தி. ஜானகிராமன் சிறுகதைகள்

தி.ஜா. சிறுகதைகளின் மாஸ்டர். அவரது சிறுகதைகள் எனக்கு செகாவைத்தான் நினைவுபடுத்துகின்றன. இத்தனைக்கும் செகாவின் சிறந்த சிறுகதைகள் வெறுமே கோடு போட்டுத்தான் காட்டுகின்றன, பலவற்றை நாம்தான் நிரப்பிக் கொள்ள வேண்டும். தி.ஜா. விவரித்துவிடுவார். என்னதான் ஒற்றுமை என்று யோசித்துப் பார்த்தால் இருவர் எழுத்தும் மிகச் சுலபமாக, முயற்சியே செய்யாமல், கதாசிரியனின் எந்த வித தலையீடும் இல்லாமல் மனிதர்களைக் காட்டிவிடுவதுதான். தலையீடு என்பது சரியான வார்த்தை இல்லை, அதனால் இப்படி சொல்கிறேன். புதுமைப்பித்தனின் நான் உனக்கு காட்டுகிறேன் என்ற தொனி இல்லை. ஜெயமோகனின் உணர்ச்சி கொந்தளிப்புகள் இல்லை. அசோகமித்திரனின் பார் நான் இல்லவே இல்லை என்ற முனைப்பும் இல்லை.

அவரது கொட்டுமேளம் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எப்போதோ எழுதி இருந்தேன். இந்த முறை கண்ணில் அவ்வப்போது பட்ட அவரது சிறுகதைகள் பற்றி:

வேதாந்தியும் உப்பிலியும் சிறுகதையில் பிய்த்து உதறுகிறார். மனிதர்களின் களங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் அவருக்கு இணை அவர்தான்.

அவலும் உமியும்: பாயசம் மற்றும் கடன் தீர்ந்தது சிறுகதைகளை நினைவுபடுத்தியது. வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்துக் குழந்தை புஷ்டியாக இருப்பதைக் கண்டு வீட்டு சொந்தக்காரர் காயாப்பிள்ளைக்கு கொஞ்சம் எரிகிறது – இல்லை இல்லை அசிகை.

முள்முடி போன்ற சிறுகதைகள் எங்கே போகும் என்று முதல் பாராவை படிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஆனால் அவரது தொழில் திறமை வெளிப்படுகிறது.

திண்ணை வீரர் அவரது ஆரம்ப கால சிறுகதையாக இருக்க வேண்டும். ‘எழுந்து வந்தேன்னா’ என்பது சின்ன முடிச்சாக இருக்கிறது, சிறு புன்னகைதான் வருகிறது.

பூட்டுக்கள் சிறுகதையிலும் சின்ன முடிச்சுதான், சிறு புன்னகைதான் வருகிறது.

கங்காஸ்னானம் கடன் தீர்ந்தது சிறுகதையை நினைவுபடுத்தியது. படிக்கலாம்.

thi_janakiramanகமலம்: கதை செயற்கையாக இருக்கிறது. வீட்டு சமையல்காரனை மகனாகப் பாவிக்கும் எஜமானியம்மா சும்மா டமாஸுக்கு அவனை வைத்துக் கொண்டிருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுகிறாளாம்.

தோடு: ஏழைப்பெண் பட்டுவின் ஆசைப்படியே அவள் பணக்கார, அழகான முத்துராமுவை மணக்கிறாள். ஆனால் குடும்பத்தின் குறைகள் மெதுமெதுவாக அவளுக்குத் தெரிய வருகின்றன.

மேரியின் ஆட்டுக்குட்டியை குறிப்பிட ஒரே காரணம்தான். உறவு கொண்ட பெண் கர்ப்பம் என்று தெரிந்ததும் பொய்ச் சத்தியம் செய்ய பெண்ணின் விரல்களைப் பிடித்துக் கொள்கிறான். அந்த விரல்களின் விவரிப்புதான்.

பஞ்சத்து ஆண்டி நல்ல விவரிப்பு, ஆனால் இது போன்ற பஞ்சங்களை நான் கேள்விப்பட்டதோடு சரி. அதனால்தானோ என்னவோ என் மனதைத் தொடவில்லை. பலரும் சிலாகிக்கும் மிருகம் சிறுகதையும் (வண்ணநிலவன்) இதே போலத்தான் என் மனதைத் தொடவில்லை.

விசைவாத்தின் முத்தாய்ப்பு சின்ன புன்முறுவலை வரவழைக்கிறது, ஆனால் பெரிதாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை அல்ல.

பெட்டி வண்டி போன்றவை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை அல்ல.

அடுத்த வீடு 50 மைல்: தி.ஜா.வின் ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள். அவர் சென்ற காலத்தில் அதிசயமாக இருந்த barbecue, ஹோட்டல் அறைகளில் தானே காஃபி போட்டுக் கொள்ளும் வசதி என்பதெல்லாம் இப்போது நமக்குப் பழகிவிட்டன.

தன் சொந்த ஊரான கீழ்விடவியல் (1969) பற்றி அவர் எழுதிய கட்டுரையில் தலித்கள் – அவர் ஹரிஜன் என்றுதான் குறிப்பிடுகிறார் – நிலை மாறிவிட்டது என்று எழுதி இருந்தார், இன்று நிலவரம் அன்றை விட மோசமாக இருக்குமோ என்று தோன்றுகிறது, தமிழகத்தில் ஜாதி உணர்வு அதிகமாகிக் கொண்டே போவது போல உணர்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

————————-

அசோகமித்ரன் தி.ஜா.வுக்கு எழுதிய அஞ்சலி

தி.ஜா. 1982-இல் மறைந்தபோது அசோகமித்ரன் எழுதிய அஞ்சலி: (கல்கிக்கு நன்றி).

ஜானகிராமன் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் நானும் ஐய்யய்யோ என்றுதான் கத்தினேன். வெயில் திடீரென்று சகிக்க முடியாத தீவிரத்தை அடைந்த மாதிரி இருந்தது.

அசோகமித்ரன் இதை விட உணர்ச்சிகரமாக எழுதியது அபூர்வம்தான் என்று நினைக்கிறேன். இத்தனை அடக்கி வாசிப்பது எத்தனை உணர்வுபூர்வமான தருணமாக இருக்கிறது!

(சாஹித்ய அகாடமி பரிசு ஜானகிராமனுக்கு) மறுக்கப்பட்ட பல் ஆண்டுகளில் அகாடமி குழுவினரின் விவாதங்களை யாராவது வெளிப்படுத்த முடியுமானால் பல விசித்திரமான தகவல்கள் தெரிய வரலாம்.

என்ற வரிகள் தி.ஜா.வை விட அசோகமித்திரனின் ஆளுமையைத்தான் வெளிப்படுத்துகின்றன. தி.ஜா.வுக்கு விருது தரப்பட தாமதம் என்பதை எத்தனை மென்மையாகச் சொல்கிறார்? அசோகமித்ரனால் முடிந்த கடுமையான விமர்சனமே இவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.

அசோகமித்திரனின் கதைகளில்தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று பார்த்தால் அவர் வாழ்விலுமா? சிதம்பர சுப்ரமணியனைத் தேடி அலைந்ததை விவரிக்கிறார் – அவரது டச் தெரியும் வரிகள்

ஒரு வாரம் பொறுத்து சரியான முகவரி தெரிந்து கொண்டு நான் சிதம்பர சுப்ரமணியன் வீட்டுக்குப் போனேன். அந்தத் தெருவே வேறு. அவரை எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை. அன்று அவர் காலமாகிவிட்டிருந்தார்.

எழுத்தாளர் ராஜரங்கன் என்று குறிப்பிடுகிறார். யார் என்றே தெரியவில்லை.

தி.ஜா. தஞ்சாவூரின் மண் வாசனையை எழுத்தில் கொண்டு வந்தவர் என்பதை விட தஞ்சாவூர் போன்ற நீண்ட பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு நவீன வாழ்க்கையின் சவால்களோடு செய்து கொள்ளும் சமரசங்களை எழுதியவர் என்கிறார். மிகச்சரி. கி.ரா. கரிசல் மண் வாசனையை எழுத்தில் கொண்டு வந்தார்; தி.ஜா. அந்த பாரம்பரியத்திற்கு உள்ள சவால்களை எழுதினார் என்பது நல்ல அவதானிப்பு.

அசோகமித்திரன் அம்மா வந்தாளை விட உயிர்த்தேனை உயர்வாக மதிப்பிடுகிறார் என்பது வியப்பு. அவர் சிறுகதைகளைப் பற்றி சொல்லவே இல்லை என்பது பெருவியப்பு!

வசதிக்காக கீழே.


ஒருவர் அந்தரங்கமாகப் பழகிவிட்டால் அவர் பேராற்றல் படைத்தவரானாலும் அவருடைய மனிதப் பண்புகள்தான் முதலில் நினைவு வருகிறது. வியாழன் நவம்பர் 18 பிற்பகல் சுமார் 1 மணிக்கு தி. ஜானகிராமன் இறந்துட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது அவர் எனக்காக வெயிலில் வாடி வதங்கிய தருணங்கள்தான் உடனே மனதில் தோன்றின. ஏனோ நாங்கள் இருவரும் நெடுநேரம் பேசியதெல்லாம் நல்ல வெயில் நேரமாக இருந்திருக்கிறது. அவர் டில்லிக்குக் குடி போகும் முன் சென்னையில் வசித்த நாட்களில் சைக்கிளில்தான் எங்கும் போவார், வருவார். இருபது வருடங்களுக்கு மேலாகிறது – என்னுடைய கதை முதன்முதலாக இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் வெளியாகி இருந்தது. ஜானகிராமன் வழியில் என்னைப் பார்த்து சைக்கிளை நிறுத்தினார். நல்ல புரட்டாசி வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு மிகவும் பெருமை, சந்தோஷம்.

இன்னொரு சித்திரைப் பகல். கடுமையான வெயில். “சிதம்பர சுப்ரமணியத்துக்கு உடம்பு சரியில்லையாம். போய்ப் பார்த்துவிட்டு வருவோம்.” என்றார். அவர் வைத்திருந்த முகவரிக்குப் போனோம். அங்கு சிதம்பர சுப்ரமணியன் இல்லை.  அடுத்த வீட்டுக்குப் போனோம். அங்கும் இல்லை. ஒவ்வொரு வீடாக அந்தத் தெருவில் இருந்த அனைத்திலும் விசாரித்தோம். எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியன் பற்றிக் கேள்விப்பட்டது கூடாது. அன்று மாலையே ஜானகிராமன் டில்லி திரும்ப வேண்டி இருந்தது. ஒரு வாரம் பொறுத்து சரியான முகவரி தெரிந்து கொண்டு நான் சிதம்பர சுப்ரமணியன் வீட்டுக்குப் போனேன். அந்தத் தெருவே வேறு. அவரை எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை. அன்று அவர் காலமாகிவிட்டிருந்தார்.

இந்தத் தீபாவளிக்கு மறு நாள் நானும் எழுத்தாளர் ராஜரங்கனும் ஜானகிராமனைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் வீட்டில் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நெருக்கடி ஒன்றும் இல்லை. சில பரிசோதனைகளை ஒழுங்காகப் செய்து பார்க்கத்தான். நல்ல வெயில், இப்போது சிரமப்படுத்த வேண்டாம், ஒரு மாலைப் பொழுதில் போய்ப் பார்க்கலாம் என்று திரும்பி வந்துவிட்டோம். அந்த மாலை வருவதற்குள் அவர் போய்விட்டார்.

ஜானகிராமனின் கலையுணர்வு அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் எல்லாருக்கும் தெரியக் கிடைக்கும். ஆனால் சாதாரண அன்றாடப் பேச்சு வார்த்தைகளிலும் செய்கைகளிலும் கூட அவருடைய மென்மையான, பண்பட்ட தன்மை அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும். அவருக்கு யாரையும் வெறுக்க முடிந்திருக்க முடியாது. அதனால்தான் அவருடைய படைப்புகளிலும் முற்றிலும் தீய பாத்திரம் என்று ஒன்று கிடையாது. குரோதமும் துவேஷமும் எப்போதோ வெளிப்பட சந்தர்ப்ப சூழ்நிலைதான் காரணம்.

ஜானகிராமன் நிறைய எழுதியும் சாவு அவருடைய கவனத்தை அதிகம் பெற்றதில்லை. மனித சிருஷ்டியின் நிரந்தரத்தன்மைதான் அவருள் நிறைந்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மண் வாசனையை தமிழ் உரைநடையில் வார்த்தவர் என்று எல்லாரும் அவரை அடையாளம் கூறுகிறார்கள். அதை விட தஞ்சாவூர் போன்ற நீண்ட பாரம்பரியம் உடைய கலாசாரத்தின் பிரதிநிதிகள் சமரசங்கள் மிகுந்த இன்றைய வாழ்க்கையில் தங்களை பொருத்திக் கொள்ள முயலும் ஆழ்ந்த துன்பத்தைத்தான் அவர் பிரதிபலிக்க முயற்சி செய்தார் என்பதுதான் பொருத்தமானது.

ஜானகிராமனின் பெண் பாத்திரங்கள் பெரிதும் விவாதிக்கப்பட்டவை. ஜானகிராமனின் மகோன்னதப் பாத்திரங்களும் பெண்கள்தான். அவருடைய சிறந்த படைப்புகளாக மோகமுள்ளையும் அம்மா வந்தாளையும் கூறுகிறார்கள். ஆனால் அவரது பாத்திரங்கள் பரிபூரணமாக வெளிப்பட்ட நாவல் உயிர்த்தேன் என்றே தோன்றுகிறது.

ஜானகிராமன் எழுதின நாடகங்கள் (நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியர், டாக்டருக்கு மருந்து) எஸ்.வி. சஹஸ்ரநாமத்திற்காக அவரது உந்துதலில் எழுதப்பட்டவை. ஜானகிராமனோடு நெருங்கிப் பழக எனக்கு வாய்ப்பு ஏற்பட்டதே சஹஸ்ரநாமம் வீட்டில்தான். கலாசாகரம் ராஜகோபால், என்.வி. ராஜாமணி, கு. அழகிரிசாமி, பி.எஸ். ராமையா, முகவை ராஜமாணிக்கம் என ஒரு தமிழ்க் கலை இலக்கியத்திற்கு சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் மையமாக இருந்தது.

யாரையும் உற்சாகப்படுத்துவது ஜானகிராமனின் இயல்பு. அதனாலேயே ஒவ்வொரு தலைமுறையிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் அவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு ரசிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளில் இலக்கியக் குழுவினர் மதிக்கும் தமிழ் எழுத்தாளர்களில் அவர் தனி இடம் பெற்றவர்.

சாஹித்ய அகாடமி பரிசு ஜானகிராமனுக்கு அளிக்கப்பட்டது பற்றி எல்லா அரசு செய்தி ஸ்தாபனங்களும் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால் அது அவருக்கு மறுக்கப்பட்ட பல் ஆண்டுகளில் அகாடமி குழுவினரின் விவாதங்களை யாராவது வெளிப்படுத்த முடியுமானால் பல விசித்திரமான தகவல்கள் தெரிய வரலாம்.

மரணம் எப்போது நேர்ந்தாலும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஜானகிராமன் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் நானும் ஐய்யய்யோ என்றுதான் கத்தினேன். வெயில் திடீரென்று சகிக்க முடியாத தீவிரத்தை அடைந்த மாதிரி இருந்தது.

ஜானகிராமன் கடைசி முறையாக சுவாசம் விட்டு அமைதி அடைந்த போதும் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

நவம்பர் 19, 1982

அசோகமித்திரன்


அசோகமித்திரன் எழுதிய வெகுஜனப் பத்திரிகை குமுதம் ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன். குறைந்த பட்சம் கல்கியிலும் எழுதி இருக்கிறார். அவரது (சுமாரான) சிறுகதை ஒன்றும் – பளு – கண்ணில் பட்டது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், தி.ஜா. பக்கம், அசோகமித்ரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

தி. ஜானகிராமன்: மலர் மஞ்சம்

மலர்மஞ்சத்தை (1960) பலரும் சிலாகித்து கேட்டிருக்கிறேன்.  அசோகமித்திரனுக்கு இது மோகமுள்ளை விட உசத்தியாம். ஜெயமோகனின் இரண்டாம் வரிசை நாவல் பட்டியலில் இடம் பெறுகிறது. நாஞ்சில் தனிப்பேச்சில் பாராட்டி பேசி இருக்கிறார் என்று நினைவு. வெ.சா. பாராட்டி இருக்கிறாராம். எனக்குத்தான் குறைகள் பெரிதாகத் தெரிகின்றன.

காரணம் எளியதுதான். அவர்கள் எல்லாரும் இந்த நாவலை அறுபதுகளில் – எழுபதுகளிலாவது படித்திருப்பார்கள். நான் நேற்றுதான் (அக்டோபர் 2023) படித்தேன். நாவலின் அடிப்படை முடிச்சே எனக்கு பலவீனமாகத் தெரிகிறது. சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை இன்றுதான் முதன்முதலாகப் படிப்பவர்கள் – குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் – எவனோடோ ஒரு நாள் படுத்தாளாம் அவள் வாழ்க்கையை நாசமாகிவிட்டதாம் வாட் நான்சென்ஸ் என்றுதான் நினைப்பார்கள்.  (எல்லாரும் பாத்துக்குங்க, நானும் யூத்துதான்) அறுபதுகளின் விழுமியங்களைப் பற்றிய சிக்கலான கேள்விகள் பலவற்றுக்கு இன்று பொருளே இல்லை. அந்த மாதிரி ஒரு கேள்வியைத்தான் தி.ஜா. நீட்டி முழக்குகிறார், எனக்கு அது அங்கங்கே இழுவையாகவே தெரிகிறது.

இத்தனைக்கும் தி.ஜா. தன் நாவல்களில் ஏற்படுத்தும் ஒரு சொகுசான உணர்வு இதிலும் உண்டு. அசோகமித்திரன் பாணியில் சொன்னால் தளுக்கான நாவல். படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க மனசே வருவதில்லை. பாத்திரப் படைப்பு பிரமாதம். நட்பு, ஆழமான பந்தம், வெட்டி தீசல்தனம் எல்லாவற்றையும் அருமையாக சித்தரிக்கிறார். மறைந்தேவிட்ட ஒரு சமூகச் சூழலின் சித்தரிப்பு – 1930/40களின் மேல் மத்திய வர்க்கம், கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் வர்க்கம் – நன்றாக வந்திருக்கிறது  குறிப்பாக ஒரு காலத்தில் புகழ் பெற்ற தஞ்சாவூர் அடிவெட்டுப் பேச்சை –  கூர்மையான பேச்சை – நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் முடிச்சும்  பலவீனப்பட்டுக் கொண்டு இருக்கிறதே தவிர இன்னும் முழுவதுமாக காலாவதி ஆகிவிடவில்லை. இருந்தாலும் மலையைக் கெல்லி எலியை எடுக்கிறார் என்று தோன்றத்தான் செய்கிறது.

என்ன முடிச்சு? பாலி என்கிற பாலாம்பாள் பிறந்த உடனேயே அவளுக்கு மாப்பிள்ளை தங்கராஜன் என்று முடிவாகிவிட்டது. சிறு வயதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் இஷ்டம்தான். ஆனால் ஒரு கட்டத்தில் பாலியின் மனம் மாறுகிறது, அவள் ராஜாவை விரும்புகிறாள். பாலியே சொல்வது போல ஒரு பெண் மனதில் இருவர் இருப்பது சாத்தியமா? இருக்கலாமா? தி.ஜா. போட விரும்பும் முடிச்சு அதுதான்.

அன்று ஒரு ஆண் இரு பெண்களை மணப்பது, விரும்புவது அத்தனை அதிசயமல்ல. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நீதியாக சொல்லப்படுகிறது, ஒருத்திக்கு ஒருவன் என்று சொல்ல வேண்டிய தேவை நம்மூரில் இருந்ததே இல்லை. ஒரு பெண்ணுக்கு இருவர் மீது ஈர்ப்பு என்பது எனக்கு இன்று பலவீனமான முடிச்சாகத் தெரிந்தாலும் இன்றும் கணிசமானவர்கள் அதை தவறு என்றுதான் சொல்வார்கள். நானே இருபது வயதில் அப்படித்தான் எண்ணி இருப்பேன். தி.ஜா. எழுதியபோது அது புரட்சியாகவே இருந்திருக்கலாம். இதே கருதான் பிற்காலத்தில் மரப்பசுவின் அம்மணியாக பரிணமித்ததோ என்னவோ.

ராமையா ராஜங்காடு கிராமத்தில் மதிப்பான வேளாளர். வரிசையாக நாலு திருமணம், மூன்று பேர் போய்விட்டார்கள், அகிலத்துக்கு பிரசவம், அவளும் இறக்கும் தருணம். பெண் குழந்தையா என்று ஒரு நிமிஷம் அலுத்துக் கொள்ளும் ராமையாவிடம் சொர்ணக்காவின் பிள்ளைக்கு மணம் முடிக்கலாமே என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறாள். ராமையாவில் உலகமே பாலியாக மாறிவிடுகிறது. இறந்த மனைவி சொன்ன வார்த்தை அவருக்கு வேதவாக்கு. பாலியும் படு சுட்டிக் குழந்தை. வரப் போகும் மாமனார் மாமியார் மீது அபார மரியாதை.

ராமையா சில பூசல்களால் தஞ்சாவூருக்கு குடி பெயர்கிறார். அவரது நெருங்கிய நண்பர் கோணவாய் நாயக்கர். இன்னொரு வக்கீல் குடும்பத்தோடு நட்பு உருவாகிறது. பாலியும் எல்லாருடனும் ஒட்டிக் கொள்கிறாள். “குடும்பத்துப் பெண்கள்” பரதநாட்டியம்  ஆடமாட்டார்கள் என்ற நிலை கொஞ்சம் – கொஞ்சம் மட்டுமே – மாறிக் கொண்டிருக்கிறது.  பாலிக்கு இயற்கையாகவே திறமை இருப்பதால் பெரியசாமி என்ற குருவை வைத்து நடனம் சொல்லிக் கொடுக்கிறார்கள். வரப்போகும் மாப்பிள்ளை தங்கராஜன் அவ்வப்போது வந்து போகிறான், பாலிக்கு தான் வாழ்க்கைப்படப் போகும் குடும்பத்தின் மீதும் தங்கராஜன் மீதும் உள்ள அன்பும் மரியாதையும் அவள் கூடவே வளர்கின்றன.

பாலி மேலே படிக்க ஆசைப்படுகிறாள். வக்கீல், நாயக்கர் பரிந்துரை/உதவியோடு சென்னை க்வீன் மேரீஸ் கல்லூரியில் சேருகிறாள். செல்லம் என்ற தோழி கிடைக்கிறாள். கூர்மையான கண்களும் அறிவும் குறும்பும் நிறைந்த செல்லம் பாலிக்கும் வக்கீல் பேரன் ராஜாவுக்கு இடையே இருக்கும் ஈர்ப்பை – அவர்கள் இருவருமே வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் ஈர்ப்பை – கண்டுபிடித்துவிடுகிறாள்.

விஷயம் வெளியே வந்ததும் – அதாவது பாலி அதை அமுக்கி வைக்காமல், மறுக்காமல் ஆமாம் அப்படித்தான் என்று தன்னிடமே ஒத்துக் கொண்டதும் எல்லாரிடமும் சொல்கிறாள். ராமையாவுக்கு தலையில் இடி விழுந்த மாதிரி. நாயக்கர் பாலி பக்கம். வக்கீல் ராமையா மாதிரி உயர்ந்த மனிதர் தன் பேரனை சபித்துவிடக் கூடாது என்று துடிக்கிறார். தங்கராஜன் மனம் உடைந்தாலும் தைரியமாக எதிர்கொள்கிறான். அப்பா கொடுத்த வாக்குக்கும் தன் ஆசைக்கும் நடுவே பாலியின் முடிவு என்ன?

அன்று பரதம் எப்படிப் பார்க்கப்பட்டது, “தேவடியாள்-குடும்பப் பெண்” பரதம் கற்கலாமா, சபையில் ஆடலாமா என்பதும் நன்றாக வந்திருக்கிறது, என் புரிதலும் கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது.

கதையின் முடிச்சு பாதி புத்தகம் முடிந்த பிறகுதான் ஆரம்பிக்கிறது. ஆனாலும் அந்த முதல் பாதி பிரமாதம்தான். ராமையாவுக்கு கிராமத்தில் இருக்கும் நண்பர்கள், குறிப்பாக பக்கத்து வீட்டு சுப்ரமணியன் – ஜகது தம்பதியினர் அருமையான கோட்டோவியம். கொஞ்சம் மூளை வளர்ச்சி குன்றிய கிட்டன், கிராமத்தின் தீசல் பிடித்த பெரிய மனிதர் வையன்னா என்று அருமையாக பாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். காட்சிகளும் அருமை. பாலியை பெண் கேட்டு வரும் தன் குரு வேலய்யாவையே ராமையா கோபத்தில் குளத்தில் தள்ளிவிடும் காட்சி, அதற்குப் பிறகும் வேலய்யா ராமையா வீட்டில் தங்குவது, விளக்கெண்ணெய் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பாலி தன் வருங்கால மாமியார் ஒரு வார்த்தை சொன்னதும் ஒரே மடக்கில் குடிப்பது, மனைவி போன துக்கத்தை மறக்க தரிசாகக் கிடந்த நிலத்தை ராமையா தோட்டமாக மாற்றுவதும் பூசல் முற்றும்போது வையன்னா அதை அழிப்பதும் – சொல்லிக் கொண்டே போகலாம். சிறு நிகழ்ச்சிகளின் கூட தி.ஜா.வின் திறமை பளிச்சிடுகிறது. ஊருக்குப் போன ராமையா வருவாரா என்று திண்ணையிலேயே காத்திருக்கும் பாலி அவரை தூரத்தில் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதும் தடுக்கி விழுந்தும் எழுந்து ஓட்டத்தை நிறுத்தாமல் மீண்டும் ஓடுவதும் – நூறு வருஷத்துக்கு முன்னால் ஓடிய குழந்தையை என் கண்ணில் நிற்கச் செய்துவிட்டார்.

செல்லம் குறிப்பிட வேண்டிய இன்னொரு பாத்திரம். மிகக் கூரிய அவதானிப்புகள். அவள் இளம் வயதிலேயே விதவை ஆனவள் (வெளியே பெரிதாகக் காட்டிக் கொள்வதில்லை) என்பது அந்தப் பாத்திரத்தின் poignancy-ஐ அதிகப்படுத்துகிறது. அவளுக்கும் பாலிக்கும் ஏற்படும் சிறு சண்டைகள், மீண்டும் ஒட்டிக் கொள்ளுதல் எல்லாமே மிக நன்றாக வந்திருக்கிறது.

வக்கீல் பேரன் ராஜா தான் சிறு வயதிலிருந்தே பாலியைக் காதலிக்கிறேன் என்று சொல்லும் காட்சி அற்புதமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. தங்கராஜன் பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமும்.

உச்சக்கட்டமாக பாலி, தங்கராஜன், ராஜா, செல்லம், ராமையா, பெரியசாமி என்று எல்லாரும் பெரிய கோவிலில் பேசுவதும் பாலி முடிவுக்கு வருவதும் நல்ல காட்சி. தஞ்சைப் பெரிய கோவிலையே காக்கை உட்காரத்தான் ராஜராஜன் சோழன் கட்டினானா என்று கேட்பது நல்ல கோணம்.

சிறு பாத்திரங்களான அத்தை வடிவு, குரு பெரியசாமி, நாயக்கரின் மகன், மனைவி ஆகியோரும் நன்றாக வடிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரியசாமி தேவடியாளுக்குப் பிறந்தவர். அப்பா யாரென்று தெரியாது. பரதத்தில் நிபுணர். பாலியின் பிரச்சினையை தெரிந்து கொண்ட பிறகு அவர் வித்தை நிலைக்க வேண்டுமென்றால் காதல்/மணம் ஆகியவற்றை முழுமையாக நிராகரித்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும் இல்லை கட்டற்று இருக்க வேண்டும் என்று சொல்லும் இடம்தான் மரப்பசுவின் ரிஷிமூலம் என்று நினைக்கிறேன்.

பெரிய கோவில் சந்திப்புதான் உச்சக்கட்டம் (climax) என்றாலும் எனக்கு  உச்சக்கட்டம் கருதுவது கோணவாய் நாயக்கரின் முடிவுதான். துறவியான பின் காசிக்கு அவர் ராமையாவை அழைத்து சந்திக்கும் காட்சி அருமை.

குறைகள்தான் பெரிதாகத் தெரிகின்றன என்று ஆரம்பித்தேன், ஆனால் நிறைகளைத்தான் அடுக்கி இருக்கிறேன். அடிப்படைக் கேள்வி எனக்கு சாரமற்றதாகத் தெரிவது எல்லா நிறைகளையும் அடித்துவிடுகிறது. பாலிக்கு இருவர் பேரில் ஈர்ப்பு என்பதைத்தான் தி.ஜா. முடிச்சாகப் போட விரும்பி இருக்கிறார், ஆனால் போகப்போக பாலிக்கு ராஜா மீதுதான் காதல் என்று தெரிகிறது. அப்புறம் என்ன முடிச்சு, என்ன கேள்வி? எத்தனைதான் நெருக்கமான அப்பா-மகள் உறவு என்றாலும் வாயும் வயிறும் வேறுதான். செல்லமே சொல்வது போல ராமையா கொடுத்த வாக்குக்கு பாலி எப்படி பொறுப்பாக முடியும்? இப்படி அடிப்படைக் கேள்வி பொருளிழந்து போவது காலமாற்றத்தின் தவறுதான், தி.ஜா.வின் தவறு இல்லைதான். ஆனாலும் அதுதான் மிச்ச எல்லாவற்றையும் எனக்கு அடித்துக் கொண்டு போய்விட்டது.

1960-இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்கிறது. 1961-இல் நாவலாகப் பதிக்கப்பட்டிருக்கிறது. குறைகள் எனக்குப் பெரிதாகத் தெரிந்தாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

தி.ஜா.வின் சொகுசான நாவல்: உயிர்த்தேன்

உயிர்த்தேனைப் படிப்பது இரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் மொட்டை மாடியிலோ தென்னந்தோப்பிலோ நட்சத்திரங்கள் மேலே ஏறுவதைப் பார்த்துக் கொண்டு பி.பி. ஸ்ரீனிவாசையோ மகாராஜபுரம் சந்தானத்தையோ தலத் மெஹ்மூதையோ ப்ளூ டான்யூபோ கேட்கும் சுகம். நல்ல தாகமாக இருக்கும்போது இனிய இளநீரோ எலுமிச்சை சாறோ அருந்தும் சுகம். பவழமல்லி மரத்தடியிலோ முல்லைக் கொடி அருகிலோ அமர்ந்து மார்கழி மாதக் காலைப் பனியின் மெல்லிய குளிரில் திருப்பாவையை தெருவில் நல்ல குரல் உள்ள பெண்கள் பாடிக் கொண்டு போவதைக் கேட்கும் சுகம். சொகுசான நாவல்.

இத்தனைக்கும் தி.ஜா. காட்டுவது கனவுலகம் மட்டுமே. காந்தி கூட இப்படி செங்கம்மா/பூவராகன்/கணேசப் பிள்ளை மாதிரி சகமனிதர்கள் மீது அன்பைப் பொழிந்திருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கனவுகள் சில சமயம் ஏதோ ஒரு எல்லையைத் தாண்டி மகத்தான மானிடக் கனவுகளாக மாறுகின்றன. உயிர்த்தேன் அப்படிப்பட்ட ஒரு கனவைத்தான் காட்டுகிறது.

1967-இல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது.

பிரமாதக் கதைப்பின்னல் உள்ள கதை எல்லாம் கிடையாது. பணம் நிறைய சம்பாதித்த பிறகு பூவராகன் தன் சொந்த கிராமத்துக்கு திரும்புகிறார். ஊரே சோம்பலில் தன்முனைப்பில்லாமல் மூழ்கி இருக்கிறது. அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என்று பேசுபவர்களால் ஒரு துரும்பைக் கூட இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர்த்த முடியவில்லை. பூவராகன் கார்வார் கணேசப் பிள்ளையின் மனைவி அழகி/அறிவாளி/அன்பு நிறைந்த செங்கம்மாவை சந்திக்கிறார். அவரது அப்பாவின் கனவான கோவில் புனரமைப்பு வேலையை எடுத்து நடத்துகிறார். செங்கம்மாவின் தாக்கத்தில் ஊருக்கு நல்லது செய்கிறார், சொந்த செலவில் பாலம் கட்டுகிறார், எல்லாருடைய விவசாய நிலத்தையும் கொழிக்க வைக்கிறார். ஊருக்கு ரோஷம் வருகிறது, இவரது அருமை புரிகிறது. ஊர்த் தலைவராகுங்கள் என்று கேட்டுக் கொள்கிறது. பூவராகன் இதில் செங்கம்மாவின் பங்களிப்புதான் அதிகம் அவளைத் தலைவி ஆக்குங்கள் என்கிறார். ஊரே மாறினாலும் பழனிவேல் ஒத்துழைக்க மறுக்கிறான். அதற்குக் காரணம் செங்கம்மா மீது அவனுக்கு இருக்கும் ஆசை. எப்படி முடிகிறது என்பதுதான் கதை.

பழனிவேல் செங்கம்மாவை இழுத்து அணைத்துக் கொள்ளும் காட்சிதான் கதையின் உச்சக்கட்டம். அதற்குப் பிறகு அவர்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

பத்து பக்கத்திலேயே சூடு பிடித்துவிடுகிறது. பூவராகன் தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அழைக்கவில்லை என்று சண்டை போடும் பழனிவேல் செங்கம்மாவை கௌதமரை மணந்த அகலிகை என்று விவரிக்கிறான். யார் இந்திரன்? தஞ்சாவூர் அடிவெட்டுப் பேச்சு, கும்பகோணம் குசும்பு என்றெல்லாம் என் குடும்பத்தில் சொல்வார்கள், என் அப்பாவிடம் இது அவ்வப்போது தெரியும். (எங்கள் பூர்வீகமும் தஞ்சாவூர் ஜில்லாதான்). ஜானகிராமன் மொழியில் சூட்சுமமாகப் பேசி காலை வாருவது. அது அட்சர சுத்தமாக வந்திருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த வசனம் பூவராகனின் மாமா மகனும் நல்ல நண்பனுமான நரசிம்மன் பூவராகனையும் செங்கம்மாவையும் இணைத்துப் பேசிவிட்டு தவறாகப் பேசினோம் என்று உணர்வது. தன் மனைவியிடம் நீ நான் சொல்வதை நம்பவில்லையா என்று கேட்க அவள் நீங்களே நம்பலியே என்கிறாள்.

எல்லாருக்கும் அனேகமாகப் பிடிக்கும் பாத்திரங்கள் சிற்பி ஆமருவி, செங்கம்மாவை முழுதாகப் புரிந்து கொண்ட அவள் கணவர் கார்வார் கணேசப் பிள்ளை. அவரை விடவும் ஒரு மாற்று அதிகமாக எனக்குப் பிடித்த பாத்திரம் பூவராகனின் மனைவி ரங்கநாயகி. கோட்டோவியம்தான் வரைந்திருக்கிறார், ஆனால் அருமையாக வந்திருக்கிறது. செங்கம்மாவின் ஆடிப் பிம்பமான அனுசூயாவின் நீட்சிதான் மரப்பசுவின் அம்மணி. பழனிவேலும் நம்பகத்தன்மை உள்ள பாத்திரம்.

இது என்னடா ஜெயமோகனின் நாவல் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லையா என்று மீண்டும் தேடிப் பார்த்தேன். அவர் கண்ணில் இது தி.ஜா.வின் “மிகச் சுமாரான நாவல்களில் ஒன்று.” அவர் வார்த்தைகளில்:

ஜானகிராமனின் கதாபாத்திரங்களிலேயே பலவீனமானது செங்கம்மாதான் என்று கூடச் சொல்லலாம். அக்கால ஆர்வி, எல்லார்வி பாணி கதாபாத்திரம். ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள் எதுவுமே இலக்கியத்திற்குரிய நுட்பத்துடனும் கூர்மையுடனும் சொல்லப்படவில்லை. வணிகக், கேளிக்கை எழுத்துக்குரிய மேலோட்டமான சித்திரங்களே உள்ளன. ஒப்புநோக்க இதேகாலத்தில் ஏறத்தாழ இதேபோல எழுதப்பட்ட எல்லார்வியின் கிராம மோகினி சுவாரசியமான படைப்பு.

…பழனி, அவனுடைய ரகசியக்காதலை அவன் வெளிப்படுத்தும் உச்சத் தருணம், அதன் பின் செங்கம்மாவின் மாற்றம் எல்லாமே அகிலன் நாவலின் பாணியில் உள்ளன

ஜெயமோகனின் ரசனையோடு நான் அபூர்வமாக வேறுபடும் தருணம். “ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள்…” இவற்றைப் பேசியே ஆக வேண்டும் என்று அவர் நினைப்பது எல்லா நேரமும் பாயசம், பச்சடி என்று சம்பிரதாயமான விருந்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கிறது. எனக்கு செங்கம்மாவும் (கொஞ்சம் குறைவாக அனுசூயா, பூவராகன், ஆமருவி, நரசிம்மன், கார்வார் கணேசப் பிள்ளை, ரங்கநாயகி எல்லாரும் காட்டுவது) எல்லாரையும் அவர்கள் குறைநிறைகளோடு ஏற்றுக் கொள்ளும் அன்பு. ஏற்றுக் கொள்வதோடு நின்றுவிடாமல் அவர்களை சரியான திசையில் செலுத்தும் சிறு உந்துதல்களைத் தரும் அன்பு. அது ஒரு மாபெரும் மனிதக் கனவு. இந்தக் கனவைத்தான் ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தில் காட்டுகிறார். அந்த நாவலில் நாயகனின் அப்பா-அம்மா காதலை இன்னும் விரிவாகக் காட்டவில்லை என்று குறை சொல்வது போலத்தான் ஜெயமோகனின் விமர்சனம் எனக்குப் படுகிறது.

அதே நேரத்தில் இலக்கியம் என்று பார்த்தான் ஜேகே ஒரு படி மேலேதான் இருக்கிறார் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். இதே கனவைத்தான் பாலகுமாரனும் சிவசு பாத்திரம் மூலமாக அகல்யா நாவலில் முன் வைக்க முயற்சிக்கிறார். செங்கம்மாவோடு ஒப்பிட்டால் சிவசு எத்தனை செயற்கையாகத் தெரிகிறான்?

நாவலைப் பற்றி எனக்கும் விமர்சனங்கள் உண்டு. தி.ஜா.வுக்கு பெண் மேல் obsession என்பதே ஒரு obsession ஆக இருக்கிறது. செங்கம்மாவுக்கும் பூவராகனுக்கும் ஊடாக இருக்கும் காமம் என்பது என் கண்ணில் சரியாக வரவில்லை, வலிந்து புகுத்தப்பட்ட மாதிரி இருக்கிறது. ஆனால் செங்கம்மா-பழனிவேல், செங்கம்மா-கணேசப் பிள்ளை காமம்/உறவு என்பது இயற்கையாக இருக்கிறது. கட்டற்ற பாலியல் உறவு என்பது தி.ஜா.வுக்கு ஒரு fantasy-யோ என்று தோன்றுகிறது. அனுசூயாவுக்கு கதையில் என்ன தேவை? கதையில் இரண்டு முடிச்சுகளைப் போட நினைத்திருக்கிறார்; பழனிவேலின் obsession என்ற முடிச்சு நன்றாக விழுந்திருக்கிறது, ஆனால் பாலியல் உறவு என்று அந்தப் பக்கமும் போகாமல் இந்தப் பக்கமும் போகாமல் பூவாரகனும் ஏன் ஊரில் உள்ள எல்லாருமே அல்லாடுவது என்னவோ கனவிலும் பெண்ணோடு கூடாமல் சுயஇன்பம் செய்து கொள்வது போல இருக்கிறது, சரியாக வரவில்லை.

அம்மா வந்தாளை விட சிறந்த நாவலை தி.ஜா. எழுதவில்லை. மோகமுள்ளுக்குத்தான் இரண்டாம் இடம் கொடுப்பேன். இந்த நாவலின் சிறப்பு ஒரு மகத்தான கனவைக் காட்டுவதுதான். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலும் அப்படிப்பட்ட மகத்தான மானுடக் கனவைத்தான் காட்டுகிறது, ஆனால் இதை விடவும் சிறப்பாக எழுதப்பட்டதும் கூட, இன்னும் நம்பகத்தன்மை அதிகம் உள்ளதும் கூட. அதனால் என்ன? ரஃபியும் கிஷோரும் தலத்தை விட சிறப்பாக, அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்தான், ஆனாலும் தலத்துக்கு மனதில் இடம் இல்லாமல் போய்விடுகிறதா?

அதிசயமாக நண்பர் ரெங்காவும் இந்த நாவலை சுமார் என்றே  மதிப்பிடுகிறார். எங்கள் ரசனை வேறுபடும் ஒரு அபூர்வமான தருணம். அவர் பழனியின் முடிவு நாடகத்தனமானது என்று சொல்வது எனக்கும் சரியே. ஆனால் அது எனக்கு சிறு குறையாகத் தெரிகிறது, அவருக்கு பெரிதாக உறுத்துகிறது. எனக்கு நாவலில் நினைவிருக்கப் போவது அனைவரையும் ஏற்றுக் கொள்வது என்ற கனவு மட்டும்தான். அதைத்தான் தி.ஜா. சொகுசான, இனிய வாசிப்பு அனுபவமாக வடித்திருக்கிறார் என்று கருதுகிறேன். அது ரெங்காவுக்குப் பெரிதாகத் தெரியவில்லை போலும்.

நாவலில் வரும் ஒரு பாசுரத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி
ஆடி உழி தரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்…

இந்த உணர்வுதான் படிக்கும்போது ஏற்பட்டது, கண்ணுக்கினியன கண்டோம், வேறென்ன சொல்ல!

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
மாற்றுக் கருத்துகள் – ஜெயமோகனின் காட்டமான விமர்சனம், ரெங்கசுப்ரமணி விமர்சனம்
தமிழ் விக்கியில்

பாயசம் (தி. ஜானகிராமன்) குறும்படம்

மேம்படுத்தப்படுத்தி மீண்டும் பதிப்பதற்கு ஒரே காரணம்தான். நெட்ஃப்ளிக்சில் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் டெல்லி கணேஷ், ரோஹிணி, அதிதி பாலன் நடித்து இந்த சிறுகதை வெளியாகி இருக்கிறது.

இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த வசந்துக்கு ஒரு ஜே!

நவரசாவின் எல்லா அத்தியாயங்களையும் நான் பார்த்து முடிக்கவில்லை. பார்த்தவற்றுள் பலவும் சுமார்தான். ஆனால் இந்த நிகழ்ச்சி (episode) பிரமாதம். அபாரமான சிறுகதையோடு சிறந்த நடிப்பும் சேர்ந்துவிட்டால் இது போன்ற குறும்படங்கள் எங்கேயோ போய்விடுகின்றன.

டெல்லி கணேஷின் நடிப்பு மிக அருமை. ஆங்காரத்தை, தானும் தன் குடும்பமும் தாழ்ந்திருப்பதை அருமையாகக் காண்பித்திருக்கிறார். அதிதி பாலன் கடைசியில் டெல்லி கணேஷைப் பார்க்கும் பார்வைக்கே முழு பைசா வசூல். துணைப் பாத்திரங்களாக வருபவர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மணப்பெண்ணாக வருபவர், அவருடைய மகிழ்ச்சியும் அக்காவிடம் இருக்கும் அன்பும் பிரமாதமாக வந்திருக்கிறது; மற்றும் காத்தாடி ராமமூர்த்தி. “இது என்ன காப்பியா” என்று கேட்டால் “அப்படித்தான் சொல்றா” என்று அவர் பதில் சொல்வது இன்னாளில் அழிந்து கொண்டிருக்கும் அக்மார்க் தஞ்சாவூர் பிராமணக் குசும்பு.

இரண்டாவதாக அந்த கல்யாணக் காட்சியை படமாக்கி இருக்கும் விதம். நான் இளமையில் பார்த்த திருமணங்களை கண் முன் கொண்டு வந்துவிட்டது. அதுவும் அந்த ஜமக்காளம்! அந்த மாதிரி ஒரு ஜமக்காளத்தைப் பார்த்து பல வருஷம் ஆயிற்று.

பாயசம் சிறுகதையைப் பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? தி.ஜா.வின் முழு வீச்சும் வெளிப்படும் சிறுகதை. மனித மனத்தின் அசூயையை, பொறாமையை, உறவுகளுக்குள்ளே இருக்கும் அகங்காரப் (ego) பிரச்சினைகளை இதை விட அருமையாக சொல்லிவிட முடியாது. தவறவிடாமல் படியுங்கள்!

இந்த சிறுகதையை ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் சிறந்த தமிழ் சிறுகதை பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி. ஜானகிராமன் பக்கம், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: பாயசம் சிறுகதை

மோகமுள் பிறந்த கதை

சொல்வனத்தில் பார்த்தது. 57 வருஷங்களுக்கு முன்னால் தி.ஜா. இந்த நாவலின் ரிஷிமூலத்தை விவரித்திருக்கிறார்.

வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். சொல்வனத்துக்கும், சொல்வனத்துக்கு இதை அனுப்பிய லலிதாராமுக்கும், தி.ஜா.விடம் இதைக் கேட்டு வாங்கிய கல்கி பத்திரிகைக்கும் நன்றி!


கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றாப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.

“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”

“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே, அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.

“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”

“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”

“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை – அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ – எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ?”

பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன். காவேரி வண்டலில் செழித்த பயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, சுருக்சுருக்கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்ய வகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை – பாட்டி ரொம்பப் பெரியவள்.

மோகமுள் நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை. மோகமுள்ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்.

வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கைவரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிகாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்.

தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு மூலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதி பிள்ளையார், தெற்குவீதி காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு – இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்.

நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது.

உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு.

கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு.

கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்.

நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்) கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடித்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை.

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலி நிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான். சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான். இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம்.

தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள். தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்த மாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன. பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் பைசல் செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம்.

என்னை விட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.

இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒரு நாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரி கூட எழுத முடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் குக்கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி எல்லாச் சிரமங்களும் விடிந்து தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.

தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.

என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?

(கல்கி – 27.08.1961)

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

“அம்மா வந்தாள்” – கட்டுடைக்கப்பட்ட பிம்பம்

நான் எழுபது-எண்பதுகளின் சிறுவன். அப்போதெல்லாம் எனக்கு தாய் என்றால் கல்லானாலும் கணவன், குழந்தைகளே உலகம் என்று வாழும் பெண் மட்டுமே. அந்த பிம்பத்தின் பிரதிநிதி ஏறக்குறைய பெரிய பொட்டுடன் குண்டாக அசட்டு சிரிப்போடு வலம் வரும் கே.ஆர். விஜயாதான். பெண் சுதந்திரம் என்றெல்லாம் படித்தாலும் அதெல்லாம் தியரிதான், அம்மாக்களுக்கு வேறு உலகம் இருக்க முடியும் என்று தோன்றியது கூட இல்லை.

பதினைந்து வயது வாக்கில்தான் அந்த பிம்பம் முதல் முறையாக விரிசல் கண்டது. ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது அம்மா தனது பள்ளி அனுபவம் ஒன்றை சொன்னாள். வத்ராயிருப்பில் பள்ளி சென்று திரும்பும்போது யாரோ ஒருவன் “அட பாருடா இந்த பொண்ணை! எவ்ளோ அழகா இருக்கு” என்று சொல்ல என் அம்மா பயந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்து விட்டாளாம். அது வரையில் எனக்கு அம்மா என்றால் என் தேவைகளை பூர்த்தி செய்யும் மெஷின் + கண் கண்ட தெய்வமாக வணங்கப்பட வேண்டிய தெய்வப் பிறவி என்ற புரிதல்தான். ஏறக்குறைய வேலைக்காரியாக பணி ஆற்ற வேண்டிய மெஷின் – தெய்வம் இரண்டு கருத்தாங்களுக்கும் உள்ள முரண்பாடு கூட புரிந்ததில்லை. அந்த வயதில் நான் சைட் அடிக்க போவது போல் என் அம்மாவையும் யாரோ அவளுடைய சின்ன வயதில் சைட் அடித்திருக்கலாம் என்பது மண்டையில் ணங்கென்று விழுந்த அடி. பழைய தமிழ் படங்களில் வருவது போல் ஹை வால்யூமில் எரிமலைகள் கொதித்து, கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரையில் மோதிய தருணம். அந்த அனுபவத்தைத்தான் பல வருஷங்கள் கழித்து அம்மாவுக்கு புரியாது என்ற சிறுகதையாக எழுதினேன்.

அதற்கப்புறம் மெதுமெதுவாக அந்த பிம்பம் கரைந்துவிட்டது. என் அம்மா பல பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்தும் பதவி உயர்வை ஏற்றுக் கொண்டு அப்பாவையும் பிள்ளைகளையும் கூடுவாஞ்சேரியில் விட்டுவிட்டு ஒரு வருஷம் கடலூரில் வேலை பார்த்தது (அப்பாவின் முழு சம்மதத்தோடுதான், பிள்ளைகள்தான் எதிர்த்தோம்), பொன்னகரம் சிறுகதை, அம்மா வந்தாள் படித்தது, பரோமா திரைப்படம், அம்பையின் சிறுகதைகள் – குறிப்பாக இந்தக் கை இது வரை எத்தனை தோசை வார்த்திருக்கும் என்ற வரி – என்று பல அடிகள் விழுந்ததில் அந்த பிம்பம் முழுதாக உடைந்தே போனது.

thi_janakiramanஅம்மா வந்தாளை நான் முதல் முறை படித்தபோது பதின்ம் வயதைக் கடக்கவில்லை என்றுதான் நினைவு. என் அம்மாவின் பரிந்துரைதான் என்று நினைக்கிறேன். ஹை வால்யூமில் கடல் அலைகள் மோதவில்லை என்றாலும் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்தது. படித்தபோதும் சரி, பின்னாளில் திரும்பிப் படித்தபோதும் சரி, மோகமுள்ளை விடவும் இது எனக்கு ஒரு மாற்று அதிகம்தான். நான் படித்த தி.ஜா. நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

தி.ஜா. தனது நாவல்களில் அரைத்த மாவையே அரைக்கிறார் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இன்று இல்லாத, இசைப் பிரக்ஞை கூடிய தஞ்சாவூர் விவசாயக் கிராம சூழல், ஏதாவது ‘தகாத உறவு’, அனேகமாக பிராமணக் குடும்பங்கள் இல்லாமல் இவரால் எழுதவே முடியாதா என்று தோன்றியதுண்டு. அம்மா வந்தாளின் அலங்காரத்தம்மாளின் சாயல் மரப்பசுவின் அம்மிணியில் கூட உண்டு, ஏன் செம்பருத்தியின் பெரிய அண்ணியில் கூட உண்டு. இந்து செம்பருத்தியின் குஞ்சம்மாளேதான். இந்துவுக்கு அப்பு மேல் இருக்கும் காதல் – காதல் என்றால் போதவில்லை, obsession – பாபுவுக்கு யமுனா மேல் உள்ள அதே obsession-தான்.

இந்த நாவலுக்கு கதைச் சுருக்கம் எல்லாம் எழுதுவதில் பயனில்லை. படிக்காதவர்கள் படியுங்கள்!

amma_vandhal17-18 வயதில் படித்தபோது நுட்பமான சித்தரிப்பு என்று பல இடங்களில் தோன்றியது. தனியாக இருக்கும் இந்துவைத் தவிர்க்கத்தான் அப்பு காவிரிக் கரையில் பொழுதைப் போக்குகிறான், ஆழ்மனதில் அவனுக்கும் இந்துவிடம் ஈர்ப்பு உண்டு, இந்து தன்னை விரும்புவதும் அவனுக்கு தெரியும் என்றுதான் புரிந்து கொண்டேன். அது பெரிய திறப்பாக இருந்தது, திறமையான எழுத்தாளன் ஒரு வார்த்தை செலவழிக்காமல் எத்தனையோ விஷயங்களை சொல்ல முடியும் என்று புரிந்தது. கோபு பேசுவதெல்லாம் சிவசுவை ஏற்பது போலத்தான் இருந்தாலும், சிவசுவைப் பார்த்த கணத்தில் உள்ளே போய் ஒடுங்கிக் கொள்ளும் காவேரியை விடவும் சிவசுவை வெறுப்பவன் அவனே என்றுதான் என் வாசிப்பு இருந்தது. தண்டபாணி பேசும் வேதாந்தமும் வித்வத் செருக்கும் வெறும் வெளிப்பூச்சு, அலங்காரத்தம்மாளை dominate செய்ய விரும்பும், ஆனால் கையாலாகாத பக்தர் என்பதுதான் அவரது அடையாளம், அவர் அந்தஸ்துள்ளவர்களை அலட்சியப்படுத்துவதெல்லாம் அந்த கையாலாகத்தனத்தின் frustration மட்டுமே என்றுதான் புரிந்து கொண்டேன். குடும்பத்தின் அத்தனை பேரும் ‘Elephant in the Room’-ஐ கண்டுகொள்ளாமல் ஒன்றுமே நடக்காதது போலப் புழங்குவது அந்த வயதில் ஆச்சரியப்படுத்தியது. அலங்காரத்தம்மாள் அப்புவுக்கு வரும் சம்பந்தத்தை பெண்ணின் அம்மா சோரம் போனவள் என்று நிராகரிக்கும் இடம் என்னை புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மனித மனத்தின் முரண்களைப் பற்றி யோசிக்க வைத்தது. அந்த நிராகரிப்பை அலங்காரத்தம்மாளின் குற்ற உணர்வின் இன்னொரு வடிவம், தனக்கு விடுதலை தர வேண்டிய அப்புவின் மீது ஏதாவது களங்கம் படிந்தால் அப்புவால் விடுதலை கிடைக்காது என்ற சுயநலம் என்றும் புரிந்து கொள்ளலாம்தான். சிவசு ஆசிர்வாதமாகத் தரும் பணத்தை அலங்காரத்தம்மாள் நிர்த்தாட்சண்யமாக நிராகரிப்பது அப்படிப்பட்ட புரிதலை வலுப்படுத்துகிறதுதான். ஆனால் எனக்கு அது மனித மனத்தின் முரண்பாடாகவேதான் எனக்கு (இன்றும்) தோன்றுகிறது. சிவசு மூலமாகப் பிறந்தவர்கள்தான் அம்மா சந்தோஷமாகப் பெற்றுக் கொண்ட குழந்தைகள் என்று அக்கா சொல்வதும் அந்த சந்தோஷத்தைப் பற்றிய அலங்காரத்தம்மாளின் குற்ற உணர்வும் இன்னொரு திறப்பு. சிவசுவின் குற்ற உணர்வும் அலங்காரத்தம்மாளுக்கு குறைந்ததில்லையோ? எதற்காக அப்புவைக் கண்டதும் அவன் கூனிக் குறுக வேண்டும்? என்ன செய்திருக்க வேண்டும் அலங்காரத்தம்மாள்? எது சரி, எது தவறு? தன் சந்தோஷத்தை நிராகரித்திருக்க வேண்டுமா? மகிழ்ச்சி இத்தனை குற்ற உணர்வை ஏற்படுத்துமா? கர்ணனும் துரியோதனனும் துச்சாதனனும் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்களா? குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டிருந்ததுதான் அர்ஜுனனுக்கு நிகரான திறமை கொண்ட கர்ணனும் பீமனுக்கு நிகரான வலிமை கொண்ட துரியோதனனும் அவர்களிடம் தோற்றதற்கு காரணமா?

இன்று படிக்கும்போது அதிர்ச்சி இல்லை. ஆனால் பல இடங்களில் அந்த மாஸ்டர் டச் இன்னும் தெரிகிறது. என் அம்மாவை நினைத்துத்தான் அவ்வப்போது பெருமிதம் கொண்டேன். என் அம்மாவின் value system-இல் இதெல்லாம் பெரிய தவறுதான். ஆனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் பதின்ம வயதிலேயே எனக்கு இதை எல்லாம் பரிந்துரைத்தது சந்தோஷப்படுத்தியது. தி.ஜா.வே சொல்வது போல ‘கலை உலகம் ஒரு மாயலோகம், அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள கூடாது’ என்றுதான் என் அம்மாவும் புரிந்து கொண்டிருக்கிறாள்.

அம்மா வந்தாள் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று. என்னைப் பொறுத்த வரையில் தி.ஜா.வின் மாஸ்டர்பீஸ் இந்த நாவலே.

அனுபந்தம்:

தி.ஜா.வே அம்மா வந்தாளைப் பற்றி சொல்கிறார். தி.ஜா. ஃபேஸ்புக் குழுவுக்கு நன்றி!

“அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏது சொல்ல இல்லை. நூல்தான் முக்கியம். எப்படி ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கத்தோ அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதை தூற்றி விட்டார்கள். நான் பிரஷ்டன் என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிரிந்துதான் பிறந்து வருகின்றது என்று கூற விரும்புகின்றேன்

‘அம்மா வந்தாள்’ நான் கண்ட கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி. மனதுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றை பார்த்து ஊறி வெகுகாலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெருகின்றன. நாம் உருவம் கொடுப்பதாக எனக்கு தோன்றவில்லை.

மையக் கருத்தை பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களை பற்றி நான் எப்போதும் கவலைப்படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன். அவனுக்குப் பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குதான் தெரியும். கலை உலகம் ஒரு மாயலோகம், அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள கூடாது”

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

ஏன் எழுதுகிறேன்? – தி. ஜானகிராமன்

தி.ஜா. ஃபேஸ்புக் குழுவிலிருந்து:

ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகிறாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று சாப்பிடுகிறோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகிறோம். சில பேர் சாப்பிடுவதற்காகவே சாப்பிடுகிறார்கள். ருசி, மணத்தைக் கூடப் பாராட்டாமல் சாப்பிடுகிறார்கள். நம் நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் அமெரிக்கத் தூதராலய விருந்து, உடனே கவர்னர் விருந்து, உடனே ராமநவமி உத்சவச் சாப்பாடு மூன்றையும் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுவார். இத்தனை காரணங்கள் எழுத்துக்கும் உண்டு – அதாவது நான் எழுதுகிறதற்கு.

பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் – இப்படி பல மாதிரியாக எழுதுகிறேன். சில சமயம் நாடகத் தயாரிப்பாளர் சொல்லுகிறார் – ஒரு பிரமிப்பு, ஒரு தினுசான தாக்குதல் ஏற்படுத்த வேண்டும்; பார்க்கிறவர்கள் மனதில் என்று- சரி என்று சொல்கிறேன். கடைசியில் பார்க்கும்பொழுது, இத்தனை காரணங்களும் அல்லாடி அலைந்து மூன்று கழிகளில் பிரிந்து விழுந்துவிடுகின்றன. எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் – இந்த மூன்று தினுசுதான் கடைசியாக உண்டு என்று தோன்றுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறாற் போல சில சமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமைதான். உண்மையில்லை.

எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் சொல்ல முடியும். விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப் போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன. கண்யநஷ்டம், பாபம் பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக் கண்கள், – இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம் – எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந்தத்துக்குப் பணியாதவர்களைக் கண்டும் நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

தி. ஜா.வின் பாலகுமாரப் புனைவு – மரப்பசு

மீள்பதிப்பு, சிறு திருத்தங்களுடன் (முதல் முறை பிரசுரிக்கப்பட்டது அக்டோபர் 2010-இல்)

மரப்பசுவின் ஆரம்பம் பிரமாதம்! தஞ்சாவூர் கிராமம், ஊர் பெரிய மனிதர், நமஸ்காரம் செய்யும் அம்மிணி, விதவை மகளின் தலையை மழிக்கப் போகும்போது இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே என்று அலறும் ஊர் பெரிய மனிதர் என்று ஒரு அருமையான சித்திரத்தை காட்டுகிறது.

அடுத்த பகுதியில் ஒரு மாற்று குறைகிறது. பாசமான பெரியம்மா/பெரியப்பா, ஒரு பார்வையில் அம்மிணியின் செக்ஸ் வேட்கையை அடையாளம் கண்டுகொள்ளும் கோபாலி என்று செல்கிறது.

அதற்கப்புறம் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. தி.ஜா.வுக்கு நம்மை எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்று ஆசை போலிருக்கிறது. அதனால் விரும்பியவரிடம் உறவு கொள்ளும் ஒரு பெண் பாத்திரமாக அம்மிணியைப் படைத்திருக்கிறார். கோபாலியின் வைப்பாட்டியாக வாழ்வதில், அதே நேரத்தில் வேறு பலரிடம் உறவு வைத்துக் கொள்வதில் அம்மணிக்கு எந்த தயக்கமும் இல்லாதது அந்த காலத்தில் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். இப்போது இல்லை. அப்போதும் ஆங்கிலத்தில் ஹரால்ட் ராபின்ஸ் மாதிரி படித்துவிட்டு இதைப் படித்தால் ஒரு அதிர்ச்சியும் ஏற்படப் போவதில்லை. அம்மா வந்தாள் என்னைப் போன்ற மிடில் கிளாஸ் மாதவன்களை இதை விட பல மடங்கு பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கும். தி.ஜா.வாக ஆரம்பித்து பாலகுமாரனாக முடித்திருக்கிறார்.

இது பரத நாட்டிய விற்பன்னர் சந்திரலேகாவை வைத்து எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

எஸ்.ரா. இதை தமிழின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அம்பை இந்த நாவலை இங்கே மற்றும் இங்கே போட்டுத் தாக்குகிறார்.

படிக்கும்போது மீண்டும் மீண்டும் தி. ஜா. ஒரே கதையை எழுதுவது மாதிரி ஒரு அலுப்பு ஏற்படுகிறது. தஞ்சாவூர் பின்புலம், ஏதோ ஒரு வகையில் சமூகம் சுலபமாக அங்கீகரிக்காத உறவு, இதை விட்டால் வேறு எதுவும் இல்லையா என்று தோன்றுகிறது.

ஆனால் அந்தக் கால தஞ்சாவூர் வட்டார பின்புலத்தை, அதுவும் பிராமண பின்புலத்தை சித்தரிப்பதில் தி.ஜா.வை மிஞ்சியவர் எவருமில்லை. அது மட்டுமே இந்தக் கதையின் பலம்.

பின்குறிப்பு: நான் இந்தப் பதிவை எழுதி இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகு நண்பர் ரெங்கசுப்ரமணி இதைப் பற்றி எழுதுகிறார்

நான் எழுத நினைப்பதை ஏற்கனவே ஆர்.வி எழுதிவைத்துவிட்டார் இங்கு.

அவர், நான், கேசவமணி மூவருக்கும் ஏறக்குறைய ஒரே வேவ்லெங்க்த்!

பின்பின்குறிப்பு: தி.ஜா.வின். அடுத்த வீடு ஐம்பது மைல் புத்தகத்தைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. அவரது ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள். எழுதப்பட்ட காலத்தில் முக்கியமாக இருந்திருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி. ஜா. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
திண்ணை தளத்தில் அம்பையின் விமர்சனம் பகுதி 1, பகுதி 2
ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்

எம்.வி. வெங்கட்ராமின் ‘என் இலக்கிய நண்பர்கள’

mv. venkatramஎம்.வி.வி.யின் இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைத்தது. தி.ஜா., க.நா.சு. மௌனி ஆகியோரைப் பற்றி எழுதி இருக்கிறார். சுட்டி கொடுத்த நண்பர் ரமணனுக்கு நன்றி!

thi_janakiramanதி.ஜா. உயிர் நண்பர். லங்கோட்டி யார். கும்பகோணத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். எம்விவி நெருக்கடியில் இருந்த காலகட்டத்தில் தி.ஜா. வீட்டில் தங்கி இருக்கிறார். என்னதான் நண்பன் என்றாலும் இன்னொருவர் வீட்டில் மாதக் கணக்கில் தங்குவதில் எம்விவிக்கு சில தயக்கங்கள் இருந்தாலும் தி.ஜா.வுக்கு மனதில் எந்தக் கேள்வியும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி நட்பு கிடைப்பது அபூர்வம். இந்தப் பகுதி என்னை நெகிழ வைத்தது.

ka.naa.su.க.நா.சு.வோடு எப்போதும் கருத்துக்களை வைத்து சண்டை. ஆனால் பரஸ்பர மரியாதை நிறைய இருந்திருக்கிறது. அவரிடம் தொடர்கதையை வாங்கிப் போட படாத பாடு பட்டிருக்கிறார். க.நா.சு. தனக்குப் பிறகு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் visiting professor ஆக எம்விவி வர வேண்டும் என்று முயன்றிருக்கிறார், இன்னொரு நெகிழ்வான சம்பவம்.

mowniமௌனியின் சிறுகதைகளால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறார். அவர் மீது வியப்பு கலந்த மரியாதை (admiration tinged with wonder). அவரிடம் கதைகள் வாங்கிப் போட நிறைய முயற்சி செய்திருக்கிறார். எக்கச்சக்கமாக திருத்த வேண்டி இருக்கிறதே என்று வியப்படைந்திருக்கிறார். அதை தற்செயலாக வெளியேவும் சொல்லிவிட, மௌனி புண்பட்டு அதை மறுக்க, இன்னொரு குடுமிப்பிடி சச்சரவு. இந்த தொடர்பு வட்டாரத்தில் இருபது பேர் இருந்தால் அதிகம், ஆனால் இரண்டாயிரம் சச்சரவு! மௌனி பகுதி புன்னகைக்க வைத்தது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் தி.ஜா., க.நா.சு. மௌனி என்ற ஆளுமைகள் அல்ல. ஒரு காலகட்டத்தில் இலக்கியத்தைப் பற்றி இந்த முக்கியமான படைப்பாளிகள் என்னென்ன கனவ கண்டார்கள், அவற்றை நனவாக்குவதில் எத்தனை நடைமுறை சிரமங்கள் இருந்தன, லௌகீகப் பிரச்சினைகள் அவர்களை எப்படி எல்லாம் அலைக்கழித்தன என்பதற்கான ஒரு புரிதல் கிடைப்பதற்குத்தான். அவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எம்விவி பக்கம், தி.ஜா. பக்கம், க.நா.சு. பக்கம், மௌனி பக்கம், தமிழ் அபுனைவுகள்