இந்தியா டுடேயில் நாங்கள்

ஃபெப்ரவரி 29, 2012 தேதியிட்ட இந்தியா டுடேயில் சிலிகான் ஷெல்ஃபைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். செய்தியைப் பகிர்ந்துகொண்ட உப்பிலி ஸ்ரீனிவாசுக்கு மிக்க நன்றி!

அது என்ன “நேர்மறை அணுகுமுறை” என்று எனக்கு புரியவில்லை. ஒரு வேளை நேர்மையான அணுகுமுறை என்பதை அப்படி தப்பாக பிரின்ட் பண்ணிவிட்டார்களா?

யாரிடமாவது காப்பி இருந்தால் ஒண்ணு அனுப்புங்கப்பா/ம்மா!

எட்டயபுரத்துக்குப் போனவர்

எட்டயபுரத்தில் பாரதியாரின் நினைவு இல்லத்துக்குப் போன அனுபவத்தைப் பற்றி அடலேறு என்பவர் எழுதி இருக்கிறார். உண்மையான உணர்ச்சிகள் வெளிப்படும் பதிவு. சிறப்பான புகைப்படங்கள். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சி. சுப்ரமணியத்தின் “திருப்புமுனை” – படிக்க விரும்பும் புத்தகம்

என்னை fascinate செய்யும் தலைவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான். சி. சுப்பிரமணியம் அவர்களில் ஒருவர். அவர் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார் என்ற விஷயமே இந்தப் பதிவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. திருப்புமுனை என்று பேராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்!

புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே பதித்திருக்கிறார்கள் – பகுதி 1, பகுதி 2.

முல்லைப் பெரியார் பற்றி இத்தனை பிரச்சினை இருக்கும் இன்றைக்கு சி. சுப்பிரமணியம் பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தை கேரளத்தின் ஒத்துழைப்பை திறமையாகப் பெற்று செயல்படுத்திய இந்த சம்பவம் “அந்தக் காலம் மாதிரி வருமா” என்று ஏங்க வைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்திலிருந்து சில பகுதிகள் – பகுதி 1, பகுதி 2
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனைப் பற்றி சில பதிவுகள்
காமராஜைப் பற்றி சில பதிவுகள்

மூன்று வருஷங்களுக்கு முன் – என் டாப் டென் தமிழ் நாவல்கள், தமிழ் எழுத்தாளர்கள்

மூன்று வருஷங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு பதிவு சமீபத்தில் கண்ணில் பட்டது. சுஜாதாவையும், பாலகுமாரனையும், கல்கியையும் அப்போது தி.ஜா.வுக்கும் அழகிரிசாமிக்கும் மேலாக மதிப்பிட்டிருந்தேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

கல்கியின் பேரைச் சொல்லப் போகும் ஒரே புத்தகம் பொன்னியின் செல்வன். அதுவும் இப்போது எனக்கு மூன்றாம் படியில் இருக்கும் இலக்கியமே. இதை எழுதும்போது எனக்கு எக்கச்சக்க நாஸ்டால்ஜியாவாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று வார காலகட்டத்தில் பாலகுமாரனின் ஆறேழு சிறந்த புத்தகங்களைப் – பந்தயப்புறா, ஆனந்த வயல், கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள், அகல்யா என்று சில – படித்த நினைவிருக்கிறது, அந்த நேரத்தில் எழுதப்பட்ட பதிவாக இருக்க வேண்டும். 🙂 இப்போது நன்றாகவே தெரிகிறது – பாலகுமாரன் அழகிரிசாமி, தி.ஜா. அருகே நிற்கக் கூட முடியாது.

சுஜாதா நிற்கலாம். 🙂 இந்த லிஸ்டைப் போடும்போது சுஜாதா சொதப்பிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை – இல்லை, இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும். வாரப் பத்திரிகை எழுத்துகளில் சுஜாதாவின் தரம் மிகவும் உயர்ந்தது, அதனால் அவரது குறைகள் ரெஜிஸ்டர் ஆகவே இல்லை. மீண்டும் அவர் புத்தகங்களை புரட்டும்போதுதான் குற்றம் குறை எல்லாம் தெரிகிறது. சில சமயம் எழுத்தின் தரம் மட்டும் இல்லை, அதன் தாக்கமும் இந்த மாதிரி லிஸ்ட்களில் இடம் பெற ஒரு முக்கியமான காரணி. அப்படித்தான் சுஜாதா has sneaked in. இன்றும் டாப் டென் என்று ஒரு லிஸ்ட் போட்டால் சுஜாதா எப்படியாவது முண்டியடித்து உள்ளே வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.

மேலும் இந்தப் பதிவை எழுதும்போது நான் காடு, வாசவேஸ்வரம், ஆழிசூழ் உலகு, பொய்த்தேவு மாதிரி பல புத்தகங்களைப் படிக்கவில்லை. இன்று டாப் டென் நிறைய மாறி இருக்கும். இன்றளவு படிக்காதபோதே பத்துக்குள் அடக்கமுடியவில்லை என்றால் இன்று மிகவும் கஷ்டம், அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. என் ரசனை கொஞ்சம் முன்னேறி, சரி வேண்டாம் மாறி இருப்பதற்கு ஜெயமோகனின் பழக்கம், பரிந்துரைகள், அவர் இங்கு வந்தபோது பரிச்சயமான நண்பர்கள் ஒரு முக்கிய காரணம். அவரது பரிந்துரைகள், விளக்கங்கள் பல புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தன (ஆழிசூழ் உலகு…), சில புத்தகங்களை மீண்டும் படிக்க வைத்தன (பதினெட்டாம் அட்சக் கோடு…) அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்வதில் அர்த்தமில்லை; இருந்தாலும் நன்றி!

Curiosity value-வுக்காக மீள்பதித்திருக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

  1. பின் தொடரும் நிழலின் குரல்
  2. விஷ்ணுபுரம்
  3. பொன்னியின் செல்வன்
  4. என் பெயர் ராமசேஷன்
  5. கரைந்த நிழல்கள்
  6. சாயாவனம்
  7. கோபல்ல கிராமம்
  8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
  9. வெக்கை
  10. ஜேஜே சில குறிப்புகள்
  11. மோகமுள்

எனக்குப் பிடித்த டாப் டென் ஆசிரியர்கள்: (வரிசைப்படி அல்ல)

  1. ஜெயமோகன்
  2. சுந்தர ராமசாமி
  3. புதுமைப்பித்தன்
  4. அசோகமித்ரன்
  5. கல்கி
  6. சுஜாதா
  7. பாலகுமாரன்
  8. தி. ஜானகிராமன்
  9. கி. ராஜநாராயணன்
  10. கு. அழகிரிசாமி
  11. பூமணி
  12. சா. கந்தசாமி

எண்ணத் தெரியாத குறையால் இது டாப் ட்வெல்வ் ஆகிவிட்டது. 🙂 ரொம்ப யோசித்து கு. அழகிரிசாமியையும், தி. ஜானகிராமனையும் கழித்துக் கொள்கிறேன்.

ஜெயகாந்தனை இந்த லிஸ்டில் புகுத்த முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான்.

நா.பா.வின் “பொன்விலங்கு”

பி.ஜி. வுட்ஹவுஸ் ஒரு புத்தக முன்னுரையில் விமர்சகர்கள் தான் போன நாவலில் அதே பாத்திரங்களுக்கு பேரை மட்டும் மாற்றி மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருப்பதாக விமர்சித்ததாகவும், அந்த விமர்சனத்தைத் தான் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முறை அதே பாத்திரங்களை பேரைக் கூட மாற்றாமல் அரைத்த மாவை அரைத்திருப்பவதாகவும் எழுதி இருப்பார். நா.பா.வின் புத்தகங்களும் அப்படித்தான். அதே பாத்திரங்கள் அதே சூழல்களில் மீண்டும் மீண்டும் வேறு வேறு பேர்களில் வருகிறார்கள். பொன் விலங்கின் சத்தியமூர்த்தி, பாரதி, மோகினி, குமரப்பன், கண்ணாயிரம், பூபதி, கல்லூரி முதல்வர் எல்லாரும் குறிஞ்சி மலரிலும், மூலக்கனலிலும் சமுதாய வீதியிலும் வந்தவர்கள்தான். இன்றைக்கு எதைக் கண்டு பொங்கலாம், சமுதாயத்தின் குறைகளைச் சாடலாம் என்று சிந்திப்பவர்கள்தான்.

பொன்விலங்கு 700 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைச்சுருக்கத்துக்கு 7 வரி கூட தேவைப்படாது. வழக்கம் போல சமுதாயச் சிறுமைகளைக் கொண்டு பொங்கிக் கொண்டே இருக்கும் ஹீரோ சத்தியமூர்த்தி, அவனைக் கூட இல்லை, அவன் பாதங்களைப் பார்த்ததும் காதல்வசப்படும் பாரதி, அவனால் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து காப்பாற்றப்பட்டு பின்னர் அவனைக் காதலிக்கும், அவன் காதலிக்கும் தாசி குலப் பெண் ஆட்டக்காரி மோகினி, கொஞ்சம் ஈகோ உள்ள, ஆனால் திறமையாளர்களைத் தேடிப் பிடித்து தன் கல்லூரியில் வேலை தரும் பணக்காரர் பூபதி, காதலுக்கு எதிரியாக வரும் ஜமீந்தார், கல்லூரி மாணவர்களிடையே அவன் பாப்புலாரிடியைக் கண்டு அசூயைப்படும் கல்லூரி பிரின்சிபால் என்று சொன்னாலே கதை எப்படிப் போகும் என்று யூகித்துக் கொள்ளலாம். ஜமீந்தார், மற்றும் அவரது மதியூக மந்திரி கண்ணாயிரம் சூழ்ச்சியால் சத்தியமூர்த்தி மோகினி மேல் சந்தேகப்படுகிறான், மோகினி தற்கொலை, சத்தியமூர்த்தி ஜெர்மனிக்குப் போவதோடு கதை முடிந்துவிடுகிறது.

கதை எழுதப்பட்ட காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றவுடன் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவுகள் கலையத் தொடங்கிவிட்டன. அப்போது இப்படிப்பட்ட லட்சியவாத வெளிப்படுத்துதல் செயற்கையாக இருந்தாலும் அது அந்தப் பொற்காலம் போச்சே என்று புலம்புபவர்களிடம், லட்சியவாதம் உள்ள இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கும். இன்றைக்கும் நா.பா.வை படிக்கச் சொல்பவர்களுக்கு ஒரு நாற்பது வயதாவது இருக்கும். ஐமபது வயதுக்காரரான ஜெயமோகன் இதை சிறந்த வணிக நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார். 🙂

ஜெயமோகன் சிபாரிசு செய்த நா.பா. நாவல்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டேன். (ராணி மங்கம்மாள், மணிபல்லவம், சமுதாய வீதி, குறிஞ்சி மலர், பொன்விலங்கு) இதற்கு மேல் நான் படிக்க விரும்புவது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது அதற்கு எழுந்த எதிர்ப்பைப் பின்புலமாக வைத்து அவர் எழுதிய ஒரு நாவலும் (என்ன பேர் என்று யாருக்காவது நினைவு வருகிறதா? ஹீரோயின் பேர் கண்ணுக்கினியாள், ஒரு சைக்கிள் கடை அண்ணாச்சி முக்கிய பாத்திரம்), மூவரை வென்றான் என்ற சிறுகதைத் தொகுப்பும் மட்டுமே. சிறு வயதில் இவை இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன.

நா.பா. பெரிய கனவுகள் கண்டு அதில் ஒரு சிறு பகுதியைக் கூட செயல்படுத்த முடியாமல் போனவர். மணிபல்லவம் போன்ற பெரிய கனவுகளுக்காக அவரைப் பாராட்டினாலும் ஒரு எழுத்தாளராக அவரை நிராகரிக்கத்தான் வேண்டி இருக்கிறது. அவரது சிறந்த நாவலாக நான் கருதுவது ராணி மங்கம்மாளைத்தான். ஆனால் குறிஞ்சி மலர்தான் மிகவும் பாப்புலரான நாவலாக இருக்க வேண்டும்.

நா.பா.வின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவரிடம் எந்த போலித்தனமும் இல்லை. அவர் உண்மையிலேயே லட்சியவாதத்தில் நம்பிக்கை உள்ளவர். ஆனால் அவர் படைப்புலகம் எதிர்பார்த்தபடியே நடக்கும் ஃபார்முலா பாத்திரங்களால் நிறைந்தது. செயற்கையான சம்பவங்கள், பாய்ஸ் கம்பெனி நாடகம் போன்ற கதைப்பின்னல் ஆகியவற்றை அவரால் தாண்ட முடியாதது துரதிருஷ்டமே.

தொடர்புடைய சுட்டிகள்:
சென்னை லைப்ரரி தளத்தில் நா.பா.வின் நூல்கள்
ராணி மங்கம்மாள்
மணிபல்லவம்
சமுதாய வீதி
குறிஞ்சி மலர்

சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் அல்லது துரோணரும் அர்ஜுனனும்

ஜேஜே சில குறிப்புகள் படித்தபோது எனக்கு ஒரு 25 வயது இருக்கலாம். என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். எங்கே நிஜம் முடிகிறது, கற்பனை ஆரம்பிக்கிறது என்று கூட சொல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு சுந்தர ராமசாமி என்று தேடிப் பிடித்து படித்தேன். புளியமரத்தின் கதை அற்புதமாக இருந்தது. பல சிறுகதைகள் – கோவில் காளையும் உழவு மாடும், புகழ் பெற்ற ரத்னாபாயின் ஆங்கிலம், புகழ் பெறாத சீதை மார்க் சீயக்காய்த் தூள், எனக்கு மிகவும் பிடித்த சிறுகதையான விகாசம், சிரிக்காமல் படிக்க முடியாத பிரசாதம் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.

ஆனால் எனக்கு பிடித்த நாவல் ஜேஜேதான். அது ஒரு tour de force. அதே நேரத்தில் இதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். நான் சாதாரணமாக புத்தகங்களை நாலைந்து முறை படிக்கும் வழக்கும் உடையவன். சு.ரா.வின் சிறுகதைகளை மட்டுமே நான் மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். இன்று மீண்டும் அவரது நாவல்களை படித்தால் என் மதிப்பீடு மாறலாம்.

மூன்று தமிழ் எழுத்தாளர்களை நான் ஜீனியஸ் என்று கருதுகிறேன். ஜெயமோகன் காலத்தால் மூன்றாமவர். அவருக்கும் மேலிருக்கும் ஒரே தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான் என்பது என் எண்ணம். விஷ்ணுபுரம், ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகியவை என்றும் நிற்கும் நாவல்கள். சிறுகதைகளிலும் நிறைய தேறும். இலக்கிய, பண்பாட்டு, அரசியல் விமர்சனக் கட்டுரைகளில் அவரது வீச்சு அகலமானது. ஆழமும் அதிகம்தான், ஆனால் ஆழத்தைப் பற்றிய மதிப்பீடு எதிர்காலத்தில் மாறலாம். (ஒரு காலத்தில் சுஜாதாவின் கட்டுரைகள் மிக ஆழமானவை என்று நினைத்திருந்தேன், இன்று இல்லை.)

சு.ரா.வை ஜெயமோகனின் ஒரு குரு என்று சொல்லலாம். அவரோடு பேசிப் பேசி விவாதித்து கற்றுக் கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதை ஜெயமோகனே சொல்லி இருக்கிறார். ஆனால் சு.ரா.விடம் அவருக்கு சில கசப்புகளும் இருக்கின்றன என்பது தெளிவாக தெரிந்தது. அவருடைய கருத்துப்படி அவர் குருவை மிஞ்சிவிட்ட சிஷ்யர். என் கருத்தும் அதுதான். துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவுதான் நினைவு வருகிறது.

சு.ரா. இறந்ததும் ஜெயமோகன் தன் சு.ரா. நினைவுகளை ராப்பகலாக உட்கார்ந்து எழுதி இருக்கிறார். அது நினைவின் நதியில் என்று புத்தகமாக வந்திருக்கிறது. நண்பர் ராஜன் வீட்டில் பார்த்தேன். எல்லாரும் என்னை சுற்றி பேசிக் கொண்டிருந்தபோது நான் மானர்ஸ் இல்லாமல் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு கொண்டு வந்து படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை.

சுருக்கமாக: இளமை, அனுபவம் இன்மை, இயல்பு, சொந்த வாழக்கையில் கடுமையான பாதிப்புகள், முதிர்வின்மை(immaturity), ஈகோ எல்லாம் சேர்ந்து ஜெயமோகனை ஒரு வழி செய்து கொண்டிருந்த நேரம். ஜேஜே சில குறிப்புகள் படித்துவிட்டு சு.ரா.விடம் போய் சேர்ந்திருக்கிறார். சு.ரா.விடம் எதிர்வாதம் செய்தே வளர்ந்திருக்கிறார். ஒரு கால கட்டத்தில் சு.ரா.வின் நவீனத்துவம் இவருக்கு போதவில்லை. குருவை மிஞ்சும் படைப்புகள் – விஷ்ணுபுரம் – வர ஆரம்பித்திருக்கிறது. குருவுக்கு ஈகோ, தன் புகழ் நிற்க வேண்டும் என்ற எண்ணம், குடும்ப பாசம், எந்த நெருங்கிய உறவிலும் வரும் சில பிரச்சினைகள் – இருவருக்கும் நடுவில் பிரிவு.

ஜெயமோகனின் கண்ணில் நவீனத்துவத்தின் உச்சம் ஜேஜே சில குறிப்புகள்தான். (என் கண்ணில் அசோகமித்ரனேகரைந்த நிழல்கள், பல சிறுகதைகள், மானசரோவர், தண்ணீர்….) சு.ரா. தன் வார்த்தைகளை கச்சிதமாக செதுக்க வேண்டும் என்ற ஆசையில் தன் படைப்பூக்கத்தை இறுகப் பிடித்திருந்தார் என்றும் அப்படிப் பிடிக்கவில்லை என்றால் அவர் இன்னும் பெரிய படைப்பாளியாக உயர்ந்திருப்பார் என்றும் கருதுகிறார். சு.ரா. தன் குருநாதரான க.நா.சு.வை விஞ்சினார் என்றும் தான் சு.ரா.வை விஞ்சிவிட்டோம் என்றும் நினைக்கிறார். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

சு.ரா.விடம் ஈகோ உண்டு என்றும் ஒரு படைப்பாளி சு.ரா.வை தாண்டாத வரை அவருக்கு பிரச்சினை இல்லை என்றும் அப்படி தாண்டிவிட்டால் அவரது படைப்புகளை பற்றி நல்ல வார்த்தை சொல்லமாட்டார், சமயத்தில் கொஞ்சம் அமுக்கப் பார்ப்பார் என்றும் ஜெயமோகன் சொல்கிறார். அப்படி இருந்தால் ஆச்சரியம் இல்லை. சு.ரா. என்ன தெய்வமா? மனிதர்தானே? சு.ரா.வை அப்படி எத்தனை பேர் தாண்டிவிட்டார்கள்? ஜெயகாந்தனுக்கு கிடைத்த பிரபலம் மீது அவருக்கு கொஞ்சம் மனத்தாங்கல் உண்டு, ஆனால் ஜெயகாந்தனை மிகவும் மதித்தார் என்றும், அசோகமித்ரனுக்கும் அவருக்கும் வெளியில் அறிவிக்கப்படாத பனிப்போர் உண்டு என்றும் ஜெயமோகன் சொல்கிறார். ஜெயமோகனுக்கும் தன் எழுத்து பற்றி ஈகோ – சரி பெருமிதம் – உண்டு என்பதை பதிவு செய்கிறேன்.

சு.ரா.வை பற்றி அவர் தரும் ஒரு படிமம் நன்றாக இருந்தது – பட்டுத் துணியில் சுற்றப்பட்ட இரும்புத் தடி. கொஞ்சம் மேட்டிமைத்தனம், மனிதர்களை எடை போடும் திறமை, இளைஞர்களை, ஒரு பட்டாளத்தையே விருந்தோம்பி கட்டி மேய்த்து அவர்களை அடுத்த படி ஏற வைக்கும் திறமைசாலி. Gentleman with a bit of ego என்ற படிமத்தை உண்டாக்குகிறார்.

சுத்த வெஜிடேரியன் ஆன சு.ரா. மீன் சாப்பிட்ட நிகழ்ச்சியை ஜெயமோகன் ஒரு பதிவில் எழுதி இருக்கிறார் – A true gentleman.

ஜெயமோகன் இந்த புத்தகம் எழுதும்போது நெகிழ்ந்த மன நிலையில் இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். (சு.ரா. மறைந்த ஓரிரு வாரங்களில் எழுதப்பட்ட புத்தகம்) என் அப்பாவின் குறைகள் எனக்கு தெரியும். ஆனாலும் அவர் மீது எனக்கு உயிர்தான். அதே போன்ற ஒரு உணர்வை சு.ரா. மீது அவர் வைத்திருப்பது தெரிகிறது.

எனக்கு இசைவில்லாத விஷயங்கள் சில: ஜெயமோகன் கருத்தில் ஒரு படைப்பு ஒரு தரிசனத்தை காட்டும்போது மட்டுமே உச்சத்தை அடைகிறது. தரிசனமே இல்லை என்று சொல்லும் படைப்புகளும் உச்சத்தை அடையலாம். ஜே ஜே அப்படிப்பட்ட ஒரு படைப்புதான். மாக்பெத் மாதிரி நாடகங்கள் மட்டுமே உச்சத்தை அடையலாம், ஆனால் சீசர் அண்ட் கிளியோபாட்ரா மாதிரி நாடகங்கள் அடைய முடியாது என்று சொல்வது எனக்கு இசைவில்லை. விஷ்ணுபுரம் எனக்கு மனித உணர்ச்சிகளை வேறு ஒரு மாபெரும் தளத்தில் காட்டுகிறது. நயாகரா போன்ற பிரமாண்டம். அதற்காக பத்து நொடியில் உடையும் சோப்பு குமிழிகளின் நிறங்களில் எனக்கு நிறைவு ஏற்பட முடியாதா? சு.ரா.வின் படைப்புகள் எனக்கு ப்ரூகலின் ஓவியங்களை நினைவுபடுத்துகின்றன. விஷ்ணுபுரம் குயர்னிகா ஓவியத்தை நினைவுபத்துகிறது. இரண்டும் கலையின் உச்சங்கள்தான். என்ன, எனக்கு குயர்னிகாவை விட விவசாயியின் திருமண விருந்து ஓவியம் பிடித்திருக்கிறது. ஆனால் ஜேஜேவை விட விஷ்ணுபுரம் பிடித்திருக்கிறது.

அப்புறம் கட்டுரைகள் எழுதும்போது யாராலும் மறுக்க முடியாத விஷயங்களையே எழுதுகிறார், அதனால் அதில் சாரம் இருப்பதில்லை என்றும் ந. பிச்சமூர்த்தி பற்றி ஒரு bland கட்டுரை எழுதினர் என்றும் ஜெயமோகன் சொல்கிறார். அவரது நினைவோடை சீரிஸ் புத்தகங்கள் அப்படி இல்லை – குறிப்பாக ஜீவா பற்றிய புத்தகம் ஒரு கிளாசிக்.

சு.ரா. மாதிரி ஒரு பெரிய எழுத்தாளரை பற்றிய முக்கியமான ஆவணம் இது. அது மட்டும் இல்லை, ஜெயமோகனைப் பற்றிய முக்கியமான ஆவணமும் கூட. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

பிற்சேர்க்கை: நான் இந்தப் பதிவை எழுதி பல மாதங்கள் ஆயிற்று. ஜெயமோகனை சந்தித்த புதிது. எப்படி சார் இருக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அவர் சகிக்கவில்லை என்பதை மிக நாகரீகமாகச் சொன்னார். தூக்கி பரணில் போட்டுவிட்டேன். பழைய draft மீண்டும் கண்ணில் பட்டபோது நாகரீகத்துக்கும் இங்கிதத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று பதித்துவிட்டேன்.

தொடர்புடைய பதிவுகள்:
சுந்தர ராமசாமி மீன் சாப்பிட்ட இரவு
ஒரு புளிய மரத்தின் கதை – பக்சின் விமர்சனம்
நினைவோடை – ஜீவா

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் – ராஜன் கொலை வழக்கு


இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியின் மோசமான விளைவுகள் தென்னிந்தியாவில் அதிகமாக உணரப்படவில்லை. இந்திரா தேர்தலில் தோற்றதும்தான் விஷயம் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது. அப்படி வந்தவற்றில் முக்கியமானது ராஜன் கொலை வழக்கு.

ராஜன் கேரள மாணவன். கம்யூனிஸ்ட் அனுதாபி. போலீஸ் ஸ்டேஷன் மேல் தாக்குதலில் ராஜன் என்ற பேருடைய ஒருவன் ஈடுபட்டான் என்று யாரோ இன்ஃபார்மர் போலீசுக்கு செய்தி கொடுத்தாற்போலத் தெரிகிறது. ஹாஸ்டலுக்கு வந்து வேறு கல்லூரி கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்து ஹாஸ்டல் வாசலில் இறங்கிய ராஜனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். சித்திரவதை முகாமுக்குள் கொண்டு போகப்பட்ட ராஜனை அவன் நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் அதற்கப்புறம் பார்க்கவே இல்லை. ராஜன் கைதுக்கு ரெகார்டுகளே இல்லை போலத் தெரிகிறது.

ராஜனின் அப்பா ஈச்சர வாரியர் சாதாரணர் இல்லை. அன்றைய முதல்வராக இருந்த அச்சுத மேனன் போலீசிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டிருந்த காலத்தில் இவர், இவர் குடும்பத்தினர் அவரை பல நாட்கள் ஒளித்து வைத்திருந்திருக்கிறார்கள். வாரியர் இன்னொரு கல்லூரியில் பேராசிரியர். அன்றைக்கு எம்.பி., அமைச்சர் லெவலில் இருந்த பலரை அவருக்கே நேரடியாகத் தெரியும். வயலார் ரவி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாம். அன்றைய உள்துறை அமைச்சர் கருணாகரனின் நெருங்கிய நண்பர்களுக்கு இவர் நெருங்கிய நண்பர். நெருக்கடி நிலை காலம் முழுதும் மனு மேல் மனு கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கருணாகரன், அச்சுத மேனன் போன்றவர்கள் தன் உயிரை வாங்கும் எதிரியாக இவரைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நெருக்கடி நிலை முடிந்ததும் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் போடப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வராகிவிட்டிருந்த கருணாகரன் தனக்கு இப்படி ஒரு கைது நடந்ததே தெரியாது என்று சொல்லி இருக்கிறார். அது பொய் சாட்சி என்று தீர்ப்பாகி அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. கைது செய்த ஜெயராம் படிக்கல் போன்றவர்களுக்கு முதலில் தண்டனை கிடைத்தாலும் (ஜஸ்ட் ஒரு வருஷம் சிறைத் தண்டனை) அது பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டிருக்கிறது. பின்னால் கருணாகரன் பல முறை முதல்வராகி சவுக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்.

தன் நினைவுகளை ஈச்சர வாரியர் எழுதி இருக்கிறார், குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்ப்பு. படைப்பு என்ற விதத்தில் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் உண்மை சம்பவத்தின் குரூரம் முகத்தில் அறைகிறது. இவ்வளவு தொடர்புகள் உள்ள ஒரு பெரிய மனிதருக்கே இந்த கதி என்றால் அரசு எந்திரம் ஒரு சாதாரணனுக்கு எதிராக செயல்பட்டால் என்னாகும் என்ற எண்ணம் முதுகெலும்பை உறைய வைக்கிறது.

புலிநகக் கொன்றை நாவலில் இப்படி ஒரு தவறான கைது, சித்திரவதை, மரணம் என்ற காட்சி வந்தபோது இந்த சம்பவத்தைத்தான் நினைத்துக் கொண்டேன். பி.ஏ. கிருஷ்ணனே ராஜன் படுகொலையை வைத்துத்தான் நம்பியின் மரணத்தை எழுதியதாக உறுதிப்படுத்துகிறார்.

தமிழ்நாட்டிலும் ஒரு ராஜன் உண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்துப் போராடிய உதயகுமார் என்ற மாணவன் “மர்மமான” முறையில் இறந்து போனான். (பேர் என்ன உதயகுமாரா?) இறப்பில் எந்த மர்மமும் கிடையாது, ஆனால் அப்படித்தான் அதிகாரபூர்வமான தகவல். அதைப் பின்புலமாக வைத்து நா.பா. ஒரு நாவல் கூட எழுதி இருக்கிறார்.

நண்பர் ரமணன் இந்த நாவலை எழுதியதால்தான் நா.பா.வுக்கு பி.ஹெச்டி ஆய்வு மூலம் டாக்டர் படம் கிடைப்பது தாமதம் ஆயிற்று என்று சொல்கிறார். நா.பா.வுக்கு அவர் இறந்த பிறகுதான் டாக்டர் பட்டம் கிடைத்ததாம். ஆனால் தி.மு.க.வும் கருணாநிதியும் ஆட்சியை விட்டு இறங்கிய பிறகு அவர் ஒரு ஏழெட்டு வருஷமாவது உயிரோடு இருந்தார், அதனால் இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

தோழி அருணா எழுதுகிறார்:

எளிமையாக ஆனால் மிக உணர்வுபூர்வமாக ஒரு தந்தையால் எழுத பட்டிருக்கிறது. எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்? அவர் தினமும் காணாமல் போன மகனுக்காக எடுத்து வைக்கும் சோறும், இலையும் என்னவோ பண்ணுகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய ஷாஜி கருணின் முதல் படமான பிறவி என்ற ஒரு மிக அருமையான படம் பார்த்திருக்கிறேன். அர்ச்சனா அக்காவாகவும் ப்ரேம்ஜி என்பவர் வயதான அப்பாவாகவும் மிக சிறப்பாக நடித்திருப்பார்கள். 1989 ல் இப்படத்திற்காக ப்ரேம்ஜிக்கு தேசிய விருது கிடைத்தது என விக்கி சொல்கிறது.

இந்த வழக்கில் Habeas Corpus போட்ட எஸ். ஈஸ்வர ஐயர் என் பெரியப்பாவின் அண்ணா. அவர்களின் கூட்டு குடும்ப வீட்டில் வஞ்சியூரில் என் 1 1/2 வயதில் இருந்து 6 வயது வரை நான் வளர்ந்தேன்!

ஜெயமோகன் இந்த சோக சம்பவத்தைப் பற்றி ஒரு சிறப்பான பதிவு எழுதி இருக்கிறார். அவரது பதிவிலிருந்து சில பல பகுதிகள்:

கேரள அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த நிகழ்ச்சி இது. கொல்லப்பட்ட இளைஞரின் தந்தையின் பிடிவாதமான நீதி தேடல் இப்போது ஒரு சமகாலத் தொன்ம அந்தஸ்தை அடைந்துள்ளது.

ராஜன் ஓர் இடதுசாரித் தீவிரவாதக் குழுவில் இருந்தார். இடதுசாரிகளை ஒடுக்கும்படி அரசு ஆணையிட்டதற்கேற்ப போலீஸார் இளைஞர்களைப் பிடித்து வதைத்துத் தகவல்களைக் கறந்தனர். அதில் ராஜன் மரணமடைந்தார். அவரது தந்தை தன் மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசையும் நீதிமன்றத்தையும் நாடினார். ஆனால் எந்தப் பயனும் விளையவில்லை.

ஏனென்றால் ராஜன் கொல்லப்பட்டது அரசின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக. எல்லா அரசுகளும் அடக்குமுறை மேல்தான் அமர்ந்திருக்கின்றன. அடக்குமுறையின் அளவும் அதற்கான மீளும் வழிகளும்தான் அரசுக்கு அரசு வேறுபடும். இந்திய அரசியலமைப்பில் உள்ள மீளும் வழிகள் எல்லாம் அடைபட்ட காலகட்டம் நெருக்கடி நிலைக்காலம்.

ராஜன் கொல்லப்பட்ட காலகட்டத்தில் வங்கத்திலும் பீகாரிலுமாகக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களைக் கொன்று அழித்தது இந்திய அரசு. அவர்களில் முக்கால்வாசிப்பேர் நிரபராதிகளாகவே இருப்பார்கள். எவருக்கும் நியாயம் வழங்கப்பட்டதில்லை. அரசைப் பொறுத்தவரை ராஜன் அவர்களில் ஒருவர்.

கொடுமைதான், ஆனால் உலகின் எந்த அரசும் இதை விட மேலானதல்ல என்பதும் உண்மை. சொந்த மக்களைக் கொன்று குவிக்காத அரசுகளே இல்லை. குறைவாகக் கொல்வது நல்ல அரசு, அவ்வளவுதான். இன்று பயங்கரவாத எதிர்ப்பின் ஒரு பகுதியாக இந்த அடக்குமுறை உலகநாடுகளெங்கும் இன்னும் அதிகரித்துள்ளது.

ராஜன் கொலையை வைத்து ஷாஜி என். கருண் இயக்கிய பிறவி என்ற திரைப்படம் வெளிவந்தது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற கலைப்படம் அது. ஈச்சர வாரியராக நடித்த பிரேம்ஜி சிறந்த நடிப்புக்கான தேசிய விருது பெற்றார்.

ராஜனைக் கொலை செய்ய ஆணையிட்டவராகக் கருதப்பட்ட காவல் அதிகாரி ஜெயராம் படிக்கல் பொதுச்சமூகத்தின் புறக்கணிப்புக்கும் கசப்புக்கும் ஆளானார். அவரது வாழ்க்கையை மையமாக்கி ‘ஆவநாழி’ என்ற படம் வெளிவந்தது. டி. தாமோதரன் எழுத ஐ.வி. சசி இயக்கிய படம். ஜெயராம் படிக்கலாக [இன்ஸ்பெக்டர் பல்ராம்] மம்மூட்டி நடித்திருந்தார். அது பெரும் வெற்றி பெற்று ஜெயராம் படிக்கலுக்கு மீண்டும் ஒரு சமூக இடத்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழில் (சத்யராஜ் நடித்து) “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என மறு ஆக்கம் செய்யப்பட்டது.

ராஜனைக் கொலைசெய்தவர் என நம்பப்பட்ட காவலர் புலிக்கோடன் நாராயணன் சமூகப்புறக்கணிப்பால் மன உளைச்சல் அடைந்து குடிநோயாளியாக ஆனார். அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தாலும் அவரது குடும்பம் புறக்கணிப்பின் நிழலிலேயே இருந்தது. தன் செயலைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருந்தார்.

ஜெயராம் படிக்கல் வாழ்நாள் இறுதியில் ஆன்மீகச் சொற்பொழிவாளராக உருவானார். ஆனாலும் கடைசிவரை அவரை அந்த நிழல் துரத்தியபடியேதான் இருந்தது.

ஆனால் அரசியல்வாதிகள் தப்பித்துக் கொண்டார்கள். கே. கருணாகரன் அதிக நாள் இந்தக் குற்றத்தின் சுமையை தாங்க நேரவில்லை. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியை சேர்ந்த முதல்வரான சி. அச்சுத மேனன் கொஞ்சம் கூடக் குற்றம் சாட்டப்படவில்லை.

ஏனென்றால் மக்களுக்கு ஒன்று தெரியும். இந்த அரச வன்முறை மக்களின் மௌன ஆதரவுடன்தான் நிகழ்கிறது. நக்சலைட்டுகள் வேட்டையாடப்பட்டபின் கேரளத்தில் காங்கிரஸ்தான் வென்று அரசமைத்தது. ஆகவே தங்கள் மௌன ஆணையைச் செயல்படுத்தும் அரசியல்வாதிகளைத் தங்கள் பிரதிவடிவங்களாகவே மக்கள் நினைத்தார்கள்

மக்களின் கோபம் ஏன் போலீஸ்காரர்கள் மேல் வந்தது என்றால் அவர்கள் செய்ததை மக்கள் தனிப்பட்ட பாவச் செயலாக எடுத்துக் கொண்டார்கள். கே. கருணாகரன் பொதுவான ஒரு கொள்கை முடிவை எடுத்தார், ஆகவே அவர் குற்றவாளி அல்ல. ஆனால் புலிக்கோடன் அவரது கையாலேயே ராஜனைக் கொன்றார். ஆகவே அவர் பாவி.

இந்த முரண்பாட்டை விரிவாகவே யோசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு தீவிரமான புனைகதை வழியாகவே இந்த நுட்பமான மன நாடகத்தைத் தொட்டு விளக்க முடியும்.

நெருக்கடி நிலைக்கால அரசியல் படுகொலைகளில் ராஜன் கொலை மட்டுமே இன்றும் சமூக மனசாட்சியை உலுக்குவதாக, அடிப்படை அறக் கேள்விகளை கேட்கச் செய்வதாக உள்ளது. அதற்குப் பின்னர் கேரள காவல்துறை அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் முழுமையாகவே மாறியது. எளிதில் தப்பிவிட முடியாதென்ற அச்சம் அவர்களிடம் உருவாகியது. இப்போது தெருப்படுகொலைகள் செய்த மார்க்ஸிய-ஆர்.எஸ்.எஸ். அரசியல் தொண்டர்கள் கூடக் காவலர்களால் மிக மரியாதையுடன் கையாளப்படுகிறார்கள். ராஜன் கொலையின் ஒட்டுமொத்த சாதக விளைவு அது எனலாம்.

அதைச் சாதித்தது ராஜனின் தந்தை ஈச்சர வாரியர் மொழியைக் கையாளத் தெரிந்தவராக, இலக்கியமறிந்த பேராசிரியராக இருந்தார் என்பது மட்டுமே.

தொடர்புடைய சுட்டிகள்:
ஆங்கிலத்தில் மின்னூல்
ராஜன் கொலை வழக்கு பற்றி விக்கியில்
ஜெயமோகன் பதிவு

கல்கியின் “தியாகபூமி”

தியாகபூமி பக்கா மசாலா கதை. வெற்றி பெறுவதற்கான எல்லாவற்றையும் கல்கி ஒரு கலக்கு கலக்கிக் கொடுத்திருக்கிறார். சினிமாவாக எடுக்கப்படும் கதை என்ற விளம்பரம். வாராவாரம் சினிமா ஸ்டில்லோடு தொடர்கதை. (எண்பதுகளில் மவுன கீதங்கள், விக்ரம் போன்ற திரைப்படங்களின் கதைகள் இப்படி குமுதத்தில் தொடர்கதையாக வந்து இந்த ஃபார்முலாவை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தின). அன்றைய ஹாட் டாபிக் ஆன சுதந்திரப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு பின்புலம். எல்லாரும், குறிப்பாக பெண்மணிகள் உச்சுக் கொட்ட ஒரு அதிகப் பிரசங்கிக் குழந்தை. கணவனுக்கு நான் ஜீவனாம்சம் தருகிறேன் என்று முழங்கும் புரட்சிப் பெண். அன்று மிகவும் பாப்புலரான விகடன் பத்திரிகையின் platform. தொடர்கதை வெற்றி பெற வேறென்ன வேண்டும்?

ஆனால் கதை பாய்ஸ் கம்பெனி நாடகக் கதைதான். திடுக்கிடும் திருப்பங்கள், சரியான சமயத்தில் உதவி செய்பவர்கள், deux ex machina எல்லாம் உண்டு. கதை மனிதர்கள் – வம்பு பேசும் ஒரு சாஸ்திரி காரக்டரைத் தவிர – எல்லாருமே வெறும் caricatures.

சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்ரியை விருப்பமில்லாமல் ஸ்ரீதரன் மணக்கிறான். சாஸ்திரி நொடித்துப் போய் சென்னைக்கு போய்விடுகிறார். பிரசவத்துக்கு கல்கத்தாவிலிருந்து வரும் சாவித்ரிக்கு விஷயம் தெரியாது. அவள் சாஸ்திரியை தேடி சென்னை செல்ல, குழந்தை பிறக்கிறது. குழந்தையை தற்செயலாகப் பார்க்கும் சாஸ்திரியிடம் விட்டுவிட்டு சாவித்திரி பம்பாய் போகிறாள். ஆறேழு வருஷம் கழித்து தமிழ் சினிமா இலக்கணப்படி பணக்காரியாகத் திரும்புகிறாள். வந்தவுடன் கரெக்டாக சாஸ்திரியை கண்டுபிடித்து பெண்ணை சேர்த்துக் கொள்ள, இதற்குள் கஷ்டப்படும் ஸ்ரீதரன் தன பணக்கார மனைவியிடம் ஒன்றாக வாழவேண்டும் என்று கேஸ் போட, சாவித்திரி நான் உனக்கு ஜீவனாம்சம் தருகிறேன், ஆளை விடு ((அப்போதெல்லாம் விவாகரத்து சட்டம் கிடையாது) என்கிறாள். அப்புறம் வழக்கம் போல சமத்துக் குழந்தையால் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!


சினிமாவில் பாபநாசம் சிவன் சம்பு சாஸ்திரியாகவும், எஸ்.டி. சுப்புலட்சுமி சாவித்ரியாகவும் நடித்தனர். சினிமாவில் குழந்தையாக நடித்த பேபி சரோஜா பெரிய ஸ்டார் ஆனார். என் அம்மாவின் வயதுள்ள ஒரு சக பள்ளி ஆசிரியைக்கு பேபி சரோஜா என்று பேர். அந்தக் காலத்தில் அது மிகவும் பாப்புலரான பேர், நிறைய குழந்தைகளுக்கு அப்படி பேர் வைத்தார்கள் என்று அவர் சொல்வார். இயக்கம் கே. சுப்பிரமணியம். இன்னும் புனே ஃபில்ம் ஆர்க்கைவ்ஸில் பிரின்ட் இருக்கிறதாம். கல்கி விகடனில் சினிமா விமர்சனம் என்று எல்லா சினிமாவையும் கிழிகிழி என்று கிழித்துக் கொண்டிருந்த காலம். இவர் கதை எழுதிய சினிமா வந்ததும் இதுதான் சான்ஸ் என்று எல்லாரும் கல்கியை கிழிக்க, இவர் பதிலுக்கு அவர்களைக் கிழிக்க, விகடன் சர்குலேஷன் எகிறி இருக்கும்! தியாகபூமி திரைப்படமும் பேனா யுத்தமும் என்று கூட ஒரு புத்தகம் வந்திருக்கிறதாம். நல்ல ஆவணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

தியாகபூமி திரைப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது என்று ராண்டார்கை உட்பட பலரும் சொல்கிறார்கள். தடை செய்யப்படும் என்று தெரிந்ததும் கெயிட்டி தியேட்டரில் இலவசமாக படத்தைக் காட்டினார்கள், தடை உத்தரவு வந்து தியேட்டரிலேயே லத்தி சார்ஜ் நடந்தது என்கிறார் ராண்டார்கை. தியோடோர் பாஸ்கரன் தியாகபூமி திரைப்படம் வெளியானபோது ராஜாஜிதான் தமிழ்நாட்டின் (சென்னை மாகாணத்தின்) முதல்வர் (பிரீமியர்), கல்கியின் mentor, ராஜாஜியை மீறி இது நடந்திருக்க வாய்ப்பே இல்லையே என்று சந்தேகத்தை எழுப்புகிறார். திரைப்படம் 1939-ஆம் ஆண்டு, மே இருபதாம் தேதி அன்றைய கெயிட்டி உட்பட்ட பல தியேட்டர்களில் வெளியானதாம். ராஜாஜி மந்திரிசபை அக்டோபர் 29 வரை ஆட்சியில் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் சினிமாக்கள் மாதக்கணக்கில் ஓட வாய்ப்பு உண்டுதான். ஆனால் 150 நாள் ஓடிய பிறகு என்ன பெரிய தடை உத்தரவு என்றுதான் தோன்றுகிறது.

தியாகபூமி கதையே கோரூர் ராமஸ்வாமி ஐயங்கார் கன்னடத்தில் எழுதிய கதையைச் சுட்டு கல்கி எழுதியதோ என்று டோண்டு ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். கோரூர் எழுதிய நாவலின் பேர் ஹேமாவதி.

ஜெயமோகன் இதை சிறந்த social romances லிஸ்டில் சேர்க்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இதை எந்த லிஸ்டிலும் சேர்த்து நான் பார்த்ததில்லை. அசோகமித்ரனும் இ.பா.வும் இதை சிபாரிசு செய்திருக்கிறார்கள் என்று அப்புறம் பார்த்தேன்.

சுவாரசியமான formula கதை. அன்றைய பாய்ஸ் கம்பெனி நாடகங்கள், சினிமா எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் இது உயர்ந்த பொழுதுபோக்கு கதை. ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்ற முறையில் படிக்கலாம். தமிழில் பாபுலர் எழுத்து எப்படி எல்லாம் வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
தியாகபூமி – மின்னூல்
தியாகபூமி திரைப்படத்துக்கு தடை!
திரைப்படத்தைப் பற்றி ராண்டார்கை
தியோடோர் பாஸ்கரனின் சந்தேகம்

சுஜாதாவின் “கொலையுதிர்காலம்”

கொலையுதிர்காலம் குமுதத்தில் தொடர்கதையாக வந்தபோது அதை தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. அவ்வப்போது விட்டு விட்டுத்தான் படிக்க முடிந்தது. படித்த பகுதிகள் மிச்சத்தையும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டின, ஆனால் முழுவதுமாக கிடைக்கவே இல்லை.

சமீபத்தில்தான் முதல் முறையாக முழுமையாகப் படித்தேன். அந்தக் காலத்தில், அதுவும் தொடர்கதையாக இது தூள் கிளப்பி இருக்கும். சின்னச் சின்ன சஸ்பென்ஸ் (சில சமயம் மொக்கை), திறமையான உரையாடல்கள், இன்னும் உயிர்ப்பு இருக்கும் நடை, இன்று கூட முழுமையாக சாத்தியம் இல்லாத டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி வைப்பது (லேசர், தத்ரூபமான ஹோலோக்ராம்?) டெக்னாலஜி vs. அமானுஷ்யம் என்று கலக்கி இருக்கிறார். ஆனால் முழுமையான நாவலாகப் படிக்கும்போது சில குறைகள், சின்னச் சின்ன பிரச்சினைகள் தெரியத்தான் செய்கின்றன.

எண்பதுகளில் சென்னையிலிருந்து திருப்போரூர் வெகு தூரம். அங்கே ஒரு பண்ணையில் வசிக்கும் வியாசன் குடும்பத்தார். நிறைய சொத்துக்கு வாரிசு விரைவில் மேஜர் ஆகப் போகும் லீனா. சுஜாதாவின் வழக்கமான, வசந்த் ஜொள்ளுவிடும் அழகான இளம் பெண். சித்தப்பா குமாரவியாசன்தான் கார்டியன். காதலன் தீபக் கேட்டுக்கொண்டதால் கணேஷும் வசந்தும் பண்ணைக்குப் போய் சித்தப்பாவிடம் பேச ஆரம்பிக்கிறார்கள். முதல் சாப்டரின் இறுதியிலேயே லீனா ஒரு கொலை செய்திருக்கிறாள் என்கிறார் சித்தப்பா. தொடர்கதைகளுக்குத் தேவையான சாப்டருக்கு சாப்டர் அதிர்ச்சியும் ஆச்சு, நமக்கும் சுஜாதா கதைகளில் ஹீரோயின் கொலை செய்யமாட்டாள் என்று தெரியும் அதனால் ஆர்வம் கிளம்புகிறது. சில சமயம் அவளைப் பேய் பிடித்துக் கொள்கிறது என்கிறார் சித்தப்பா. கணேஷும் வசந்தும் பொத்தப்பா என்கிறார்கள். (அப்பாடா எதுகை மொகனை போட்டுவிட்டேன்!) பிறகு சில இரவுகளில் லீனாவைப் போலவே ஒரு உருவத்தைப் பார்க்கிறார்கள். கணேஷ் அதன் அருகே பயந்துகொண்டே தைரியமாகப் போய் அடி வாங்குகிறான். பழைய மரணம் ஒன்று தோண்டப்படுகிறது. ரொம்பப் பழைய காலத்தில் ஒரு பெண் “சாபம்” இட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் கணேஷ் சாமியார் ஆகவில்லை போலிருக்கிறது, கணேஷையும் லீனாவையும் வைத்து இரண்டு மூன்று கிளுகிளு பக்கம். வில்லன் என்று நினைத்த சித்தப்பா கொல்லப்படுகிறார். பிணம் காணாமல் போகிறது. போலீஸ் எப்படி கேசை எழுதுவது, பேய் வந்தது என்று எழுத முடியாதே என்று திகைக்கிறது. கணேஷும் வசந்தும் ஒரு திட்டம் போட்டுக் கொள்கிறார்கள். கணேஷ் இதெல்லாம் சும்மா டெக்னாலஜியை வைத்துச் செய்யும் ஏமாற்று என்று நிறுவ வேண்டும். வசந்த் இல்லை இதெல்லாம் உண்மையிலேயே அமானுஷ்ய நிகழ்ச்சி என்று நிறுவ வேண்டும். இரண்டு பேரும் இரண்டு டீமாக வேலை பார்க்கிறார்கள். கணேஷுக்கு ஒரு விஞ்ஞானி டெக்னாலஜி இவ்வளவு தூரம் முன்னேறவில்லை என்று சொல்கிறார். அப்போது ஒரு “திடுக்கிடும்” திருப்பம். அமானுஷ்யமா, இல்லை டெக்னாலஜியா என்று தெரிந்து கொள்ள புத்தகத்தைப் படியுங்கள்.

சென்னையிலிருந்து திருப்போரூர் வெகு தூரம் என்ற எண்ணம் என்னை மீண்டும் மீண்டும் புன்முறுவலிக்க வைத்தது.

தமிழுக்கு நல்ல த்ரில்லர். எனக்குப் பிடித்த விஷயம் – எல்லாரும் குழம்புவது நன்றாக வந்திருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி நிமிஷத்தில் விடை கண்டுபிடிக்கப்படுவதில்லை. மர்மம் நன்றாகப் பின்னப்பட்டிருக்கிறது. கணேஷும் வசந்தும் ஆரம்பத்திலேயே இரண்டு டீமாகப் பிரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். அவருக்கே அந்த ஐடியா பாதி எழுதிய பிறகுதான் வந்திருக்க வேண்டும்.

இது இலக்கியம் எல்லாம் இல்லை. தொடர்கதைக்குரிய எல்லா பலவீனங்களும் உண்டு. நல்ல துப்பறியும் நாவல் என்று கூட சொல்லமாட்டேன், வாசகர்களை ஏமாற்றுகிறார். சுவாரசியம், complicated மர்மம், கணேஷ்-வசந்தின் ரியலிஸ்டிக்கான குழப்பம் போன்றவைதான் இன்னும் படிக்க வைக்கின்றன.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் மிஸ் செய்யாதீர்கள்.

விமலாதித்த மாமல்லன் – ஜெயமோகனை சதா பின் தொடரும் நிழலின் குரல்

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஒன்று, ஒன்றரை வருஷத்துக்கு முன் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தின் மூலக்கரு தான் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் என்ற சிறுகதைதான், அதை ஜெயமோகன் மறைக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதைப் பற்றி கருத்து சொல்லக் கூடியவர்கள் ஜெயமோகன், மாமல்லன், மற்றும் இந்த இரண்டையும் படித்தவர்கள். மாமல்லன் என்ன நினைக்கிறார் என்பது தெளிவு. ஜெயமோகன் கண்டு கொள்ளவே இல்லை. அப்போது அந்தக் கதையை நான் படித்திருக்கவில்லை. வீணான யூகங்களில் பயனில்லை என்று நானும் கம்மென்று இருந்துவிட்டேன்.

ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். நான் ஒரு சுயநலவாதி. எனக்கு வேண்டியது நல்ல வாசிப்பு அனுபவம். ஜெயமோகன் காப்பி அடித்திருந்தால் அது எனக்கு இரண்டாம் பட்சமே. அசோகமித்ரன் “Boarded Window” கதையைப் படித்து பிரயாணம் எழுதி இருக்கக் கூடும். புதுமைப்பித்தன் வால்டர் மிட்டி கதையைப் படித்து சுப்பையாப் பிள்ளையின் காதல்கள் கதையை எழுதி இருக்கலாம். பிரேம்சந்தின் சால்ட் இன்ஸ்பெக்டர் கதையைப் படித்துத்தான் கல்கி புது ஓவர்சியர் கதையை எழுதி இருக்கிறார் என்பது தெளிவு. எனக்கென்ன போச்சு? பிரயாணம், சு. பிள்ளை இரண்டும் எனக்கு வித்தியாசமான, உயர்ந்த வாசக அனுபவத்தை தருகின்றன. புது ஓவர்சியர் தரவில்லை. அதனால் நான் பிரயாணம், சு. பிள்ளை இரண்டையும் உயர்ந்த இடத்தில் வைக்கிறேன், புது ஓவர்சியர் கதையை நிராகரிக்கிறேன். அத்தோடு முடிந்தது.

ஜெயமோகன் காப்பியே அடித்திருந்தாலும் பி. தொ. நி. குரல் ஒரு உலக சாதனை என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அப்புறம் இன்னும் சில விஷயங்கள் எனக்குத் தெளிவாகத் தெரிந்தன. 25 பக்கக் கதையை காப்பி அடித்து ஆயிரம் பக்கம் எழுதுவது எல்லாம் நடக்காத காரியம். கண்ணெதிரில் புகாரின் என்ற நிஜ மனிதரின் வாழ்க்கை இருக்கும்போது ஜெயமோகனுக்கு ஒரு சிறுகதையைக் காப்பி அடித்து கதைக்கரு கண்டுபிடிக்க வேண்டியதில்லை. பழைய பேப்பர் கடையில் நோட்டுப் புத்தகம் வாங்குவது போலவும் அதில் ஒரு கதை இருப்பது போலவும் சுஜாதா எழுதிய காயத்ரி புத்தகத்தில் கூடத்தான் வருகிறது. அதற்காக மாமல்லனின் கதைக்கரு சுஜாதாவை காப்பி அடித்து எழுதப்பட்டது என்று சொல்ல முடியுமா என்ன? மாமல்லனாவது முப்பது நாற்பது கதை எழுதி பிரசுரித்திருக்கிறார். நான் ஒரே ஒரு (சுமாரான) கதை மட்டுமே பிரசுரித்திருக்கிறேன், அதுவும் இணையத்தில் மட்டுமே. என் கம்ப்யூட்டரில் நான் எழுதி வைத்திருக்கும் மூன்று கதைகளைப் போலவே கரு உள்ள கதைகளை நான் படித்திருக்கிறேன். கீதா பென்னட் “முந்தைய நாள் சாப்பாட்டை” ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடும் ஒரு NRI-யின் சமையல்காரத் தாய்க்கு அந்த முந்தைய நாள் சாப்பாடு மேல் இருக்கும் aversion-ஐப் பற்றி எழுதி இருக்கிறார். ஜெயமோகனே வாழ்க்கையில் எவ்வளவோ சிறுமைகள் அடைந்தும் ஜாதி பிரக்ஞை போகாத ஒருவரைப் பற்றி கதை எழுதி இருக்கிறார், அந்த சாயலில் நானும் கதை எழுதி வைத்திருக்கிறேன். பாண்டு பிள்ளைகள் பாண்டவர் என்று அழைக்கப்பட, திருதராஷ்டிரன் பிள்ளைகள் தாரத்தராஷ்டிரர் என்று இல்லாமல் குருவம்சத்தவர் என்று பொருள்படும்படி கௌரவர் என்று அழைக்கப்பட்டதிலும் அரசியல் உள்குத்து என்று ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன், தேவகாந்தன் அதை கதாகாலம் நாவலில் சொல்லி இருக்கிறார். நான் எப்படி இந்தக் கதைகளை நான் காப்பி அடிக்கவில்லை, இவை எல்லாம் என் சொந்த மூளையில் உருவானவையே, இவற்றை எழுதிய பிறகே இந்த “மூலக்கதைகளை” படித்தேன் என்று நிரூபிக்க முடியும்? முதல் படி கூட ஏறாத – படியை விடுங்கள், “ப” கூட ஏறவில்லை – எனக்கே இது பிரச்சினை என்றால் ஜெயமோகனுக்கு இருக்காதா?

இன்னொரு சின்ன விஷயம். மு.வ.வெ. புறாக்கள் சிறுகதையை ஒரு வழியாகப் படித்துவிட்டேன். இதிலிருந்துதான் பி.தொ.நி. குரல் உருவானது என்று மாமல்லன் நினைத்தாரானால் அவர் நாவலைப் படிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணங்களுக்கு அவர் நேர்மையாக இருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அவரது கருத்துகள் ஏதோ கோபத்தில் உண்டானவை போலத் தெரிகிறது. இதனால்தானோ என்னவோ எப்போதும் ஜெயமோகனை நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மு.வ.வெ. புறாக்கள் சிறுகதையைப் பற்றி ஒரு வார்த்தை – எனக்கு இன்னும் இலையும் போர்வையும்தான் டாப் என்றாலும் இதுவும் அந்த வரிசையில் வைக்கக் கூடிய சிறுகதைதான்.

பிற்சேர்க்கை: ஜெயமோகனை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். என் மரியாதைக்குரிய நண்பர். அவருடன் உள்ள நட்பு இந்தப் பதிவை, மாமல்லனின் குற்றச்சாட்டைப் பற்றிய என் முடிவை பாதிக்கக் கூடாது என்பது எனக்கு முக்கியம். அப்படித்தான் இதை எழுதி இருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
விமலாதித்த மாமல்லனின் குற்றச்சாட்டு
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை
கிரிதரனின் பதிவு