ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”

(மீள்பதிவு) ஜெயகாந்தனைப் பொறுத்த வரையில் என் எண்ணங்கள் இம்மி கூட மாறவில்லை. சாதாரணமாக எதையாவது மீள்பதித்தால் சின்னத் திருத்தமாவது இருக்கும். இந்த மீள்பதிவில் ஒரு எழுத்து கூட மாற்றவில்லை.


சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். அதனால்தான் இந்தப் பழைய பதிவைத் தேடிப் பிடித்து மீள்பதித்திருக்கிறேன். ஒரிஜினல் பதிவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து சிறு மாறுதல்களோடு கட் பேஸ்ட் செய்யப்பட்டதுதான். 🙂

ஜெயகாந்தனின் பல நாவல்கள் எனக்குப் பிடித்தமானவைதான். ஆனால் அவற்றின் முடிச்சுகள் இன்றே கூட காலாவதி ஆகிவிட்டனவோ என்றுதான் தோன்றுகிறது. யுகசந்தி மாதிரி சிறுகதைகளை விடுங்கள், சில நேரங்களில் சில மனிதர்களின் நாயகி கங்காவுக்கு என்ன பிரச்சினை? ஒரு நாள் எவனுடனோ படுத்ததெல்லாம் ஒரு விஷயமா? ஆமாம், அது பிரச்சினை என்றை நம்மை ஒத்துக் கொள்ள வைத்து அதிலிருந்து ஏற்படும் விளைவுகளின் மூலம் என்றென்றும் உள்ள மனித உணர்வுகளை நம்மை தரிசிக்க வைப்பதில்தான் ஜெயகாந்தனின் வெற்றி அடங்கி இருக்கிறது. ஆனால் பில்டிங் எத்தனை ஸ்ட்ராங்காக இருந்தபோதிலும் பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்காக இல்லையா?

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும் அப்படித்தான். ரங்காவுக்கும் கல்யாணிக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கும் சரி, மனவிலக்கத்துக்கும் சரி, வலுவான காரணங்கள் எதுவுமில்லை. ஈர்ப்புக்காவது கல்யாணி ஒரு ஆண் துணையைத் தேடுகிறாள், சூழ்நிலை கொஞ்சம் மாறி இருந்தால் அவள் தனது mentor ஆன சாமியுடன் கூட தன் வாழ்வைப் பிணைத்துக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது, ரங்கா மீது ஒன்றும் தெய்வீகக் காதல் இல்லை, ஈர்ப்புதான் என்றும் வாசித்துக் கொள்ளலாம். மனவிலக்கத்துக்கு பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் பாத்திரப் படைப்பு, ரங்காவின் அடிப்படை குணங்களான மனிதநேயம், கனவான் தன்மை, ரங்காவின் குடும்பத்தினரின் பாசம் வெளிப்படும் விதம், கல்யாணியின் மன உறுதி, அவளுடைய நவீனத் தன்மை எல்லாம் நெகிழ வைக்கிறது. கல்யாணியின் விழுமியங்கள் – வைப்பாட்டியாக வாழத் தயாராக இருப்பது – இன்று பழையதாகி விட்டிருக்கலாம். ஆனால் அவள் அன்றும் இன்றும் புதுமைப் பெண்தான். ஆணுக்கு கொஞ்சம் குறைவான சமூக அந்தஸ்து அவளுக்கு தவறாகப் படாமல் இருக்கலாம். ஆனால் அவள் மனதில் ஆணுக்கு உயர்ந்த இடம் என்று எதுவும் இல்லை. ரங்கா அவளுக்குத் துணையாக இருப்பதைப் பற்றி அவளுக்கு எந்த காம்ப்ளெக்சும் இல்லை. ஆனால் ரங்கா விலகிப் போயிருந்தால் அவள் சமாளித்துக் கொண்டிருப்பாள். ரங்காவிடம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு. ஆனால் ரங்காவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உணமையைச் சொல்லப் போனால் ரங்காவிடம்தான் கொஞ்சூண்டு பலவீனம் தெரிகிறது.

மீண்டும் பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கோ வீக்கோ, அதைப் பற்றி கவலைப்படாமல் பில்டிங் எத்தனை சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது என்றுதான் ஜெயகாந்தன் நம்மை உணர வைக்கிறார்.

சிம்பிளான கதை. பெரிய சிக்கல் எதுவும் கிடையாது. கல்யாணி நாடக நடிகை. சினிமாவிற்கு போக விரும்பவில்லை. தனிக்கட்டை. நாடகம்தான் அவள் வாழ்க்கையின் அர்த்தம் என்று சொல்லலாம். நாடக விமர்சனம் செய்யும் ரங்கா மீது ஆசைப்படுகிறாள். ரங்காவிடம் அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை – திருமணம் என்ற அங்கீகாரம் உட்பட. வைப்பாட்டியாக இருக்கவும் ரெடி. ஆனால் ரங்கா அவளை மணந்துகொள்கிறான். ஒரு சராசரி அறுபதுகளின் ஆணாக (இன்றைய ஆணிடமிருந்து பெரிய வித்தியாசம் இல்லை), தான்தான் தலைவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன் மேல் அவளுக்கு “காதல்” இருக்க வேண்டும், தனக்காக அவள் எதையும் இழக்க தயாராக இருக்க வேண்டும், அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவளோ அவனுக்கு சமமான இடத்தை குடும்பத்தில் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். ப்ராக்டிகலான பெண். இத்தனைக்கும் சமையல், துவைத்தல் எல்லாம் அவள் வேலைதான். இதனால் ஏற்படும் பிரிவு, பிணக்கு அவள் நோய்வாய்ப்படும்போது தானாக தீர்ந்துவிடுகிறது.

ஜெயகாந்தன் இதை மிக அழகாக எழுதி இருக்கிறார். ஆண், பெண் இருவரின் நோக்கும் புரிந்து கொள்ளக்கூடியவை. அவர்களது உள்மன சிக்கல்களை மிக நன்றாக வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

ஜெயகாந்தன் கதைகளில் எல்லாரும் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசாத போது அவர்கள் சிந்தனைகள் – அவர்கள் தனக்குத் தானே பேசுவது போல இருக்கும் – பக்கம் பக்கமாக வரும். இந்த நாவலிலும் அப்படித்தான். ஆனால் அது பொருந்தி வருகிறது, அதுதான் விசேஷம். அதுவும் குறிப்பாக அவர்கள் இருவரும் விவாகரத்து வேண்டுமென்று ஒரு வக்கீலிடம் போவார்கள். அந்த வக்கீல் பாத்திரம் அற்புதம்!

அந்தக் காலத்து விழுமியங்களை உண்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தாசி வீட்டில் பிறந்தவள். அவளுக்கு வைப்பாட்டியாக இருப்பது பற்றி தாழ்வுணர்ச்சி எதுவுமில்லை. ஆனால் நாயகன் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்றதும் அவளுக்கு புல்லரிக்கிறது. நாயகனின் நட்பு வட்டாரத்தில் ஒரு நடிகையை வச்சுக்கலாம், ஆனால் “திரும்பி வர வேண்டும்”, இல்லை சொந்த ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டு நடிகையை வச்சிக்க, அப்பத்தான் வீட்டுப் பெண்ணுக்கு பயம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதையே ஒரு அகிலனோ, நா.பா.வோ எழுதி இருந்தால் நானே கிழிகிழி என்று கிழித்திருப்பேன். ஜெயகாந்தனின் திறமை அதை உண்மையான, நடக்கக் கூடிய ஒன்றாக காட்டுவதில் பளிச்சிடுகிறது.

இந்த நாவல் ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், எஸ்.ரா.வின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. ஆனால் ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி இப்படி சொல்கிறார்.

ஜெயகாந்தனின் இரு பிற நாவல்களை குறிப்பிடத்தக்கனவாக கருதுகிறேன் – ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரீஸுக்குப் போ. இவ்விரு நாவல்களிலும் ஜெயகாந்தனின் படைப்பாளுமை கதாபாத்திரங்களையும் கதைக்கருக்களையும் உருவகம் செய்வதில் வெற்றி கண்டுள்ளபோதிலும் இப்படைப்புகள் மெல்ல மெல்ல தேய்ந்து சென்று முக்கியத்துவம் இழப்பதாகவே எனக்கு படுகிறது.

பிற்சேர்க்கை: இந்த நாவல் பற்றி திண்ணை தளத்துக்கு அளித்த பேட்டியில் ஜெயகாந்தன் சொன்னது:

இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். ஒரு பாத்திரம் சிந்திக்கிற பொழுது, தன் அறிவினால் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களாக மாறுகிறார்கள். அவள் ஓரளவிற்குப் படித்தவள். ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்தவள். வாழ்க்கையில் ஆண் துணை வேண்டும் என்று சிந்தித்து செயல்படுகிறாள். அவர்(சாமி) முன்னாலே ப்ரொபோஸ் பண்ணியிருந்தால், அவருடன் கூட அவள் இருந்திருக்கக் கூடும். அவளுக்குப் பத்திரிகை நிருபராய் வரும் ரங்காவிடம் ஒரு ஈடுபாடு. அவள்தான் அவனுக்குக் கடிதம் எழுதி இந்தக் கடிதம் எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் வந்து சந்திக்கவும் என்று எழுதுகிறாள். ஆனால் ரங்கா அவளை பேட்டி காண்பவனாக வருகிறான். போட்டோவிலே கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்பான். போட்டோவிலேயாவது கையெழுத்துப் போடலாமில்லையா? என்று கேட்பான். துர்கனேவ்-இன் ஒரு நாவலில் நாயகி இப்படித் தான் தனக்குப் பிரியமானவனுக்கு எழுதுகிறாள். அதைப் படித்ததன் விளைவு என்று பிறகு கண்டுபிடித்தேன். அவள் கால் விளங்காமலான பிறகு, மனிதாபிமானத்தோடு இணைகிறான். அதன் காரணமாக அவளை விவாகரத்து செய்து விடலாம் என்று சட்டம் சொல்லும் பொழுது அது அவனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. மனிதாபிமானத்திற்கு விரோதமென அவனுக்குத் தோன்றுகிறது. காதலுக்கு அடிப்படை மனிதாபிமானம்தான். அதுதான் இந்த நாவலில் வலியுறுத்தப்படுகிறது.

புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. நண்பர் திருமலைராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். அவருக்கு நன்றி!

லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்து பீம்சிங் இயக்கத்தில் படமாகவும் வந்தது. (வக்கீலாக நாகேஷாம் நாகேஷ்) நான் பார்த்ததில்லை. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், நாகேஷ், ஒய்.ஜி.பி. எல்லாரும் நன்றாக நடித்திருந்தாலும் ரொம்பப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில் இத்தனை வசனம் இருக்கக் கூடாது. இதுதான் பீம்சிங் இயக்கிய கடைசி திரைப்படமாம். சாரதாவின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று. ஆனால் தமிழ் இலக்கியத்தின் முதல் வரிசை நாவல்களில் கூட வைக்கமாட்டேன். முரண்பாடாகத்தான் இருக்கிறதோ?

குறைகள் இருந்தாலும் திரைப்படத்தையும் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயகாந்தன்: பிரம்மோபதேசம்

ஜெயகாந்தனின் புனைவுகள் சென்ற தலைமுறையில் பெரும் கேள்விகளை எழுப்பி இருக்கும். “பழைய” மரபார்ந்த விழுமியங்களும் அன்றைய நவீன விழுமியங்களும் சந்திக்கும் இடம் ஒவ்வொன்றும் அவருக்கு யுகசந்தியாகத் தெரிந்திருக்கிறது. அதை காத்திரமான எழுத்தின் மூலம் விவரித்திருக்கிறார். “கெட்டுப் போனவள்” தலையில் தண்ணீர் ஊற்றி அவளை புனிதமாக்குவது என் அம்மா தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும், நினைத்து நினைத்து பேசுபொருளாக இருந்திருக்கும். என் தலைமுறையினருக்கு அது நன்றாகவே புரிந்திருக்கும், ஆனால் அதிர்ச்சி குறைவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் என் 19 வயதுப் பெண்ணிடம் சில நேரங்களில் சில மனிதர்கள் கதையைச் சொன்னால் ஏதோ ஒரு நாள் யாரோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே தடம் புரண்டுவிட்டதாம் வாட் நான்சென்ஸ் என்றுதான் சொல்லுவாள். “கெட்டுப் போனவள்” என்றால் என்ன என்று அவளுக்கு சரியாகப் புரியுமா என்பதே சந்தேகம்.

யுகசந்தி சிறுகதையின் பாட்டி அன்று நாயகி, புதுமைப்பெண்; இன்று சாதாரணப் பெண்! நாடகம் பார்த்த நடிகையின் கணவன் அன்று ஆயிரத்தில் ஒரு அபூர்வக் கனவான் (gentleman). இன்று ஆயிரத்தோடு ஆயிரத்தொருவன் மட்டுமே. அவருக்கு பெரும் பிரச்சினைகளாத் தெரிந்தவற்றில் பல இன்று சுலபமாகக் கடக்கக் கூடியவை. அவருக்கு பெரும் அகச்சிக்கல்களாகத் தெரிந்தவை பொருளிழந்து கொண்டே போகின்றன.
அவற்றில் மிஞ்சி இருப்பது எழுத்தின் காத்திரம் மட்டுமே, அதை உணர முடியாவிட்டால் விரைவிலேயே காலாவாதி ஆகிவிடுமோ என்று இன்று தோன்றுகிறது. இன்று சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு கிளாசிக். இன்னும் ஐம்பது வருஷங்கள் கழித்து? பிரதாப முதலியார் சரித்திரம் போல வெறும் ஆவண முக்கியத்துவம் உள்ள படைப்பாக குறைந்துவிடுமோ என்று கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கிறது.

பிரம்மோபதேசம் அந்த வரிசையில் உள்ள ஒரு சிறுகதை/குறுநாவல். தூய பிராமணரான சர்மா; வயிற்றுப் பிழைப்புக்காக சமையல் வேலை பார்த்தாலும் மரபார்ந்த ஞானம் உள்ளவர். வடமொழி, தமிழ் இரண்டிலும் பாண்டித்தியம் உள்ளவர். மனுஸ்மிரிதியை கரைத்துக் குடித்தவர், குறிப்பாக பிராமணனின் கடமைகள் பற்றி அதில் உள்ளதை அதை பூரணமாக நம்புபவர். தன் 19 வயது மகள் மைத்ரேயிக்கு உண்மையான பிராமணனான ஒரு மாப்பிள்ளையைத் தேடுகிறார், அது அறுபதுகளிலேயே கிடைப்பது மகா கஷ்டம்.

பிராமணாகப் பிறந்த சேஷாத்ரி சர்மாவின் சமையல் குழுவில் சேர்கிறான். சேஷாத்ரி நாஸ்திகன்; கம்யூனிஸ்ட். சர்மாவுக்கு அவன் பிராமணன் இல்லை, அவரைப் பொறுத்த வரை எந்த நாஸ்திகனும் பிராமணனாக இருக்க முடியாது. ஆனால் சேஷாத்ரியை பிராமணனாக மதிக்காவிட்டாலும் மனிதனாக மதிக்கிறார், மாற்றுக் கருத்து உள்ளவன் என்பதை ஏற்கிறார், இருவருக்கும் பரஸ்பர மரியாதை இருக்கிறது.

சர்மா ஒரு ஓதுவார் பையனை – சதானந்தன் – சந்திக்கிறார். சதானந்தன் சர்மாவைப் போலவே மரபார்ந்த விழுமியங்களில் முழு நம்பிக்கை உள்ளவன். சமஸ்கிருதம் அறியான், ஆனால் தமிழில் பாண்டித்தியம் உள்ளவன். சர்மாவின் கண்ணில் ஓதுவார் குடும்பத்தில் பிறந்த பிராமணன்.

சேஷாத்ரிக்கும் மைத்ரேயிக்கும் காதல் ஏற்படுகிறது. சர்மாவால் அதை ஏற்க முடியவில்லை. மைத்ரேயிக்கும் அவர் பிராமணன் என்று மதிக்காத சேஷாத்ரி மேல் காதல் என்று தெரிகிறது. அவருக்கு துளியும் இஷடமில்லை. ஆனால் மனுஸ்மிருதியில் பருவம் வநது 3 ஆண்டுகளுக்குள் மணம் செய்து வைக்காவிடில் பெண் யாரை தேர்ந்தெடுக்கிறாளோ அவளை பெற்றோர் மறுக்கக் கூடாது என்று இருக்கிறதாம். சேஷாத்ரி அதைக் காட்டியே சர்மாவை மடக்குகிறான். சர்மா மறுக்கவில்லை, ஆனால் மைத்ரேயியை முற்றாக விலக்குகிறார். அதே நேரத்தில் சதானந்தனுக்கு பிரம்மோபதேசம் செய்து – பூணூல் போட்டு – அவனை பிராமணனாக மாற்றுகிறார்.

சர்மாவின் பாத்திரப் படைப்பு பிரமாதம். ஜெயகாந்தனை பிராமணன் என்ற archetype பெரிதும் கவர்ந்திருக்கிறது. இந்தப் புனைவில் மட்டுமல்ல, ஜெயஜெய சங்கர, நான் என்ன சேயட்டும் சொல்லுங்கோ ஆகியவற்றிலும் இந்த archetype-ஐ அற்புதமாகக் கண் முன் கொண்டு வருகிறார். திறமை குறைந்த எழுத்தாளர் கையில் சேஷாத்ரி பாத்திரம் வெறும் ஸ்டீரியோடைப் ஆகி இருக்கலாம். ஆனால் மிக இயல்பான சித்திரமாக கொண்டு வருகிறார். சர்மாவின் விழுமியங்களை ஏறக்குறைய முழுமையாக நிராகரிக்கும் என் போன்றவர்களுக்கே சர்மாவின் கோணம் புரிகிறது, அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வருகிறது. மிக அருமையாக எழுதப்பட்ட கதை. வேறென்ன சொல்ல?

காலாவதி ஆகிவிட்டதோ, ஆகப் போகிறதோ எனக்கென்ன அக்கறை? என் கண்ணில் இது ஜெயகாந்தனின் சாதனைகளில் ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

நாமெல்லாம் பாரதியின் வாரிசுகளே! – ஜெயகாந்தன்

எனக்கு முதன்முதலில் இலக்கியம் என்று அறிமுகமானது பாரதியாரின் கவிதைகள்தான். எது கவிதை, எது கவிதை இல்லை என்று பிற்காலத்தில் எத்தனையோ தீர்மானமான முடிவுகளுக்கு வந்தபோதும், அந்த பரீட்சைக்கெல்லாம் பாரதியாரின் கவிதைகளை உட்படுத்த முடிந்ததில்லை. அதே போல புனைவுகள் என்று எடுத்துக் கொண்டால் அனேகமாக எனக்கு முதன்முதலாக அறிமுகமான இலக்கியவாதி ஜெயகாந்தனாகத்தான் இருக்க வேண்டும்.

ஜெயகாந்தனைத்தான் நான் பாரதியின் நேரடி வாரிசு என்று கருதுகிறேன். நிச்சயமாக பாரதிதாசனை அல்ல. எழுத்தில் அதே உத்வேகம். அதே தார்மீகக் கோபம். அதே பாரதிக்கு இருந்த தாக்கம் ஜெயகாந்தனாலும் ஏற்பட்டது. எழுத்து மட்டுமல்ல, அதே போன்ற ஆளுமையும் கூட. சிங்கங்கள். மீசையில் கூட ஒற்றுமை இருக்கிறது. கஞ்சாவிலும் கூட. 🙂

இந்தக் கட்டுரை ஜெயகாந்தனுக்கு பாரதி மேல் இருந்த பிணைப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தினமணியில் மூன்று நான்கு மாதங்கள் முன் வந்த கட்டுரையாம். ஒரு நண்பர் எனக்கு அனுப்பி இருந்தார். தினமணிக்கு நன்றி! வசதிக்காக கீழே பதித்திருக்கிறேன்.

(வ.உ.சி. நூலகம் வெளியிட்ட ‘மகாகவி பாரதியார் கவிதைகள்‘ நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை)

நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால் பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம், நம்முடைய வாழ்க்கை முறை இதெல்லாம் சரியான அர்த்தத்தில் நவீனம் பெற ஆரம்பித்தன. பாரதி, மகாகவி மட்டுமல்ல, மகா புருஷர்; மகத்தான சமூக சிந்தனாவாதி; சமூக விஞ்ஞானி; இந்த உலகத்தைப் புனருத்தாரணம் செய்ய வந்த சிற்பி.

எங்களுடைய நண்பர்கள் சபையில் நாங்கள் அடிக்கடி ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. ‘பாரதியாரை நீ எப்படி பரிச்சயம் கொண்டாய்? முதலிலே உனக்கு என்ன பாடல் தெரியும்?’ இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்லுகிற பொழுது, எப்படி பாரதி வேரிலேயிருந்து இந்தப் புதிய தலைமுறை பரிணமித்து வந்திருக்கிறது என்கிற சமூக உண்மையை அறிந்து கொள்கிற ஞானம் பெற முடியும்.

இந்த கேள்வியை என்னைக் கேட்டபோது, எனக்கு பதிலே தெரியவில்லை. அறிவறிந்த பருவத்திலிருந்து, நந்தன் கதையிலே ‘காலில் நகம் முளைத்த நாள் முதலாய்’ என்று சொல்வான், அது மாதிரி, ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாடலைக் கேட்கின்ற பருவத்திலேயிருந்து, அவரது பகவத்கீதை உரையைப் பயில்கிற பக்குவம் வரை பாரதி நம்முடைய அறிவில், சிந்தையில், ஊனில், உயிரில், உடலில் கலந்து கலந்து நம்மைக் காலந்தோறும்உ யிர்ப்பித்துக் கொடுப்பதனை உணர்கிற பலரில் நான் ஒருவன்.

நம்மையெல்லாம் – காலம் கடந்து வாழ்கிற, நாடு கடந்து வாழ்கிற பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடக்கிற தமிழர்களையெல்லாம் – ஒன்றிணைக்கிற ஒரு மாபெரும் சக்தி மகாகவி பாரதி என்பதனை அவரது எழுத்துகள் சொல்லும். சைபீரியப் பாலைவனத்திலிருந்து பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே கண்ணீர் வடித்து அழுகின்ற பெண்கள் வரை அவரது உலகப் பார்வை வியாபித்திருந்தது. தமிழர்காள்! மகாகவி பாரதியின் பார்வை படாத இந்தப் பிரபஞ்சத்தை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது.

பாரதியைப் பற்றி நிறைய செய்திகள் உண்டு. அவரது காலம் ரொம்பக் குறுகியது. 39 ஆண்டுதான். நாற்பது வயது கூட ஆகவில்லை. சிலரைப் படிக்கிறபோதுதான் நமது உள்ளத்திலேயிருந்து அந்த சொற்கள் வருகின்றன என்று தோன்றும். எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள். நன்றாக எழுதுகிறார்கள். பாரதியாரை விடக் கூட நன்றாகக் கவிதை எழுதுபவர்கள் இருப்பதாக நினைப்பவர்களும் நிரூபிப்பவர்களும் கூட உண்டு. ஆனால், அவரை மாதிரி காலத்தைப் பிணைக்கிற ஒரு மகத்தான சக்தியாய் யார் இருக்கிறார்கள்? கவிஞன் என்றால் சோம்பித் திரிபவர்கள்; சுருண்டு கிடப்பவர்கள்; குனிந்து நடப்பவர்கள்; நிமிர்ந்து நிற்க முடியாதவர்கள்; அழுக்குப் பிடித்தவர்கள் என்றெல்லாம் இக்காலத்தில் பல கோலங்கள் காட்டுகின்ற பொழுது, பாரதி சற்றுக் குனிந்து நடக்கிறவனைப் பார்த்தால் ‘அடே நிமிர்ந்து நட!’ என்பார்.

வளைந்து கிடக்கிற மனிதனைப் பார்க்கப் பொறாத மனம். ‘பன்றிப் போத்தை சிங்க ஏறாக்குதல் வேண்டும்’ என்கிற மனம். அது மொழி கடந்த மனம். அதனால்தான் அவருக்கு அச்சம் வருகிறது. தான் தமிழன், தான் தமிழன் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சிறப்பெல்லாம் தமிழுக்கு வந்து சேருதல் வேண்டும். ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’. இந்தச் சொல்லுக்குப் பழுதில்லை. இங்கே தமிழிலே என்ன சொற்கள் வந்து கலந்த போதிலும் இந்த சமுத்திரம் எல்லாவற்றையும் இழுத்து ஈர்த்து தனக்குள்ளே வயப்படுத்திக் கொள்ளும்.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்’ என்றால், எல்லாக் கலாசாரமும் வந்து இங்கு கலக்கட்டும், அந்தச் சவாலை இந்த மொழி ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லுகிற தெம்பு இருந்தது. ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று அந்தப் பேதை உரைத்தான் என்றான். அது பேதையர் சொல். இங்கு கூறத் தகாதவர்கள் கூறுகின்ற சொல். ‘கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்’.

என்ன விபரீதம்! ஆன்றோர்களும், சான்றோர்களும், புலவர்களும், கற்றோர்களும் இன்று மெத்தத்தான் கவலைப்படுகிறார்கள் தமிழ் செத்துப் போகுமென்று. அது சாகாத மொழி! ‘என்றுமுள தென்றமிழ்’. ‘என்றும்’ என்றால் மூன்று காலம். இது இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்று சொல்லத் தகுந்த சொரூபம் உடையது.

எனவே, நான் கற்றதெல்லாம் நான் சிந்தித்ததெல்லாம் நான் பெற்றதெல்லாம் பாரதியிடமிருந்துதான். ஒரு வாரிசை இந்த விஷயத்தில் உரியவனே உருவாக்குவதில்லை. அவனுடைய சொற்கள். அவன் வாழ்ந்த வாழ்க்கை. ‘நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்று’. அதனால்தான் பாரதியைப் பற்றி செய்தி பரவுதல் வேண்டும். அது தமிழனைப் பற்றிய செய்தி. தமிழனைப் பற்றிய செய்தி என்றால் அது இந்தியாவின் சிறப்பான சிந்தனையின் சாரம் என்று அர்த்தம்.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பினள்

என்று சொல்வது இந்த தேசத்தை மட்டுமல்ல; இந்த மொழியை. ஆகவே, இந்த மொழியின்பால் அக்கறை கொண்ட அன்பர்கள் வேறு நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வேற்று மொழியிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். வேறு துறைகளிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். இதெல்லாம் பாரதியார் கண்ட கனவு. அவர் கனவுகள் எல்லாம் பலித்திருக்கின்றன. அவர் கண்ட கனவு பலித்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அன்று பாழ்பட்டு நின்றது பாரதம். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற பாரதத்தில் அவர் கனவு கண்டார். இன்றைய பாரதம் உலகுக்கெல்லாம் ஞானதானம் செய்கின்ற நாடாக உயர்ந்திருக்கிறது. பாரதியின் கனவுகள் எல்லாம் பலித்ததன் விளைவு நாம்.

நல்ல சந்ததியினர் பித்ருக்களை மறக்காமல் இருப்பார்கள் என்பது மட்டுமல்ல, பிதுர்க்கடனையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள். திருலோக சீதாராம் என்ற நண்பர், பாரதி புத்திரர். நாம் எல்லாம் பாரதியின் புத்திரர்கள். பாரதியாருக்கு ஆண் வாரிசு கிடையாது. அது திருலோக சீதாராமுக்கு ரொம்ப வருத்தம் தந்தது. பாரதியார் இறந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடனை நிறைவேற்றி வந்தார்.

நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ இருக்கிறதை நம்புங்கள். கடவுள் இல்லை என்று யோசிப்பவர்களுக்குத்தானே நம்பலாமா கூடாதா என்பது. இருக்கிற எல்லாவற்றிலும் ‘எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம்’ என்று எழுத்தாளர்களுக்கெல்லாம் மந்திரம் போல் சொல்லைக் கற்றுத் தந்தவன் மகாகவி பாரதி. எனவே அவன் புகழைப் பாடுவதற்கு நேரம் கிடையாது; காலம் கிடையாது; நாள் கிடையாது.

நமது சுவாசம் பாரதி. நாமெல்லாம் பாரதியின் வாரிசுகள். நான் எப்போதுமே பாரதியின் வாரிசு என்று நானாகவே எண்ணிக் கொண்டிக்கிறேன். எப்படி திருலோக சீதாராம் பிதுர்க்கடன் நிறைவேற்றி தன்னை வாரிசு என்று நினைத்துக் கொண்டாரோ அது போல்.

பாரதியார் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவோம். அவர் என்ன சொன்னார்? தெளிவாகத் தெரிந்து கொள். அப்புறம் இன்னொருவருக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக சொல்லு. தெளிவுறவே அறிந்திடுதல். ‘தெளிவு பெற மொழிந்திடுதல்’. சொல்லுவதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தெளிவு ஏற்பட வேண்டும். புரியாத விஷயங்களெல்லாம் எனக்கு சம்பந்தமல்லாததென்று இந்தக் காலத்திலும் நான் ஒதுக்கிவிடுவேன். அது ரொம்பப் பெரிய விஷயமாக இருக்கலாம். கணக்கு எனக்கு இன்று வரை தெரியாது. ஆனால், இந்தக் கணக்கு இல்லாமல் உலகத்தில் எந்தக் காரியமும் இல்லை என்றறிகிறபோது நான் எதற்குமே லாயக்கற்றவன் என்கிற தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது.

பள்ளிக்கூடத்தில் கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது, மைதானம் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம் என்று சொல்லிக் கொடுத்தால் ‘இது ஏண்டா நமக்கு’ என்று தோன்றும். நான் எங்கே மைதானத்தை அளக்கப் போகிறேன். நிறுத்தவும், அளக்கவும் விற்கவும் வாங்கவும் கணக்கு வேண்டும். நான் ஏன் கணக்கு படிக்க வேண்டும்? ஒரு கணக்கனுக்கு இவையெல்லாம் வேண்டும். ஒரு விஞ்ஞானிக்கு இதெல்லாம் வேண்டும். அப்புறம் எனக்குத் தோன்றியது. அடடே, பாரதியாரும் நம்ம கேசுதான். அவருக்கும் கணக்கு பிடிக்காதாம். ‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்று எழுதி வைப்பாராம். இப்படி பாரதியாரோடு ஒரு ஒற்றுமை கண்டேன்.

அதற்கு மேலே என்னவென்றால் நம்மை மாதிரியே, வெளியே சொல்ல வெட்கம். இளம் வயதில், அரும்பு மீசை கூட முளைக்காத பருவத்தில் ஒன்பது வயதுப் பொண்ணு மேலே காதல்.
பாரதியார் சொல்கிறார்:

ஒன்பதாய பிராயத்த ளென் விழிக்
கோதுகாதை சகுந்தலை யொத்தனள்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்’
என்செய் கேன் ? பழி யென்மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?

என்று பிள்ளைப் பிராயத்தில் நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே போனால் நம்மை எங்கெங்கோ கொண்டு போகிறது. உலகத்தை எல்லாம் காட்டித் தருகிறது ஒரு சிறு புத்தகம். கிறிஸ்துவர்க்கு எப்படி பைபிளோ, இஸ்ஸாமியருக்கு எப்படி குரானோ, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எப்படி தாஸ் காபிடலோ அது போல் தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் பாரதியாருடையது.

அதிலே திருக்குறள் இருக்கிறது. அதில் கம்பர் இருக்கிறார். வள்ளுவர் இருக்கிறார். இவர்களைப் பற்றி எல்லாம் பாரதியார் சொல்லவில்லை என்றால் எனக்கு அவர்கள் மீது மரியாதை வந்திருக்காது. இப்படி தானறிந்த, தன்னை உயர்த்திய அனைத்தையும் தன் பிள்ளைகளுக்கு எப்படிப் பெற்றோர் சொல்வார்களோ அது மாதிரி தமிழ்ச் சந்ததியினருக்கு பாரதியார் தந்து போயிருக்கிறார். தமிழ் பேசுகிற, தமிழிலே சிந்திக்கிற அத்தனை பேருமே பாரதியின் வாரிசுகள்தான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம், ஜெயகாந்தன் பக்கம்

ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”

சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். அதனால்தான் இந்தப் பழைய பதிவைத் தேடிப் பிடித்து மீள்பதித்திருக்கிறேன். ஒரிஜினல் பதிவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து சிறு மாறுதல்களோடு கட் பேஸ்ட் செய்யப்பட்டதுதான். 🙂

ஜெயகாந்தனின் பல நாவல்கள் எனக்குப் பிடித்தமானவைதான். ஆனால் அவற்றின் முடிச்சுகள் இன்றே கூட காலாவதி ஆகிவிட்டனவோ என்றுதான் தோன்றுகிறது. யுகசந்தி மாதிரி சிறுகதைகளை விடுங்கள், சில நேரங்களில் சில மனிதர்களின் நாயகி கங்காவுக்கு என்ன பிரச்சினை? ஒரு நாள் எவனுடனோ படுத்ததெல்லாம் ஒரு விஷயமா? ஆமாம், அது பிரச்சினை என்றை நம்மை ஒத்துக் கொள்ள வைத்து அதிலிருந்து ஏற்படும் விளைவுகளின் மூலம் என்றென்றும் உள்ள மனித உணர்வுகளை நம்மை தரிசிக்க வைப்பதில்தான் ஜெயகாந்தனின் வெற்றி அடங்கி இருக்கிறது. ஆனால் பில்டிங் எத்தனை ஸ்ட்ராங்காக இருந்தபோதிலும் பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்காக இல்லையா?

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும் அப்படித்தான். ரங்காவுக்கும் கல்யாணிக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கும் சரி, மனவிலக்கத்துக்கும் சரி, வலுவான காரணங்கள் எதுவுமில்லை. ஈர்ப்புக்காவது கல்யாணி ஒரு ஆண் துணையைத் தேடுகிறாள், சூழ்நிலை கொஞ்சம் மாறி இருந்தால் அவள் தனது mentor ஆன சாமியுடன் கூட தன் வாழ்வைப் பிணைத்துக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது, ரங்கா மீது ஒன்றும் தெய்வீகக் காதல் இல்லை, ஈர்ப்புதான் என்றும் வாசித்துக் கொள்ளலாம். மனவிலக்கத்துக்கு பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் பாத்திரப் படைப்பு, ரங்காவின் அடிப்படை குணங்களான மனிதநேயம், கனவான் தன்மை, ரங்காவின் குடும்பத்தினரின் பாசம் வெளிப்படும் விதம், கல்யாணியின் மன உறுதி, அவளுடைய நவீனத் தன்மை எல்லாம் நெகிழ வைக்கிறது. கல்யாணியின் விழுமியங்கள் – வைப்பாட்டியாக வாழத் தயாராக இருப்பது – இன்று பழையதாகி விட்டிருக்கலாம். ஆனால் அவள் அன்றும் இன்றும் புதுமைப் பெண்தான். ஆணுக்கு கொஞ்சம் குறைவான சமூக அந்தஸ்து அவளுக்கு தவறாகப் படாமல் இருக்கலாம். ஆனால் அவள் மனதில் ஆணுக்கு உயர்ந்த இடம் என்று எதுவும் இல்லை. ரங்கா அவளுக்குத் துணையாக இருப்பதைப் பற்றி அவளுக்கு எந்த காம்ப்ளெக்சும் இல்லை. ஆனால் ரங்கா விலகிப் போயிருந்தால் அவள் சமாளித்துக் கொண்டிருப்பாள். ரங்காவிடம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு. ஆனால் ரங்காவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உணமையைச் சொல்லப் போனால் ரங்காவிடம்தான் கொஞ்சூண்டு பலவீனம் தெரிகிறது.

மீண்டும் பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கோ வீக்கோ, அதைப் பற்றி கவலைப்படாமல் பில்டிங் எத்தனை சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது என்றுதான் ஜெயகாந்தன் நம்மை உணர வைக்கிறார்.

சிம்பிளான கதை. பெரிய சிக்கல் எதுவும் கிடையாது. கல்யாணி நாடக நடிகை. சினிமாவிற்கு போக விரும்பவில்லை. தனிக்கட்டை. நாடகம்தான் அவள் வாழ்க்கையின் அர்த்தம் என்று சொல்லலாம். நாடக விமர்சனம் செய்யும் ரங்கா மீது ஆசைப்படுகிறாள். ரங்காவிடம் அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை – திருமணம் என்ற அங்கீகாரம் உட்பட. வைப்பாட்டியாக இருக்கவும் ரெடி. ஆனால் ரங்கா அவளை மணந்துகொள்கிறான். ஒரு சராசரி அறுபதுகளின் ஆணாக (இன்றைய ஆணிடமிருந்து பெரிய வித்தியாசம் இல்லை), தான்தான் தலைவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன் மேல் அவளுக்கு “காதல்” இருக்க வேண்டும், தனக்காக அவள் எதையும் இழக்க தயாராக இருக்க வேண்டும், அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். அவளோ அவனுக்கு சமமான இடத்தை குடும்பத்தில் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். ப்ராக்டிகலான பெண். இத்தனைக்கும் சமையல், துவைத்தல் எல்லாம் அவள் வேலைதான். இதனால் ஏற்படும் பிரிவு, பிணக்கு அவள் நோய்வாய்ப்படும்போது தானாக தீர்ந்துவிடுகிறது.

ஜெயகாந்தன் இதை மிக அழகாக எழுதி இருக்கிறார். ஆண், பெண் இருவரின் நோக்கும் புரிந்து கொள்ளக்கூடியவை. அவர்களது உள்மன சிக்கல்களை மிக நன்றாக வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

ஜெயகாந்தன் கதைகளில் எல்லாரும் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசாத போது அவர்கள் சிந்தனைகள் – அவர்கள் தனக்குத் தானே பேசுவது போல இருக்கும் – பக்கம் பக்கமாக வரும். இந்த நாவலிலும் அப்படித்தான். ஆனால் அது பொருந்தி வருகிறது, அதுதான் விசேஷம். அதுவும் குறிப்பாக அவர்கள் இருவரும் விவாகரத்து வேண்டுமென்று ஒரு வக்கீலிடம் போவார்கள். அந்த வக்கீல் பாத்திரம் அற்புதம்!

அந்தக் காலத்து விழுமியங்களை உண்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தாசி வீட்டில் பிறந்தவள். அவளுக்கு வைப்பாட்டியாக இருப்பது பற்றி தாழ்வுணர்ச்சி எதுவுமில்லை. ஆனால் நாயகன் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்றதும் அவளுக்கு புல்லரிக்கிறது. நாயகனின் நட்பு வட்டாரத்தில் ஒரு நடிகையை வச்சுக்கலாம், ஆனால் “திரும்பி வர வேண்டும்”, இல்லை சொந்த ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டு நடிகையை வச்சிக்க, அப்பத்தான் வீட்டுப் பெண்ணுக்கு பயம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதையே ஒரு அகிலனோ, நா.பா.வோ எழுதி இருந்தால் நானே கிழிகிழி என்று கிழித்திருப்பேன். ஜெயகாந்தனின் திறமை அதை உண்மையான, நடக்கக் கூடிய ஒன்றாக காட்டுவதில் பளிச்சிடுகிறது.

இந்த நாவல் ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், எஸ்.ரா.வின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் இடம் பெறவில்லை. ஆனால் ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி இப்படி சொல்கிறார்.

ஜெயகாந்தனின் இரு பிற நாவல்களை குறிப்பிடத்தக்கனவாக கருதுகிறேன் – ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பாரீஸுக்குப் போ. இவ்விரு நாவல்களிலும் ஜெயகாந்தனின் படைப்பாளுமை கதாபாத்திரங்களையும் கதைக்கருக்களையும் உருவகம் செய்வதில் வெற்றி கண்டுள்ளபோதிலும் இப்படைப்புகள் மெல்ல மெல்ல தேய்ந்து சென்று முக்கியத்துவம் இழப்பதாகவே எனக்கு படுகிறது.

பிற்சேர்க்கை: இந்த நாவல் பற்றி திண்ணை தளத்துக்கு அளித்த பேட்டியில் ஜெயகாந்தன் சொன்னது:

இண்டெலெக்சுவல் என்பது படித்தவர்கள் இல்லை. சிந்திக்கிறவர்கள். ஒரு பாத்திரம் சிந்திக்கிற பொழுது, தன் அறிவினால் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களாக மாறுகிறார்கள். அவள் ஓரளவிற்குப் படித்தவள். ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்தவள். வாழ்க்கையில் ஆண் துணை வேண்டும் என்று சிந்தித்து செயல்படுகிறாள். அவர்(சாமி) முன்னாலே ப்ரொபோஸ் பண்ணியிருந்தால், அவருடன் கூட அவள் இருந்திருக்கக் கூடும். அவளுக்குப் பத்திரிகை நிருபராய் வரும் ரங்காவிடம் ஒரு ஈடுபாடு. அவள்தான் அவனுக்குக் கடிதம் எழுதி இந்தக் கடிதம் எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் வந்து சந்திக்கவும் என்று எழுதுகிறாள். ஆனால் ரங்கா அவளை பேட்டி காண்பவனாக வருகிறான். போட்டோவிலே கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்பான். போட்டோவிலேயாவது கையெழுத்துப் போடலாமில்லையா? என்று கேட்பான். துர்கனேவ்-இன் ஒரு நாவலில் நாயகி இப்படித் தான் தனக்குப் பிரியமானவனுக்கு எழுதுகிறாள். அதைப் படித்ததன் விளைவு என்று பிறகு கண்டுபிடித்தேன். அவள் கால் விளங்காமலான பிறகு, மனிதாபிமானத்தோடு இணைகிறான். அதன் காரணமாக அவளை விவாகரத்து செய்து விடலாம் என்று சட்டம் சொல்லும் பொழுது அது அவனுக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. மனிதாபிமானத்திற்கு விரோதமென அவனுக்குத் தோன்றுகிறது. காதலுக்கு அடிப்படை மனிதாபிமானம்தான். அதுதான் இந்த நாவலில் வலியுறுத்தப்படுகிறது.

புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. நண்பர் திருமலைராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். அவருக்கு நன்றி!

லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்து பீம்சிங் இயக்கத்தில் படமாகவும் வந்தது. (வக்கீலாக நாகேஷாம் நாகேஷ்) நான் பார்த்ததில்லை. லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், நாகேஷ், ஒய்.ஜி.பி. எல்லாரும் நன்றாக நடித்திருந்தாலும் ரொம்பப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில் இத்தனை வசனம் இருக்கக் கூடாது. இதுதான் பீம்சிங் இயக்கிய கடைசி திரைப்படமாம். சாரதாவின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று. ஆனால் தமிழ் இலக்கியத்தின் முதல் வரிசை நாவல்களில் கூட வைக்கமாட்டேன். முரண்பாடாகத்தான் இருக்கிறதோ?

குறைகள் இருந்தாலும் திரைப்படத்தையும் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:

  • ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதாவின் திரைப்பட விமர்சனம்
  • ஜெயகாந்தன்+இந்த நாவலைப் பற்றி ஜெயமோகன்
  • ஜெயகாந்தனின் “கங்கை எங்கே போகிறாள்?”

    படிக்கும்போது நிறைவாக இருக்கிறது.

    சில நேரங்களில் சில மனிதர்களின் sequel. குமுதத்தில் தொடர்கதையாக வந்தது.

    கதை ஒன்றும் பெரும் சிக்கல்கள் நிறைந்தது இல்லை. பிரபு நொடிந்து போய் சென்னையை விட்டு ஓடிவிடுகிறான். தற்செயலாக தன் காரில் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்வது அவள் உயிரைக் காப்பாற்றுகிறது. அதில் ஞானோதயம் பெறும் அவன் தன் மேல்தட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு மெக்கானிக்காக தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்குகிறான். எழுத்தாளர் ஆர்கேவி அவனைப் பற்றி ஒரு கதை எழுத கங்கா, பத்மா எல்லாரும் அவனை மீண்டும் கண்டுபிடிக்கிறார்கள். ரிடையர் ஆகும் கங்கா பிரபுவோடு தன் இறுதிக் காலத்தை கங்கைக் கரையில் கழிக்கிறாள்.

    புத்தகம் முழுவதும் தெரிவது அன்பு. ஒருவரை ஒருவர் மாற்ற முயலாத, மாற்ற விரும்பாத, அவரவர் குற்றம் குறைகளோடு ஒருவரை ஒருவர் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் அன்பு. கங்கா, பத்மா, மஞ்சு, கங்காவின் அண்ணா, மன்னி, பிரபு, பிரபுவின் வளர்ப்பு மகன் பாபு என்று எல்லாரும் குறை உள்ளவர்களே. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் சப்போர்ட் செய்கிறார்கள். அது மிக நிறைவாக இருக்கிறது.

    இந்த சீரிசைப் பற்றி ஜெயகாந்தனே சொல்கிறார்:

    ஒரிஜினல் கதை ‘அக்கினிப் பிரவேசம் ‘ தான். அதன் முடிவை மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பிறந்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘. அந்த முடிவு பிடிக்காததால் அது முடிவு வரைக்கும் சென்று பார்ப்பது ‘கங்கை எங்கே போகிறாள் ‘. கங்கையில் போய் விட்டாள் என்றுதான் சொன்னேனே ஒழிய, அவள் இன்னொரு புறம் கரையேறியும் வரலாம். அவள் சுய தன்மையை அவள் இழந்ததாய் எனக்குத் தோன்றவில்லை. ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ இன் duration ஒரு வருஷம் தான். பனிரெண்டு வருஷத்திற்குப் பிறகு ஒரு வருஷம். ‘கங்கை எங்கே போகிறாள் ‘ அவளுடைய அறுபது வயது வரையில் செல்கிறது.

    ஜெயகாந்தனின் பலமே அவர் உருவாக்கும் பாத்திரங்கள்தான். அவரது சாதனைகளில் இன்னொன்று.

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

    தொடர்புடைய பக்கங்கள்:

  • ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி
  • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, ஜெயமோகன்
  • சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
  • சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I

    இது ஒரு மீள்பதிவு (கொஞ்சம் அப்டேட் செய்யப்பட்டது)

    சமீபத்தில் ஜெயமோகன் இந்த நாவலை மறுபார்வைக்குட்படுத்தி இருந்தார். அவரது கோணம் மாறி இருக்கிறது என்று சொன்னார். (ஒரிஜினல் அலசலை இங்கே பார்க்கலாம்.) என் கருத்துக்கள் மாறவில்லை, மீள்பதித்திருக்கிறேன்.

    ஜெயகாந்தன் நிறைய எழுதி இருக்கிறார். ஆனால் அக்னிப்பிரவேசம் சிறுகதை, அதன் தொடர்ச்சியான சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல், அதன் தொடர்ச்சியான கங்கை எங்கே போகிறாள் நாவல் ஆகியவற்றின் தாக்கம், பாப்புலாரிட்டி பிற கதைகளுக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது. அக்னிப்பிரவேசம் அளவுக்கு சர்ச்சைக்கு ஆளான வேறு சிறுகதையை ஜெயகாந்தன் எழுதவில்லை என்று நினைக்கிறேன். (ரிஷிமூலம் போன்றவையும் நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கி இருக்கும்தான்.) சினிமாவாக வந்து வெற்றி பெற்றதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

    அக்னிப்பிரவேசம் சிறுகதை அறுபதுகளில் எழுதப்பட்டது. யாரோ ஊர் பேர் தெரியாதவனுடன் கொஞ்சமாவது விருப்பத்துடன் உறவு கொண்ட பெண்ணை தலையில் தண்ணீர் விட்டு நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் அம்மாக்கள் இன்று கூட கொஞ்சம் அபூர்வம்தான். அன்று மத்திய தர குடும்பங்களுக்கு ஏற்பட்ட ஷாக் மிக அதிகம்.

    சி.நே.சி.ம. அறுபதுகளின் இறுதியிலோ என்னவோ எழுதப்பட்டது. (படமே 75-இல் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.) கங்காவின் வெறுமையில் கதை ஆரம்பிக்கிறது. நீ ஒரு வைப்பாட்டியாகத்தான் இல்லை இல்லை “கான்குபைனாகத்தான்” வாழ முடியும் என்று கங்காவிடம் வெங்கு மாமா சொல்கிறார். அக்னிப்பிரவேசம் கதை பத்திரிகையில் வருகிறது. எதுவுமே பேசாத கங்காவுக்கு அதைக் கண்டு ஆவேசம் வருகிறது. அந்த பத்திரிகையை தன் அம்மாவிடம் தூக்கி எறிகிறாள். அம்மா இப்படி செய்யலாம் என்று தோன்றக்கூட இல்லையே என்று அழுகிறாள். அம்மாவை தேற்றக் கூடிய ஒரே மனிதர் வெங்கு மாமா. அவர் இல்லை நீ செய்ததுதான் சரி, அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவனையே தேடி பிடிச்சு அவன் கூடவே வாழட்டுமே என்கிறார். தன் சாமர்த்தியத்தை நிரூபிக்க கங்கா கதை எழுதிய ஆர்கேவியை பிடித்து, பிரபுவை கண்டுபிடித்துவிடுகிறாள். முதலில் சபலத்தோடு கங்காவை பார்க்க வரும் பிரபு கங்காவுக்கு ஒரு குழந்தை போல தெரிகிறான். பிரபு கங்கா நட்பு வளர்கிறது, ஆனால் அம்மாவுக்கு மானம் போகிறது. கங்காவுடன் சண்டை போடும்போது, நீ மட்டும் என்ன முடியை சிரைச்சுண்டா நிக்கறே என்று கேட்டுவிட, அம்மா அடுத்த நாளே ஆசாரமான பிராமண விதவை மாதிரி மொட்டை அடித்துக் கொண்டு நிற்கிறாள். பிரபு கங்கா நட்பில் பிரபுவின் டீனேஜர் மகள் மஞ்சுவும் இடம் பெறுகிறாள். விளையாட்டாக ஒரு திருமண சம்பந்தப் பேச்சை கங்கா கட் செய்யாமல் இருந்துவிட, அது வளர்ந்து பிரபு கங்காவை வந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறான். கங்காவுக்கு தனக்கு வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் அது பிரபுவுடன்தான் என்று முடிவாகிவிட்டது. தோழி என்ற ஸ்தானத்திலிருந்து உண்மையிலேயே “கான்குபைனாக” தயாராக இருக்கிறாள். பிரபுவின் குற்ற உணர்ச்சி அவளை ஏற்க முடியாமல் தடுக்கிறது. அவர்கள் பிரிவோடு கதை முடிகிறது.

    கதையின் முதல் பலம் பாத்திரங்கள். கங்காவும், பிரபுவும், மஞ்சுவும் நாம் அடிக்கடி சந்திப்பவர்கள் இல்லைதான். ஆனால் உண்மையான நபர்கள். கங்காவின் வாழ்க்கையின் வெறுமை, பிரபு திரும்பியதும் ஒரு பிடிப்பு ஏற்படுவது, பிரபுவின் பலவீனங்கள், அந்த பலவீனங்களை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கும் அவன் குணம், மாறினால் நன்றாக இருக்குமே, மாறலாம் என்று கூட தெரியவில்லையே என்று துடிக்கும் ஒரு பழைய கால பிராமண அம்மா, ஒரு “மாடர்ன்” டீனேஜர் மஞ்சு, அதி புத்திசாலி, ஆனால் எழுபது வயதான பிறகும் சபலம் போகாத வெங்கு மாமா, அவரிடம் அடிபட்டே வாழ்க்கையை கடத்தும் மாமி, ஒரு டிபிகல் அந்த கால அண்ணன் கணேசன், எழுத்தாளர் ஆர்கேவி, என்று சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மிகவும் ரியலிஸ்டிக்காக இருக்கின்றன. அனேகமாக இவர்கள் எல்லாருமே கொஞ்சம் அதீத மனிதர்கள், ஆனால் பொய்ச்சித்திரங்கள் இல்லை.

    கதையின் இரண்டாவது பலம் கதைப் பின்னல். சம்பவங்கள் மிக அருமையாக கோர்க்கப்படுகின்றன. “கற்பிழந்த” கங்கா வெங்கு மாமாவை விலக்குவது, கங்காவுக்கு கான்குபைனாக வாழ்வது தவறாகத் தெரியாத அன்றைய சமுதாய விழுமியங்கள், பிரபு மெதுமெதுவாக தன்னுள் மறைந்து கிடக்கும் நல்ல குணங்களை வெளிப்படுத்துவது, பிரபு தன் பெண் மஞ்சுவின் தலையில் தன் “பாவங்கள்” இறங்கிவிடுமோ என்று பயப்படுவது, அந்த குற்ற உணர்வினால் கங்கா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது, மொட்டை அடித்துக் கொண்டு வரும் அம்மா, அக்னிப்ரவேசம் கதையை நாவலுக்குள் அழகாக பிணைத்திருக்கும் விதம் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன.

    கதையின் மூன்றாவது பலம் அன்றைய சமூக விழுமியங்கள் இயற்கையாக வெளிப்பட்டிருக்கும் விதம். “கற்பு” போச்சா, வாழ்க்கை முடிந்துவிட்டது. வாழ்க்கை வேண்டுமா, அதே “கற்பழித்தவனுக்கு” வைப்பாட்டியாகத்தான் இருக்க முடியும், அதுதான் அதிக பட்சம். இப்படி இன்றைக்கு ரமணி சந்திரன் கூட எழுதமாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அன்று அதுதான் மத்திய தர குடும்பத்தின் வால்யூ சிஸ்டம். அது இன்றைக்கு படிக்கும்போதும் நமக்கு ஆச்சரியமாகத், தவறாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் கங்காவை பெண்ணியம் பேசுபவர்கள் ஒரு ரோல் மாடலாகத்தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்! சும்மா சொல்லக்கூடாது, அப்படி தோன்ற வைப்பதில்தான் ஜெயகாந்தன் கலக்குகிறார்!

    ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது விலாவாரியான அலசலைப் பற்றி அடுத்த பகுதியில். சுருக்கமாக அவரது வார்த்தைகளில்:

    நமது பாலியல் பாவனைகளுக்குப் பலியாகும் பெண்களின் வாழ்வு பற்றிய ஆய்வு எனத் தொடங்கி, சீதையில் தொடங்கும் இந்தியப் பெண்ணின் தனிமையை காட்டி முழுமை பெறுகிறது. இந்த நாவல் தீவிரமே இதன் பலம். 1973ல் பிரசுரமாயிற்று.

    எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

    ஜெயகாந்தனின் ஒரு சிறந்த எழுத்தாளர், ஆனால் இந்தப் புத்தகம் முடிந்து போன ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி. இன்றைக்கே இந்த புத்தகத்தின் விழுமியங்கள் (என்னைப் போன்ற ஒரு அரைக்கிழத்துக்கே) கொஞ்சம் காலாவதியான மாதிரி தெரிகிறது. இன்னும் நூறு வருஷம் கழித்து ஏதோ ஒரு நாள் எவனோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே மாறிவிட்டதாம், வாட் நான்சென்ஸ்? என்றுதான் படிப்பவர்களுக்கு தோன்றும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் நூறு வருஷம் கழித்து இந்த புத்தகம் நினைவு கூரப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதே படித்துவிடுங்கள்!

    பின்குறிப்பு: கங்கை எங்கே போகிறாள் நாவலில் பிரபு திவாலாகிவிடுகிறான். கடைசி காலத்தில் கங்காவும் பிரபுவும் ஒன்றாக platonic relationship என்று வாழ்கிறார்கள். கங்கா கங்கையிலே மூழ்கி இறந்துவிடுவதோடு முடிகிறது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

    தொடர்புடைய பதிவுகள்:
    சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயமோகனின் அலசல்
    சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்

    ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர I

    இத்தனை நாள் எழுதியதில் என்ன புத்தகங்களைப் பற்றி திருப்பி எழுதலாம் என்று புரட்டிப் பார்த்தபோது முதலில் வந்தது நினைவு வந்தது இந்தப் புத்தகம்தான். 2010-இல் எழுதியது, ஒரு எழுத்தைக் கூட இன்றும் மாற்ற வேண்டியதில்லை.


    நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் எப்படி இருக்கும், என் references என்ன என்றெல்லாம் எழுதியாயிற்று. ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.

    என் சிறு வயதில் படித்த நல்ல புத்தகங்களில் “ஜயஜய சங்கர” ஒன்று. இதை படித்தபோது காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது மரியாதை அதிகரித்தது. சமீபத்தில் மறு வாசிப்பு செய்தபோது இது நல்ல புத்தகம் என்பது எனக்கு உறுதிப்பட்டது. காஞ்சி சந்திரசேகரர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு என்பதே தெரிந்திருக்கலாம். எனக்கு அவரைப் பற்றி இருக்கும் இமேஜை இந்தப் புத்தகம் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் அவர் மீது மரியாதையும் அதிகரிக்கிறது.

    பதிவு நீளமாகிவிட்டதால் இரண்டு பகுதிகளாக போட உத்தேசம்.

    கதைக்கு உன்னத மனிதர்கள் என்று பெயர் வைத்திருக்கலாம். கதையில் வரும் பலரும் noble souls, லட்சியவாதிகள். இந்த நாவலே லட்சியவாதத்தை தூக்கிப் பிடிப்பதுதான்.

    கதை நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அதாவது 1975 வாக்கில்.

    நாயகன் ஆதி ஹரிஜன். (இந்த புத்தகம் வரும்போது தலித் என்ற வார்த்தை பரவலாகவில்லை.) சுதந்திரப் போராட்டத்தின்போது மகாலிங்க ஐயர் என்பவர் சேரியில் ஒரு காந்தி ஆசிரமம் நடத்துகிறார். அங்கே படித்து பெரியவனாகும் ஆதி ஐயரின் மகள் சுதந்திர தேவியையே மணந்து கொள்கிறார். ஒரு வளர்ந்த பையன், ஒரு வளர்ந்த பெண், ஒரு சிறு பையன் என்று குடும்பம் இருக்கிறது. மூத்தவன் மகாலிங்கத்துக்கும் ஆதிக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதில் தகராறு. ஆதி அதை பயன்படுத்தக் கூடாது என்கிறார், மகாலிங்கமோ அதை வைத்து வேலையில் சேர்கிறான். தான் உயர்வாக கருதிய/கருதும் விழுமியங்களை இந்தக் காலத்தில் யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல் ஆதிக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

    ஆதியின் சிறு வயது நண்பன் சங்கரன். இன்றைய “சுவாமிகள்” – சங்கராச்சாரியார்தான். சிறு வயதில் ஆற்றோடு போக இருந்த சங்கரனை தொட்டு காப்பாற்றியது ஆதிதான். எப்போதும் இறைவனை ஆதியின் உருவில்தான் பார்க்கிறார் சுவாமிகள். காலம் அவர்களை வேறு வேறு பாதையில் செலுத்திவிட்டாலும் ஆதியை அவர் நினைக்காத நாளில்லை.

    சிங்கராயர் பழைய காலத்து சுதந்திர போராட்ட வீரர். இன்றைக்கு இடிந்துகொண்டிருக்கும் ஒரு வீட்டில் கஷ்டங்களோடு வசிக்கிறார்.

    அவரது ஒரே மகன் சத்தியமூர்த்தி. மகா அறிவாளி. இப்போது ஜெயிலில். எமர்ஜென்சி ஆரம்பிக்கும் முன்பே ஜெயில், அதனால் சித்திரவதையை அனுபவிக்கவில்லை. மேலும் ஜெயிலராக இருக்கும் மூர்த்தி சத்தியமூர்த்தியால் கவரப்படுகிறான், தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறான்.

    ஆதியின் மகன் மகாலிங்கம் இவர்களோடுதான் இருக்கிறான். அவன் இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டதற்கு காரணமே இந்த கூட்டத்துக்கு விவரம் சேகரித்துத் தரத்தான். இவர்களைத் தவிர, உமா என்று போராளிப் பெண், ஆதியின் குடும்பம், மகாலிங்க ஐயரின் அண்ணனும், சுவாமிகளின் பூர்வாசிரம அப்பா – சமஸ்காரங்களில் ஊறியவர் – என்று பல “சின்ன” பாத்திரங்கள்.

    கதை முக்கியமே இல்லை, பாத்திரங்கள்தான் முக்கியம் – இருந்தாலும் கதை என்ன என்று கேட்பவர்களுக்காக: ஆதி தன் சிறு வயது மகனை மீண்டும் வேதம் படிக்க வைத்து உண்மையான பிராமணன் ஆக்குங்கள் என்று சுவாமிகளை கேட்கிறார். சுவாமிகள் முதலில் உன் பெரிய மகனை அணைத்துக் கொள் என்று சொல்கிறார். மகாலிங்கத்தின் காரணங்களை ஆதி புரிந்துகொள்கிறார். அவர், சிங்கராயர் மற்றும் பலர் ஒரு காந்தி ஆசிரமம் நடத்த முன் வருகிறார்கள்.

    படிக்கும்போது ஒரு மாபெரும் ஓவியத்தை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

    சின்ன வயதில் இதை நான்கு தனித்தனி மாத நாவலாக படித்திருக்கிறேன். இதில் வரும் சங்கரன் – சுவாமிகள் – காஞ்சி சந்திரசேகரரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாத்திரம் என்பது படித்தால் சுலபமாக புரிந்துவிடும். ஜெயகாந்தன் சந்திரசேகரரால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு. இதில் வரும் சித்திரம் அவர் மீது மரியாதையை அதிகரிக்கும். அன்று எனக்கும் அதிகரித்தது. இன்றும் அப்படித்தான்.

    சிறு வயது சங்கரனும் ஆதியும் நண்பர்கள். ஆனால் தவறுதலாகக் கூட கை படக்கூடாதென்று இருவரும் கவனமாக இருப்பார்கள். ஆற்றோடு போகும் சங்கரனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து அவனை இழுத்து வரும்போது மட்டுமே அந்த ஆசாரம் உடைகிறது. வயதான பிறகு தன் “சொந்த” கிராமத்துக்கு வரும் சுவாமிகளை ஆதி தொலை தூரத்திலிருந்துதான் பார்க்கிறார். மடத்துக்கு வர முயல்வதில்லை. சுவாமிகள் ஆதியை கூட்டி வரும்படி ஒரு மடத்து காரியக்காரரிடம் சொல்கிறார். அவரிடம் ஆதி தான் ஹரிஜன் என்று சொல்ல, அதை நேராக வந்து சுவாமிகளிடம் அவர் சொல்கிறார். அதற்கு சுவாமிகள் சொல்லும் பதில் – “அவன் ஹரிஜன்னா மத்தவாள்ளாம் சிவஜனோ?” அப்புறம் ஆதி வழக்கமான பரிகாரமான பசுவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு சுவாமிகளைப் பார்க்க வருகிறார். சுவாமிகள் வேறு ஒரு இடத்தில் விதவைகள் கையில் ஒரு குழந்தையோடு வந்தால் தரிசனம் கொடுப்பேன் என்று ஒரு பரிகாரம் சொல்லி இருப்பதாக சொல்கிறார். இதில் வரும் சுவாமிகளின் சித்திரம் உண்மையான ஞானம் நிறைந்த ஒரு மகான், தன் சொந்த நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை உடைக்க விரும்பாத, அவற்றை ஓரளவு வளைக்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு மதத் தலைவர். மாற்றங்கள் தானாக ஏற்பட வேண்டும், அதை ஏற்படுத்த ஒரு மதத் தலைவர் முயலக் கூடாது என்று நினைப்பது போல இருக்கிறது.

    இந்த உன்னத மனிதர்கள் எல்லாருமே பொதுவாக அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தனக்கு உரிமை இருந்தபோதும், அதை பிடுங்குவதில்லை. ஆதி கோவில்களுக்குள் நுழைவதில்லை. என்று அவரை முழு மனதாக ஏற்றுக் கொள்கிறார்களோ அன்று போனால் போதும் என்று இருக்கிறார். ஆதி தன் குடும்பத்தவரிடம் – குறிப்பாக மூத்த மகனிடம் மட்டுமே தன் கருத்தை திணிக்க முயற்சிக்கிறார், மற்ற அனைவரையும் அரவணைத்துப் போகவே முயல்கிறார்.

    ஜெயகாந்தனிடம் இது ஒரு பெரிய மாற்றம். இங்கே தெரியும் ஜெயகாந்தன் அக்னிப்ரவேசத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் தாயை உருவாக்கியவர் இல்லை; யுக சந்தியில் மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பேத்திக்கு துணை போகும் பாட்டியை உருவாக்கியவர் இல்லை. ஆனால் அந்த மனிதர்களிடம் இருக்கும் மனித நேயம், பரஸ்பர அன்பு எல்லாம் இவர்களிடமும் இருக்கிறது. அதனால் இவர்கள் அநியாயங்களை எதிர்த்து, நியாயங்களை ஆதரித்து கூப்பாடு போடவில்லை, they try to work around it. எமர்ஜென்சியை எதிர்த்து மட்டுமே கொஞ்சம் போராடுகிறார்கள். நமக்கு இந்த கதைகளில் தெரிவது போராளி ஜெயகாந்தன் இல்லை, ஒரு mellowed down ஜெயகாந்தன்.

    அருமையான பாத்திரப் படைப்புகளுக்காக இந்த புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். ஜெயகாந்தனின் சாதனைகளில் ஒன்று. கட்டாயம் படித்துப் பாருங்கள்.

    இதற்கு ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற sequel உண்டு.

    இன்னும் ஒரு sequel கூட – ஹர ஹர சங்கர – வந்திருக்கிறதாம். அதை நான் இன்னும் படிக்கவில்லை. நீங்கள் யாராவது படித்திருக்கிறீர்களா?

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

    தொடர்புடைய சுட்டிகள்:

  • ஜய ஜய சங்கர – ஒரு அலசல் பகுதி 2
  • ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரோ நாம்
  • அழியாச்சுடர்கள் தளத்தில் யுகசந்தி சிறுகதை
  • (ஜெயகாந்தனின் பிற படைப்புகள் பற்றி):

  • ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து
  • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்
  • “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்
  • அண்ணாதுரை இறந்தபோது ஜெயகாந்தன் பேசியது

    jeyakanthanஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வரும் புகழுரைகளைக் காணும்போது ஜெயகாந்தன் நினைவுதான் வந்தது. ஒரு பழைய பதிவை இங்கே மீள்பதித்திருக்கிறேன்.


    அண்ணா இறந்தபோது தமிழகமே உண்மையான துக்கத்தில் ஆழ்ந்தது என்றுதான் தோன்றுகிறது. அடக்கி வாசிக்கும் பழக்கம் எல்லாம் தமிழனுக்கு கிடையாது. அண்ணாவோ உண்மையில் கட்சியைத் தாண்டி பலருடைய நன்மதிப்பைப் பெற்றவர்.

    அந்த சமயத்தில் ஜெயகாந்தன் காங்கிரஸ்காரர். காங்கிரசுக்குக்காக அவர், நா.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன், சோ ராமசாமி, கண்ணதாசன் மாதிரி கலை இலக்கிய நாடக உலக பிரபலங்கள் எல்லாம் காங்கிரசின் பிரச்சார பீரங்கிகள். பேச்சாற்றல், இல்லாவிட்டால் சினிமாப் புகழ் எதையாவது வைத்து அவர்களுக்கும் கூட்டம் வந்தது.

    அண்ணா நோய் தாக்கி இறந்து போனார். நாகரிகம் கருதி அது நாள் வரை எதிர்த்தவர்கள் கூட அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். கண்ணதாசன் மாதிரி அண்ணாவுடன் பழகியவர்கள், அண்ணாவின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் காங்கிரஸ் “சார்பாகவே” அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார்கள். ஜெயகாந்தன் அங்கே சிங்கம் போல போயிருக்கிறார். இறந்துவிட்டார் என்பதற்காக இது நாள் வரை நான் அவரைப் பற்றி சொன்னதெல்லாம் வாபஸ் வாங்க முடியாது, அவருடைய வழிமுறைகளுக்கு நான் எப்போதும் எதிரி, அவர் மீது எனக்கு இருந்த விமர்சனங்கள் எல்லாம் அவர் இறந்துவிட்டதால் மறைந்துவிடாது, நாகரீகம் கருதி அவரது குறைகளை இந்த சமயத்தில் பெரிதாக சொல்லாமல் இருப்பது வேறு, அவரிடம் குறையே இல்லை என்று பேசுவது வேறு என்று முழங்கி இருக்கிறார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

    இறந்து போன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப் போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனி மனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

    அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்துவிடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும் மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

    அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

    பாமரத்தனமான நாடகங்களும், மெளடீகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை.

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

    ஜெயகாந்தன் அஞ்சலி தினம்

    பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கிடைத்த இன்னொன்று – ஜெயகாந்தன் இறந்த சமயத்தில் சிலிகன் ஷெல்ஃப் மக்கள் கூடிப் பேசியதின் சுருக்கமான ரிப்போர்ட். நம்ம முத்துகிருஷ்ணன் இதை அப்டேட் செய்கிறேன் என்று சொல்லி இருந்தான், அது இனிமேல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. 🙂 காலம் கடந்துவிட்டாலும் இங்கே பதிவு செய்கிறேன்.

    ராஜனின் ரிப்போர்ட்:

    jeyakanthanசிலிக்கான் ஷெல்ஃபின் இந்த மாத (ஏப்ரல் 2015) புத்தக தினம் ஜெயகாந்தன் அஞ்சலி தினமாக அனுசரிக்கப்பட்டது. ஜெயகாந்தனின் பல்வேறு படைப்புகள் குறித்து கலந்து கொண்ட புத்தக நண்பர்கள் விரிவாக அலசி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பாலாஜி மற்றும் காவேரி கணேஷ் ஜெயகாந்தனின் சில சிறுகதைகளை வாசித்தனர்.

    நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து உரையாற்றிய பாலாஜி ஸ்ரீநிவாசன் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தனது பதின்ம வயதில் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ஜெயகாந்தனின் பல சிறுகதைகளை உதாரணங்களாகக் கொண்டு ஜெயகாந்தன் வாசகர்களிடம் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களை விளக்கினார். குருபீடம், ரிஷிபத்தினி, ரிஷிபுத்திரன் போன்ற சிறுகதைகள் குறித்தும் அவரது நாவல்கள் குறித்தும் விரிவாக வாசித்து அலசினார்.

    சுந்தரேஷ் ஜெயகாந்தனின் ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ” என்ற சிறுகதை குறித்தும் குருபீடம் குறித்தும் பேசினார். காவேரி அந்தரங்கம் புனிதமானது சிறுகதையை வாசித்தார். ஜெயகாந்தனுக்கும் புதுமைப்பித்தன் மற்றும் லா.ச.ரா. படைப்புகளின் ஒற்றுமை வேற்றுமைகள் குறித்தும் அலசப்பட்டன.

    ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அவசியம் படிக்கப் பட வேண்டியவை குறித்த விரிவான பட்டியலை பாலாஜி ஜெயகாந்தனை இது வரை படித்திராத வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பத்மநாபன், ராஜன், பக்ஸ், நித்யா ஆகியோர் தங்களைக் கவர்ந்த ஜெயகாந்தனின் படைப்புகள் குறித்து அலசினார்கள். ஜெயகாந்தனின் சினிமாக்கள் குறித்தும் தமிழக அரசியலில் அவரது தாக்கம் குறித்தும் ஜெயகாந்தனின் ஆன்மீகம் மற்றும் அரசியல் பங்களிப்புகள் குறித்தும் அவரது சர்ச்சைக்குரிய சில பேச்சுக்கள் குறித்தும் விரிவாக விவாதித்தனர். இந்த மாதப் புத்தக தினம் ஜெயகாந்தனுக்கு ஒரு நிறைவான அஞ்சலி நிகழ்ச்சியாக அவரது அனைத்து பங்களிப்புகளும் நினைவு கூரப்பட்டு போற்றப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக நடந்தது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

    ஜெயகாந்தன் – மகராஜன் அருணாசலம் கடிதம்

    ஜெயமோகன் சீரிசுக்கு நடுவே ஒரு digression. ஜெயகாந்தன் அஞ்சலி பதிவுக்கு வாசக நண்பர்களில் ஒருவரான மகராஜன் அருணாசலம் எழுதிய பின்னூட்டம் எனக்குப் பிடித்தமான ஒன்று. அதை இங்கே பதித்திருக்கிறேன்.


    jeyakanthanஉண்மையில் ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என்றவுடன் தோன்றியது சிங்கம் போய்விட்டது என்ற எண்ணம்தான். அவரின் சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது ‘அந்தரங்கம் புனிதமானது’ தான். இன்று கூட நம்மால் ஏற்க இயலாத ஒரு கதைக்கரு. ஆனால் அது ஓர் கனவு. ஒட்டுமொத்த மானுடத்துக்கான கனவு. டேய், இதுதாண்டா நீ போய்ச் சேர வேண்டிய இடம், சேர முடியுமா என்ற அறைகூவல். தலைமுறைகள் தாண்டியாவது சென்று சேர வேண்டும் என்ற அவா.

    அவர் தன் படைப்புகளை விட தன் ஆளுமையாலேயே என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார் என்றே இப்போது உணர்கிறேன். நான் படிக்க ஆரம்பித்த 90களுக்குப முன்பே அவர் எழுதுவதை நிறுத்தியிருந்தார். மேலும் அவரது படைப்புகள் மிக நேரடியாக, உரத்த குரலில் பேசுபவை. அது அவற்றின் தேவையும் கூட. ஆனால் அவரின் மேடைப் பேச்சுக்கள், அவரின் காணொளிகள் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் அலாதி. நம் கம்யூனிஸ்டுகளில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த வகையில் அவர் என்னை ஈர்த்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஆர்வம் வந்தபோது, அப்போதையில் முழுமையாக மூழ்காமல் தடுத்ததில் அவர் பங்கு அதிகம். “சோவியத் யூனியனில் எது இல்லை என நான் உணர்ந்தேன்!! இங்கு நம்மிடம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறதே அந்த ஜனநாயகம் அது அங்கு இல்லை. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது வெடித்து விடும். இப்படித்தான் இங்கே வெடிக்கிறது. ஆனால் நாம் ஒரு போதும் ஜனநாயகத்தால் சோர்வுற மாட்டோம். இந்த ஜனநாயகம் அனைத்து மானிடரையும் வெல்லும். இந்த ஜனநாயகம் அனைத்து சர்வாதிகாரத்தையும் தூள் தூளாக்கி விடும்” என்று முழங்கிய அவர் குரல் எனக்கு என்றும் நம்பிக்கையூட்டும் ஒன்று. ஒவ்வொரு முறை நம் ஜனநாயகத்தால் சோர்வடையும் போதும் இச்சொற்கள் என் காதில் ஒலிக்காமல் போனதில்லை. மேலும் நல்ல சர்வாதிகாரி என்ற கருத்துருவிலும் சிக்கிக் கொள்ள விடுவதில்லை.

    அவரை அவரின் அனைத்து முரண்களோடும் நம்மால் ஏற்றுக் கொள்ள இயன்றதற்கு, இன்றும் கொண்டாடுவதற்கு அவரின் நெஞ்சத் திறமும், நிமிர்வும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நேர்மையும், திமிர்ந்த ஞானச் செருக்குமே காரணங்கள். அவரின் அனைத்து கருத்து மாறுபாடுகளையும் அவர் பாசாங்கில்லாது முன்வைத்தார். இதுதான் நான் என்று நிமிர்ந்து நின்றார்.

    அவரின் உடல் மொழி, அந்த கம்பீரமான குரல், சிரிப்பினூடே பேசுவது, அவர் கொள்ளும் சீற்றம், அவர் தலையசைவு, அவர் கூந்தல் என அனைத்துமே ஓர் சிங்கத்தை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். இவை அவரை சிங்கம் என்று அழைக்கத் தூண்டியதா அல்லது சிங்கம் என்றழைக்கப்பட்டதால் அவர் இவற்றைக் கொண்டாரா! உண்மையில் ஜெயமோகன் சொல்வது போல ஓர் எழுத்தாளரின் மறைவு என்பது ஓர் துவக்கமே. அவரின் படைப்புகள் மீள்வாசிப்பு செய்யப் படும். அவர் இன்னும் நுட்பமாக அணுகப்படக் கூடும். அவர் படைப்புகளூடு நம்மோடு உரையாடவும் முடியும். எனினும் அவர் தன் சிந்தனைகளை கட்டுரைகளாகவாவது எழுதி வைக்காமல் போனது ஒருவிதத்தில் இழப்பே. தன் ஆன்மாவை எழுதியவன் என்றுமே அழிவதில்லை, வெகு சிறிதேயென்றாலும்.


    டேவிட் ராஜேஷ் தன் பின்னூட்டத்தில் “ஜெயகாந்தனது பார்வை வீச்சு தமிழில் அரிது. மரங்களை பாடுபொருளாய் கொண்ட தமிழ் எழுத்தளர்களுள் காடுதனை பாடுபொருளாய்க் கொண்டவரவர்” என்று சொல்லி இருப்பதும் ரொம்பச் சரி!

    வாசக நண்பர், சஹிருதயர் ரெங்கசுப்ரமணியின் பதிவு இங்கே

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்