சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது

2022-க்கான விஷ்ணுபுரம் விருதுக்கு சாரு நிவேதிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஜெயமோகனின் வார்த்தைகளில்:

நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி. இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும்.

விஷ்ணுபுரம் விருது பிரபலமான ஒருவருக்கு அளிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். பூமணியையும் ஞானக்கூத்தனையும் ஒரு சிறு வட்டத்திற்குள்தான் தெரியும், சாருவின் பெயரை ஆயிரத்தில் ஒரு தமிழனாவது கேள்விப்பட்டிருப்பான்/ள் என்றுதான் கணிக்கிறேன். ஆனால் சாருவும் இது வரை விருது என்றெல்லாம் அங்கீகாரம் பெறாதவர்தான்.

என் எண்ணத்தில் முத்துலிங்கமே இந்த கௌரவத்துக்கு உரியவர், அவருக்குப் பிறகுதான் மற்றவரெல்லாம். ஆனால் நானா விருது யாருக்கு என்று முடிவெடுக்கிறேன்? 🙂

சாருவை நான் அதிகமாகப் படித்ததில்லை, படித்த வரை அவர் என் மனதை பெரிதாகக் கவர்ந்ததில்லை என்றாலும் அவரும் விருதுக்கு தகுதியானவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. பெரிதாக மனதைக் கவராத எழுத்தாளர் விருதுக்கு தகுதியானவர் என்பது முரண்பாடாக இல்லையா என்று நீங்கள் கேட்க்லாம். சில சமயம் அப்படித்தான். உதாரணமாக காஃப்கா எனக்கான எழுத்தாளர் அல்லர். Metamorphosis நாவலை என்னால் ரசிக்க முடியவில்லை. aதனால் அவரின் எழுத்தின் தரம் தாழ்வானது அல்ல.

For the record: சாருவின் புனைவுகளில் நான் ஜீரோ டிகிரி மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் 15, 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும். ஜெயமோகன் சொல்வது போல பிறழ்வெழுத்துதான். படிக்கும்போது சித்தரிப்புகளால், குறிப்பாக பாலியல் சித்தரிப்புகளால் அதிர்ச்சி அடையத்தான் செய்தேன். ஆனால் அந்த முதல் அதிர்ச்சி அடங்கியதும் வாசகனை அதிர்ச்சி அடையச் செய்வதற்காக மட்டுமே எழுதப்பட்டவை என்றுதான் மதிப்பிட்டேன். அப்படிப்பட்ட எழுத்துகளுக்கு என் மனதில் பெரிய மதிப்பு இல்லை. அதனாலேயே நான் அவரது பிற புனைவுகளைத் தேடிப் பிடித்து படிக்கவில்லை. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றில் தெரிவது பார் நான் எப்படியெல்லாம் சமூகத்தின் ஒழுக்க விதிகளை மீறுகிறேன், தண்ணி அடிக்கிறேன், என் மகள் வயதுப் பெண்ணோடு flirt செய்கிறேன் என்று வாசகனுக்கு ஒரு vicarious சந்தோஷத்தைக் கொடுக்கும் முயற்சிதான். வாழ்வது எப்படி போரடிக்கும் பத்தி எழுத்து.

தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தது பழுப்பு நிறப் பக்கங்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களை நான் அறிமுக நூலாகவே மதிப்பிடுகிறேன். விரிவான அலசலாக அல்ல. இந்த மாதிரி அறிமுகங்களை நான் கூட எழுத முடியும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. அசட்டு நம்பிக்கையாக இருக்கலாம் 🙂 நானே எழுதக் கூடியது என்று மதிப்பிடுபவை எனக்கு சாதனைகளாகத் தெரிவதில்லை 🙂 க்ரௌச்சோ மார்க்ஸ் சொன்ன மாதிரிதான் –

I refuse to join any club that would have me as a member!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாரு நிவேதிதா தமிழ் விக்கி பக்கம்
விஷ்ணுபுரம் விருது தமிழ் விக்கி பக்கம்

4 thoughts on “சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது

  1. பழுப்பு நிறம்…. வெறும் சில பல பதிவுகள் என்று கடந்து போக முடியாதுதான். ஆனால், சாருவின் மீது உங்களுக்கு உள்ள நிலைப்பாடு எனக்கும் உண்டு

    Like

    1. ஸ்பரிசன், சாருவின் வேறு ஏதாவது புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா? சாருவைப் பற்றி இந்தத் தளத்திலேயே ஏதாவது எழுதுகிறீர்களா? அவ்வப்போது இன்னும் இரண்டு பேர் இங்கே எழுதினால் அது ஒரு சின்ன மகிழ்ச்சி… (என் மின்னஞ்சல் rv dot subbu at gmail dot com)

      Liked by 1 person

      1. சாருவின் சில புத்தகங்களை வாங்கி உள்ளேன். மேலும் பல புத்தகங்களை விமரிசித்து எழுதும் ஆவல் உண்டு. அதற்கான முன் எடுப்புகள் நிகழ்கிறது. உங்களோடு நான் தொடர்பு கொள்ள ஆவலாக உள்ளேன். மிக்க நன்றிகள்.

        Like

  2. ஸ்பரிசன், என் மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்கும் என்று நினைத்துவிட்டேன். rv dot subbu at gmail dot com. அலைபேசி எண்ணை மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்வோம்

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.