English Translation of My Only Poem

நான் எழுதிய ஒரே கவிதை மீண்டும் ஒரு முறை தற்செயலாக கண்ணில் பட்டது. அதைப் படிக்கும்போது ஆங்கிலத்தில் சிந்தித்து எழுதப்பட்டதோ என்று எனக்கே தோன்றியது – தமிழில்தான் யோசித்து எழுதினேன், ஆனால் ஆங்கில வாடை அடிப்பது போலத்தான் இருக்கிறது. 🙂 சரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத்தான் பார்ப்போமே என்று தோன்றியது. உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள்!

My life’s clock keep ticking and ticking
Getting older by the moment
Haven’t used a comb in several years
Can’t read small letters any more
I have a paunch even in my dreams
Very few of my dreams have come to fruition

Doesn’t feel like I have achieved a lot
Miles to go
Many more miles in dream stage
Don’t really know what to do
Don’t know what I have done either
Same daily grind every day
Going around the prickly pear at 4’o clock in the morning
Delhi is still very far
The clock doesn’t stop ticking

But my friends;
No regrets!
No worries if my dreams don’t come true
The walk, not the destination defines my success
Not Delhi, but the road fulfills me.

Going to dream even more
Going to do more
Will do everything I can
Will do a few things that I cannot
Let the clock keep ticking
The clock is not my enemy

என் உயிரின் கடிகாரம் டிக்டிக்கிக் கொண்டிருக்கிறது
ஏறிக்கொண்டே போகிறது வயது
சீப்பைப் பயன்படுத்தி சில வருஷமாயிற்று
சின்ன எழுத்துகளைப் படிக்க முடிவதில்லை
கனவில் கூட தொப்பை இல்லாமல் நான் வருவதில்லை
கண்ட கனவுகளில் நிறைவேறியவை கொஞ்சமே

செய்தவை பெரிதாகத் தெரியவில்லை
செய்ய வேண்டியவை ஏராளம்
செய்ய விரும்புபவை இன்னும் ஏராளம்
செய்வது என்ன என்று தெரிவதில்லை
செய்தது என்ன என்றும் தெரியவில்லை
தினம் தினமும் அதே அதே
தில்லியோ வெகு தூரத்தில்
காலை நாலு மணிக்கு சப்பாத்திக் கள்ளியை சுற்றிச் சுற்றி வரும் வாழ்க்கை
கடிகாரம் டிக்டிக்குவது மட்டும் நிற்பதே இல்லை

ஆனாலும் தோழர்களே
குறை ஒன்றும் இல்லை
கனவு மெய்ப்படாவிட்டால் கவலை ஏதும் இல்லை
இலக்கல்ல நடப்பதே என் ஜீவனின் வெற்றி
தில்லி அல்ல செல்லும் சாலையே என் இலக்கு

இன்னும் கனவு காண்பேன்
இன்னும் செய்வேன்
முடிந்தது அத்தனையும் செய்வேன்
முடியாததும் சில செய்வேன்
கடிகாரம் டிக்டிக்கிக் கொள்ளட்டும்
கடிகாரம் என் எதிரி அல்ல.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

வாரப் பத்திரிகை ஓவியர்கள்

பசுபதி சாரின் தளத்தில் கண்ணில் பட்ட இன்னொரு பதிவு

நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். கல்கியும் துக்ளக்கும் குங்குமமும் இதயமும் சாவியும் ஏன் அம்மாமிகள் பத்திரிகை என்றே அறியப்பட்ட கலைமகளும் கிடைத்தால் படிப்பேன், வீட்டில் காசு கொடுத்து வாங்கமாட்டார்கள், அவ்வளவுதான். அந்தக் காலகட்டத்தில் ஜெயராஜ் கொடி கட்டிப் பறந்தார். மதனின் கார்ட்டூன்களும் ஜோக்குகளும்தான் நம்பர் ஒன். எனக்குப் பிடித்தவை மணியன் செல்வனின் ஓவியங்கள். அடுத்தபடியாக மாருதி.

கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் கோபுலு, சில்பி, மணியம், மாலி போன்றவர்களின் ஓவியங்களைப் பற்றித் தெரிந்தன. கோபுலுவும் சில்பியும் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள். Without further ado, கோபுலுவின் சில ஓவியங்களை இங்கே மற்றும் இங்கே போய்ப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கலை

இயக்குனர் ஷங்கர் பாலகுமாரனின் “கடலோரக் குருவிகள்” நாவலுக்கு எழுதிய முன்னுரை

பாலகுமாரன் மறைந்தபோது இதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன், இப்போதுதான் முடிந்தது.

பாலகுமாரனை ஆசானாக ஏற்ற ஒரு பெரிய கூட்டமே உண்டு. அவரது தாக்கம் பெரிதாக இருந்த காலம் இருந்தது. இயக்குனர் ஷங்கர் அவரது எழுத்தில் மிகவும் impress ஆகி எழுதிய முன்னுரை இந்தத் தாக்கத்தை நன்றாகவே காட்டுகிறது. ஓவர் டு ஷங்கர்!

‘இந்தியன்’ ஷூட்டிங் நெருங்கிடுச்சு. போட்ட திட்டப்படி ஷூட்டிங் நடத்தத் தயாராய் இருந்தாலும் வெளியே ஏகப்பட்ட பேச்சு. ஆரம்பிக்குமோ ஆரம்பிக்காதோ? ஆகஸ்ட்லதான் ஷூட்டிங்காமே? பிரச்சினைதான், கஷ்டம்தான் என்கிற பேச்சு.

இந்த சூழ்நிலையில கடைசி நேரத்தில கழுத்தறுத்தான் கூடவே உழைச்ச டெக்னீஷியன். உங்க படத்தில நடிக்கறதே பெரிய பாக்கியம்னு நெளிஞ்சு வழிஞ்சு நடிக்க ஒத்துக்கிட்ட ஆர்டிஸ்ட் கடைசி நிமிஷத்தில ஏகப்பட்ட பணம் கேட்டு தட்டிக் கழிச்சாங்க. வேற சில விஷயங்களும் திருப்தியா வரலே.

சோர்ந்து போயிருந்தபோது உங்க புத்தகத்தை – கடலோரக் குருவிகள் – எடுத்தேன். டக்குனு அந்த கர்ப்பிணி மேட்டர் கண்ணில பட்டு மறுபடி மறுபடி படிச்சேன்.

படிக்கப் படிக்க ஒரு பக்கம் மனசுக்குள்ளே அடுத்தடுத்து கேள்விங்களா வருது. உடனேயே அதுக்குண்டான பதில்களையும் அடுத்தடுத்து சொல்லி இருக்கீங்க பாலா.

31, 32, 33-ஆவது அத்தியாயத்தை எடுத்து ஒரு ஆள் தன் ட்ரஸ்ஸிங் டேபிள்ல ஒட்டிக்கலாம். டெய்லி சோர்வடையும்போது டானிக்கோ க்ளூக்கோசோ மருந்தோ தேவையில்லை. உங்க எழுத்தே போதும்.

வாழ்க்கைல பல ஸ்டேஜ்ல உங்க எழுத்து என் சிந்தனையை பாதிச்சிருக்கு. மாத்தியிருக்கு. என்னுடைய தற்போதைய வெற்றிக்கு நிச்சயம் உங்க எழுத்தும் ஒரு காரணம். உஙக எழுத்தைப் படிச்சா போதும், நல்ல ஆரோக்கியமான சிட்டிசன்ஸ் உருவாயிடுவாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. சினிமாவில பிஸியானாலும் உங்க எழுத்தைப் படிக்கற ஆர்வம் எனக்கு குறையல.

பத்து வருஷம் நான் மோல்டாயிட்டிருக்கிற ஸ்டேஜ்ல உங்க எழுத்துக்களைப் படிச்சதாலதான் நான் மன ஆரோக்கியமுள்ள ஆளானேன். இதுக்கு நீங்க காரணம்கறதை என்னால மறுக்க முடியாது. மறக்க முடியாது.

பத்து வருஷம் கழிச்சு இப்ப இருக்கிற மனநிலைக்கும் மெச்சூரிட்டிக்கும் உங்க எழுத்து ஆறுதலா பொருந்தி வரதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. You are always a good teacher, a friendly teacher.

பதினஞ்சு வயசுக்கு மேல ஆயுசு வரைக்கும் எந்த ஸ்டேஜ்ல உங்க எழுத்தைப் படிச்சாலும் நீங்க படிக்கறவங்களுக்கு உபயோகமாறீங்க. இது ரொம்பப் பெரிய விஷயம்.

உங்க எழுத்தைப் படிக்கற அத்தனை பேருக்கும் ஒரு true friend கிடைக்கறது நிச்சயம். பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு true friend-ஆ ஒருத்தர் வாழறது எவ்வளவு பெரிய விஷயம்! இது யாருக்குக் கிடைக்கும்!

உங்க எழுத்தை எல்லாரும் படிக்கணுமேன்னு ஆதங்கமாவும் கவலையாவும் இருக்கு.

வேலையில் perfection முக்கியம் என்று சொல்வது, நம்மைச் சுற்றி திருடர்கள், பொய்யர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று அறிவுறுத்துவது, நேர்மையற்ற வெற்றி கண்டு மயங்காதே என்று தேற்றுவது, நல்லவர்கள் தாங்குவது என்று நிறைய நிறைய இந்த நாவலில் சொல்லித் தருகிறீர்கள்.

எப்படி ஒருவன் தன்னை உருவாக்கிக்கணும்னு எவ்வளவு அன்பா, அழகா, வக்கணையா சொல்லிக் கொடுக்கறீங்க!

ரொம்ப நாளா இந்த கடலோரக் குருவிகள் படிச்சு எழுதித் தரணும்னு நினைச்சு தள்ளிப் போயிக்கிட்டே இருந்தது. இன்னிக்கு மனசு சூழ்நிலை சரியா இல்லாததால ஒரு ஆறுதல் தேடி உங்க புக் படிக்க, ஆட்டோமாட்டிக்கா முன்னுரை லெட்டர் எழுத உட்கார்ந்துட்டேன். அடிமனசுலேருந்து ஒரு பொங்கு பொங்கி எழுத ஆரம்பிச்சிட்டேன். இதுதான் உங்க வெற்றி பாலா. You moved me so many times, so many occasions, as also right now. உங்க எழுத்து ஒரு சொத்து பாலா. எல்லாரும் மனசுங்கற bank-ல fixed deposit-ஆ போட்டு வச்சிக்கணும்.

என்றென்றும் அன்புடன்
ஷங்கர்

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

சினிமா விமர்சனம் – முதல் தமிழ்ப் படத்துக்கு!

பசுபதி சாரின் தளத்தில் கிடைத்த இன்னொரு ஜெம்.

முதல் தமிழ்ப் படமான காளிதாஸ் 1931-இல் வெளிவந்தது. அந்த டாக்கிக்கு கல்கி எழுதிய விமர்சனத்தை பசுபதி பதிவு செய்திருக்கிறார். கல்கிக்கு நக்கல் அதிகம். கிழிகிழி என்று கிழித்திருக்கிறார். டாக்கி என்று ஆங்கிலத்தில் எழுத மனம் வராததால் அதை ‘பேச்சி’ என்று எழுத நினைத்தாராம். ஆனால் பேச்சு எங்கே? பாட்டு மாற்றி பாட்டுதானாம். அதனால் ‘தமிழ் பாட்டி’ என்கிறார். பாட்டு தமிழில் இருந்தாலும் பேசுவதெல்லாம் தெலுங்கில்தான் இருந்ததாம்.

‘கைராட்டினமே காந்தி பாணமே’ என்று ஒரு பாட்டு இருந்ததாம். காளிதாஸ் படத்தில் காந்திக்கு என்ன வேலை? சரி அப்படியே வந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியில் காந்தி பாணத்தைப் பற்றி பாட்டா? சென்சார் எதுவும் கிடையாது போலிருக்கிறது.

சரி வளர்ப்பானேன்? கட்டாயம் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூரார் ஒரு காலத்திய சூப்பர்ஸ்டாராம். இன்று அவர் எழுதியதைப் படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் திடுக்கிட வேண்டி இருக்கிறது, அத்தனை திடுக்கிடும் திருப்பங்கள்.

பல வார்த்தைகளில் சொல்லக் கூடியதை ஒரே ஒரு வார்த்தையில் சொல்லக் கூடாது என்பதே அவரது தாரக மந்திரம். ஒரு பக்கத்தில் எழுதக் கூடிய கதைக் கருவை வெகு அனாயாசமாக ஐநூறு அறுநூறு பக்கம் எழுதிவிடுகிறார். அந்த ஐநூறு பக்கங்களில் நானூறு பக்கங்களில் தாசிகளும் “மாமாப்பயல்களும்”, மாறுவேஷப் பரதேசிகளும் நிறைந்து கிடக்கிறார்கள். தமிழகத்தில் இப்படி ஊருக்கு ஊர், தெருக்குத் தெரு இத்தனை தாசிகள் இருந்திருப்பார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். தொடுப்பு வைத்துக் கொள்ள அலைபவர்கள் நிறைய. உதாரணமாக மேனகா நாவலில் இரண்டு விதவை – இல்லை இல்லை இரண்டு முண்டை நாத்தனார்கள் தங்களுக்குப் பிடிக்காத தம்பி மனைவியை ஏமாற்றி ஒரு முகமதியனுக்கு விற்கிறார்கள். இதெல்லாம் இத்தனை சுலபமாக இருந்ததா?

கதையின் போக்கு வெகு சுலபமாக புரிந்துவிடுவதால் பழைய காலத்து நாடகம் பார்ப்பது போல இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் பழைய எழுத்தில், நடையில் ஒரு special charm-ஐ உணர முடியும். இவர் எழுத்தில் எனக்கு அப்படித்தான் ஒரு charm தெரிகிறது. மிகச் சரளமாகச் செல்லும் கதையோட்டம். இதையெல்லாம் இன்று கூட பொழுதுபோக்காகப் படிக்கலாம் என்றால் நூறு வருஷம் முன்னால் படித்தவர்கள் எத்தனை ரசித்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது. ராஜேஷ் குமாரை விட, இந்திரா சௌந்தரராஜனை விட, சுபாவை விட சுவாரசியமாகத்தான் எழுதி இருக்கிறார்.

நடைக்கு ஒரு எடுத்துக்காட்டு: (மேனகா நாவலிலிருந்து)

டிப்டி கலெக்டருடைய காரியங்களெல்லாம் பெண்ணின் கவலையின்றி நடைபெற்று வந்தன. எஜமானரும், எஜமானியம்மாளும் சுற்றுப்பிரயாணம் போவதும், அவரது பைசைக்கிளுக்கு ஆசார உபசாரங்கள் நடப்பதும், கோர்ட் குமாஸ்தா கோபாலையர் எஜமானனிடம் நடுநடுங்கிப் பல்லிளித்து நிற்பதும், ஆர்டர்லி அண்ணாமலை பிராது மனு கூப்பிடுவதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பல நாடார் பொய்க் கேஸ் கொண்டு வருவதும், கண்டாகோட்டை கணக்கன் மகளைச் சுண்டாக்கோட்டை ஜெமீந்தார் கற்பழித்துக் கச்சேரிக்கு வருவதும், பஞ்சாங்கம் குப்புசாமி ஐயருடைய பசுமாட்டை நஞ்சாப்பட்டி காளிங்கராயன் பிடிப்பதும், வல்லம் கிராம முன்சீப்பு செல்லப்பையர் டிப்டி கலெக்டருக்கு வாழைத்தார்களை அனுப்புவதும், கங்கா ரெட்டி என்னும் சேவகன் பங்காவை இழுத்துக் கொண்டே தூங்கி விழுவதும், பட்டாமணியம் சட்டைநாதப் பிள்ளை சர்க்கார் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதும், தாலுகா குமாஸ்தா தங்கவேலுப் பிள்ளை தோட்டி தலையாரிகளை ஆட்டி வைப்பதும், அவர் மனைவி உண்ணாமுலையம்மாள் “எண்ணிக் கொள்” என்று ஒன்பது மாதத்திற்கொரு பிள்ளையை ஒழுங்காகப் பெறுவதும், தாசில்தார் தாந்தோனிராயர் பருப்பு சாம்பாரில் நீந்தி தினம் தெப்ப உற்சவம் செய்வதும், கோடி வீட்டுக் குப்பம்மாள் தெருளுவதும், ஊளை மூக்கு சுப்பனுக்கு உபநயனம் நடத்துவதும், உளறுவாய் ஜானகிக்கு ஊர்வலம் நடத்துவதும், எதிர்வீட்டு நாகம்மாள் எமலோகம் போகிறதும், பிரிந்தோர் கூடுவதும், கூடினோர் பிரிவதும் ஒழுங்காய் நடைபெற்று வந்தன.

(தெருளுவது என்றால் என்ன?)

நான் ரசித்த இன்னொரு வரி –

அவன் தனது தகப்பன் வீட்டில் சோற்றுக்கு மல்லுக் கட்டினான்; அக்காள் வீட்டிலோ இடுப்பிற்கு மல்லுக் கட்டினான்.

(மல் வேஷ்டி கட்டிக்கொண்டானாம்!)

நாவல்களின் விழுமியங்களோ! இந்தக் காலத்தை விடுங்கள், அன்றைக்கே அதிசயமாகத்தான் இருந்திருக்க வேண்டும். உதாரணமாக கையில் கணவன் போட்ட சூட்டைப் பற்றி மேனகா தான் கணவனுக்கு எழுதும் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறாள் –

என் கையிலுள்ள சூட்டுத் தழும்புகளைப் காணும்போதெல்லாம் என் மனம் வருந்தித் தவிக்கிறது. சூட்டைப் பெற்றதற்காக அன்று, என்னை உங்களுடைய உரிமைப் பொருளாக மதித்து முத்திரை போட்ட தேவரீர் இப்போது என்னை உரிமையற்றவளாக்கி விலக்கியதே என் மனசைக் கலக்குகிறது.

அம்மா தாயே, நீ எங்கியோ போயிட்டே!

மேனகா எந்த மேல்நாட்டு நாவலையும் தழுவாமல் அவரே சொந்தமாக எழுதிய கதையாம். அதில் ஏறக்குறைய இரண்டு மூன்று நாட்களில் தஞ்சாவூர் டெபுடி கலெக்டர் சாம்பசிவத்துக்கு ஏற்படும் சோதனைகள் ஆஹா, ஓஹோ, சிவாஜி கணேசன் அழுவாச்சிப் படங்களையே மிஞ்சிவிட்டது. அவர் மகள் மேனகா ஏமாற்றப்பட்டு ஒரு முகமதியனுக்கு விற்கப்படுகிறாள், பெண்ணைக் காணோம் என்று இவர் அலைகிறார். அதே நேரத்தில் பொய்ப்புகாரில் அவரது வேலை போய்விடுகிறது. திருடர்கள் அவர் வீடு புகுந்து எல்லாவற்றையும் கொள்ளையடிக்கிறார்கள். அந்தக் கொள்ளையில் அவர் மனைவிக்கு படுகாயம் ஏற்படுகிறது. எல்லா பணமும் போய்விட்டதால் டாக்டருக்கு ஃபீஸ் தர முடியவில்லை, அவர் ஆபரேஷன் செய்ய மாட்டேன், செய்யாவிட்டால் மனைவிக்கு உயிர் போய்விடும் என்கிறார். கிராமத்தில் இருக்கும் வீடு, நிலத்தை அடகு வைத்து அநியாய வட்டிக்கு வாங்கி வரும் பணம் திருடு போய்விடுகிறது. நமக்கெல்லாம் பைத்தியம் பிடிக்கிறதோ இல்லையோ, சாம்பசிவத்துக்கு மூளை கலங்கிவிடுகிறது!

திகம்பர சாமியார் என்ற பேரைக் கேட்டிருக்கலாம். திரைப்படம் யூட்யூபில் கிடைக்கிறது. எம்.என். நம்பியார்தான் ஹீரோ.

மாயாவினோதப் பரதேசி கும்பகோணம் வக்கீலின் தொடர்ச்சி. சட்டநாதம் பிள்ளை ஜெயிலிலிருந்து தப்பிவிடுகிறார். மாசிலாமணி பழி வாங்கத் துடிக்கிறான். கண்ணப்பாவின் தம்பி கந்தசாமிக்கும் கலெக்டர் பட்டாபிராமம் பிள்ளையின் மகள் மனோன்மணிக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனோன்மணியின் “படித்த” ஆங்கில மோகம் கந்தசாமிக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. மனோன்மணியைக் கடத்த, திகம்பர சாமியாரைக் கொல்ல, கந்தசாமி குடும்பத்தை அங்கஹீனம் செய்ய மாசிலாமணி போடும் திட்டங்கள் எப்படி தோல்வி அடைகின்றன என்பதுதான் கதை. கதை இன்று கொஞ்சம் போரடிக்கிறது. அதுவும் வாயைத் திறந்தால் போதும் எல்லாரும் பத்து பக்கத்துக்குக் குறையாமல் பேசுகிறார்கள், அதற்கு எதிராளி ஒரு பத்து பக்கத்துக்கு பதில் சொல்கிறான்(ள்). ஆயிரம் பக்கம் புத்தகத்தில் ஒரு இருநூறு முன்னூறு பக்கம் பெண்களுக்கு ஆங்கிலக் கல்வி கூடாது, அவர்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டும் என்று லெக்சர்கள். இவை எல்லாம் சேர்ந்து ஒரு சுவாரசியமான சாகசக் கதையை மழுங்க அடித்துவிடுகின்றன. ஆனால் சரளமான நடை, கிடுகிடுவென்று போகும் கதை. இன்றைய ராஜேஷ்குமார் கதைகளுக்கு இதையே நான் விரும்புகிறேன்.

திவான் லொடபடசிங் பஹதூர்: காவல் கோட்டத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி – ராஜா திருமலை நாயக்கர் அரண்மனையில் கன்னம் வைக்கும் கழுவனுக்கு காவல் பொறுப்பு தரப்படுகிறது. இங்கும் அப்படித்தான். திவானாக நடித்து வரி வசூல் செய்து ஏமாற்றுபவனுக்கு திவான் பதவி அளிக்கப்படுகிறது. தவிர்க்கலாம்.

வித்யாசாகரம் நாவலைப் பற்றி ஒரு பதிவு இங்கே.

வசந்தமல்லிகா என்ற நாவலில் காணாமல் போன உயில், கதாநாயகி வெகு சுலபமாக நாடகக் கம்பெனியில் சேர்ந்து புகழ் பெறுவது என்ற வழக்கமான முத்திரைகள் இருக்கின்றன. படிக்கலாம்.

சௌந்தரகோகிலம் நாவலில் இரண்டு சரடுகளை – மனைவி மேல் சந்தேகப்பட்டு பரதேசியாகத் திரியும் முன்னாள் திவான், பணக்காரப் பெண்ணின் ஏழைக் காதலன் மீது விழும் திருட்டுப்பழி – அவர் விவரிக்கும் விதமும் சரி, இணைக்கும் விதமும் சரி யூகிக்க முடிந்தாலும் சுவாரசியமாகச் செல்கிறது.

மதனகல்யாணி நாவலில் காணாமல் போன ஜமீன் வாரிசுகள், ஆள் மாறாட்டங்கள். படிக்கலாம்.

இவற்றைத் தவிர பாய்ஸ் கம்பெனி நாடகம் மாதிரி ஒன்றை – சுந்தராங்கி – எழுதி இருக்கிறார்.

வடுவூராரின் படைப்புகள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. இவரது சில புத்தகங்கள் அல்லையன்ஸ் பதிப்பகத்தாரால் 2007 வாக்கில் மறுபதிப்பு செய்யப்பட்டன. அப்போது சேதுராமன் அவரைப் பற்றி எழுதிய கட்டுரையை இந்தப் பதிவுக்கு அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.

தமிழில் நாவல்கள் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்காதவர் இருந்திருக்க முடியாது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தனக்கென பெரியதொரு வாசகர்கள் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். ரெய்னால்ட்ஸ் போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் பல நாவல்கள் எழுதியவர்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று, அன்றைய அரசில் தாசில்தாராக விளங்கியவர். எழுத்து மோகத்தால் வேலையை விட்டவர், தம் நாவல்களைத் தாமே அச்சிட ஒரு அச்சகமும், “மனோரஞ்சனி” என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக்குவித்தவர்.

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், சற்றே கறுத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, சரிகை அங்க வஸ்திரம், பஞ்சகச்ச வேஷ்டி, தலையில் ஒரு குல்லா, காலில் ஹாஃப் ஷூ, கையில் தடி, நெற்றியை எப்போதும் அலங்கரித்த திருமண், வாய் நிறைய வெற்றிலை, புகையிலை. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர்.

துணைவியார் பெயர் நாமகிரி அம்மாள் – இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு பிள்ளைகளும். இவரது சம காலத்தவர்களான ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், பம்மல் சம்பந்த முதலியார், எஸ். எஸ். வாசன், வை.மு. கோதைநாயகி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். (1)

தமது இலக்கியச் சாதனையாளர்கள் என்ற படைப்பில், க.நா.சுப்பிரமணியம் இவரைப் பற்றி எழுதுவது:

** ரங்கராஜுவிற்கு அடுத்து வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். 1923 முதல் 1927 வரை தஞ்சை கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது, கலர் அட்டையில், டெமி சைஸில் அவரது நாவல்களை, அப்பாவுக்குத் தெரியாமல், ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்சில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. கலைப் ப்ரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரசமான விஷயங்களையும் கூட அதிக விரசம் தட்டாமல் எழுதியதில் வல்லவர். ரெயினால்ட்சின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதியவர் என்றாலும், விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்ற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். அதே போல கிரேக்கப் புராணக் கதையான Eros and Psyche என்ற கதையை வசந்த கோகிலம் என்ற நாவலாகப் படைத்திருக்கிறார்.

அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.. அந்த நம்பிக்கையில் ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்கப் புத்தகம் எழுதி, தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புத்தகம் விற்கவில்லை. அவர் தன் பழைய பாணியில் எழுதிய கடைசி முயற்சி காங்கிரஸ் கமலம் – அதன் பிறகு அவர் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை..

தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை – புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் சொல்ல வேண்டும் *** (2)

இவர் எழுதிய நாவல்களில் சினிமாவாக வெளி வந்தவை மேனகா, வித்யாபதி (1946) – திகம்பர சாமியார் (1950) முதலியவையாகும். வில்லன் நம்பியாரின் திரையுலகப் பிரவேசம், வித்யாபதியில் தான். பின்னர் அவர் திகம்பர சாமியாரிலும் நடித்துள்ளார் (3)

தகவல் ஆதாரம்
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது. ச.விமலானந்தம்
2. இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சுப்பிரமணியம் — நன்றி வடுவூராரின் ‘வசந்த மல்லிகா’ என்ற ‘ஜெனரல் பப்ளிஷர்ஸ் / அல்லயன்ஸ் புத்தகத்தின் பதிப்புரை/முன்னுரை பக்கங்கள்
3. சினிமா சரித்திராசிரியர் ராண்டார்கை ஹிந்து பத்திரிகையில் சில வருஷங்களுக்கு முன் எழுதிய கட்டுரைகளிலிருந்து
————————

வடுவூர் துரைசாமி ஐயங்கார் – படைப்புகள்

மங்கையர் பகட்டு (1936 – 2)
கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)
மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் (1942)
டாக்டர் சோணாசலம் (1945)
நங்கை மடவன்னம் (1946 – 3)
பாவாடைச் சாமியார் (1946)
முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம் (1947 )
பச்சைக்காளி (1948)
மருங்காபுரி மாயக் கொலை (1948)
திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் (1950)
இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி (1951)
சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி (1951)
சௌந்திரகோகிலம் மூன்று பாகங்கள் (1951 – 4)
நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி (1951)
பூஞ்சோலையம்மாள் (1951)
பூர்ணசந்திரோதயம் நான்கு பாகங்கள் (1951 – 4)
மாயாவினோதப் பரதேசி இரண்டு பாகங்கள் (1951 – 4)
மேனகா இரண்டு பாகங்கள் (1951 – 7)
வித்தியாசாகரம் (1951 – 6)
சொக்கன் செட்டி (1952 – 2)
துரைராஜா (1952 – 3)
கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள் (1953 – 9)
சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு (1953)
பிச்சு முத்துக் கோனான் (1953 – 2)
தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம் (1954)
வசந்தகோகிலம் (1954 – 7)
சிவராமக்ருஷ்ணன் (1955-3)
மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே! (1955)
சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள் (1956 – 2)
நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம் (1956)
மதன கல்யாணி மூன்று பாகங்கள் (1956 – 6)
திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்
கனகாம்புஜம்
காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்
திகம்பரசாமியார் பால்யலீலை
தில்லை நாயகி
திவான் லொடபடசிங் பகதூர்
துரைக் கண்ணம்மாள்
பன்னியூர் படாடோப சர்மா
பாலாமணி
மன்மதபுரியின் மூடு மந்திரம்
மாய சுந்தரி
மிஸிஸ் லைலா மோகினி
லக்ஷ்மிகாந்தம்

முதற்பதிப்பு வெளியான வருஷமும் மொத்தப் பதிப்புகளும் அடைப்புக் குறிக்குள் உள்ளன. தொடர்ந்து வரும் நாவல்கள் அனைத்தும் எப்போது முதலில் வெளியாயின என்று தெரியவில்லை.

(ஆதாரம் – தமிழ் நாவல் வளர்ச்சி (1900-1940) புதிய ஒளியில் இருண்ட காலம் — முனைவர் சுப. சேதுப்பிள்ளை தமிழ் இணைப் பேராசிரியர் – அரசு கலைக் கல்லூரி – சேலம் — நவம்பர் 2003 பதிப்பாளர் – தி பார்க்கர் – இராயப் பேட்டை சென்னை)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
“திகம்பர சாமியார்” திரைப்படம் பற்றி ராண்டார்கை
“வித்யாசாகரம்” நாவல் பற்றிய பதிவு

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

பல வருஷங்களுக்கு முன்னால் எழுதியது, இன்று ஜெயலலிதாவும் இல்லை, வாலியும் இல்லை, சோ ராமசாமியும் இல்லை, கலைஞரும் போய்விட்டார். இப்படி கொஞ்சம் ஜாலியாகத்தான் நினைவு கூர்வோமே!

துக்ளக் அவர்கள் ஸ்டைலை காப்பி அடிப்பதற்காக என்னை மன்னிக்கட்டும்!

ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்

நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர்கள் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.

கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.

முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் –
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு –
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!

இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.

கலைஞர் கேள்வி பதில்:
கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?

ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.

பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?

குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.

பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?

சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.

இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?

கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.

கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.

ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ. பன்னீர்செல்வம் பணிவோடு கருத்து தெரிவித்தார்.

விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன் குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.

சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.

துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.

கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? குஜராத் முதல்வர் நரேந்திர மோதிக்கு குடும்பம் இல்லை. அதனால்தான் அவரால் சிறப்பாக பணியாற்ற முடிகிறது. ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!

டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு

சிங்கண்டா சிம்பு,
சினிமாவில் அன்பு,
வச்சுக்காதே வம்பு,
போயிடும் உன் தெம்பு!

என்று எச்சரித்தார்.

ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.

கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில்

என் பேரு கலாநிதி,
சன் டிவி உங்க தலைவிதி,
மிச்ச சானலை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி

என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.

பின்குறிப்பு: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூடத் தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

சில பழைய ஒண்ணரை பக்க நாளேடுகள்:
வள்ளுவர் கோட்டம் நீச்சல் குளம் ஆகிறது!
கலைஞர்-ஜெயலலிதா கூட்டணி
தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது!
நாற்பது தொகுதிகளிலும் நானே போட்டி – ஜெயலலிதா அறிக்கை

கலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே

சில வருஷங்களுக்கு முன் எழுதியது. எழுதப்படும்போது கலைஞருக்கு 85 வயதுதான். அதற்கப்புறம் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாததால் திருத்த வேண்டிய வேலை மிச்சம். சில பதிவுகளிலிருந்து கட் பேஸ்ட் செய்ததுதான் கீழே…

வயது எண்பத்தைந்து – அவருக்கு இருக்கும் வேகம், உழைப்பு, உற்சாகம் எல்லாம் ஒரு இருபத்தைந்து வயது இளைஞனுக்கு கூட இருக்காது. இன்றைய தமிழ் நாட்டு அரசியலில் பீஷ்மர். பீஷ்மர் காலம் செல்ல செல்ல ஹஸ்தினாபுரத்தின் பலவீனமாக மாறினார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ராஜாஜிக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடிய புத்தி கூர்மை. எம்ஜிஆருக்கு அடுத்தபடி சொல்லக்கூடிய மனோதிடம். அண்ணாதுரைக்கு சமமான பேச்சு, எழுத்துத் திறன். கட்சியின் முடிசூடா மன்னர், ஆனால் ஜெயலலிதா மாதிரி சர்வாதிகாரி இல்லை. எல்லாரையும் மிஞ்சிய அசாத்திய உழைப்பு. ஒரு மாபெரும் தலைவனாவதற்கு வேண்டிய அத்தனை prerequisite-களும் உண்டு. இருந்தென்ன? குடும்பத்தையும் கட்சியையும் ஒன்றாக்கிய சுயநலம், பெருத்த ஈகோ, தற்பெருமை, ஊழல், லஞ்சம், பதவியை துஷ்ப்ரயோகம் செய்வது, பதவி வெறி எல்லாம் சேர்ந்து அவரை ஒரு சாதாரண தலைவனாக கீழே தள்ளி விட்டன. எப்படியோ இருக்க வேண்டியவர் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாரே என்று பல சமயங்களில் தோன்றும்.

மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அவர் என்ன ஜாதி என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒரு கீழ் ஜாதிக்காரராகத்தான் இருக்க வேண்டும். ‘கீழ்ஜாதி’ என்று கருதப்பட்ட ‘இசை வேளாளர்’ ஜாதியினர். வளர்ந்து வரும்போது பல ஜாதி அவமானங்களை சந்தித்திருக்க வேண்டும். அந்த வடு அவருக்கு இன்னும் இருக்கிறது. தான் ஒரு சூத்திரன் என்று அவ்வப்போது அழுவார். அதனால்தான் அவாள், சவால் என்றெல்லாம் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார். யாராவது அவரை குறை சொன்னால் அவர் முதலில் கவனிப்பது குறை சொன்னவர் என்ன ஜாதி என்றுதான். குறை சொன்னவர் பார்ப்பனராக இருந்தால் உடனே நான் சூத்திரன், பார்ப்பனத் திமிர் என்றெல்லாம் ஒரு பாட்டம் ஒப்பாரி வைப்பார். குறளோவியம் எழுதியவர்தான். வள்ளுவருக்கு கோட்டமும் சிலையும் எழுப்பியவர்தான். ஆனால் அந்த நேரத்தில் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்” என்ற குறளை சவுகரியமாக மறந்துவிடுவார்.

நக்கல் பேசுவதில் பெரும் விருப்பமுண்டு. ஆனால் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல பேசி மாட்டிக்கொள்வார். ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்டார். மேடைக்கு மேடை தான் வள்ளுவருக்கு கோட்டம் கட்டினேன், சிலை எழுப்பினேன் என்றெல்லாம் பேசுவார். இவர் எந்த கட்டிடக்கலை கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார் என்று கேட்க மாட்டார்களா என்ன?

Spin master. தன் தவறை ஒத்துக்கொள்ளவே மாட்டார். தவறை சுட்டிக்காட்டினால் முட்டாள்தனமாக (கு)தர்க்கம் பேசுவார். ஜெயலலிதா தவறு செய்தபோது நீ ஏதாவது சொன்னாயா என்று கேட்பார். ஜெயலலிதா திருடி என்றால் இவர் திருடுவது நியாயம் ஆகாது என்பது புரியாத மாதிரி நடிப்பார். சமீபத்தில் 1964இல் கூட இப்படித்தான் நடந்தது என்று ஏதாவது முன்னுதாரணம் (precedent) காட்டுவார். முன்னுதாரணம் இருந்தால் போதும் என்றால் எல்லா தவறுகளையும் செய்து கொண்டே போகலாம். பாப்பாப்பட்டிக்காரர்களும் கீரிப்பட்டிக்காரர்களும் ஆயிரம் முன்னுதாரணம் காட்ட முடியும்.

சில சமயங்களில் அவர் வேதாந்தி; quantum physics விஞ்ஞானி. கொலையே நடந்தாலும் அங்கே கொலை நடந்திருக்கிறது என்று யாராவது சொல்லும் வரை கொலை நடக்கவில்லை என்று நினைப்பவர். Does the world exist if there is nobody to observe it? அதனால் அவர் கொலை நடப்பதை தடுப்பதை விட கொலை நடந்தது என்று சொல்வதை தடுக்கத்தான் அதிக முயற்சிகள் எடுப்பார்.

மொத்தத்தில் சரித்திரத் தலைவராக இருக்க வேண்டியவர் – குடும்பத் தலைவராக குறுகிவிட்டார்.

அரசியல் பங்களிப்பு

திராவிட இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. காந்தி வரும் வரை காங்கிரஸ் மேட்டுக்குடிக்காரர்களின் கட்சி. அந்த மேட்டுக்குடி காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுப் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஈ.வெ.ரா. வரும் வரை திராவிட இயக்கத்தினரும் அப்படித்தான். காந்தி காங்கிரசுக்கு எப்படி கடவுளோ அப்படித்தான் ஈ.வெ.ரா.வும் திராவிட இயக்கத்துக்கு. நேரு தனிப்பட்ட முறையில் மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தாலும் கட்சியின் பல கோளாறுகளை கண்டுகொள்ளவில்லை. அவருடைய charisma அனைவரையும் கவர்ந்தது. அண்ணாதுரையும் அப்படித்தான். இந்திரா காந்தி காரியம் ஆனதும் பெரியவர்களை கழற்றி விடுவது (காமராஜ்), லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் எல்லாவற்றையும் காங்கிரஸில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஆக்கினார். கலைஞரும் அப்படித்தான். இந்திரா மொரார்ஜி தேசாயை மிதித்துக் கொண்டு மேலே வந்தார், இவர் நாவலர் என்று அழைக்கப்பட்ட நெடுஞ்செழியனை. இந்திரா அப்படி ஏறி வருவதற்கு செல்வாக்கு நிறைந்த காமராஜ் உதவியாக இருந்தார், இவருக்கு எம்ஜிஆர். இந்திராவுக்கு சஞ்சய் காந்தி, இவருக்கு அழகிரி.

அவரது கொள்கைகளை அவர் கைவிட்டு வெகு நாட்களாகிவிட்டன. அவரது கூர்மையான மூளை இப்போது பதவி, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முன் வைத்து செயல்படுகிறது. அவர் தலைவர் இல்லை, அரசியல்வாதி. இந்திராவை மறுபடி பார்ப்பது போல இருக்கிறது.

ஆனால் அவர் இந்திரா போல பணக்கார, அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்தவர். ஒரு காலத்தில் லட்சியவாதியாக இருந்திருக்க வேண்டும். சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் ஏழையாகத்தான் இருந்திருப்பார். தி.மு.க. பதவிக்கு வருவதற்கு முன்பே சில பல தகிடுதத்தம் செய்தவர் என்று கண்ணதாசன் தன் மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அண்ணாதுரை அவரது பணம் திரட்டும் திறமை, தேர்தலை சமாளிக்கும் திறமை ஆகியவற்றால் அவரை கட்சியின் இன்றியமையாத தலைவர் என்று கருதினாராம். காந்திக்கும் இதற்கெல்லாம் ஒரு படேல் தேவைப்பட்டார் என்று ஞாபகம் இருக்கட்டும்.

பதவிக்கு வருவதற்கு முன் அவர் அரசியல் பங்களிப்பை பற்றி எனக்கு ரொம்ப தெரியாது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணாதுரை இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அண்ணாதுரை, நெடுஞ்செழியனுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருந்தார் போல தெரிகிறது.

1965இன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி தட்டுப்பாடு, காமராஜ் மத்திய அரசியலில் மூழ்கியது, ராஜாஜி, ம.பொ.சி. போன்ற அப்பழுக்கற்ற உழைப்பாளர்களின் கூட்டணி, சுடப்பட்ட எம்ஜிஆர் மீது எழுந்த அனுதாப அலை, எம்ஜிஆரின் திரை உலக இமேஜ் போன்ற பல காரணங்கள் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தின. அண்ணாதுரை இறந்தவுடன் எல்லாரும் நெடுஞ்செழியன்தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் அவரை கவிழ்த்துவிட்டு முதலமைச்சரானார். நெடுஞ்செழியன் கட்சி பொது செயலாளர் பதவிக்கு போட்டி இட்ட போது அது வரை ஈ.வெ.ரா.வுக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நெடுஞ்செழியனை மீண்டும் கவிழ்த்தார். 71இல் பங்களாதேஷ் போரினால் இந்திராவுக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு, எம்ஜிஆர், அண்ணாதுரையின் மறைவு ஆகியவற்றின் மீது சவாரி செய்து காமராஜை தோற்கடித்தார்.

அது வரை அருமையாக கணக்கு போட்ட மூளை எம்ஜிஆர் விஷயத்தில் சொதப்பி விட்டது. அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் மு.க. முத்துவை வைத்து படம் எடுக்காமல் இருந்திருக்கலாம். எம்ஜிஆர் தன் பாணியிலே ஒரு இளைஞன் கிழவனாகிக்கொண்டிருக்கும் தனக்கு போட்டியாக உருவாவதை பார்த்தார். மந்திரி பதவியும் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று சவால் விட்டு கட்சியை விட்டு வெளியேறினார். கலைஞர் தனக்கு ஐந்து வருஷம் பதவி இருக்கிறது, அதற்குள் எம்ஜிஆரை அடக்கி விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். பெரிய தப்புக் கணக்கு. (சின்ன தப்புக் கணக்கு சோ ராமசாமியை அடக்கி விடலாம் என்று நினைத்தது)

மிசா சமயத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி போன்றவர்களே ஜெயிலுக்கு போக, அவர் ஜெயிலுக்கு போகாது ஆச்சரியம்தான். ஸ்டாலின் அடிபட்டார், அன்றைய எம்.பி. சிட்டிபாபு அடி வாங்கி செத்தே போனார். பலர் மன்னிப்பு கேட்டு தி.மு.கவை விட்டுப் போனார்கள். ஆனாலும் கட்சி இருந்தது. கலைஞரின் தமிழுக்கும் தலைமைக்கும் பின்னால் ஒரு கூட்டம் இருந்தது. என்ன, எம்ஜிஆருக்கு பின்னால் இருந்த கூட்டம் இதை விட பெரியதாக இருந்ததால் கலைஞர் 77இல் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் 77இல் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அதிர்ந்திருப்பீர்கள். மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது. மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார். தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான். லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை மறைத்து, பயந்துகொண்டே வாங்கினார்கள். அதை சாதரண விஷயமாக்கியது கலைஞர்தான். அவர் வழியில் பின்னால் எம்ஜிஆரும் போனார். கலைஞர் எழுபதுகளில் எட்டடி பாய்ந்தால் எம்ஜிஆர் பின்னாளில் பதினாறடி பாய்ந்தார்; ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.

அவர் 80இல் தோற்றது ஒரு சோகக் கதை. பேசாமல் இருந்திருக்கலாம். இந்திராவிடம் கெஞ்சி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அனுதாப அலை அடித்து எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார். காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார் (ஆயிரமோ என்னவோதான் ஓட்டு வித்தியாசம்) மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆரும் கலைஞரும் சேர்ந்து அரசியலை சும்மா oneupmanship ஆக ஆக்கினார்கள். கலைஞருக்கு எம்ஜிஆரை embarass செய்ய வேண்டும், அது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் போல இருந்தது. எம்ஜிஆருக்கு கலைஞரை வார வேண்டும் அது ஒன்றுதான் லட்சியம். கலைஞரின் சட்ட சபை ஆயதங்கள் ரஹ்மான் கான், துரைமுருகன், சுப்பு. அவர்கள் மூவரும் எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். எம்ஜிஆரும் அவர்களை ரசித்துக்கொண்டே காளிமுத்து (கருவாடு மீனாகாது போன்ற தத்துவங்களை சொன்னவர்) போன்றவர்களை வைத்து ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தார். (துரைமுருகனை படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். துரைமுருகனிடம் அவர் எம்ஜிஆரை தீவிரமாக தாக்கிய காலத்தில் இதை பற்றி கேட்டார்களாம். அவர் எம்ஜிஆர் தெய்வம், கலைஞர்தான் தலைவன் என்று சொன்னாராம்.) எம்ஜிஆரை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் அவ்வளவுதான் – கலைஞர் தெலுங்கர் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். இந்த கலாட்டாவில் உழவர் போராட்டம் (உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு சர்க்கார் கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்), இட ஒதுக்கீடு கலாட்டா, திருந்செந்தூர் கொலை, பால் கமிஷன் அறிக்கை, என்று பல விஷயங்கள் நடந்தன.

84இலோ கேலிக்கூத்து. எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்ஜிஆரின் உடல் நிலைக்காக அடித்த அனுதாப அலையில் கலைஞர் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார். அவரும் உடனே ஏன் சூடு சுரணை இல்லாத தமிழனே, நீ என்னை கடலிலே போட்டால் நான் உனக்கு தோணியாவேன், கரையில் போட்டால் ஏணியாவேன், வயலுக்கு போட்டால் சாணியாவேன் என்று தன் பாணியிலே அறிக்கை விட்டுக்கொண்டு ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தார்.

எம்ஜிஆர் மறைந்து, ஜானகி-ஜெ சண்டையில் அவர் 89இல் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது அநியாயம்.

ஆனால் 89இல் மாறன் மத்திய அமைச்சர் ஆனது தி.மு.கவுக்கு ஒரு inflection point. ஒரு லோக் சபா எம்.பி. கூட இல்லாவிட்டாலும் வி.பி. சிங் தி.மு.க.விலிருந்து ஒரு அமைச்சர் வேண்டும் என்று சொன்னார். அன்றிலிருந்து கலைஞருக்கு மத்திய அரசு பற்றி ஒரு கணக்கு மனதில் ஓட ஆரம்பித்தது. திராவிட நாடு எல்லாம் அப்போதுதான் உண்மையிலேயே போயே போச்! இந்திய அளவில் ஊழல் செய்யலாம் என்றால் திராவிட நாடாவது மயிராவது! அவர் அப்போதுதான் முழுமையான இந்தியர் ஆனார்.

91இல் ராஜீவ் அனுதாப அலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். எழுபதுகளில் கலைஞர் ஆட்சி எப்படி தமிழ் நாட்டின் valuesஐ மாற்றியதோ அப்படித்தான் இந்த ஆட்சியும். இப்படியும் பதவி துஷ்ப்ரயோகம் செய்ய முடியுமா என்று அசந்து போனோம்.

சசிகலா கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஜெயலலிதா யாரோ முன் பின் தெரியாதவர்கள் எனக்கு பல லட்சம் டாலர் அன்பளிப்பு தந்தார் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வளர்ப்பு மகன் திருமணம் மாதிரி ராமன்-சீதா கல்யாணம் கூட நடந்திருக்காது. ஜால்ராக்கள் கொழித்தனர். ஜெவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு அலை வீசியது. சோ ராமசாமியே ஜெவுக்கு கலைஞர் பெட்டர் என்று சொன்னார். மூப்பனாருடன் கூட்டணி, மூப்பனாருக்கு பெருந்தன்மையாக அதிக அளவு எம்.பி. சீட்கள், சன் டிவி, ரஜினிகாந்த், சோ ஆகியோரின் வெளிப்படையான ஆதரவு – 96இல் அமோகமாக ஜெயித்தார்.

அவர் முயன்றிருந்தால் தேவே கவுடா, குஜ்ரால் ஆகியோர் இடத்தில் மூப்பனார் அமர்ந்திருக்க முடியும். பொறாமை, ஈகோ. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் உள்குத்து வேலை நடத்தினார். Gentleman மூப்பனாரும் பேசவில்லை.

96இல் நல்லபடியாக ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலங்களிலேயே சிறந்தது அதுதான். அவரை எப்போது தீவிரமாக விமர்சிக்கும் சோ கூட அதை ஒத்துக்கொண்டார். சோவே எல்லா விஷயங்களிலும் நல்ல ஆட்சிதான், ஆனால் புலிகள் மீது ஒரு soft corner இருக்கிறது, அதனால் ஜெவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். ஆனால் கட்சி உளுத்துப்போய்விட்டது. சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி சரியாக அமையவில்லை. மக்களும் ஆட்சியில் காந்தியே இருந்தாலும் தோற்கடிப்பது என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

மீண்டும் ஜெ. நள்ளிரவில் கைது. (அதை எப்படிய்யா சரியாக விடியோ எடுத்தார்கள்?) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை என்ன சொல்வது? நாற்பது எம்.பி. தொகுதியும் அவருக்கே. அன்றிலிருந்து அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர். தங்கபாலு, கிருஷ்ணசாமி எல்லாம் சும்மா லுலுலாயி.

2006 – அருமையான தேர்தல் வியூகம். காங்கிரஸ், பா.ம.கவுடன் கூட்டணி. இலவச டிவி அறிவிப்பு. மைனாரிட்டி அரசுதான், ஆனால் மெஜாரிட்டி அரசுக்கு இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இலவசங்கள் சரியான விஷயம் இல்லைதான் – ஆனால் சொன்னதை செய்தார், சொன்னதைத்தான் செய்தார். இலவச டிவி கொடுத்தார், அரிசி சீப்பாக கிடைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் குடும்பத் தகராறை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அழகிரி பக்கம் சாய்ந்தார், தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டார், கனிமொழி அரசியலுக்கு வந்தார், பிறகு கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தும் விட்டது. இதற்கு ஏனையா அவர்களை வெளியே அனுப்பினீர்கள்? அழகிரியால் கெட்ட பேர்தான். (தா. கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதிலிருந்தே அப்படித்தான் – தா.கி. இறந்ததும் அதற்கும் சமீபத்தில் 19xxஇல் யாரோ கொல்லப்பட்டார் என்று காட்டியது மிக மோசமான விஷயம்)

இன்றைக்கு அவரை பார்த்தால் பதவிக்காக இளவரசர்கள் அடித்துக்கொள்ள, ஒன்றும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்த மொகலாய ராஜாக்கள், திருதராஷ்டிரன் போலத்தான் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெறுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.

கட்சி உளுத்துப்போய்விட்டது. தி.மு.கவில் இன்று யார் சேருவார்கள்? அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான்? அவன் அப்பா பிரமுகராக இல்லாவிட்டால் அவனுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். (நாகப்பட்டினம் ரூசோ கட்சிக்காக உழைத்தார் – அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, செத்தே போனார். அவர் மனைவி சுயேச்சையாக நின்று கணிசமான ஓட்டு வாங்கினார்)

கலைஞரின் தமிழுக்காக ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட பலர் வந்து சேர்ந்தார்கள். இன்று ஸ்டாலினுக்காக யாரும் வரப் போவதில்லை. அவருக்கு பிறகு கட்சி இன்னும் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அவுரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அவுரங்கசீப்பின் சாம்ராஜ்யம் அளவில் மிகப் பெரியது. ஆனால் உள்ளே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை, அவருக்கு பிறகு சாம்ராஜ்யமும் உடைந்து சுக்கல் சுக்கலாக போய்விட்டது. தி.மு.கவும் அப்படித்தான் ஆகப்போகிறது. பெருங்காய டப்பா மாதிரி கொஞ்ச நாள் வாசனையை வைத்து ஓட்டுவார்கள்.

பல தகுதிகள் இருந்தாலும், கட்சியை கட்டி காப்பாற்றி இருந்தாலும், அவர் அரசியலில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. தோல்வி என்றும் சொல்ல முடியவில்லை. ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. எவ்வளவோ செய்திருக்கலாம்.

திரைப்படங்களில் பங்களிப்பு

கதை எழுதி இருந்தாலும், படங்களை தயாரித்திருந்தாலும், பாட்டுகளை எழுதி இருந்தாலும், கலைஞர் வசனகர்த்தா என்ற முறையிலேயே ஸ்டார் ஆனார்.

அவரது காலம் ஐம்பதுகள்தான். மந்திரி குமாரி, பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா மாதிரி பல படங்களில் அவரது வசனம் பேசப்பட்டது. அறுபதுகளில் குறவஞ்சி, இருவர் உள்ளம், மறக்க முடியுமா மாதிரி படங்களில் அவர் பங்களிப்பு இருந்தாலும் அவை எல்லாம் அவரது பங்களிப்புக்காக குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இல்லை.

அவர் தன் வசனங்கள் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். மந்திரி குமாரியில் அவர் கள்ளபார்ட் நடராஜனுக்காக களவும் ஒரு கலை என்று எழுதிய வசனங்கள் அப்போது ஒரு சர்ச்சையை உருவாக்கியது. வசனங்கள் நன்றாக இருந்தன. பராசக்தியிலோ சொல்லவே வேண்டாம். இன்றைக்கும் குணசேகரன் கோர்ட்டில் பேசும் வசனங்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் பராசக்தி தடை செய்யப் பட வேண்டும் என்று பலரும் பேசினார்கள். திரும்பிப் பாரில் பெண் பித்தனான தம்பியிடம் உனக்கு ஒரு பெண் உடல்தான் வேண்டுமென்றால் என்னை எடுத்துக் கொள் என்று அக்கா பேசுவது ஒரு சர்ச்சையை உருவாகியது.

என்னை பொறுத்த வரையில் மனோகராதான் அவருடைய மாஸ்டர்பீஸ். அவர் மனோகராவுக்கு எழுதிய வசனங்கள் மாதிரி இனி மேல் யாரும் எழுதப் போவதில்லை. அதை சிவாஜி மாதிரி யாரும் பேசப் போவதும் இல்லை. அப்படிப் பேசினாலும் அதை யாரும் ரசிக்கப் போவதும் இல்லை. சின்ன வயதில் எம்ஜிஆரின் சாகசங்களில் மயங்கிக் கிடந்த நான் இந்த படத்தை பார்த்த பிறகுதான் சிவாஜியின் நடிப்புக்கு ரசிகன் ஆனேன். மனோகரன் தர்பாரில் பேசும் இடம் மிக அருமை. அதற்கு கலைஞரும் ஒரு பெரிய காரணம்தான்.

எழுபதுகளில் அவர் எம்ஜிஆரை எதிர்க்க சினிமாவை மீண்டும் உபயோகித்தார். ஜெய்ஷங்கர் நாயகனாக வண்டிக்காரன் மகன் முதலாக சில படங்களில் நடித்தார். அவை நன்றாக ஓடவும் செய்தன என்று நினைவு.

பத்து வருஷம் முன்னால் கூட அவ்வப்போது வசனம் எழுதிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அந்த படங்களை பார்க்க விரும்பாமல் எல்லாரும் இப்போது ஓடுகிறார்கள். அவர் காலம் கடந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

இலக்கியப் பங்களிப்பு

சிலிகன் ஷெல்ஃபில் புத்தகங்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி? ஆனால் ஏற்கனவே எழுதியாயிற்று. மீண்டும் எழுதும் அளவுக்கு அவ்வளவு வொர்த் கிடையாது. அதனால் சுருக்கமாக: கலைஞர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மொத்த மதிப்பு என்னைப் பொறுத்த வரை பூஜ்யம்தான். கறாராக மதிப்பிட்டால் பூஜ்யத்துக்கும் கீழேதான் மதிப்பெண் தரவேண்டும். அவர் பண்டைய தமிழ் இலக்கியத்தில் முங்கிக் குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்துப் பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

மாநில சுயாட்சியா, திராவிடஸ்தானா?

பசுபதி சாரின் தளத்தில் ஒரு பதிவு கண்ணில் பட்டது.

1946 டிசம்பரில் சென்னையில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்திருக்கிறது. நாமக்கல் கவிஞர், வ.ரா., தூரன் (அன்று பெரியசாமி மட்டும்தான் போலிருக்கிறது), ம.பொ.சி. (அன்று சிவஞான கிராமணி), அன்றைய அமைச்சர் டி.எஸ். அவினாசிலிங்கம், அண்ணாதுரை, ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரம், மு.வ. (அன்று மு. வரதராஜன்தான், மு. வரதராசனார் அல்லர்), தேவநேயப் பாவாணர், ஜீவானந்தம், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற பலர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். (கல்கி, தேவன் உள்ளிட்ட விகடன் எழுத்தாளர்கள், மணிக்கொடி எழுத்தாளர்கள் யாரையும் காணோம்.). என்.எஸ்.கே. நாடகம் போட்டிருக்கிறார்.

கண்ணில் பட்ட பேர்களில் பலரும் – அண்ணாதுரை, என்.எஸ்.கே. இரண்டு பேரைத் தவிர – காங்கிரஸ், தேசிய இயக்கம் சார்புடையவர்கள். இன்னும் சில மாதங்களில் இந்தியா விடுதலை அடைந்துவிடும் என்று எல்லாரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக தீவிர காங்கிரஸ்காரரான, விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற நாமக்கல் கவிஞர் தன் தலைமை உரையில் தமிழனுக்கு தனி நாடு, தனி அரசு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். அன்றைய அரசியலில் தீவிரமாக இருந்த, ராஜாஜியின் அணுக்கரான ம.பொ.சி. கொண்டு வந்த தீர்மானம் கீழே:

தமிழ் நாட்டின் எல்லை குமரி முதல் திருப்பதி வரை ஆகும். இந்த எல்லைக்குள் சுதந்திர இந்தியாவின் ஐக்கியத்துக்கு பாதகமில்லா வகையில், சுதந்திரமுள்ள தமிழர் குடியரசு அமைய வேண்டும். அந்தக் குடியரசின் அரசியலை வேறு எவருடைய தலையீடுமின்றி தாங்களே தயாரித்துக் கொள்ள தமிழ் இனத்தவருக்கு சுய நிர்ணய உரிமை உண்டு.

இந்தத் தீர்மானத்தின் பிற்பகுதியை ம.பொ.சி. கொண்டு வரவில்லையாம். ஆனால் மாநாட்டிற்கு வந்த அத்தனை பேரும் தீர்மானத்தை ஆதரித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் இது தமிழ் பாகிஸ்தானுக்கான தீர்மானமா என்று சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள், ம.பொ.சி.யே இல்லை என்று விளக்கி இருக்கிறார்.

இது குறைந்த அளவில் மாநில சுயாட்சி (federal structure) வேண்டும் என்ற கோரிக்கை. நாமக்கல் கவிஞரின் கோரிக்கையைப் பார்த்தால் தனி நாடு வேண்டுமென்ற எண்ணம்தான் இப்படி இலைமறைகாயாக சொல்லப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

அன்றைய திராவிட இயக்கம் வெறும் fringe movement அல்ல, அன்றைய அறிவுஜீவிகளிடம் – குறிப்பாக கல்வி அறிவில் உயர்ந்து விளங்கிய அபிராமணர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைத்தான் நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

பிற்சேர்க்கை: ம.பொ.சி.யின் புத்தகங்கள் இரண்டு – மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு மற்றும் சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல் – இணையத்தில் கிடைத்தன. ம.பொ.சி. 1946-இலிருந்தே சமஷ்டி அமைப்பு, மாநிலத்துக்கு அதிகமான அதிகாரங்கள் என்றெல்லாம் பேசி வந்திருக்கிறார். அவர் தொடங்கிய தமிழரசுக் கழகத்தின் முக்கியக் கோரிக்கையே மொழிவாரி மாநிலங்கள், திருப்பதியிலிருந்து குமரி வரை உள்ள தமிழ்நாடு, சமஷ்டி அமைப்பு என்பதுதான். காமராஜ் கூட அவரது சில அறிக்கைகளுக்கு ஆதரவு தந்திருக்கிறார். அண்ணாவும் ஈ.வெ.ரா.வும் ம.பொ.சி. நமது திராவிட நாடு கோரிக்கையைத்தான் ஆதரிக்கிறார் என்று எழுதி இருக்கிறார்கள் – ம.பொ.சி. அதை மீண்டும் மீண்டும் மறுத்தும் கூட. ஆனால் அவரது குரல் சென்னைக்கு வெளியே கேட்கவே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பதிவு: ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

“அம்மா வந்தாள்” – கட்டுடைக்கப்பட்ட பிம்பம்

நான் எழுபது-எண்பதுகளின் சிறுவன். அப்போதெல்லாம் எனக்கு தாய் என்றால் கல்லானாலும் கணவன், குழந்தைகளே உலகம் என்று வாழும் பெண் மட்டுமே. அந்த பிம்பத்தின் பிரதிநிதி ஏறக்குறைய பெரிய பொட்டுடன் குண்டாக அசட்டு சிரிப்போடு வலம் வரும் கே.ஆர். விஜயாதான். பெண் சுதந்திரம் என்றெல்லாம் படித்தாலும் அதெல்லாம் தியரிதான், அம்மாக்களுக்கு வேறு உலகம் இருக்க முடியும் என்று தோன்றியது கூட இல்லை.

பதினைந்து வயது வாக்கில்தான் அந்த பிம்பம் முதல் முறையாக விரிசல் கண்டது. ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது அம்மா தனது பள்ளி அனுபவம் ஒன்றை சொன்னாள். வத்ராயிருப்பில் பள்ளி சென்று திரும்பும்போது யாரோ ஒருவன் “அட பாருடா இந்த பொண்ணை! எவ்ளோ அழகா இருக்கு” என்று சொல்ல என் அம்மா பயந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து விட்டாளாம். அது வரையில் எனக்கு அம்மா என்றால் என் தேவைகளை பூர்த்தி செய்யும் மெஷின் + கண் கண்ட தெய்வமாக வணங்கப்பட வேண்டிய தெய்வப் பிறவி என்ற புரிதல்தான். ஏறக்குறைய வேலைக்காரியாக பணி ஆற்ற வேண்டிய மெஷின் – தெய்வம் இரண்டு கருத்தாங்களுக்கும் உள்ள முரண்பாடு கூட புரிந்ததில்லை. அந்த வயதில் நான் சைட் அடிக்க போவது போல் என் அம்மாவையும் யாரோ அவளுடைய சின்ன வயதில் சைட் அடித்திருக்கலாம் என்பது மண்டையில் ணங்கென்று விழுந்த அடி. பழைய தமிழ் படங்களில் வருவது போல் ஹை வால்யூமில் எரிமலைகள் கொதித்து, கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரையில் மோதிய தருணம். அந்த அனுபவத்தைத்தான் பல வருஷங்கள் கழித்து அம்மாவுக்கு புரியாது என்ற சிறுகதையாக எழுதினேன்.

அதற்கப்புறம் மெதுமெதுவாக அந்த பிம்பம் கரைந்துவிட்டது. என் அம்மா பல பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்தும் பதவி உயர்வை ஏற்றுக் கொண்டு அப்பாவையும் பிள்ளைகளையும் கூடுவாஞ்சேரியில் விட்டுவிட்டு ஒரு வருஷம் கடலூரில் வேலை பார்த்தது (அப்பாவின் முழு சம்மதத்தோடுதான், பிள்ளைகள்தான் எதிர்த்தோம்), பொன்னகரம் சிறுகதை, அம்மா வந்தாள் படித்தது, பரோமா திரைப்படம், அம்பையின் சிறுகதைகள் – குறிப்பாக இந்தக் கை இது வரை எத்தனை தோசை வார்த்திருக்கும் என்ற வரி – என்று பல அடிகள் விழுந்ததில் அந்த பிம்பம் முழுதாக உடைந்தே போனது.

thi_janakiramanஅம்மா வந்தாளை நான் முதல் முறை படித்தபோது பதின்ம் வயதைக் கடக்கவில்லை என்றுதான் நினைவு. என் அம்மாவின் பரிந்துரைதான் என்று நினைக்கிறேன். ஹை வால்யூமில் கடல் அலைகள் மோதவில்லை என்றாலும் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்தது. படித்தபோதும் சரி, பின்னாளில் திரும்பிப் படித்தபோதும் சரி, மோகமுள்ளை விடவும் இது எனக்கு ஒரு மாற்று அதிகம்தான். நான் படித்த தி.ஜா. நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

தி.ஜா. தனது நாவல்களில் அரைத்த மாவையே அரைக்கிறார் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இன்று இல்லாத, இசைப் பிரக்ஞை கூடிய தஞ்சாவூர் விவசாயக் கிராம சூழல், ஏதாவது ‘தகாத உறவு’, அனேகமாக பிராமணக் குடும்பங்கள் இல்லாமல் இவரால் எழுதவே முடியாதா என்று தோன்றியதுண்டு. அம்மா வந்தாளின் அலங்காரத்தம்மாளின் சாயல் மரப்பசுவின் அம்மிணியில் கூட உண்டு, ஏன் செம்பருத்தியின் பெரிய அண்ணியில் கூட உண்டு. இந்து செம்பருத்தியின் குஞ்சம்மாளேதான். இந்துவுக்கு அப்பு மேல் இருக்கும் காதல் – காதல் என்றால் போதவில்லை, obsession – பாபுவுக்கு யமுனா மேல் உள்ள அதே obsession-தான்.

இந்த நாவலுக்கு கதைச் சுருக்கம் எல்லாம் எழுதுவதில் பயனில்லை. படிக்காதவர்கள் படியுங்கள்!

amma_vandhal17-18 வயதில் படித்தபோது நுட்பமான சித்தரிப்பு என்று பல இடங்களில் தோன்றியது. தனியாக இருக்கும் இந்துவைத் தவிர்க்கத்தான் அப்பு காவிரிக் கரையில் பொழுதைப் போக்குகிறான், ஆழ்மனதில் அவனுக்கும் இந்துவிடம் ஈர்ப்பு உண்டு, இந்து தன்னை விரும்புவதும் அவனுக்கு தெரியும் என்றுதான் புரிந்து கொண்டேன். அது பெரிய திறப்பாக இருந்தது, திறமையான எழுத்தாளன் ஒரு வார்த்தை செலவழிக்காமல் எத்தனையோ விஷயங்களை சொல்ல முடியும் என்று புரிந்தது. கோபு பேசுவதெல்லாம் சிவசுவை ஏற்பது போலத்தான் இருந்தாலும், சிவசுவைப் பார்த்த கணத்தில் உள்ளே போய் ஒடுங்கிக் கொள்ளும் காவேரியை விடவும் சிவசுவை வெறுப்பவன் அவனே என்றுதான் என் வாசிப்பு இருந்தது. தண்டபாணி பேசும் வேதாந்தமும் வித்வத் செருக்கும் வெறும் வெளிப்பூச்சு, அலங்காரத்தம்மாளை dominate செய்ய விரும்பும், ஆனால் கையாலாகாத பக்தர் என்பதுதான் அவரது அடையாளம், அவர் அந்தஸ்துள்ளவர்களை அலட்சியப்படுத்துவதெல்லாம் அந்த கையாலாகத்தனத்தின் frustration மட்டுமே என்றுதான் புரிந்து கொண்டேன். குடும்பத்தின் அத்தனை பேரும் ‘Elephant in the Room’-ஐ கண்டுகொள்ளாமல் ஒன்றுமே நடக்காதது போலப் புழங்குவது அந்த வயதில் ஆச்சரியப்படுத்தியது. அலங்காரத்தம்மாள் அப்புவுக்கு வரும் சம்பந்தத்தை பெண்ணின் அம்மா சோரம் போனவள் என்று நிராகரிக்கும் இடம் என்னை புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மனித மனத்தின் முரண்களைப் பற்றி யோசிக்க வைத்தது. அந்த நிராகரிப்பை அலங்காரத்தம்மாளின் குற்ற உணர்வின் இன்னொரு வடிவம், தனக்கு விடுதலை தர வேண்டிய அப்புவின் மீது ஏதாவது களங்கம் படிந்தால் அப்புவால் விடுதலை கிடைக்காது என்ற சுயநலம் என்றும் புரிந்து கொள்ளலாம்தான். சிவசு ஆசிர்வாதமாகத் தரும் பணத்தை அலங்காரத்தம்மாள் நிர்த்தாட்சண்யமாக நிராகரிப்பது அப்படிப்பட்ட புரிதலை வலுப்படுத்துகிறதுதான். ஆனால் எனக்கு அது மனித மனத்தின் முரண்பாடாகவேதான் எனக்கு (இன்றும்) தோன்றுகிறது. சிவசு மூலமாகப் பிறந்தவர்கள்தான் அம்மா சந்தோஷமாகப் பெற்றுக் கொண்ட குழந்தைகள் என்று அக்கா சொல்வதும் அந்த சந்தோஷத்தைப் பற்றிய அலங்காரத்தம்மாளின் குற்ற உணர்வும் இன்னொரு திறப்பு. சிவசுவின் குற்ற உணர்வும் அலங்காரத்தம்மாளுக்கு குறைந்ததில்லையோ? எதற்காக அப்புவைக் கண்டதும் அவன் கூனிக் குறுக வேண்டும்? என்ன செய்திருக்க வேண்டும் அலங்காரத்தம்மாள்? எது சரி, எது தவறு? தன் சந்தோஷத்தை நிராகரித்திருக்க வேண்டுமா? மகிழ்ச்சி இத்தனை குற்ற உணர்வை ஏற்படுத்துமா? கர்ணனும் துரியோதனனும் துச்சாதனனும் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்களா? குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டிருந்ததுதான் அர்ஜுனனுக்கு நிகரான திறமை கொண்ட கர்ணனும் பீமனுக்கு நிகரான வலிமை கொண்ட துரியோதனனும் அவர்களிடம் தோற்றதற்கு காரணமா?

இன்று படிக்கும்போது அதிர்ச்சி இல்லை. ஆனால் பல இடங்களில் அந்த மாஸ்டர் டச் இன்னும் தெரிகிறது. என் அம்மாவை நினைத்துத்தான் அவ்வப்போது பெருமிதம் கொண்டேன். என் அம்மாவின் value system-இல் இதெல்லாம் பெரிய தவறுதான். ஆனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் பதின்ம வயதிலேயே எனக்கு இதை எல்லாம் பரிந்துரைத்தது சந்தோஷப்படுத்தியது. தி.ஜா.வே சொல்வது போல ‘கலை உலகம் ஒரு மாயலோகம், அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள கூடாது’ என்றுதான் என் அம்மாவும் புரிந்து கொண்டிருக்கிறாள்.

அம்மா வந்தாள் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. என்னைப் பொறுத்த வரையில் தி.ஜா.வின் மாஸ்டர்பீஸ் இந்த நாவலே.

அனுபந்தம்:

தி.ஜா.வே அம்மா வந்தாளைப் பற்றி சொல்கிறார். தி.ஜா. ஃபேஸ்புக் குழுவுக்கு நன்றி!

“அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏது சொல்ல இல்லை. நூல்தான் முக்கியம். எப்படி ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கத்தோ அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதை தூற்றி விட்டார்கள். நான் பிரஷ்டன் என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிரிந்துதான் பிறந்து வருகின்றது என்று கூற விரும்புகின்றேன்

‘அம்மா வந்தாள்’ நான் கண்ட கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி. மனதுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றை பார்த்து ஊறி வெகுகாலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெருகின்றன. நாம் உருவம் கொடுப்பதாக எனக்கு தோன்றவில்லை.

மையக் கருத்தை பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களை பற்றி நான் எப்போதும் கவலைப்படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன். அவனுக்குப் பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குதான் தெரியும். கலை உலகம் ஒரு மாயலோகம், அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள கூடாது”

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்