அஜிதனின் சில சிறுகதைகள்

அஜிதனை அனேகமாக ஜெயமோகனின் மகன் என்றுதான் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவ்ர் தன்னளவில் ஒரு சுவாரசியமான எழுத்தாளராகத் தெரிகிறார். அடர்த்தியான, நுண்விவரங்கள் நிறைந்த எழுத்து பாணி. சில சமயம் இத்தனை விவரம் தேவையா என்று தோன்ற வைத்துவிடுகிறார்.

ஆனால் படுசுமாராக எழுதும் எனக்கே என் கதைகள் பெரிய வெளியாக, பெரிய காட்சித் தொகையாக இருக்கின்றன. என் திறமை குறைவாக இருப்பதால் எதை சொல்ல வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பது சரியாகக் கை வரவில்லை. மனதில் தெரிவதில் நான் பத்து சதவிகிதத்தை எழுதினால் அதிகம், அதுவும் அனேகமாக உரையாடல் மூலம்தான் சொல்ல முடிகிறது. அஜிதனால் மனதில் தெரிவதை பெருமளவு எழுதி விட முடிகிறது என்று நினைக்கிறேன்.

போர்க் ரோஸ்ட் சிறுகதையை எடுத்துக் கொள்ளுங்கள். பன்றிக்கறி சமைப்பதை விலாவாரியாக விவரிக்கிறார். இத்தனை விவரங்கள் இருப்பதால், அவை தன்னளவில் முழுமையாக இருப்பதால் கதையை இறக்கும் நிலையில் இருக்கும் பாட்டியின் தீனி ஆசை என்றே கூட படித்துவிடலாம். ஆனால் லேய் உந்தாத்தா இருக்காம்லா என்ற அரை வரிதான் கதை. குறைந்த பட்சம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. அப்படிப் படித்தால் கதை வேறு ஒரு தளத்துக்குப் போகிறது. பெரிய லட்டில் புதைந்திருக்கும் ஒரு முந்திரியை தவற விடுவது போல இந்த வரியை தவற விடலாம். அதனால்தான் கொஞ்சம் அடர்த்தி குறைவாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

1134 கப்பல்கள் சிறந்த சிறுகதை. சிறுவனின் வளர்ச்சி என்று சுருக்கிவிடலாம். ஆனால் நுண்விவரங்கள், விவரிப்புகள், கப்பலோட்டிய சிறுவன், ஆசிரியையை வெட்டுவேன் என்று கிளம்பும் அப்பா, நாய் குட்டன், இட்லிப்பூவிலிருந்து தேன் குடிப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமாக தங்கை பாப்பு – கலக்கிவிட்டார். வாழ்க! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நங்கேலி என் கண்ணில் எளிமையான கதை. ஆனால் ஒரு தொன்மத்தின் கவர்ச்சி இருக்கிறது. ராதிகாவின் வேர்கள் என்னவாக இருக்கும் என்று அஜிதன் கோடி காட்டி இருப்பதுதான் எனக்கு இதை சிறுகதை ஆக்குகிறது.

மூன்று குறுங்கதைகளில் இரண்டாவது எட்கர் ஆலன் போவை நினைவுபடுத்தியது.

நிலைவிழி சிறுகதையில் இறக்கப் போகும் பெண்ணின் மன ஓட்டங்களை நன்றாக சித்தரிக்கிறார். ஆனால் கதையின்  முத்தாய்ப்பு எனக்கு கதையோடு ஒட்டாத மாதிரி இருந்தது.

அஜிதனை நான் பார்த்ததில்லை. என்றாவது சந்திக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்: