தன் நாவல்கள் பற்றி எம்விவி

mv. venkatramகாதுகள் புத்தகத்துக்காக சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் semi-autobiographical எழுத்து. அதைப் பற்றி எம்விவியே சொல்வது:

அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.

மகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது. மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

இந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸும், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்க வல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.

நித்யகன்னி பற்றி எம்விவி:

அக்கதையின் கருவை மகாபாரதத்திலிருந்து எடுத்தேன். ‘பெண் விடுதலை’ என்னும் பீஜத்தை அதில் நான் வைத்தேன். பலப்பல நூற்றாண்டுகளாய்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆண் வர்க்கம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை அதில் நான் விசாரிக்கிறேன். இன்று பெண் விடுதலை பற்றி நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். சட்டங்கள் இயற்றியுள்ளார்கள். ஆண் மனோபாவம் மாற வேண்டும் என்கிறோம்; நியாயம்தான். பெண் மனோபாவம் மாறியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

வேள்வித்தீ பற்றி எம்விவி:

திருமண பந்தத்தை மீறி ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால், இம்மாதிரி உடலுறவு சோகத்தை சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலருக்கும் உதவுகிறது என்பதை ‘வேள்வித்தீ’ என்கிற என் நாவலில் சுட்டிக் காட்டினேன். பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை இந்த நாவல் வருணிக்கிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு, அறியாமை வயப்பட்ட மக்களுக்குப் பொருந்தாது என்பதையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது.

ஒரு பெண் போராடுகிறாள் பற்றி எம்விவி:

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எம்விவி பக்கம்

தொடர்புடைய சுட்டி: நித்யகன்னி

புத்ர பற்றி லா.ச.ரா.

ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்தில் வந்த கட்டுரையை மீள்பதித்திருக்கிறேன், நன்றி, ஹிந்து!

La_Sa_Raஎங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. அவர்கள் எல்லாருமே அவர்கள் தன்மையில் அதீதமானவர்கள். முன்கோபிகள். கர்வம் பிடித்தவர்கள். ஆனால் முற்றிலும் நாணயமானவர்கள். இந்த நாவலை எழுதும்போது நான் அப்படி விடுவித்த வாக்குமூலம் எனக்கு அத்தனை ஸ்பஷ்டமாக விளங்கவில்லை. ஆனால் இப்போது அதைப் படிக்கையில் அது சர்வ உண்மையே. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் ஐந்து தலைமுறை ஆசாமிகள். அதாவது சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னவர்களாய் இருக்கலாமா?

என் நாவலின் கதாநாயகி ஜகதாவாக, அவளுடைய மாமியாராக மாற்றி மாறி என் தாயாரைத்தான் பார்க்கிறேன். அவளுடைய மாமனார் பல இடங்களில் என் பாட்டனாரை ஒத்திருக்கிறார். ஜகதாவின் கணவன் அங்கங்கு என் தகப்பனாரை நினைவூட்டுகிறார். ஜகதாவின் பிறந்த கத்தின் ஏழ்மை எங்கள் குடும்பத்தின் ஏழ்மை. இந்த நாவல் தோன்றுவதற்கே அடிப்படையாக விளங்கும் சாபம், எங்கள் குடும்பத்தில் யாரோ ஒரு பாட்டி வயிறு கொதித்து இட்டு பலித்துவிட்ட வாக்கு. மாதா பிதாவின் சாபம் மக்கள் தலைமேலே என்கிற வழக்கு சும்மா பிராசத்திற்காக அல்ல. THE SINS OF THE FATHERS SHALL BE VISITED ON THE CHILDREN. இது பைபிள் வாக்கு. இரண்டும் ஒன்று அல்ல எனினும் ஏறக்குறைய ஒன்றுதான். பரம்பரை அதன் ஆசாரம், பண்பு, வாழ்முறை அவைகளைப் பேணுவதில் இருக்கும் இன்பம் அவசியம். நான் ஐதீகவாதி.

‘அடே!’ இந்த விளிப்பைப் படிக்கையில் எனக்கு இப்போதே குலை நடுங்குகிறது. இந்த ‘அடே’ பெரிசு இல்லை. தொடர்ந்து வரும் சாபத்தின் வார்த்தைகள் பெரிசு இல்லை. ஆனால் அந்த த்வனி நாபிக் கொதிப்பினின்று கக்கும் அந்த எரிமலைப் பிழம்பு – எப்படி என் வாழ்த்தைகளில் பிடிபட்டன என்று இப்போதும் வியப்பாய், பயமாய் இருக்கிறது. இப்பொழுது எனக்கு இப்படி எழுதவருமா? வராது என்பதே என் துணிபு. சொல்லின் உக்ரம் எப்படிப்பட்டது என்று இப்போது உணர்கிறேன்.

பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும் புத்ர, அபிதா இரண்டும் என்னை உறிஞ்சிவிட்டன. அப்படியும் அல்லது அதனாலேதானோ ஒரு சந்தோஷமும் இருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து, இந்த நாவலைப் பற்றி இன்னமும் பேசுகிறார்கள். என் வாசகர் வட்டம் சலிக்கவில்லை என்று என் பதிப்பாளர்களே சொல்லும்போது அதுவேதான் எனக்கு பலம் – உடல் உள்ளம் இரண்டும் சேர்ந்துதான்.

நான் எழுதிக்கொண்டது எனக்குத்தான். வாசகர்கள் நீங்கள் படிப்பதும் உங்களுக்காகத்தான். அதனால்தான் ‘புத்ர’ இன்னமும் பேசப்படுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

18-வது அட்சக்கோடு பற்றி அசோகமித்ரன்

மாதம் முடிய மூன்று நாள் இருக்கிறது. இந்த அரை வாரத்துக்கு எழுத்தாளர்கள் அவர்களது எழுத்துக்களைப் பற்றி சொன்னவற்றை பதிக்கப் போகிறேன். அசோகமித்ரனிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்துக்கு நன்றி!

asokamithranஅசோகமித்ரனே எழுதிய கட்டுரை இது. வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது ஒரு வேளை, ‘18-வது அட்சக்கோடு‘ எழுத நேர்ந்ததில் நிர்ப்பந்தம் இருந்திருக்கிறதோ என்று ஓர் ஐயம் வருகிறது. அன்று வார மாதப் பத்திரிகைகளில் தொடர்கதை என்று ஒன்றாவது இருக்க வேண்டும். எனக்கு ‘அட்சக்கோட்டை’ தொடர்கதையாக மாற்றுவதில் சம்மதம் இல்லை. ஆனால் ஒத்துக்கொண்ட பிறகு எவ்வளவு நேர்த்தியாக அதைச் செய்து முடிப்பது என்பதில் கவனம் செலுத்தினேன்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் என் திட்டம். அது நாவலில் பூர்த்தியாகவில்லை. முன்பும் பின்னரும் எழுதிய சிறுகதைகளில்தான் அந்த எண்ணம் பூர்த்தியாயிற்று. ‘ஐநூறு கோப்பை தட்டுகள்‘ சிறுகதையை முதல் அத்தியாயமாக வைத்துக்கொள்ள முடியுமா? ஏதேதோ பரிசோதனைகள் செய்த பின் இப்போது நாவல் ஓர் உருவம் பெற்றிருக்கிறது.

சுதந்திரத்துக்கு ஓர் ஆண்டு முன்னரே நிஜாம் ராஜ்யத்தில் வாழ்க்கை நடத்துவது கடினமாகப் போய்விட்டது. ஊரில் பாதி ஜனம் வெளியூர் போய்விட்டது. என் கூடப் படித்தவர்கள், விளையாடியவர்கள் சொல்லிக்கொண்டும் சொல்லாமலும் மறைந்துவிடுவார்கள். தெருவில் ஆறரை மணி, ஏழு மணிக்குப் பிறகு ஆட்களைப் பார்ப்பது அபூர்வம். நாங்கள் ஊருக்குச் சற்று வெளியே இருந்தோம். ஆனால் ஊர் மத்தியில் இருந்தவர்கள் எந்நேரமும் என்ன நடக்குமோ என்று கிலியில் இருந்தார்கள். எங்கள் சாரியிலேயே பன்னிரண்டு குடும்பங்களில் மூன்று குடும்பங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆகாது. ஆனால் இப்போது அவர்களே தகரக் கத்திகளையும் ஓட்டை துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார்கள்.

ஆனால் எல்லாரும் சேர்ந்து வாழ வேண்டும், இந்த நெருக்கடி நிரந்தரமானதல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். அது ஓரளவு பூர்த்தியாகியிருக்கிறது. பிரிட்டனும் அமெரிக்காவும் ஜெர்மனியை நிர்மூலம் செய்தன. அந்நாடுகளுடன் அதே ஜெர்மனி வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்கிறது. இரு அணு குண்டுகளை வீசிய அமெரிக்காவுடன் மின்னணுக் கருவிகள் மூலம் ஜப்பான் போட்டி போடுகிறது. நிஜாம் ராஜ்யத்தில் பல தலைமுறைகள் சேர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் அப்படி வாழ முடியாதா?

இன்று பல பிற்போக்குச் சக்திகள் உலவினாலும் ’18வது அட்சக்கோடு’ நாவலில் பரவிக் கிடந்த பீதி இன்றில்லை. நிஜாம் ராஜ்ஜியமும் அரசுமுமே இல்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: 18ஆவது அட்சக்கோடு

கணேஷ்-வசந்த் குறுநாவல்கள்

என் தலைமுறை, எனக்கு அடுத்த தலைமுறைக்காரர்களுக்கு கணேஷ்-வசந்த் கதைகள் முக்கியமான படிப்பு அனுபவம். இன்றும் தமிழில் இதை விடச் சிறந்த குற்றப் பின்னணி கதைகள் வரவில்லை. ஆனால் உலக அளவில் பார்த்தால் கணேஷ்-வசந்த் ஷெர்லாக் ஹோம்ஸின் அருகே வராது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய இளைஞர்கள் இவற்றால் பெரிதும் கவரப்படுவார்கள் என்று தோன்றவில்லை. யாராவது இளைஞர்/இளைஞி என்ன நினைக்கிறீர்கள் என்றூ சொல்லுங்கப்பு!

sujathaநண்பர் ஸ்ரீனிவாஸ் பல சமயங்களில் பின்னூட்டங்கள் வழியாக பல கணேஷ்-வசந்த் குறுநாவல்கள் பற்றி சின்னக் குறிப்புகளைத் தந்திருந்தார். அவற்றைத் தொகுத்து இங்கே பதித்திருக்கிறேன். இவற்றில் கணிசமானவற்றைப் பற்றி நானும் இங்கே எழுதி இருக்கிறேன். (பாதி ராஜ்யம், ஒரு விபத்தின் அனாடமி, காயத்ரி, மேற்கே ஒரு குற்றம்,  மீண்டும் ஒரு குற்றம், கொலையரங்கம், எதையும் ஒரு முறை, மலை மாளிகை, மாயா, மேகத்தைத் துரத்தினவன், விதி, ஐந்தாவது அத்தியாயம், நில்லுங்கள் ராஜாவே!) உன்னைக் கண்ட நேரமெல்லாம், மேலும் ஒரு குற்றம், மெரீனா ஆகியவற்றுக்கும் என்றாவது எழுத வேண்டும். உ.க. நேரமெல்லாம், மே. ஒ. குற்றம், மே. துரத்தினவன், விதி நான்கும் என் பதின்ம வயதில் சுஜாதாவை எனக்கு ஒரு icon ஆக்கியவற்றில் பங்குள்ளவை. புகார் புகார் புகார் போன்றவை சரியாக நினைவில்லை. யாராவது சுட்டி கொடுத்தால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள்!

ganesh-vasanthகணேஷ்-வசந்த் குறுநாவல்கள் எல்லாம் உயிர்மை பதிப்பகத்தால் இரண்டு வால்யூமாகப் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.

பாதி ராஜ்யம், ஒரு விபத்தின் அனாடமி இரண்டிலும் வசந்த் கிடையாது. நீரஜா என்ற ஒரு பெண் பாதி ராஜ்யத்தில் க்ளையண்ட். ஒரு விபத்தின் அனாடமியில் அவள்தான் உதவியாளர்.

ஓவர் டு ஸ்ரீனிவாஸ்!

பாதி ராஜ்யம்: நைலான் கயிற்றில் அறிமுகம் ஆன கணேஷை நாம் மறுபடியும் டெல்லியில் சந்திக்கிறோம். நீரஜா என்னும் பெண் அவனைத் தேடி வருகிறாள்-அவள் பணக்கார அப்பாவின் சார்பாக. மோதலில் ஆரம்பிக்கும் கதை போக போக ஒரு blackmail நாடகத்தில் சங்கமித்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதோடு முடிகிறது. பாதி ராஜ்ஜியம் அந்த பணக்காரர் கணேஷுக்கு கொடுக்கும் பரிசு. தனியாக இருந்தாலும் கணேஷ் காட்டும் சாமர்த்தியம், ஒவ்வொரு நூலாக அலசி ஆராய்ந்து அவன் முடிவை யூகிக்கும் தேர்ச்சி நம்மை வியக்க வைக்கும்.

ஒரு விபத்தின் அனாடமி: டெல்லியின் பரபரப்பான சந்து பொந்துகளில் ஒன்றில் ஒரு கோர விபத்து நடக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரும் அந்த விபத்தை பார்த்த ஒரே சாட்சியும் கணேஷின் உதவியை நாடுகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் கணேஷ் விபத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடிக்கும் கதை இது. வெறும் கற்பனையாக மட்டும் இல்லாமல் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கிறார் சுஜாதா. ஒவ்வொரு செங்கல்லாக கணேஷ் நகர்த்தும்போதும், இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனை அணுகும் போது குடுக்கப்படும் poetic justice நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். A very excellent story.

மாயா: இது போலி சாமியார்களின் காலம். இந்தக் கதையும் ஒரு ஆசிரமத்தில் நடக்கிறது. வழக்கு ஒன்றை நடத்துவதற்காக ஒரு ஆசிரமம் செல்லும் கணேஷ் அங்கு எதிர்கொள்ளும் சவால்களே கதை. கூடுதல் ஊக்கமாக இதில் வசந்த் அறிமுகமாகிறான். முதல் கதையிலேயே வசந்த்தின் குறும்புத்தனங்கள் நம்மை ‘அட’ போட வைக்கின்றன. உதாரணமாக:
“ஒன்று: வாசுதேவனை போய் பார்க்க வேண்டும்”.
“ஓ.கே.”
“இரண்டு: இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களும் வேண்டும்”.
“ஓ.கே”
“மூன்று: ஒரு பாட்டில் பீர்”.
“பீரா? எப்பொழுது?”
“இப்பொழுதே!”
“ரெடி” என்றான் சிரித்துக்கொண்டே.
இந்தக் கதை நிறைய விமர்சனங்களை சந்தித்ததாக சொல்வார்கள். ஆனால் ஒரு விறுவிறுப்பான கதை என்பதைத் தாண்டி ஒன்றும் ஏடாகூடமாக நமக்கு இதில் தெரிவதில்லை – கூர்ந்து வாசித்தால்.

காயத்ரி: இந்த பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படமும் உண்டு. ஆனால் கதை இன்னும் சுவாரசியமாக இருந்தது. கதாசிரியரே சொல்லுவதாக அமைந்திருக்கும் இந்தக் கதையில் கணேஷ்-வசந்த்திற்கு வேலை கம்மிதான். ஆனால் இறுதியில் ஈடு கொடுக்கிறார்கள் அபாரமாக. அவர்கள் இருவரையும் விட கதாநாயகி காயத்ரி நம் மனத்தில் அதிக இடம் பிடிக்கிறாள்.

விதி: ஒரு பஸ் விபத்து, காணாமல் போன ஒரு அண்ணன், அழகான தங்கை, இதில் என்ன முடிச்சுக்கள் இருக்கும்? உண்டு என்கிறது விதி. சம்பந்தமே இல்லாத முடிச்சுக்களை வைத்துக்கொண்டு கணேஷ் ஓட்ட வைக்கும் இடங்கள் புத்திசாலித்தனத்தின் ஆச்சர்ய உதாரணங்கள்.

மேற்கே ஒரு குற்றம்: கணேஷை ஒரு நடனக் குழுவை சேர்ந்த பெண் காண வருகிறாள். ஆனால் எதுவும் சொல்லும் முன் கொல்லப் படுகிறாள். விசாரணை கணேஷ்-வசந்த்தை ஜெர்மனி பக்கம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலிடம் கொண்டு செல்கிறது. அவர்கள் அதை சமாளிக்கும் விதமே இந்த கதை. காகிதத்தில் வரையப்படும் வட்டங்கள், கணேஷ் அதை வைத்து ஆடும் ஆட்டம் அருமையான இடங்கள்.

மேலும் ஒரு குற்றம்: ஒரு அனாமநேய டெலிபோன் அழைப்பு வருகிறது கணேஷுக்கு. பிறகு அழைத்தவர் கொலையுண்டு போகிறார். ஒரே சாட்சி கணேஷ்! எப்படி இருக்கும்? கொலையாளியின் சாதுர்யமான அணுகுமுறைகள் கணேஷை குழப்ப வைக்கின்றன, நம்மையும் சேர்த்து.

உன்னைக் கண்ட நேரமெல்லாம்:ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.

மீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை. விடுமுறைக்காக மெர்க்காரா செல்லும் கணேஷ்-வசந்துக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அவர்கள் ஜெயித்தார்களா என்பது… படித்து தெரிந்து கொள்ளுங்கள். சதுரங்க ஆட்டம் போல சிந்தனைக்கு வேலை வைக்கும் கதை இது.

அம்மன் பதக்கம்: அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு விலை உயர்ந்த பதக்கம் காணாமல் போகிறது. பதக்கத்தோடு ஒரு பெண்ணும் ஒரு பைத்தியக்காரனும் சம்பந்தப்படுகிறார்கள். பதக்கத்தை கணேஷ் வசந்த் கண்டு பிடித்து மேலும் முடிச்சுக்களை அவிழ்க்கும் சுவாரசியங்கள் நிறைந்த கதை.

மெரீனா: மெரீனா கடற்கரையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. மெரீனாவில் பொழுது போக்கிற்காக செல்லும் ஒரு பணக்கார இளைஞன் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்கிறான். சாதாரணமாக இதை அணுகும் கணேஷ்-வசந்த் இதில் இன்னும் புதை குழிகளைக் கண்டு பிடிப்பதே கதை. இறுதி முடிவு நம்மை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும்.

புகார் புகார் புகார்: ஒரு pipe ரிப்பேர் விஷயம் கணேஷ்-வசந்தை பாடாய் படுத்தும் சுவாரசியமான கதை. அள்ள அள்ள குறையாத பணம் போல் இதில் அள்ளக் குறையாத பிணங்கள் நம்மை பயமுறுத்தும். Raskolnikov Syndrome என்ற சிந்தாந்தத்தை வைத்து பின்னப்பட்ட கதை. சட்டம் படித்தவர்கள், சட்டம் பயிலுவோர் இந்தக் கதையை அதிகம் ரசிப்பார்கள்.

ஐந்தாவது அத்தியாயம்: மர்மக் கதையில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் வரிக்கு வரி நடந்தால்? இது தான் இந்தக் கதையின் முடிச்சு. பிரபல இருதய மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலை வருகிறது. அதுவும் அவள் வாசிக்கும் மர்மக் கதையின் ஐந்தாவது அத்தியாயம் முடிவதற்குள் அவள் கொலையுண்டு போவாள் என்கிறது கதை. அந்த கொலை நடப்பதற்குள் கணேஷ் -வசந்த் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது suspense. விறுவிறுப்பு கம்மி என்றாலும் (என்னை பொறுத்தவரையில்) இறுதியில் முடிச்சுக்கள் அவிழும் பொது கணேஷின் மூளை இன்ஷூர் செய்யப்பட்டதோ என்னும் கேள்வி நம் மனதில் எழுவது என்னவோ நிஜம்.

மேகத்தைத் துரத்தினவன்: ‘மாலைமதி’ இதழில் 1979-ல் வெளியான நாவல். ஒன்று விட்ட சித்தப்பாவின் வீட்டில் கொத்தடிமை வாழ்க்கையை எதிர்கொள்கிற வேலை கிடைக்காத பரிதாப இளைஞன் ஒருவன், வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்கும் செயலுக்குத் தூண்டப்படுவதுதான் கதை. திட்டம், செயல், வடிவம் என்று ஒவ்வொரு கட்டமாக பயணிக்கும் வங்கிக் கொள்ளையின் இறுதிக் கட்டத்தில் வஸந்தும் தலை நுழைக்கும் சுவாரசியமான நாவல் இது.

நில்லுங்கள் ராஜாவே!: “நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!” இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை… எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.

கொலையரங்கம்: குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.

எதையும் ஒரு முறை: குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ்-வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீனிவாஸ் குறிப்பிடாத இரண்டு குறுநாவல்களைப் பற்றியும் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.

மலை மாளிகை: Gerontology-யை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு சொதப்பல் கதை.

மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்: ஒரு சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் நாயகனை எல்லோரும் வேறு யாரோ என்கிறார்கள், என்ன மர்மம் என்று கணேஷ்-வசந்த் கண்டுபிடிக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்

கணேஷ்-வசந்த் கதை – நில்லுங்கள் ராஜாவே

sujathaசிறந்த கணேஷ்-வசந்த் சாகசக் கதைகளுள் ஒன்று. அதுவும் எழுதப்பட்ட காலத்தில் – ஒரு முப்பது வருஷத்துக்கு – முன் படித்த பதின்ம வயதினர் நிச்சயமாக இம்ப்ரஸ் ஆகி இருப்பார்கள்.

nillungal_rajaveஅட்டகாசமாக ஆரம்பிக்கிறது. நான்தான் தொழிலதிபர் விட்டல் என்று ஒருவன் விட்டல் வீட்டிலும் அலுவலகத்திலும் கலாட்டா செய்கிறான். அவனுக்கு விட்டலின் வாழ்க்கையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் விட்டல் குடும்பத்தினர், அவன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், வீட்டு நாய் கூட அவன் விட்டல் இல்லை என்கிறார்கள். கைது செய்யப்படுபவனுக்கு கணேஷும் வசந்தும் ஆஜராகிறார்கள். ஜாமீன் வாங்கித் தருகிறார்கள். ஹோட்டல் அறையில் தங்கச் செல்பவன் திரும்ப வரவேயில்லை.

காணவில்லை விளம்பரத்திலிருந்து அவன் விட்டல் இல்லை, ஐசிஎஃப்பில் வேலை செய்யும் ராஜா என்று கண்டுபிடிக்கிறார்கள். ராஜாவுக்கோ தான் விட்டல் என்று சாதித்தது, ஜாமீனில் வெளிவந்தது எதுவும் தெரியவில்லை. யார் நீங்கள் என்று கணேஷ்-வசந்தைக் கேட்கிறான்.

இதற்கு மேல் கதையைப் பற்றி எழுதுவதாக இல்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

பல வருஷங்களுக்குப் பின் இந்தப் பதிவுக்காக மீண்டும் படித்துப் பார்த்தேன், நல்ல சாகசக் கதை என்பது மீண்டும் உறுதிப்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் முடிச்சு, கணேஷும் வசந்தும் மர்மங்களை அவிழ்க்கும் விதம் பிரமாதமாக இருந்தது, இப்போது சர்வசாதாரணமாக இருக்கிறது. வாத்தியார் முடிச்சை ரிச்சர்ட் காண்டன் எழுதிய Manchurian Candidate (1959) நாவலிலிருந்து லவட்டிவிட்டாரோ என்று தோன்றியது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் கதைகள், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் நாவல் – யவனிகா

sujathaயவனிகா அத்தனை சுவாரசியமான நாவல் இல்லை. கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்காக மட்டுமே. ஒவ்வொரு கணேஷ்-வசந்த் நாவலைப் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு பைத்தியக்கார எண்ணம் உண்டு, அதனால்தான் இந்தப் பதிவு.

ganesh-vasanthகதைச்சுருக்கத்தை இரண்டு வரியில் எழுதிவிடலாம். சோழர் காலத்து அபூர்வச்சிலை ஒன்று – யவனிகா – பெரிய பணக்காரக் குடும்பத்து உறுப்பினரின் தனிப்பட்ட கலெக்‌ஷனில் இருக்கிறது. அதை வைத்து குடும்ப பிசினசின் தலைவர் அன்னியச் செலாவணிக்காக கேம் விளையாடுகிறார். கணேஷும் வசந்தும் நடுவில் புகுந்து குட்டையைக் குழப்புகிறார்கள். சுவாரசியத்துக்காக அந்தச் சிலையை கவனித்துக் கொள்ள கொஞ்சம் புத்திசாலி, ஆனால் சுமாரான தோற்றம் உள்ள ஒரு பெண் பாத்திரம். அவ்வளவுதான்.

வழக்கமான வசந்த் துள்ளல் கூட இதில் மிஸ்ஸிங். கணேஷ் வழக்கம் போல புத்திசாலித்தனமாக எந்த முடிச்சையும் அவிழ்க்கவில்லை. வில்லன்களுக்கு தண்டனையும் கிடையாது. தொடர்கதையாக எழுதும்போதே கைகழுவிவிட்டார் என்று தோன்றுகிறது.

தீவிர கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த்: ஐந்தாவது அத்தியாயம்

sujathaகணேஷ்-வசந்த் கதைகளில் மீண்டும் மீண்டும் தெரியும் ஒரு தீம் – சென்சேஷனல், இது எப்படி என்று வியக்க வைக்கும் முடிச்சு. சில சமயம் அந்த மர்மம் ஜுஜுபியாக அவிழ்ந்தாலும் அது அவருக்கு பெரிய வாசகர் வட்டத்தை சேர்த்தது.

ganesh-vasanthஇந்த குறுநாவலும் அப்படித்தான். அபூர்வாவின் வாழ்க்கை விவரங்களை அப்படியே எடுத்து (கணவன் ஒரு டாக்டர், அபூர்வாவுக்கு மச்சம் எங்கே, கணவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணைத் தடவுவது, சொத்துத் தகராறு) ஒரு தொடர்கதை வெளிவருகிறது. தொடர்கதையின் ஐந்தாவது அத்தியாயம் வெளிவருவதற்குள் அபூர்வா கொல்லப்படுவாள் என்று முதல் நான்கு அத்தியாயங்களில் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்படுகிறது. யார் எழுதுவது என்று வெளியிடும் பத்திரிகைக்கே தெரியாது, ஈமெயில் மூலம் அத்தியாயங்கள் வருகின்றன. அபூர்வா கணேஷ்-வசந்தை அணுக, அவர்களுக்கு டாக்டர் கணவன் மீது கொஞ்சம் சந்தேகம் ஏற்படுகிறது. அதற்குள் அபூர்வாவே கணேஷ்-வசந்தை அழைத்து கணவன் தன்னைக் கொல்ல வந்ததாகவும், கைகலப்பில் தற்செயலாகக் கணவனைக் கொன்றுவிட்டதாகவும் அழுகிறாள். அபூர்வா மீது கேஸ் நிற்காது என்ற நிலையில் கணேஷுக்கு இந்தத் தொடர்கதை எல்லாம் அபூர்வாவின் செட்டப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சந்தேகத்தைத் தீர்க்காமல் கதையை முடித்துவிட்டார்.

Lady or the Tiger என்று ஒரு பிரமாதமான சிறுகதை உண்டு. சுஜாதா அதைப் படிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சும்மா அந்த டெக்னிக்கைப் பயன்படுத்திப் பார்ப்போமே என்றுதான் இதை எழுதி இருக்கிறார். எனக்கென்னவோ இங்கே அந்த டெக்னிக் பொருந்தவில்லை. பாதியில் முடித்துவிட்ட மாதிரி இருக்கிறது.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய கணேஷ்-வசந்த் நாவல் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் கதை: விதி

sujathaஇன்னொரு சிறப்பான மர்மக் கதை.

இரவு தங்கையோடு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் தாமோதரனுக்கு ஃபோன் வருகிறது. இதோ வருகிறேன் என்று கிளம்பிப் போனவன் பங்களூர் செல்லும் பஸ் ஒன்றில் விபத்தில் அடிபட்டு இறந்து கிடக்கிறான். தங்கைக்காரி இவன் எதற்காக பெங்களூர் போனான், அங்கே யாரையும் தெரியாதே, இதோ வருகிறேன் என்றல்லவா கிளம்பினான், துணிமணி எதுவும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லையே என்று குழம்பி கணேஷ்-வசந்தை அணுகுகிறாள். அதற்கு மேல் படித்துக் கொள்ள வேண்டியதுதான்.

முடிச்சும் சரி, அது அவிழ்வதும் சரி திறமையாக எழுதப்பட்டவை.

ganesh-vasanthசின்னச் சின்ன நகாசு வேலைகளுக்கும் குறைவே இல்லை. மெல்லிய நகைச்சுவை கதை பூராவும் வருகிறது. வசந்த் திருக்குறளை மேற்கோள் காட்டுவான். தாமதமாக வரும் வசந்த் ‘வர வழியில பஸ்ஸெல்லாம் நிறுத்திட்டாங்களா?…’ என்று ஆரம்பிக்க கணேஷ் உடனடியாக ‘த பார் பொய்யெல்லாம் கோர்ட்டில் போய் சொல்லிக்கலாம்’ என்று கணேஷின் கவுண்டர். ‘ரொம்ப துக்கம் போலிருக்கு. துக்கம் வெக்கம் அறியாதும்பாங்க. இந்தப் பொண்ணு மேல்புடவையை இழுத்துக் கட்டிக்கிட்டுன்னா பேனாவைப் பொறுக்குது!” என்று வருத்தப்படும் வசந்த். பி.ஜி. உட்ஹவுசை நினைவுபடுத்தும் வகையில் ‘என்ன சிங் பாஸ்? தாடியா அதாடியா’ என்று கேட்கும் வசந்த்.

கதையின் ஆரம்ப வரிகளில் வீடியோ பஸ்ஸில் கதாநாயகன் ‘எப்டி எப்டி’ என்று கேட்கிறான். அது என்ன திரைப்படம், யாருக்காவது தெரிகிறதா? பழைய படமாக இருக்க வேண்டும், சென்னையின் டெலிஃபோன் நம்பர்கள் ஐந்து எண்களில்தான் இருக்கின்றன. ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் போனது செய்தியாக இருக்கிறது…

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் குறுநாவல்: மாயா

sujathaமாயா 72-73 வாக்கில் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். தினமணி கதிரில் தொடராக வந்தது. வந்த காலத்தில் – குறிப்பாக இளைஞர்கள் நடுவில் – பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.

இன்று படிக்கும்போது sensational ஆக – குறிப்பாக செக்ஸ் பற்றிய அந்தக் கால எழுத்தின் எல்லைகளை மீறி எழுதும் ஆர்வம்தான் இந்த குறுநாவலில் பிரதான நோக்கமாகத் தெரிகிறது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகளை நான் படித்ததில்லை. ஆனால் அந்த மஞ்சள் பத்திரிகை எழுத்துக்கும் இதற்கும் அப்போது பெரிய வித்தியாசம் இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. அப்போது கதிர் ஆசிரியராக இருந்த சாவியும் இப்படிப்பட்ட எழுத்தைப் பிரசுரிப்பதில் விருப்பம் உள்ளவர். சாவி புஷ்பா தங்கதுரை எழுதிய “என் பெயர் கமலா” என்ற தொடர்கதையை தினமணி கதிரில் தொடராக வெளியிட்டதுதான் செக்ஸ் பற்றிய ஐம்பது-அறுபதுகளின் பத்திரிகை எழுத்தின் எல்லைகளை உடைத்த முதல் நாவல் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொல்வார். என்னை விட கிழவர்கள் யாராவது இதைப் படித்திருந்தால் சொல்லுங்கள்!

வணிக எழுத்தில் செக்சைப் புகுத்துவது என்பதற்கும் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூறு பக்கம் எழுதினால் அதில் எண்பது பக்கம் தாசிகள் வருவார்கள். ஜாவர் சீதாராமனுக்கு ரவிக்கை கிழிந்து கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் காமெடி ட்ராக் வருவது போல சாண்டில்யனுக்கு மேடு, மன்மதப் பிரதேசம் என்று ஒரு ட்ராக் வந்து கொண்டே இருக்கும், அதை எழுதுவதிலேயே பாதி புத்தகம் போய்விடும். ஆனால் இவை எல்லாமே செயற்கையாகத் தெரியும். சுஜாதாவும் செக்சை வேண்டுமென்றேதான் புகுத்துகிறார் – என்றாலும் அது கதையின் போக்குக்கு அந்நியமாக இல்லை.

ganesh-vasanthகதையின் முடிச்சு ஒன்றும் பிரமாதம் இல்லை. ஒரு சாமியார் மீது ஒரு “பக்தை” செக்ஸ் புகார் கொடுக்கிறாள். கணேஷ் கேசை சுலபமாக உடைக்கிறார். கடைசியில் சுலபமாக யூகிக்கக் கூடிய ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட்.

இது வரை – ஜேகே நாவல் வரை – டெல்லியிலிருந்த கணேஷ் இப்போது சென்னையின் தன் புகழ் பெற்ற தம்புச்செட்டித் தெரு முகவரிக்கு வந்தாயிற்று. சுஜாதாவுக்கும் டெல்லியிலிருந்து மாற்றல் ஆகியிருந்த தருணம் என்று நினைக்கிறேன்.

இந்த நாவலின் முக்கியத்துவம் என்பது வசந்த் இதிலே அறிமுகம் ஆவதுதான். தன் ஜூனியர் ஒரு ரத்தினம் என்று கணேஷ் வியந்து கொள்கிறார். அறிமுகப் புத்தகத்திலேயே வசந்த் பெண்களைக் கண்டு ஜொள்ளு விட்டாலும் வசந்தின் பாத்திரம் இன்னும் முழுதாக உருவாகவில்லை. கணேஷே இன்னும் ஜொள்ளு விடுவதை நிறுத்தவில்லை.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் தவறவிடக் கூடாது. மற்றவர்கள் பஸ்ஸில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

கணேஷ்-வசந்த் கதை – சுஜாதாவின் “மேகத்தைத் துரத்தினவன்”

எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, சுஜாதாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி (சுஜாதா இலக்கியவாதிதான் என்று எழுதியதைத் தவிர) ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு வருஷத்துக்கு மேலே! சரி இந்த வாரம் கணேஷ்-வசந்த் கதைகளுக்கு. சுஜாதா இலக்கியவாதி இல்லை என்ற வாதத்துக்கு இவை அனேகமாக வலு சேர்க்கும். 🙂

sujathaமேகத்தைத் துரத்தினவன்” ஒரு கச்சிதமான கணேஷ்-வசந்த் கதை.

கணேஷ்-வசந்த் என்று சம்பிரதாயமாகச் சொன்னாலும் இதில் கணேஷ் கிடையாது. வசந்த் மட்டுமேதான் துப்பறிவார். இந்த ஒரு கதைதான் அப்படி கணேஷ் இல்லாத கணேஷ்-வசந்த் கதை என்று நினைக்கிறேன்.

கதையின் நாயகன் அன்பழகன் – சுருக்கமாக கன் – வேலையில்லாமல் பாங்க் மானேஜர் சித்தப்பா ஆதரவில் வாழும் இளைஞன். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்யும் சம்பளம் இல்லாத வேலைக்காரன். சிகரெட்டுக்கும் டீக்கும் அந்தக் காலத்தில் வேண்டியிருந்த நாலணா எட்டணாவுக்கு சில்லறைத் திருட்டுகள். சித்திக்கு அவன் மீது ஒரு கண். சித்தப்பா பாங்கை கொள்ளையடிக்கப் போய் மாட்டிக் கொள்கிறான். அவன் மேல் பரிவுள்ள சித்தியின் தங்கை ரத்னா வசந்திடம் இதைப் பற்றி பேச, என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ganesh-vasanthநல்ல மர்மக் கதை. மர்மம் நன்றாகவும் அவிழ்கிறது. ஆனால் இந்தக் கதையை வேறு லெவலிலும் படிக்கலாம்.

சுஜாதா நல்ல சாகசக் கதை எழுத்தாளர் என்பதற்கு இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லலாம். நல்ல சாகசக் கதைகளுக்கு வேண்டிய எல்லாம் இதில் இருக்கிறது. குற்றம், மர்மம், அதை விடுவிப்பது, ஏன் மறக்காமல் ஒன்றிரண்டு கில்மா சீன்களைக் கூட சேர்த்திருக்கிறார். ஆனால் கில்மா சீன்கள் கூட இயற்கையாக இருக்கின்றன, வலிந்து புகுத்தப்படவில்லை. விறுவிறுப்பு குறைவதே இல்லை.

அதே நேரத்தில் சுஜாதா வெறும் சாகசக் கதை எழுத்தாளர் அல்ல என்பதற்கும் இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லலாம். சாகசக் கதைகளின் எல்லைகளை மீறி வெகு சுலபமாக இலக்கியத்தின் எல்லைகளை அவர் தொட்டிருக்கிறார். கன், ரத்னா இருவரின் பாத்திரப் படைப்பும் அருமை. கன்னின் வாழ்வின் வெறுமை, இழிந்த நிலை, ரத்னாவை அவன் சைட்டடிப்பது போன்றவற்றை சிக்கனமான வார்த்தைகளில் காட்டிவிடுகிறார். அவர் முனைந்திருந்தால், வாரப் பத்திரிகை தொடர்கதை என்ற இக்கட்டு இல்லாமலிருந்தால் அவர் இன்னும் உன்னதமான இலக்கியவாதியாக பரிணமித்திருப்பார் என்று என்னை நினைக்க வைப்பது இது போன்ற கதைகள்தான்.

வாரப் பத்திரிகை தொடர்கதைகளை விட குறுநாவல்கள் – அவை மாத நாவல்களாக இருந்தாலும் சரிதான் – சிறுகதைகள் போன்றவற்றில்தான் அவரது திறமை அதிகமாக வெளிப்பட்டது என்பதற்கு இன்னொரு அத்தாட்சி இந்தப் புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம் – கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்