பாரதியின் புனைவுகள்

bharathiபாரதி என்ற கவிஞரை எடை போடுவது என்னால் ஆகாது. ஆனால் அவரது புனைவுகளைப் பற்றி விமர்சிக்க முடியும்.

பாரதியின் கவிதைகளில் ஒரு உத்வேகம் எப்போதும் இருக்கும். அவரது உரைநடையிலும் சிறப்பம்சம் இதுதான். வேகம் நிறைந்த நேரான நடை. அந்தரடிச்சான் சாஹிப், கிளிக்கதை, காக்காய் பார்லிமெண்ட், குதிரைக் கொம்பு எல்லாம் குறிப்பிட வேண்டியவை. அங்கங்கே அவரது உரைநடை கவிதையாகவே இருக்கும். ஆறில் ஒரு பங்கு சிறுகதையில் இறந்துபோன காதலி உயிருடன் இருக்கலாம் என்று நாயகன் அறியும்போது அவன் உணர்ச்சிகளை விவரிக்கும் விதம் –

ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?

கவிதையேதான். வசன கவிதை (காற்று) என்று அவரே சொல்லிக் கொண்டது புதுக் கவிதையோ, கதையோ என்னவோ நானறியேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உயர்ந்த கவிதை. எனக்கே கற்பூர வாசனையை புரிய வைக்கும் கவிதை.

அவருடைய சிறுகதைகளில் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையை ஜெயமோகன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். ஏன் சேர்த்தார் என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை.

காக்காய் பார்லிமெண்ட் கதையில் எனக்குப் பிடித்தமான ஒரு பகுதி –

காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம். ‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம்.

குறைகளைக் கண்டுபிடிக்க கஷ்டமே பட வேண்டாம். என்னவோ ராத்திரியில் பிள்ளைகளை தூங்க வைக்கச் சொல்லும் கதைகள் மாதிரிதான் எல்லா கதைகளும் இருக்கும். மனம் போன போக்கில் கதை எழுதப்பட்டிருக்கும். Subtlety என்பது அறவே கிடையாது.

இந்தக் குறைகள் எல்லாம் இருந்தாலும் ஞானரதம் மிகச் சிறப்பான முயற்சி. ஆங்கிலத்தின் முதல் அகராதியைப் பதித்த சாமுவேல் ஜான்சன் எழுதிய ரசேலாஸ் என்ற புத்தகத்தோடு ஒப்பிடலாம். (ஆனால் அதை விட சிறந்த புத்தகம்). இந்த பிரமாதமான புத்தகத்தை யாரும் – ஜெயமோகன் போன்ற தேர்ந்த வாசகர்களும் – பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் கண்ணில் அது கமலாம்பாள், பத்மாவதி சரித்திரத்தோடு ஒப்பிடக் கூடியது. முன்னோடி முயற்சி என்பதால் மட்டுமல்ல சிறந்த படைப்பு என்பதாலேயே இதை நான் பரிந்துரைக்கிறேன். இணையத்தில் கிடைக்கிறது.

முடிவடையாத கதையான் சின்னச் சங்கரன் கதை முற்றுப் பெற்றிருந்தால் நன்றாக வந்திருக்கும். வ.ரா. இது 29 30 அத்தியாயம் எழுதப்பட்டது என்றும் கையெழுத்துப் பிரதி தொலைந்துவிட்டது என்றும் எங்கோ சொல்லி இருக்கிறார்மஹாகவி பாரதியார்” என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அருமையான புத்தகம்!

சந்திரிகையின் கதை மனம் போன போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. முடித்திருந்தால் ஒரு வேளை நன்றாக வந்திருக்கலாம். வீரேசலிங்கம் பந்துலுவும் ஜி. சுப்ரமணிய ஐயரும் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். இன்று அதற்கு ஆவண முக்கியத்துவம் மட்டுமே. புதுமைப்பித்தன் இதை கோபாலையங்காரின் மனைவி என்று தொடர முயற்சித்திருக்கிறார்.

பாரதியின் பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கடிதங்கள் மஹாகவிபாரதியார்.இன்ஃபோ என்ற தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. அதை நடத்துபவர்களுக்கு ஒரு ஜே!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதியார் பக்கம்

காந்தி, நான், ஜெயமோகன்

Gandhiஎனக்குத் தெரிந்த வரை மனச்சோர்வே இல்லாமல் எல்லா பின்னடைவுகளையும் சந்தித்த ஒரே மனிதர் காந்திதான். அவர் நினைத்ததெல்லாம் நடக்கவில்லைதான். அவரது நோக்கங்களை முழுதாக செயல்படுத்துவதில் அவருக்கு தோல்விதான். ஆனாலும் அவரது வாழ்வே மனித குலத்தின் வெற்றிதான்.

சமீபத்தில்தான் ஜெயமோகனின் இந்தப் பழைய பதிவைப் பார்த்தேன். ஜெயமோகன்

கடுமையான காந்தி வெறுப்பு கல்விமட்டத்திலேயே எனக்குக் கிடைத்தது. அதை இங்கே பரப்பியவர்கள் கிறித்தவ, கம்யூனிசக் கருத்தியல் கொண்டவர்கள்.

என்றும்

நான் பல கிறித்தவக் கல்வி நிறுவனங்களில் கடுமையான காந்தி வெறுப்பு கற்றுக்கொடுக்கப்படுவதை நேரில் கண்டிருக்கிறேன்.

என்றும் எழுதுகிறார்.

jeyamohanநான் ஜெயமோகனின் தலைமுறைக்காரன். செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளில் படித்தேன். 3 கிறித்துவ கல்வி நிறுவனங்களில் (செய்யூர் லிட்டில் ஃப்ளவர் பள்ளி, தாம்பரம் கார்லி பள்ளி, செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி) படித்தேன். ஒரு நிறுவனத்திலும், காந்தியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கேட்டதில்லை, ஒரு ஆசிரியரும் காந்தியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. காந்தி மட்டுமல்ல, எந்தத் தலைவரைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசியதில்லை. ஏதாவது பேசினால் அது புகழாரமாகத்தான் இருக்கும். மிச்ச மாணவப் பருவம் பொறியியல் கல்லூரிகளில் கழிந்தது. அங்கே எப்போதும் ஒரு சிறு SFI (கம்யூனிச சார்பு) கோஷ்டி உண்டு. ஒரு வேளை அவர்கள் காந்தியை விமர்சித்திருக்கலாம். ஆனால் அது ஒரு விளிம்பு நிலைக் குழு, மாணவர்களிடம் பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. உயிர் நண்பன் தங்கமணிமாறன் திராவிடக் கழகப் பின்னணி உள்ள குடும்பத்தவன். ஆனால் நான்தான் ஈ.வெ.ரா.வை விமர்சித்திருக்கிறேன், அவன் காந்தியைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகச் சொன்னதில்லை.

காந்தியைப் பற்றி விமர்சனங்களை நான் படித்தது பிற்காலத்தில் நானாகப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தபோதுதான். ஜிகிரி தோஸ்த் ஸ்ரீகுமார் கம்யூனிச சார்புடையவன். காந்தியைப் பற்றி நானும் அவனும் நிறைய பேசி இருக்கிறோம், விமர்சித்திருக்கிறோம், ஆனால் காந்தி வெறுப்பு என்பதை இணையம் பரவலாகும்முன் கண்டதில்லை.

நான் மனிதர்களை நம்புபவன். எனக்கு வெறுப்பு அஜெண்டா என்பது அதீதமாக இல்லாத வரை கண்ணில் படுமா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் ஒரே தலைமுறையைச் சேர்ந்த இருவருக்கு கல்வி நிலையங்களில் இப்படி வேறுபட்ட அனுபவங்கள் கிடைத்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வதைப் பார்த்தால் இப்படிப்பட்டவர்கள் மிக அதிகமாக இருப்பதைப் போலவும், அதுவும் பல வருஷங்களாக இருப்பதைப் போலவும் தெரிகிறது.

உங்கள் அனுபவம் என்ன? பள்ளிகளில் காந்தி வெறுப்பு கற்றுத் தரப்படுவதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

பின்குறிப்பு 1: என் எண்ணத்தில் காந்தியை வெறுப்பவர்கள் இரண்டு வகை. ஒன்று சிரிப்பு புரட்சியாளர்கள். வினவு மாதிரி. இரண்டு வரி படித்தால் இதெல்லாம் காமெடி பீஸ் என்று புரிந்துவிடும். காந்தியை வெறுக்கிறேன் என்றால் தனக்குப் பெரிய சிந்தனையாளர் என்ற இமேஜ் கிடைக்கும் என்று நப்பாசைப்படுகிறவர்கள். இரண்டு காந்தியின் inclusive agenda ஒத்துவராதவர்கள். இவர்கள் அனேகமாக ஒரு குழுவை முன்னிறுத்தி இன்னொரு குழுவை வெறுப்பவர்கள்.

பின்குறிப்பு 2:எனக்கு காந்தி மேல் விமர்சனம் உண்டு. கிலாஃபத் இயக்கம் ஒரு உதாரணம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ஜெயமோகனின் ஒரிஜினல் பதிவு

நீயா நானா?

புத்தகங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இன்னொரு பதிவு.

பள்ளி ஆண்டு முடியாவிட்டாலும் என் சின்னப் பெண் க்ரியா தன் நோட்டுப் புத்தகங்களை எழுதி நிறைத்துவிட்டாள். அதனால் நானும் அவளும் பக்கத்து கடைக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கப் போயிருந்தோம்.

வழக்கமான நோட்டுப் புத்தகங்களை ஓரிரு நிமிடத்தில் தேர்ந்தெடுத்துவிட்டாள். பிறகு என்னிடம் தனக்கு சின்னதாக ஒன்று வேண்டும், அது பள்ளிக்காக அல்ல என்று சொன்னாள். என்ன பிடிக்கிறதோ எடுத்துக் கொள்ளேன் என்றேன். அரை மணி நேரம் கடை பூராவும் அலசிக் கொண்டே இருந்தாள். நான் பொறுமை போய் அலுத்துக் கொண்டதும் ஒன்றை எடுத்து என்னிடம் காண்பித்தாள். அது பதினோரு டாலரோ என்னவோ. (வழக்கமான நோட்டுப் புத்தகங்கள் ஒரு டாலர் ஒன்றரை டாலர் இருக்கலாம்.)

நான் அவளிடம் “இதை எல்லாம் எடுத்தே அம்மா ரொம்ப கோவிச்சுப்பா” என்று நைசாக அம்மா மேல் பழியைப் போட முயன்றேன்.

அவள் திருப்பிக் கேட்டது – “Who will she be mad at? You or me?

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டிகள்:

 • அம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி?
 • க்ரியாவின் அலுப்பு
 • நேற்று இன்று நாளை
 • க்ரியாவின் ஏமாற்றம்
 • பெரிய நம்பர்கள்
 • அக்கா vs சாக்லேட்
 • டாகுமெண்டரி – ஒரு தென்னிந்திய கிராமம்

  புத்தகங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு பதிவு.

  அந்தக் கால இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் எடுத்த ஒரு ஆவணத் திரைப்படம் கண்ணில் பட்டது. பதினைந்து நிமிஷம்தான் இருக்கும். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

  இந்தத் திரைப்படம் உண்மையிலேயே ஆவணத் திரைப்படம்தானா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். மதுரை வீரன் நாடகத்தில் (கூத்து என்று சொல்ல முடியவில்லை) ஆடுபவர்கள் (நடிப்பவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை) லலிதா-பத்மினி என்று நினைக்கிறேன். லலிதாவும் பத்மினியும் இளைஞிகளாகத் தோற்றம் அளிக்கிறார்கள். நாற்பதுகளின் இறுதியிலோ ஐம்பதுகளின் ஆரம்பத்திலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது இருவருமே பெரிய சினிமா/நடன நட்சத்திரங்கள். அவ்வளவு வளர்ந்த நிலையில் ஒரு கிராமத்தில் நாடகம் ஆடினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.

  எப்படி இருந்தால் என்ன? நன்றாக இருக்கிறது, பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

  Wuthering Heights

  wuthering_heightsWuthering Heights-இல் என்னவோ இருக்கிறது. அது என்ன என்று விளக்க முடியவில்லை.

  wuthering_heights_charactersதெரிந்த கதைதான். அனாதை ஹீத்க்ளிஃப் மிராசுதார் எர்ன்ஷா குடும்பத்தில் யார்க்‌ஷையரின் gothic சுற்றுச்சூழலில் வளர்கிறான். மிராசுதார் மகள் காதரீனுடன் மனிதர் உணர்ந்து கொள்ளும் மனிதக் காதலை மிஞ்சிய ஒரு காதல். மிராசுதார் மகன் ஹிண்ட்லிக்கோ அனாதையை வேலைக்காரனாக வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், அப்பாவும் தங்கையும் நிறைய இடம் கொடுக்கிறார்கள் என்று கடுப்பு. அப்பா இறந்ததும் ஹீத்க்ளிஃபை வேலைக்காரனாகத்தான் நடத்துகிறான். இந்த சமயத்தில் நாகரீகமான நகரத்து வாலிபன் லிண்டனைக் கண்டு காதரீனின் மனம் கொஞ்சம் கலைகிறது. காதல் என்றால் ஹீத்க்ளிஃப்தான், ஆனால் அன்றைய சமூக சூழ்நிலையில் ஹீத்க்ளிஃப்பை மணந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது என்பதை உணர்கிறாள். ஹீத்க்ளிஃப் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சில வருஷங்கள் கழித்து காதரின் லிண்டனை மணக்கிறாள். பொருள் ஈட்டி ஒரு கனவானாக ஹீத்க்ளிஃப் திரும்புகிறான். காதலுக்கு துரோகம் செய்த காதரீனை அவனால் வெறுக்க முடியவில்லை, ஆனால் ஹிண்ட்லி, லிண்டன் எல்லாரையும் பழி வாங்க நினைக்கிறான். ஹிண்ட்லியின் நிலங்களையும் சொத்துகளையும் பறிக்கிறான். லிண்டனின் தங்கையை ஏமாற்றி மணக்கிறான். காதரீன் இறந்துவிட அவனைக் கட்டுப்படுத்தும் ஒரே சக்தியும் அழிந்துவிடுகிறது. ஹிண்ட்லியின் மகன் ஹரேடனை ஹீத்க்ளிஃப் தன் வேலையாளாக வளர்க்கிறான். தன் மகனுக்கு காதரீனின் மகளை பலவந்தமாக மணமுடித்து லிண்டன் குடும்பத்து சொத்துகளையும் கவர்ந்து கொள்கிறான். ஹரேடன், மகள் காதரீன் இருவர் வாழ்வையும் சொடுக்குப் போடும் வேளையில் அழித்துவிடலாம் என்ற நிலையில் அவனுக்கு வாழ்வில் அலுப்புத் தட்டிவிடுகிறது. காதரீனின் ஆவி தெரிகிறது. சாப்பிடாமல் தூங்காமல் இறந்து போய்விடுகிறான்.

  நாலாவது முறை படிக்கும்போதும் முதல் முறை படித்தபோது மனதில் பட்ட விஷயங்களேதான் மீண்டும் மனதில் படுகின்றன. லிண்டன் மீது, காதரீன் மீது லிண்டன் கொண்டிருக்கும் காதல் மீது ஹீத்க்ளிஃப்புக்கு உள்ள இளக்காரம்; மனதில் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்றிக் கொண்டு ஹீத்க்ளிஃப்பை மணக்கும் இசபெல்லா லிண்டன்; லாக்வுட்டுக்கு காதரீனின் ஆவி தென்பட்டது என்பதை அறிந்ததும் ஆவி தனக்கும் தெரியுமா என்று தேடும் ஹீத்க்ளிஃப்; ஹரேடன் ஹீத்க்ளிஃப்பின் பிம்பமாக வளர்வது; அம்மா காதரீனின் வாழ்க்கை எர்ன்ஷா-ஹீத்க்ளிஃப்-லிண்டன் என்று போனால் மகள் காதரீனின் வாழ்க்கை லிண்டன்-ஹீத்க்ளிஃப்-எர்ன்ஷா என்று போவது.

  emily_bronteவாழ்வில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது என்றால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பது சித்தரிக்கப்படுவதாலா? போலித்தனமே இல்லாத ஹீத்க்ளிஃப் பாத்திரத்தாலா? நம்பகத்தன்மை நிறைந்த பாத்திரங்களாலா? யார்க்‌ஷையரின் குளிர்ந்த காற்றடிக்கும் குன்றுகளை உணர முடிவதாலா? நானும் நாலைந்து முறை படித்துப் பார்த்துவிட்டேன், சுவாரசியம் குறைவான இந்த நாவல் ஏன் இலக்கியமாகிறது என்று என்னால் articulate செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது?

  ப்ராண்டே சகோதரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்டே எழுதி 1847-இல் வெளியான நாவல். இன்று பேரிலக்கியமாகக் கருதப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்ததாம்.

  wuthering_heights_filmபல முறை திரைப்படமாக வந்திருக்கிறது. எனக்குப் பிடித்த version லாரன்ஸ் ஒலிவியர் (ஹீத்க்ளிஃப்), டேவிட் நிவன் (லிண்டன்), மெர்லே ஓபரான் நடித்து 1939-இல் வெளிவந்த படம். ஹிந்தியிலும் தில் தியா தர்த் லியா (1966) என்று வந்தது. ஆனால் அதில் ஹீத்க்ளிஃப்பும் (திலீப் குமார்) காதரீனும் (வஹீதா ரெஹ்மான்) ஒன்று சேர்ந்துவிடுவார்கள்!

  படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

  ராஜனின் சினிமா சிபாரிசுகள் – A Most Wanted Man

  நண்பர் ராஜனின் விமர்சனம்

  a_most_wanted_manவிமானத்தில் வரும்போது நான்கைந்து சினிமாக்கள் பார்த்தேன். அவற்றுள் உருப்படியாக இருந்தவை A Most Wanted Man என்ற ஆங்கிலப் படமும் சதுரங்க வேட்டை என்ற தமிழ்ப் படமும்தான்.

  john_le_carreஅதே பெயரில் ஜான் லீ கார் எழுதிய நாவலை சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். லீ கார் எனது அபிமான spy நாவலாசிரியராவார். ஜான் லீ கார் cold war நாவல்களில் இருந்து வெளியேறி Constant Gardener, A Most Wanted Man போன்ற வேறு விதமான spy திரில்லர்களுக்குத் தாவி விட்டார். இந்த நாவலில் தனது பழைய MI6 பழைய cold war espionage சரக்குகளையே புதிய பாட்டிலில் கொடுத்துள்ளார். வழக்கமான கொக்கு தலை வெண்ணெய் ஒற்று வேலைகளே இந்தப் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  ஜான் லீ காரின் பத்து படங்கள் சினிமாவாக வந்துள்ளன. அந்தப் படங்களைப் போலவே இதுவும் விறுவிறுப்புக் குறையாமல் சுவாரசியமாகவே எடுக்கப்பட்டுள்து.

  நாவல் ஜெர்மனியின் ஜிஹாதி தலைநகரமான ஹாம்பர்க் நகரில் நடக்கிறது. ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே அகதிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டப்போது அதற்கான திட்டங்கள் போட்ட இடமும் அதற்கான நபர்கள் படித்த இடமும் இதே நகரம்தான். ஆகவே ஜெர்மானியர்கள் லேசாக சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு முஸ்லீமிடமும் லேசாக ஜிஹாதி சாயல் தெரிந்தாலும் நாடு கடத்தி விடுகிறார்கள்.

  ஜெர்மனியின் பயங்கரவாத எதிர்ப்பு உளவு அமைப்பு ரகசியமாக இயங்கும் ஒரு அமைப்பு. அவர்கள் ஜெர்மனியில் இருந்து கொண்டு ஜிஹாதிகளுக்கு உதவி செய்யும் ஒரு ஆளை உளவு பார்த்து வருகிறார்கள். முக்கியமான ஒரு இஸ்லாமியத் தலைவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அந்தத் தலைவருக்கு charity மூலம் வரும் பணத்தில் கொஞ்சம் சில பயங்கரவாத அமைப்புகளுக்குப் போகிறது என்று சந்தேகிக்கிறார்கள், ஆனால் ஊர்ஜிதம் ஆகவில்லை. அதே சமயத்தில் ஜெர்மனியின் துறைமுக நகரமான ஹாம்பர்கில் இசா என்ற ஒரு ரஷ்ய முஸ்லீம் illegal ஆக நுழைகிறான். அவன் ஒரு செசன்யா பயங்கரவாதி என்றும் அவனை நாடு கடத்த வேண்டும் என்று ஜெர்மனியின் உள்துறை போலீஸ் விரும்புகிறது.

  இசா ஜெர்மனியின் ஒரு பெரிய வங்கியில் அவனது அப்பா ஒளித்து வைத்திருந்த பணத்தை வாங்க வருகிறான். ஆனால் திடீரென பணத்தை வேண்டாம் என்று சொல்லி charity அமைப்புகளுக்குக் கொடுக்கிறான். அந்தப் பணத்தை இஸ்லாமியத் தலைவரிடம் போகிறது. அவரிடமிருந்து பணம் பயங்கரவாத அமைப்பிற்கு சென்ற பிறகு அதன் பின்னால் உள்ள அனைத்து பயங்கரவாதிகளையும் கைது செய்ய உத்தேசம்.

  ஆனால் ஜெர்மானிய போலீஸ் சரியான நடவடிக்கையை எடுக்கிறது. இந்த கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கும் வேலையே வேண்டாம். முஸ்லீமா? சந்தேகமா? உடனடியாக குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் வெளியே எறி என்று எறிந்து விடுகிறார்கள்.

  இந்தப் படத்தில் உளவு அமைப்புகள் வேவு பார்க்கும் விதங்களும் அவர்கள் எதிரிகளுக்கு அளிக்கும் நீளமான கயிறுகளும் உலக அளவில் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு பணம் வரும் வழிகளும் விரிவாகக் காண்பிக்கப்படுகின்றன. நல்ல த்ரில்லர். உளவு அமைப்பு இஸ்லாமிய பயங்கரவாத நிதி அளிப்பதற்கான காரணம் வலுவாகச் சொல்லப்படவில்லை. அமெரிக்கர்களும் இதில் தலையிட்டு தங்களுக்கும் அனைத்து தகவல்களும் வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். பார்க்கலாம்.

  உளவு அமைப்பின் தலைவராக அற்புதமான நடிகரான ஃபிலிப் சீமோர் ஹாஃப்மேன் நடித்திருக்கிறார். அவருக்காகவாவது இந்தப் படத்தைக் காணலாம். மேலும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை உலக உளவு அமைப்புகள் கையாளும் விதங்களையும் விரிவாகக் காண்பிக்கிறார்கள். நிறைய secular ஜல்லிகளும் உள்ளன. இந்த ஜல்லிகள் இருக்கும் வரை மேற்கு நாடுகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியே. இதைப் போன்ற secular ஜம்பங்களினாலேயே ஃபிரான்ஸிலும் டென்மார்க்கிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்கிறது. அதை அவர்கள் முற்றிலுமாக கைவிட்டுவிட்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை மிகக் கடுமையாக அணுகாவிட்டால் ஐரோப்பா விரைவில் அழிந்துவிடும்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: ராஜன் பதிவுகள், திரைப்படங்கள்

  மராத்தி எழுத்தாளருக்கு ஞானபீடம்

  bhalchandra_nemadeமராத்திய எழுத்தாளர் பாலசந்திர நெமடே 2014க்கான ஞானபீடம் பரிசை வென்றிருக்கிறார்.

  நெமடே தன் முதல் நாவலான கோசலாவை 1963-இல் எழுதினார். தனது சுயசரிதையையே புனைவாக எழுதி இருக்கிறாராம். பிறகு பிதர் (1975), ஹூல், ஜரிலா, ஜூல் (1979), ஹிந்து ஜக்ன்யாசி சம்ருத்த அட்கல் (2010) போன்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.

  இதற்கு முன் சாஹித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். 2011-இல் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

  நான் நெமடே என்ற பேரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். உங்கள் யாருக்காவது ஏதாவது தெரியுமா?

  தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

  தொடர்புடைய சுட்டி: நெமடே பேட்டி

  ஜெயமோகன் மேல் ட்ராட்ஸ்கி மருதுக்கு என்ன கோபம்?

  kaaviyath_thalaivanகாவியத்தலைவன் திரைப்படம் சொதப்பிவிட்டது, அதற்கு ஜெயமோகன் முக்கிய காரணம் என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

  trostky_marudhuஅவரது வார்த்தைகளில்:

  இயக்குனருக்கு துணை இருக்கும் எழுத்தாளருக்கு முதலில் அந்த காலத்தின் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த எழுத்தாளர் மீது பெரிய நம்பிக்கை எனக்கு கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளரை அழைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு முன் காட்சிப்படுத்தி சிந்திக்கும் சக்தியுள்ள ஒருவரை நீங்கள் தேட வேண்டும். நீங்கள் தேடி காட்சிப்படுத்துவதற்கான தரவுகளை சேர்த்த பின்பே ஒரு கதாசிரியர் தேவை. மெலிதான ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு அதை ஒழுங்கு செய்ய எழுத்தாளர் தேவை. ஆனால், அப்படி வரும் எழுத்தாளர் உங்களிடம் இப்படியான குறையிருக்கிறது என்று சொல்லாமலே, தான் சம்பாதித்து போவதற்குத்தான் பார்க்கிறார். இந்த படத்தைப் பார்க்கும்போதே அது தெரிகிறது. வசனத்துக்கும் காலத்துக்கும் சம்பந்தமேயில்லை. அவர் தனித்து இயங்குகிறார்.

  ….
  உள்ளே பேசியதை அந்த இயக்குநர் கேட்கவில்லை என்றால், வெளியே வந்து அதை பேசவேண்டுமல்லவா? அப்படியாக எழுத்தாளருக்கு நேர்மை இல்லாததும், வேறு புறம் பேசுவதுமாக இருப்பது சரியில்லைதானே!

  ….
  எழுத்தாளர், பதினைந்து நாளிலே எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார், அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லாதது போல் இயங்குகிறார்.

  jeyamohanநான் தமிழ் சினிமா உலகத்தைப் பற்றிப் பெரிதாக அறிந்தவனல்ல. ஆனால் வசனகர்த்தாவுக்கு இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய ரோல் இருக்கிறதா என்ன? இயக்குனர் அல்லது ஸ்டார் நடிகர்தான் படத்தை உருவாக்குகிறார் என்றுதான் தோன்றுகிறது. அப்படி என்றால் இயக்குனர் அல்லவா தனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்?

  காவியத்தலைவன் படத்தில் ஜெயமோகனின் திறமை வெளிப்படவில்லைதான். விமர்சனத்தில் “வசந்தபாலன் போர் வாளை பென்சில் சீவ பயன்படுத்தி இருக்கிறார்” என்று நானும் ஜெயமோகனின் பங்களிப்பைப் பற்றி சொல்லி இருந்தேன். கேட்டதை செய்து கொடுக்கும் வசனகர்த்தாவை எப்படி பொறுப்பாளி ஆக்குகிறார் என்று புரியவில்லை. அதுவும் தாக்குவதுதான் தாக்குகிறார், பெயரைக் குறிப்பிடாமல் ஏன் ஒளிய வேண்டும் என்று தெரியவில்லை.

  மருதுவின் ஓவியங்கள், குறிப்பாக பின்னணி நிறங்கள் எனக்குப் பிடித்தமானவை. தமிழ் அரசர்களின் உடைகள், நகைகள் பற்றிய அவரது எண்ணங்களை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த மாதிரி பேரைச் சொல்லாமல் விமர்சிப்பது தனி மனிதத் தாக்குதலாகவே தெரிகிறது. இதை விட அதிகமான நேரடித் தன்மையை அவரிடம் எதிர்பார்த்தேன்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ஜெயமோகன் பக்கம்

  2015 பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்

  இந்த வருஷம் இலக்கியத்துக்காக விருது பெற்றவர்களைப் பற்றி கீழே. அது என்னவோ இலக்கியம் மற்றும் கல்வி என்று ஒரு category! எதற்காக இரண்டையும் கலக்கிறார்கள் என்று புரியவில்லை. பத்தாதற்கு பத்திரிகையாளர்களுக்கு இதே category-யில் விருது கொடுக்கிறார்கள். அதுவும் இந்த வருஷம் எழுத்தாளர்களை கண்டு கொள்ளவில்லை. லக்ஷ்மிநந்தன் போரா, உஷாகிரண் கான், குண்வந்த் ஷா, சுனில் ஜோகி, நாராயண புருஷோத்தம மல்லயா ஐவரைத்தான் எழுத்தாளர்கள் என்று சொல்ல முடிகிறது. அதுவும் ழான்-க்ளாட் காரியர் போன்ற திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்துக்கான விருது கொடுக்கப்பட்டிருப்பது கொடுமை. பற்றாக்குறைக்கு கல்வியாளர்கள், சமூக சேவை செய்பவர்கள் என்று தெளிவாகத் தெரியும் பலருக்கும் “Others” category-யில் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

  பத்மவிபூஷண்:
  ஸ்வாமி ஜகத்குரு ராமானந்தாசார்யா ஸ்வாமி ராமபத்ராசார்யா இளமையிலேயே கண்ணிழந்தவர். ஊனமுற்றவர்களுக்காகவே ஒரு பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். பல புத்தகங்களை எழுதி இருக்கிறாராம். இவருக்கு “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

  பத்மபூஷண்:
  ஸ்வபன் தாஸ்குப்தா பத்திரிகையாளர். அதற்கு மேல் நானறியேன். அவரது தளம் இங்கே.

  ரஜத் ஷர்மா இந்தியா டிவி என்ற ஹிந்தி செய்தி சானலின் முதலாளி.

  டேவிட் ஃப்ராலி Indologist. இவருக்கு “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

  பத்மஸ்ரீ:
  டாக்டர் பெட்டினா சாரதா பாமர் காஷ்மீர சைவத்தைப் பற்றிய முதன்மையான ஆராய்ச்சியாளராம். ஆஸ்திரியர்.

  லக்ஷ்மிநந்தன் போரா நான் முன்னாலேயே கேள்விப்பட்டிருந்த ஒரே எழுத்தாளர். அஸ்ஸாமியர். அவரது கங்கா சில் நீர் பாகி நாவலைப் பற்றி ஜெயமோகன் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.

  டாக்டர் க்யான் சதுர்வேதி அங்கத எழுத்தாளராம். மருத்துவர். அவரது சகோதரர் வேத் சதுர்வேதிக்கு இதே வருஷம் பரம விசிஷ்ட சேவா பதக்கம் கிடைத்திருக்கிறது.

  ஹுவாங் பாவோஷெங் சீனர். மஹாபாரதத்தை சீன மொழிகளில் மொழிபெயர்த்த குழுவின் தலைவர். இவருக்கும் “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

  பிபேக் தெப்ராய் பொருளாதார நிபுணராம். இவருக்கு எதற்கு இலக்கியம்-கல்விக்காக பத்மஸ்ரீ என்று புரியவில்லை. இதிகாசங்களில் ஆர்வம் கொண்டு மஹாபாரதத்தை மொழிபெயர்த்திருக்கிறாராம்.

  டாக்டர் சுனில் ஜோகி ஹிந்தி கவிஞராம்.

  உஷாகிரண் கான் மைதிலி மொழி எழுத்தாளர். சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.

  நாராயண புருஷோத்தம மல்லயா கொங்கணி எழுத்தாளர் போலத் தெரிகிறது. ஆனால் கேரளர் என்று பத்மஸ்ரீ அறிவிப்பில் இருக்கிறது.

  லாம்பர்ட் மஸ்கரனாஸ் கோவாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்.

  ராம் பஹதூர் ராய் ஜெயபிரகாஷ் நாராயணோடு களப்பணி செய்திருக்கிறார். யதாவத் என்ற பத்திரிகையின் ஆசிரியர். ஜன்சத்தாவின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

  ஜே.எஸ். ராஜ்புட் பேராசிரியர், கல்வியாளர்.

  பிமல் ராய் Indian Statistical Institute-இல் இயக்குனராக இருக்கிறார்.

  குண்வந்த் ஷா குஜராத்தி எழுத்தாளர், கல்வியாளர்.

  பிரம்மதேவ் ஷர்மா, மற்றும் மனு ஷர்மா யாரென்று தெரியவில்லை.

  ழான்-க்ளாட் காரியர் திரைக்கதை எழுத்தாளராம். அவருக்கு எதற்காக இலக்கியம்-கல்விக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

  டாக்டர் நடராஜன் “ராஜ்” செட்டி ஹார்வர்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார்.

  ஜார்ஜ் ஹார்ட் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர். அவருக்கு கல்வி-இலக்கியத்துக்கான விருது கொடுக்கப்படவில்லை, Others என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

  ஆனெட் ஷ்மிட்சென் Indologist.

  விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல் இங்கே.

  தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்