தேவன்: ஸ்ரீமான் சுதர்சனம்

என் கணிப்பில் தேவன் இலக்கியம் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் அல்லர். அவருக்கு விகடன் வாசகர்களுக்கு பிடித்த வகையில் எழுத வேண்டும் என்பதுதான் நோக்கம். வணிக எழுத்தைத் தாண்டி எழுத வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் அவர் திறமை உள்ள எழுத்தாளர். அதனால் சில சமயம் வாரப் பத்திரிகைகளின் வரம்புகளை அவரால் மீறி இலக்கியம் படைக்க முடிந்திருக்கிறது. துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன், சில சமயம் குழந்தைகளின் விவரிப்புகள், ஸ்ரீமான் சுதர்சனம் ஆகியவை என் கண்ணில் minor classics.

ஸ்ரீமான் சுதர்சனம் என்னைக் கவர முக்கியமான காரணம் அதில் விவரிக்கப்படும் பற்றாக்குறை பிரச்சினை நம்பகத்தன்மையோடு எழுதப்பட்டிருப்பதுதான். குடும்பம் நடத்த பணப் பற்றாக்குறை என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரிந்த, நானே உணர்ந்த பிரச்சினைதான். சுதர்சனம் மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற, தன்/மனைவியின் குடும்பத்தினருக்காக எதிர்பாராத செலவுகளை ஏற்றுக் கொள்ள படும் சிரமங்கள் எனக்கு நன்றாகவே புரிந்தது. எந்த மத்தியதர வர்க்கத்தினருக்கும் இது நன்றாகவே புரியும். அந்த உண்மையான சித்திரத்துக்காகவே இந்தப் புத்தகத்தை மேலாக மதிக்கிறேன்.

சுஜாதா கூட இதுதான் தனக்குப் பிடித்த தேவன் புத்தகம் என்று எங்கோ சொல்லி இருக்கிறார். அவரும் பணக் கஷ்டத்தை சந்தித்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

என்ன கதை? சுதர்சனம் 125 ரூபாய் சம்பளம் வாங்கும் குமாஸ்தா. அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து வேலை செய்கிறான். ஆனால் அவனுக்கு சரியான அங்கீகாரம் இல்லை, அவன் மேலதிகாரி கங்காதரம் பிள்ளை அவனை கொஞ்சம் அமுக்கி வைத்திருக்கிறார். பணப் பற்றாக்குறை. கொஞ்சம் வசதி உள்ள வீட்டுக்கு வாடகைக்கு போக ஆசை, ஆனால் கட்டுப்படி ஆகாது. கடைசியில் அலுவலகத்த்ல் திருடுகிறான். அவன் அதிர்ஷ்டம், அந்தத் திருட்டு நிறுவனம் தள்ளுபடி செய்யும் ஒரு கடனில் அது அமுங்கிவிடுகிறது. மனைவியின் பெற்றோர் மருத்துவம் செய்து கொள்ள ஊரிலிருந்து வருகிறார்கள். செலவு அதிகரிக்கிறது, மீண்டும் திருடுகிறான். மாமியார் மாமனாருக்கு செலவழிக்கிறான், நமக்கு செலவழித்தால் என்ன என்று இவன் உறவினர் ஊரிலிருந்து வருகிறார்கள். மீண்டும் திருட்டு. இதற்குள் முதலாளிக்கு அவன் வேலையின் தரம், உழைப்பு எல்லாம் தெரிய வருகிறது. ஒரு திருட்டிலிருந்து 80000 ரூபாயை வேறு காப்பாற்றுகிறான். அவனுக்கு முதலாளி 2000 ரூபாய் பரிசு தருகிறார். சுதர்சனத்துக்கு மனம் உறுத்துகிறது. தன் குற்றத்தை ஒத்துக் கொள்கிறான், பரிசை மறுக்கிறான். முதலாளி எனக்கு ஏற்கனவே தெரியும் என்கிறார். அவனை மன்னித்து உத்தியோக உயர்வும் தருகிறார்.

கதையின் பிரமாதமான உத்தி செலவுகளை பட்டியல் போடுவதுதான். என்ன செலவு, எத்தனை ரூபாய் தேவை என்று மீண்டும் மீண்டும் விவரிப்பதுதான். மனைவி கணவனோடு அன்னியோன்னியமாக இருந்தாலும் பணப் பிரச்சினைகளை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதும் உண்மையான சித்தரிப்பு. என் தலைமுறையில் கூட புருஷன் என்ன சம்பாதிக்கிறான் என்று தெரியாத மனைவிகள் உண்டு.

கடைசியில் deux ex machina ஆக முதலாளி மன்னிப்பது கூட செயற்கையாகத் தெரியவில்லை. அதிலும் சுதர்சனம் தான் புதிய நிறுவனத்தில் வேலைக்குப் போவதாக நினைத்திருக்க, அந்த நிறுவனத்தின் “முதலாளி” சுதர்சனத்தின் வேலைக்கு மனு போட்டிருப்பது நல்ல டச்!

அன்றைய வணிகப் பத்திரிகைகளின் கல்கி உட்பட்ட மற்ற எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் தேவனின் பாத்திரங்கள் ஓரளவு நிஜமானவை. இதிலும் சுதர்சனம், அவனது உறவினர்கள், மாமனாருக்கு கண் வைத்தியம் பார்க்கும் மருத்துவர், முதலாளி பரமேஸ்வர முதலியார், மேலதிகாரி கங்காதரம் பிள்ளை என்று பலரும் உண்மையான் பாத்திரங்கள். நாகநந்தி போன்ற அதீதங்கள் கிடையாது. லட்சியம் பேசிக் கொண்டு பூமிக்கு இரண்டு அங்குலம் மேலேயே நடப்பவர்கள் இல்லை. (ஆனால் தேவனின் நாவல்களில் அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் நிறையவே உண்டு…)

ஸ்ரீமான் சுதர்சனம் 1951-52 வாக்கில் எழுதப்பட்ட நாவல் (என்று நினைக்கிறேன்.) அப்போது மாதம் 125 ரூபாய் என்பது சென்னை நகரத்தில் கணவனும் மனைவியும் வாடகை கொடுத்து வாழ்வதற்கே பத்தாது என்றால் வியப்புதான். 1960களில் ஆசிரியை வேலைக்குப் போன என் அம்மாவுக்கு இளம் வயது கனவே 100 ரூபாய் சம்பளம்தான். எழுபதுகளின் இறுதியில் கூட என் அத்தை பெண்கள் 300-400 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். சுகவாழ்வுக்கு வாய்ப்பில்லை, ஆனால் இத்தனை பற்றாக்குறையா என்று தோன்றியது.

ஸ்ரீமான் சுதர்சனம் எனக்குப் பிடித்த தேவன் படைப்புகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பக்கம்: தேவன் பக்கம்

கல்கி vs தேவன் – அசோகமித்ரன் ஒப்பீடு

சில வருஷங்களுக்கு முன்னால் அசோகமித்திரன் கல்கியையும் தேவனையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரைக்கு சுட்டி கொடுத்திருந்தேன். மேலோட்டமான கட்டுரை என்று குறையும் பட்டிருந்தேன். அது அவர் காதில் பட்டதோ என்னவோ தெரியாது, நல்ல ஒப்பீடு ஒன்றை எழுதி இருக்கிறார். பசுபதி சாருக்கு நன்றி!

குறிப்பாக இந்தக் கருத்துக்களை நானும் (அனேகமாக) வழிமொழிகிறேன்.

கல்கி திடுக்கிடும் திருப்பங்களிலும் நாடகத்தனமான திருப்பங்களிலும் அவரது கதைகளை விரித்துச் சென்றார். அவருடைய பாத்திரங்கள் ஸ்டீரியோடைப்ஸ் என்ற பிரிவில் வரக் கூடியவை. அவற்றின் மேன்மை, சிறுமை, கயமை எல்லாமே ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. உயர்ந்த மதிப்பீடுகளையும் இலக்குகளையும் வைத்து எழுதினார் என்றாலும் கூட அவருடைய பாத்திரங்கள் பொம்மைத்தனம் கொண்டவை. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் வாசகர் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிவகாமி, நாகநந்தி போன்ற பாத்திரங்கள் வாசகர்களால் விரிவாக்கப்பட்டவை. கல்கியின் நிறையப் பாத்திரங்கள் அவருடைய பல இதரப் பாத்திரங்களை ஒத்திருக்கும். அவருக்கு முன்மாதிரியாக ஆங்கில, ஃப்ரெஞ்சு ஆசிரியர்களில் கூற வேண்டுமானால் வால்டர் ஸ்காட் மற்றும் அலெக்சாண்டர் டூமாசைக் கூறலாம்.

தேவன் கல்கியின் சமகாலத்தவரானாலும் இலக்கிய உத்திகளில் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். சாகசப் பார்வை தவிர்த்து யதார்த்தப் போக்கில் உலகையும் பாத்திரங்களையும் சித்தரிக்க முயன்றவர். இதனால் தேவனால் ஏராளமான பாத்திரங்களை படைக்க முடிந்தது. எல்லாப் பாத்திரங்களும் தனித்தனியானவை. தனித்தன்மை கொண்டவை. பழக்க வழக்கங்கள், பேச்சு முதலியவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுபவை. இலக்கிய ரீதியாக கல்கியை விட உயரிய இடம் தேவனுக்கு அளித்தேயாக வேண்டும். கல்கி அளவுக்கு அவர் பிரபலம் அடைய முடியவில்லை என்றால் கல்கியின் கதைகள் இருந்த மயக்க அம்சம் (fantasy) தேவன் கதைகளிலும் பாத்திரங்களிலும் கிடையாது. கல்கியின் தொடர்கதைகளைப் படித்துவிட்டு சிவகாமி, விக்கிரமன், நந்தினி, நாகநந்தி என்று பலர் புனைபெயர் வைத்துக் கொண்டார்கள். சாம்பு என்றும் சந்துரு என்றும் ஜகன்னாதன் என்றும் சுதர்சனம் என்றும் யாரும் தன்னைப் புது நாமகரணம் செய்து கொள்ளவில்லை. இந்த விதத்தில் தேவன் சார்லஸ் டிக்கன்ஸ் வகை எனலாம்.

கல்கி, தேவன் இருவருக்கும் நிறைய நகைச்சுவை உண்டென்பார்கள். கல்கியுடையது கிண்டல் வகையைச் சார்ந்தது. தேவனுடையது மனித இயல்பின் வினோதங்களைச் சித்தரிப்பது.

அசோகமித்திரன் சொல்லும் குறைகளை எல்லாம் – பொம்மைத்தனம் உள்ள பாத்திரங்கள் இத்யாதி – கல்கி பொன்னியின் செல்வனில் தாண்டி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அலை ஓசையிலும் தாண்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது 99 சதவிகிதம் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் தியாகபூமியிலும் கள்வனின் காதலியிலும் பார்த்திபன் கனவிலும், ஏன் சிவகாமியின் சபதத்திலும் கூட வரும் பாத்திரங்கள் பொம்மைத்தன்ம் உள்ளவையே. சி. சபதத்தில்தால் அவர் தனது எல்லைகளைத் தாண்ட முயற்சித்திருக்கிறார். பொ. செல்வனில் வெற்றி அடைந்திருக்கிறார்.

தேவனின் பாத்திரங்களிலும் அனேக ஸ்டீரியோடைப்கள் உண்டு. மிஸ்டர் வேதாந்தத்தின் சுவாமிக்கும் ஸ்ரீமான் சுதர்சனத்தின் முதலாளிக்கும் என்ன வித்தியாசம்? கோமதியின் காதலனில் இல்லாத ஸ்டீரியோடைப்பா? அவர் அனேகமாக எழுதியது வாரப் பத்திரிகை தொடர்களே, வணிக இலக்கியமே. சில சமயங்களில் வணிக எழுத்து இலக்கியமாகி விடுகிறது – துப்பறியும் சாம்புவைப் போல, ஸ்ரீமான் சுதர்சனத்தைப் போல. கல்கிக்கும் அதேதான். இருவருமே வணிக எழுத்தைத்தான் எழுத விரும்பினார்கள், பிரபலமாக இருக்க வேண்டும், நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். ஆனால் வாரப்பத்திரிகை எழுத்தின் தடைகளை, எல்லைகளை மீறி அவர்களது திறமை இலக்கியமாகப் பரிமளிக்கிறது என்றுதான் கருதுகிறேன்.

அக்கப்போர் வேண்டுமென்பவர்களுக்காக: கல்கி இருந்த வரை தேவன் விகடனில் தொடர்கதை எதுவும் எழுதவில்லையாம். தேவனின் பேர் இல்லாமல்தான் அவரது நிறைய எழுத்து வருமாம். விகடனில் வேலை செய்த பலருக்கும் கல்கி ஆசிரியராக இருந்தபோது சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை, தேவன் காலத்திலும் இது தொடர்ந்ததாம்.

அசோகமித்திரனின் ஒப்பீட்டை கட்டாயம் படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், தேவன் பக்கம், கல்கி பக்கம்

தேவனின் ‘மிஸ்டர் வேதாந்தம்’

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் படித்து மெய்மறந்து போவதற்கு முன்னாலேயே ஜெயமோகனோடு இணையத்தில் ஓரளவு பேசி இருக்கிறேன். வணிக நாவல்களின் முக்கியத்துவம் பற்றி அப்போது அவர் பேசியதும் எழுதியதும் என்னை ‘அட!’ என்று திரும்பிப் பார்க்க வைத்தது. வணிக நாவல்கள் முக்கியமானவை என்று நினைக்கும் இலக்கியத் தேடல் உள்ள ஒரே ஆள் நான்தான் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். என்னை விட சிறந்த ஒரு வாசகரும் அதே மாதிரி நினைக்கிறார் என்பது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

பிறகு ஜெயமோகனின் seminal நாவல் பட்டியல் கண்ணில் பட்டது. அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் – குறிப்பாக வணிக நாவல்களைப் பற்றி – சிலிகன் ஷெல்ஃபில் எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. என்னைத் தவிர வெறு யாரும் அவற்றை சீந்தமாட்டார்கள் என்று ஒரு நினைப்பு இருந்தது. இப்போது பல நண்பர்கள் – கேசவமணி, ரெங்கசுப்ரமணி, ஏன் சுசீலா மேடம் கூட அவற்றைப் படிக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப நாளாயிற்று அந்தப் பட்டியல் பக்கம் போய். அவ்வப்போதாவது எழுத வேண்டும், இன்று மிஸ்டர் வேதாந்தம் பற்றி.

தேவனை முழுவதும் வணிக எழுத்தாளர் என்று லைட்டாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. பெரும் இலக்கியவாதியும் இல்லை. அவர் எழுதி நான் படித்தவற்றில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம் மூன்றும் எனக்கு இலக்கியம். மிச்ச எல்லாம் – ராஜத்தின் மனோரதம், கோமதியின் காதலன் இத்யாதி – அந்தக் காலத்துக்கு ஸ்டாண்டர்ட் விகடன் தொடர்கதை, அவ்வளவுதான். ஒரு இரண்டுங்கெட்டான் எழுத்தாளராக இருக்கிறார்.

மிஸ்டர் வேதாந்தம் முழுக்க முழுக்க வணிக நாவல். நான் தமிழில் பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர்கள்லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, அனுராதா ரமணன், ஏன் இன்றைக்கு ரமணி சந்திரன் எல்லாரும் ஒரே கருவைத்தான் – பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும் – எழுதுகிறார்கள் என்று கிண்டலடிப்பேன். இதில் தேவன் அதே ஃபார்முலாவைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். பத்தினிக்கு பதில் கட்டுக்குடுமி பிராமண வாலிபனுக்கு இன்னல் வருகிறது பழையபடி தீர்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் தேவன் லக்ஷ்மி, சிவசங்கரி போன்றவர்களை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் கதை எப்படிப் போகும், என்னவெல்லாம் ஆகும் என்று யூகிக்க முடிந்தபோதும் படிக்கத் தோன்றியது. சில இடங்களில் – அன்றைய பத்திரிகை அலுவலக சித்தரிப்பு, நாயகனை ஏமாற்றும் திமிரான உறவினர்களின் சித்தரிப்பு, அழகான பெண்ணைப் பார்த்ததும் வேதாந்தம் லேசாகத் தடுமாறுவது போன்ற இடங்கள் உண்மையாகத் தெரிகின்றன. ஏன் அவர் பக்திப் பரவசத்தோடு சிக்கல் சிங்காரவேலன் கோவில், பார்த்தசாரதி கோவில் என்று விவரிப்பது கூட உண்மையாகத்தான் இருக்கிறது. சுவாரசியம் குறையாமல் எழுதி இருக்கிறார்.

சுருக்கமாகக் கதை – பணக்காரச் சூழலில் வளரும் வேதாந்தம் அப்பா இறக்கும்போதுதான் நிறைய கடன் இருப்பதை உணர்கிறான். உறவினர்கள் ஏமாற்றி இருப்பதையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். தான் விரும்பும், தன்னை விரும்பும் அத்தை மகளை மணக்கும் முன் செட்டில் ஆக வேண்டும். ட்யூஷன் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார், எழுத்தாளன், உதவி ஆசிரியன் என்று பல வேலைகளில் அலைகிறான். அவனுக்கு பல விதங்களில் உதவி செய்யும் ஆபத்பாந்தவர் சுவாமி, அவரது தம்பி சிங்கம். சில பல சிக்கல்களுக்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கிறது, காதல் மணத்தில் முடிகிறது, சுபம்!

நாயகனுக்கு உதவி செய்வதே தன் வாழ்வின் ஒரே லட்சியம் என்று சுவாமி இருக்கிறார். ஏன் என்றே தெரியவில்லை. வேதாந்தம் மருந்துக்கு கூட ஒரு அபிராமணரை சந்திப்பதில்லை. எப்படி? வேதாந்தத்தை ஏமாற்றினால் சாமி வந்து கண்ணைக் குத்திவிடுகிறது – சரி முதுகைக் குத்திவிடுகிறது, அவனை ஏமாற்றும் உறவினருக்கு முதுகில் கட்டி வருகிறது, சொத்தெல்லாம் போய்விடுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேதாந்தமாக இருப்பது தவிர வேறு எந்தத் தகுதியும் வேண்டாம் போலிருக்கிறது!

இது எல்லாருக்குமான நாவல் இல்லை. ஆனால் வணிக எழுத்து எப்படிப் பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். ஜெயமோகன் இதற்குப் பதிலாக ஜஸ்டிஸ் ஜகன்னாதனை (வணிக நாவலாகவாவது) தேர்ந்தெடுத்திருக்கலாம்.

வேதாந்தம் போலவே இன்னொரு நாவல் லக்ஷ்மி கடாட்சம். முழுக்க முழுக்க வாரப் பத்திரிகை தொடர்கதை. வேதாந்தத்துக்கு பதிலாக துரைசாமிக்கும் காந்தாமணிக்கும் இன்னல்கள் வந்து தீர்கின்றன.

இன்னொரு நாவலான மிஸ் ஜானகி பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. இவை எல்லாம் அந்தக் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வணிக நாவல்கள், அவ்வளவுதான். பிராமண மத்தியதர வர்க்கத்துக்காக எழுதப்பட்டவை. இன்று தேவன் பக்தர்கள், ஆவணப்படுத்துபவர்கள் தவிர வேறு யாரும் சீந்தமாட்டார்கள். எனக்கு முக்கியமாகத் தெரிவது தேவனின் craft. பல சரடுகளை ஒன்றிணைக்கும் விதம். சின்னச் சின்ன பாத்திரங்களில் (நாயகனின் அப்பா ஹரன், நாயகனின் நண்பன் மணியின் மனைவி தங்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்) தெரியும் genuineness. மெலிதான நகைச்சுவை. ஆனால் வணிக நாவல்கள் எழுத விரும்புபவர்கள் இதை எல்லாம் படித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறுகதையும் கிடைத்தது – மாலதி. தவிர்க்கலாம்.

தேவனுக்கு இன்னும் ஓரளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லயன்ஸ் அவரது புத்தகங்கள வெளியிட்டது. கிழக்கும்.

தேவன் ரசிகர்கள் பசுபதியின் தளத்தை கட்டாயமாகப் பார்க்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இவர் தேவனின் பரம ரசிகர். இன்னொரு பரம ரசிகரான திவாகர் அவரைப் பற்றி எழுதிய பதிவுகள் இங்கே புத்தகமாகவே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

வேதாந்தம் பற்றி ரெங்கசுப்ரமணியின் பதிவு இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன் பக்கம்

துப்பறியும் சாம்பு

(மீள்பதிவு)

கிளாசிக். தேவனின் புத்தகங்களில் இதுதான் மிகவும் பிரபலமானது. ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஆகிய மூன்றும் தேவன் புத்தகங்களில் கட்டாயமாக படிக்க வேண்டியவை.

கதை தெரிந்ததுதான். ஒரு சாதாரண டெம்ப்ளேட் – காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்கள். அந்த மாதிரி அடி முட்டாள் சாம்பு முட்டாள்தனமாக எதையாவது செய்ய, அது ஒவ்வொரு முறையும் வொர்க் அவுட் ஆகிவிடுகிறது. இந்த டெம்ப்ளேட்டை ஐம்பது முறை போரடிக்காமல் பயன்படுத்தி இருக்கிறார் தேவன். ஒவ்வொரு கதையிலும் சாம்புவின் முட்டாள்தனத்தையும், அது எப்படியோ குற்றவாளியை கண்டுபிடிப்பதையும் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார். இன்றைக்கும், இந்த ஜெனரேஷனுக்கும் கூட கதைகள் அப்பீல் ஆகின்றன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த, பாப் இசை கேட்கும், அமெரிக்க டீனேஜர்கள் பற்றிய புத்தகங்களை மட்டுமே விரும்பிப் படிக்கும் என் (அப்போதைய) 12 வயதுப் பெண்ணுக்கு “இஷ்டம் போல் பிரயாணம்” என்ற கதையை சொன்னேன் – அவள் விழுந்து விழுந்து சிரிக்கிறாள்! அதுதான் தேவனின் வெற்றி.

என்னுடைய ஃபேவரிட் கதைகள்:

 1. தேடி வருகிறது கவுரவம்
 2. மைசூர் யானை
 3. தலைக்கு வந்தது
 4. வேஷம் பலித்தது
 5. குறட்டையும் கொட்டாவியும்
 6. தேடி வந்த தனம்
 7. மடையன் செய்கிற காரியம்
 8. தலைக்கு மேல் வெள்ளம்
 9. சிங்காரம் ஐ.சி.எஸ்.
 10. அதிர்ஷ்டம் துரத்துகிறது
 11. இஷ்டம் போல் பிரயாணம்
 12. பச்சை வைரம்
 13. சங்கராபுரம் மகாராஜா
 14. கோட்டையூர் கோமளம்
 15. காணமற்போன கணவன்
 16. சுந்துவின் சிறுகதை

காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் – கதைகளை வெட்டியும் ஒட்டியும் உருவாக்கி இருக்கிறார். நாடகமும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது. அவருக்கு முன்னால் நடராஜன் என்று ஒருவர் நடித்ததாகவும் அவர் சாம்பு நடராஜன் என்றே புகழ் பெற்று விளங்கியதாகவும் தெரிகிறது.

ஒய்.ஜி. மகேந்திரன் சாம்புவாக டிவி சீரியலில் நடித்திருக்கிறாராம்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். ஆனால் தேவனின் கதைகள் எதுவும் அதில் பயன்படுத்தப்படவில்லை.

நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே.

தேவனின் பரம ரசிகரான பசுபதி சாம்புவைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். சில கதைகளை ராஜு ஆகியோர் வரைந்த சித்திரங்களுடனேயே ஸ்கான் செய்து பதித்திருக்கிறார். திரை எழும்புகிறது, சித்ரசேனா நாடக சபை ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.

மேலும் தென்றல் பத்திரிகையில் பங்களா மர்மம் என்ற சிறுகதையைப் படிக்கலாம்.

ஒரே ஒரு வருத்தம்தான். ஐம்பதோடு நிறுத்திவிட்டாரே, இன்னும் எழுதி இருக்கலாமே!

கட்டாயமாக படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன்

தொடர்புடைய பதிவுகள்:
தேவன் மரணம் – விகடன் தலையங்கம்
மோட்டார் சுந்தரம் பிள்ளை விமர்சனம்

தேவனின் “ஜஸ்டிஸ் ஜகன்னாதன்”

மீள்பதிவு

மைனர் கிளாசிக்.

ஜஸ்டிஸ் ஜகன்னாதன் தேவனின் சிறந்த படைப்புகளில் ஒன்று. Legal thriller. அதே நேரத்தில் ஒரு விதத்தில் இது ஒரு Arthur Haileysque நாவல். கோர்ட், ஜூரி விசாரணை என்று ஒரு பின்புலத்தை சுவாரசியமாகக் காட்டுகிறது, ஆனால் மேலோட்டமாகத்தான் காட்டுகிறது. கோர்ட்டின் நடைமுறைக்குள் ஆழமாக போகவில்லை.

தியாகராயப் பிள்ளை பணக்காரர். அவரது மூத்த மாப்பிள்ளை வரதராஜப் பிள்ளை. மற்ற வாரிசுகளை விட வ. பிள்ளைக்கு நிறைய சொத்து எழுதி வைத்திருக்கிறார் மாமனார். ஆனால் உயிலை மாற்றவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். மாப்பிள்ளைக்கும் மாமனாருக்கும் இந்த விஷயத்தில் மனக் கசப்பு இருக்கிறது. தி. பிள்ளைக்கு உடம்பு மோசமாக இருக்கிறது. டாக்டர்கள் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று மருந்து கொடுத்ததில் எப்படியோ அபாயம் நீங்கிவிட்டது. வ. பிள்ளை வீட்டில் தங்கி இருந்து மாமனாரை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார். ஒரு நாள் இரவு கொஞ்சம் ரகசியமாக வெளியூர் போகிறார். அன்றிரவு உடல் தேறிக் கொண்டு வந்த மாமனார் இறக்கிறார். அவருக்கு யாரோ விஷம் கொடுத்திருப்பது தெரிய வருகிறது. காணாமல் போன வ. பிள்ளை மீது சந்தேகம் வருகிறது. அவரை கண்டுபிடித்து அவர் மேல் கொலைக் கேஸ் போட்டிருக்கிறார்கள். விசாரணை, குறுக்கு விசாரணை, கேஸ் என்று கதை சுவாரசியமாகப் போகிறது. உண்மையில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் இந்த நாவலில் ஒரு minor பாத்திரம்தான்.

சில விஷயங்கள் ஆச்சரியத்தை தருகின்றன. ஜூரி சிஸ்டம் இந்தியாவில் ஏன், எப்போது மறைந்தது? ஆங்கில, அமெரிக்க சட்ட முறைகளில் இன்னும் இருக்கிறதே? (1959 நானவதி வழக்கிற்குப் பிறகு ஜூரி முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த நானாவதி வழக்கு சமீபத்தில் ருஸ்தம் என்று அக்‌ஷய் குமார் நடித்துத் திரைப்படமாக வந்தது.) வேளச்சேரி நாவலில் ஒரு கிராமம் என்று சொல்லப்படுகிறது! வெங்கடேசன் ஒரு வேலைக்காரிக்கு “செக்ஸ் புத்தகம்” எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார், ஐம்பதுகளிலேயே இதெல்லாம் வெளிப்படையாக விற்றிருக்கிறது! (டோண்டு ராகவன் இன்றில்லை, அவர் வயது இளைஞர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.)

நாவலின் பலம் அதன் சுவாரசியம்தான். அது காட்டும் உலகம் இன்று இல்லைதான். ஆனாலும் படிக்கும்போது அலுப்பு தட்டுவதில்லை. நல்ல கதைப் பின்னல் (plotting) இருக்கிறது. மெதுமெதுவாக தியாகராஜப் பிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று புரிய வைக்கிறார். பலவீனம் கோர்ட் சூழ்நிலையை காட்டுவதோடு தேவன் திருப்தி அடைவதுதான். அவர் பெரிய இலக்கியம் படைக்க கிளம்பவில்லை என்பது தெளிவு!

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
தேவன் மரணம் பற்றி ஆனந்த விகடன் தலையங்கம்
கோபால் பதிவு – தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
கிழக்கு பதிப்பகம் மறு வெளியீடு செய்திருக்கும் தேவனின் புத்தகங்கள்
தேவனின் “கோமதியின் காதலன்”
தேவன் பற்றி சுஜாதா

தேவன் மரணம் – விகடன் தலையங்கம்

எனக்கு எழுத்தாளர் தேவனைப் பற்றி எப்போதும் ஒரு soft corner உண்டு. வணிக எழுத்துகளைத் தவிர வேறு எதுவும் தெரியாத காலத்தில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் போன்ற ஒரு minor classic-ஐ படித்ததால் இருக்கலாம். துப்பறியும் சாம்பு இன்றும் புன்னகையை வரவழைப்பதால் இருக்கலாம். ஸ்ரீமான் சுதர்சனத்தில் ஒரு மத்தியதர வர்க்க குடும்பத் தலைவனுக்கு என்றென்றும் உள்ள பணப் பிரச்சினைகளில் என்னையே கண்டதால் இருக்கலாம். அவர் வணிக எழுத்தைத் தாண்டி இலக்கியம் கிலக்கியம் எல்லாம் படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் சில சமயம் பத்திரிகை, தொடர்கதை ஆகியவை நிர்ணயிக்கும் எல்லைகளை அநாயாசமாகத் தாண்டி இருக்கிறார்.

தேவன் 5-5-57 -இல் இறந்திருக்கிறார். இறந்தபோது அவர் விகடன் ஆசிரியர். இன்று ஒரு பழைய பதிவு – அவர் மறைவைப் பற்றி விகடனில் எழுதப்பட்ட தலையங்கம் – கண்ணில் பட்டது. அவரது 53-ஆவது நினைவு நாள் என்பதற்காக மீண்டும் பதித்திருக்கிறேன்.

விகடனின் மகத்தான நஷ்டம்!

சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.

தேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனை பேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகி விட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.

தொடர்புடைய சுட்டிகள்:
கல்கியும் தேவனும் – அசோகமித்திரன் ஒப்பிடுகிறார்
ராஜத்தின் மனோரதம்
கோமதியின் காதலன்
துப்பறியும் சாம்பு
ஜஸ்டிஸ் ஜகன்னாதன்

கல்கியும் தேவனும் – அசோகமித்திரன் ஒப்பிடுகிறார்

அசோகமித்திரன் ஹிந்துவில் கல்கியையும் தேவனையும் ஒப்பிட்டு எழுதிய இந்த கட்டுரை கண்ணில் பட்டது. ஸ்கூல் பரீட்சையில் கட்டுரை எழுதச் சொன்னால் எப்படி எழுதுவோமோ அந்த மாதிரிதான் எழுதி இருக்கிறார். இருந்தாலும் எனக்குத் தெரியாத சில விஷயங்கள் – கல்கி-தேவன் rivalry உட்பட – இருந்தன. அதனால்தான் இங்கே சுட்டி கொடுத்திருக்கிறேன்.

தேவனின் “ராஜத்தின் மனோரதம்”

சரித்திர நாவல் சரித்திர நாவல் என்று ஆறேழு பதிவு எழுதியாயிற்று. இன்னும் எழுத விஷயம் இருந்தாலும் எனக்கே கொஞ்சம் போரடிக்கிறது. ஒரு ப்ரேக் எடுத்துக் கொள்கிறேன்.

நண்பர் கோபி ராஜத்தின் மனோரதம் பற்றி எழுதேன் என்று கேட்டிருந்தார். தற்செயலாக போன வாரம்தான் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். சரி கோபியின் மனோரதத்தையும் பூர்த்தி செய்வோமே!

வீடு கட்டுவது என்பது மத்தியதர வர்க்கத்தினரின் கனவு மட்டுமல்ல, nightmare-உம் கூட. இதுதான் கதை.

வீடு கட்டுவது என்று கிளம்பியாகிவிட்டது. அப்புறம் காண்ட்ராக்டர், மேஸ்திரி, சிமென்ட், கல், கிணறு, ஜன்னல், கதவு, வெள்ளையடிப்பது, பூச்செடி வைப்பது என்று ஒவ்வொரு கட்டத்திலும் படும் அவஸ்தையை விவரித்திருக்கிறார். நம்மில் அநேகமானவருக்கு தொழில் நுட்பம் தெரியாது. இன்னும் இரண்டு மூட்டை சிமென்ட் வேண்டுமென்றால் உண்மையிலேயே வேண்டுமா என்று ஒரு கேள்வி நிச்சயமாகத் தோன்றும். அந்தப் பிரச்சினையை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார். வீடு கட்டி அனுபவப்பட்ட முக்கால்வாசிப்பேருக்கு தாங்கள் பட்ட கஷ்டங்கள் நிச்சயமாக நினைவு வரும்.

ஆனால் கதை என் கண்ணில் சுமார்தான். இது ஒரு மார்க்கெட்டை – சொந்த வீடு கட்டியவர்கள் – குறி வைத்தும், கொஞ்சம் சுய இரக்க உணர்ச்சியிலும் எழுதப்பட்ட கதை. அன்றைக்கு புன்முறுவலை வரவழைத்திருக்கக் கூடும் பகுதிகள் இன்று வேலை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மகா மோசம் என்றில்லை, ஆனால் பிரமாதம் என்றும் சொல்வதற்கில்லை. படிக்காவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது.

கோபி தேவனின் ரசிகர் என்று நினைக்கிறேன். அவருக்கு இந்த விமர்சனம் அதிருப்தியைத் தரலாம். என்ன செய்வது, எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் எழுத முடியும்…

தேவனின் புத்தகங்களை அலையன்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. இந்தப் புத்தகம் இப்போது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாகவும் வந்திருக்கிறது. விலை 80 ரூபாய்.

தேவனின் “கோமதியின் காதலன்”

இது ஒரு மீள்பதிவு, சில திருத்தங்களுடன்.

அமெரிக்காவில் வாட்டர் கூலர் டாக் என்று சொல்வார்கள். தண்ணீர் குடிக்கும்போது சக பணியாளர்களிடம் என்ன பேசுவீர்கள்? நம் ஊரில் நான் வேலை செய்த வரைக்கும் சினிமா, கிரிக்கெட், சில சமயம் அன்றைக்கு பரபரப்பான செய்திகள். இப்போது டிவியும் இருக்கும், குறிப்பாக பெண்கள், அதுவும் ஆன்டிகள் பேசும்போது நேற்று சீரியலில் என்ன நடந்தது என்று பேசுவார்கள் என்று நினைக்கிறேன். (யாராவது நாலு பெண்கள் போடா MCP, பெண்களை ஸ்டீரியோடைப் செய்யாதே என்று எழுதுங்கம்மா!)

வாரப் பத்திரிகைகளில் தொடர்கதை என்பது எண்பதுகள் வரைக்கும் கூட மிக பாப்புலரான ஒன்று. அப்போதெல்லாம் டிவி சீரியலுக்கு பதிலாக அதுதான் பேசப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா பேசியது எனக்கே தெரியும். பாலகுமாரன் இந்த வாரம் கரையோர முதலைகளில் என்ன எழுதினார், சிவசங்கரியின் தொடர்கதையில் அருண் அவன் நண்பனின் மனைவியிடம் தன் “காதலை” சொல்வானா (கதை பேர் நினைவில்லை, ஆனால் இந்த அருண்தாங்க எனக்கு கண்டாலே ஆகாது, ரொம்ப நல்லவரு!), இன்னும் ஒரு பத்து வருஷம் முன்னால் மணியன், அகிலன், நா.பா. என்ன எழுதுவார் என்று பேசியது இன்றைக்கு ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த வாரத் தொடர்கதை formatஐ மீறி இலக்கியம் உருவாவது கஷ்டம். ஒரு ஃபார்முலா இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் இருக்க வேண்டும். அந்த திருப்பம் அடுத்த ஐந்து நிமிஷத்தில் மறந்துவிடுகிற மாதிரி இருக்கலாம், ஆனால் திருப்பம் இருந்தே ஆக வேண்டும். ஒரு வாரம் கழித்துதான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் வரும், அதற்குள் போன வாரம் படித்தது மறந்துவிடும். அதனால் போன வாரம் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். சாண்டில்யன்தான் இதை ஏறக்குறைய ஒரு மெக்கானிகல் ப்ராசஸ் ஆகவே மாற்றினார். முதல் இரண்டு பக்கம் போன வாரம் என்ன நடந்தது, அடுத்த இரண்டு பக்கம் போன வார திருப்பத்தைப் பற்றி, கடைசி இரண்டு பக்கம் கதவைத் திறந்தான், அதற்கு பின்னால் நின்றவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் (பின்னால் நிற்பவர் ஒரு பைசாவுக்கு பெற மாட்டார்) என்று எழுதுவார். கோப்பெருந்தேவி எங்கே என்று ஒரு சிறுகதை உண்டு. இந்த மாதிரி எழுத்தை பகடி செய்து எழுதப்பட்டது. அது ஒரு தொடர்கதையின் ஒரு வார இன்ஸ்டால்மென்ட் – கதை பூராவும் குதிரை மேல் உட்கார்ந்துகொண்டு கோப்பெருந்தேவி எங்கே எங்கே என்று யோசிப்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. தொடர்கதை முழு நாவலாக வரும்போது இந்த வாரம் ஒரு திருப்பம் ஃபார்முலாவின் குறை மிக நன்றாகத் தெரியும்.

இலக்கியம் உருவாவது கஷ்டம் என்றாலும் சுவாரசியம் குறையாமல் எழுதுபவர்கள் உண்டு. சுஜாதாவை குறிப்பாக சொல்லலாம். கல்கி இதில் நிபுணர். ரா.கி. ரங்கராஜன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, பி.வி.ஆர். மாதிரி சில மறக்கப்பட்ட எழுத்தாளர்கள் சுவாரசியமாக எழுதக் கூடியவர்கள். அகிலன், நா.பா. போன்றவர்கள் மிக பிரபலமாக இருந்தவர்கள். லக்ஷ்மி, சிவசங்கரி, மணியன், இந்துமதி, பாலகுமாரன் மாதிரி பலர் பெண்கள், அதுவும் ஆன்டிகள் மனதை கவர்ந்தவர்கள்.

தேவன் சில சமயம் இந்த ஃபார்முலாவை தாண்டி இருக்கிறார். அவரது ஸ்ரீமான் சுதர்சனம் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் பணக் கஷ்டங்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவார். ஜஸ்டிஸ் ஜகன்னாதன் ஒரு கிளாசிக். துப்பறியும் சாம்பு ஃபார்முலாதான், ஆனால் மிக சுவாரசியமான புத்தகம். தேவன் பி.ஜி. வுட்ஹவுஸ் மாதிரி எழுதக் கூடியவர். ஆனால் வுட்ஹவுஸ் வார்த்தைகளில் விளையாடி நம்மை சிரிக்க வைப்பார். தேவன் சிசுவேஷனல் காமெடி எழுதுகிறார். சில சமயம் புன்னகைக்கிறோம்.

Gomathiyin Kadhalanதேவனின் கோமதியின் காதலன் ஃபார்முலா தொடர்கதைதான். விகடனின் பக்கங்களை நிரப்ப எழுதப்பட்ட ஒரு தொடர்கதை. இலக்கியம் நிச்சயமாக இல்லை. ஆனால் அந்த காலத் தொடர்கதைகள் எப்படி இருந்தன என்று நமக்கு அழகாக காட்டுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு quote உடன் ஆரம்பிக்கிறார். திருப்பம் வாராவாரம் உண்டு.

பல வருஷமாக சொல்லப்படும் கதைதான். ரங்கராஜன் தன் பேரை மாற்றிக் கொண்டு நாயகி வீட்டில் வேலைக்கு சேர்கிறான். அங்கே நான்தான் ரங்கராஜன் என்று சொல்லிக்கொண்டு மணி வருகிறான். ஆள் மாறாட்டம், காதல் என்று கதை போகிறது. உள்ளத்தை அள்ளித் தா படம் பார்த்ததில்லையா நீங்கள்? ஏறக்குறைய அந்த மாதிரி கதைதான்.

கதை முக்கியமே இல்லை. ஆனால் தேவன் காட்டும் ஒரு உலகம் – உயர் மத்திய வர்க்கம், பிராமணக் குடும்பம் (அப்பா மிராசுதார், மாமா ஜட்ஜ் இந்த மாதிரி) உண்மையாக இருக்கிறது. கதையின் சிறப்பான அம்சம் அதுதான். அதில் வரும் சின்ன காரக்டர்கள், அறிவிப்புகளை சொல்லிக் கொண்டே இருக்கும் சிறுவன், எதுகை மோனை பேசி பேசி தட்சணை கேட்கும் பிராமணர், சண்டை போடும் அண்ணன், ஊரிலிருந்து வரும் கணக்குப்பிள்ளை பையன் எல்லாம் சுவாரசியமான காரக்டர்கள்.

கோமதியின் காதலன் டி.ஆர். ராமச்சந்திரன், சாவித்திரி நடித்து படமாகவும் வந்தது. ஓடவில்லை.

தேவனின் புத்தகங்கள் அலையன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும். இது கிழக்கு வெளியீடாகவும் இப்போது வந்திருக்கிறது.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

கோ. காதலன் பற்றிய பதிவில் நாவலைப் பற்றி இரண்டு பாரா, பில்டப் பத்து பாரா இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இதெல்லாம் ஒரு flow-வில் வருவது, இந்த முறை அப்படித்தான் வந்திருக்கிறது. 🙂