கேகேஎம் (பின் தொடரும் நிழலின் குரல்)

பின் தொடரும் நிழலின் குரல் நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று. நாவல் conceive செய்யப்பட விதம் பல புனைவு வடிவங்களை – நாடகம், சிறுகதை etc . – கதையில் புகுத்த ஏதுவாக அமைந்திருக்கும். அந்த கான்செப்ட், அது செயல்படுத்தப்பட்டிருக்கும் விதம் இரண்டுமே ஜெயமோகனின் ஜீனியசை காட்டுகின்றன.

நாவலில் கேகேஎம் என்று லோகல் கம்யூனிஸ்ட்/தொழிற்சங்கத் தலைவர். நிரந்தரப் போராளி. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும்போது இந்தப் போராளி எதை எதிர்த்துப் போராடுவது என்று தெரியாமல் விழிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அவரது சிஷ்யனான அருணாச்சலமே அவரைப் பதவியிலிருந்து இறக்கும் சதியில் பங்கேற்கிறான். தோழர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை ஒரு ஆன்மீகவாதியாக கழிக்கிறார். அற்புதமான கதாபாத்திரம்.

கேகேஎம்மின் ஒரிஜினல் யார் என்று என்ற கேள்வி ரொம்ப நாளாக மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது. ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவரையே கேட்டேன், அவர் பிடி கொடுத்துப் பேசவில்லை.

கே.பி.ஆர். கோபாலன் என்ற கேரளா கம்யூனிஸ்ட் தலைவரைப் பற்றி ஜெயமோகன் எழுதி இருக்கும் ஒரு பதிவு ஒன்றைக் கண்டேன். யார் கேகேஎம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடின் அரசு கோவில் நிலங்களைத்தான் மறுவிநியோகம் செய்தது என்று கேகேஎம் நாவலிலும் குறைப்படுவார் என்று நினைவு. கேகேஎம்மும் நீண்ட காலம் கழித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார்.

கே.பி.ஆர். போன்ற ஆளுமைகள் எப்போதுமே ஆச்சரியப்படுத்துகின்றன. இவர் போன்றவர்கள் நான் எண்ணி இருந்த அளவு அபூர்வம் இல்லை என்பது நம்பிக்கை அளிக்கும் விஷயம். கே.பி.ஆர். முன்னாள் கேரளா முதல்வர் ஈ.கே. நாயனாரின் அங்கிள் (மாமாவா, பெரியப்பாவா, சித்தப்பாவா என்று தெரியவில்லை), நாயனாருக்கு ஒரு inspiration என்றும் எங்கோ படித்தேன்.

இணையத்தில் தேடியதில் கே.பி.ஆரின் ஃபோட்டோ எதுவும் சரியாக கிடைக்கவில்லை. கே.பி.ஆரும் நாயனாரும் சேர்ந்து இருக்கும் ஒரு இத்துனூண்டு ஃபோட்டோதான் கிடைத்தது. எலும்பும் தோலுமாக கே.பி.ஆர். இருப்பதும் கொஞ்சம் வளப்பமாக நாயனார் இருப்பதும் என் மனதில் இருந்த பிம்பத்துக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகன் பதிவு
கே.பி.ஆர். பற்றிய விக்கி குறிப்பு

அஞ்சலி – ர.சு. நல்லபெருமாள்

எழுத்தாளர் ர.சு. நல்லபெருமாள் மறைந்தார் என்று ஜெயமோகன் தளத்தில் படித்தேன். என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளருக்கு அஞ்சலி என்றால் அவர் எழுத்தைப் பற்றி பேசுவதுதான். நான் அவரது கல்லுக்குள் ஈரம் புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை. அவரது மாய மான்கள் என்ற புத்தகத்தை லோகல் லைப்ரரியில் பார்த்த நினைவு இருந்தது, அதையாவது படித்துவிட்டு அஞ்சலியை எழுதுவோம் என்று தள்ளிப் போட்டேன்.

கல்லுக்குள் ஈரம் நாவலைப் பற்றி என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். சில வருஷங்களுக்கு முன்தான் படிக்க முடிந்தது. இப்போது மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. காந்தியை கொல்ல நினைக்கும் ஒருவன் மனம் மாறுகிறான் என்று வெகு சுருக்கமாக சொல்லலாம். என்னை கவர்ந்த அம்சம் மெலோட்ராமா குறைவாக இருந்ததுதான். ஒரு அலை ஓசை அளவுக்கு நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள் எல்லாம் கிடையாது. பாத்திரங்கள் ஓரளவு உண்மையானவர்களாக, நம்பகத்தன்மை உடையவர்களாகத் தெரிந்தார்கள். ஒரு above average “வணிக நாவல்” என்று சொல்லலாம். ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இங்கே வாங்கலாம். விலை 230 ரூபாய்.

ஹே ராம் படம் இதைத் தழுவி எடுக்கப்பட்டது என்கிறார்கள். எனக்கு நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன.

மாயமான்கள்: சில பாத்திரங்களை மட்டும் காட்டுகிறார், கதை என்பதே இல்லை. கட்சி பலத்தை வைத்து எல்லாரிடமும் பணம் பிடுங்கும் வக்கீல்; அவரது இளம் மனைவி; ஜட்ஜ்; அவரது இளம் மனைவி, நியூவேவ் கதைகள் எழுதுபவர்; அந்த கதைகளைப் பதிக்கும் பத்திரிகை ஆசிரியர் – அவளை வளைக்கப் பார்க்கிறார்; இளம் ஜூனியர் வக்கீல்கள், சம்பத் பணக்கார நளினியை மணந்து சுகவாழ்க்கை வாழப் பார்க்கிறான். நளினியின் அப்பா, மில் முதலாளி; எல்லாரும் caricatures மட்டுமே. தவிர்க்கலாம்.

நல்லபெருமாள், அகிலன், நா.பா., மு.வ. போன்றவர்கள் கொஞ்சம் லட்சியவாதம், சமூகப் பிரக்ஞை உள்ள வணிக எழுத்தாளர்கள். சமூகத்தைத் திருத்த வேண்டும், சமூக அவலங்களை எழுத்தில் காட்ட வேண்டும் என்ற நோக்கம் அவர்கள் எழுத்தில் தெரிகிறது. துரதிர்ஷ்டம், அவர்கள் எழுதியது எல்லாம் கால ஓட்டத்தில் மறைந்துவிடும் என்றே கருதுகிறேன். நல்லபெருமாளின் பலம் (நான் படித்த இரண்டு புத்தகங்களை மட்டும் வைத்து) ஓரளவு மெலோட்ராமா, உபதேசம் ஆகியவற்றை குறைத்து நம்பகத்தன்மையை கொஞ்சம் அதிகரித்து எழுதி இருப்பது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் கல்லுக்குள் ஈரம் படிக்கலாம்.

அட்லஸ் ஷ்ரக்ட் திரைப்பட விமர்சனம்

நான் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged). அதன் தாக்கம் இன்னும் என் மேல் இருக்கிறது.

எதேச்சையாக போன வெள்ளிக்கிழமை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தது. போகலாம் என்று முடிவு செய்தேன். இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்சும் வந்தான். தியேட்டருக்குள் நுழைந்தால் எங்களையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.

படத்தின் தரம் அப்படி. ஏறக்குறைய புத்தகத்தில் உள்ளபடிதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் நடிப்பு எல்லாம் படு சுமார். அதுவும் ஹாங்க் ரியர்டனாக நடிக்கும் கிரான்ட் பௌலர் மரம் மாதிரி நிற்கிறார். எல்லிஸ் வ்யாட்டாக வரும் கிரஹாம் பெக்கல் மட்டுமே நன்றாக நடித்திருக்கிறார்.

கதையின் முதல் பாகம் மட்டுமே இப்போது திரைப்படமாக வந்திருக்கிறது. திறமைசாலி தொழிலதிபர்கள் எல்லாரும் மெதுமெதுவாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ரயில் கம்பெனி நடத்தும் டாக்னி டாகர்ட் தன்னுடைய அண்ணன் மற்றும் கம்பெனி CEO ஆன ஜிம் டாகர்ட் உட்பட்ட பலரிடமிருந்து முட்டுக்கட்டைகளை சந்திக்கிறாள். ஜிம் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கும் டைப். டாக்னியோ உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று என்னும் டைப். எல்லிஸ் வாட் என்ற பெட்ரோலிய கம்பெனி முதலாளி தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ரயில் கம்பெனியை ஜிம் தன் அரசியல் நண்பர்களை வைத்து மூடிவிடுகிறான். வ்யாட்டுக்கு டாகர்ட் ரயில் கம்பெனியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால் டாகர்ட் ரயில் கம்பெனி ரயில்களை சரியாக ஓட்டுவதில்லை. தண்டவாளத்தின் தரம் மோசமாக இருப்பதால் ரயில்கள் நேரத்தில் வருவதில்லை, விபத்துகள் ஏற்படுகின்றன. டாக்னி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ரியர்டன் உலோகத்தை வைத்து தண்டவாளத்தைப் போடுகிறாள். ரியர்டன் உலோகக் கம்பெனி முதலாளி ஹாங்க் ரியர்டன் அவளுக்கு பல உதவிகளை செய்கிறார். அவர்களுக்கு எதிராக ஊடகங்கள், அரசு ஆராய்ச்சி நிறுவனம், பலரும் வேலை செய்கிறனர். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தண்டவாளம் போடப்படுகிறது, ரியர்டன் உலோகம் உண்மையிலேயே ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்று உலகம் உணர்கிறது. ஆனால் வியாட் இனி மேல் கம்பெனி நடத்த முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகிறது. வியாட் தன் பெட்ரோல் கிணறுகளில் தீ வைத்துவிட்டு மறைந்து போய்விடுகிறார்.

இந்த மாதிரி பிரச்சாரக் கதைகளை படமாக்குவதும் கஷ்டம். இது கம்யூனிசத்தை எதிர்த்து காபிடலிசத்தின் புகழ் பாடும் கதை. கதையின் ஒரு பகுதியில் ஐம்பது அறுபது பக்கங்களுக்கு ஒரு சொற்பொழிவு வரும். 🙂 இதையெல்லாம் படத்தில் வைத்தால் ஒருவரும் வரமாட்டார்கள்.

டெய்லர் ஷில்லிங் டாக்னியாகவும், மாத்யூ மார்ஸ்டன் ஜிம் டாகர்ட்டாகவும், சு கார்சியா ஃ பிரான்சிஸ்கோ டன்கோனியாவாகவும், கிரான்ட் பௌலர் ஹாங்க் ரியர்டனாகவும், கிரஹாம் பெக்கல் எல்லிஸ் வ்யாட்டாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பால் ஜொஹான்சன்.

படம் தீவிர அட்லஸ் ஷ்ரக்ட் புத்தக ரசிகர்களுக்கு மட்டும்தான். திரைப்படம் என்ற வகையில் தோல்வியே.

தியேட்டரை விட்டுப் போகும்போது மீண்டும் எண்ணிப் பார்த்தேன். பத்து பேர் இருந்தோம். முதல் நாளே, அதுவும் வெள்ளி இரவு அன்றே இப்படி நிலைமை என்றால் படம் ஓடாது!

P.S. சினிமா தளமான அவார்டா கொடுக்கறாங்கவிலும் இந்த விமர்சனம் வந்திருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
திரைப்படத்தின் தளம்
ஐஎம்டிபி குறிப்பு

ஹாரி பாட்டர் சினிமா ட்ரெய்லர் – டெத்லி ஹாலோஸ் இரண்டாம் பகுதி

திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது.

சுஜாதாவின் குறுநாவல் (கணேஷ்-வசந்த்) – “மலை மாளிகை”

சில சமயம் சுஜாதாவுக்கு ஒரு கான்செப்ட்-ஐ தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றும். அதை வைத்து சின்னதாக ஒரு கதை எழுதுவார். இருதய மாற்று சிகிச்சையை வைத்து “உள்ளம் துறந்தவன்” என்று ஒரு நாவல், muscular dystrophy உள்ள ஒரு சிறுவன் பற்றிய ஆஸ்டின் இல்லம் என்று ஒரு சின்ன நாவல் (அப்பாவின் ஆஸ்டினா? திருத்திய இனியாவுக்கு நன்றி!) என்று சில நினைவு வருகின்றன. இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். Gerontology, Longevity, கூடுவிட்டு கூடு பாய்வது என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு கணேஷ் வசந்த் கதை எழுதி இருக்கிறார்.

சிம்பிளான கதை. கொடைக்கானல். வயதான, longevity பற்றி ஆராயும் செல்வந்தர் செல்வரங்கம். அவருக்கு ஒரு அழகான பெண் அசிஸ்டன்ட் – காஞ்சனா. (பின்னே வசந்த் யாரை சைட் அடிப்பது?) செல்வரங்கம் கணேஷையும் வசனத்தையும் கொடைக்கானலுக்கு அழைக்கிறார். போகிற வழியில் காஞ்சனாவைப் பார்க்கிறார்கள். காஞ்சனா நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. செல்வரங்கத்தின் வீட்டில் ஆமைகள் (ஆமைகள் நீண்ட நாள் உயிர் வாழும்), மூலிகைகள் என்று என்னவெல்லாமோ தட்டுப்படுகிறது. காஞ்சனாவையும் பார்க்கிறார்கள். உள்ளே போனால் செல்வரங்கத்தின் உயிரற்ற உடல். போலீசுக்கு ஃபோன் செய்கிறார்கள். ஆனால் செல்வரங்கம் உயிரோடுதான் இருக்கிறார். குழப்பம். பிறகு செல்வரங்கம் தான் உயிர் என்றால் என்ன, உயிரை ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு மாற்றுவது எப்படி என்றெல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார். காஞ்சனாவின் உடலுக்குள் தன் உயிரை செலுத்துவது போல ஒரு காட்சி. காஞ்சனா பேசுவதே இல்லை. என்ன மர்மம்? படித்துக் கொள்ளுங்கள்.

ஒரு quote:
கணேஷ் வசந்தை கேட்கிறார்: “காதல்னா உன் அகராதியின் என்ன அர்த்தம்?”
வசந்த்: “அது வந்து, ஒரு மாதிரி சிலுத்துக்கும் பாஸ். மூக்கு நுனில சில்லுன்னும் காத்து நுனில வெப்பமாகவும் இருக்கும். அப்புறம் இருப்புக் கொள்ளாது. எதையாவது எதாலயாவது பண்ணிக்கிட்டே இருக்கணும் போல… உங்களுக்குப் புரியாது பாஸ்!”

பெரிதாக முடிச்சு போட்டுவிட்டார். அதை எப்படி அவிழ்ப்பது? என்னவோ எழுதி முடித்திருக்கிறார். கதை பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எனக்கு தேறவில்லை. கணேஷ் வசந்த்தின் தீவிர ரசிகர்களுக்காக மட்டும்.

கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை 30 ரூபாய்.

சுந்தர ராமசாமியின் “நினைவோடை – ஜீவா”

சுந்தர ராமசாமி சில ஆளுமைகளை – கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, எழுத்தாளர்கள் க.நா.சு., சி.சு. செல்லப்பா, நண்பர் கிருஷ்ணன் நம்பி மற்றும் சிலரைப் பற்றிய தன் நினைவுகளை நினைவோடை என்ற சீரிஸில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எல்லாம் சின்ன சின்ன புத்தகங்கள், சுலபமாக ஒரு இருபது முப்பது நிமிஷத்தில் படித்துவிடலாம். இவை எதுவும் வாழ்க்கை வரலாறு இல்லை. சுந்தர ராமசாமிக்கு அவர்களோடு இருந்த தொடர்பு, சுராவின் கண்ணில் இவர்கள் என்றுதான் இருக்கிறது.

ஜீவாவைப் பற்றி என் தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஓரளவு தலைவர்கள், சமகால தமிழக நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ள எனக்கே கூட ஜீவா ஒரு பேர்தான். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என்ன சாதித்தார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டாரா என்பது கூடத் தெரியாது. சுரா ஜீவாவின் ஆளுமையை சுலபமாகக் காட்டிவிடுகிறார்.

ஜீவாவின் பங்களிப்பு ஒரு தொழிற்சங்கவாதி என்றோ, அறிவுஜீவி என்றெல்லாம் இல்லை. அவர் ஒரு people person. எல்லாருடனும் கலந்து பழகுபவர். பேச்சாளர். அதுவும் அன்றைக்கு மக்கள் மனதை கவரக் கூடிய விதத்தில் பேசுவதில் வல்லவர்கள் – அண்ணாதுரை, கருணாநிதி, ம.பொ.சி. என்று பலர் இருந்தார்கள். இவர் அவர்களிலேயே சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். கூட்டத்தை கவரக்கூடிய charisma உள்ளவர். தான் சித்தாந்தத்தை கரைத்துக் குடித்தவன் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. எப்பேர்ப்பட்டவனுக்கும் ஏதோ தெரிந்திருக்கும், அதைப் பற்றி பேச வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். வரட்டு சித்தாந்தத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். உண்மையிலேயே இவரை மாதிரி ஆளுக்காகத்தான் ஓட்டு விழும். மனிதர்களின் இதயத்தை தொடக்கூடியவர். நல்ல மனிதர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஆனால் இவர் மாதிரி ஆட்களின் பங்களிப்பு வெகு விரைவில் மறந்துவிடும். அவரைப் பார்த்துப் பேசி பழகி பேச்சைக் கேட்டவர்களுக்குத்தான் நினைவிருக்கும். அவரது legacy என்று சொல்ல அந்த நினைவுகளைத் தவிர வேறு எதுவுமில்லை. அந்த நினைவுகளைத்தான் சுரா பதிவு செய்திருக்கிறார்.

சுரா கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக இருந்திருக்கிறார். அதற்கு ஜீவா ஒரு முக்கிய காரணம். சின்ன வயது சுராவுக்கு ஜீவா ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியோடு கசப்பு ஏற்பட்ட பிறகும் ஜீவா இவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். கடைசி வரை நல்ல உறவு இருந்திருக்கிறது. அந்த உறவை சிறந்த, ஆனால் சிம்பிளான கோட்டோவியம் மாதிரி இங்கே காட்டி இருக்கிறார்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நாற்பது ரூபாய். புத்தகத்தின் சில பக்கங்களை இங்கே படிக்கலாம்.

ஜீவாவைப் பற்றி ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு வர வேண்டும். அதற்கு தகுதியானவர் அவர் என்று அவரைப் பற்றி அதிகம் தெரியாத எனக்கே தெளிவாகத் தெரிகிறது. இப்போதைக்கு இதையாவது படியுங்கள்!

பக்சின் குறிப்பை இங்கே படிக்கலாம்.

பிற்சேர்க்கை: கே. ஜீவபாரதி ஜீவா எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை எல்லாம் தொகுத்திருக்கிறார். அதைப் படித்தபோது ஜீவா அலங்காரப் பேச்சு, எதுகை மொகனை, இவற்றை எல்லாம் நம்பியவர் இல்லை என்று தெரிகிறது. விவரங்களைச் சேகரித்து நிறைய பேசி இருக்கிறார். புத்திசாலித்தனமாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுகளுக்கு இன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்னையில் ட்ராம் சர்வீஸ் நின்றபோது தொழிலாளர்கள் பட்ட பாடு என்பதில் இன்றைய மனிதர்களுக்கு என்ன இருக்கிறது?

ரொவால்ட் டாலின் சிறுவர் புனைவுகள்

மூன்றாவதோ நான்காவதோ வகுப்பில் என் பெண்ணுக்கு BFG என்ற ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி ஒரு ரிப்போர்ட் எழுதவேண்டும். அதற்கு முன்னால் ரொவால்ட் டாலின் சில கதைகளைப் படித்திருந்தாலும் குழந்தைகளுக்காக நிறைய எழுதுவார் என்று தெரியாமல் போய்விட்டது. BFG ஒரு கிளாசிக், பெரியவர்களுக்கே பிடிக்கும். எட்டு ஒன்பது வயதில் சொல்லவே வேண்டாம்.

சாகி (Saki), ரொவால்ட் டால் (Roald Dahl) குசும்பு நிறைந்த எழுத்தின் சிறந்த பிரதிநிதிகள். டாலின் எழுத்துகளில் எவனாவது மாட்டிக் கொள்வான். திட்டம் போட்டு கவிழ்க்கப் பார்ப்பவன் தானே கவிழ்வான். Underdogs ஜெயிப்பார்கள். அதுவும் டால் சிறுவர்களுக்காக எழுதிய புத்தகங்கள் அபாரமானவை. படிப்பதற்கே ஜாலியாக இருக்கும். தமிழில் இந்த மாதிரி யாருமே எழுதுவதில்லை என்று எனக்கு பெரிய மனக்குறை உண்டு.

Fantastic Mr. Fox, 1970: ஒரு ஏழு எட்டு வயதில் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். மிஸ்டர் நரி மூன்று பெரும் பண்ணையார்களின் கோழி, வான்கோழி எல்லாவற்றையும் தினமும் திருடி தன் குடும்பத்துக்கு விருந்து வைப்பவர். ஒரு நாள் பண்ணையார்கள் மிகவும் கடுப்பாகி இவர் இருக்கும் போனதை உடைத்து இவரை வெளியே தள்ளி இவரை கொல்லப் பார்க்கிறார்கள். பெரிய பெரிய புல்டோசர்களைக் கொண்டு வந்து இவர் போனதை உடைக்கிறார்கள். அப்புறம்? உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், இந்த கதையை படித்துக் காட்டுங்கள், இல்லாவிட்டால் அவர்களை படிக்க வையுங்கள். சமீபத்தில் திரைப்படமாகவும் வந்தது.

Enormous Crocodile, 1978 படிக்கும்போதே யாராவது குழந்தையைப் பிடித்து கதையை சொல்ல வேண்டும் என்று நினைக்க வைத்த புத்தகம். 🙂 கதை கிதை என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஆனால் படிக்கும்போதும் கேட்கும்போதும் ஜாலியாக இருக்கும்! க்வெண்டின் ப்ளேக் (Quentin Blake) வரைந்த படங்கள் அந்த ஜாலி உணர்வை இன்னும் கூட்டுகின்றன.

Matilda, 1988: Superb! ஒரு புத்திசாலி சிறு பெண்ணுக்கு சில அமானுஷ்ய சக்திகள் ஏற்படுகின்றன. குடும்பத்தினர், கொடுமைக்கார ஸ்கூல் டீச்சர் எல்லாரையும் எப்படி சமாளிக்கிறாள் என்று கதை. கட்டாயம் படியுங்கள், குழந்தைகளை படிக்க வையுங்கள்.
ஒரு நல்ல நாவல் திரைப்படமாக்கும்போது வெகு அபூர்வமாகவே திரைப்படம் நாவலின் தரத்துக்காவது வருகிறது என்பது என் அனுபவம். ஆனால் மடில்டா திரைப்படம் புத்தகத்தை விடவே ஒரு படி மேல்! கட்டாயம் பாருங்கள்! டானி டி விடோ (Danny de Vito) பிரமாதமாக இயக்கி இருக்கிறார்.

BFG, 1982: அந்த Big Friendly Giant பேசும் விதம் ஒன்றே போதும் இந்த புத்தகத்தைப் படிக்க. அதற்கு மேல் ஃப்ராப்ஸ்காட்டில் என்று ஒரு பானம். சோடா கீடா எல்லாவற்றிலும் குமிழ்கள் மேலே போகும், நமக்கு ஏப்பம் வருகிறது. இந்த அபூர்வ பானத்தில் குமிழ்கள் கீழே போகின்றன, என்ன ஆகும்! பெரிய சத்தத்தோடு whizpopperகள்தான்!
இந்த புத்தகம் பிடிக்காத ஏழெட்டு வயதினரை நான் இன்னும் பார்க்கவில்லை. திரைப்படமாகவும் வந்தது.

James and the Giant Peach, 1961: புகழ் பெற்ற இன்னொரு புத்தகம், ஆனால் நான் அவ்வளவாக ரசிக்கவில்லை. குழந்தைகளுக்கு பிடிக்கலாம். திரைப்படமாகவும் வந்தது.

Charlie and the Chocolate Factory, 1964: இன்னொரு புகழ் பெற்ற புத்தகம். சின்ன வயதில் படித்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன். திரைப்படமாகவும் வந்தது.

George’s Marvellous Medicine இன்னொரு அருமையான கதை. ஜார்ஜ் தன் நச்சரிப்பு பாட்டிக்காக ஒரு புது மருந்தைத் தயாரிக்கிறான். மருந்தில் சேர்ப்பவை: ஷூ பாலிஷ், பெயின்ட், ஷாம்பூ, சோப், எஞ்சின் ஆயில் இத்யாதி. என்ன ஆகிறது?
மின்னூல் கிடைக்கிறது.

Esio Trot இன்னொரு சிம்பிளான குழந்தைக் கதை. ஆமை வளர்க்கும் பெண்ணை சைட்டடிக்கும் மாமாவின் தந்திரங்கள்.

டால் பெரியவர்களுக்காக எழுதியவை எல்லாம் வணிக எழுத்துதான். சாகி எழுதுவதைப் போல அடிநாதமாக ஒரு தீசத்தனம் தெரியும். எனக்குப் பிடித்த சிறுகதைகள் – Mrs. Bixby and the Colonel’s Coat, Parson’s Pleasure, Way Up to Heaven.
உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் டாலின் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள், சினிமாவாக வரும்போது அழைத்துக் கொண்டு போங்கள்!