சந்தத்துக்கு அருணகிரி

சில கவிதைகளின் பலமே சந்தம்தான், அவற்றை வாய்விட்டுப் படிக்கும்போதுதான் மேலும் ரசிக்க முடிகிறது, முழுமையான திருப்தி கிடைக்கிறது. ஒரு வேளை அவற்றை கவிதை என்பதை விட பாடல்கள் என்று சொல்வது மேலும் பொருத்தமாக இருக்கலாம். தமிழின் ஆசிரியப்பா சந்தத்தை அருமையாக வெளிக்கொணரும் வடிவம் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

சின்ன வயதில் எனக்கும் இந்தக் கவிதைகளை, பாடல்களை வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் இருந்தது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள், ஆனால் என் அம்மாவே என் குரலைப் பற்றி தகர சிலேட்டில் ஆணியால் எழுதுவது போல இருக்கிறது என்று அடிக்கடி வர்ணித்ததால் வெகு சீக்கிரத்தில் அந்தப் பழக்கம் விட்டுப் போய்விட்டது. 🙂

என்ன தூண்டுதல் என்றே தெரியவில்லை, நாலைந்து நாட்களாக அருணகிரிநாதரின் சில பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒரு லூப் மாதிரி மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தனையும் சந்தத்துகாகவே மனதில் குடியேறி இருக்கின்றன என்று நினைக்கிறேன். சின்ன வயதில் தொக்குத் தொகுதொகு தொகு, குக்குகு குகுகுகு என்ன சொல்லும் இடத்தில் தடங்கல் வந்தே தீரும்!

கந்தர் அனுபூதியில் வரும் பாடல்கள் ஆசிரியப்பா என்று நினைக்கிறேன். திருப்புகழ் என்ன வடிவம் என்றே தெரியவில்லை. தமிழ் இல்லகணம் அறிந்த யாராவது சொல்லுங்களேன்!

கந்தர் அனுபூதியிலிருந்து இரண்டு பாடல்கள்:
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவானிறவான்
சும்மா இரு சொல்லறவென்றலுமே
அம்மா பொருளொன்றுமறிந்திலனே
(இது என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கந்தர் அனுபூதி பாடல்)

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர என ஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமுவர்க்கத்தமரரும் அடி பேண

பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக

பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத்தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப் பதம் வைத்துப் பைரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பைரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக என ஓத

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப்பிடி என முதுகூகை

கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப் பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

அரவிந்தன் நீலகண்டனின் “ஹிந்துத்வம் – ஒரு எளிய அறிமுகம்”

அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா பக்கம் வந்திருப்பதால் இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டன் தீவிர ஹிந்துத்துவர். நானோ ஹிந்துத்வத்தை எதிர்ப்பவன் (என்று நினைக்கிறேன்.) ஹிந்துத்வம் என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு எனக்கு பலத்த ஆட்சேபணை உண்டு. நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்வம் என்பது கெட்ட வார்த்தை என்பது எனக்கு கிறுக்குத்தனமாக இருக்கிறது. நான் கிருஸ்துவன், கிருஸ்துவத்தை எதிர்க்கிறேன் என்றால் எப்படி இருக்கும்? நாங்கள் பார்ப்பானை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்பது மாதிரி! இப்படி ஹிந்துத்வத்தை என் போன்ற சாதாரண ஹிந்துக்களிடமிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்ட சவர்க்கார் போன்ற ஹிந்துத்வர்களின் மீது எனக்கு கொஞ்சம் காண்டு உண்டு.

ஹிந்துத்வம் என்றால் என்ன என்று ஒரு முறை கேட்டதற்கு ஜடாயு எனக்கு பதில் சொல்ல முயற்சித்தார். தீவிர வாதப் பிரதிவாதத்துக்குப் பிறகு உனக்கு ஒண்ணும் தெரியலே, இந்தப் புத்தகத்தை எல்லாம் படித்துவிட்டு வா என்று ஹோம்வொர்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அடிக்கடி சந்திக்கும் இன்னொரு ஹிந்துத்வரான ராஜன் அ.நீ.யின் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் – “ஹிந்துத்வம் – ஒரு எளிய அறிமுகம்”. ஜடாயு கொடுத்த ஹோம்வொர்க்கை ஆரம்பிக்கவில்லை என்றாலும் இதையாவது படிப்போம் என்று இறங்கினேன்.

சுருக்கமாக:

  1. ஹிந்து மதத்தின்/ஹிந்துத்வத்தின் இரு முக்கியக் கூறுகள் theo-diversity (பல தெய்வ வழிபாடு) மற்றும் bio-diversity (இயற்கையில் இறைவனைக் காண்பது).
  2. இந்தியா ஹிந்து தேசமாக இருப்பதால்தான் இந்திய அரசு மதச்சார்பற்றதாக இருக்க முடிகிறது.
  3. ஹிந்துத்வா சிந்தனை முறை மாற்றங்களை ஏற்கக் கூடியது.
  4. தொன்மங்களில் ஜாதி முறை இல்லை, வியாசர் மீனவர், கீதை குணமே வர்ணத்தை நிர்ணயிக்கிறது என்று சொல்கிறது இத்யாதி.
  5. இடிக்கப்பட்டது கும்மட்டம், மசூதி இல்லை.
  6. குஜராத்தில் நடந்தது கலவரம், படுகொலை இல்லை.
  7. ஏமாற்று மதமாற்றத்தைத்தான் எதிர்க்கிறோம், மதமாற்றத்தை இல்லை.
  8. இந்தியர் எல்லோரும் ஒரே இனக்குழுவினரே – “ஆரியர்”.
  9. சமஸ்கிருதம் எல்லோருக்கும் சொந்தம், எல்லோரும் படிக்க வேண்டும்.
  10. வனவாசிகள் (பழங்குடிகள்) ஹிந்துக்களே.
  11. கோல்வால்கர் இந்தியாவின் “அந்நிய இனங்கள்” இந்து தேசியத்தன்மையை ஏற்க வேண்டும், குடியுரிமையை எதிர்பார்க்கக் கூடாது என்று சொன்னார்தான், ஆனால் இது நாஜியிசம் இல்லை.

அ.நீ.யின் பல கருத்துகளில் எனக்கு இசைவில்லை. உதாரணமாக கோல்வால்கர் அப்படி சொன்னது நாஜியிசமா இல்லையா என்பது எனக்கு அனாவசியம். இதுதான் கோல்வால்கரின், அ.நீ.யின், ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலை என்றால் “அந்நிய இனங்கள்” இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலையை ஏற்க வேண்டும் என்று என்ன தலைவிதியா? நான் அமெரிக்காவில் வாழ்கிறேன், இந்த விதியை அமெரிக்க அரசு கடைப்பிடித்தால் நான் அமெரிக்கக் குடிமகனாக மாற ஏதாவது சான்ஸ் இருக்கிறதா என்ன? அ.நீ. போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கதி இந்த கோல்வால்கர் விதியின் கீழ் என்னாகும் என்று ஒரு நொடி கூட யோசிக்கவில்லை! அரேபிய எண்ணெய் நாடுகளில் எத்தனை இந்தியர்கள் குடியுரிமை பெறுகிறார்கள்? அமெரிக்காவில் எத்தனை பேர்? இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று இந்த ஹிந்துத்வர்கள் யோசிக்க வேண்டும்.

அப்புறம் இடித்தது மசூதியா கோவிலா கும்மட்டமா கக்கூசா என்ற கேள்வியும் அனாவசியம். இடித்தார்களா இல்லையா, இடிக்க வேண்டும் என்று ஒரு வெறியைக் கிளப்பினார்களா இல்லையா என்பதல்லவா கேள்வி? ஆமாம் இடித்தேன் என்று பெருமைப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. ஜடாயு இன்று குடியிருக்கும் வீடுதான் நான் தெய்வமாக வணங்கும் என் முப்பாட்டனின் ஜன்ம பூமி என்று நான் சொன்னால் ஜடாயு வீட்டைக் காலி செய்துவிடுவாரா? என் நம்பிக்கைதான் அளவுகோல் என்று ஆரம்பித்தால் இதை எங்கே நிறுத்த முடியும்? சட்டம் எதற்கு?

மீண்டும் மீண்டும் சொல்லப்படும் இன்னொரு வாதம் நிறைய ஹிந்துக்கள் இதை விரும்புகிறார்கள், இது அவர்கள் மானப் பிரச்சினை இத்யாதி, அதனால் இது சரிதான் என்பது. எக்கச்சக்க கன்னடிகர்கள் கூடத்தான் காவேரித் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று நினைக்கிறார்கள், என்ன செய்வது?

இப்படிப்பட்ட dispute-களை தீர்க்க ஒரே வழிதான் இருக்கிறது – சட்டம், கோர்ட். தீர்ப்பு வருவதற்குள் கும்மட்டத்தை, கோவிலை, மசூதியை, ஏதோ ஒரு எழவை இடிப்போம் என்று கிளம்புபவர்களுக்கு நியாயம், நீதி, நேர்மை என்ற பாசாங்கெல்லாம் எதற்கு?

இன்றைக்கு வந்திருக்கும் தீர்ப்பு எனக்கு சரியாகப் புரியவில்லை, தவறான தீர்ப்பு என்று படுகிறது. ஆனால் சட்டப்படி தீர்வு வந்தாகிவிட்டது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனக்கு தவறு என்று தோன்றுகிறது என்பதற்காக அதை மீறுவதற்கில்லை. ஆனால் தீர்ப்பு ஹிந்துத்வர்களுக்கு எதிராக வந்திருந்தால் அதை ஹிந்துத்வர்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவர்களுடைய நிலையின் அடிப்படை நம்பிக்கை, ஹிந்துக்களின் எண்ணிக்கை, சட்டம்/நியாயம்/தர்மம் எல்லாம் இல்லை.

தொன்மங்களில் ஜாதி முறை இல்லை என்ற பேச்சு போலியானது. கண்ணன் அப்படி சொன்னான் இப்படி சொன்னான் என்பதெல்லாம் டகல்பாஜி வேலை. கிருஷ்ணன் கீதையில் என்ன சொன்னான் (கீதை பிற்சேர்க்கையா இல்லையா என்ற கேள்விக்கே நான் போகவில்லை) என்பதை விட கிருஷ்ணன் என்ன செய்தான், கர்ணனை சத்ரியனாக ஏற்றானா, ஏற்கும்படி யாருக்காவது சொன்னானா, கர்ணனை இழிவாகப் பாண்டவர்கள் பேசியபோது ஒரு முறையாவது கண்டித்தானா, அஸ்வத்தாமா/துரோணரின் பிராமணத்துவத்தை நிராகரித்து அவர்களை சத்ரியன் என்று சொன்னானா, கடோத்கஜனை பாண்டவர் அரசுக்கு வாரிசாக நியமிக்க ஏதாவது செய்தானா (ஹிடிம்பி/கடோத்கஜன் ராஜசூய யாகத்துக்குக் கூட அழைக்கப்படவில்லை) என்பதெல்லாம் முக்கியம். கருணாநிதி கூடத்தான் டெசோ, தனி ஈழம், உண்ணாவிரதம் என்று ஆயிரம் பேசுகிறார், யாராவது நம்புகிறார்களா என்ன? சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்பது நான் வணங்கும் கிருஷ்ணனுக்கும் கூட பொருந்துகிறது.

இவை எல்லாம் உதாரணங்களே. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வதென்றால் நானே புத்தகம் எழுத வேண்டி இருக்கும். எழுதலாம், யார் பிரசுரிப்பார்கள்? 🙂

பிரச்சினை என்னவென்றால் போலி மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச இந்த ஹிந்துத்வர்களை விட்டால் யாருமில்லை. அந்நிய மத நிறுவனங்கள் மனமாற்றத்தின் மூலம் மதமாற்றம் என்று செயல்படுவது அபூர்வமே. ரம்ஜான் உண்ணாவிரதம் நல்லது, அமாவாசைக்கு இருந்தால் மூட நம்பிக்கை என்று கருணாநிதி/நாஞ்சில் மனோகரன் பேட்டி கொடுத்து நானே படித்திருக்கிறேன். இதை எல்லாம் கண்டிக்க வேறு ஆளே இல்லை என்பதுதான் இவர்களை இன்னும் relevant ஆக வைத்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே இந்த வாதத்தை எப்படி மறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே படிக்கக் கூடாது, திறந்த மனதோடு அணுக வேண்டும் என்று முயற்சித்தேன். என்னால் அது முடிந்தது என்று நான் நினைக்கிறேன்; அ.நீ.யும், ராஜனும், ஜடாயுவும் அப்படி நினைப்பார்களா என்று சொல்வதற்கில்லை. 🙂

பிற்சேர்க்கை: ஜடாயு கோல்வால்கரே ‘அன்னிய இனங்கள்’ பற்றி எழுதி இருந்த புத்தகத்தை மீண்டும் பதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அதனால் அந்தக் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பின்னூட்டம் ஒன்றில் எழுதி இருந்தார். எதற்காகப் பதிக்க வேண்டாம் என்பது தெளிவாகும் வரை – அ.நீ. போன்றவர்கள் அந்தக் கருத்து நாசிசமா இல்லையா என்று மயிர் பிளக்கும் வரை -அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

அமெரிக்காவில் அரவிந்தன் நீலகண்டன்

aravindhan_neelakandan_invite
aravindan_neelakandanஅரவிந்தன் நீலகண்டன் இப்போது அமெரிக்கா வந்திருக்கிறார். பாரதி தமிழ் சங்கம் ஏற்பாட்டில் இந்த வார இறுதியில் சான் ஹோஸேயில் பேசப் போகிறார். தவறாமல் வாருங்கள், அவர் பேச்சைக் கேளுங்கள் என்று அழைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.

பாரதி தமிழ் சங்க பொறுப்பாளர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலிலிருந்து:

பாரதி தமிழ்ச் சங்கத்தின் இந்த ஆண்டு இலக்கிய நிகழ்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சொற்பொழிவை ஏற்பாடு செய்துள்ளது. அரவிந்தன் தமிழின் முக்கியமான சிந்தனையாளரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும் ஆவார். அவரும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலை ஆராய்ச்சியாளர் சாந்தினி ராமசாமி இணைந்து எழுதியுள்ள இந்திய அறிதல் முறைகள் என்ற நூல் குறித்து அரவிந்தன் உரையாற்றவுள்ளார். உரையினைத் தொடர்ந்து இந்திய கலை, மரபுகள், பண்பாடு, மதம், தொன்மை, வரலாறு குறித்து அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். அனைவரும் வருக. உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும். அனுமதி இலவசம்.

நிகழ்ச்சி: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு – இந்திய அறிதல் முறைகள்
நாள்: செப் 24 சனிக்கிழமைம் நேரம் : மாலை 6 முதல் 9 வரை
இடம்: ராஜேஸ்வரி கோவில் அரங்கம், பாரகன் ட்ரைவ், சான் ஓசே

அ.நீ. யாரென்று தெரியாதவர்களுக்காக: இணையத்தில் வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் போல சிரிப்பு புரட்சியாளர்கள், சிரிப்பு முற்போக்குவாதிகள், சிரிப்பு ஹிந்துத்துவவாதிகள் என்று பல சிரிப்பு கொள்கையாளர்கள் உலவுகிறார்கள். அபூர்வமாகவே தர்க்க முரண் இல்லாமல் தன் சிந்தனைகளை கோர்வையாக முன்வைக்கக் கூடியவர்களை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அபூர்வப் பிறவிகளில் அரவிந்தன் நீலகண்டனும் ஒருவர்.

அரவிந்தன் நீலகண்டனின் அரசியல் நிலை எனக்கு உவப்பானது அல்ல. அவருடைய கோணங்களை – குறிப்பாக ஹிந்துத்துவ வாதங்களை – நான் பல முறை எதிர்த்து வாதிட்டிருக்கிறேன். சில சமயம் அவரும் என்னை பொருட்படுத்தி என்னுடன் வாதிட்டிருக்கிறார். ஆனால் அவரது ஆய்வுகள், கோணங்கள், வாதங்கள் எல்லாம் நேரதிர் அரசியல் நிலை உள்ளவர்கள் கூட அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. அவரது கூர்மையான சிந்தனைகள் என்னை சில சமயமாவது நான் நினைப்பது சரிதானா என்று யோசிக்க வைத்திருக்கின்றன.

வளர்த்துவானேன்! வெகு சிலரையே அறிவுஜீவி என்று சொல்ல முடிகிறது. அவர்களில் அ.நீ.யும் ஒருவர்.

சிலிகன் ஷெல்ஃபில் புத்தகங்களைப் பற்றி எழுதாவிட்டால் ஜன்மம் சாபல்யம் அடையாது. அ.நீ. மற்றும் ராஜீவ் மல்ஹோத்ரா இணைந்து Breaking India என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். இந்திய அறிதல் முறைகள் என்ற புத்தகத்தை சாந்தினி தேவியுடன் இணைந்து எழுதி இருக்கிறார். நம்பக்கூடாத கடவுள் என்ற கட்டுரைத் தொகுப்பை தனியாக எழுதி இருக்கிறார். ஸ்வராஜ்யா பத்திரிகை, தினமணி பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக ‘ஆலந்தூர் மள்ளன்‘ என்ற புனைபெயரில் அவர் எழுதிய சில சிறுகதைகள் சிறப்பானவை, என் மனதைத் தொட்டவை. குறிப்பாக சுமைதாங்கி என்ற சிறுகதையைப் பரிந்துரைக்கிறேன்.

தவற விடாதீர்கள், கட்டாயம் வாருங்கள் என்று அழைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகன் பரிந்துரை
ஆலந்தூர் மள்ளன் சிறுகதைகள் பற்றி ரெங்கசுப்ரமணி