பார்த்திபன் கனவு

1895-இலேயே முதல் சரித்திர நாவல் (மோகனாங்கி) வந்துவிட்டதாம். இருந்தாலும் தமிழர்களுக்கு 1942-இல் வந்த பார்த்திபன் கனவுதான் முதல் சரித்திர நாவல்.

பார்த்திபன் கனவுக்கும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களுக்கும் கதைப்பின்னல் என்ற வகையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மாயாவினோதப் பரதேசி நாவலில் திகம்பர சாமியார் செய்யும் அஜால்குஜால் வேலைகளை இங்கே சிவனடியார் செய்கிறார். ரோமியோ ஜூலியட் போல ஒரு ஜோடி, சுலபமாக யூகிக்கக்கூடிய முடிச்சுகள், திருப்பங்கள், இன்டர்நெட்டும் ஈமெயிலும் இல்லாத காலத்திலேயே நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் நடப்பதைத் அடுத்த நிமிஷமே தெரிந்து கொள்ளும் சக்கரவர்த்தி, caricature என்ற லெவலில் உள்ள பாத்திரங்கள் என்று பலவிதமான பலவீனங்கள் உள்ள நாவல். எனக்கு இது அவருக்கு ஒரு practice நாவலோ, எழுதிப் பழகி கொண்டாரோ என்று தோன்றுவதுண்டு. Fluff என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கல்கி வடுவூராரை விட பல மடங்கு தொழில் திறமை உள்ளவர். அவரால் வெகு சரளமாக எழுத முடிகிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் கல்கியால் அதை சுவாரசியமாக எழுத முடிகிறது. எங்க வீட்டுப் பிள்ளையும் ஷோலேயும் இன்றும் ரசிக்கும்படிதானே இருக்கின்றன? இன்றே ரசிக்க முடிகிறதென்றால் அன்று இந்த நாவல் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்? வாசகர்கள் எத்தனை தூரம் விரும்பிப் படித்திருக்க வேண்டும்? கல்கி ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து விலகி கல்கி பத்திரிகையை ஆரம்பித்த சில மாதங்களிலேயே இதை தொடர்கதையாக எழுத ஆரம்பித்துவிட்டார். வியாபாரம் பெருக இந்த நாவல் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். பத்திரிகையில் தொடர்கதையாக வருவது இந்த நாவலுக்கான வாசகர் வட்டத்தையும் அதிகரித்திருக்க வேண்டும்.

கல்கி எழுதியது ஒரு முன்னோடி நாவல். முன்னோடி முயற்சிக்கு உண்டான பலங்களும் பலவீனங்களும் அதில் நிறைய இருக்கின்றன. அவரைச் சொல்லியும் குற்றமில்லை, அவரது ரோல் மாடல்கள் அலெக்சாண்டர் டூமாவும், வால்டர் ஸ்காட் ஆகியோரின் பாணியில் ஆனால் அவர்களை விட சிறப்பாக எழுதினார்.

கல்கி எழுதியது வணிக நாவல். வணிக நாவல் எழுத வேண்டும், வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே இதை எழுதி இருப்பார். இதில் பெரிய மானுட தரிசனங்கள் இல்லை. கல்கியின் எந்த நாவலிலும் அதெல்லாம் கிடையாது. கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், காவிரி பற்றிய வர்ணனைகள் ஆகியவையே இவற்றின் பலம். எட்டு ஒன்பது வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

பார்த்திபன் கனவை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அதனால் கதை சுருக்கமாக: சோழ அரசன் பார்த்திபன் பல்லவ அரசன் சக்ரவர்த்தி நரசிம்மவர்ம பல்லவருக்கு கப்பம் கட்ட மறுக்கிறான். அவனது கனவு சோழ அரசு பல்லவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும், கரிகாலன் காலத்து கீர்த்தியை மீண்டும் அடைய வேண்டும் என்பது. மகன் விக்ரமன் சிறுவனாக இருக்கும்போதே நரசிம்மவர்மரை எதிர்த்துப் போராடி இறக்கிறான். அவன் வீரத்தைக் கண்டு பூரித்துப் போன சிவனடியார் ஒருவர் அவன் இறக்கும்போது விக்ரமனை வீரனாக வளர்க்கிறேன் என்று வாக்களிக்கிறார். விக்ரமன் வாலிபன் ஆன பிறகு சக்ரவர்த்தியை எதிர்த்து நாடு கடத்தப்படுகிறான். உண்மையில் நரசிம்மவர்மர் அவனை தொலைதூர தீவு ஒன்றுக்கு அரசனாக அனுப்புகிறார். அனுப்புவதற்கு முன் நரசிம்மவர்மரின் மகள் குந்தவி விக்ரமனை நோக்க அண்ணலும் நோக்குகிறான். குந்தவியைத் தேடி மீண்டும் தமிழகம் திரும்பும் விக்ரமன், அவனைத் துரத்தும் காபாலிகன் ஒருவன், சிவனடியார் உண்மையில் யார் என்ற மர்மம், அடுத்தபடி எழுதப் போகும் சிவகாமியின் சபதம் நாவலுக்கு அங்கே இங்கே ஒரு தீற்றல்…

ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

கல்கி சரித்திர நாவலை இப்படி எழுதலாம் என்று ஒரு கோடு போட்டார், ரோடு போட இரண்டு தலைமுறைக்கு யாரும் வரவில்லை. அந்த நாவலின் தாக்கத்தில் இருந்து இன்றும் தமிழகம் முழுதாக வெளிவரவில்லை. அன்று அவர் நிறுவிய parameters-ஐ ஒரு பரம்பரையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது.

கல்கியைத் தாண்டி அடுத்தவர்கள் போகாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் சரித்திரக் கதை என்றால் அது ராஜா-ராணி, இளவரசன், இளவரசி, அவர்களுக்கு உதவி செய்யும் மந்திரிகள், ஒற்றர்கள், போர்கள், அரண்மனைச் சதிகள், அங்கங்கே தமிழ்(இந்திய) கலை+இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம், ஃபார்முலா மனிதர்கள், எம்ஜிஆர் படம் மாதிரி கொஞ்சம் வீரம்+சாகசம்+காதல்+அன்பு+தந்திரம் எல்லாம் கலந்த ஒரு மசாலா என்றே சரித்திரக் கதை ஆசிரியர்களின் புரிதல் இருக்கிறது.

ஆயிரம் நொட்டை சொன்னாலும் தமிழர்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

மாதம் மும்மாரி மழை

என் சிறு வயதில் இந்த வசனம் மிகவும் பிரபலம். திரைப்படங்களில், நாடகங்களில் கேட்கும் வசனம். முக்கியமாக தெருக்கூத்துகளில் ராஜா அறிமுகம் ஆகும் காட்சியில் மந்திரியைப் பார்த்து “மந்திரி, மாதம் மும்மாரி மழை பொழிகிறதா” என்று கேட்டே தீருவார். ஆண்டாள் திருப்பாவையில் கூட தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து என்று வருகிறது.

அது என்ன மாதம் மும்மாரி மழை? சமீபத்தில் தூக்குத்தூக்கி நாடகத்தின் வரி வடிவத்தைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன்.

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே

எல்லாவற்றுக்கும் ஏதாவது விளக்கம் இருக்கிறது, நமக்குத்தான் தெரிவதில்லை. விளக்கம் காலாவதி ஆன ஒன்றா இல்லையா என்ற வாதத்தின் பக்கம் நான் போகப் போவதில்லை. 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

அஞ்சலி: செல்வராஜு நடராஜன்

இந்தத் தளத்தின் மிகப் பிரபலமான பதிவை எழுதிய செல்வராஜு நடராஜன் கொரோனா பாதிப்பால் மறைந்தார். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

செல்வராஜ் BSNL-இல் பொறியாளராகப் பணியாற்றி இருக்கிறார். தீவிர வாசகர். தமிழ் நாவல்கள், சிறுகதைகளை மட்டும் படிக்காமல் அவற்றின் பரிந்துரைகளையும் விடாமல் படித்தார். அந்தப் பரிந்துரைகளை வைத்து meta-பரிந்துரைகள் எழுதினார். அவரது அணுகுமுறையை Wisdom of the Crowds என்று சுருக்கமாகச் சொல்லலாம். இணையத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் பரிந்துரைகளைத் தேடிப் பிடித்து எண்ணினார். எந்த நாவலை, எந்த சிறுகதையை எத்தனை பேர் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தார். அதிலிருந்து பத்து பரிந்துரை பெற்ற நாவல்/சிறுகதை, ஒன்பது பரிந்துரை பெற்ற படைப்பு என்று தரவரிசைப்படுத்தினார்.

சுவாரசியமான, வித்தியாசமான அணுகுமுறை. ஆனால் ஜனநாயகத்தில் எனக்கும் ஒரு ஓட்டுதான், ஜெயமோகன் போன்ற சிறந்த விமர்சகருக்கும் ஒரு ஓட்டுதான், ராஜேஷ்குமார் படைப்புகளைத் தாண்டாதவருக்கும் அதே ஒரு ஓட்டுதான். இணையத்திலோ சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளலாம். அதனால் இந்த அணுகுமுறையில் தரமற்ற படைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுவிடுமோ என்று எனக்கு ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அவரது இந்த meta-தரவரிசை அனேகமாக ஒரு நல்ல விமர்சகரின் தர வரிசையாகத்தான் இருந்தது. Wisdom of the Crowds அணுகுமுறை செல்லுபடியாகும் என்று என்னை உணர வைத்தது.

அவரது தேடல் மிக அகலமானது. இணையத்தில் 2003-04 காலத்தில் நான் பூரி என்ற பெயரில் சில விவாதக் குழுமங்களில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் அதைக் கூட தேடிக் கண்டுபிடித்து தனது கணிப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரது பிரபலமான பதிவு – 150 சிறந்த சிறுகதைகள்இங்கே.

அவாது இழப்பு மிக வருத்தம் தருகிறது. எனது அஞ்சலி.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

ஹுசேன் ஜெய்தி எழுதிய “Class of 83”

மும்பையின் குற்ற உலகம் “புகழ்” பெற்றது. கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், தாவூத் இப்ரஹிம், அருண் காலி என்ற நீண்ட வரலாறு உள்ளது. சமீப காலமாக “பாய்” ஆக இருப்பது சமூகம் ஏற்கும் ஒரு வேலையாகவே மாறிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா?

ஹுசேன் ஜெய்தி எழுதிய Class of 83 (2019) அப்படி கட்டுப்படுத்த போராடிய ஒரு அதிகாரியைப் பற்றிய புத்தகம். ப்ரதீப் ஷர்மாவின் வாழ்க்கை வரலாறு என்றே சொல்லலாம். Class of 83-இல் இன்னும் பலர் இருந்தாலும் இந்தப் புத்தகம் ஷர்மாவைதான் பெரும்பான்மையாக விவரிக்கிறது.

ஷர்மா 83-இல் இன்ஸ்பெக்டர் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். அவருடைய சகாக்கள் விஜய் சாலஸ்கர். ஷர்மா, சாலஸ்கர், ரவி ஆங்கரே, ப்ரஃபுல் போசலே, அஸ்லம் மோமின் போன்றவர்கள் சட்டத்தை வளைத்து – “குற்றவாளிகளை” சுட்டுத் தள்ளி – மும்பையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றிருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 83-இல் இன்ஸ்பெக்டர் பயிற்சி எடுத்தவர்கள். பிற்காலத்தில் தயா நாயக் இவர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

இப்படி சுட்டுத் தள்ளினால் சட்டம் எதற்கு என்ற கேள்வி எல்லாம் எனக்கு இல்லை. அல் கபோனுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். டைகர் மெமன், தாவூத் இப்ரஹிம் போன்றவர்களுக்கெல்லாம் வழக்கு, விசாரணை எல்லாம் ஒரு கேடா என்றுதான் தோன்றுகிறது. இது தவறுதான், ஆனால் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

ஷர்மாவின் முதல் என்கௌண்டர் ஏறக்குறைய சினிமாத்தனமானது. இரண்டு ரௌடிகள் வயதான கிழவன் கிழவியை வீட்டிலிருந்து இழுத்து வந்து வெளியே போடுகிறார்கள். தடுக்க வந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் வாளால் கையில் வெட்டு விழுந்து காயம் அடைகிறார்கள். மூன்றாமவரை வெட்டப் போகும்போது ஷர்மா அந்த ரௌடியை சுடுகிறார். அவனது நண்பன் இவரை வெட்ட வர அவனையும் சுடுகிறார். புலி ரத்தத்தின் ருசி கண்டுவிட்டது!

“குற்றவாளிகளை” சுட்டுத் தள்ள முதலில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். யாராவது துப்பு கொடுக்க வேண்டும். அப்படி துப்பு கொடுப்பவர்களும் சிறுசிறு குற்றங்களை – பிக்பாக்கெட், திருட்டு இப்படி ஏதாவது – செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தருவதன் மூலம் – சில பல சமயங்களில் பணமே தருவதன் மூலம்தான் – துப்பு கிடைக்கும் என்பதை ஷர்மா தன் வேலைக்காலத்தின் ஆரம்பத்திலேயே உணர்ந்தார். அதற்காக அப்படிப்பட்ட ஒரு நெட்வொர்க்கை கட்டி அமைத்திருக்கிறார்.

அப்புறம் என்ன? வரிசையாக துப்பு, சுட்டுக் கொலை என்றுதான் வாழ்க்கை போயிருக்கிறது. 312 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறாராம்.

சகா சாலஸ்கர் நெருங்கிய நண்பர் அப்போது. இருவரும் ஒன்றாகப் பணி ஆற்றி இருக்கிறார்கள். ஆனால் பின்னால் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவருக்கும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. சாலஸ்கர் 2008 மும்பை தாக்குதலில் கசப்-இஸ்மாயிலை எதிர்த்து மரணம் அடைந்திருக்கிறார்.

தாவூத் இப்ரஹிமின் சகோதரன் இக்பால் கஸ்கரை மிரட்டி பணம் பறித்ததற்காக கைது செய்திருக்கிறார். பொதுவாக தாவூத் இப்ரஹிமின் கும்பலை ஒழித்துக் கட்ட பாடுபட்டிருக்கிறார்.

மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் சும்மா இருக்குமா? நீதிமன்றங்கள் சில சமயம் அவரை கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால் மும்பையை அமைதியாக வைத்திருப்பதில் இவருக்கு பெரிய பங்கிருக்கிறது என்று உணர்ந்த மேலிடம் இவரை பொதுவாக ஆதரித்திருக்கிறது, அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இத்தனைக்கும் ஒரு முறையாவது ஒரு அப்பாவியை தவறுதலாக அடையாளம் கண்டு போட்டுத் தள்ளி இருக்கிறார் என்று தெரிகிறது.

மேலிடம் ஒரு காலத்தில் இவருக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்று இவரை ஒரு என்கௌண்டர் கேஸில் சேர்த்துவிட்டது. 3 வருஷம் சிறையில் இருந்திருக்கிறார். கடைசியில் ஜோடித்த கேஸ் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒருவர் அப்பழுக்கற்ற உத்தமராக இருக்க முடியுமா? நிச்சயமாக அடி உதை மூலம்தான் பல முறை துப்பு துலங்கி இருக்கும். அதில் நிரபராதிகள் மாட்டிக் கொள்ள மாட்டார்களா என்ன? ஜெய்தி அவருக்கு 100 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது என்று வேறு கோடி காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தை மூலமாக வைத்து திரைப்படமும் வந்திருக்கிறது.

அங்கங்கே சுவாரசியத்துக்காக கொஞ்சம் சரக்கை சேர்த்துக் கொண்டிருக்கிறார். காற்றடித்து ஷர்மாவின் முடியைக் கலைத்தது என்றெல்லாம் படிக்கும்போது கொஞ்சம் சிரிப்பு வருகிறது. புத்தகம் பொதுவாக ஷர்மாவை நல்லவராகவும் வல்லவராகவும் காட்ட முயற்சி செய்கிறதுதான். ஆனாலும் அதில் உண்மை தெரிகிறது. விறுவிறுப்பாக செல்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

சி.சு. செல்லப்பா சிறுகதைகள்: சரசாவின் பொம்மை

வாடிவாசல் அளவுக்கு செல்லப்பாவின் பிற படைப்புகள் பேசப்படுவதில்லை. நானும் அதிகம் படித்ததில்லை, கிடைப்பதும் இல்லை. வாடிவாசல் அளவுக்கு பிற படைப்புகள் இருக்காது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

சரசாவின் பொம்மை என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு (1942) கிடைத்தது. எண்ணம் இன்னும் உறுதிப்பட்டது. நேரடியான சிறுகதைகள். வாழ்வின் ஒரு தருணத்தை காட்ட மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார், சில பல சமயம் வெற்றியும் பெறுகிறார். ஆனால் எந்தச் சிறுகதையும் தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் இடம் பெறாது.

செல்லப்பாவின் வெற்றி கதை நிகழ்ச்சிகள் நாம் சர்வசாதாரணமாக பார்க்கும் நிகழ்ச்சிகளாக இருப்பதுதான். நிகழ்ச்சியின் சூழ்நிலையை கதை முழுவதும் விஸ்தாரமாக விவரிப்பார். கடைசியில் ஒரு முத்தாய்ப்பு. அனேகமாக புன்னகை வருகிறது. கதைகளின் எளிமை மற்றும் நம்பகத்தன்மை, சரளமான நடை இந்த உணர்வை அழுத்தமாக ஏற்படுத்துகின்றன. மறைந்துபோன அந்தக் காலம் – 11-12 வயதில் திருமணம், 15-16 வயதில் கணவன் வீட்டுக்குச் செல்லும் சிறுமிகள் – கதைகளில் தெரிவது இவற்றின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

சரசாவின் பொம்மை இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஆறு வயது சிறுமியுடன் என்னை கல்யாணம் செய்து கொள் என்று விளையாட்டுப் பேச்சு பேசும் இளைஞன்; சிறுமி வளர்கிறாள், அப்படி விளையாடுவது நின்றுவிடுகிறது. அந்த விளையாட்டுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் தனக்கு சிறுமி விளையாட்டு பொம்மை அல்ல, சிறுமிக்குத்தான் தான் விளையாட்டு பொம்மை என்று உணர்வது நல்ல தரிசனம். ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் இடம் பெறுகிறது.

மூடி இருந்தது சிறுகதை கவித்துவமானது. சிறையிலிருந்து விடுதலை அடையும் நாயகன். கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கின்றன. வெளியே வந்து பார்க்கிறான். தொடுவானத்துக்கு அப்பாலும் அவனுக்கு ஒரு கதவு தெரிகிறது.

வாழ்க்கை சிறுகதை ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி சிறுகதையை நினைவுபடுத்துகிறது. சாவும் பிணமும் வெட்டியானுக்குத் தொழில்தானே! விரிவாக இங்கே.

ஆறுதல் இன்னொரு நல்ல சிறுகதை. குழந்தையை தற்செயலாக தள்ளிவிடும் அப்பா; குழந்தை கோபித்துக்கொண்டு அப்பாவிடம் வர மறுக்கிறது. குழந்தை தூங்கும்போது அவளுக்கு முத்தம் தரும் அப்பன், தூங்கும் குழந்தை முரண்டு பிடிக்காது என்று எண்ணம் ஓடுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் ஒரு நல்ல சிறுகதை. நகரத்தில் இளசுகள் குடித்தனம். மனைவி பகட்டாக அலங்காரம் செய்து கொள்கிறாள். ஊரிலிருந்து மைத்துனன் வந்ததும் கிராமப் பெண் போலவே மாறிவிடுகிறாள், எங்கே தன்னைப் பற்றி கிராமத்தில் போய் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற கூச்சம். மைத்துனன் ஊருக்குப் போகிறான். அண்ணனுக்கு அனுப்பவே மனசில்லை. ரயில் ஏற்றிவிட்டு திரும்பி வந்தால் மனைவி அலங்காரபூஷணியாக நிற்கிறாள். சுடுசொல். இதை சிறப்பாக எழுதி இருக்கிறார்.

முறைமைப்பெண் இன்னொரு நல்ல சிறுகதை. அண்ணனுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம் முற்றிப் போய் கேஸ் நடக்கிறது. அண்ணன் சிறைக்குப் போகும் நிலை. தீர்ப்பு சொல்லும்போது தங்கை வேண்டாம் என்று சொல்ல வாயெடுக்கிறாள், ஆனால் கோர்ட்டில் பேசாதே என்று அடக்கிவிடுகிறார்கள். இதே கதையை விவரித்து ஒரு நாடகமாகவும் எழுதி இருக்கிறார். என்னைக் கவர்ந்தது சிறுகதைதான்.

ஞாபகம் கொஞ்சம் subtle ஆன சிறுகதை. இறந்துபோன தங்கை, மறுமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை, தங்கையின் மகளை ஒரு திருமணத்தில் சந்திக்கும் வாய்ப்பு. அண்ணனின் மனநிலையை சிறப்பாக காட்டுகிறார்.

பாத்தியதை மிக எளிமையான, ஆனால் உண்மையான கதை. நேற்று வரை வீட்டில் தன்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த தங்கையை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அண்ணன்.

குருவிக்குஞ்சு, நொண்டிக்குழந்தை இரண்டும் கதை என்ற அளவில் சுமார்தான். ஆனால் குழந்தைகள் உலகத்தை நன்றாகவே காட்டுகின்றன.

பந்தயம் எளிமையான சிறுகதை. ஊர் முரடன் பெரும் கல்லைத் தூக்கி நாடோடிப் பெண்ணை மணக்கிறான். முரடனை முதலில் அறையும் அந்தப் பெண் அவனது வீர சாகசத்தால் ஈர்க்கப்படுவது நன்றாக வந்திருக்கும்.

முதல் கடிதமும் அப்படித்தான். மனைவிக்கு கடிதம் எழுதும் கணவன். என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் எதையோ எழுதி அனுப்பும் 12 வயது மனைவி. அது அவனுக்கு பெரும் புதையலாக இருக்கிறது.

செல்லப்பா நிச்சயம் படிக்கக் கூடிய எழுத்தாளர். அவர் புதுமைப்பித்தனோ, ஜெயமோகனோ அல்லர். அவரது குரல் மெலிதாகவே ஒலிக்கிறது. பெரும் போராட்டங்களோ, உணர்ச்சிக் கொந்தளிப்புகளோ, மாபெரும் மானிட தரிசனங்களோ அவரது சிறுகதைகளில் தென்படவில்லை. சுப்ரபாரதிமணியன் போல வாழ்வின் சில தருணங்களைத்தான் காட்ட முயற்சிக்கிறார். அவற்றில் அசோகமித்திரன் போல பெரும் மானுட தரிசனங்கள் தெரிவதில்லை. (அசோகமித்திரனின் கசப்பும் இல்லை.) அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

தெலுகு கவி பிங்கலி சூரண்ணா

பிங்கலி சூரண்ணா பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞராம். கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு சில பத்தாண்டுகள் பிற்பட்டவர்.

ப்ரபாவதி ப்ரத்யும்னமு என்ற கவிதை நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பின் பேர் Demon’s Daughter. மொழிபெயர்த்தவர்கள் வெல்செரு நாராயணராவ் மற்றும் டேவிட் ஷுல்மன். முன்னவர் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியர். பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்துடன் இணந்தும் அண்ணமாச்சார்யா பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறாராம். சாஹித்ய அகடமி Fellow. ஷுல்மன் இஸ்ரேலியர். தமிழ், தெலுகு இரண்டிலும் அறிஞர். இருவருக்கும் ஒரு ஜே! கவிதையை மொழிபெயர்ப்பது உலக மகா கஷ்டம். இருவரும் அதை சாதித்திருக்கிறார்கள்.

பிரத்யும்னன் கிருஷ்ணன்-ருக்மணியின் மகன். வஜ்ரநாபன் என்ற அசுரன் பிரம்மாவிடம் கிடைத்த வரத்தால் இந்திரலோகத்துக்கு உரிமை கோருகிறான். அவன் கோட்டைக்குள் காற்று கூட அவன் அனுமதி இல்லாமல் நுழையமுடியாது என்ற வரம் பெற்றிருக்கிறான். அவன் மகள் பிரபாவதி பார்வதியில் அருளால் பிறந்தவள். பார்வதியே அவளுக்கு பிரத்யும்னனின் ஓவியத்தைத் தருகிறாள். இந்திரன் வஜ்ரநாபனைக் கொல்ல கண்ணனின் உதவியை நாடுகிறான். கண்ணன் சுசிமுகி என்ற அன்னத்தை பிரத்யுமனனுக்கு பிரபாவதிக்கும் இடையே தூது போகச் சொல்கிறான். சுசிமுகி பத்ரன் என்ற கூத்துக் கலைஞனை வஜ்ரநாபனிடம் புகழ்ந்து பேசுகிறது. வஜ்ரநாபன் பத்ரனை அழைக்க பத்ரன் வேஷத்தில் போவது பிரத்யும்னன். தன் வீட்டுக்கும் அரண்மனைக்கும் நடுவே சுரங்கம் தோண்டி அதன் வழியாக பிரபாவதியை தினமும் சந்திக்கிறான். பிரபாவதிக்கு குழந்தை பிறக்க, வஜ்ரநாபனுக்கு தெரிய வர, போர். வஜ்ரநாபன் இறக்கிறான்.

இந்த அன்னம்விடுதூது என்றெல்லாம் தமிழில் படிக்கும்போது (நளவெண்பா…), மகா செயற்கையாக இருக்கும். இதில் சுசிமுகி வலுவான பாத்திரம். கேலியான தொனி (ironical tone) மிகச் சிறப்பாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பிரபாவதியை பிரத்யும்னனிடம் வர்ணிப்பது

Lotus blossoms, crescent moon, banyan fruits,
tortoise shell, a quiver of arrows, banana plants,
sandbanks, whirlpools, a lion’s waist, golden pots,
fresh lotus stalks, leaf buds, the conch of the Love God,
jeweled mirrors, red coral, a sesame flower,
darting fish, a bow of horn, a piece of the moon,
the curves of the letter Sri, black bees

– it’s a shame that we can’t do better

அதாவது வழக்கமான ஒப்பிடல்களை – தாமரைப்பூ பாதங்கள், மணல்மேடுகள் போன்ற பின்னழகு, தங்கக் குடங்கள், சங்குக் கழுத்து, எள்ளுப்பூ மூக்கு இத்யாதி – ஏறக்குறைய மனப்பாடமாக ஒப்பித்துவிட்டு இதை விட நன்றாக சொல்ல முடியவில்லையே என்பது பிரமாதம். இந்த உவமைகள் அன்றே தேய்வழக்காகிவிட்டிருக்க வேண்டும், அவற்றை பயன்படுத்திவிட்டு அதற்கு மேல் அனாயாசமாக சென்றுவிடுகிறார்.

அதே போல பிரத்யும்னன் பிரபாவதியை முதல் முறை சந்திக்கும்போது பிரபாவதி நாணிக் கோணிக் கொள்வது வழக்கமான பாணியில்தான் விவரிக்கப்படுகிறது. ஆனால் நீ இப்படி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் அவன் ஓடிவிடுவான் என்று தோழி சொல்லும்போது அந்த அச்சம் மடம் நாணம் எல்லாவற்றுக்கும் ஒரு farcial தொனியை, ஏறக்குறைய ஒரு தெருக்கூத்து தொனியை, மராத்தி தமாஷாக்களின் தொனியை கொண்டு வந்துவிடுகிறார். அன்று இலக்கியத்தின் எழுதப்படாத விதிகளை பின்பற்றுகிற மாதிரியே எழுதி அவற்றை அதே நேரத்தில் மீறவும் செய்கிறார்.

பிற்கால தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது – ஜீவகசிந்தாமணி போன்ற நூல்கள் – இதை விட தட்டையான பாத்திரப் படைப்பு இருக்க முடியுமா என்று தோன்றும். இந்த காவியத்தில் சில பாத்திரங்கள் தட்டையானவைதான். ஆனால் பல இடங்களில் இயற்கையாக இருக்கிறது. உதாரணமாக கண்ணனிடம் உதவி கேட்கும் இந்திரன்; கண்ணன், இந்திரன் இருவருமே சிறிய பாத்திரங்கள்தான். ஆனால் இந்திரன் வஜ்ரநாபன் தன்னைப் படுத்தும் பாட்டை விவரிப்பது மிக இயற்கையாக இருக்கிறது.

தமிழில் கம்பனையோ, இளங்கோவையோ படிக்கும்போது சும்மா அலங்காரமான விவரிப்பு எல்லாம் கவிதையா, இதெல்லாம் பக்கத்து மாகாணக்காரர்கள் கூட ரசிப்பார்களா என்று சில சமயம் தோன்றும். அதெல்லாம் ரசிக்கும்படிதான் இருக்கும் என்று இந்தக் காவியத்தைப் படித்தபோது புரிந்தது. கவிதையை உள்வாங்கி மொழிபெயர்ப்பவர்கள் வேண்டும், அவ்வளவுதான். கம்பனுக்கு அப்படி யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மிக அழகான விவரிப்புகள். ஒரு எடுத்துக்காட்டு: பிரத்யும்னனுக்காக காத்திருக்கும் பிரபாவதி.

She kept staring at the sun,
waiting for it to set,
and her eyes grew red
with glowing desire,
so red that they colored
the sun itself.

The sun jumped into the ocean
like a Yogi taking his ritual bath
at day’s end, and the sky was
the ochre robe he hung up to dry
and the stars, the drops of water
that splashed as he dove.

Darkness spread through space.
The women of the sky
were celebrating Love’s festival
with showers of black musk.

There was white in the east
and the first stars appeared.
Indra’s white elephant
was sprinkling a fine spray
from its trunk.

The moon rose, with its dark spot
shining in the middle,
as if the dark woman who is Night
were reflected in a polished mirror
held by her servants in the east
as she makes up her face.

சிருங்கார ரசமும் சிறப்பாக வந்திருக்கிறது. கலவியின் அடங்காத ஆசையை, இன்னும் இன்னும் என்று பொங்கும் வேட்கையை மிக அருமையாக விவரிக்கிறார்.

He wants to stare at her breasts, but the wish to
embrace her takes over.
He wants to embrace her, but the idea of caressing
her buttocks takes over.
He wants to caress her buttocks, but he also wants
to straighten the hair on her forehead.
More than he wants to straighten her hair, he just has
to kiss her lips.
More than everything, he wants to make love to her.
Even more than making love, he really wants to kiss her.
That’s the thing about making love. One move
precludes another.

புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: நான் அன்னம் என்கிறேன், ஆனால் goose என்றுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால் சரஸ்வதி கனெக்‌ஷனும் விவரிக்கப்படுகிறது. சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவைதானே! Swan என்று ஏன் எழுதவில்லை என்று தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியக் காவியங்கள்

தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்!

இரண்டு நாட்களுக்கு முன் என் அத்திம்பேர் (பிராமண வழக்கில் அத்தை கணவர்) டி.ஆர். கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.

நான் எனது பதின்ம வயதுகளில் என் அத்தை வீட்டில் தங்கிப் படித்தவன். என் அத்தையோடு எப்போதும் ஒரு ஸ்பெஷல் பந்தம் உண்டு. என் அத்தையின் குடும்பத்தை என் இரண்டாவது குடும்பம் என்றே சொல்லலாம். அப்போதெல்லாம் அவரைப் பார்த்தால் பம்மிப் பதுங்குவேன்(வோம்). வளர வளர பயம் எல்லாம் போய்விட்டது, உரிமையோடு நிறைய எதிர்த்துப் பேசி இருக்கிறேன். அவருக்கும் நான் சொன்னால் மட்டும் தப்பாகவே தெரியாது. அவரது கனத்த குரலை மறக்கவே முடியாது. எத்தனையோ தூரத்தில் வசித்தாலும் அத்தை குடும்பம்தான் உறவினர் குடும்பம், சென்னை போகும்போதெல்லாம் தவறாமல் சென்று பார்க்கும் உறவினர்கள். இன்று அத்தையின் அருகில் இருக்க முடியவில்லை என்பது பெரிய வருத்தமாக இருக்கிறது.

அவருக்கும் கோவிட். தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டாராம். Post-covid complications அதிகரித்து இறந்திருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் இன்னும் இரண்டு வருஷம் இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்! இதனால் பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை, பயன்பட வாய்ப்பிருக்கிறது. போட்டுத் தொலையுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

வளைகுடா பகுதியில் வெண்முரசு திரைப்படம்

விசுவிடமிருந்து வந்த செய்தி: வாருங்களேன், எல்லாரையும் பல நாள் கழித்து பார்த்த மாதிரியும் இருக்கும்…

We are organizing the screening of a 90 minute documentary to celebrate Venmurasu on Saturday, Jun 19, 2021 at 3:00 PM in Fremont. If you are interested, please register: https://tinyurl.com/venmurasu-BayArea

Eventbrite
Venmurasu Tribute – Bay Area Screening

Where
43917 Pacific Commons Boulevard, Fremont, CA 94538
When
Sat, Jun 19, 2021 at 3:00 PM
Ticket: $20
Payment: Venmo / Paypal @ visumrs@gmail.com or we can collect cash in the event.

We will be following covid guidelines issued by Alameda county and request everyone to follow the safety protocols.
Teaser: https://youtu.be/Wc7G3j-4YV4

About Venmurasu:

Tamil writer Jeyamohan has finished writing his novel series titled “Venmurasu” (The White Drum) on July 16, 2020. The scope of the work is breathtaking. 26 separate standard fiction length novels, over 25000 pages in print, written over roughly 6.5 years. The author serialised the novels, a chapter a day, since 2014. Venmurasu is based on the Indian epic, the Vyasa-Mahabharatham.

Broadly, what Venmurasu does to the Mahabharatham is what Shakespeare did with the story of Donwald to create Macbeth, or what Wagner did with the Norse myths to create the Ring cycle. It refashions the original with artistic purpose to create a greater whole, a parallel, modern epic.

Venmurasu is a modern literary text, a novel series or roman fleuve like Romain Rolland’s Jean Cristophe or Emilie Zola’s Les Rougon-Macquart. However Venmurasu differs in that each novel in the series has its own aesthetic, narrative form and vision. There are Tolstoyan multigenerational epics, romantic comedies, poetic novels in versified prose, philosophical novels, fantasies, travel and war novels The entire series traverses a whole gamut of characters, major, minor, mythical and invented, running into several hundreds. They abound with all the delight of novelistic detail – landscapes, histories, mythologies and genealogies, recipes and rituals, technical descriptions of iron-age ships, war implements and Chinese telescopes, forays into various philosophical, religious and artistic schools.

Familiar tales are told and retold and subverted in a variety of voices, juxtaposed against each other to create new readings. Folk and subaltern tales, orthodox narratives, modern and ancient myths, women’s stories, children’s stories and animal stories in a single tapestry. They are layered with the main narrative, resulting in astonishing interpretations and insights into the original epic, that’s still living fabric in India. Then, this insight swings the reader’s gaze back into contemporary society, where much of the same tensions still exist.

Venmurasu Tribute Documentary: https://www.jeyamohan.in/147966/

Readers of Venmurasu have created a 90 minutes documentary as a tribute to Venmurasu, to celebrate the astonishing achievement of writer Jeyamohan. Actor Kamal Hassan, Maestro Ilayaraja, Director Vasantha Balan, Tamil Writers – A.Muthulingam, Nanjil Nadan, Su.Venugopal, Paavannan and readers of Venmurasu have shared their views on Venmurasu. The documentary also includes an operatic poem composed by Musician Rajan Somasundaram of North Carolina using verses from “Neelam” novel of Venmurasu sung by Kamal Hassan, Saindavi, Sriram Parthasarathy in collaboration with North Carolina Symphony.

அன்புள்ள நண்பர்களுக்கு,

ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.

வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி ஃப்ரீமாண்ட் நகரில் திரையிடப்பட உள்ளது. எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், கமல் ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களும், வாசகர்களும் ஒன்றுகூடி, இது தமிழ் இலக்கியத்தில் ஏன் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் என்றும், உலக இலக்கியத்தில் வெண்முரசின் இடம் என்ன என்றும், வெண்முரசில் இருந்து அவர்கள் பெற்றதென்ன என்றும் பேசியிருக்கிறார்கள்.

கமல் ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் நீலம் நாவலில் இருந்து எடுத்த சில அற்புதமான வரிகளை ராஜன் சோமசுந்தரம் இசையில் அபாரமாக பாடியிருக்கிறார்கள். சித்தார் ரிஷப் ஷர்மா, சாரங்கி மாயங்க் ரத்தோர், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

மேலும், வெண்முரசு மகாபாரதத்தின் விரிவை உணர்த்தும் படி, ஜெர்மன் பிராஸ் இசைக்குழுவும், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களும் சேர்ந்து வாசித்திருக்கும் ஒரு பிரம்மாண்ட இசைத்தொகுப்பும் (Epic Theme) உண்டு.

திரையிடலில் பங்குபெறுபவர்கள் அரசாங்க, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் திரைஅரங்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுறுத்தபடுகிறார்கள். திரைஅரங்க விதிமுறைகளின் படி திரையரங்கில் 55 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

வெண்முரசை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://en.m.wikipedia.org/wiki/Venmurasu
வெண்முரசை ஆன்லைனில் படிக்க: https://venmurasu.in/

Thanks,
https://visu.me/

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

Historical Curiosity: காங்கிரஸ் தலைவர்கள்

சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் தலைவர் என்ற பதவிக்கு பெரிய பொருள் இல்லை. காமராஜ் போன்ற விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவாக நேரு குடும்பம்; அல்லது ஜால்ராக்கள்தான் காங்கிரஸ் தலைவர்கள்.

ஆனால் விடுதலைக்கு முன் காங்கிரஸ் வருஷாவருஷம் கூடும். யாராவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 1940-46 காலகட்டத்தில் காங்கிரஸே அனேகமாக சிறையில் இருந்தது. அந்தக் காலம் தவிர இது வருஷாவருஷம் நடந்து கொண்டிருந்தது. விடுதலைக்குப் பின் கூட நடந்து கொண்டிருந்தது. இந்திரா காலத்தில்தான் இந்தப் பழக்கம் ஒழிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

விடுதலைக்கு முன் ஆகிருதி உள்ள பல தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தார்கள். காந்தி வரவுக்குப் பின் கூட சி.ஆர். தாஸ், சுபாஷ் போஸ் போன்றவர்களை காந்தி பக்தர்கள், காந்தியின் “பினாமிகள்” என்று வகைப்படுத்த முடியாது. அவர்கள் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எத்தனை தமிழர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்? இரண்டே பேர். சேலம் விஜயராகவாச்சாரியார் 1920-இல். எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் 1926-இல். சுதந்திரத்துக்குப் பின் காமராஜ். காங்கிரஸின் முக்கிய தலைவராகக் கருதப்பட்டாலும் ராஜாஜி காங்கிரஸ் தலைவராக ஆனதே இல்லை.

எத்தனை தெலுங்கர்கள்? ஒரே ஒருவர். 1891-இல் அனந்தாசார்லு. சுதந்திரத்துக்குப் பின் நீலம் சஞ்சீவ ரெட்டி, நரசிம்மராவ்.

எத்தனை மலையாளிகள்? ஒரே ஒருவர். சி. சங்கரன் நாயர் 1897-இல். சங்கரன் நாயர் வாழ்ந்தது சென்னையில்தான்.

எத்தனை கன்னடிகர்கள்? எவருமில்லை. சுதந்திரத்துக்குப் பின் நிஜலிங்கப்பா.

வங்காளத்திலிருந்துதான் அதிகம் பேர் – 14 பேர் – தலைவர்கள் ஆகி இருக்கிறார்கள். உமேஷ்சந்திர பானர்ஜி (1885, முதல் தலைவர்; 1892), சுரேந்திரநாத் பானர்ஜி (1895, 1902), சித்தரஞ்சன் தாஸ் (1922), அபுல் கலாம் ஆசாத் (1923, 1940-46), சரோஜினி நாயுடு (1925), சுபாஷ் போஸ் (1938-39) போன்றவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.

எட்டு முஸ்லிம்கள் தலைவர்கள் ஆகி இருக்கிறார்கள். முதல் முஸ்லிம் தலைவர் பத்ருதீன் தயாப்ஜி (1887) – இவர் போரா உட்பிரிவை சேர்ந்தவர். ஹகீம் அஜ்மல் கான் (1921) காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டின் தலைவராகவும் இருந்தவர். கிலாஃபத் இயக்கத்தின் முக்கியத் தலைவரான மௌலானா முஹம்மது அலி ஜௌஹர் 1923-இல் தலைவராக இருந்திருக்கிறார். ஜின்னா ஒரு காலத்தில் காங்கிரஸில் முழு மூச்சாக செயல்பட்டாலும் எப்போதும் தலைவர் ஆனதில்லை.

ஆறு கிறிஸ்துவர்கள் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்; இவர்கள் அத்தனை பேரும் வெளிநாட்டவர்கள். அன்னி பெசண்ட் (1917) தெரிந்த பெயர். காங்கிரஸின் முதன்மை நிறுவனராக கருதப்படும் ஆலன் ஆக்டேவியம் ஹ்யூம் எப்போதும் தலைவராகவில்லை.

தாதாபாய் நௌரோஜி (1886, 1893, 1906), ஃபெரோஸ்ஷா மேத்தா (1890) உட்பட்ட மூன்று பார்சிக்கள் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சீக்கிய, பௌத்த, ஜைன மதங்களிலிருந்து எவரும் தலைவராகவில்லை.

ஒரு தலித் கூட காங்கிரஸ் தலைவரானதாகத் தெரியவில்லை. சுதந்திரத்துக்குப் பின் – ஜகஜீவன்ராம். அம்பேத்கர் காங்கிரஸில் இருந்ததாகத் தெரியவில்லை.

முதல் பெண் தலைவர் அன்னி பெசண்ட் (1917). சரோஜினி நாயுடு (1925), நெல்லி சென்குப்தா (1933) இருவரும் மற்ற பெண் தலைவர்கள். விடுதலைக்குப் பின் இந்திரா காந்தி, சோனியா காந்தி.

அப்பா-மகன் ஜோடி நேருக்கள்தான். மோதிலால்-ஜவஹர்லால். விடுதலைக்குப் பின் நேரு குடும்பம் – நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராஹுல்.

காந்தி ஒரே ஒரு முறைதான் தலைவர் ஆகி இருக்கிறார் – 1924-இல்.

எனக்குத் தெரிந்தவரை முக்கியமான தலைவர்கள் – தாதாபாய் நௌரோஜி (1886, 1893, 1906), பெரோஸ்ஷா மேத்தா (1890), சுரேந்திரநாத் பானர்ஜி (1895, 1902), கோகலே (1905), அன்னி பெசண்ட் (1917), மோதிலால் (1919, 1928), லஜ்பத் ராய் (1920), சித்தரஞ்சன் தாஸ் (1923), அபுல் கலாம் ஆசாத் (1923, 1940-46), காந்தி (1924), ஜவஹர் (1929-30, 36-37), படேல் (1931), ராஜேந்திர பிரசாத் (1934-35, 1939), சுபாஷ் (1938-39). சுதந்திரத்துக்குப் பின் காமராஜ்.

திலக், ராஜாஜி, கான் அப்துல் கஃபார் கான் போன்றவர்கள் தலைவர்கள் ஆனதே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

நாஞ்சில் நாடனின் மிதவை

நாஞ்சில் நாடனின் நாவல்களில் (படித்த வரை) என்னை மிகவும் கவர்ந்த நாவல் இதுதான். தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை, சதுரங்க குதிரை எல்லாவற்றையும் விட ஒரு மாற்று மேலாகவே மதிப்பிடுவேன்.

ஒரு மாலை தற்செயலாக புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க உட்கார்ந்தேன். கீழே வைக்கவே இல்லை.நாஞ்சில் எதிரிலே இருந்திருந்தால் அவர் காலில் விழுந்திருப்பேன். படித்து முடித்தபின் மனம் கலங்கி இருந்தது.

ஏன் மனம் கலங்கியது என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன். சண்முகத்தின் நிலையிலிருந்து நான் சில இன்ச் தூரத்தில் தப்பியதால் மட்டும்தானா? என் தனிப்பட்ட அனுபவங்களுக்கு, உணர்வுகளுக்கு அருகில் இருப்பதால் மட்டும்தானா? கொஞ்சம் நிலை மாறி இருந்தால் இந்த மாதிரி வாழ்க்கையில் வீழ்ந்திருப்பேன், தப்பித்தேன் என்ற எண்ணத்தினாலா? இல்லை, சதுரங்க குதிரை நாராயணன் நிலைக்கு இன்னும் அருகிலே இருந்திருக்கிறேன். ஆனால் சதுரங்க குதிரையில் கூறியது கூறல் இருக்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. என் வாழ்க்கைக்கு இன்னும் அருகே உள்ள புத்தகத்தில் நொட்டை சொல்பவனை இந்தப் புத்தகம் இப்படி தாக்குகிறது என்றால் அது என் அனுபவங்களுக்கு அருகில் இருக்கிறது என்பதனால் மட்டுமாக இருக்க முடியாது; சண்முகத்தின் இடத்தில் என்னை வைத்து பார்க்க முடிகிறது என்பதால் மட்டும் இருக்க முடியாது.

அதிலும் இந்தக் கதையை எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் பொருத்திப் பார்க்கலாம். மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து விவசாயக் கூலி வேலை பார்ப்பவர்கள்; சட்டபூர்வமாக H1-விசா பெற்றும் ஏறக்குறைய அடிமை வேலை பார்க்கும் பல IT பணியாளர்கள்; 1908-இல் கதிராமங்கலத்திலிருந்து சென்னைக்கு குடியேறி சட்டக் கல்லூரியில் குமாஸ்தா வேலை பார்த்து, மனைவிக்கும் தனக்கும் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் இறந்த என் தாத்தா; நகரங்களுக்கு சாரிசாரியாக குடியேறி எப்படியோ பிழைக்கும் கோடிக்கணக்கானவர்கள்; இரவில் உலா வரும் கூர்க்கா; கட்டிட வேலை செய்யும் பிஹாரி; டாஸ்மாக்கில் சலம்புபவன்; சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை பேரையும் ஒரே ஒரு மனிதன் சோற்றுக்கும் கழிப்பதற்கும் அல்லாடுவதை வைத்துக் காட்டிவிடுகிறார்.

சண்முகத்தின் தேவைகள் அதிகமில்லை. ஊரில் இருக்கும் குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டும். அப்படி பணம் அனுப்ப சம்பாதிக்க வேண்டும். சம்பளத்தில் சோற்றுக்கும், படுக்கைக்கும் கொஞ்சம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் சம்பாதிக்க முடியாது. தேவைகளுக்கும் சம்பாத்தியத்துக்கும் இருக்கும் தூரம், பற்றாக்குறைதான் கதை. கதை முழுவதும் தின்பதிலும் கழிப்பதிலும் படுப்பதிலும் உள்ள சிரமங்கள்தான். இதனால் ஏற்படும் மன அழுத்தம், வெறுமை பற்றி அவர் ஒரு வார்த்தை எழுதவில்லை. ஆனால் கதை முழுவதும் வியாபித்திருப்பது அவைதான்.

நாஞ்சிலுக்கு இது கை வந்த கலை. ஹிந்தியில் பை(ன்) ஹாத் கா கேல் என்பார்கள். அவருக்கு இதற்கு இடது கை சுண்டுவிரலே போதும். சதுரங்க குதிரை, தன்ராம் சிங், கடன் வாங்கி கிராமத்துக்கு வந்து பந்தா காட்டி பிறகு கடனை அடைக்க உழைக்க வேண்டி இருக்கும் ஒருவன் (கதை பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது) என்று நிறைய இருக்கிறது. அந்தக் கலை இந்த நாவலில்தான் தன் உச்சத்தை அடைந்திருக்கிறது. கதை முழுவதும் புறவயமான தளத்திலேதான் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் சண்முகத்தின் உடலை, புற உலகத்தைக் காட்டுகிறார். அவர் எழுதாத கோடிக்கணக்கான வார்த்தைகள் சண்முகத்தின் உள்ளத்தை, அக உலகத்தைக் காட்டுகின்றன. அதில்தான் அவர் என் மனதையும் அசைத்துவிட்டார்.

கதை சுருக்கமாக; எழுபதுகளின் கிராமத்து, முதல் தலைமுறை பட்டதாரி. வேலை கிடைக்கவில்லை. பெரியப்பாவிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. துணிந்து பம்பாய்க்கு போகிறான். வேலை கிடைக்கிறது, ஆனால் முன்னால் சொன்ன மாதிரி பற்றாக்குறை. உண்பதிலும் கழிப்பதிலும் உள்ள சிரமங்கள்தான் கதை.

வாழ்க்கை மிகவும் எளிமையானது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. நமக்கு என்ன வேண்டுமோ, எது நம்மை திருப்திப்படுத்துகிறதோ, எது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதை மட்டும் செய்தால் போதும். ஆனால் அது ஏன் சுலபமாக இருப்பதில்லை? நம் மீது நமக்கு இருக்கும் பிம்பமும் உண்மை நிலையும் ஏன் இத்தனை மாறுபடுகின்றன? காந்தி போல வாழ்வது மிகச் சுலபமாக இருக்க வேண்டும்; ஏன் நேருவாலும், படேலாலும், ராஜாஜியாலும் கூட அவ்வளவு சுலபமான வாழ்க்கை வாழ முடியவில்லை? Moon and Six Pence நாவலின் நாயகன் தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்கிறான். குடும்பம், மனைவி, சமூக விழுமியங்கள் எதுவும் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. அப்படி வாழ்வது ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது? சண்முகத்தால் ஏன் தன் கிராமத்துக்கு திரும்ப முடியவில்லை? அல்லது குடும்பத்தை மறந்து ஏன் சௌகரியமாக வாழ முடியவில்லை? இந்த வாழ்க்கை எங்குதான் முடியும்? விடிவுண்டா?

நாஞ்சிலின் உச்சம் இதுதான். (படித்த வரை) கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: நாஞ்சிலே தன் நாவல்களை தரவரிசைப்படுத்தியபோது மிதவைக்கு மூன்றாம் இடம்தான் கொடுத்திருந்தார். சதுரங்க குதிரைக்கு இரண்டாம் இடம்; எட்டுத்திக்கும் மதயானைக்கு முதல் இடம்.

பின்குறிப்பு 2: மிதவை புத்தக அட்டையில் தாடியோடு நாஞ்சில்!

பின்குறிப்பு 3: ஜெயமோகன் மிதவையை சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (முழு வெற்றி அடையாத, ஆனால் சிறந்த நாவல்கள்) சேர்த்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்