சிலிகன் பள்ளத்தாக்கு பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் ஜெயமோகனையும் பி.ஏ. கிருஷ்ணனையும் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நண்பர் பாலாஜி ஆற்றிய உரை கீழே.
தன்னுடைய புத்தகத்தில் திரு. பி.ஏ. கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்: ஐம்பது வருடங்களுக்கு முன்னால் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு டாக்டரின் வரவேற்பு அறையில் ஒரு படம் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அந்த ஓவியத்தில் ஒருவனின் உடல் மேஜை மேல் கிடத்தப்பட்டிருந்தது. இடக்கை அறுக்கப்பட்டு உள்ளே இருக்கும் சதை தெளிவாகத் தெரிந்தது. மருத்துவர் ஒருவர் கையில் கூர்மையான உலோகக் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் படம் பி.ஏ.கேவை ஈர்த்திருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ஹேக்கில் மாரிட்ஸ்ஹ்யூஸ் மியூஸியத்தில் அந்த ஓவியத்தை பிஏகே பார்க்கிறார், பழைய நினைவுகள் வெள்ளமிடுகின்றன. எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அந்த பிம்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

அந்த ஓவியம் “Anatomy lesson of Dr. Tulp” ரெம்ப்ராண்ட்டுடையது.
நான் அந்த ஓவியத்தை முதன் முதலில் பார்த்தது, ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் டிரிவியாவை படிக்கும்போது. அதில் ஒரு பானல் அப்படியே அனாடமி லெசனைப் போலவே அமைந்திருக்கும்.

எத்தனையோ ஓவியங்கள் நம்முன் பல வடிவங்களில் வந்து போகின்றன. சில மனதுக்குள் தங்கிவிடுகின்றன. மகத்தான ஓவியங்கள் பல வகைகளில் நம் சிந்தனைகளை, நம் கற்பனையை தூண்டிவிடுகின்றன. இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். இங்குள்ள பல ஆபீஸ் வரவேற்பறைகளில் இருக்கும் வான் கோவின் Sunflowers, இல்லை மோனேவின் வாட்டல் லில்லீஸ். திரும்பத் திரும்ப பாப்புலர் கல்ச்சரில் தன் தடங்களை பதித்துக்கொண்டே செல்கின்றன இவ்வோவியங்கள். திரு. ஜெயமோகன் அடிக்கடி கூறும் செவ்விலக்கியத்தின் பாதிப்பு இதைப் போலத்தான். சில தினங்களுக்கு முன் ஒரு தமிழ் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலைப் பற்றி. ஆர்.கே நகரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் பெரிய அலையில் அடித்து செல்லப்படுவதாக ஒரு கார்ட்டூன். கார்ட்டூன் முக்கியமில்லை. ஆனால், அதில் அந்த அலை… அப்படியே ஹொகுசாயின் Great wave off Kanagawaவை நகல் எடுத்திருந்தது. அலை என்றாலே அந்த ஓவியம் ஞாபகத்துக்கு வருதே, அது தான் ஓவியத்தின் மகத்துவம்.

மேற்கத்திய ஓவியங்கள் பி.ஏ.கே எழுதி சென்ற வருடம் வெளியான புத்தகம். இது முதல் பாகம். குகை ஓவியங்களிலிருந்து ஃபெரெஞ்சு புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை. இதை ஒரு எளிய அறிமுகம் என்றோ, நமக்கு புரிய வேண்டும் என்று அச்சுப்பிச்சு நகைச்சுவையோ இல்லாமல், ஒரு ஆத்மார்த்தமான கலாரசிகனால், வரலாற்று மாணவனால் எழுதப்பட்ட புத்தகம். இதையெல்லாம் ரசிக்கணும், ஏன்னா இந்த ஓவியங்களில் இன்னின்ன சூட்சுமங்கள் இருக்கின்றனன்னு ஒரு கோடு போட்டு காண்பிக்கிறார்.
இது போல பல அறிமுகப் புத்தகங்கள் இங்கிலீஷில் வந்திருந்தாலும், அவற்றை விட இது ஒரு படி மேலே இருக்கிறது. முதல் காரணம், ஒவ்வொரு ஓவியத்தையும் பி.ஏ.கே பல வருடங்களாக பார்த்து, படித்து, அனுபவித்து எழுதியிருக்கிறது. வெர்மியரின் girl with the pearl earring பார்க்கும்போது அவர் சொல்கிறார் “நம்மாழ்வார் சொல்லும் அடங்கெழில் சம்பத்து என்ற செல்வ சமுத்திரத்தின் ஒரு திவலை இந்த ஓவியம்”. ஒரு தேர்ந்த ரசிகரின், தன் பயணங்களின் மூலம் பல ஓவியங்களைப் பார்த்தவரின் அனுபவம் நமக்கு இந்தப் புத்தகம் மூலம் கிடைக்கிறது.

இன்னொன்று, அறிமுகப் புத்தகங்கள் ஒரே சீரான ஸ்ட்ரக்சர் கொண்டவை. எல்லா ஓவியர்களைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு, அவர்களுடைய படைப்புகளின் ஒன்று இரண்டு எடுத்து அவற்றை விவரித்தல் என்று. பி.ஏ.கேக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால், அவருக்கு பிடித்த ஓவியர்களைப் பற்றி விரிவாக எழுத முடிகிறது. டியூரரைப் பற்றி ஒரு முழு சாப்டர். ஓவியர்களிலேயே மிகவும் கலகக்காரனான, சுவாரஸ்யமான வாழ்க்கை வாழ்ந்த காரவாஜ்ஜியோ வாழ்க்கையைப் பற்றி சில பக்கங்களுக்கு வர்ணனை. எனக்குப் பிடித்த டச்சு ஓவியர்கள் ஹல்ஸ், வெர்மியர், ரெம்ப்ராண்ட் பற்றி ஒரு சாப்டர் என்று. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எதை ஓரிரு வாக்கியங்களில் கடந்து போகிறார் என்பதை வைத்தே அவரது ரசனையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
சுமார் 160 ஓவியங்களை விவரிக்கிறது இந்த புத்தகம். ஹார்ட் கவர், முற்றிலும் வண்ணப் பக்கங்கள் என்று எதிலும் காம்பிரமைஸ் செய்துக்கொள்ளாமல் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல், தமிழில் இப்போது தான் நாவல் இலக்கியம் என்றால் கல்கி, மு.வ, அகிலன், நா. பா, லக்ஷ்மி என்று அவர்களை கடந்து வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதே போல், ஓவியத்தைப் பொறுத்த வரையில் தமிழனின் புரிதல்கள் மணியம் செல்வன், மணியம், கோபுலுவோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி எழதி பயமுறுத்த வேண்டுமா என்பதற்கு பதில் சொல்கிறார், நல்ல ஓவியங்கள் திறனாய்வாளர்களுக்குப் புதிராக இருக்கும், பல கேள்விகளை எழுப்பும், ஆனால் சாதாரணப் பார்வையாளர்களுக்குச் சொற்களால் விளக்க முடியாத அளவுக்கு பேருவகையை கொடுக்கும், கேட்காமலே பதில்களையும் அளிக்கும் என்கிறார். இதற்கு மேல் இந்தப் புத்தகத்தின் மதிப்பை, இது பட்டியலிடும் ஓவியங்களப் பற்றி கூற முடியுமா என்பது சந்தேகமே.
இது முதல் பாகம்தான். இரண்டாம் பாகத்தில், இம்பெரஷனிஸத்தையும், மற்ற புதிய மாடர்னிஸ்ட் பெயின்டிங்களையும் பி.ஏ.கே எப்படி கொண்டுவரப் போகிறார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். இப்படி ஒரு முயற்சி வெளியே வர வேண்டுமானால், முன்பதிவு செலுத்தி வாங்க ஆர்வலர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்ததை முதல் பாகத்துக்கு அனுப்பினோம். இங்கு வந்துள்ளவர்கள் இரண்டாம் பாகத்துக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கத்திய ஓவியங்கள். காலச்சுவடு பதிப்பகம். 2014 வெளியீடு.
தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், பாலாஜி பதிவுகள்
தொடர்புடைய சுட்டிகள்: இதே புத்தகத்தைப் பற்றி ஆர்வி
Like this:
Like ஏற்றப்படுகின்றது...