பூமணி: கொம்மை

எனக்கு மகாபாரதம் என்றால் பித்து. பூமணி என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். மகாபாரதத்தை அவரது கோணத்தில் எழுதி இருப்பதை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.

புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. பூமணி மகாபாரதத்தை கொஞ்சம் கொச்சையான பேச்சுமொழியில் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான். உதாரணமாக அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் அச்சு, கிச்சு, கருத்த மச்சான், கருவாயா என்று அழைத்துக் கொள்கிறார்கள். இது ஒன்றே போதும் என்று பூமணி நினைத்துவிட்டார். நாளைக்கு பாரதத்தை சென்னைத் தமிழில் கூட எழுதலாம். “நீ சுபத்ரையை டாவு கட்டி இஸ்துக்கினு ஓட்று” என்று கிஷ்டன் அர்ச்சுனுக்கு அட்வைஸ் கொடுப்பதாக எழுதலாம். அதில் என்ன தரிசனம், கவித்துவம், நயம் இருக்கிறது? சில இடங்களில் அபூர்வமாக அந்த மொழியின் “பொருந்தாத்தன்மை” சின்னப் புன்னகையை வர வைக்கிறது, அத்தோடு சரி.

நாட்டார் இலக்கியப் பாணியில் எழுத முயற்சித்தாரோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த கொச்சையான பேச்சுமொழியை விட்டுவிட்டால்; பொன்னருவி கதையை இணைத்திருப்பது (கர்ணனை சூதன் என்று அவமானப்படுத்தும் மனைவி, புகழேந்திப் புலவர் இந்த நாட்டார் கதையை அம்மானையாக எழுதி இருக்கிறார் என்று நினைவு), விதுரனின் அம்மாவின் கணவன் அந்தப்புர காவலன், அதனால் காயடிக்கப்பட்டான் என்ற கற்பனை, இந்திரப்பிரஸ்தத்துக்கு வரும் இடும்பி-கடோத்கஜன் அவமானப்படுத்தப்படுவது என்ற கற்பனை, காந்தாரி சகுனியை உன் மாதிரி சகோதரன் இருந்து என்ன பயன் என்று திட்டும் இடம் என்று வெகு சில இடங்களில்தான் அது தெரிகிறது.

பூமணி இந்த நாவலை மகாபாரத நாயகிகளை, அவர்களது உணர்வுகளை முன்வைத்து எழுதினாராம். சில இடங்களில் – குறிப்பாக இடும்பி, பாஞ்சாலி-சுபத்திரை உறவு, காந்தாரியின் மன உளைச்சல் என்று இருந்தாலும் பொதுவாக இது மகாபாரதக் கதையை அப்படியேதான் திருப்பிச் சொல்கிறது. குந்தியையும் திரௌபதியையும் கதாநாயகிகள் என்று சொல்லலாம். திரௌபதி துகிலுரியப்படும்போது மீட்பது கிருஷ்ணன் அல்ல; தன்னைத் தானே மீட்டுக் கொள்கிறாள்!

விதுரன் யுதிஷ்டிரனின் தந்தை; திருதராஷ்டிரன் பீமனின் தந்தை என்ற கற்பனைகளை வேறு இடங்களில் படித்திருக்கலாம்; சகுனி நகுல-சகதேவனின் தந்தை என்ற என் கற்பனையையும் படித்திருந்தால் நூறாண்டு வாழ்க! ஆனால் கிருபர் அர்ஜுனனின் தந்தை என்ற கற்பனையை இங்கேதான் முதல் முறையாகப் படித்தேன். நானும் அப்படி யோசித்திருக்கிறேன், ஆனால் பாண்டவர்களை எரிக்கச் சென்று உபபாண்டவர்கள் படுகொலையில் பங்கு கொள்ளும் கிருபரை அர்ஜுனனின் தந்தையாக வைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை. தன் பேரனை தானே கொல்பவரா கிருபர்?

கொம்மை என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பினேன். நல்ல வேளையாக அவரே அதன் பல அர்த்தங்களை நாவலின் ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டார். கொம்மை என்றால் “திரண்ட”, “குமிழ் போன்ற” என்று பொருளாம். கொம்மை முலை என்றெல்லாம் வார்த்தை பிரயோகம் உண்டாம். ஒரு வேளை பெண்மையைக் குறிக்கும் விதமாக கொம்மை என்று பேர் வைத்தாரோ என்னவோ.

தீவிர மகாபாரதப் பிரியர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைப்பேன்.

பின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதிய பிறகு நண்பர் ரெங்கசுப்ரமணி இதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று பார்த்தேன். அவர், கேசவமணி, நான் மூவருக்கும் ஏறக்குறைய ஒரே அலைவரிசை. (கேசவமணி இப்போதெல்லாம் எழுதுவதை நிறுத்திவிட்டாரோ?) கொம்மையைப் பற்றி எனது கருத்துக்கள்தான் அவருக்கும்

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம், மகாபாரதப் பக்கம்

தொடர்புடைய சுட்டி: கொம்மை பற்றி ரெங்கா

அசுரன் திரைப்படத்தின் அடிப்படை – பூமணியின் “வெக்கை”

(மீள்பதிப்பு)

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் அசுரன் திரைப்படம் வெக்கையை அடிப்படையாகக் கொண்டதாம். அதனால்தான் இந்த மீள்பதிவு.

புத்தகம் தரும் அனுபவத்தை கெடுத்துவிடுவார்களோ என்று கொஞ்சம் பயம் இருந்தாலும், இந்த மாதிரி முயற்சிகளை வரவேற்கத்தான் வேண்டும். வெற்றிமாறனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

வெக்கை எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று.

ஒரு கொலையோடு ஆரம்பிக்கிறது கதை. ஒரு சிறுவன் தன அண்ணனைக் கொன்ற ஒருவனை போட்டுத் தள்ளுகிறான். அப்புறம் கதை பூராவும் அவனும் அவன் அப்பாவும் ஓடி ஒளிவது மட்டும்தான். கதையில் வேறு ஒன்றுமே கிடையாது.

ஆனால் கதை பூராவும் தெரிவது அன்பு. அப்பாவுக்கும் பையனுக்கும், பையனுக்கும் அண்ணனுக்கும், சித்திக்கும் பையனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. குடும்பம், சுற்றம், உறவினர்கள், பங்காளிகள், சாதி சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவு; வாழ்க்கையின் தவிர்க்க முடியாத சமரசங்களின் ஊடாகவும் தெரியும் அன்பு. ஒரு கொலை, பழி வாங்குதலை foreground-இல் வைத்து அதில் அன்பை மட்டும் காட்டி இருப்பது பூமணியின் சாதனை.

சுவாரசியத்துக்கும் குறைவே இல்லை. கதை பூராவும் ஒளிந்து வாழும்போது என்ன சாப்பிடுகிறார்கள், என்ன சமைக்கிறார்கள் என்றுதான் – ஆனால் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது.

தமிழின் சாதனைகளில் ஒன்று. இதை மொழிபெயர்ப்பது கஷ்டம், ஆனால் சரியானபடி மொழிபெயர்த்தால் உலகம் முழுதும் பேசப்படும்.

ஜெயமோகன் இந்த நாவலை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

பூமணி தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தலித் எழுத்தாளர் என்று நினைக்கிறேன். அவருடைய தலித்தியம் பிரச்சார நெடி அடிக்காத தலித்தியம். அவருடைய பிறகு நாவல் இன்னொரு குறிப்பிட வேண்டிய படைப்பு. (எனக்கு வெக்கைதான் டாப்.)

கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம்

பிடித்த சிறுகதை – பூமணியின் ‘ரீதி’

Poomaniஎன்று ‘வெக்கை‘ நாவலைப் படித்தேனோ அன்றிலிருந்தே பூமணி என் மனதில் சம்பிரமமாக உட்கார்ந்துவிட்டார். கிராமத்தின், ஜாதி பின்புலத்தை, நுண்விவரங்களோடு கதையோடு பிணைத்துவிடுவதில் அவர் கில்லாடி. அந்த கில்லாடித்தனம் வெளிப்படும் இன்னொரு பிரமாதமான சிறுகதை ரீதி. ‘புளிச்ச தண்ணி’ கூட கிடையாது என்று விரட்டிவிடும் அம்மா, படிக்கப் போன இடத்தில் சோறு இல்லாமல் திரும்பி வரும் அண்ணன், அணிலைத் தின்று ஒரு வேளையை ஓட்டும் சிறுவர்கள் என்று ஒரு பிரமாதமான ஓவியத்தையே தீட்டிவிடுகிறார்.

புரியாத விஷயம் ஒன்றுண்டு – அது என்ன தலைப்பு, ‘ரீதி’ என்று? தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பு?

எஸ்ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் ரீதி இடம் பெறுகிறது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம்

பூமணிக்கு 2014 சாஹித்ய அகாடமி விருது

Poomaniஅஞ்ஞாடி” நாவலுக்காக பூமணிக்கு சாஹித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டுள்ளது. நாஞ்சில், ஜோ டி க்ரூஸ், பூமணி – பரவாயில்லையே, நல்ல எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்து தங்களை உயர்த்திக் கொண்டுள்ளார்கள். (இந்த முறை பரிந்துரைத்த குழுவில் இருந்தவர்கள் சிவசங்கரி, புவியரசு, ஈரோடு தமிழன்பன்.)

என்று “வெக்கை” நாவலைப் படித்தேனோ அன்று முதலே பூமணி என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்தான். இன்றும் “வெக்கை”யைத்தான் நான் அவரது சிறந்த நாவலாக மதிப்பிடுகிறேன். – “பிறகு” நாவலை விட.

இது வரையில் தகுதி உள்ளவர்களுக்கே கொடுக்கப்பட்டு வரும் விஷ்ணுபுரம் விருது அவருக்கு 2012-ஆம் வருஷம் வழங்கப்பட்டிருக்கிறது.

“அஞ்ஞாடி”யை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் நான் நல்ல வாசகர்கள் என்று எண்ணும் சிலர் அதைக் குறையுள்ள நாவலாகவே கருதுகிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறேன்.

என் கண்ணில் சாஹித்ய அகாடமி விருது, ஞானபீட விருது ஆகியவை முக்கியமானவை. நல்ல தமிழ் எழுத்தாளர்களை பிற மாநிலத்தவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வார்கள்? எனக்குத் தெரிந்த பிற இந்திய மொழி எழுத்தாளர்கள் அனேகமாக இப்படி ஏதாவது விருது பெற்றவர்களே. அதனால் பூமணி போன்றவர்கள் விருது பெறும்போது நான் உண்மையிலேயே பூரிக்கிறேன். அகிலனுக்கு ஞானபீடம் என்றால் தலை குனிய வேண்டியிருக்கிறது.

விருது பெற்றவர்களின் முழு பட்டியலை இங்கு காணலாம்.

ஆயிஷா புகழ் இரா. நடராசனுக்கு “விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் புத்தகத்துக்காக பால புரஸ்கார் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. யுவ புரஸ்கார் விருது ஆர். அபிலாஷுக்கு “கால்கள்” என்ற புத்தகத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் இமையம் இந்தப் புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார். மொழிபெயர்ப்புக்கான விருது இறையடியானுக்கு – கன்னடத்தில் சங்கர் மோகாஷி புனேகர் எழுதிய அவதேஸ்வரி என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் – கிடைத்திருக்கிறது. அவதேஸ்வரியும் சாஹித்ய அகாடமி விருது பெற்ற நாவலே. மலையாளத்தில் திருவாசகத்தை மொழிபெயர்த்த உள்ளூர் எம். பரமேஸ்வரனுக்கும், அப்துல் கலாமின் “அக்னிச் சிறகுகள்” புத்தகத்தை மணிபுரியில் மொழிபெயர்த்த இபோசா சொய்பாமுக்கும் மொழிபெயர்ப்பு விருதுகள் கிடைத்திருக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், பூமணி பக்கம்

பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது

போன வருஷம் ஆ. மாதவன். இந்த வருஷம் பூமணி.

நான் பூமணியின் பரம ரசிகன். வெக்கையை இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன். பழி வாங்குவதையும் வன்முறையையும் தப்பி ஓடுவதையும் foreground-இல் வைத்து நாவல் முழுதும் அன்பால் நிறைந்திருப்பது பெரிய சாதனை.

பிறகு இன்னொரு சாதனை, ஆனால் அது எனக்கு வெக்கைக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது. நைவேத்யம் எனக்கு சுமார்தான். வரப்புகளோ வாய்க்காலோ ஏதோ ஒரு பேரில் ஒரு கிராமப் பள்ளியை பின்புலமாக வைத்து எழுதிய கதை எனக்கு பர்சனலாக நெருக்கமானது. என் அப்பாவும் அம்மாவும் கிராமப் பள்ளிகளில் வேலை பார்த்த சூழலை எனக்கு நினைவூட்டியது. அவரது சிறுகதைகளும் – குறிப்பாக நல்ல நாள் சிறுகதைத் தொகுதி – எனக்குப் பிடித்தமானவை. என் அபிமான ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்தை பல இடங்களில் நினைவூட்டின.

சரியானவர்களை தேர்ந்தெடுத்த விஷ்ணுபுரம் குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஆ. மாதவனையும் பூமணியும் கவுரவிப்பதால் விஷ்ணுபுரம் விருது பெருமை பெறுகிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:
விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு
வெக்கை
அழியாச்சுடர்கள் தளத்தில் பூமணியின் சில சிறுகதைகள்