ஆர்தர் சி. க்ளார்க்கின் அறிவியல் சிறுகதை – Nine Billion Names of God

arthur_c_clarkeஎனக்குப் பிடித்த இன்னொரு அறிவியல் சிறுகதை. சின்னக் கதைதான், நான் நாலு வார்த்தை எழுதும் நேரத்துக்குள் படித்தே விடலாம். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

பாரதிக்கு ஒரு தளம்

சிறப்பான தளம். மேலும் மேலும் வலையேற்றிக் கொண்டிருக்கிறார்கள். வ.ரா.வின் “மகாகவி பாரதியார்” புத்தகம் படிக்கக் கிடைக்கிறது. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள், பாரதி பக்கம்

1907 சூரத் காங்கிரஸ் அடிதடி, கோஷ்டி சண்டை பற்றி பாரதி

bharathi1907 சூரத் காங்கிரஸில் கோகலே தலைமை மிதவாதிகளுக்கும் திலகரைத் தலைவராகக் கொண்ட தீவிரவாதிகளுக்கும் இடையே பெரிய பூசல் வெடித்து காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அன்று மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்ற பிரதிநிதிகளில் பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை இருவரும் உண்டு. மாநாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி பாரதியாரின் நேரடி ரிப்போர்ட்டை மின்னூல் வடிவத்தில் இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

பாரதி வாழ்ந்த பாண்டிச்சேரி – விந்தன்

bharathiவிந்தனை தெரியாத்தனமாகப் படித்துவிட்டு ரொம்பவும் நொந்து போன அனுபவம் எனக்குண்டு. அவர் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த ஒரே கட்டுரை இதுதான். பாரதியைப் பார்த்தவர்கள் பழகியவர்களிடம் பேசி அவர்கள் சொன்னவற்றை பதிவு செய்திருக்கிறார். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

மின்னூல் – ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் “கிருஷ்ண கானம்”

oothukkaadu_venkata_subbaiyerகர்நாடக இசையில் பாட்டு புரிவது தனி சுகம்தான். அப்படி கேட்கும் பாடல்களில் நன்றாகப் பரிச்சயமானவை ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள்தான். அலைபாயுதே, குழலூதி மனமெல்லாம், தாயே யசோதா, ஆடாது அசங்காது வா கண்ணா மாதிரி பாட்டுகளை இன்று அனேகத் தமிழர்கள் கேட்டு அனுபவத்திருக்கிறோம். அதுவும் மகாராஜபுரம் சந்தானம் குரலில் கேட்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கிருஷ்ணகானம் என்று பேர் இருந்தாலும் அங்கங்கே முருகன், பிள்ளையார் மீதும் பாடல் உண்டு. 105 பாடல்களில் சில சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.

அவரது பாடல்களை ப்ராஜெக்ட் மதுரையில் தொகுத்திருக்கிறார்கள். வசதிக்காக இங்கே pdfசுட்டியை இணைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மின்னூல்கள்

மின்னூல் – காஞ்சி சங்கராசாரியாரின் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) “சங்கர விஜயம்”

chandrasekarendrarமறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் பெரிய அறிஞர் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. இந்தப் புத்தகம் அந்த நினைப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அவர் 1932-இல் ஆதி சங்கரரைப் பற்றி ஆற்றிய சில உரைகள் – இல்லை இல்லை உபன்னியாசங்கள் இந்தப் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆதி சங்கரரின் குரு பரம்பரை, அவருடைய சுருக்கமான வரலாறு அவர் படித்திருக்கும் புத்தகங்கள், மேற்கோள் காட்டும் முறை எல்லாம் அவரது scholarship-ஐ தெளிவாகக் காட்டுகின்றன. அனேகமாக சமஸ்கிருதப் புத்தகங்களாக இருப்பதால் மேற்கோளைப் பற்றி அவர் விளக்கினால்தான் புரிகிறது. 🙂 அவர் மேற்கோள் காட்டும் புத்தகங்களை எல்லாம் பதிக்க முயற்சி செய்தாரா என்று தெரியவில்லை, அப்படி செய்திருந்தால் அது உ.வே.சா.வுக்கு சமமாக சொல்லப்பட வேண்டிய முயற்சி ஆக இருக்கும்.

குறிப்பாக ஆதி சங்கரரின் காலம் பற்றி அவர் எல்லாருக்கும் புரியும் வகையில் தன் கருத்துக்களை முன் வைக்கிறார்.

சமஸ்கிருதப் புத்தகங்கள் மட்டுமல்ல, கம்ப ராமாயணமும் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்று தெரிகிறது. அதையும் மேற்கோள் காட்டுகிறார்.

இரண்டு விஷயங்களைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். ஆதி சங்கரரின் எதிரில் ஒரு “சண்டாளன்” வர, விலகிப் போ என்று அவர் சொன்னதாகவும், யாரை விலகச் சொல்கிறீர்கள், இந்த உடலையா, ஆத்மாவையா என்று வேதாந்தமாக அவன் கேட்க, இப்படிப்பட்ட ஞானம் உள்ளவன் யாராக இருந்தாலும் அவன் என் குருவே என்று அவன் அடி பணிந்ததாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இன்றும் ஹிந்து apologists, குறிப்பாக ஹிந்துத்துவர்கள் அதை ஹிந்து மதத்தில் யாரையும் ஒதுக்குவதில்லை என்று அந்தக் கதையை மேற்கோள் காட்டுவார்கள். (அவர் தள்ளிப் போ என்று சொன்னாரே, அப்படி என்றால் அப்படி ஒதுக்குவதுதானே அந்தக் காலத்தில் பழக்கமாக இருக்கும் என்பதை வசதியாக கண்டு கொள்ள மாட்டார்கள்.) இவரும் அந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்; சீர்திருத்தக்காரர்கள் அதை மேற்கோள் காட்டுவதையும் குறிப்பிடுகிறார்; ஆனால் அவரது முடிவு இந்த நிகழ்ச்சி தீண்டாமை கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற கட்சியை வலுப்படுத்துகிறது என்பதாகும்! வர்ணாசிரம தர்மம் (அப்படி என்றால் அவர் எண்ணத்தில் பிறப்பு வழி ஜாதிதான்) நிலவ வேண்டும் என்று அங்கங்கே வலியுறுத்துகிறார்.

இரண்டாவதாக, ஆதி சங்கரர் நான்கு மடங்களை நிறுவினார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறார்; அவர் காஞ்சிபுரத்தில் சர்வக்ஞர் பட்டம் ஏற்றார் என்பதையும் குறிப்பிடுகிறார். ஆனால் ஆதி சங்கரர் காஞ்சி மடத்தை நிறுவியதாக சொல்லவே இல்லை. இந்த omission முக்கியமானது என்று கருதுகிறேன்.

சந்திரசேகரர் பெரிய scholar, ஆனால் பழைய நம்பிக்கைகளை அப்படியே தொடர வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறார் என்ற என் எண்ணத்தை இந்தப் புத்தகம் வலுப்படுத்துகிறது. அந்த scholarship-க்காக படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

மின்னூல்

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்
தொடர்புடைய பதிவு: சந்திரசேகரரை விட ஜெயேந்திரரே மேலானவர்!

அஞ்சலி – வாண்டு மாமா மறைந்தார்

சிறுவர்களுக்கான புத்தகங்கள் பதிவிலிருந்து:

என் வாழ்க்கையின் முதல் ஸ்டார் எழுத்தாளர் வாண்டு மாமாதான். அவருடைய கதைகள் எல்லாவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அதுவும் நூலகத்தில் இருந்த காட்டுச்சிறுவன் கந்தன் புத்தகம் எனது ஃபேவரிட். கந்தனின் சித்தப்பா ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டு கந்தனை விரட்டிவிட, கந்தன் காட்டில் வளர்வான். அங்கே அவனுக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கும். பல மிருகங்கள் அவனுக்கு உதவி செய்யும். சித்தப்பா செய்யும் கொடுமைகளை எதிர்ப்பதும், மக்களுக்கு உதவி செய்வதும்தான் கதை. இன்று கிடைத்தால் நாஸ்டால்ஜியாவுக்காகவே வாங்கி வைப்பேன்.

அப்புறம் கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போது வரும். அதற்கு அவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். அதை விரும்பிப் படித்தேன். பலே பாலு என்ற ஒரு காமிக்ஸ் சீரிஸ் வரும். படங்களும் கதையும் ரொம்பவே பிடிக்கும். அதில் வந்த மந்திரக் கம்பளம் என்ற புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.

சில காமிக்ஸ்களையும் – ரத்னபுரி ரகசியம், சர்க்கஸ் சங்கர், பவழத்தீவு, திகில் தோட்டம், ஓநாய்க்கோட்டை, கரடிக் கோட்டை, கழுகு மனிதன் ஜடாயு, மரகதச்சிலை, பூதத்தீவு, கனவா நிஜமா என்று சில பேர்கள் நினைவு வருகின்றன – எழுதி இருக்கிறார். புலி வளர்த்த பிள்ளை என்ற காமிக் புத்தகம் Indiana Jones and the Temple of Doom! இவற்றில் சிறந்தது “நந்து-சுந்து-மந்து” – ஒரு குரங்குக் குட்டியின் கலாட்டாக்கள். Curious George-ஐ நினைவுபடுத்தும் புத்தகம். மந்திர தந்திர காமிக்ஸில் இன்னும் நினைவிருப்பது மூன்று மந்திரவாதிகள். இன்னுமொரு சீரிஸ் – அனுஷ் மற்றும் ஹரீஷ் துப்பறியும் “துப்பறியும் புலிகள்” சிறுகதைகள் ஓரளவு படிக்கக் கூடியவை. சின்னச் சின்ன மர்மங்கள், அவற்றுக்கான விடை கதையில் இருக்கும், அல்லது சுலபமாக யூகிக்கக் கூடியவை, படிப்பவர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும். சில நல்ல விடுகதை தரத்தில் இருக்கும்.

அப்பா அப்பா கதை சொல்லு புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்தன.

வாண்டு மாமாவைப் பற்றி தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் ஒரு விவரமான பதிவு இருக்கிறது. (ஃபோட்டோவும் அங்கே கிடைத்ததுதான்) அவர் எழுதிய எல்லா புத்தக விவரங்களும் அங்கே இருக்கின்றன.

வாண்டு மாமாவின் இன்னொரு அவதாரம் கௌசிகன். கல்கி குழுமத்தில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் தொடர்கதைகளாக எழுதிய பாமினிப் பாவை மற்றும் சுழிக்காற்று ஆகியவை இன்னும் நினைவிருக்கின்றன. பாமினிப்பாவை விஜயநகரப் பேரரசின் கடைசி நாட்களைப் பற்றிய சரித்திர நாவல். சூழிக்காற்று மூன்றாம் வரிசை ஆங்கில மர்ம நாவல்களோடு ஒப்பிடக் கூடிய தரத்தில் எழுதப்பட்டது. அப்படிப்பட்ட தமிழ் மர்ம நாவல்கள் எழுபதுகளில் மிக அபூர்வம். ஆனால் இரண்டுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகங்கள் அல்ல.

நல்ல சிறுவர் எழுத்தாளர்கள் இல்லாதது தமிழின் துரதிருஷ்டம். வாண்டு மாமாவின் சிறுவர் புத்தகங்களின் தரம் எனிட் ப்ளைடன் மாதிரிதான், அதனால் அவரை ரொம்பவும் புகழ்வதற்கில்லை. ஆனால் என் சிறு வயதில் (எழுபதுகளில்) அவர் ஒரு தேவையை பூர்த்தி செய்தார். இன்றும் நான் விடாமல் படிப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவரை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பதிவுகள்:
வாண்டு மாமா பற்றிய தமிழ் காமிக்ஸ் உலகம்

தமிழ் ஸ்டுடியோ – நூலகம்

திரைப்படம், இலக்கியம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள் தேவை.

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை, state-of-the-art என்று சொல்லக்கூடிய வகையில், சினிமா தொடர்பான எல்லா தகவல்களையும், தேவைகளையும் ஒருங்கே கொடுத்து, நிறைய திரைப்பட ஆர்வலர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், மற்ற மொழி திரைப்படங்கள், மற்றமொழி குறும்படங்கள், திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள் திரைப்பட கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவல் களஞ்சியம், என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, அதனை திரைப்பட ஆர்வலர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழ் ஸ்டுடியோவின் எண்ணம். விரைவில் ப்ரொஜெக்டர் வாங்கியதும், தமிழ் ஸ்டுடியோ குறுந்திரை தொடங்கி, தினமும் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்படும். நல்ல படங்கள், சுயாதீன படங்கள், குறும்படங்கள் என எல்லா வகையான திரைப்படங்களையும் இந்த திரையரங்கில் காணலாம். தவிர, நண்பர்கள் தாங்கள் விரும்பும் படத்தை காண, முன்பதிவு செய்துக்கொண்டு, படத்தின் பெயரை தெரிவித்தால், அவருக்கு மட்டும் பிரத்யேக திரையிடலும் உண்டு. இதற்காக தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் கிடைக்கும் படங்கள் அனைத்தும் விரைவில் தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் வெளியிடப்படும்.

திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள், புத்தகங்களை நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் இருக்கும் நூலக அரங்கில் படித்துக் கொள்ளலாம். புத்தகத்தில் குறிப்படப்பட்டிருக்கும் படத்தை பார்க்க விரும்பினால், அதனை பார்க்கவும் வசதி செய்துத் தரப்படவிருகிறது. பழைய படங்களை ஆவணப்படுத்தும் வேலையும் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கும் பார்க்க முடியாத படங்களை பார்க்கவும், கிடைக்காத புத்தகங்களை தேடி தரவும் தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது.

நண்பர்கள், தங்களிடம் இருக்கும் முக்கியமான திரைப்படம் சார்ந்த புத்தகங்கள், திரைப்படங்கள், திரைப்படம் சார்ந்த அரிய தகவல்களை, தமிழ் ஸ்டுடியோவின் இந்த நூலகத்திற்கு கொடுத்து உதவினால், பெரிதும் உதவியாக இருக்கும். திரைப்பட நூல்கள் மட்டுமின்றி, இலக்கியம் சார்ந்த நூல்களையும் கொடுக்கலாம். புத்தகங்கள், திரைப்படங்களை தமிழ் ஸ்டுடியோவின் நூலகத்திற்கு கொடுக்க விரும்பும் நேரில் வந்து கொடுக்கலாம். கொரியரில் அனுப்பலாம். அல்லது தாங்கள் புத்தகம் கொடுக்கும் விருப்பத்தை தெரிவித்தால், தமிழ் ஸ்டுடியோ நண்பர்களே நேரில் வந்து பெற்றுக்கொள்வார்கள். உடனே உங்களிடம் இருக்கும் நூல்களையும், திரைப்படங்களையும் தமிழ் ஸ்டுடியோவின் நூலகத்திற்கு கொடுத்து உதவுங்கள். நண்பர்களிடம் தெரிவித்து, தமிழ் ஸ்டுடியோவிற்கு வழங்க பரிந்துரை செய்யுங்கள்.

தொடர்புக்கு: 98406-98236


ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அது வெற்றி பெறுவது எத்தனை புத்தகம், திரைப்படங்கள் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தது. வீட்டில் நிறைய சேர்ந்துவிட்டது என்று நினைக்கும் நண்பர்கள் இங்கே கொடுக்கலாமே!

மின்னூல் – சலீம் அலியின் “இந்தியப் பறவைகள்”

படங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக வண்ணங்களில் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்றும் பயனுள்ள புத்தகம்தான்.

பாரதியார் எழுதிய வம்பு

j_krishnamurtiannie_besantஏறக்குறைய கிசுகிசு போலத்தான் இருக்கிறது.

ஜே. கிருஷ்ணமூர்த்தி பதின்ம வயதுகளில் அன்னி பெசண்ட் மற்றும் லெட்பீட்டரால் “கண்டெடுக்கப்பட்டார்”, உலக குருவாக வளருவார் என்று தியாசஃபிகல் இயக்கம் நினைத்தது, ஆனால் சில ஆண்டுகளில் அவரது அப்பா அன்னி பெசண்டிடமிருந்து தன் பையனைத் திரும்பிப் பெற கோர்ட்டில் கேஸ் தொடுத்தார் என்பது வரலாறு. அன்னி பெசண்டை வாலறுந்த நரியாகவும், ஜே.கே.வை வால் அறுக்கப்பட்ட கழுதைக் குட்டியாகவும் உருவகித்து பத்து பனிரண்டு பக்கங்களுக்கு ஒரு கதை எழுதி இருக்கிறார். பாரதிக்கும் அன்னி பெசண்டுக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. எனக்கெல்லாம் பாடப் புத்தகங்கள் மூலம் தெரிய வந்த அன்னி பெசண்ட் மிதவாதி-தீவிரவாதிகளை ஒன்றிணைத்தார், ஹோம் ரூல் இயக்கம் என்று ஒன்றை முன்னின்று நடத்தினார், காங்கிரஸ் தலைவராக ஒரு வருஷம் இருந்தார், அடையாரில் தியாசஃபிகல் இயக்கத்தை நிறுவினார் என்பதுதான்.

bharathiஅப்பவும் தமிழர்களுக்கு வம்பு என்றால் வெல்லம்தான் போலிருக்கிறது. பாரதியில் பாடல்களை வாங்கினார்களோ இல்லையோ இதை மட்டும் எல்லாரும் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறார்கள். பாரதி காலத்திலேயே இரண்டு பதிப்பு வந்திருக்கிறது!

கதை ஒரு பொருட்டில்லை, பின்புலம் மற்றும் பாரதி எழுதிய கிசுகிசு என்பது மட்டுமே இதை ஒரு historical curiosity ஆக்குகிறது. மின்னூலை இணைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்