முத்து காமிக்ஸ் – இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ்/டேவிட், ஜானி நீரோ

(மீள்பதிவு)

Steel Clawரொம்பச் சின்ன வயது – மன்னார்குடியில் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்குப் போயிருந்தபோது பல பெரிய பையன்கள் இரும்புக்கை மாயாவியின் முதல் புத்தகத்துக்காக அடித்து கொண்டபோது இத்துனூண்டு சின்னப் பையன் நானும் கோதாவில் குதித்து எனக்குடா எனக்குடா என்று சண்டை போட்டு வாங்கிப் படித்தது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இரும்புக் கை மாயாவி தோன்றிய முதல் புத்தகம் மட்டுமல்ல, அதுதான் முத்து காமிக்ஸின் முதல் இதழ் என்று நினைக்கிறேன். நான் பார்த்த காமிக்ஸ் முதல் இதழ் அதுதான். பேரே இரும்புக் கை மாயாவிதான் என்று நினைவு. இரண்டாவது இதழ் உறைபனி மர்மம் என்று நினைக்கிறேன். இன்னும் பாம்புத் தீவு, பாதாள நகரம், விண்ணில் மறைந்த விமானங்கள், கொலைக்கரம், யார் அந்த மாயாவி, ஒற்றைக்கண் மர்மம் என்று சில இதழ் பேர்கள் நினைவிருக்கின்றன. பார்த்த முதல் நாளே காமிக்ஸின் சாத்தியங்கள் புரிந்துவிட்டன.

இரும்புக்கை மாயாவிக்கு ஒரு செயற்கைக் கை உண்டு. அதை அவர் மின்சாரம் பாய்ச்சிக் கொண்டால் அவரது உருவம் மறைந்துவிடும். ஒரு விரல் துப்பாக்கியாக, ஒரு விரல் கத்தியாகவும் பயன்படும். பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு பணியாற்றுபவர். ஆங்கில மூலம் – Steel Claw காமிக்ஸ்.

லாரன்ஸ்/டேவிட் அ.கொ.தீ.க என்ற அமைப்பை எதிர்த்துப் போராடும் ஐ.நா. உளவுத்துறை அதிகாரிகள். டேவிட் மிகவும் பலசாலி. காணாமல் போன கடல் என்ற புத்தகம் இன்னும் நினைவிருக்கிறது. பெயர் மறந்துவிட்ட இன்னொரு புத்தகத்தில் அ.கொ.தீ.க.வின் தலைமைக்கு போட்டியிடும் ஏழு பேர் அவர்களை ஒருவர் பின் ஒருவராக கொலை செய்ய முயற்சிப்பார்கள். சமயத்தில் சக போட்டியாளனைத் தோற்கடிக்க லாரன்ஸ்/டேவிட்டை காப்பாற்றவும் காப்பாறுவார்கள்!

ஜானி நீரோ முன்னாள் பிரிட்டிஷ் ஒற்றர். இப்போது தொழிலதிபர். ஆனாலும் அவ்வப்போது உளவுத்துறை அவருக்கு தரும் பணிகளை செய்து முடிப்பார்.

மாயாவி, லாரன்ஸ்/டேவிட், ஜானி நீரோ ஆகியோர்தான் முதல் நாயகர்கள். பிறகு ஃபாண்டம், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, சிஸ்கோ கிட், மாடஸ்டி ப்ளேய்ஸ் என்று நிறைய பேர் வந்தாலும் இந்த மூன்று பேரையும் மறந்ததில்லை. கல்லூரியில் சிவகுருநாதன், சுந்தர நாராயணன் உயிர் நண்பர்களாக ஆனதற்கு அவர்களுக்கும் இந்தப் பித்து இருந்தது ஒரு முக்கிய காரணம். பத்து வருஷத்துக்கு முன்னால் சுந்தரநாராயணன் மாயாவியின் மூலமான Steel Claw பற்றி சொன்னபோது எனக்கு ஒரு காப்பி, சிவகுருவுக்கு ஒரு காப்பி வாங்கினேன். 🙂 பழைய புத்தகக்காரர்கள், நண்பர்கள் யாராவது விற்பதாக இருந்தால் சொல்லுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன்!

எனக்குத்தான் கிறுக்கு என்று பார்த்தால் எழுத்தாளர் எஸ்.ரா.வுக்கும் இருக்கிறது. அவரது இந்தக் கட்டுரையைப் பார்த்து அசந்துவிட்டேன். கட்டாயம் படியுங்கள்!

தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தளம் முத்து காமிக்சைப் பற்றி நிறைய விஷயம் தருகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: காமிக்ஸ்