இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – ரெய்னர் மரியா ரில்கே

ரெய்னர் மரியா ரில்கே 1875 முதல் 1926 வாழ்ந்த ஜெர்மன் கவிஞர். அவருடைய பல நூறு படைப்புகளாகிய கவிதைகளை போல அவர் பிறருக்கு எழுதிய கடிதங்களும் சிறப்புப் பெற்றவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 1902 முதன் 1908 வரை ஃப்ரான்ஸ் கப்பஸ் என்ற 19 வயது நிரம்பிய ‘வியன்னா இராணுவ கல்லூரியின்’ மாணவருக்கும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ரில்கே எழுதிய கடிதங்களாகும். இக்கடிதங்கள் பதட்டத்துடன் வாழ்க்கையை எதிர்நோக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியருமாகிய நண்பர் கூறும் அறிவுரையை போல அமைந்துள்ளன.

1929இல், ரில்கேயின் மரணத்திற்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கப்பஸால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

முதல் கடிதம்

பாரீஸ்,
பிப்ரவரி 17, 1903

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம் சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. நீங்கள் என் மேல் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவ்வளவே என்னால் செய்ய இயலும். உங்களுடைய கவிதை வரிகளை விவாதிக்க எடுக்கப்படும் எவ்வித எத்தனிப்பும் எனக்கு அன்னியமானது. விமர்சனங்களை போல் ஒரு கலைப்படைப்பை மிக குறைவாகதொட்டுச் செல்வது வேறொன்றுமில்லை [அவை எப்பொழுதும் இறுதியில் புரிதல்களில் போய் முடிந்து விடுகின்றன]. விஷயங்கள் எளிதில் உணரக்கூடியதாகவோ அல்லது விளக்கக் கூடியதாகவோ இருக்கும் என நாம் நம்ப வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவை அப்படி இருப்பதில்லை. பெரும்பான்மையான அனுபவங்கள் விளக்க முடியாதவை, அவை எந்த சொல்லும் நுழைந்திராத வெளியில் ஏற்படுபவை. மற்றும் மற்ற எல்லாவற்றையும் விட விளக்க முடியாதென்பது, துரிதமாக கடந்து போகும் நமது சிறுவாழ்கையை காட்டிலும் பெரிய வாழ்வை தாங்கிக் கொண்டிருக்கும், புதிர் மிகுந்த இருப்புகளாகிய, கலைப் படைப்புகளேயாகும்.

மேலே குறிப்பிட்டவற்றை முன்னுரையாக வைத்து, நான் உங்களிடம் சொல்வது: அமைதியான ரகசிய அந்தரங்கத்தின் ஊற்றுகளை கொண்டிருந்தாலும், உங்களுடைய கவிதைகள் அவைகளுக்கென்று ஒரு நடையை கொண்டனவை அல்ல. அதை, உங்களுடைய இறுதி கவிதையான, “என் ஆத்மா”வில் மிகவும் உணர்கிறேன். அங்கே, உங்களுக்கென்று சொந்தமான ஏதோ ஒன்று வார்த்தையாகவும், இன்னிசையாகவும் மாற முயற்சிக்கிறது. “லீயோபார்டிக்கு” என்ற அற்புதமான கவிதையில் அந்த மகத்தான, தனித்த ஆளுமையின் மேல் ஒரு விதமான சகோதரத்துவ உணர்வு ஏற்படுவது போலுள்ளது. அப்படி இருந்தும், அக்கவிதைகள் தம்முள் ஒன்றாக சேர்ந்து வேறெதுவும் ஆக மாறவில்லை, தனித்து நின்றும் எதுவுமாகவில்லை, இறுதி கவிதை மற்றும் லீயோபர்டிக்கு என்ற கவிதையும் கூட. அவைகளுடன் சேர்த்து நீங்கள் அனுப்பியிருந்த கடிதம், உங்கள் கவிதைகளை படிக்கும் போது நான் உணர்ந்த பல பிழைகளை கண்டு கொள்ள உதவியது, என்றாலும், என்னால் அவற்றை திட்டவட்டமாக குறிப்பிட்டு சொல்ல இயலாது.

உங்களுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றனவா என கேட்டிருந்தீர்கள். நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு முன் மற்றவர்களிடம் கேட்டிருப்பீர்கள். பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருப்பீர்கள். உங்கள் படைப்புகளை பதிப்பாளர்கள் நிராகரிக்கும் போது, மற்றவர்களின் கவிதைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருந்தியிருப்பீர்கள். நீங்கள், ( என் அறிவுரை உங்களுக்கு வேண்டும் என நீங்கள் கேட்டதால்), இப்படிப்பட்ட செயல்களை செய்யாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வெளியில் தேடுகிறீர்கள், அதைத் தான் தற்பொழுது அநேகமாக தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அறிவுரையோ, உதவியோ வழங்குபவர்கள் யாருமில்லை – யாருமேயில்லை. நீங்கள் ஒன்று மட்டுமே செய்ய வேண்டும். உங்களுக்குள் பயணம் செல்லுங்கள். உங்களை எழுத ஆணையிடும் காரணியை கண்டுபிடியுங்கள். அது தன் வேர்களை உங்கள் இதயத்தின் அடி ஆழங்களுக்குள் பரப்பியிருக்கிறதா என பாருங்கள். நீங்கள் எழுதுவதை தடை செய்தால், உயிரை விட்டு விடுவீர்களா என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இவையெல்லாவற்றையும் விட, இரவின் அமைதிப் பொழுதில் இந்த கேள்வியை உங்களிடமே கேளுங்கள்: நான் அவசியம் எழுத வேண்டுமா? ஒரு ஆழ்ந்த பதிலுக்காக உங்களுக்குள் துருவிச் சென்று கேளுங்கள். அந்த பதில் ஒப்புதலோடு ரீங்கரித்தால், மிக முக்கியமான அக்கேள்வியை நீங்கள், “ஆமாம், கட்டாயமாக” என்ற எளிய பதிலுடன் எதிர் கொண்டால், உங்கள் வாழ்கையை இந்த நிர்பந்தத்திற்கு ஏற்ப உருவாக்குங்கள். உங்கள் வாழ்கை, அதன் மிகவும் அடங்கிய, அலட்சியமான பொழுதுகளில் கூட, இந்த உந்துதலின் அடையாளமாகவும், சாட்சியாகவும் இருக்க வேண்டும். அடுத்து, இயற்கையின் அருகாமையில் வாருங்கள். இதுவரை எவரும் முயற்சித்ததே இல்லை என்பதைப் போல, நீங்கள் பார்த்ததையும், உணர்ந்ததையும், நேசித்ததையும், இழந்ததையும் சொல்ல முயலுங்கள். காதல் கவிதைகளை எழுதாதீர்கள்; மிகவும் எளிமையானதும், சாதாரணமானதுமான அத்தகைய வடிவங்களை தவிர்த்து விடுங்கள். அதில் செயல்படுவது மிகவும் கடினம். மேலான சிறந்த பாரம்பரியங்கள் பல இருக்கும் அவ்வடிவங்களில், தனித்துவம் மிக்க படைப்பை உருவாக்க அபாரமான, முதிர்ந்த திறன் வேண்டும்.

ஆதலால், இப்படிப்பட்ட பொதுவான தளங்களில் இருந்து உங்களை விடுவித்து, தினசரி வாழ்கை என்ன தருகிறதோ அதை எழுதுங்கள். உங்கள் ஆசைகளையும், சோகங்களையும் விவரியுங்கள். மனதில் கடந்து செல்லும் எண்ணங்கள் மற்றும் அழகு எது என நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, இவை எல்லாவற்றையும் இதயமுணர்ந்த, அமைதியான, நேர்மை கொண்ட, அடக்கத்துடன் விவரியுங்கள். உங்களை வெளிப்படுத்தும் போது சுற்றியுள்ள பொருட்கள், உங்களின் கனவு காட்சிகள் மற்றும் ஞாபகத்தில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் தினசரி வாழ்கை வறுமையோடு இருக்கிறதென்றால், அதைக் குற்றம் சொல்லாதீர்கள், உங்களையே குற்றப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அவ்வாழ்கையின் செல்வங்களை வெளிக் கொண்டுவர முடிந்த ஒரு கவிஞன் இல்லை என ஒப்புக் கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவனுக்கு ஏழ்மையென்றும், துச்சமான ஏழையென்றும் எதுவும் இல்லை. நீங்கள் ஒரு சிறையில் இருந்தாலும் கூட, அதன் சுவர்கள் உலகின் ஓசைகள் எதையும் அனுமதிக்காதென்றாலும் கூட – விலை உயர்ந்த ஆபரணம் போன்ற மதிப்பும் , ஞாபகங்களின் புதையல் கிடங்காகவும் உள்ள உங்கள் பால்யகால பொழுதுகள் உண்டல்லவா? அதில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். விசாலமான கடந்த காலங்களில் மூழ்கிக் கிடக்கும் உணர்ச்சிகளை மேலே எழுப்புங்கள்; உங்கள் ஆளுமை இன்னும் வலிமையோடு வளரும்; உங்கள் தனிமை விரிந்து, கடந்து போய்க்கொண்டிருக்கும் மற்ற மனிதர்களின் தூரத்து பேச்சிரைச்சல், வந்தடைய முடியாத அந்தி வெளிச்சம் நீங்கள் வாழும் இடமென்றாகும். அங்ஙனம் இந்த உள்-திரும்புதலாலும், உங்கள் உலகினுள்ளில் மூழ்குவதாலும் கவிதைகள் வெளிவந்தால், மற்றவர்களிடம் அவை நன்றாக உள்ளனவா என கேட்க எண்ண மாட்டீர்கள். பத்திரிக்கைகளுக்கு அப்படைப்புகளின் மேல் ஆர்வமேற்படுத்த மாட்டீர்கள். ஏனென்றால் அவை உங்கள் அன்பிற்குரிய இயற்கை உடமைகளாக, உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக, அதன் ஓர் ஓசையாக காண்பீர்கள். ஓர் கலைப் படைப்பு இன்றியமையாமையால் எழுந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அந்த ஒரு வழி கொண்டே ஒருவர் அதை மதிப்பிட முடியும்.

ஆதலால், என்னால் உங்களுக்கு இதை தவிர வேறு அறிவுரை கூற இயலாது. அதாவது, உங்களுக்கு உள்ளே பயணித்து செல்லுங்கள்; உங்கள் வாழ்கை எவ்வளவு ஆழத்திலிருந்து பாய்கிறது என பாருங்கள், அதன் ஊற்றில், நீங்கள் படைக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையை கண்டடைவீர்கள். அந்த பதிலின் பொருளை புரிந்து கொள்ள முயற்சிக்காமல், உங்களுக்காகவே கொடுக்கப்பட்டது என எண்ணி ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை, நீங்கள் ஒரு கவிஞனாக ஆவதற்கு பணிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிவீர்கள். அதை உங்கள் விதி என ஏற்று வெளியில் இருந்து என்ன வெகுமதி கிடைக்கும் என ஒரு போதும் கேட்காமல், அதன் பாரத்தையும், மேன்மையையும் தாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு படைப்பாளி தானே தன்னுடைய உலகமாக மாற வேண்டும், அவன் தன் தேவைகளை தன்னிடமும், தன்னை ஒப்புக் கொடுத்த இயற்கையிடமும் கண்டறிய வேண்டும்.

ஆனால், உங்களுக்குள்ளும், அதன் தனிமைக்குள்ளும் இறங்கிய பிறகு நீங்கள் கவிஞனாக ஆவதை கைவிட வேண்டி வரலாம் (நான் சொன்னதைப் போல, ஒருவன் தான் தொடர்ந்து எழுதாமல் வாழ்ந்து விட முடியும் என உணர்ந்தால், அவன் எழுதுவதை விட்டு விட வேண்டும்). அப்படி நேர்ந்தாலும், உங்களுடைய இந்த சுயதேடல் பயனற்றது என்றாகிவிடாது. உங்கள் வாழ்கை அங்கிருந்து அதன் பாதைகளைக் கண்டடையும்; அப்பாதைகள் நன்றாகவும், செழுமையானதாகவும், விசாலமானதாகவும் ஆவதற்கு என் வார்த்தைகளில் கூற முடிந்ததை விட அதிகம் பிரார்த்திக்கிறேன்.

வேறென்ன நான் சொல்ல? எல்லாவற்றையும் தகுந்தபடி வலியுறுத்தியிருக்கிறேன் என்று எனக்குப் படுகிறது. முடிவாக ஒரு சிறு அறிவுரையை சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்; அமைதியுடனும், முனைப்புடனும் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருங்கள். அமைதி கூடிய நேரங்களில், உங்கள் நுண்ணுர்ச்சிகள் பதிலளிக்க முடிந்த கேள்விகளுக்கு, வெளியில் பதில் தேடி காத்திருப்பது போல் உங்கள் வளர்ச்சியை பலவந்தமாக தடங்கல் செய்வது வேறொன்றுமில்லை.

உங்கள் கடிதத்தில் பேராசிரியர் ஹோராஸெக்கின் பெயரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அன்புமிக்கவரும், கற்றறிந்தவருமாகிய அம்மனிதரின் மேல் எனக்கு ஆண்டுகள் பல கடந்த பின்னும் நன்றியும், மரியாதையும் கொண்டுள்ளேன். என்னைப் இப்பொழுதும் அவர் நினைவு கூறுகிறார் என்பது அவரின் மேன்மையை காட்டுகிறது, நான் அதை வரவேற்கிறேன், என்ற என் உணர்வுகளை தயவு கூர்ந்து அவருக்கு தெரியப்படுத்துவீர்களா?

நீங்கள் என் பொறுப்பிலாக்கிய கவிதைகளை, உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கும், என் மேல் வைத்த நம்பிக்கைக்கும் மீண்டுமொருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன். என்னால் முடிந்தவரை நேர்மையாக பதிலளித்ததன் மூலம், உங்களுக்கு அந்நியராக இருந்ததைக் காட்டிலும் என் தரத்தை சிறிதேனும் உயர்த்த முயற்சித்திருக்கிறேன்.

என்றும் உண்மையுடன்,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்டம் பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

ராபர்ட் ஸ்பென்சரின் இஸ்லாமிய எதிர்ப்பு புத்தகங்கள்

ஸ்பென்சரின் புத்தகங்களில் ஒன்று தெளிவு. அவர் சில முடிவுகளை எடுத்துவிட்டு அதற்கு ஆதாரங்களைத் தேடுகிறார். இருந்தாலும் நன்றாகத் தேடி இருக்கிறார் என்பதுதான் இந்தப் புத்தகங்களின் ப்ளஸ் பாயின்ட்.

ஸ்பென்சர் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் அவர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்பது தெளிவாகத் தெரிகிறது. 9/11 சம்பவத்துக்குப் பிறகுதான் அவர் தன் எண்ணங்களை எழுத ஆரம்பித்திருக்கிறார். முன் முடிவுகளை எடுத்துவிட்டு பிறகு அதற்கான தரவுகளை தேடி இருக்கிறார் என்று சொல்லலாம். அதற்காக அவரது தரவுகளை நிராகரிப்பதற்கில்லை. அவரது வரிகளுக்கு ஊடாகப் படிக்கும்போது முகம்மது நபி, குரான், அன்றைய அரேபிய சமூகம், இன்றைய இஸ்லாம் பற்றி ஒரு சித்திரம் கிடைக்கிறது. அந்த சித்திரம் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஸ்பென்சரைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது “Did Muhammad Exist?: An Inquiry Into Islam’s Obscure Origins” (2012) என்ற புத்தகத்தைப் பற்றி படித்தபோதுதான். முகம்மது நபி உண்மை மனிதர் இல்லை என்று வாதிடுகிறாராம். முகம்மது நபியைப் பற்றி அன்றைய non-இஸ்லாமியத் தரவுகள் (யூத, Byzantine பேரரசு, பாரசீகப் பேரரசு இத்யாதி) என்ன சொல்கின்றன என்று தேடினாராம், அதிலிருந்து இந்த முடிவுக்கு வந்தாராம். ஆய்வு முறை முக்கியமானது, ஆய்வின் தரம் எப்படியோ யானறியேன்.

Islam Unveiled (2002), Onward Muslim Soldiers (2003), Truth about Mohammad (2006), Stealth Jihad (2008), Complete Infidel’s Guide to Quran (2009) ஆகிய புத்தகங்களைப் படித்தேன். மொத்தமாக எனக்குத் தோன்றுவது:

முகம்மது நபி பெரும் ஆளுமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏறக்குறைய பழங்குடி மனப்பான்மையினரோடு இருந்த அரேபியரை ஒன்றிணைத்தது அபார சாதனை. அப்படி ஒன்றிணைத்து ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்தது சாதாரண மனிதர்களால் ஆவதில்லை. அவர் அந்தக் காலத்துக்கு புரட்சியாளராக இருந்திருக்க வேண்டும். குரானில் சமத்துவம், நீதி, ஏழைகளுக்கு (முஸ்லிம்களுக்கு மட்டும்தான்) உதவ வேண்டும் என்ற கருத்துகள் சொல்லப்பட்டிருப்பது அன்றைய (அரேபிய) சமூகத்தில் ஒரு மாபெரும் மாற்று சிந்தனை.

அவர் பெண்கள், அடிமைகளை நடத்திய விதம் இன்றைய value system படி தவறாக இருக்கலாம். ஆனால் அன்று அவை எல்லாம் ஓரளவு புரட்சிகரமானவையே. அவர் செய்கைகளை விமர்சிக்கும்போது அன்றைய காலகட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். “All Men are Created Equal” என்று எழுதிய ஜெஃபர்சன் அடிமைகளை வைத்துதானே விவசாயம் பார்த்தார்?

குரான் ஒரு விசித்திரமான புத்தகம். முகம்மது என்ன செய்தாலும் அதை சரி என்று ஸ்தாபிக்க அல்லா ஒரு சூத்திரத்தை சொல்லிவிடுகிறார். உதாரணமாக முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவியை அரை நிர்வாணக் கோலத்தில் தற்செயலாகப் பார்த்துவிட்டு அவளை விரும்பினாராம், ஆனால் அன்றைய சமூகக் கட்டுப்பாடுகளின்படி தன் ஆசையை அடக்கிக் கொண்டாராம். அல்லா உடனே உனக்கு வேண்டியதை ஏன் மறுக்கிறாய் என்று ஒரு சூத்திரத்தை வசதியாக சொன்னாராம், வளர்ப்பு மகன் தலாக் செய்துவிட, முகம்மது அவளை மணந்தாராம். சுந்தரமூர்த்தி நாயனாருக்காக சிவன் தூது போனது நினைவு வந்தது. என்ன, நாயனாருக்கு சிவன் முதலில் தோழன், இரண்டாவதாகக் கடவுள். அல்லா அப்படி இல்லை, எல்லாருக்கும் எப்போதும் முழுமுதற்கடவுள். அவர் இவ்வளவு தூரம் இறங்கி வருவானேன் என்று தோன்றுகிறது. இது உண்மையிலேயே அல்லா சொன்ன சூத்திரமா இல்லை நடந்ததை சமாளிக்க யாராவது சேர்த்துவிட்டதா என்று சந்தேகம் வருகிறது.

புனிதமான வெள்ளி அன்று போர் புரியக்கூடாது என்று குரானில் சொல்லப்பட்டிருப்பதை மீறி போர் நடந்திருக்கிறது, உடனே பரவாயில்லை, ஃப்ரீயா விடு என்று ஒரு சூத்திரம். இப்படி சில பல இடங்களில் முன்னால் சொல்லப்படும் சூத்திரத்துக்கு எதிராக நடப்பது இன்னொரு சூத்திரத்தால் சரிக்கட்டப்படுகிறதாம்.

ஓரளவு சாந்தமான, சமாதானமாகப் போகும்படி சொல்லும் சூத்திரங்கள் அனேகமாக மெக்காவில், முகம்மதும் முஸ்லிம்களும் ஓரளவு அபாயமான நிலையில் இருந்தபோது இயற்றப்பட்டிருக்கின்றன. அவைதான் கவித்துவும் மிகுந்தவை என்றும் சொல்கிறார், எனக்கு கவித்துவத்தைப் பற்றி எல்லாம் தெரியாது. மெதினாவுக்குப் போனதும், பலம் அதிகரிக்க அதிகரிக்க சூத்திரங்கள் இன்னும் கடுமையாகின்றன, எதிரிகளை ஒழித்துவிடு என்று சொல்கின்றன. இது சாத்தியமே என்று தோன்றுகிறது. சாம்ராஜ்யக் கவலைகள், போர்கள் எல்லாம் மெதினாவில்தான் ஆரம்பிக்கிறன. மெக்காவில் இருந்த வரை எப்படி தப்பிப்பது என்பதுதான் முஸ்லிம்களின், முகம்மதின் சிந்தனையாக இருந்திருக்கிறது.

ஸ்பென்சர் முஸ்லிம்களின் பெருவாரியானவர்கள் சமாதான விரும்பிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறார். குரானில் சாந்தமாக போ, பிற மதத்தினரை தொந்தரவு செய்யாதே என்று நிறைய இருப்பதை மேற்கோள் காட்டுகிறார். ஆனால் அதற்கு முரணாக போட்டுத் தாக்கு என்றும் நிறைய இருக்கின்றன, அது இன்றைய ஜிஹாதிகளுக்கு பலம் சேர்க்கிறது என்ற யோசிக்க வேண்டிய விஷயத்தை முன் வைக்கிறார். குரானில் இப்படி காஃபிர்களை ஒழி, அடக்கு, இரண்டாம் நிலை குடிமகன்களாக (திம்மிகள்) நடத்து என்றிருப்பதை எடுத்துக் கொண்டு வெறுப்பு மனநிலையை வளர்க்க நிறைய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். எதுக்கு ரிஸ்கு, அதனால் எல்லா முஸ்லிம்களையும் கண்காணிப்போம் என்று அவர் முன் வைக்கும் தீர்வுகள் நாஜிகளை நினைவுபடுத்துகிறது.

முஸ்லிம்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி என்பது குரானில் வலியுறுத்தப்படுகிறது. அன்று முஸ்லிம்களை ஒருங்கிணைக்க, ஒரு பலமான சக்தியாக உருவாக்க, அப்படிப்பட்ட us vs them நிலைப்பாடு தேவைப்பட்டிருக்கும் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்பென்சர் வசதியாக கிருஸ்துவ மதத்தின் அதிகார ரீதியான கொடுமைகளை – inquisition, யூதத் துவேஷம் இத்யாதி – ஆகியவற்றை “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்ற வசனத்தை வைத்து மறைக்கிறார். ஏசுவும் யூதர்கள் vs மற்றவர்கள் என்றுதான் பார்த்தார் என்பது புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களில் தெளிவாகத் தெரியும். ஒரு விதத்தில் பார்த்தால் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த போப், பிஷப்களின் அதிகாரத்துக்கும் இன்றைய முல்லாக்களின் தாக்கத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. வஹாபியிசம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உருவானது என்று இவரே சொல்கிறார். இன்றைக்கு இஸ்லாமில் குரானை வார்த்தைக்கு வார்த்தைக்கு அப்படியே literal ஆக பொருள் கொள்ள வேண்டும் என்ற கருத்து வலிமையாக இருக்கிறது, ஆனால் அது எப்போதும் அப்படி இருந்ததில்லையாம். ஒரு காலத்தில், குறிப்பாக பாக்தாத் காலிஃப்கள் காலத்தில், குரானை மறுவாசிப்பு செய்யும் ஒரு இயக்கம் மிகுந்த தாக்கத்துடன் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். அந்த இயக்கம் வலுவிழந்தது துரதிருஷ்டமே. ஆனால் கலீலியோவை அடக்கிய இயக்கம் மிகுந்த வலு பெற்றிருந்தால் இன்றைக்கு ஐரோப்பா என்ன ஆகி இருக்கும்?

ஸ்பென்சர் மீண்டும் மீண்டும் சுட்டுவது பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட கருத்துகளை கடவுளின் மாறக்கூடாத மொழி என்று கொள்வது ஏற்படுத்தும் சிக்கல்களைத்தான். உண்மையே, கிருஷ்ணன் சொன்ன கீதையை ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் நான் ஹிந்துவே என்பது பரம சவுகரியம்தான்.

ஸ்பென்சர் அதிதீவிர தீர்வுகளை சொல்கிறார். உதாரணமாக அமெரிக்காவில் முஸ்லிம்கள் குடியேறுவது தடுக்கப்பட வேண்டும், எதுக்கு ரிஸ்க்கு என்கிறார்!

ஸ்பென்சரின் அநேக தீர்வுகள் நிராகரிக்கப்பட வேண்டியவையே. ஆனால் அவர் குறிப்பிடும் தரவுகள் முக்கியமானவை, சுவாரசியமானவை. ஒரு விதத்தில் அருண் ஷோரியை நினைவூட்டுகிறார். மிகவும் கவனமாக வாதங்களைத் தொகுத்து தன் bias-ஐ வெளிப்படுத்தி இருக்கிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

ஈ.வெ.ரா முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது

நான் பெரிதும் மதிக்கும் ஆளுமைகளில் ஜெயகாந்தனும் ஒருவர். அவருடைய கருத்து நேர்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அண்ணாதுரைக்கு இரங்கல் கூட்டத்தில் அவர் பேச்சு ஒரு உன்னதம். வாழ்நாள் முழுதும் எவருடைய கருத்துகளை எதிர்த்து வந்தேனோ அவற்றை இது இரங்கல் கூட்டம் என்பதற்காக ஆதரிக்கிறேன் என்று பேச முடியாது என்று உண்மையையும் பேசி அதை நாகரீகமாகவும் பேசியது அற்புதம். வேறு ஒரு விவாதத்தில் ஜெயமோகன் சொன்னது போல கருத்து வேற்றுமையை கறாராக, ஆனால் கடுமை இல்லமால் முன் வைத்திருந்தார். இங்கே இன்னொன்று. ஈ.வெ. ராமசாமியும் இவரும் ஒரு மாநாட்டில் பேசுகிறார்கள். ஈ.வெ.ரா.வை எதிர்த்து தன் கருத்துகளை மிகவும் கச்சிதமாக, ஆனால் நாகரீகம், சபை மரியாதை தவறாமல் எடுத்து வைத்திருக்கிறார்.

ஆரம்பப் பகுதியை மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

இது தமிழ் எழுத்தாளர் மகாநாடு. நான் எழுதுகிறவன். எனவே, எனக்குச் சில பொறுப்புகள் இந்த மாநாட்டில் பேசுகிறவன் என்ற முறையில் மட்டுமல்லாமல் மற்ற இருவரையும் விட அதிகமாக இருப்பதாக நம்புகிறேன். எனக்கு முன்னால் பேசிய பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் தெரிவித்த கருத்துக்களை யெல்லாம் உங்களைப் போல் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதனால் அவரது பேச்சுக்கள் எனக்கும் உடன்பாடானது என்று நினைத்து விட வேண்டாம். அவருக்குப் பிறகு நான் பேச ஆரம்பித்து, அவரது கருத்துக்களால் எனக்கு ஏற்பட்ட சலனங்களை வெளியிடாமல் என்ன காரணம் கொண்டும் மறைத்துக் கொள்வேனேயானால் அதற்கு நான் உடன்பட்டு விட்டேன் என்றே அர்த்தமாகும். பெரியார் வயதிலும் அனுபவத்திலும் என்னைவிட மிகமிக மூத்தவர். இந்தக் காரணத்துக்காக, மரியாதை கருதி, அவர் கருத்துக்களை இங்கே நான் மறுக்காமல் இருக்க வேண்டுமென்று உங்களில் சிலர் நினைக்கலாம். நான் கூட நினைத்தேன். ஆனால், பெரியார் அவர்கள் அப்படி விரும்புகிறவர் அல்ல என்று நான் அறிவேன். பெரியாரிடம் எனக்கு ஒரு விஷயத்தில் முழுதும் உடன்பாடு உண்டு. அது, மனிதனின் சுயமரியாதைகளைச் சிதைக்கிற சகல மரியாதைகளையும் உடைப்பது; அதுவே அவரது தலையாயக் கொள்கை. அப்படிப்பட்ட மரியாதைகளை நீங்கள் எத்தனை நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வந்தபோதிலும் ‘அதனை இடித்துத் தள்ளுங்கள்’ என்று அவர் சொல்கிறார். வேதத்தில் இப்படி எழுதியிருக்கிறதே என்று சொன்னால் கூட, ‘அந்த வேதத்தையே கொளுத்து’ என்கிறார். அதே போல் என் தகப்பனும், பாட்டனும், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த ரிஷிகளூம் சொல்லியிருக்கிறார்களே என்று சொன்னால் கூட, ‘அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று நம்பாதே! உன் அறிவைக் கொண்டு எதையும் எடை போடு’ என்று யாருக்கும் தராத மரியாதையை எனது பகுத்தறிவுக்கு அவர் தருகிறார். இதற்காக இவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனவே, எனது கேள்விகளை, எனது மறுப்புக்களை, எனது நிர்த்தாரணங்களைப் பெரியார் அவர்களிடமிருந்தே நான் தொடங்கலாம் என்று கருதுகிறேன்.

ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் புத்தகத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதி இருக்கிறாராம். நான் excerpt-ஐ தொகுப்புகள் தளத்தில் படித்தேன். நீங்களும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: முழு பேச்சு

ஜெயமோகன் சிறுகதை – “பழைய பாதைகள்”

சகாவு ஹேமசந்திரன் பற்றி ஒரு பிரமாதமான சிறுகதை. சின்ன கோட்டுச்சித்திரத்தின் மூலம் ஒரு பெரிய ஆளுமையை புலப்படுத்தி இருக்கிறார். இந்த மாதிரி நிஜ ஆளுமைகளை வைத்து எழுதுவதில் ஜெயமோகனை மிஞ்ச ஆளில்லை. அறம் சீரிஸ் சிறுகதைகள், இரு கலைஞர்கள் சிறுகதை என்று சொல்லிக் கொண்டே போகலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

புத்தகத்தை வாசிப்பது எப்படி?

விர்ஜினியா வுல்ஃப் (Virginia Woolf) எழுதிய கட்டுரையான “How Should One Read a Book?” என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு. முத்துகிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கிறார்.

புத்தகத்தை வாசிப்பது எப்படி?

முதலில் இந்த தலைப்பின் இறுதியில் உள்ள வினவும் தன்மையை குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கான பதிலை நான் அடைந்தாலும் அந்த பதில் எனக்கு மட்டுமே பொருந்தும், உங்களுக்கு அல்ல. மற்றெவருடைய அறிவுரையையும் ஏற்காமல், தன்னுடைய உள்ளுணர்வை தொடர்ந்து சென்று, தன்னுடைய தர்க்கத்தை உபயோகித்து, தனக்கான முடிவுகளை அடைய வேண்டுமென்பதே வாசிப்பதற்கான அறிவுரையாக ஒருவர் மற்றொருவருக்கு தர முடியும். நமக்குள் இந்த கருத்து சம்மதமென்றால் நான் என்னுடைய கருத்துகளையும் பார்வைகளையும் உங்கள் முன் வைப்பேன், ஏனென்றால் அவை, ஒரு வாசகன் கொள்ள வேண்டிய முக்கிய குணமான உங்கள் வாசிப்பு சுதந்திரத்தை தடுப்பதற்கு அனுமதிக்க மாட்டீர்கள். புத்தகங்களைப் பற்றி அப்படி சட்டங்கள் வகுத்திட முடியுமா என்ன?

வாட்டர்லூவின் யுத்தம் நிச்சயமாக குறிப்பிட்ட ஒரு நாளில்தான் போரிடப்பட்டது: ஆனால் ஹாம்லெட் லியரை விட சிறப்பான நாடகமா? யாராலும் முடிவாக சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் அதற்கான முடிவை அவர்களே அடைய வேண்டும். எத்தனை உயர்ந்த அதிகாரம் படைத்தவராயிருப்பினும், நமது நூலகங்களில் அவர்களை அனுமதித்து, நாம் எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது, நாம் வாசித்த புத்தகங்களின் மதிப்பு எவ்வளவு என்பன போன்றவைகளை முடிவெடுக்க அனுமதிப்பது அவ்விடத்தின் உயிர்மூச்சாகிய சுதந்திர உணர்வை அழிப்பதற்கு சமமாகும். மற்ற எல்லா இடங்களில் நாம் சட்டங்களாலும் பொதுப்போக்காலும் கட்டுப்பட்டிருக்கலாம் – இங்கே அவை எதுவும் கிடையாது.

ஆனால், அச்சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு, தேய்வழக்கு மன்னிக்கப்படுமெனில், நம்மையே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள உத்வேகத்தை பொறுப்பில்லாமல் ஒரு ரோஜா செடிக்கு நீரூற்ற வீட்டின் பாதியில் தண்ணீர் சிந்துவது போல வீணாக்குதல் கூடாது. நாம் அதை மிக சரியாகவும், வலுவோடும் இந்த இடத்திலேயே பழக்கப்படுத்த வேண்டும்.

இதுவே ஒரு நூலகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முதலாவதாக இருக்கக் கூடும். ‘இந்த இடம்’ என்பது எப்படி இருக்கும்? அது பலதரப்பட்டவைகளின் கலவையாகவும், குழப்பங்களின் சங்கமமாகவும் அன்றி வேறொன்றும் இல்லை என தோன்றலாம். கவிதைகள், நாவல்கள், ஞாபகக் குறிப்புகள், வரலாறுகள், அகராதிகள், முக்கியமானவைகளின் பட்டியல்கள் என வெவ்வேறு குணாம்சத்திலும், இனத்திலும், வயதிலும் உள்ள ஆண்களாலும், பெண்களாலும், எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட புத்தகங்கள் அடுக்குகளில் நெருக்கிக் கொண்டும் இடித்துக் கொண்டும் இருக்கும்.

வெளியில் கழுதை கனைத்துக் கொண்டும், பெண்கள் புலியை பற்றி வதந்தி பேசிக்கொண்டும், புல்வெளிகளில் குதிரைகள் ஓடிக் கொண்டுமிருக்கும். எங்கிருந்து நாம் ஆரம்பிப்பது? இங்கிருக்கும் பலதரப்பட்ட குழப்பங்களை ஒழுங்குபடுத்துதன் வழியே, நாம் வாசிப்பவைகளிலிருந்து ஆழ்ந்த பரந்த இன்பத்தை எப்படி அடைய போகிறோம்? எளிமையாக கூற வேண்டுமென்றால், புத்தகங்களை – புனைவு, சுயசரிதம், கவிதை – என பிரித்துக் கொண்டு நாமும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் நமக்கு சரியானதை எது கொடுக்கிறதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தும், மிகச் சிலரே, “புத்தகங்கள் நமக்கு என்ன கொடுக்கும்?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பெரும்பாலும் நாம் கலங்கிய, சலனப்பட்ட மனத்துடன் புத்தகங்களை அணுகி புனைவில் நிஜத்தையும், கவிதையில் பொய்யையும், சரிதையில் புகழ்ச்சியையும், வரலாறில் நம் முன்முடிவுகளையும் ஏற்றுமாறு கேட்கிறோம். இத்தரப்பட்ட முன் எண்ணங்களை நாம் வாசிக்கும் பொழுது விட்டொழித்தோமென்றால் அது போற்றத்தக்க ஆரம்பமாக இருக்கும். எழுத்தாளனுக்கு ஆணையிடாதீர்கள், நீங்கள் அவனாக மாற முயற்சி செய்யுங்கள். அவனுடைய சக படைப்பாளியாகவும் கூட்டாளியாகவும் மாறுங்கள். முதலிலேயே ஈடுபாடற்று வெறும் விமர்சனம் செய்வீர்களென்றால், எதை வாசிக்கிறீர்களோ அதில் கிடைக்கக் கூடிய முழுமையான இன்பத்தை அடைவதை தடுப்பவராக இருப்பீர்கள்.

ஆனால் உங்களுடைய மனதை இயன்றவரை விசாலமாக விரித்தீர்களென்றால், அந்த முதல் வாக்கியங்களின் நெளிவுகளிலிருந்து வெளிப்படும் தொட்டுணரமுடியா நுண்மையுடைய குறிப்புகளும், குறியீடுகளும் இதற்குமுன் நீங்கள் கண்டிராத மனிதன் முன் கொண்டு நிறுத்தும். அதில் உங்களை திளைக்கவிட்டு பரிச்சயப்படுத்திக் கொண்டீர்களென்றால் விரைவிலேயே அந்த எழுத்தாளன் நீங்கள் எதிர்பார்த்ததை விட தீர்க்கமான ஒன்றை அளிக்க விரும்புகிறான் என்பதை கண்டு கொள்வீர்கள். ஒரு நாவலை படிப்பது எப்படி என சிந்தித்தோமென்றால், அதன் முப்பது அத்தியாயங்கள் என்பது, ஒரு கட்டிடத்தைப் போல திடமான, தீர்க்கமான ஒன்றை உருவக்குவதற்கான முயற்சியாகும். ஆனால் சொற்கள் கற்களை போலன்றி தொட்டுணர முடியாதவை; வாசித்தல் என்பது காண்பதை விட சிக்கலானதும், கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளும் செயலாகும். ஒரு நாவலாசிரியன் செயல்படும் விதத்தை விரைவாக புரிந்து கொள்ள சிறந்த வழி வாசிப்பதைக் காட்டிலும் அதை எழுதிப் பார்ப்பதே எனத் தோன்றுகிறது; எழுதும் போது நேரிடும் சறுக்கல்களையும், சிரமங்களையும் வைத்து நீங்களே செய்து பார்க்கும் ஒரு ஆராய்ச்சி.

உங்களுடைய மனதில் பாதிப்பு ஏற்படுத்திய ஒரு சம்பவத்தை நினைவிலிருந்து மீட்டெடுங்கள். தெருவின் ஓரத்தில் இருவர் பேசிக் கொண்டிருக்கையில் நீங்கள் அவர்களை கடந்து சென்றீர்கள். மரம் ஒன்று அதிர்ந்தது; மின் கம்பத்தின் விளக்கு ஆடியது; அவர்களின் பேச்சு கேட்பதற்கு சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது, ஆனால் துயரமிக்கதாகவும் இருந்தது; ஒரு முழு காட்சி; ஒரு முழு பார்வை கோணம் அந்த கணத்தில் உள்ளடங்கி இருந்தது என தோன்றியது.

ஆனால் அதை சொற்களால் மறுகட்டமைப்பு செய்ய முயலுகையில் அது ஆயிரம் முரண்பட்ட காட்சிகளாக உடைந்து போவதை உணர்வீர்கள். அங்கு நடந்ததில் சிலவற்றை விட்டுவிட வேண்டும், வேறு சிலவற்றை அழுத்தமாக சொல்ல வேண்டும்; அந்த முயற்சியின் இறுதியில் அக்கணத்தின் உணர்ச்சியை தொலைத்து விட்டிருப்பீர்கள். உங்களுடைய தெளிவற்ற சிதறிய பக்கங்களிலிருந்து சிறந்த நாவலாசிரியர் ஒருவரின் – டாஃபோ, ஜேன் ஆஸ்டன், தாமஸ் ஹார்டி – ஆரம்ப வரிகளை வாசித்து பாருங்கள். இப்போது உங்களால் அவர்களுடைய மேதைமையை புரிந்து கொள்ள முடியும். முற்றிலும் மாறுபட்ட ஆளுமையின் முன் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை தாண்டி வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

நாவல் வாசித்தல் சிரமமான, சிக்கலான கலையாகும். சிறந்த நாவலாசிரியர் அளிக்கும் முழுவதையும் பெற்று உபயோகப்படுத்திக் கொள்ள உங்களுக்கு நுண்மையான பலதரப்பட்ட பார்வைக் கோணங்களை ஏற்படுத்திக் கொள்ளும் திறமையும், திடமான கற்பனை வளமும் இருக்க வேண்டும்.

“நம்மால் ஒப்பு நோக்கி பார்க்கவே முடியும்” என்ற சொற்றொடர் மூலம் வாசிப்பின் ரகசியமும் அதன் சிக்கல்களும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது.

வாசித்தலின் முதல் நிலையான – காட்சிகளை இயன்ற வரை புரிதலுடன் உள்வாங்கிக் கொள்வதென்பது ஒரு பகுதி மட்டுமே; வாசித்தலின் முழுமையான இன்பத்தை அடைய வேண்டுமெனில் அதனுடன் மற்றொன்றையும் இணைக்க வேண்டும். அது, அந்த எண்ணிலடங்க காட்சிகளின் மேல் நமது ஒட்டு மொத்த பார்வையை வைத்து மதிப்பிட வெண்டும்; நினைவில் கடந்து சென்று கொண்டிருக்கும் காட்சிகளை கொண்டு நிலையான ஒன்றை உருவகிக்க வேண்டும் ஆனால் உடனடியாக அல்ல. வாசித்ததற்கு பின்னால் அதன் பரபரப்பு அடங்க காத்திருங்கள்; மனதில் உருவான முரண்களும் கேள்விகளும் மடியட்டும்; நடந்து, உறங்கி, ரோஜாவின் இதழ்களை கிள்ளி எறிந்து கொண்டோ நேரத்தை கடத்தி காத்திருங்கள். திடீரென நாம் முயலாமலேயே – இத்தரப்பட்ட மாறுதல்களை இயற்கை இவ்விதத்தில் தான் நிகழ்த்தும் – அந்த புத்தகம் நம்மிடன் திரும்பி வரும்; ஆனால் வேறு வடிவில்.

நம் மனதின் பரப்பில் முழு உருவுடன் மிதந்து செல்லும். சொற்றொடர்களாக சேர்த்து வாசித்த புத்தகத்தை விட மிதந்து செல்லும் இந்த புத்தகம் வித்தியாசப்பட்டது. தகவல்கள் தாமாகவே அவற்றின் இடங்களில் பொருந்திக் கொள்ளும். ஆரம்பம் முதல் இறுதி வரை அதன் வடிவத்தை – தொழுவமா, பன்றிக் கொட்டகையா அல்லது தேவாலயமா என – முழுதாக நாம் கண்டு கொள்வோம். இப்பொது அந்த கட்டடத்தை அதை ஒத்த இன்னொன்றுடன் ஒப்பு நோக்க முடியும். ஆனால் இப்படி ஒப்பு நோக்கையில் நம் பார்வை மாறி விடுகிறது. நாம் இனி மேலும் அந்த எழுத்தாளனின் நண்பனல்ல. அவனுடைய மதிப்பீட்டாளர்கள். நாம் எந்த அளவிற்கு நண்பனைப் போல அவர் மேல் இரக்கம் காட்ட இயலாதோ அதே போல் ஒரு நீதிபதியாக தாட்சணியமற்றும் இருக்க இயலாது. அப்படியென்றால் நம் நேரத்தையும், இரக்கத்தையும் வீணடித்த புத்தகங்கள் குற்றவாளி இல்லையென்றாகி விடுமா? நோய்மையையும், சுற்றத்தில் அழுகலையும், பொய்யும், பகட்டும் நிறைந்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் சமூகத்தை கெடுக்க வந்த விரோதிகள் இல்லையா? அவ்வாறே இருக்குமென்றால் நமது மதிப்பீடுகளில் மிகவும் கடுமையாக இருப்போம். ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் துறையின் ஆகச் சிறந்த புத்தகத்துடன் வைத்து மதிப்பிடுவோம் – மிக சமீபத்தியதும், மோசாமானதுமான நாவல்கள் கூட சிறந்த ஆக்கங்களுடன் வைத்து மதிப்பிட வேண்டிய உரிமையை கொண்டுள்ளன.

வாசகனின் கடமையாகிய இந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க தேவைப்படும் கற்பனை வளமும், நுண்ணறிவும், கல்விப்புலத்தின் அளவு எவ்வளவு பெரியது என்றால், அதை ஒரு மனதால் முழுதும் அடைந்திட சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது. அது உண்மை என்றால், அதாவது புத்தகத்தை சரியாக வாசிக்க அரிதாகவே அமையக் கூடிய கற்பனை திறனும், உள்ளார்ந்த பார்வையும், மதிப்பிடும் தன்மையும் கோரப்படுமெனில், இலக்கியம் மிகவும் சிரமமான கலையென்றும், வாழ்நாள் முழுவதும் வாசித்தோமென்றாலும் கூட விமர்சனப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நம்மால் அளிக்க முடியாமல் போகலாம் என உங்களுக்கு புரிய வரலாம். நாம் வாசகர்களாக மட்டுமே இருந்து விட வேண்டும். விமர்சகர்கள் என்ற அரிதானவர்களுக்கு உரிய பெருமையை நாம் உடுத்திக் கொள்ளக் கூடாது. ஆனால், வாசகர்களாக நமக்கே உரிய கடமைகளும், முக்கியத்துவமும் இருக்கின்றன. நாம் உயர்த்தி பிடிக்கும் மதிப்பீடுகளும், தர நிர்ணயங்களும் காற்றில் நழுவிச் சென்று எழுத்தாளர்களின் படைப்புச் சூழலான உயிர் மூச்சின் ஒரு பகுதியாக கலந்து விடும். அச்சில் வெளிவராவிட்டாலும் அதன் பாதிப்பை அவர்களால் உணர முடியும். அது நேர்மையான, தீவிரமான, தனிப்பட்ட முறையில், உண்மையான தாக்கமாக இருக்குமெனில், சரியான விமர்சனம் வருவதற்கு காத்திருக்கும் இடைப்பட்ட வேளையில், அவை மிகுந்த மதிப்புடையதாக இருக்கும். களத்தில் சுடப்படுவதற்காக நடத்திச் செல்லப்படும் விலங்குகளைப் போல புத்தகங்கள் வரிசையாக விமர்சனத்திற்கு வருகையில், ஒரு விமர்சகனுக்கு வெடி மருந்தை அடைத்து, குறி வைத்து சுடுவதற்கு ஒரு வினாடி நேரமே உள்ளது என்ற நிலையில், அவன் புலிகளை முயல்களென்றும், வல்லூறுகளை வீட்டுக் கோழிகளென்றும் முடிவெடுத்தாலோ அல்லது மொத்தமாக குறி தவறி தூரத்து வயலில் அமைதியாக மேய்ந்து கொண்டிருக்கும் பசுவில் தன் தோட்டாவை வீணடித்த விட்டாலோ கூட அவனை மன்னித்து விடலாம். இதைப் போல, பத்திரிக்கைகளில் தவறாக சொல்லப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு எழுத்தாளன் வாசிப்பின்பத்திற்காக மெதுவாகவும், தொழில் முறையாக இல்லாமல் அதே நேரம் தீவிரத்துடனும் வாசிக்கும் மக்களின் தாக்கத்தை உணர்வானென்றால் அது அவனுடைய படைப்பின் தரத்தை உயர்த்தாதா என்ன? இப்படி நம் வழியே புத்தகங்கள் மேலும் வலுவும், செம்மையும், விரிவும் அடையும் என்றால் அதுவே நாம் அடையத்தக்க இலக்காகும்.

நான் சில நேரங்களில் கனவு காண்பதுண்டு, நம் வாழ்க்கையின் தீர்ப்பு உரைக்கும் நாள் விடிகையில், பேரரசர்களும், ஆளுமைகளும், அறிஞர்களும் தங்களுடைய பரிசுகளை – கிரீடங்களும், புகழணிகளும், பெயர் பொறிக்கப்பட்ட பளிங்கு கற்களும் – பெற்றுக் கொள்ள வருகையில், இறைவன் அசூயையுடன் நாம் வருவதைக் கண்டு உரைப்பார், “இதோ பாருங்கள், இவர்களுக்கு பரிசு எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு தருவதற்கு நம்மிடம் இங்கே எதுவுமே இல்லை. அவர்கள் வாசிப்பதை நேசித்தவர்கள்.”


தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டி: ஆங்கிலத்தில் ஒரிஜினல் கட்டுரை

சுஜாதாவின் “தங்க முடிச்சு”

சின்ன முடிச்சுதான், literally. கதையின் மர்மம் எல்லாம் ஜுஜுபிதான். அதை வைத்து ஒரு சுவாரசியமான கதையை எழுதி இருக்கிறார். பலமான அம்சம் சினிமா உலக சித்தரிப்புதான். தயாரிப்பாளர், கதாசிரியர், சின்ன நடிகை, துப்புத் துலக்கும் இன்ஸ்பெக்டர் என்று பல நம்பக் கூடிய பாத்திரங்கள். கரைந்த நிழல்கள் லெவலில் இல்லை என்றாலும் நுட்பமான அவதானிப்பு.

நடிகை மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். அவளைப் பார்க்கப் போகும் கொஞ்சம் அப்பாவியான கதாசிரியன் பயந்து ஓடிவிடுகிறான். போலீசுக்கு தகவல் சொல்லவில்லை. போலீஸ் சுலபமாக அவன் அங்கே போனதைக் கண்டுபிடித்து அவனை போட்டு தாளிக்கிறது. Red Herring என்று சொல்லுவார்கள். ஒரு பாத்திரம் சந்தேகத்துக்குரியதாக இருக்கும், திடீரென்று அந்தப் பாத்திரம் குற்றவாளி இல்லை என்று தெரியும். அப்புறம் அடுத்த பாத்திரம், அடுத்த பாத்திரம் என்று போய்க்கொண்டே இருக்கும். இங்கேயும் அப்படித்தான். தயாரிப்பாளர் மேல் சந்தேகம். அவரும் அந்த நடிகையும் சந்தோஷமாக ஊர் சுற்றும் ஃபோட்டோ எல்லாம் கிடைக்கிறது. அவர் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டிருந்தார், பிரச்சினை ஆகும்போது கொன்றுவிட்டார் என்று சந்தேகிக்கிறார்கள். அவரோ அவள் என் இரண்டாம் மனைவி, என்னிடம் ஃபோட்டோ கூட இல்லை, அந்த ஃபோட்டோவை நீ யாருக்கு வேண்டுமானாலும் கொடு, எனக்கும் ஒரு காப்பி கொடு, அவள் ஞாபகமாக என்னிடம் ஒன்றுமே இல்லை என்கிறார். பிறகு அவரது முதல் மனைவி மேல் சந்தேகம், அப்புறம்… என்று கதை போகிறது. கடைசியில் சுலபமாக முடிச்சு அவிழ்கிறது.

சுவாரசியமான குற்றப் பின்னணி உள்ள நாவல். எனக்குத் தெரிந்து இந்த genre-இல் சுஜாதாவை அடித்துக் கொள்ள இன்னும் தமிழில் யாரும் வரவில்லை. இந்த நாவலிலும் நல்ல பாத்திரப் படைப்பு இருப்பதுதான் சுஜாதாவின் ட்ரேட்மார்க் பலம். படிக்கலாம்.

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை 60 ரூபாய்.

தொடர்புடைய பக்கம்: சுஜாதா பக்கம்

ஆர்.பி. சாரதி மொழிபெயர்த்த பாபர்நாமா – படிக்க விரும்பும் புத்தகம்

இணையவாசிகளுக்கு அனேகமாக ஆர்.பி. சாரதியை தெரிந்திருந்தால் எழுத்தாளர் பா. ராகவனின் அப்பா என்றுதான் தெரிந்திருக்கும். எனக்கோ பா.ரா.வை ஆர்.பி. சாரதி “மாமாவின்” மகன் என்றுதான் தெரியும். ஆர்.பி. சாரதி தலைமை ஆசிரியராக இருந்தவர். என் அப்பாவும் தலைமை ஆசிரியர். இரண்டு பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றி மாற்றி மாறுதல் நடக்கும். ஓரிரு வருஷங்களுக்கு ஒரு முறை குடும்பங்கள் சந்தித்துக் கொள்ளும். பா.ரா. முதல் முறையாக “எழுதிய” கதையை என் அப்பாவை கிணற்றடியில் பிடித்து வைத்துக் கொண்டு சொன்னதை இன்னும் நினைவு கூர்கிறார். அவ்வப்போது ஆர்.பி. சாரதி எழுதிய கவிதைகள் கோகுலம் மாதிரி பத்திரிகைகளில் வரும். அது ஒரு கவர்ச்சி. அவரது அண்ணா சுராஜ் பாரதி கழகம் என்று ஒன்று வைத்துக் கொண்டு அவ்வப்போது பாரதியைப் பற்றி பேசுவார். இவை எல்லாம் சேர்ந்து அவரை மறக்கவிடாமல் செய்துவிட்டன. ஆனால் ஆர்.பி. சாரதியை நான் கடைசியாகப் பார்த்தபோது நான் சிறுவன். இப்போது வழுக்கை. அவருக்கு என்னை நினைவிருக்க நியாயமில்லை.

பாபர்நாமா நான் படிக்க விரும்பும் புத்தகங்களில் ஒன்று. பாபர் என்னை fascinate செய்யும் ஆளுமைகளில் ஒருவர். எங்கோ சமர்கண்டில் பிறந்து, தோல்வி மேல் தோல்வி அடைந்தவர் கடைசியில் ஒரு சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியது எப்படி? அவரது வாழ்க்கையின் authentic record இல்லையா? நல்ல மொழிபெயர்ப்பு எங்கே கிடைக்கும் என்றுதான் தெரியாமல் இருந்தது. இப்போது ஆர்.பி. சாரதி மொழிபெயர்த்திருக்கிறார். அடுத்த முறை இந்தியா போகும்போது…

ஆர்.பி. சாரதி India After Gandhi, மற்றும் இலங்கையின் சரித்திர ஆவணமான மகாவம்சம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறாராம்.

பாபர் நாமா – தமிழில் : ஆர்.பி. சாரதி – வெளியீடு : மதி நிலையம், எண் 2/3 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 86. தொலைபேசி : 044-28111506. மின்னஞ்சல் : mathinilayambooks@gmail.com . விலை ரூ. 400

உடுமலை தளத்தில் புத்தகம் கிடைக்கிறது என்று நண்பர் ராஜ் சந்திரா தகவல் தருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: பா.ரா.வின் பதிவு

விமர்சகர் க.நா.சு. – ஜெயமோகன் பதிவு

நான் விரும்பிப் படித்த முதல் இலக்கிய விமர்சகர் க.நா.சு.தான். அவரது படித்திருக்கிறீர்களா புத்தகம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அவரது விமர்சன அடிப்படைகள் – விமர்சனம் கறாராக இருக்க வேண்டும், படைப்பை மதிப்பிட (ஒப்பிட) வேண்டும், ஆனால் இவை அனைத்தும் தனி மனித ரசனையின் மேல் கட்டப்பட்டவை, அதனால் என் மதிப்பீடும் உங்கள் மதிப்பீடும் ஒத்துப் போக வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, படைப்புகளை விவாதிப்பதன் முக்கிய நோக்கமே அவற்றைப் பரிந்துரைப்பதுதான் – என்பவற்றை நான் முழுமையாக ஏற்கிறேன். எனக்கு ரமணி சந்திரன் சகிக்கவில்லை என்பதற்காக நீங்களும் அவரை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போகவில்லை, உங்கள் பரிந்துரைகள் எனக்கும் என் பரிந்துரைகள் உங்களுக்கு சரிப்படாது, அவ்வளவுதான்.

ஜெயமோகன் க.நா.சு.வின் அணுகுமுறை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதி இருக்கிறார். படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய பதிவு.

ஜெயமோகன் இன்னொரு அணுகுமுறை பற்றி குறிப்பிடுகிறார். சி.சு. செல்லப்பா போன்றவர்கள் ஒரு ஆக்கத்தை எப்படி வகுத்துக் கொள்வது என்பதில் குறியாக இருந்தார்களாம். எனக்கு ஜெயமோகனே கொஞ்சம் அப்படித்தான். ரசனை முக்கியமாக இருந்தாலும் அவரது அணுகுமுறை எப்போதும் வரையறைகள், அந்த வரையறைகளுக்குப் பொருந்தும் படைப்புகள் என்று இருக்கிறது. அந்த அணுகுமுறையை நான் நிராகரிக்கவில்லை, ஆனால் அதை விட எனக்கு ரசனை சார்ந்த அணுகுமுறையே உயர்வானதாகத் தெரிகிறது.

கறாரான மதிப்பீடு பற்றி ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். எல்லாருக்கும் நாஸ்டால்ஜியா உண்டு. முதன் முதலின் வாசிப்பின் சாத்தியங்களைக் காட்டிய சில புத்தகங்கள் மீது எல்லாருக்கும் ஒரு soft corner உண்டு. ஆனால் அவையும் கறாராகவே மதிப்பிடப்பட வேண்டும். நான் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் படிக்க விரும்புகிறேன் என்றால் நான் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் பரிந்துரைக்கிறேன் என்று பொருளில்லை. அது என் தனிப்பட்ட விருப்பம், அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் நான் கறாராகவே மதிப்பிடுவேன், மதிப்பிட வேண்டும். அசோகமித்ரனுக்கு அந்தக் கால எர்ரால் ஃப்ளின் சாகசப் படங்கள், மாண்டிகிறிஸ்டோ, தியாகபூமி போன்ற புத்தகங்கள் பிடித்திருப்பதைப் பார்த்திருக்கலாம். ராஜாம்பாளும் வடுவூரார் புத்தகங்களும் கல்கியின் மனத்தைக் கவர்ந்தவை என்பதை அவர் பதிவு செய்திருக்கிறார். ஆர்.கே. நாராயண் மேரி கோரல்லியின் புத்தகங்களை விரும்பிப் படித்ததை எழுதி இருக்கிறார். ஜெயமோகன் முக்கியமானவை என்று குறிப்பிடும் இலக்கியங்கள் எனக்கு அனேகமாக உன்னதப் படைப்புகளாகத் தெரிந்தாலும், அவர் பரிந்துரைக்கும் (தமிழ்) வணிகப் படைப்புகள் எனக்கு பல சமயம் தேறுவதில்லை. உங்கள் மனதை சிறு வயதில் எப்படியோ தொட்ட புத்தகங்களை தயவு தாட்சணியம் பார்க்காமல் விமர்சிப்பது கஷ்டம்தான், ஆனால் அப்படித்தான் செய்தாக வேண்டும். (எனக்கு தயவு தாட்சணியம் உண்டு. அப்படி இல்லாவிட்டால் என் சிறுகதைகளை நான் பிரசுரித்திருக்கவே மாட்டேன். 🙂 )


தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் பதிவு

நாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்

நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் ஒரு வேளை ஏதாவது தெரிந்திருக்குமோ என்று benefit of doubt கொடுக்கிறார்.

நாஞ்சிலாரின் பேச்சு உணர்வுபூர்வமானது, அவரது இதயத்திலிருந்து எழுகிறது. ஜெயமோகனுடைய பேச்சு அறிவுபூர்வமானது, நமது தர்க்க புத்திக்கு appeal ஆகிறது. இதை குறிப்பாக கவிதைகள் பற்றி அதுவும் கம்பன் பற்றி பேசும்போது கவனிக்கலாம்.

நாஞ்சிலாருக்கு தன்னடக்கம் அதிகம், தனது எழுத்துக்களைப் பற்றி பேச அவர் கொஞ்சம் தயங்குகிறார். இது தனது எழுத்து என்ற பிரக்ஞை அவரிடம் இருக்கிறது. ஜெயமோகனால் தன் எழுத்தை ஒரு வாசகன் மட்டுமே என்ற நிலையில் இருந்து சுலபமாக விவாதிக்கிறார். இதன் corrolary: ஜெயமோகனின் எழுத்தை அவரிடம் சுலபமாக விமரிசிக்க முடிகிறது. கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இது எனக்குப் பிடிக்கவில்லை, இப்படி நீங்கள் எழுதுவதால் ஒரு பயனும் இல்லை என்று அவர் முகத்துக்கு நேராக சொல்லி இருக்கிறேன். அவருக்கு பிரச்சினையே இல்லை. அது ஏன் என்று கேட்டார். என் விளக்கம் எதுவும் அவருக்கு சுவாரசியமாக இல்லை என்பது வேறு விஷயம். 🙂 ஆனால் நாஞ்சில்நாடனிடம் அவரது எழுத்துகளை விமரிசிக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

ஜெயமோகனுக்கு நேரத்தைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை கிடையாது. நாலு மணிக்கு போக வேண்டும் என்றால் ஐந்தாகலாம், ஆறாகலாம், ஏழு கூட ஆகலாம். நாஞ்சிலாருக்கு அது ரொம்ப முக்கியம். நான் நாஞ்சிலாரை சான் ஃபிரான்சிஸ்கோ அழைத்துச் சென்றிருந்தேன். படகில் கோல்டன் கேட் பாலம் அடியில் எல்லாம் போகலாம், அப்படி போக வேண்டும் என்று எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் நாஞ்சிலார் நேரம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்து திரும்பலாம் என்று சொல்லிவிட்டார். ஜெயமோகன் இப்படி சொல்லமாட்டார் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். 🙂

ஜெயமோகன் எல்லாரையும் இழுத்து வைத்துப் பேசுவார். சாதாரணமாக எங்கள் வீடுகளில் கூடும்போதெல்லாம் குழந்தைகள் மாடியில் விளையாடுவார்கள், மனைவிகள் சமையலறையில் பேசிக்கொண்டிருப்பார்கள், ஆண்கள் சோஃபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஜெயமோகனால் எல்லாரையும் கவரும்படி பேச முடிகிறது. இலக்கியத்தில், படிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லாதவர்கள் எல்லாம் கூட ஜெயமோகனின் பேச்சில் கட்டுண்டு கிடந்தார்கள். நாஞ்சிலாருக்கும் அது முடியும்தான், ஆனால் அவரிடம் நீங்கள்தான் போய்ப் பேசவேண்டும்.

நாஞ்சிலாரின் வாழ்க்கையில் ருசி மிகவும் முக்கியம். சாப்பாட்டின் ருசி அறிந்தவர் என்றாலும் ஜெயமோகன் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் ஜெயமோகனிடம் ஒரு அண்ணனிடம் உரிமையோடு பேசுவது போல பேச முடிகிறது. நாஞ்சிலாரிடம் சித்தப்பாக்களிடம் இருக்கும் மரியாதை கொஞ்சம் தடுக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தமிழ் எழுத்தாளர்கள்

ஜப்பானில் அருணா (ஒசாகா)

முதல் பகுதி இங்கே.

நானும் சாச்சிக்கோவும் ஒசாகா நகரத்திற்கு ரயிலில் சென்றோம். மித வேக ரயில் ஆதலால் 1 மணி நேரப் பயணத்தில் 30 கி. மீட்டர்கள் கடக்கலாம். இதே தூரத்திற்கு புல்லட் ரயிலில் ஆகும் நேரம் 15 நிமிடங்கள். ஞாயிறு முன்மாலையானாதால் நல்ல கூட்டம். ஒசாகா நகரனின் ஷின்சாய்பாஷி சந்து மற்றும் நாம்பா எனப்படும் வணிக மையங்கள் இத்தெருக்கள். சந்தென்று அழைக்கப்பட்டாலும் பல கிளை சந்துக்களால் ஒரு கண்ணியில் இணைக்கப்பட்ட நீண்ட தெருக்கள். ஜப்பானில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது வெறும் பிரமை என்று இத்தெருக்களில் அலையும் போது தோன்றும். எங்கு பார்த்தாலும் இளைஞர்/இளைஞிகள், ஆயிரக்கணக்கான கடைகளில் ஜப்பானின் பொருளாதாரத்தை காப்பாற்ற தங்களால் முடிந்ததை வாங்கி கொண்டிருந்தார்கள். நியான் விளம்பர பலகைக் காடு. சமீபத்திய சுனாமியின் விளைவாக மின்சக்தியை சேமிக்கும் ஊக்கம் ஜப்பானில் அதிகரித்திருப்பதால் விளம்பர பலகைகள் முன்பை விட நேரம் பிந்தியே எரியவிடப்படுகிறது. தெருக்களின் மையத்தில் தோதோன்போரி என்றழைக்கப்படும் ஒரு செயற்கை கால்வாயும், கால்வாய் வழியே ஒசாகாவை சுற்றி பார்க்க Water Taxi என அழைக்கப்படும் படகுகளும் உள்ளது. ஒசாகா உணவிற்கும், நடன பான விடுதிகளுக்கும் பெயர் போனவை. அசையும் நண்டு, ஆக்டோபஸ், மற்றும் மீன்களின் பிரம்மாண்ட பிளாஸ்டிக் உருவங்கள் உணவு விடுதிகளின் மேலிருந்து நம்மை கை அசைத்து சாப்பிட அழைக்கின்றது. எல்லா பெரு நகரையும் போல இரவாகியும் தூங்காத நகரமும், ஈசலைப் போல் அதன் வயிற்றிலிருந்து வெளியேறும் மனிதக் கூட்டமும்.

நாங்கள் ஷின்சாய்பாஷியில் சுற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு சந்தை மஞ்சள் டேப்பால் தடுத்து 7-8 போலிசார் பொதுமக்களை வேறு பாதையில் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்களும் சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்தோம். வீட்டில் வந்து டி.வி யை போட்டால் அன்றைய பரபரப்பு செய்தி ஷின்சாய்பாஷியில் நடந்த இரட்டை கொலை. நாங்கள் கடந்து சென்ற 2 மணி நேரங்கள் முன்பு, இரு மாதங்கள் முன் ஜெயிலில் இருந்து விடுதலை ஆன ஒருவன் அத்தெருவிலேயே ஒரு கத்தியை வாங்கி, அவ்வழி சென்ற ஒரு ஆணையும் பெண்ணையும் எல்லோரும் பார்க்க பலமுறை குத்திக் கொன்றிருக்கிறான். வெளி உலகில் வாழ்வது எப்படி என்று தெரியவில்லை அதனால் மீண்டும் சிறை சென்றால் அரசாங்கமே தனக்கு தூக்கு தண்டனை விதிப்பார்கள் என எதிர்பார்த்து இச்செயலை செய்தேன் என்று வாக்குமூலமும் கொடுத்திருக்கிறான். ஏன் இவர்களை தேர்வு செய்தாய் என்ற கேள்விக்கு, காரணம் எல்லாம் ஒன்றும் கிடையாது நான் கொல்ல முடிவு செய்த பொழுது இவர்கள் கடந்து சென்றார்கள் அவ்வளவு தான் என்ற உறைய வைக்கும் பதில். நவீன உலகின் random violence 7000 மைல்கள் தாண்டி தோளுரசிச் செல்லும் வினோதம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அருணா பதிவுகள், பயணங்கள்

தொடர்புள்ள சுட்டிகள்: முதல் பகுதி