அஞ்சலி: சோலை சுந்தரப்பெருமாள்

தஞ்சை மாவட்டத்தில் நில உடமையாளர்களின் அடக்குமுறைகளை ஆவணப்படுத்திய சோலை சுந்தரப்பெருமாள் மறைந்தார்.

சுந்தரப் பெருமாளின் புத்தகங்களில் இலக்கிய நயமோ, மானுட தரிசனமோ பெரிதாக வெளிப்படுவதில்லை. அவருடைய முக்கியத்துவம் அவரது புத்தகங்களை ஏறக்குறைய ஆவணமாகவே பார்க்க முடியும் என்பதுதான். உதாரணமாக அவரது தப்பாட்டம் நாவலில் பள்ளர் பறையர்களுக்காக உதவும் கதாபாத்திரம் “உயர்ஜாதிக்காரர்”, மூப்பர் ஜாதியினர். அவரது புத்தகங்களின் நம்பகத்தன்மை இந்த மாதிரி உண்மையான சித்திரங்களால் அதிகரிக்கிறது. அவரது நாவல்களில் மெய்நிகர் சித்திரம் கிடைத்துவிடுகிறது.

கீழ்வெண்மணியில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அதைப் பற்றி எனக்குத் தெரிந்து மூன்றே மூன்று நாவல்கள்தான் எழுதப்பட்டிருக்கின்றன. குருதிப்புனல் இ.பா.வுக்கு சாஹித்ய அகடமி பரிசு பெற்றுத் தந்தது. ஆனால் அது இலக்கியமாகவும் சரி, ஆவணமாகவும் சரி எனக்கு உயர்ந்த இடத்தில் இல்லை. கீழ்வெண்மணியைப் பற்றி எழுதியதுதான் பெரிய விஷயமாகத் தெரிந்தது, தெரிகிறது. பாட்டாளி என்பவர் கீழைத்தீ என்ற நாவலை எழுதி இருக்கிறாராம், நான் படித்ததில்லை.

சோலை சுந்தரப்பெருமாளின் செந்நெல் எனக்கு முக்கியமான இடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இலக்கியமாக உயர்ந்த இடத்தில் இல்லைதான். ஆனால் முக்கியமான ஆவணம். நம்பகத்தன்மை அதிகம். எரிக்கப்பட்ட ஒருவரின் தம்பியோ, பக்கத்து வீட்டுக்காரரோ நேரில் பார்த்து அனுபவித்ததை எழுதியதைப் போல இருக்கும்.

தப்பாட்டம், செந்நெல் இரண்டு நாவல்களையும் பரிந்துரைக்கிறேன். நான் படிக்க விரும்பும் புத்தகம் தாண்டவபுரம். ஞானசம்பந்தர் தொன்மத்தை மறுவாசிப்பு செய்திருக்கிறாராம்.

அவரது பெயரிலிருந்து அவர் சுந்தரப்பெருமாள் கோவில் ஊர்க்காரன் என்று யூகிக்கிறேன். சுந்தரப்பெருமாள் கோவில் காலம் சென்ற கருப்பையா மூப்பனாரின் சொந்த ஊரும் கூட. மூப்பனார் குடும்பம் அங்கே பல தலைமுறைகளாக பெரும் பண்ணையார்கள்.

என்னைப் பொறுத்த வரை எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பது அவரது புத்தகங்களைப் பற்றி எழுதுவதுதான். அவரது தப்பாட்டம் என்ற நாவலைப் பற்றி முன்பு எழுதியதை மீள்பதித்திருக்கிறேன்.


தப்பாட்டம் 2002-இல் தஞ்சை மாவட்ட ஜாதீயப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது.

தஞ்சாவூருக்கு அருகே ஒரு சின்ன கிராமம்தான் கதை நடக்கும் இடம். ஊரில் பெரிய மனிதர்கள் மூப்ப ஜாதியினர். அடுத்த இடத்தில் அம்பலக்காரர்கள். பள்ளர், பறையர், சக்கிலியர் மூன்று ஜாதியினரும் உண்டு. மூப்பர்களுக்கும் அம்பலக்காரர்களுக்கும் கொஞ்சம் புகைச்சல் உண்டென்றாலும் மற்றவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இரட்டைக் குவளை டீக்கடை மாதிரி விஷயங்கள் சர்வசாதாரணம். சுந்தரமூர்த்தி வாத்தியார் பிறப்பால் மூப்பர் என்றாலும் கம்யூனிஸ்ட். ஜாதி வித்தியாசம் ஒழியவும், கம்யூனிஸ்ட் கட்சி வளரவும், எல்லாருக்கும் – மூப்பரிலிருந்து சக்கிலியர் வரை எல்லா ஜாதிக் குழந்தைகளுக்கும் உயிரை விட்டு படிப்பு சொல்லித் தருபவர். அவரால் பல மூப்பர் வீட்டுக் குழந்தைகள் பயன் அடைந்திருப்பதால் அவர் மேல் ஊர் பெரிய மனிதர்களுக்கு இருக்கும் எரிச்சல் அவ்வப்போது நொந்து கொள்வதற்கு மேல் போவதில்லை. மெதுமெதுவாக சின்னச் சின்ன தகராறுகள் மூலம் “கீழ்” ஜாதியினர் அடக்குமுறையை எதிர்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வளர்கிறது. அதை மும்முரமாக எதிர்க்கும் “மேல்” ஜாதியினர்.

கதை முக்கியமில்லை. கதை காட்டும் சித்திரம்தான் முக்கியம். ஒரு மெய்நிகர் வாசக அனுபவத்தைத் தருகிறார். ஆனால் அவரால் மனித மனதின் ஆழத்துக்குள் போக முடியவில்லை. மேலோட்டமாகத்தான் அவன் அடக்குமுறை செய்பவன், இவன் அடக்கப்படுபவன் என்ற அளவில்தான் எழுத முடிகிறது. இது புறவயமான உலகம் பற்றிய நாவல் மட்டுமே. வரவர எல்லா நாவலிலும் அகவயமான உலகம் தெரியாவிட்டால் திருப்தியாக இல்லை. சில சமயம் அதைத் தாண்ட முயற்சித்தாலும் – உதாரணமாக, தப்பு வாத்தியத்தை, அதை வாசிப்பதை எதிர்ப்பின் குறியீடாக காட்ட முயற்சிக்கிறார், அதெல்லாம் சரியாக வரவில்லை. நாவலின் பலமே சமீப காலத்தில் கூட, அனேகமாக இன்று கூட, நமக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இடங்களில் கூட, இப்படிப்பட்ட ஜாதீய வன்முறைகள் நடப்பதை தோலுரித்துக் காட்டுவதுதான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பெருமாளின் இன்னொரு புத்தகமான பெருந்திணைக்கும் ஆவண முக்கியத்துவம்தான். ஒரு பண்ணை, அதன் பறைய ஜாதி உழைப்பாளிகள். பல ஜாதி முறைப் பழக்கங்களை ஆவணப்படுத்துகிறார். ஆனால் நயம் இல்லாத புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

குறுந்தொகை 3

குறுந்தொகை 2 பிரபலமான “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி“. சிவனே மதுரை கோவிலில் இருந்து இறங்கி வந்து பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று பாடி பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாராம். நக்கீரர் சிவன் சொல்வது தவறு என்று வாதாடினாராம். எனக்கு இது கவிதையாகவே தெரிவதில்லை. சின்ன வயதில் கூட. பள்ளிப் பருவத்தில் சிவன் இப்படி ஒரு கவிதையை எழுதியதற்கு பதிலாக கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாம் என்று நக்கலடிப்பேன்.

முழுமைக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

– இறையனார், குறிஞ்சித்திணை.

எனக்கு அடுத்தபடி பிடித்த கவிதையான குறுந்தொகை 3க்கு போய்விடுகிறேன்.

தலைவி கூற்று:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்பு (Interior Landscape புத்தகத்திலிருந்து)

What She said:

Bigger than earth, certainly,
Higher than the sky,
More unfathomable than the waters
Is this love for this man

Of the mountain slopes
Where bees make rich honey
From the flowers of the Kurinji
That has such black stalks

தேவகுலத்தார், குறிஞ்சித் திணை.

ஐந்து வரியில் ஒரு microcosm-த்தையே காட்டிவிடுகிறார்.

சாதாரண விஷயம். என் காதல் இவ்வளவு பெரியது என்று தலைவி இரண்டு கைகளையும் எத்தனை தூரம் விரிக்க முடியுமோ அதற்கு மேலும் கொஞ்சம் விரித்துக் காட்டுவது போன்ற ஒரு கவிதை. அப்படி எல்லாம் சிந்திக்கும் நாயகிக்கு என்ன வயதிருக்கும்? வாலிபத்தின் காதலாகத்தான் இருக்க முடியும். இளைஞர்களின் காதல் காதலிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல, பார்ப்பவர்களையும் (அவர்கள் பெற்றோர்களாக இல்லாத பட்சத்தில்) புன்னகைக்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு கணத்தைத்தான் கவிஞர் காட்டுகிறார்.

இரண்டாம் பகுதியாக நாயகன் எந்த ஊர்க்காரன் என்று சொல்வதுதான் எனக்கு இந்தக் கவிதையை இன்னும் உயர்த்துகிறது. கவிதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

ராமானுஜன் ‘நிலத்தினும் பெரிதே’ என்பதை ‘Bigger than earth’ என்று மொழிபெயர்த்திருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும். ‘Bigger than earth, certainly,’ என்று மொழிபெயர்த்திருப்பது அபாரமாக இருக்கிறது. அதை நாயகி எப்படி சொல்லி இருப்பாள்? ‘Bigger than earth’ என்று ஆரம்பித்துவிட்டு, ஒரு நொடி அது உண்மைதானா, இல்லை மிகைப்படுத்திச் சொல்கிறோமா என்று யோசித்துவிட்டு, ‘certainly’ என்று தொடர்ந்திருக்க வேண்டும். ராமானுஜன் கவிதையை உள்வாங்கி அதைக் கவிதையாகவே மொழிபெயர்க்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

Ma Rainey’s Black Bottom

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதைக்கு கரு மனதில் வந்தது. அதை எழுதிவிட்டு அதற்கப்புறம் பதிவுகளைத் தொடரலாம் என்று நினைத்தேன். சிறுகதை பாதியில் stuck ஆகி நிற்கிறது. சரி பதிவுகளையாவது தொடர்கிறேன்.

Ma Rainey’s Black Bottom திரைப்படத்தைத்தான் முதலில் பார்த்தேன். நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது. வயோலா டேவிஸ், சாட்விக் போஸ்மன் நடித்தது. நல்ல திரைப்படம், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஆகஸ்ட் வில்சன் எழுதிய நாடகத்தைத்தான் திரைப்படமாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. நாடகத்தைத் தேடிப் பிடித்து படித்தேன். நல்ல நாடகமும் கூட. நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. திரைப்படம் நாடகத்தை ஏறக்குறைய அப்படியே பிரதிபலிக்கிறது.

மா ரெய்னி உண்மை நபர். அமெரிக்கக் கறுப்பர். Blues இசைப்பாணியின் முன்னோடி. Mother of the Blues என்றே அறியப்பட்டவர். 150 வருஷங்களுக்கு முன் – 1886-இல் – பிறந்து 1939-இல் மறைந்தவர். Ma Rainey’s Black Bottom என்பது அவருடைய புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று. அதிலிருந்து ஒரு இசைத் துணுக்கு கீழே.

1927-இல் சிகாகோவில் ஒரு நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் நாடகம். மா ரெய்னி அப்போது புகழ் பெற்ற பாடகி. பொதுவாக மா ரெய்னி அப்போது கறுப்பர்கள் நிறைந்த இடங்களில் நேரடியாக கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்தார். கறுப்பர்கள் அதிகமாக இருந்த அமெரிக்காவின் தென் மாநிலங்களில்தான் அனேகமாக இந்த மாதிரி கச்சேரிகள் நடக்கும். ஆனால் இப்போது வெள்ளையர்கள் பிரக்ஞையிலும் நுழைந்து கொண்டிருந்தார். மேலும் ஒலிப்பதிவுகள், ரெகார்டுகள் பிரபலமாகிக் கொண்டிருந்த தருணம்.

சிகாகோவில் ஒரு ரெகார்டிங் கம்பெனி மா ரெய்னியின் சில பாடல்களை அன்று ஒலிப்பதிவு செய்யப் போகிறது. மா ரெய்னியின் வெள்ளைக்கார மானேஜர் இர்வின், ஸ்டுடியோவின் வெள்ளைக்கார அதிபர் ஸ்டர்டிவண்ட் ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். பின்னணி இசைக்கலைஞர்களான டொலீடோ, கட்லர், ஸ்லோ ட்ராக் (Slow Drag), லெவீ வந்தாயிற்று. முதல் மூவரும் அனுபவம் உள்ளவர்கள், மா ரெய்னியுடன் பல நாட்களாக, ஆண்டுகளாக வாசிப்பவர்கள். லெவீ இளைஞன், குழுவுக்கு கொஞ்சம் புதியவன். தானே இசையை உருவாக்க விரும்புபவன். மா ரெய்னியின் புகழ் பெற்ற பாடல்களையே மாற்றி இசை அமைக்கிறான், அது மானேஜர் இர்வினுக்கு பிடித்தும் இருக்கிறது. ஆனால் கட்லரும் மற்றவர்களும் மா ரெய்னி அப்படி மாற்றுவதை அனுமதிக்க மாட்டார் என்பதை உணர்ந்திருக்கிறார்கள், லெவீயை அதை உணர வைக்க முயற்சி செய்கிறார்கள்.

லெவீக்கு ஒரு பின்கதை இருக்கிறது. அவனது சிறு வயதில் வெள்ளையர்கள் அவனுடைய அம்மாவை அவன் கண் முன்னாலேயே கற்பழிக்கிறார்கள். வீட்டுக்கு திரும்பும் அப்பா குடும்பத்தை பத்திரமாக வேறு இடத்துக்கு குடிபெயர்த்துகிறார். அதற்குப் பிறகு கற்பழித்தவர்களில் பாதி பேரைக் கொல்கிறார். மீதிப் பேரைக் கொல்வதற்கு முன் அவரை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். கடவுள் நம்பிக்கை போய்விட்டது. நிறைய மன அழுத்தத்தில் இருக்கிறான். கடவுள் நம்பிக்கை உள்ள மற்ற இசைக்கலைஞர்களிடம் சின்னச் சின்ன பூசல்கள். கட்லருடன் கைகலப்பே ஏற்படுகிறது.

லெவீ வெள்ளையர்களிடம் சிரித்துப் பேசினாலும், உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கிறான். மா ரெய்னியிடம் வெள்ளையர்களுக்கு காரியம் ஆக வேண்டும், குறிப்பாக மானேஜர் இர்வினுக்கு காரியம் ஆக வேண்டும், அதனால் பணிந்து போகிறார்கள். அதே போல இப்போது வெள்ளையர்களிடம் பணிந்து போனாலும் மா ரெய்னி போன்ற இடத்துக்கு வர வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறான். குறிப்பாக புதிய பாடல்களை பதிவு செய்ய விரும்புகிறான், அது அவனை பிரபலமான கலைஞனாக்கினால் பிறகு இந்த மாதிரி கூழைக் கும்பிடு போட வேண்டாம் என்று உணர்ந்திருக்கிறான்.

மா ரெய்னி ஒலிப்பதிவுக்கு தாமதமாக வருகிறார். கூட அவரது பெண் காதலியும். அவரது காருக்கு சின்ன விபத்து, மா இறங்கி ஒரு போலீஸ்காரனோடு தகராறு செய்கிறார். போலீஸ்காரனுக்கு ஒரு கறுப்பரிடம் கார் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மானேஜர் இர்வின் வந்து சமாதானம் செய்கிறான். மாவின் உறவுக்காரப் பையனுக்கு திக்குவாய், ஆனால் அந்தப் பையனும் ஒலிப்பதிவில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஒத்திகையின்போது பையன் சொதப்பிக் கொண்டே இருக்கிறான்.

லெவீ மா ரெய்னியின் பெண் காதலிக்கு நூல் விடுகிறான். அந்தப் பெண்ணும் பதிலுக்கு நூல் விடுகிறாள். மா அவனை எச்சரிக்கிறாள். மா லெவீ தனக்கு ஒத்துவரமாட்டான் என்று உணர்ந்திருக்கிறாள், அவனை வேலையை விட்டு துரத்திவிடுகிறாள். மாவின் பிடிவாதங்களுக்கு எல்லாம் மானேஜரும் வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் மாவுக்கும் வேலை ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது.

ஒரு வழியாக ஒலிப்பதிவு முடிகிறது. லெவீ தன் புதிய பாடல்களைப் பற்றி ஸ்டர்டிவாண்டிடம் கேட்கிறான். ஸ்டர்டிவாண்ட் எனக்குப் பிடிக்கவில்லை, ஐந்து டாலர் தருகிறேன் என்கிறான். லெவீயால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவனது புதிய ஷூக்கள தற்செயலாக மிதித்துவிடும் டொலீடோவோடு பெரிய சண்டை ஏற்படுகிறது, மன அழுத்தத்துக்கு வடிகாலே இல்லாத லெவீ டொலீடோவை கத்தியால் குத்திவிடுகிறான்.

கறுப்பர்களின் மீது நடத்தப்பட்ட/நடத்தப்படும் அடக்குமுறை மிக சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. அதிகரித்துக் கொண்டே போகும் மன அழுத்தம் மிக அற்புதமாக. எம்விவியின் பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதை ஒன்றில்தான் இத்தனை அற்புதமாக மன அழுத்தத்தின் சித்தரிப்பை பார்த்திருக்கிறேன்.

அனேகமாக அனைவருமே பிரமாதமாக நடித்திருந்தாலும் குறிப்பாக சாட்விக் போஸ்மன், வயோலா டேவிஸ் பிரமாதம். திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் நாடகத்தையும் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள், திரைப்படங்கள்

தமிழறிஞர் வரிசை – செல்வகேசவராய முதலியார்

முதலியார் 1864-இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணாக்கர் இவர்தானாம். பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை இருவரும் இவரிடத்தில் படித்தவர்களாம். 56-57 வயதில், 1921-ஆம் ஆண்டு மறைந்தார்.

முதலியார் பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களை பதிப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆசாரக்கோவை நூலுக்கு இவரது பதிப்பை செம்பதிப்பாகக் கருத வேண்டும். பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி ஆகிய பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். அறநெறிச்சாரம், ஹரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியானம் ஆகிய நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.

முதலியார் எழுதிய அபிநவக் கதைகளை தமிழின் முதல் சிறுகதைகளாக எடுத்துக் கொள்ளலாம். கமில் சுவலெபில் அப்படித்தான் சொல்கிறார். என்ன, ஏறக்குறைய சிறுவர் கதைகள் மாதிரிதான் இருக்கும், அதனால் இவை சிறுகதைகள்தானா என்று கேள்வியும் கேட்கலாம். ஆனால் இந்தக் கதைகளின் வயது, நடை ஆகியவை எனக்கு charming ஆக இருந்தன.

ஆனால் முதலியாரின் முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது அவர் கட்டுரைகளைத்தான். அவை இன்றும் படிக்கக் கூடிய நடையில் இருக்கின்றன. சரளமாக எழுதி இருக்கிறார். இதே காலத்தில் எழுதிய பரிதிமால் கலைஞரை எல்லாம் தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருக்கிறது. இந்த நடையை அவரது முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன்.

தமிழ் (1904) என்ற தலைப்பில் தமிழ் மொழி, இலக்கண இலக்கியம், வடமொழி, தமிழரின் பூர்வீகம், பழமொழிகள், ஜாதிகள் என்று பலவற்றையும் பற்றி அன்று தெரிந்ததை வைத்து சிறப்பாக கட்டுரை எழுதி இருக்கிறார். இன்றும் படிக்கக் கூடியவையே. அவரது தமிழ்ப்பற்று தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அது வெறி ஆகிவிடவில்லை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தமிழ் வியாசங்கள் (1915) என்றும் பலவும் எழுதி இருக்கிறார். இவை அனேகமாக அறிவுரைகள். நான் ரசித்தது அதில் அங்கும் இங்கும் வரும் பழமொழிகளைத்தான். சிறு வயதில் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள – “பிள்ளைக்கு வாத்தியார், பெண்ணுக்கு மாமியார்” ! என் பெண்களிடம் சொன்னால் அடிக்க வருவார்கள், ஆனால் இது மூன்று தலைமுறைக்கு முன் உண்மையாக இருந்திருக்கும்தானே! (என் அத்தை ஒருவருக்கு என் அம்மாவுடன் ஏதோ தகராறு வந்தபோது சிறுவனான என்னிடம் “நாத்தனாரை எதிர்த்துப் பேசுகிறாளே உன் அம்மா!” என்று குறைப்பட்டுக் கொண்டாள். நாத்தனார் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது என்று எனக்கு தோன்றிய அதே சமயம் என் அம்மாவுக்கு 20 வருஷம் மூத்த என் அத்தைக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தோன்றியது. தினமும் ஒரு அணா சேமித்தால் “ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை!” – அதாவது ஆயிரம் நாளில் 62.50 ரூபாய் சேருமாம்.

தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். கம்பன் (1902), திருவள்ளுவர் சரித்திரம், கண்ணகி சரித்திரம் (1905), அக்பர், குசேலர் சரித்திரம், மஹாதேவ கோவிந்த ரானடே ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார். பஞ்சலட்சணம் என்னும் இலக்கண நூலையும் (1903) மாணவர்களுக்காக எழுதி இருக்கிறார். பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகையில் கற்பலங்காரம் என்ற நாவலையும் எழுதினாராம். வ.உ. சிதம்பரம் பிள்ளை இவருடன் சேர்ந்து தமிழாராய்ச்சி செய்திருக்கிறார். ராபின்சன் க்ரூசோ நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

முதலியார் தமிழ் இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு பற்றி தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். குறுந்தொகையில் நான்கு விழுக்காடு வடமொழிச் சொற்களாம். ஔவையார் பாடல்களில் எட்டு விழுக்காடாம். நான்மணிக்கடிகையில் 20 சதவிகிதமாம். திருக்குறளில் அதிகாரத்துக்கு ஒன்றிரண்டு வடமொழி வார்த்தைகளாம். நாலடியாரில் ஐந்து பாடல்களுக்கு ஒரு வடமொழி சொல்லாம். கரைத்துக் குடித்திருக்கிறார்.

முதலியாரின் மகன்களின் பெயர்கள்: பரிமேலழகர், சேனாவரையர், நச்சினார்க்கினியர்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

குறுந்தொகை 1

செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே

திப்புத்தோளார், குறிஞ்சித்திணை

ரத்தம் வழியும் தந்தங்களை உடைய யானையின் மீது ரத்தம் தோய்ந்த செந்நிற வேலுடனும் அம்புகளுடனும் அரக்கர்களின் ரத்தம் ஊறி செங்களமாகவே மாறிய போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் முருகன் ஆளும் எங்கள் குன்றும் காந்தள் மலரால் நிறைந்திருக்கிறது.

Riding on the elephant with blood dripping tusks
With blood reddened spear and arrows that had killed the demons
Returning from the blood soaked red battlefield
This hill our fiery Murugan rules
Is full of the the blood flower blooms

– என் மொழிபெயர்ப்பு

காந்தள் மலரை முதன்முதலாகப் பார்த்தபோது எனக்கு பத்து பனிரண்டு வயது இருக்கும். நாங்கள் வசித்த மானாம்பதி கிராமத்திலிருந்து இரண்டு இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறிய குன்று உண்டு. நெடுங்கல் என்று பேர். வரண்ட நிலப்பரப்பு. ஓணானும் அரணையும் சில சமயம் உடும்பும் ஓடிக் கொண்டிருக்கும். அப்போதெல்லாம் எனக்கு அந்தக் குன்றுப் பக்கம் தனியாக நடக்கப் பிடிக்கும். ஒரு நாள் போகும் வழியில் சிவந்த, விரல்கள் போன்று தெரிந்த இந்தப் பூவைக் கண்டேன். கொடி, இரும்பு வேலி மீது படர்ந்திருந்தது. சாலையிலிருந்து கீழே இறங்கிப் போய் தண்ணீர் இல்லாத வாய்க்காலைத் தாண்டி அந்தப் பூவை அருகிலே பார்த்தது ஒரு அற்புதத் தருணம். காந்தள், காந்தள் என்று படித்திருக்கிறோமே, அது இந்தப் பூதான் என்று உணர்ந்தது இன்னொரு அற்புதத் தருணம். அந்தப் பூவைப் பறித்துக் கொண்டு திரும்பிவிட்டேன். அம்மாவிடம், அப்பாவிடம், தங்கைகளிடம், நண்பர்களிடம் காட்டி ஒரே பீற்றல். அதன் தாவரவியல் பெயர் Gloriosa Lily என்று கண்டுபிடித்தேன். ஆனால் எந்தக் கவிதை வரிகளிலிருந்து இதுதான் காந்தள் மலர் என்று கண்டடைந்தேனோ, அந்த வரிகள் நினைவு வர மாட்டேன் என்கிறது.

இந்தக் கவிதையைப் படிக்கும்போது கண் முன்னால் அந்த சிவப்பு நிறம் விரிகிறது. காந்தள்; அதுவும் குன்று நிறைய பூத்துக் குலுங்கும் காந்தள். நினைக்கும்போதே பரவசமாக இருக்கிறது.

திப்புத்தோளார் சிறந்த உத்தியைப் பயன்படுத்துகிறார். செங்களம்; செங்கோல்; செந்நிற அம்பு; செங்கோட்டு யானை; தழல்; இதற்கப்புறம் குன்று முழுவதும் காந்தள். நிறத்தை வைத்து சும்மா புகுந்து விளையாடுகிறார்.

கவிதையின் பொருளே இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. இதை உரையாசிரியர்கள் தலைவன் தலைவியை மடக்க அவளுக்கு அழகிய காந்தள் மலரைத் தருவதாகவும், ஆ, எங்க ஊர்லியும் நிறைய இருக்கு என்று தலைவி மறுப்பதாகவோ, அல்லது பிகு பண்ணிக் கொள்வதாகவோ விளக்குகிறார்கள். நான் வேறு வகையாகப் புரிந்து கொள்கிறேன். நீ உன் காதலை ஒரு காந்தள் பூவைக் கொடுத்து குறிப்புணர்த்துகிறாய், ஆனால் என் மனதில் இருப்பதோ குன்றளவு கா(ந்)தள்(ல்) என்று தலைவி சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன். அதுதான் இன்னும் அழகாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: குறுந்தொகை

கமல் பரிந்துரை: பெருமாள் முருகனின் “கூளமாதாரி”

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் புத்தகங்களைப் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூளமாதாரி புத்தகத்தை பரிந்துரைத்தாராம், அதனால் இதை மீள்பதித்திருக்கிறேன்.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்கள் நம்பகத்தன்மை அதிகம் உடையவை. அந்த உலகங்களுக்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகம் தெரியாதவை. அவரது பலம் பலவீனம் இரண்டுமே அந்த உலகங்கள்தான். மெய்யாகத் தோன்றும் வாழ்க்கை அனுபவத்தை நமக்குக் காட்டுகிறார். அதே நேரம் அந்த உலகங்கள் எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. நான் பண்ணையம் என்ற வார்த்தையையே நாலைந்து வருஷம் முன்னால்தான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். இந்த உலகம் எனக்கு முற்றிலும் அந்நியமானது.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்களில் வாழ்க்கை கொந்தளிப்பதில்லை, அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்லை. வாழ்க்கை அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஏழாம் உலகத்தைப் படிப்பவர்களுக்கு அந்தப் போத்திக்கு தான் செய்வது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லையே என்று நிச்சயமாகத் தோன்றும். அப்படி தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே போன்ற வசனங்களையும், உருப்படிகள் போத்திக்கு ஏறக்குறைய அஃறிணைதான் என்று நமக்கு உணர்த்தும் காட்சிகளையும் ஜெயமோகன் உருவாக்கி இருக்கிறார். இங்கே கவுண்டருக்கு குற்ற உணர்ச்சி கிடையாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவருக்கு அப்படி குற்ற உணர்ச்சி இல்லையே என்பது படிப்பவர்களுக்கு தோன்றிவிடுமா என்பதே சந்தேகம்தான்.

நிழல் முற்றத்தில் ஒரு டெண்டுக் கொட்டாய் சூழல் என்றால் இங்கே பண்ணையம் பார்க்கும், அதுவும் குறிப்பாக ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர் சிறுமியரின் உலகம். பதின்ம வயதுகளில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருப்பவர்கள். ஏழ்மை மற்றும் ஜாதீய அடக்குமுறையை தினந்தோறும் சந்திப்பவர்கள். அது அவர்களுக்கு அடக்குமுறையாகத் தெரிகிறதா என்பதே சந்தேகம்தான். அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கை அதுதான். அவர்களுக்கு கவுண்டரும் கவுண்டச்சியும் எஜமான் எஜமானி மட்டுமல்ல, வாழ்வாதாரமே அவர்கள்தான். சோறும் துணியும் கொடுப்பவர்கள். அப்பா, அம்மா, மற்ற உறவினர் எல்லாம் இரண்டாம் கட்ட பந்தங்கள்தான். அவர்கள் ஆடு மேய்ப்பதும் கிணற்றில் குதித்து நீந்துவதும் முனிக்கு பயப்படுவதும் ஆடுகள் விஷச்செடி சாப்பிட்டு இறக்கும்போது பயந்து ஊரை விட்டு ஓடிவிடுவதும் காமம் பற்றி புரிய ஆரம்பிப்பதும் தேங்காய் திருடுவதும் கவுண்டரிடம் அடி வாங்குவதும் முடியாதபோது வீட்டுக்கு ஓடுவதும் கவுண்டரின் மகனோடு ஒரு நட்பு உருவாக முயற்சிப்பதும், அந்த நட்பு உருவாகாமல் அவர்கள் அந்தஸ்து வித்தியாசம் தடுப்பதும்தான், சிறுவன் கூளையன் adult கூளமாதாரியாக மாறுவதும்தான் கதை. இதில் கதை இருக்கிறது என்றால் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. எனக்கு இருக்கிறது, அவ்வளவுதான்.

பெருமாள் முருகன் தமிழின் சாதனையாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: அவரது புடுக்காட்டி, முனி, இளன் கதைகள் சுமார்தான்.

தொடர்புடைய சுட்டிகள்:
பெருமாள் முருகனின் தளம்
பெருமாள் முருகன் பக்கம்

Art of Tamil Nadu

நாகசாமி தொல்லியல் ஆராய்ச்சியாளர். தமிழக அரசில் தொல்லியல் துறைத் தலைவராக பணியாற்றி இருக்கிறார். பத்மபூஷன் விருது பெற்றவர்.

என் உறவினரும் கூட. (தங்கையின் மாமனார்). முப்பது வருஷங்களுக்கு முன் முதல் முறையாக அவர் வீட்டிற்கு போனபோது அவரது புத்தக அலமாரிகளைப் பார்த்து அசந்து போனது இன்னும் நினைவிருக்கிறது. இப்போது 90 வயது ஆகிறது. முதுமை அவரை கொஞ்சம் பாதித்திருக்கிறது. நடக்க, படிக்க கொஞ்சம் கஷ்டப்படுகிறார். ஆனால் எதுவும் – கொரோனாவும் கூட – அவரை முடக்கிவிடவில்லை, இன்னும் படிப்பதும் எழுதுவதும் மும்முரமாக நடக்கிறது.

1972-இல் அவர் எழுதிய தொகுத்த புத்தகம்Art of Tamil Nadu – ஒன்று கண்ணில் பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு. நூறு புகைப்படங்களாவது இருக்கும். ஐம்பது வருஷங்களுக்கு முன் இத்தனை புகைப்படம் எடுப்பதே பெரிய விஷயம். இதை ஒரு புத்தகமாக தொகுத்துப் போட்டிருப்பது இன்னும் பெரிய விஷயம். Coffee table புத்தகங்கள் இன்று கூட தமிழில் வருவதாகத் தெரியவில்லை.

சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். முழுப் புத்தகத்தையும் கட்டாயம் படியுங்கள் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கலை