குஷ்வந்த் சிங்: Why I Supported the Emergency

குஷ்வந்த் சிங் இந்திய வாசகர்களுக்கு பரிச்சயமான பேர். இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். Train to Pakistan என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். சீக்கியர்களின் வரலாறு பற்றி நிறைய எழுதி இருக்கிறார். பொழுதுபோக்கு பத்திகளை (With Malice towards One and All) தான் இறக்கும் வரை எழுதினார் என்று நினைக்கிறேன்.

சிங் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா சோபா சிங் சர் பட்டம் பெற்றவர். ரியல் எஸ்டேட்டில் கொழித்திருக்கிறார்.  ஒரு காலத்தில் பாதி டில்லி அவருக்குத்தான் சொந்தமாம். டில்லியின் முதல் இந்திய நகராட்சித் தலைவர் அவர்தான். அவரது சித்தப்பா உஜ்ஜல் சிங் ஒரு காலத்தில் தமிழகத்தின் கவர்னராக இருந்தவர். குஷ்வந்த் லண்டனில் படித்து வக்கீல் பட்டம் பெற்றவர். 1947-இல் இந்திய அயல்நாட்டு தூதரகங்களில் பணி புரிந்திருக்கிறார். (நேரு-எட்வினா மவுண்ட்பாட்டன் உறவுக்கான நேரடி சாட்சிகளில் ஒருவர்). இந்திரா காந்தியை அவசரநிலை காலத்தில் முழுமனதாக ஆதரித்திருக்கிறார். இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையை ஒரு காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் முதன்மையானதாக ஆக்கினார். 1974-இல் பத்மபூஷன் (operation blue star-இன் போது திருப்பிவிட்டார்), 1984-இல் சீக்கியர்கள் டில்லியில் கொல்லப்பட்டதை கடைசி வரை எதிர்த்து குரல் கொடுத்தவர் (ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கடைசி வரை வருத்தம் இருந்திருக்கிறது), 2007-இல் பத்மவிபூஷன். 99 வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து இறந்திருக்கிறார்.

Why I Supported Emergency (2009) அவரது பத்திகளின் தொகுப்பு. படிக்கலாம்.

அவரது பத்திகளின் சுவாரசியம் மூன்று வகையானது.

முதலாவதாக, அவருக்கு உயர்மட்டத்தில் இருந்த தொடர்புகள்,  வரலாற்றை அருகில் இருந்து நேரடியாக, தானே பார்த்த அனுபவங்கள் இருக்கின்றன என்பதால் நம்பகத்தன்மை மிகுந்த் நினைவுகளை எழுதி இருக்கிறார்.

இரண்டாவது அவர் பிம்பங்களை சர்வசாதாரணமாகக் கட்டுடைப்பது. The way he brings down famous people to earth. உதாரணமாக ஆக் கி தரியா என்ற சிறந்த நாவலை எழுதிய க்வாரதுலைன் ஹைதரை “ஆன்டி சப்ஜாந்திவாலி” என்று குறிப்பிடுகிறார். ஒரு அடைமொழியில் ஹைதரின் பெரிய எழுத்தாளர் என்ற பிம்பத்தை உடைத்து சாதாரண மனிதர் ஆக்கிவிடுகிறார்.

மூன்றாவதாகஅவருக்கு sex sells என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதனால் அங்கங்கே சில நினைவுகளை எழுதுகிறார். நேரு-எட்வினா உறவு பற்றி நானூறு பக்கத்தில் நாலு பாரா வரும். ஓவியர் அம்ரிதா ஷெர்-கில்லைப் பற்றி ஒரு பத்தி எழுதினால் அவரது தனிப்பட்ட காம வாழ்வைப் பற்றி பாதி பத்தி இருக்கிறது. நடனக் கலைஞர் ப்ரோதிமா பேடி பற்றி எழுதினால் அவரது கட்டற்ற காம வாழ்வைப் பற்றித்தான் பத்தியே. ஆனால் இதை அந்த அளவுக்கு எழுத வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. நானூறு பக்கப் புத்தகத்தில் இருபது இருபத்தைந்து பக்கம்தான் இப்படி இருக்கும், ஆனால் (என் போன்ற) சாதாரணர்களுக்கு அது நினைவில் நிற்கும், மிச்ச பத்திகளையும் படிப்பார்கள் என்று உணர்ந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் அவர் எழுத்தாளர்களைப் பற்றி எழுதியவைதான். அவர்களை with all their foibles சித்தரிக்கிறார். உதாரணமாக சுத்த சைவ உணவுக்காரரான ஆர்.கே. நாராயணுடன் ஹவாயில் சில நாட்கள் ஏதோ செமினாருக்காக தங்கி இருக்கிறார். நாராயண் தயிர் சாதம் மட்டுமே சாப்பிட, இவர் கதை கந்தலாகி இருக்கிறது. நாராயணுடன் சேர்ந்து ஒரு நீலப்படம் வேறு பார்த்திருக்கிறார். நாராயண் முன்னோடி எழுத்தாளர், ஆனால் ஹெமிங்வேயோ ஃபாக்னரோ அல்லர், க்ரஹாம் க்ரீனின் ஆதரவில்தான் அவர் வெற்றி பெற்றார் என்கிறார். உண்மைதான். பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களைப் பற்றி அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. சல்மான் ரஷ்டி வரும் வரை இதெல்லாம் இரண்டாம் தர எழுத்துத்தான் என்கிறார்.

க்வாரதுலைன் ஹைதர் ஆக் கி தரியாவை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்து மொழிபெயர்த்திருக்கிறார். குஷ்வந்தின் வார்த்தைகளிலேயே –

So we have thees, thous along with yeah, yep, omigosh and get lost. But no one dared tell Annie Appa that she should allow someone else to handle her fiction. She was the Subjantiwalli. If River of Fire did not become the rage in English that it was in Urdu, she had only herself to blame.

வி.எஸ். நைபால் அவருக்கு பிடித்த எழுத்தாளர். நைபாலுக்கு ராமர் கோவிலுக்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லையாம். நைபால் இந்தியாவுக்கு வந்தபோது அவரை நாலு இடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் காட்டி இருக்கிறார். நைபாலுக்கு அழகை விட அசுத்தங்கள்தான் கண்ணில் பட்டன என்கிறார். அவரது வார்த்தைகளிலேயே

He had less to say about the autumn crocus (saffron) scent pervading the atmosphere and more about Kashmiri women lifting their pherans and squatting to defecate. Squalor and stench attracted his attention more than scenic beauty and fragrance.

முல்க் ராஜ் ஆனந்த் பேசிப் பேசியே கழுத்தறுப்பாராம். ஒரு முறை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கட்டுரை கேட்க, இவர் வேறு ஒரு கட்டுரையை வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடித்துக் கொடுத்துவிட்டு பிறகு மாட்டிக் கொண்டாராம்.

அம்ரிதா ப்ரீதம் நன்றாகத் தெரிந்தவர். அவரது புத்தகங்கள் விற்கவில்லை, ஆனால் அரசிடம் பெற்ற பரிசுகளை வைத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்கிறார். அவரது ஒரு கவிதையை (வாரிஸ் ஷா பற்றி) மட்டுமே நல்ல படைப்பு என்கிறார். இத்தனைக்கும் இவர்தான் பிஞ்சர் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மிர்சா காலிப் வாழ்வின் இன்பங்களை ரசித்தவராம்.

When someone warned him (Ghalib) that the prayers of persons who drank wine were never granted, he said: ‘My friend, if a man has wine, what else does he need to pray for?’

இந்திரா காந்தியை எப்போதும் ஆதரித்திருக்கிறார். சஞ்சய் காந்தியைக் கண்டு இந்திரா அஞ்சினார் என்கிறார். வேறு வழியில்லாமல்தான் அவசரநிலையின் அதிகார துஷ்பிரயோகங்களை வேண்டாவெறுப்பாக குறிப்பிடுகிறார். 1984-இல் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக – குறிப்பாக அத்வானி – ஆதரவு தந்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார். மசூதி இடிக்கப்பட்ட பின் அத்வானியோடு மனக்கசப்பு.

மொத்தத்தில் சுவாரசியமான, ஆனால் பொழுதுபோக்கு புத்தகம் மட்டுமே. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: குஷ்வந்த் சிங் விக்கி குறிப்பு

பங்கிம் சந்திர சட்டர்ஜி: கபாலகுண்டலா

கபாலகுண்டலா (1866) முன்னோடி நாவல். எளிய நாவல்தான், ஆனால் 1950கள் வரை கூட தமிழ் பத்திரிகைகளில் பிரசுரம் ஆக வாய்ப்பிருக்கிறது. இன்றும் அந்த நாவலை காலாவதி ஆகாமல் காப்பாற்றுவது நாவல் நம் மனதில் உருவாக்கக் கூடிய காட்சிகளும், கட்டுக்கோப்புள்ள கதைப் பின்னலும், சரளமான நடையும்தான். நான் படித்தது த.நா. குமாரஸ்வாமியின் மொழிபெயர்ப்பில்.

தற்செயலாக ஒரு கடற்கரை ஓரக் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் நபகுமார சர்மா. அங்கே அவனை பலி கொடுக்க முயற்சிக்கும் ஒரு பயங்கர காபாலிகன். காபாலிகனிடமிருந்து அவனைக் காப்பாற்றும் அவனது வளர்ப்புப் பெண் கபாலகுண்டலா. சர்மாவுக்கும் கபாலகுண்டலாவுக்கு திருமணம் செய்து வைத்து காட்டிலிருந்து தப்பிக்க வைக்கும் பூசாரி. தன் கிராமத்துக்கு செல்லும் வழியில் சர்மா தற்செயலாக தன் முதல் மனைவியை பத்மாவதியை சந்திக்கிறான். பத்மாவதியின் குடும்பம் விதிவசத்தால் முஸ்லிம்களாகிவிடுகிறார்கள், அதனால் பத்மாவதிக்கு 12-13 வயது இருக்கும்போது அவளை சர்மா தள்ளி வைத்துவிடுகிறான். இன்று பத்மாவதியை அடையாளம் காணவில்லை, ஆனால் பத்மாவதிக்கு தெரிந்துவிடுகிறது.

பத்மாவதி இன்று மொகலாய மன்னர் அக்பரின் சபையில் பலரோடு தொடர்பு கொண்டவள். அடுத்த மன்னராக வரப்போகும் ஜஹாங்கீரின் ஆசைநாயகி. ஆனால் சர்மாவை சந்தித்ததும் மனம் மாறுகிறது. எப்படியாவது சர்மாவோடு வாழ வேண்டும் என்று அந்தஸ்து, செல்வாக்கு எல்லாவற்றையும் துறந்து சர்மாவின் கிராமத்துக்கு வருகிறாள்.

சர்மா அவளை நிராகரிக்கிறான். பழி வாங்க வரும் காபாலிகன் சர்மாவிற்கு கபாலகுண்டலா உன்னை ஏமாற்றி இன்னொருவனுடன் தொடர்பு கொண்டிருக்கிறாள் என்று சந்தேகத்தை கிளப்பிவிடுகிறான். சரியாக கபாலகுண்டலா ஆண் வேஷத்தில் இருக்கும் பத்மாவதியை இரவில் சந்திக்கிறாள். பத்மாவதியின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் கணவனை விட்டுத்தர சம்மதிக்கிறாள். சந்தேகப்படும் சர்மாவும் காபாலிகனும் கபாலகுண்டலாவை பலி கொடுக்கப் பார்க்கிறார்கள். கபாலகுண்டலா உண்மையை கணவனுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு ஆற்றில் விழுந்து மறைகிறாள்.

இரண்டு முடிவு இருக்கிறது போலிருக்கிறது. ஒன்றில் சர்மாவும் ஆற்றில் விழுந்து மறைகிறான், இன்னொன்றில் சர்மாவை காபாலிகன் காப்பாற்றுகிறான்.

நாவலின் மிகச் சிறந்த பகுதி சர்மா மாட்டிக் கொள்ளும் காட்டின் விவரிப்பு. இன்றைய ரசூல்பூர் ஆறாம், ஹூக்ளி நதியின் ஒரு கிளையாம். அதன் அருகே காடு, மணல் குன்றுகள், கடற்கரை. அங்கே ஒரு காபாலிகன், பலி கொடுக்க முயற்சி என்று மனதில் காட்சிப்படுத்தினால் பயங்கரமாகத்தான் இருக்கிறது.

மிகச் சரளமாகச் செல்லும் நாவல். கல்கி காலத்தில் அவர் இதை எழுதி இருந்தால் கொண்டாடி இருப்பார்கள். சம்பங்களின் தொகுப்பு நன்றாகவே இருக்கிறது.

பங்கிம் சந்திரரைத்தான் இந்தியாவின் முதல் நாவலாசிரியராகக் கருத வேண்டும். சிறு வயதில் ஆனந்த மடம் நாவலைப் படித்து பூரித்துப் போனது நன்றாக நினைவிருக்கிறது,  பவானந்தன் இடத்தில் என்னை வைத்து பகல் கனவு கண்டிருக்கிறேன். வந்தேமாதரம் பாடல் அவர் எழுதியதுதான். ஹிந்தி கொஞ்சமும் தெரியாத சிறு வயதில் – ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் எல்லாம் வேறு வேறு மொழிகள் என்று கூடத் தெரியாத வயதில் – அந்தப் பாடலின் வார்த்தைகலைப் புரிந்து கொள்ள படாதபாடு பட்டிருக்கிறேன்.

கபாலகுண்டலா வாழ்ந்ததாக சொல்லப்படும் காட்டுப்பகுதிகளின் அருகே பங்கிம் வேலை பார்த்திருக்கிறார். அக்கரை தெரியாத அளவு அகலமான ரசூல்பூர் ஆறு, மணல் குன்றுகள், கடற்கரை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அப்போது ஒரு காபாலிகரையும் சந்தித்திருக்கிறார். காட்டில் வாழ்ந்த பெண் நாட்டிற்கு வந்தால் என்னாகும் என்று கருதான் இந்த நாவலாக உருவெடுத்ததாம். ஆனால் அந்தக் கருவை அவர் பெரிதாக விவரிக்கவில்லை, அதற்கு பதில் சதி வேலைகளைத்தான் பெரிதாக எழுதி இருக்கிறார்.

எனக்குத் தெரியாத சில பண்டிதத் தமிழ் வார்த்தைகள் அங்கங்கே இருந்தாலும் த.நா. குமாரஸ்வாமியின் மொழிபெயர்ப்பு சிறப்பு. இன்று இவ்ரைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் அருகிக் கொண்டே போகிறார்கள்.

ஹிரண்மயி நாவலைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. ஏதோ பஞ்சதந்திரக் கதை படிப்பது போல இருக்கிறது. சிறு வயதில் கூட சுவாரசியமாக இருந்திருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.

பங்கிம்-தா முன்னோடி. முன்னோடிகளுக்கு உரிய பலவீனங்கள் அவருக்கும் இருக்கின்றன. முன்னோடி நாவல்கள் முக்கியமானவைதான், ஆனாலும் இன்று அவருக்கு இருக்கும் முக்கிய அடையாளம் வந்தேமாதரம் பாடலை எழுதியவர் என்பதுதான் என்றுதான் தோன்றுகிறது.

நாவலில் ஒரு விசேஷக் கவர்ச்சி (special charm) இருப்பதாகவே உணர்கிறேன். இந்தியாவில் நாவல் வடிவம் எப்படி உருவானது என்பதை புரிந்து கொள்ள கட்டாயம் படிக்க வேண்டும். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

 

இடாலோ கால்வினோ: Black Sheep

எளிய சிறுகதையா இல்லையா என்று தீர்மானிக்க எனக்கு ஒரு வழிகாட்டி உண்டு. ஒரு கதையை என்னாலேயே எழுதி இருக்க முடியும் என்று தோன்றினால் அது என்னைப் பொறுத்த வரை எளிய சிறுகதைதான். என்னால் எழுதி இருக்க முடியாவிட்டாலும் அது எளிய சிறுகதை என்று நான் தீர்மானிக்கலாம். ஆனால் என்னால் எழுதி இருக்க முடியும் என்று தோன்றினால் அது எளிய சிறுகதைதான். இத்தனைக்கும் நான் இந்த சிறுகதை என் திறமைக்கு சரி வருமா என்றெல்லாம் யோசித்து முடிவெடுப்பதில்லை, அது ஒரு மாதிரி இயல்பாகத் தெரிந்துவிடுகிறது.

இடாலோ கால்வினோவின் இந்தச் சிறுகதையை என்னால் எழுதி இருக்க முடியும். ஆனால் எழுதியது அவர்தான் 🙂 தமிழில் சரியான வார்த்தை கிடைக்கவில்லை, fable என்று வைத்துக் கொள்ளலாம். (யாருக்காவது நல்ல தமிழ் வார்த்தை தோன்றினால் சொல்லுங்கள்) ஆனால் எளிய சிறுகதை என்று குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. எளிமைதான் கதையின் பலமே! அருமையாக எழுதி இருக்கிறார்.

நான் கதையை விவரிக்கப் போவதில்லை, கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. பொதுவாக fable-ஐ விவரிப்பதில் பொருளில்லை. சிறிய சிறுகதைதான், நேரடியாக படித்துக் கொள்ளுங்கள்!

யாராவது தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா? தெரிந்தால் சொல்லுங்கள், சுட்டியை இணைத்துவிடலாம். இல்லாவிட்டால் என்றாவது நான்தான் மொழிபெயர்க்க வேண்டும்… நண்பர் பாண்டியன் ராமையா உடனே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்! அவருக்கு நன்றி. சுட்டி இங்கே.

ஓவர் டு கால்வினோ!


Black Sheep

There was a country where they were all thieves.

At night everybody would leave home with skeleton keys and shaded lanterns and go and burgle a neighbour’s house. They’d get back at dawn, loaded, to find their own house had been robbed.

So everybody lived happily together, nobody lost out, since each stole from the other, and that other from another again, and so on and on until you got to a last person who stole from the first. Trade in the country inevitably involved cheating on the parts both of the buyer and the seller. The government was a criminal organization that stole from its subjects, and the subjects for their part were only interested in defrauding the government. Thus life went on smoothly, nobody was rich and nobody was poor.

One day, how we don’t know, it so happened that an honest man came to live in the place. At night, instead of going out with his sack and his lantern, he stayed home to smoke and read novels.

The thieves came, saw the light on and didn’t go in.

This went on for a while: then they were obliged to explain to him that even if he wanted to live without doing anything, it was no reason to stop others from doing things. Every night he spent at home meant a family would have nothing to eat the following day.

The honest man could hardly object to such reasoning. He took to going out in the evening and coming back the following morning like they did, but he didn’t steal. He was honest, there was nothing you could do about it. He went as far as the bridge and watched the water flow by beneath. When he got home he found he had been robbed.

In less than a week the honest man found himself penniless, he had nothing to eat and his house was empty. But this was hardly a problem, since it was his own fault; no, the problem was that his behaviour upset everything else. Because he let the others steal everything he had without stealing anything from anybody; so there was always someone who came home at dawn to find their house untouched: the house he should have robbed. In any event after a while the ones who weren’t being robbed found themselves richer than the others and didn’t want to steal any more. To make matters worse, the ones who came to steal from the honest man’s house found it was always empty; so they became poor.

Meanwhile, the ones who had become rich got into the honest man’s habit of going to the bridge at night to watch the water flow by beneath. This increased the confusion because it meant lots of others became rich and lots of others became poor.

Now, the rich people saw that if they went to the bridge every night they’d soon be poor. And they thought: ‘Let’s pay some of the poor to go and rob for us.’ They made contracts, fixed salaries, percentages: they were still thieves of course, and they still tried to swindle each other. But, as tends to happen, the rich got richer and the poor got poorer and poorer.

Some of the rich people got so rich that they didn’t need to steal or have others steal for them so as to stay rich. But if they stopped stealing they would get poor because the poor stole from them. So they paid the very poorest of the poor to defend their property from the other poor, and that meant setting up a police force and building prisons.

So it was that only a few years after the appearance of the honest man, people no longer spoke of robbing and being robbed, but only of the rich and the poor; but they were still all thieves.

The only honest man had been the one at the beginning, and he died in very short order, of hunger.


தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

Merry Christmas திரைப்படத்தின் மூலக்கதை

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் பார்த்த திரைப்படம். மிகைப்படுத்தல்கள் இருந்தாலும், சில இடங்கள் நம்ப முடியாமல் இருந்தாலும், பிடித்திருந்தது. மூலம் ஒரு ஃப்ரெஞ்சு நாவல் என்று தெரிந்ததும் தேடிப் பிடித்துப் படித்தேன்.

Le Monte-charge 1961-இல் எழுதப்பட்ட நாவல். ஆனால் 2017க்கு முன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வரவில்லை போலிருக்கிறது.

1961-இல் அல்ஜீரியாவே விடுதலை அடையவில்லை, இன்னும் ஃப்ரானஸின் ஒரு பகுதிதான். அதைப் பற்றி ஒரு வரியில் போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.

நாவல் திரைப்படத்தை விட குறைவான அதிர்ச்சிகளும் அதிகமான நம்பகத்தன்மையும் உடையது. நல்ல மர்ம நாவல்.

படத்தை அனேகமாக எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதனால் வெகு சுருக்கமாக கதை. கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற கைதி ஆல்பர்ட் விடுதலை ஆகிறான், கிறிஸ்துமஸ் அன்றுதான் வீடு திரும்புகிறான். இரவு உணவுக்கு செல்லும் உணவு விடுதியில் தற்செயலாக ஒரு இளம் தாயையும் – திருமதி ட்ராவெட் – அவளது மூன்று நான்கு வயது மகளையும் சந்திக்கிறான்.திருமதி ட்ராவெட்டின் மணவாழ்வு சுகப்படவில்லை. ட்ராவெட்டுக்கும் ஆல்பர்ட்டுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. ட்ராவெட்டின் வீட்டுக்கு ஆல்பர்ட் செல்கிறான், மகளைத் தூங்க வைத்துவிட்டு ட்ராவெட் ஆல்பர்டின் வீட்டுக்கு வருகிறாள், பிறகு மீண்டும் ட் ராவெட்டின் வீட்டுக்கு போகிறார்கள். அங்கே அவளது கணவன் சுடப்பட்டு இறந்து கிடக்கிறான். ஆல்பர்ட் தான் விடுதலை ஆன கொலைக்கைதி, காவல் துறை தன்னை சந்தேகப்படும், ட்ராவெட்டையும் சந்தேகப்படும் என்கிறான். ட் ராவெட் அவனை ஏறக்குறைய துரத்தி விடுகிறாள். காவல் துறைக்கு கொலை பற்றி தகவல் தெரிவிக்காமல் சிறிது நேரத்தில் ட்ராவெட் தன் மகளுடன் ஒரு சர்ச்சுக்கு போகிறாள். ஆல்பர்ட் அவளைத் தொடர்கிறான். அங்கே மயங்கி விழுவது போல் நடித்து இன்னொருவனை வீட்டுக்கு அழைத்து வருகிறாள், ஆல்பர்ட்டும் கூட ஒட்டிக் கொள்கிறான். இப்போது பிணத்தைக் காணோம்!

இதற்கு மேல் நான் விவரிக்கப் போவதில்லை. படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் புத்தகத்தைப் படியுங்கள்.

ஆல்பர்ட் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்புவது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல முடிச்சு, மர்மம் அவிழ்வதும் பிரமாதம். ஆல்பர்ட்டுக்கும் ட்ராவெட்டுக்கும் நடுவே ஏற்படும் ஈர்ப்பு, கதையின் முத்தாய்ப்பு எல்லாம் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

கதையின் பலவீனம் என்று பார்த்தால் முடிச்சுதான் பிரதானமாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் – குறிப்பாக திருமதி ட்ராவெட் – ஜீவனற்றவை.

திரைப்படத்தில் இன்னும் இரண்டு மூன்று ட்விஸ்ட்கள் வைத்திருக்கிறார்கள். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

டர்த் கிட்டத்தட்ட 300 த்ரில்லர்களை எழுதி இருக்கிறார். பிரபலமான ஃப்ரெஞ்ச் எழுத்தாளராம். நான் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை…

நல்ல முடிச்சுக்காக படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். திரைப்படத்தையும் பாருங்கள்!

Wicked Go to Hell என்றும் ஒரு புத்தகம் கிடைத்தது. சிறைக்கைதி ஒருவனின் கும்பலைப் பிடிக்க போலீஸ்காரன் கைதியாக உள்ளே நுழைகிறான். தப்பிக்கிறார்கள், பல பிரச்சினைகள், ஆனால் அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. சுமார்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: ஃப்ரெடெரிக் டர்த் விக்கி குறிப்பு

வெங்கடேச சுப்ரபாதம் எழுதியவர் யார்?

சில விஷயங்கள் நமக்கு பழகிவிடுகின்றன. அவற்றின் ரிஷிமூலம் என்ன என்று தோன்றுவதில்லை.

வெங்கடேச சுப்ரபாதத்தை இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது எங்கள் வீட்டில் காலையில் கேட்கிறோம். ஆனால் எழுதியது யார் என்று இன்றுதான் கேட்டுக் கொண்டேன். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியராம்.

அண்ணங்கராச்சாரியார் காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். மணவாள மாமுனிகளின் சீடர். சமஸ்கிருத வல்லுனர். திருப்பதிக்கு போனவர் அங்கே சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார். சுப்ரபாதத்தை எம்.எஸ்ஸின் குரலில் கேட்பது சுகமான அனுபவம்.

சுப்ரபாதத்தைத் தவிரவும் நிறைய ஸ்தோத்திரங்களை எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. என் லெவலுக்கு சுப்ரபாதமே அதிகம்…

சுப்ரபாதம் மட்டுமல்ல, சில விஷயங்கள் நமக்கு அப்படியே பழகிவிடுகின்றன. உதாரணமாக கோனார் நோட்ஸ். கோனார் நோட்ஸை எழுதிய கோனார் யார் என்ற கேள்வி பள்ளியை விட்டு வந்து 25 ஆண்டுகளுக்கு அப்புறம்தான் முதல் முறையாக மனதில் எழுந்தது.

கந்தசஷ்டி கவசமும் அப்படித்தான். சிறு வயதில் வீட்டில் அதை ஜபித்த பிறகுதான் காப்பி கிடைக்கும். ஏதோ கிடுகிடுவென்று பாதி குளியலிலேயே ஆரம்பித்துவிடுவோம். யார் எழுதியது என்ற கேள்வி எழ பல வருஷம் ஆகியது. நல்ல வேளையாக அவரே பாலன் தேவராயன் பகர்ந்ததை என்று சொல்லிவிட்டதால் யாரோ தேவராயராம் என்று முதல் அடியாவது எடுத்து வைக்க முடிந்தது.

உங்களுக்கு இப்படி ஏதாவது பழகிப் போன விஷயம் உண்டா?

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியா விக்கி பக்கம்

திரைப்பட ஆளுமை தூயவன்

தூயவனை நான் கதாசிரியராக, வசனகர்த்தாவாகத்தான் நினைத்திருந்தேன். தேவர் படங்களுக்கு நிறைய எழுதி இருக்கிறார். ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, தாய் மீது சத்தியம், அன்புக்கு நான் அடிமை, அன்னை ஒரு ஆலயம், ரங்கா என்று பல திரைப்படங்கள். சில திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார் என்று பின்னால் தெரியவந்தது. விடியும் வரை காத்திரு, அன்புள்ள ரஜினிகாந்த், வைதேகி காத்திருந்தாள்

அவர் ஒரு எழுத்தாளரும் கூட என்பது சமீபத்தில்தான் தெரியவந்தது.

பூஜைக்கு வந்த மலர் (1964) என்ற சிறுகதை ஆனந்த விகடனில் முத்திரைக்கதையாக வந்தது. எளிய கதை, அந்தக் காலத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். இன்று 17-18 வயதில் எழுதி இருக்கிறார் என்ற ஒரே விஷயம்தான் மனதில் நிற்கிறது.

நிறங்கள் (1965) இன்னொரு முத்திரைக்கதை. பெரிதாக ஒன்றும சொல்வதற்கில்லை.

வெறும் சிலை (1966) இன்னொரு முத்திரைக்கதை. பெரிதாக ஒன்றுமில்லை.

உயர்ந்த பீடம் (1967) என்ற சிறுகதை ஆனந்த விகடனில் முத்திரைக்கதையாக வந்தது. அந்தக் காலத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். இன்று அன்றைய மனநிலைகளுக்கு ஒரு கண்ணாடி என்பதுதான் மிஞ்சி இருக்கிறது.

ஆனந்தவிகடனின் முத்திரைக் கதைகள் என்றால் என்னவோ பிரமாதமாக இருக்கும் என்று எனக்கு ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவு தூயவனின் முத்திரைக் கதைகளைப் படித்ததோடு அழிந்தது. அன்றைய மனநிலைகளை இந்தக் கதைகள் பிரதிபலித்திருக்கலாம். பார்ரா எழுத்தாளர் என்ன மாதிரி மாற்றி யோசிக்கிறார் என்று வாசகர்கள் அன்று சபாஷ் போட்டிருக்கலாம். அவ்வளவுதான்.

மேலும் சில சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

தூயவனின் இயற்பெயர் எம்.எஸ். அக்பர். எழுத்தாளர் நாகூர் ரூமியின் தாய்மாமன். இளம் வயதிலேயே – 40 வயதில் – இறந்துவிட்டார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
தூயவன் விக்கி குறிப்பு
உயர்ந்த பீடம் சிறுகதை

டால்ஸ்டாய் சிறுகதை: Bear Hunt

Bear Hunt-ஐ முதல் முறை படிக்கும்போது ஏற்பட்ட சிலிர்ப்பு (thrill) நன்றாக நினைவிருக்கிறது. இன்று படிக்கும்போதும் தலை தன்னால் இடதும் வலதுமாக ஆடுகிறது, மனது அப்பாடி என்று வியக்கிறது.

நல்ல சாகசச் சிறுகதை. கரடி டால்ஸ்டாயைத் தாக்குவது கதையின் உச்சக்கட்டம். கரடி டால்ஸ்டாய் மேல் விழுகிறது, அவரது முகத்தை தன் வாய்க்குள் இழுக்கிறது, அதன் மேல்பற்களும் கீழ்பற்களும் டால்ஸ்டாயின் கண்ணுக்கு கீழும் நெற்றிக்கும் மேலும் அழுத்தமாகப் பதிகின்றன, டால்ஸ்டாய் தன் முகத்தை பின்னுக்கு, தன் நெஞ்சுக்கு இழுக்க முயற்சிக்கிறார், கரடி விடுவதாக இல்லை…

சாகசம் பெரிய கொந்தளிப்புகள் இல்லாமல் matter of fact பாணியில் விவரிக்கப்படுகிறது கதையின் பெரிய பலம். அடிபட்ட கரடியைத் தேடுவது, சுற்றி வளைப்பது, இருபது முப்பது கிராமத்தார் கரடியை பயமுறுத்தக் கத்துவது, டால்ஸ்டாய் மற்றும் அவரது நண்பரின் குண்டுகள் தவறுவது, அடிபட்ட கரடி பயத்தில் ஆக்ரோஷமாக ஓடி வருவது எல்லாம் அந்தக் காலத்து வானொலியில் செய்தி வாசிப்பது போன்ற தொனியில் விவரிக்கப்படுகின்றன. குறிப்பாக வழிகாட்டி டாமியனின் திறமை, கரடியைக் கொல்ல அவன் எடுக்கும் ஒவ்வொரு நட்வடிக்கையும் கரடி வேட்டைக்கென்று ஒரு manual போல இருக்கின்றன.

உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது கதையின் கவர்ச்சியை அதிகப்படுகிறது. டால்ஸ்டாய்க்கு இது போன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது நடந்து ஒரு 15 வருஷம் கழித்து -1872இல் – இந்தச் சிறுகதையை எழுதி இருக்கிறார்.

டால்ஸ்டாய் சாகசக் கதைகள் எழுதுவார் என்பதே அன்று ஒரு பிம்பத்தை உடைத்தது. அதுவும் இந்தக் கதையின் கவர்ச்சிக்கு ஒரு காரணம்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், டால்ஸ்டாய் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

திராவிட இயக்க எழுத்து 2

திராவிட இயக்க எழுத்தாளர்கள் பதிவை எழுதிய பிறகு திராவிட இயக்க எழுத்து என்றால் என்ன என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். திராவிட இயக்கத்தின் கருத்துக்களை பின்புலமாகக் கொண்டவை, அவற்றை பிரச்சாரம் செய்பவை என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் திராவிட இயக்கத்தின் முக்கியக் கருத்துக்கள்தான் என்ன?

எனக்குத் தோன்றுபவை:

1. ஆரியர்-திராவிடர் வேறுபாடு; திராவிடர் தென்னிந்தியாவின் – குறிப்பாக தமிழகத்தின் பூர்வ குடியினர், அவர்களை வந்தேறி ஆரியர்கள் பண்பாட்டு ரீதியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஆதிதிராவிடர்களை திராவிட வந்தேறிகள் அடக்கி ஆண்டார்களா என்று கேட்கக் கூடாது.

இது நாசூக்கான வடிவம். நடைமுறையில் இது பார்ப்பனர்-“இடைநிலை” ஜாதியினர் வேறுபாடு. தமிழன் கேனையன், ஊருக்கு புதிதாக வந்த ஓரிரண்டு பார்ப்பான் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்றால் அட ஆமாம் என்று மூவேந்தரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உள்கருத்து. “உயர்ந்த” ஜாதியினர் என்பதால் பிராமணர் சமூகத்தில் அனுபவித்த சலூகைகளை விட பிராமணர்கள் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்க காலத்தில் அரசு வேலைகளிலும் வக்கீல் தொழிலிலும் கொழித்ததுதான் முக்கிய காரணி.

இதன் இன்னொரு கிளை புராணங்களும், கடவுள் பற்றி சங்க இலக்கியங்களில் வரும் குறிப்புகளும் எல்லாமே பிராமணரின் பம்மாத்து வேலை என்ற கருத்து.

திராவிட இலக்கிய எழுத்துக்களில், குறிப்பாக அண்ணாதுரையின் எழுத்துகளில் இது மீண்டும் மீண்டும் பார்ப்பன பாத்திரங்களை அற உணர்வே அற்ற வில்லன்களாகவும், இடைநிலை ஜாதியினரை, குறிப்பாக வயதில் மூத்த முதலியார்களை இப்படிப்பட்ட அயோக்கியர்களிடம் சுலபமாக ஏமாறுபவர்களாகவும், இளைய தலைமுறையினர் எதிர்ப்பதாகவும் காட்டுவதில் வெளிப்படுகிறது.

2. தமிழ் மிகப் பழைய மொழி – குறிப்பாக சமஸ்கிருதத்திற்கு சமமான அளவுக்காவது பழமையானது. அந்தக் காலத்திலேயே தமிழ் சமுதாயம் உயர்ந்த நாகரீக நிலையை அடைந்திருந்தது. சேரன் செங்குட்டுவன் கனக விஜயரை கல் சுமக்க வைத்தான், ரோமாபுரியில் தமிழர் தேரோட்டினர் என்று தமிழனின் வீரம், வாணிகத் திறமை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினர். சுருக்கமாகச் சொன்னால் முற்காலம் பொற்காலம்.

இதன் தொடர்ச்சியாக லெமூரியா, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று ஒரு கிளை உண்டு. கன்னடத்திற்கும் களிதெலுங்கிற்கும் மலையாளத்திற்கும் தமிழே தாய்மொழி என்றும் ஒரு கிளை உண்டு. கன்னடர்களும் தெலுங்கர்களும் தமிழ் மூலமொழி என்று நினைக்கிறார்களா என்று யாரும் கேட்கக் கூடாது.

இந்தக் கருத்துக்கள் உருவாக்கிய அரசியல் மாற்றங்கள், ஏன் பண்பாட்டு மாற்றங்களைக் கூட நான் இங்கே பேசவில்லை. அவை புனைவுகளிலும் ஆய்வுகளிலும் எப்படி வெளிப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமே இங்கே பேசுபொருள்.

அண்ணா இந்தக் கருத்துக்களை முன்வைத்து தொடர்ச்சியாக புனைவுகளை எழுதினார். சிறுகதைகளை விட, நாவல்களை விட, அவரது நாடகங்களில்தான் – குறிப்பாக ஓரிரவு நாடகம் – சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. அவரே திராவிட இயக்கத்தின் கருத்துக்களை முன் வைத்த எழுத்தாளர்களில் தலை சிறந்தவர், ஆனால் அவரது திறமை அனேகமாக விரயம்தான் ஆனது. நாடகங்களை மட்டுமே வைத்துப் பார்த்தால் கூட தமிழில் நல்ல நாடகங்கள் அபூர்வம், அதனால்தான் அவருக்கு எழுத்தாளர் பட்டியலில் ஒரு இடம் இருக்கிறது.

கருணாநிதி அண்ணாவின் படுசுமாரான நகல். அவரது எழுத்து சிறப்பாக வெளிப்பட்டிருப்பது அவர் மனோகரா, பராசக்தி, மந்திரிகுமாரி போன்ற திரைப்படங்களுக்கு எழுதிய வசனங்களில்தான். குறளோவியத்துக்கு அவர் எழுதிய உரையை நான் பெரிதாக ரசிக்கவில்லை, ஆனால் அவரது தேர்வுகள் அருமை.

பாரதிதாசன், தென்னரசு முதலான பலரும் புனைவுகளை, நாடகங்களை எழுதி இருக்கிறார்கள். நான் இது வரை எந்த நல்ல புனைவையும் படித்ததில்லை. குறிப்பாக பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தைப் போல மோசமான எழுத்தை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். ஓரளவு படிக்கக் கூடியது சி.பி. சிற்றரசின் விஷக்கோப்பை நாடகம் மட்டுமே.

கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு கவிதை அலர்ஜி. நான் ஓரளவு படித்திருப்பது பாரதிதாசனை மட்டுமே. பாரதிதாசனின் பலம் சந்தம். ஆனால் என் மனம் கவர்ந்த மாதிரி அவர் ஒரு கவிதையையும் எழுதவில்லை.

தமிழ் ஆய்வுகளில் திராவிட இயக்கத்தினர் முக்கியமான பங்காற்றி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு தமிழ் ஆய்வுகளைப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவும் ஆர்வமும் கிடையாது. ஆனால் மு.சு. பூரணலிங்கம் பிள்ளையிலிருந்து தேவநேயப் பாவாணர் வரை தமிழில் ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்ன, அவர்களது திராவிட இயக்க சார்பு அவர்களை சில முன்முடிவுகளுக்கு அழைத்து செல்கிறது. அந்த முன்முடிவுகளை தங்கள் ஆய்வுகளில் அவர்கள் வலிந்து புகுத்துவது சில சமயம் கேலிக்கூத்தாக முடிகிறது.

திராவிட இயக்கத்தினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் பல தமிழறிஞர்கள் அவர்களோடு சில பொதுவான விஷயங்களில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பாரதியாரேபேராசைக்காரனடா பார்ப்பான் – ஆனால் பெரிய துரை என்றில் உடல் வேர்ப்பான்” என்று எழுதி இருக்கிறார். திரு.வி.க. போன்ற காந்தியர்கள், மறைமலை அடிகள் போன்ற தீவிர சைவர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்களை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இமையத்தின் எழுத்துக்கும் இந்தக் கருத்துகளுக்கும் ஸ்னானப் பிராப்தி கூட கிடையாது. அவர் எழுத்தாளர், திராவிட இயக்க எழுத்தாளர் என்று அவர் சொல்லிக் கொள்வது அவரது தனிப்பட்ட சார்பு நிலையை மட்டுமே.

திராவிட இயக்கத்தின் இலக்கிய ரீதியான பங்களிப்பு என்பது தமிழ் மொழி பற்றிய பெருமிதத்தை பரவலாக்கியதும், நல்ல தமிழை இரண்டு தலைமுறைக்காவது கொண்டு வந்ததும்தான். கறாராகப் பார்த்தால் அண்ணாதுரையின் 3 நாடகங்களைத் தவிர மிச்ச அனைத்தும் ஒரு அடிக்குறிப்பு அளவுக்கு வந்தால் அதிகம். கருணாநிதி அதிகார பீடத்தில் இருந்ததாலும் பாரதிதாசன் உருவாக்கிய வானம்பாடி பரம்பரையின் எச்சங்கள் இன்னும் அழிந்துவிடாதாதலும் அவர்கள் இருவரும் கொஞ்சம் நினைவு கூரப்படுவார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: திராவிட இயக்க எழுத்தாளர்கள்

திராவிட இயக்க எழுத்தாளர்கள்

திராவிட இயக்க சார்புள்ள எழுத்தாளர்களில் இமையம் ஒருவரே முக்கியமான எழுத்தாளர் என்று நான் கருதுகிறேன். தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இமையத்தை நான் திராவிட இயக்க எழுத்தாளராகக் கருதவில்லை, ஆனால் அவர் தன்னைப் பற்றி அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார், அதனால் வேறு வழியில்லை. 🙂 சுருக்கமாகச் சொன்னால் அவர் படைப்பது இலக்கியம். அவருடைய சார்புநிலை என்ன, திராவிட இயக்கத்தின் மீது பரிவுள்ளவரா, ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவரா என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.

அண்ணாவுக்கெல்லாம் சில நாடகங்கள் மட்டுமே நினைவில் இருக்க வேண்டியவை. போனால் போகிறது என்று செவ்வாழை சிறுகதையை சேர்த்துக் கொள்ளலாம்.

மனுஷ்யபுத்திரன் தன்னை திராவிட இயக்க எழுத்தாளராக கருதுகிறாரா என்று தெரியவில்லை. எனக்கு கவிதை அலர்ஜி, நான் மனுஷ்யபுத்திரனைப் படித்ததில்லை. ஆனால் அவர் நல்ல கவிஞர் என்று நான் மதிக்கும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

வேறு யாரும் என் கண்ணில் தேறவில்லை. பாரதிதாசனை நான் நல்ல கவிஞராகக் கருதவில்லை. அவருடைய பலம் சந்தம் மட்டுமே. பிரச்சார நெடி பலமாக அடிக்கும் இரணியன் போன்ற சில சகிக்க முடியாத நாடகங்களை எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பிசிராந்தையார் புத்தகத்துக்கு சாஹித்ய அகடமி விருது கிடைத்தது உலக மகா அநியாயம். வெங்கட் சாமிநாதன் அதைப் பற்றி தகுதி உள்ளவர் எழுதிய தகுதி அற்ற புத்தகத்துக்கு கிடைத்த விருது என்று குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு எழுத்தாளரின் தகுதி பற்றியே நல்லெண்ணம் கிடையாது.

கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு என்பது மனோகரா வரை திரைப்பட வசனங்கள் மட்டுமே. குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா இத்யாதியை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது என்பதால் வாயை மூடிக் கொள்கிறேன்.

நெடுஞ்செழியன் எழுதிய “பண்டைய கிரேக்கம்” (1954) என்ற புத்தகத்தைப் படித்தேன். தெளிவான, பள்ளிப் புத்தகங்களுக்கு கொஞ்சம் மேலான அறிமுகம். கருணாநிதி போல துருத்திக் கொண்டு தெரியும் அலங்காரத் தமிழ் எல்லாம் குறைவுதான். சரளமான நடை.

என் கண்ணில் அவர் எழுதிய மொழிப் போராட்டம் (1948) ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம்.1938-இல் ஹிந்திக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் உ.வே.சா.வும் ஒருவர் என்று குறிப்பிடுகிறார். வியப்பளித்த தகவல், உ.வே.சா. எந்த வம்புக்கும் போகமாட்டார் என்று எனக்கு ஒரு மனப்பிம்பம் உண்டு. ராஜாஜியே போராட்டம் வலுத்ததும் இவ்வளவு தூரம் தகராறு முற்றிவிடும் என்று தெரிந்திருந்தால் இதில் தலையிட்டிருக்க மாட்டேன் என்று சொன்னாராம். அவர் போட்ட அபூர்வமான தப்புக் கணக்குகளில் ஒன்றோ? ஓமந்தூராரும் 1948-இல் ஹிந்தியைக் கொண்டு வந்தார் என்கிறார். அன்றைய கல்வி மந்திரியான அவினாசிலிங்கம் அன்றைய சென்னை மாகாணத்தில் ஹிந்திப் பயிற்சியை ஏற்படுத்தினாலும் தமிழ் பேசும் பகுதிகளுக்கு முதலில் விலக்கு அளித்தாராம், ஆனால் பல வித அழுத்தங்களால் தன் முடிவை மாற்றி ஹிந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினாராம். ஈ.வெ.ரா. தலைமையில் அண்ணாதுரை ஆணையாளராகப் பணியாற்றினார், திரு.வி.க. ஆதரவு தந்தார், 500 பேர் சிறையில் என்கிறார்.

அன்பழகன், முரசொலி மாறன் போன்றவர்கள் பேச்சோடு நிறுத்திக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன், ஒரு வேளை சில கொள்கை விளக்கப் புத்தகங்களை எழுதி இருக்கலாம். பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ. விஸ்வநாதம், தேவநேயப் பாவாணர் எல்லாம் அபுனைவுகள், கொள்கை விளக்கப் புத்தகங்கள் மட்டுமே எழுதினார்கள். சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ். தென்னரசு, ஜலகண்டபுரம் கண்ணன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்ற சிலர் புனைவுகளும் எழுதினார்கள். வேழவேந்தன் மாதிரி சில கவிஞர்களின் பேர் நினைவிருக்கிறது. (நான் படித்ததில்லை) அண்ணா, கலைஞர் தவிர பாரதிதாசன், மாறன், ஆசைத்தம்பி, நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று சிலர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எல்லாம் எழுதினார்கள்.

அனேகமாக இவை எல்லாம் பிரச்சார நெடி அடிக்கும் மோசமான எழுத்துக்களே. அந்தக் காலத்து விகடன் குமுதம் கல்கி தொடர்கதைகள் தரத்தில் கூட இல்லை. காலாவதி ஆகிவிட்டன என்று சொல்வதே தவறாக இருக்கலாம், அன்றே இவற்றை யார் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தமிழின் புனைவுலக வரலாற்றில் இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ஒரு அடிக்குறிப்பு அளவில் இடம் தரலாம்.

அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ். தென்னரசு, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பெருஞ்சித்திரனார், புதுவை சிவம், புலவர் குழந்தை, அரங்கண்ணல், சாமி சிதம்பரனார், ஜலகண்டபுரம் கண்ணன், கி.ஆ.பெ. விஸ்வநாதம்,ஏ.கே. வேலன் உள்ளிட்டோரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. (முழுப் பட்டியல் அல்ல) ஈ.வெ.ரா.வின் எழுத்துக்கள் இன்னும் நாட்டுடமை ஆக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அவர்கள் சிலரைப் பற்றி:

சி.பி. சிற்றரசு: அறுபதுகளில், ஏன் எழுபதுகளில் கூட பள்ளிகளில் விரும்பி நடிக்கப்பட்ட பல காட்சிகள் உடைய நாடகம் விஷக்கோப்பை. அதுவும் நான் படித்த பள்ளிகளில் வருஷாவருஷம் இதைதான் நடிப்பார்கள். சாக்ரடீசின் வாதங்கள் அப்படி ஒன்றும் அபூர்வமானவை இல்லை என்றாலும் இன்றும் படிக்க முடிகிறது. இவற்றைத் தவிர சிற்றரசு எழுதிய சிந்தனைச் சுடர் (வழக்கமான பிராமண எதிர்ப்பு), சாய்ந்த கோபுரம் (மாஜினியின் வாழ்க்கை வரலாறு) நூல்களும் படித்தேன். இவற்றை எல்லாம் யார் படித்தார்கள் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். சிற்றரசின் சில புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.

எஸ்.எஸ். தென்னரசு பற்றி ஜெயமோகன் இரண்டொரு வார்த்தை நல்ல விதமாக சொல்லி இருக்கிறார். அவரது கோபுர கலசம் நாவலை தனது வரலாற்று நாவல்கள் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். சில புத்தகங்கள் ஆர்க்கைவ் தளத்தில் கிடைத்தன. வரலாற்றுக் கதைகள் வாரப் பத்திரிகை தொடர்கதை தரத்தில் இருக்கின்றன. கிருஷ்ணதேவராயர்-விஸ்வநாத நாயக்கரை வைத்து படுசுமாரான நாவல் ஒன்றை – துங்கபத்திரை – எழுதி இருக்கிறார். செம்மாதுளை படுசுமாரான நாவல்தான். ஆனால் பாகனேரி-பட்டமங்கலம் கள்ளர்களிடம் 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்ச்சியை, ஒரு கலவரத்தை விவரிப்பதால் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. பெண்ணில்லாத ஊரிலே அவரது சிறைச்சாலை நினைவுகள். (மிசா காலம் உட்பட பல முறை சிறை சென்றவர்.) ஆனால் அவரது பாடகிமலடி பெற்ற பிள்ளை, மிஸ் ராதா நாவல்கள் எல்லாம் உலக மகா தண்டம்.

பெருஞ்சித்திரனாரின் தமிழ் ஆய்வுகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஆனால் அவரது எழுத்துக்களில் அப்பட்டமான இனவெறி தெரிகிறது. ஆரியப் பார்ப்பனரின் அளவற்ற கொட்டங்கள் என்றே ஒரு புத்தகம் வந்திருக்கிறது. ஆவணக் கொலைகள் செய்து தள்ளும் எந்த ஜாதியினரைப் பற்றிக் கூட இப்படி ஒரு தலைப்பு வைத்துவிட முடியாது.

தேவநேயப் பாவணரும்  பெருஞ்சித்திரனார் போலத்தான், அவரது தமிழ் ஆய்வுகளும் எனக்குப் புரிந்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் என்றாவது முயன்று பார்க்க வேண்டும். புரிந்த வரையில்: பாவாணர் உலகின் அத்தனை மொழிகளும் – குறிப்பாக சமஸ்கிருதம் – தமிழிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கி உருவானவை என்று கருதுகிறார். தமிழனே ஆதி மனிதன், ஆனால் ஆரிய வந்தேறிகள் தமிழனை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பது அவரது உறுதியான கருத்து. பிரம்ம தத்துவம் மாதிரிதான்; அடிமையும் தமிழன், அடிமைப்படுத்துவனும் தமிழனேதான், ஆனாலும் அவன் வந்தேறி, தமிழ் வம்சாவளி ஆரியன். தன் படிப்பையும் அறிவையும் இந்த முன்முடிவுகளை நியாயப்படுத்தவே பயன்படுத்துகிறார், அது அவ்வப்போது கேலிக் கூத்தாக முடிகிறது.  ஏதோ ஒரு புத்தகத்தில் பிராமணன் தோல் வெளுப்பாக இருந்ததால் மூவேந்தரும் அவன் பேச்சைக் கேட்டு அவனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்கிறார். தமிழன் கேனையன் என்று உறுதியாக நம்பி இருக்கிறார். இருந்தாலும் அவர் சிறந்த தமிழறிஞராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

ஜலகண்டபுரம் கண்ணன் பல நாடகங்களை எழுதி இருக்கிறார். நாடக ஆசிரியராகத்தான் அவரது பங்களிப்பு. குன்றுடையான் என்ற ஒரு நாடகத்தை படிக்கலாம். நந்திவர்மன் என்ற நாடகம் ஓரளவு பிரபலமானது. அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டது தேவையற்ற செயல்.

ஏ.வி.பி. ஆசைத்தம்பி: எழுதியவருக்குத்தான் வேறு வேலை இல்லை என்றால் எனக்கு எங்கே போயிற்று அறிவு என்று நினைக்க வைத்த புத்தகம் தந்தையின் ஆணை.

கி.ஆ.பெ. விஸ்வநாதம் தமிழுக்கு வேறு வகைகளில் உழைத்திருக்கலாம். ஆனால் அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டதும் தேவையற்ற செயல்தான்.

ஏ.கே. வேலன் திரைப்படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார், தயாரித்துமிருக்கிறார். வாழ்வின் பிற்பகுதியில் அவர் பக்தராக மாறி திராவிட இயக்கதிலிருந்து விலகினார். அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டது தேவையற்ற செயல்.

இது முழுமையான பட்டியல் இல்லைதான். என் கண்ணில் பட்ட சிலரைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். ஆனால் இமையம் ஒருவரைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்த வேண்டிய திராவிட இயக்க எழுத்தாளராக எனக்குத் தெரியவில்லை. அண்ணாவின் சில நாடகங்கள் பரவாயில்லை ரகம். பாரதிதாசனை நல்ல கவிஞர் என்ற மதிப்பீடு அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் அந்த மதிப்பீடும் இப்போது காலவதி ஆகிவிட்டது.  பெருஞ்சித்திரனார் தமிழறிஞராக இருக்கலாம், ஆனால் அப்பட்டமான இனவெறியர். தேவநேயப் பாவாணரும் நல்ல தமிழறிஞர்தான் என்று நினைக்கிறேன், ஆனால் அவரது முன்முடிவுகள் சில சமய்ம் அவரை கேலிக்கூத்தாக்கிவிடுகின்றன.

இமையமே கூட எந்த விதத்தில் திராவிட இயக்க எழுத்தாளார் என்று எனக்குத் தெரியவில்லை, அவரது தனி வாழ்க்கையில் அவர திராவிட இயக்கத்தினராக இருக்கலாம், அவரது விழுமியங்களில் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக்கலாம், ஆனால் இமையத்தின் எழுத்தில் செயற்கைத்தனமோ, பிரச்சார நெடியோ எதுவுமில்லை, அவர் இலக்கியம் படைக்கிறார் அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

பிடித்த சிறுகதை: Hunters in the Snow

முதல் முறை படித்தபோது இந்தச் சிறுகதையின் black humor-க்காக வாய்விட்டு சிரித்தேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் படிக்கும்போதும் புன்னகையாவது வருகிறது.

எளிய சட்டகம். மூன்று நண்பர்கள். வேட்டையாடப் போகிறார்கள். கென்னி விளையாட்டாக டப்பை (Tub) சுட வருவது போல நடிக்க, பயந்து போகும் டப் கென்னியை சுட்டுவிடுகிறான். கென்னியைத் தூக்கிக் கொண்டு மருத்தவமனைக்கு போகிறார்கள், ஆனால் தவறான பாதை.

நண்பர்களின் சித்திரங்கள் அபாரமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. டப் கொஞ்சம் குண்டானவன். எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டில் (diet) இருப்பவன். அதிலும் ஒரு ரகசியம் உண்டு. கென்னி கொஞ்சம் தீசத்தனம் உள்ளவன். இன்னொருவனான ஃப்ராங்கிற்கு ஒரு ரகசியம் உண்டு.

ஆரம்பக் காட்சியில் கடுமையான பனி. சாலையில் காத்திருக்கும் டப் மேல் காரை ஏற்றி விடுவது போல கென்னி தன் ஓட்டைக் காரை ஓட்டி வருகிறான். கதவுகள் அங்கும் இங்கும் உடைந்திருக்கும் காருக்குள்ளும் எக்கச்சக்கமாக குளிர். டப்பின் உடல் பருமனைப் பற்றி கேலியாக பேசுகிறார்க்ள. மற்ற இருவரும் சாப்பிடும்போது டப் ஒரு முட்டையை மட்டுமே சாப்பிடுகிறான். டப்பை மற்றவர்கள் ஓட்டுவது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

கென்னி சுடப்படும் காட்சி அருமை. நண்பர்களுக்கு எப்போதும் வேட்டையில் எந்த விலங்கும் மாட்டுவதில்லை. கொஞ்சம் கடுப்பில் இருக்கும் கென்னி முதலில் “I hate this” என்று சொல்லிவிட்டு வேலியை சுடுகிறான். மீண்டும் “I hate you” என்று சொல்லிவிட்டு அந்தப் பகுதியில் வாழும் ஒருவரின் வயதான நாயைச் சுடுகிறான். அடுத்தபடி “I hate you” என்று சொல்லிவிட்டு டப்பை குறி வைக்கிறான். டப் உடனே கென்னியை சுட்டுவிடுகிறான். பிறகுதான் தெரிகிறது, நாய் மூப்பில் படும் கஷ்டத்தை பார்க்கவும் முடியாமல், அதைக் கொல்லவும் முடியாமல் தவிக்கும் அந்த நாயின் சொந்தக்காரரே கென்னியிடம் அதை சுட்டுக் கொல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று.

அதற்கப்புறம் வரும் காட்சிகள் எல்லாம் அபாரமானவை. அசோகமித்திரன் பாணி black humor. என்ன, அசோகமித்திரன் இன்னும் subtle ஆக எழுதுவார். சுடப்பட்ட கென்னி பேசுவது, டப் தன் diet எல்லாம் வெறும் வெளிவேஷம், தான் எப்போதும் தின்றுகொண்டே இருப்பேன், ஆனால் அதை ஒத்துக் கொள்வதை அவமானமாக உணர்கிறேன் என்று ஃப்ராங்கிடம் சொல்வது, ஃப்ராங்க் அவனுக்கு ஒரு உணவு விடுதியில் எக்கச்சக்க தீனி வாங்கிக் கொடுத்து அவனை சாப்பிட வைப்பது. கென்னியின் புலம்பல்கள்…

எழுதியவர் டோபையாஸ் வுல்ஃப். 1981-இல் எழுதப்பட்ட சிறுகதை. Hunters in the Snow பீட்டர் ப்ரூகெல் வரைந்த ஒரு புகழ் பெற்ற ஓவியம். அந்த ஓவியம்தான் இவருக்கு இந்தக் கருவை கொடுத்திருக்க வேண்டும்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: வுல்ஃபின் இன்னொரு சிறுகதையில் – Bullet in the Brain – அவரது தொழில் திறமை தெரிகிறது, குறிப்பாக ஆண்டர்ஸ் நினைவு கூரும் நிகழ்ச்சி மற்றும் நினைவு கூராத நிகழ்ச்சிகளின் விவரிப்பில். ஆண்டர்ஸால் தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதில். ஆனால் என் கண்ணில் சுமாரான சிறுகதைதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டோபையாஸ் வுல்ஃப் விக்கி குறிப்பு
Hunters in the Snow சிறுகதையின் மின்பிரதி
Bullet in the Brain சிறுகதையின் மின்பிரதி