும்தான் முயற்சி செய்தேன். இரண்டுமே அருமையான சந்தம் உள்ளவை. சஷ்டி கவசமும் நல்ல சந்தம் உடையதுதான், ஆனால் விநாயகர் அகவல் வேற லெவல். (சில பாரதிதாசன் கவிதைகளில் இதே மாதிரி நல்ல சந்தம் உண்டு.) கந்தர் அனுபூதியோ, கையில் பிடிக்க முடியாது. அதற்கு இணையான சந்தத்தை சில பாரதியார் கவிதைகளில் பார்த்திருக்கிறேன். அதை விடச் சிறந்த சந்தத்தை சில கம்பன் கவிதைகளிலும் திருப்புகழிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். சந்தத்திற்கு அருணகிரி என்பது சத்தியமான வார்த்தை.
அந்த வயதிலும் கந்தர் அனுபூதி கவிதை என்று தெளிவாகத் தெரிந்தது. அதனாலேயே பிடித்துப் போய்விட்டது. என்ன, ஓரிரு வருஷம்தான் பாராயணம், அதனால் இன்று நினைவில் இருப்பவை சில பாடல்கள் மட்டும்தான்.
எல்லாவற்றையும் விட மனதில் ஆழப் பதிந்த பாடல் இதுதான்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே
சும்மா இரு சொல்லற என்பது என்னைத் தொட்ட வார்த்தை. அப்படி இருந்தால் கடவுளைத் தவிர வேறு பொருளை அறியாமல் இருக்கலாம் என்பது பெரிய கனவாக இருந்தது. அப்போதெல்லாம் மனதில் ஏதாவது ஓடிக் கொண்டே இருக்கும். சும்மா இருக்க முயன்று பார்த்தேன், நடக்கவே இல்லை. இன்றும் கூட வாய்ப்பில்லைதான். முருகனைத் திருடன் என்று அழைப்பது கவர்ச்சிகரமான வார்த்தைப் பிரயோகம்!
முதல் பாடலில் ஆடும் பரிவேல் அணிசேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய் என்று கேட்பதும் அருமை. தேளும் பாம்பும் செய்யான் பூரானிடத்திடமிருந்து என்னைக் காப்பாற்று என்று மனதில் இளக்காரச் சிரிப்புடன் தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவனுக்கு உன்னைப் பாடுவதே எனக்குப் பணியாக அருள வேண்டும் என்று பிரார்த்திப்பது uplifting ஆக இருந்தது. பின்னொரு பாடலில் முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகும் செயல்தந் துணர்வென் றருள்வாய் என்றும் வரும். அவனை நினைத்து உருகவும் அவன் அருள் தேவை!
உருவென் றரவென் றுளதென் றிலதென் இருளன் றொளியன் றென நின்றதுவே என்பது கவிதை! உருவம் என்றும், அருவம் என்றும் உளது என்றும் இலது என்றும் இருள் என்றும் ஒளி என்றும் நின்றானாம்! கொஞ்சம் பெரியவனான பிறகு இதே கரு கொண்ட நம்மாழ்வார் பாடலையும் பார்த்த நினைவிருக்கிறது.உளன் எனில் உளன் இலன் எனில் இலன் என்ற வரிகள்தான் என்று நினைக்கிறேன்.
மேலே உள்ள வரியில் சந்தம் எத்தனை அற்புதமாக வெளிப்படுகிறது! நேரசை நிரையசை எல்லாம் அருணகிரியார் மூலம் தெரிந்து கொண்டதுதான். (ஆனால் தேமா புளிமா எல்லாம் மறந்துவிட்டது….)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே
விழைவு புலன்கள் வழியாகத்தான் வெளிப்படும் என்பது அப்போது தரிசனமாக இருந்தது. இப்போது உடல் செயலிழந்து மூளை மட்டுமே செயல்பட்டாலும் விழைவு மறையாது என்று தோன்றுகிறது.
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் என்பது காதலின் உச்சம் என்று அந்த வயதில் தோன்றியது. நாற்பது வருஷங்களுக்கு முன் மனைவி/காதலியின் பாதம் பணியும் ஆண் என்பது புரட்சி! பிற்காலத்தில் ஜயதேவரின் அஷ்டபதியிலும் அப்படி சில வரிகளைப் பார்த்தேன்
ஸ்மரகரள கண்டனம் மமசிரஸி மண்டனம் தேஹீ பத பல்லவம் உதாரம்
என் தலை மீது உன் கால்களை வைத்து என் தாபத்தை ஆற்று என கண்ணன் ராதாவை வேண்டுகிறான்!
பல வரிகள் அன்று (இன்றும்) மனதைக் கவர்ந்தன.
அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே – அவன் அருளைப் பெறவும் அவன் அருள் புரிய வேண்டும் என்பது அற்புதமான முடிவிலியாகத் தெரிந்தது. இல்லே எனு மாயையில் இட்டனை நீ – மாயையில் இட்டவனும் அவனே! பின்னே? அலகிலா விளையாட்டுடையான்! மாயையில் அழுத்துபவனும் அவனே, விடுவிப்பவனும் அவனே, அதுவும் அவன் அருள், இதுவும்…
யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே, தன்னந்தனி நின்றது தானறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ, அறிவொன் றறநின் றறிவார் அறிவில் பிறிவொன் றறநின் றபிரான், உணரா மறவா…..விமலன் புதல்வா
போன்ற வரிகள் அந்த வயதில் ஒரு புது உலகைக் காட்டின. என்னை விழுங்கி வெறும் தானாய் நின்ற தற்பரம் – அதில் அந்த வெறும் தானாக என்ற வார்த்தைப் பிரயோகம் எத்தனை கவித்துவமாக அமைந்திருக்கிறது! தன்னந்தனியாக நின்றதை தான் மட்டுமே அறிய முடியும் இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பது எப்படி நடக்கும்? அறிவில் நின்றவர் அறிவில் எல்லாமாக நின்ற பிரான்! விமலன் புதல்வன் நினைப்பதுமில்லை, மறப்பதுமில்லை!
பாழ்வாழ் வெனு மிப்படு மாயையிலே
வீழ்வா யெனஎன் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ
வாழ்வா யினிநீ மயில் வாகனனே
என்னை மாயையில் வீழ்வாய் என விதித்தாய், (ஆனாலும்) வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே என்று வாழ்த்துவது கவிதை. அன்று (இன்றும்) இதை இரண்டு விதமாகப் படிக்க முடிந்தது/முடிகிறது. நிந்தாஸ்துதியாக, உண்மையான வாழ்த்தாக. அன்று அப்படி இரண்டு விதமாகப் படிக்க முடியும் என்பது பெரிய கண்திறப்பாக இருந்தது.
பிடித்த சில பாடல்கள்:
ஆடும் பரிவேல் அணிசேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவிற்
சாடும் தனியானை சகோ தரனேசெம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.செவ்வான் உருவில் திகழ் வேலவனன்
றொவ்வா ததுஎன உணர்வித் ததுதான்
அவ்வா றறிவார் அறிகின்ற தலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவேபாழ்வாழ் வெனு மிப்படு மாயையிலே
வீழ்வா யெனஎன் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ
வாழ்வா யினிநீ மயில் வாகனனேதூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவேஆறா றையும்நீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ?
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனேஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முழு அனுபூதியையும் இங்கே படிக்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்
தொடர்புடைய சுட்டி: கந்தர் அனுபூதி