கம்பனின் ராமாயணம் அண்ணாதுரைக்கு காமாயணம்

(மீள்பதிவு)

அண்ணாவின் “கம்பரசம்” புத்தகத்துக்கு கொஞ்சம் notoriety உண்டு. “கெட்ட” புத்தகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே அது கிடைக்குமா என்று பதின்ம வயதில் தேடி இருக்கிறேன். தி.மு.க./அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த காலத்தில் கூட அது நூலகங்களில் கிடைக்கவில்லை. அப்புறம் கவிதை அலர்ஜி வேறு பெரிதாக டெவலப் ஆகிவிட்டதால் இதைத் தேடும் முயற்சியையே கைவிட்டுவிட்டேன்.

ஜடாயு சமீபத்தில் கம்பர் பாடல்களைப் பற்றி விளக்கினார். இன்னும் கற்பூர வாசனை தெரியவில்லை என்றாலும் வேறு எந்தக் கவிதையை படிக்கிறோமோ இல்லையோ கம்பர் பாட்டையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறது. அப்போது இந்தப் புத்தகம் தற்செயலாக கண்ணில் பட்டது.

ரொம்ப சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் அண்ணாவுக்கு முலை, அல்குல் என்பதெல்லாம் கெட்ட வார்த்தை. அப்படி ஏதாவது வந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடி இருக்கிறார். கிடைத்தவைகளை வைத்துக் கொண்டு கம்பன் எழுதியது ராமாயணம் இல்லை காமாயணம் என்று டிபிகல் திராவிட எழுத்துப் பாணியில் நீட்டி முழக்கி எழுதி இருக்கிறார்.

ராமனுக்கு கல்யாணம், அல்லது பட்டாபிஷேகம் என்றால் பெண்களும் மது அருந்தி, மேலாடையைப் பணயம் வைத்து சூதாடி, காமத்தில் திளைக்கிறார்கள், பக்தி இலக்கியத்தில் இப்படி எல்லாம் எழுதலாமா என்று அங்கலாய்க்கிறார். விக்டோரியன் விழுமியங்கள்!

ஆனால் அவரையும் குறை சொல்வதற்கில்லை. அப்போது பரவலாக இருந்த விழுமியங்கள் அவைதான். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த திரு.வி.க., ராஜாஜி, கம்பன் அடிப்பொடி சா. கணேசன், டி.கே.சி. போன்றவர்கள் வேறு விதமாக நினைத்திருக்க வாய்ப்பில்லை.

இன்று படிக்கும்போது இரண்டு இடங்கள்தான் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன. ஒன்று

இயல்வுறு செயல்வி நாவாய் இரு கையும் எயினர் தூண்டத்
துயழ்வான துடுப்பு வீசித் துவலை கண் மகளிர் மென்றூ
கயல்வுறு பரவவ யல்குலொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்கயா உயிர்ப்பளித்ததம்மா!

ராமனை மீண்டும் நாட்டுக்குக் கூட்டி வர பரதன் தலைமையில் கூட்டம் கூட்டமாக ஜனம் போகிறது. எல்லாரும் பயங்கர துக்கத்தில் இருக்கிறார்கள். கங்கையை படகில் கடக்கிறார்கள். அப்போது துடுப்புகள் தண்ணீரை வாரி அடித்து பெண்களின் ஆடை நனைந்து அல்குல் தெரிந்ததாம், அதைப் பார்த்து துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆண்களுக்கு மறுபடியும் உயிர் வந்ததாம், உற்சாகம் பிறந்ததாம்! இந்த நேரத்திலும் அல்குல் சிந்தனைதானா, கம்பனுக்கு சான்ஸ் கிடைத்தால் இப்படித்தான், சீச்சீ என்கிறார் அண்ணா.

அந்தக் காலத்தில் இதற்கு கம்பனின் ரசிகர்கள் கொஞ்சம் சப்பைக்கட்டு கட்ட முயற்சித்திருக்கிறார்கள். முன்புறம் இல்லை, கம்பர் சொன்னது பின்புறம் தெரிவதைத்தான் என்றெல்லாம் “மழுப்பி” இருக்கிறார்கள். கம்பர் செக்ஸ் மேனியாக் என்று அண்ணாதுரை வாதிடுவதை முன்புறமா பின்புறமா என்று மயிர் பிளப்பது எப்படி மாற்றும் என்று எனக்குப் புரியவில்லை!

ஒரு ஜோக் உண்டு. மனைவி கணவனிடம் நான் நேற்றைக்குப் படித்தேன், ஆண்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் செக்ஸைப் பற்றித்தான் யோசிப்பார்களாமே, இது உண்மையா என்பாளாம். கணவன் மிச்ச நேரம் எல்லாம் எதைப் பற்றி யோசிப்பார்களாம் என்று கேட்பான். கம்பர் மனித இயல்பைத்தான் சொல்லி இருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் கம்பனின் சிந்தனை இந்தப் பாடலில் எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.

வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தான்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தாங்கும் பாந்தழும் பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளத்தைச் சொல்லும் ராமன் கொங்கையையும் அல்குலையும் எதற்கு விவரிக்கிறான்? சரி கொங்கையையாவது ஒத்துக் கொள்ளலாம், அல்குல்? அனுமன் என்ன பார்க்கும் பெண்களின் ஆடையை விலக்கி அல்குலை வைத்தா அடையாளம் காணப் போகிறான்? என்ன நினைத்து இதை கம்பர் எழுதி இருப்பார்?

ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை எம்.ஏ. சுசீலா “இடை,அதற்குக் கீழ் மறைந்திருக்கும் பகுதிகள் என அனைத்தையும் ஒருசேர அந்தந்தப் பாடலின் இடம்-பொருள்-ஏவலுக்கேற்பப் பொருள் கொள்ளுமாறு அமைந்த பொதுச்சொல் அல்குல்” என்று விளக்கினார். இங்கே இடை என்று வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

நல்ல புத்தகம் என்று சொல்லமாட்டேன். ஆனால் ஒரு காலகட்டத்தின் சிந்தனை முறையை நமக்குக் கொஞ்சம் புரிய வைக்கும் புத்தகம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
மின்னூல்
அண்ணாதுரையின் படைப்புகள்
வேலைக்காரி நாடகம்

மலர்மன்னனின் “தி.மு.க. உருவானது ஏன்?

வ.வே.சு. ஐயரின் கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகள்

va_ve_su_iyerஎனக்கு இன்னும் கம்ப ராமாயணத்தின் கற்பூர வாசனை தெரியவில்லை என்பதை பதிவு செய்துவிடுகிறேன். கம்பனைப் பற்றி பரவசப்படுபவர்கள் வர்ணனைகள், சந்தம், மொழியைக் கையாண்டிருக்கும் விதம் ஆகியவற்றைத்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்கள். இலக்கியம் என்றால் அதில் மானுட தரிசனங்கள் வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வர்ணனை கிர்ணனை எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.

ஐயரும் கம்பனைக் கண்டு பரவசப்படும் ஜாதிதான். கம்பனில் ஊறித் திளைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்று அவரது மொழி கொஞ்சம் பழையதாகிவிட்டாலும் படிக்கும்படியாகத்தான் எழுதி இருக்கிறார். வால்மீகியை விட கம்பன் உசத்தி என்கிறார். எனக்கு அவர் கர்ண பரம்பரைக் கதைகளைப் பற்றி எழுதியது பிடித்திருக்கிறது. கம்பனின் காலம் முதல் பராந்தக சோழனின் காலம் என்கிறார். ஈ.வெ.ரா. ராமனையும் சீதையையும் இழித்துப் பேசியதை வலுவாக மறுக்கிறார். அதுவும் எம்.ஆர். ராதா நாடகங்களில் பேசுவதைக் கண்டு நல்ல கோபம்!

ஆர்வம் உள்ளவர்களுக்காக மின்னூலை இணைத்திருக்கிறேன். கம்ப ராமாயணப் பிரியர்களுக்கு ஒரு அபூர்வமான புத்தகம் கிடைக்கட்டும் என்றுதான் இந்தப் பதிவே. இல்லாவிட்டால் கவிதை ஆய்வைப் பற்றி எல்லாம் நான் ஏன் எழுதப் போகிறேன்?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

ஜெயமோகனின் “கொற்றவை”

Visuஎன் பதிவுகளைப் பற்றி எனக்கு ஒரு மனக்குறை உண்டு. பல வேறு காரணங்களால் (நேரக்குறை, வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர்த்த முடியாது என்ற முடிவு…) என்னால் பொதுவாக புத்தக அறிமுகம் என்ற நிலையைத் தாண்ட முடிவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால் நான் பொதுவாக அகலமாக உழுகிறேன். ஆழமாக உழ ஆளில்லை என்பதுதான் உண்மை நிலை.

அந்த மனக்குறையை பொதுவாக விசுவின் பதிவுகள் தீர்த்து வைக்கின்றன. விசுவின் பதிவுகள் பொதுவாக செறிவானவை, நல்ல ஆழமாகவே உழுகிறார். விஷ்ணுபுரத்தைப் பற்றி இன்னும் நினைவு கூரக் கூடிய பதிவுகளை எழுதினார், இப்போது கொற்றவைக்கு வந்திருக்கிறார். ஓவர் டு விசு!

jeyamohanமுதல் முறை கொற்றவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். அபாரமான மொழி. முதல் வாசிப்பில் மொழியின் அழகை தாண்ட முடியவில்லை. நிறைய புதிய சொற்கள், ஒலி அமைதியுடன் கூடிய அற்புதமான வரிகள். கொற்றவையை ஒரே மூச்சில் தொடர்ந்து படிப்பது, ஒரு பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்து, எல்லா வாசனை திரவியங்களையும் சேர்த்து நுகர்வது போல. கிறங்கடிக்கும். திகட்டத் துவங்கும். மொழியில் மயங்கி பக்கங்களுக்கிடையில் வேறுபாடு உணர முடியாமல் போகும். பெர்ஃப்யூம் கடைகளில் வெவ்வேறு திரவியங்களுக்கிடையே வேறுபாடு உணர காபி கொட்டைகள் நிறைந்த குப்பி ஒன்றை வைத்திருப்பார்கள். இடைஇடையே காபி குப்பியை நுகர்ந்து, அதன் கசப்பு மணம் நாசியில் ஏறிய பின், மீண்டும் அடுத்த வாசனை திரவியத்தை நுகரலாம். நாசி தெளிவாக புதிய வாசனையை உணரும். அது போல, கொற்றவை படிக்கும்போது, சூடிய பூ சூடற்க தொகுதியிலிருந்து ஒரு கதை படிப்பேன். நாஞ்சில் கதையின் கசப்பு ஏறிய பின், மீண்டும் தித்திக்கும் கொற்றவை. இரண்டு மாதங்களில் கொற்றவையை ஒரு முறை படிக்க முடிந்தது. அப்பொழுதே எழுதத் தோன்றினாலும், சிலப்பதிகாரம் படித்ததில்லை. இப்போது, சிலப்பதிகாரத்தையும், மீண்டும் கொற்றவையை இரு முறை வாசித்தபின் கொற்றவை குறித்து எழுத முடியுமென்று தோன்றுகிறது.

kannagiகடந்த ஐம்பது ஆண்டுகளில் பல இந்திய மொழிகளில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்திருக்கும்போது, தமிழ் நவீனத்துவர்கள், சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையையோ ஏன் மறுஆக்கம் செய்யவில்லை? குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்த பொறுப்பற்ற கணவன், கற்பினால் தளையிடப்பட்ட பெண்கள், போலி என்கவுண்டர் போல நிகழும் கோவலன் கொலை என்று பல வகையிலும் சிலம்பு ஒரு துன்பியல் கதை. முடிவை சிறிது மாற்றி, கதையை சமகாலத்தில் (1970களில்) நடப்பதுபோல எழுதினாலே அது ஒரு நவீனத்துவ நாவல்தான். பழமை மீதிருந்த உதாசீனம், ‘தமிழியர்கள்’ பழைய இலக்கியங்களை ஆக்ரமித்தது மற்றும் திராவிட இயக்கத்தினரின் jingoism போன்றவை நவீனத்துவர்களுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ்[1], லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெருந்துயரம் தங்களுக்கென்று தங்கள் மரபிலிருந்து எடுத்துப் பயன்படுத்த படிமங்களே எதுவும் இல்லை, தான் அதை உருவாக்க வேண்டியிருந்தது என்கிறார். நவீனத்துவ தமிழ் நாவல்களை படிப்பதில் உள்ள ஆகப் பெரிய சோகம் தமிழ் படிமங்களை அவை பயன்படுத்தவில்லை என்பதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமான புதுமைப்பித்தனிடமிருந்து அவருடைய யதார்த்தவாதத்தையும், நக்கல் நையாண்டி நடையையும் நவீனத்துவர்கள் பெற்றுக்கொண்டனர். அவருடைய கடைசி காலத்து படைப்புகளான கயிற்றரவு, ‘கபாடபுரம்’ போன்றவற்றை நவீனத்துவம் கண்டுகொள்ளவில்லை. கபாடபுரம் சிறுகதையின் சாரமும் கொற்றவையின் மையமும் ஒன்றுதான். [அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி, கபாடபுரத்தை கடல் கொள்கிறது.] கபாடபுரம் யதார்த்த உலகில் துவங்கி, ஆசிரியரின் நக்கல் கலந்த குரல் கதை முழுக்க ஓங்கி ஒலித்து, கடைசி சில பத்திகளில் காலாதீதத்தில் சென்று முடிவடைகிறது. கொற்றவை நேரெதிர். முற்றிலும் யதார்த்தம் கலவாத கனவு போன்ற நடையில், காலாதீதத்தில் துவங்கி, கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் குரலுடன் தற்காலத்தில் முடிவடைகிறது. புதுமைப்பித்தன் சைவ பின்புலத்தில் [எரிமலை – நெற்றிக்கண்ணை திறக்கும் ஈசன்] தமிழ் மரபை ஆராயும்போது, ஜெயமோகன் சாக்த (தாய் தெய்வ) மரபில் [பொங்கும் கடல் – வெறிக்கூத்தாடும் கொற்றவை] கொற்றவையை எழுதியுள்ளார். [கன்யாகுமரியை வெறிக்கூத்தாடும் கொற்றவையின் வடிவில், பொங்கிவந்த கடலின் உருவகமாக ஜெ. எழுதியிருக்கும்போது, ‘ஆழி சூழ் உலகில்ஜோ டி க்ரூஸ், குமரி அன்னையை, கிறித்தவ விழுமியத்தின் சாரமான தியாகத்திற்கு உருவகிக்கிறார். பொங்கி வரும் கடலிலிருந்து தன் குடியை காக்க, தன்னை பலியிடுகிறாள் கெழுகடல் கரை நிற்கும் செல்வி.]

jeyamohan_kotravaiவிஷ்ணுபுரத்தைப் போலவே, கொற்றவையும் ‘கபாடபுர’த்திலிருந்து, சில தூண்டுதல்களை பெற்றிருந்தாலும், அதன் பெரும்பகுதி, சிலப்பதிகாரத்தின் மறுபுனைவு. சிலம்பின் சாரத்தை தக்க வைத்துகொண்டே, கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் மாற்றி எழுதியிருக்கிறார். உதாரணமாக, சிலம்பில் செங்குட்டுவன் வடமன்னர்களான கனகவிஜயரின் முடித்தலை நெரித்து, அவர்தம் கதிர்முடியில் பத்தினிக் கோட்டத்து கால்கோள் கற்களை ஏற்றிய வீரன். இனைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அனைப்பள்ளியில் [இளங்கோ!! 🙂 :-)] காத்திருக்கும் வேண்மாளை காணச் செல்லும் காதலன். கொற்றவையிலோ, செங்குன்றத்தின் குறுமர் நிறுவிய கண்ணகி சிலையின் பதிட்டை விழாவிற்கு சென்று அச்சிலையை நீள்நேரம் நோக்கி, பின்பு செங்குன்றின் உச்சியில் படுத்து விரிவானை நோக்கியடி, மண்ணாளும் நெறி எது என்று வியக்கும் மன்னன். சமணத் துறவி கவுந்தி, கொற்றவையில் கோவலனுக்கு துறவியாகவும், கண்ணகிக்கு நீலி எனும் பேயாகவும் (உக்கிரதெய்வம்) வழித்துணையாக வருகிறாள். சிலம்பில், பழையன் குட்டுவன் பற்றி ஒரு வரி வருகிறது. கொற்றவையிலோ, அவன் முக்கியமான எதிர்நிலை பாத்திரம். சிலம்பிலுள்ள மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட மாற்றுகிறார் ஜெ. மாதவியிடமிருந்து திரும்பிவரும் கோவலனை, யாரென்று தெரியாமல் “காவலன் போலும்” என அறிவிக்கும் கண்ணகியின் சேடி, கொற்றவையில் “ஆ கள்வன்!” என்கிறாள். சொல்லிக் கொண்டே போகலாம். சில முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளேன்.

மூன்று வாவிகள்:
சிலப்பதிகாரத்தில் பாலை வழியே செல்லும் கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் மாடல மறையவன் என்ற அந்தனனிடம் மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவன், மூன்று வழிகளை சொல்லி, அம்மூன்றில், இடைப்பட்ட வழியில் மாலிருஞ்சோலை வரும். அங்கு புண்ணிய சரவணம், பவகாரணம், இட்டசித்தி என்ற மூன்று வாவிகள் உள்ளன; மூன்று வாவிகளையும் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்ற பின், அவற்றில் மூழ்கினால், முறையே தொன்னூலாகிய ஐந்திரத்தை கற்ற பலன், முன்வினை/வருவினை/நிகழ்வினை அறிதல் மற்றும் வேண்டியது கிடைக்கும் என்கிறான். இம்மூன்றிலும் மூழ்காவிட்டாலும், மாலின் திருவடி தொழுதால், இம்மூன்றில் மூழ்கிய பலனை ஒருங்கே அடையலாம் என்கிறான். இன்மூன்று குளங்களும், “இதைச் செய்தால் இது கிடைக்கும்” என்ற அடைப்படையில் சடங்காகவும், அதைவிட பெரியது சரணாகதி (பக்தி) என்ற அளவிலேயே வருகிறது. சடங்கையும், பக்தியையும் ஏற்காத சமணத்துறவியாகிய கவுந்தி, மாடல மறையவனிடம் வாவிகளில் மூழ்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.

kannagi_kovalan_kavunthi_adigalகொற்றவையில் கண்ணகி, கோவலன், கவுந்தி வடிவில் வழித்துணையாக வரும் நீலியும் மாடல மறையவனிடம் வழி கேட்கிறார்கள். அவன் வழிகளையும், வாவிகளையும் விவரிக்கக் கேட்டு, கோவலனுக்கு, அம்மூன்று வாவிகளிலும் மூழ்கி வாழ்க்கையை அறியும் ஆவல் ஏற்படுகிறது. கோவலனை, அவனுடைய கனவின் மூலம் இம்மூன்று வழிகளில் அழைத்துச் செல்கிறாள் நீலி. அறிவருள் வாவியில் (புண்ணிய சரவணம்) மூழ்கும் கோவலனுக்கு, வாவியின் தேவதையான நலமருள் நங்கை, வாவியின் மூன்று படிகளை விவரிக்கிறது. மூன்று படிகளையும் கடந்து சென்றாலே, மெய்மையின் ஊற்றை அறிய முடியும் என்றும், ஆனால் மூன்று படிகளையும் கடந்தவர் எவருமில்லை என்கிறது. தன் அறிதலைப்பற்றி, முதற்படியில் நன்மையையும், இரண்டாவது படியில் தீமையயையும் கடந்து, இவை இரண்டும் இல்லாத, காலம் உறைந்து நிற்கும் மூன்றாவது படியை கடக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து திரும்புகிறான் கோவலன். வானாறு வீழ்ந்தும் நிறையாத சுனையை கனவில் கானும் மாயைக்கு, சித்தார்த்தன் பிறக்கிறான். மனைவி, குழந்தைகள் பிறந்த பின்னரும், சித்தார்த்தனின் கண்களில் துயர் எஞ்சி இருக்கிறது. மனையை, அரசை துறந்து, கதவம் பல திறந்து, புதவம் பல புகுந்து, அறிவின் வழியில் பயனித்த சித்தார்த்தன், சூழந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த வழியின் முடிவில் உள்ளது பெரும் பாழ் என்று அறிகிறான். அறிவின் வழியில் செல்லும் நவீனத்துவம் சென்றடைந்த பெரும் பாழ். பிறப்பறு வாவியில் (பவகாரணம்) மூழ்கி தன் முன்வினையை அறியும் கோவலன், எங்கோ தன்னைப்போலவே ஒருவனை காண்கிறான். கலிங்க மன்னர் குலம் கபிலபுரம், சிங்கபுரம் என இரண்டாக பிரிந்து, உட்பூசலிடுகிறது. கபிலபுரத்து அமைச்சன் மகன் சங்கமன், தன் இல்லாள் நீலியுடன் நகர் நீங்கி, வாழ்வுக்காக சோழ நாட்டு புகாருக்கு செல்லும் வழியில், சிங்கபுரத்தில், மனைவியின் நகைகளை விற்கும்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். தன் வருவினையை அறிவதற்காக மீண்டும் மூழ்கும் கோவலன், எதிர்காலத்தில், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் சன்னதம் வந்து வெறியாடும் பெண்ணின் காலடியில் சிறுகல்லாக தன்னை காண்கிறான். வாவியின் ஓவியப் பாவை வருத்தத்துடன் பார்க்க, நிகழ்வினையை அறியாமலே வாவியிலிருந்து வெளியேறுகிறான். வேண்டியது கிடைக்கும் விருப்பறு வாவியில், எதுவும் வேண்டாமலே எழுந்துவிடுகிறான் கோவலன்.

ilango_adigalகோவலனின் கனவில் வரும் வாவிகள் இளங்கோவின் வாழ்வில் வரும் பகுதிகளாகின்றன. அரசு துறந்து, குணநாட்டில் சாக்கிய நெறியேற்று துறவறம் பூண்ட இளங்கோ, பற்பல நூல்களையும், பல மொழிகளையும் கற்று, மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் அமர்ந்து போதிக்கிறார். மதுரை கூலவாணிகன் சாத்தனின் மூலம், கண்ணகி கதை கேட்டு, அறியாப் பெண்ணை அறிவமர் செல்வியாக ஆக்கிய பெருவல்லமையை வியக்கிறார். வாவிகளில் வரும் ஓவியப்பாவை போல, மேற்குமலைக் குகையில் நிலவொளியில் ஒளிரும் இடச்சிறுகால்விரல் மணி அணிந்த ஓவியம், இளங்கோவை, கண்ணகியை பற்றி அறிய புறப்படத் தூண்டுகிறது. தமிழ் நிலமெங்கும் அலையும் இளங்கோவிற்கு, அறிவருள் வாவியில் வழிகாட்டும் நலமருள் நங்கையைப் போல, மணிமேகலை தன்னறம் உணர்த்துகிறார். அதன் பின் பௌத்தம் வகுத்த அறிவின் பாதையிலிருந்து விலகி, கன்னியாகுமரி அன்னையின் முன், விரிகடலே அன்னையாக சுடர, தன்னறம் உணர்ந்து, கண்ணகியின் கதையை காலத்தில் அழியாத காப்பியமாக இயற்றி, பின்பு சபரணமலையில் ஐய்யனாக நிறைவடைகிறார்.

seermaiமூன்று வாவிகளும் படிமங்களாக ஞானம், தியானம், கற்பனை என இந்து மரபு குறிக்கும் அறிதலின் மூன்று வழிகளை சுட்டுகின்றது. இம்முன்றிலும் பயனித்து வாழ்வில் நிறைவடைந்தவராகிறார் இளங்கோ. வைதீகத்தைவிட அவைதீக மரபுகளை பலபடிகள் தூக்கலாகவே ஆதரிக்கும் ஜெ. தன் நாவல்களில், அறிவின்/ஞானத்தின் எல்லைகளை எப்போதும் வரையறை செய்ய தவறுவதில்லை. தமிழ் நாவல்களில் இந்திய தத்துவங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்திய தத்துவ மரபுகளை தமிழ் நாவல்களில் இணைத்தது, ஜெ.வுடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. [அரவிந்த் எழுதிய சீர்மை நாவலும் இம்மூன்று வழிகளையும் பற்றி பேசுகிறது. பக்தியை முழுமுற்றாக நிராகரிக்கும் கென் ஞானத்திலும், தியானத்திலும் அவன் தேடிய முழுமையை அடைய முடியாதபோது, கேன்சரால் பாதிக்கப்பட்ட த்ரேயாவிற்கு கற்பனையில் (ஓவியக்கலையில்) முழுமை கை கூடுகிறது. அதுவும் மேற்கத்திய தத்துவம் சுட்டும் முழுமுதல் சீர்மை இல்லாமல், கீழை தத்துவம் சுட்டும் சிறிது குறைபாடு உடைய முழுமையில். அவள் அடைந்த முழுமையை சொற்களில் நூலாக்கி, அது ‘நிறுவனப்படுத்தப்படும்போது’ அவன் மனம் கனக்கிறது. காட்சிப்படுத்துதல், தத்துவத்தை புனைவில் பொருத்துதல் என சீர்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது. விரிவாக எழுத வேண்டும்.]

காப்பியத்தின் மையம்:
kannagi_paandianதென்னில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்களாகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயனித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்க்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அனிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகிறது. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களை கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றது. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்லமுடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள்மூலம் கொன்று, பிற குலங்களின்மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்கும்மெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் புகுகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தப்பிவந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லாக்குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறமென்றுணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது.

உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தும் காவியமில்லை கொற்றவை. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறில் ஒரு கதை வருகிறது. விவேகானந்தரின் தாத்தா துர்கா சரணர், திருமணமாகி குழந்தை பெற்ற பின், இளமையிலே துறவறம் பூண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, சரணரின் மனைவி, காசியாத்திரை சென்று, தெய்வங்களை தரிசித்தபடியே செல்லும்போது, ஒருநாள் படிகளில் கால் இடறி மூர்ச்சித்து விழுந்து, ஒரு துறவியால் காக்கப்படுகிறார். மூர்ச்சை தெளிவித்த துறவி, துர்கா சரணர்! “மூர்சித்து விழுந்த மனைவியை காப்பாற்றி, தன் மனைவி என்று தெரிந்து வியப்பில் மூழ்கினார். இருப்பினும் சிறிது நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்திவிட்டு, “இதெல்லாம் மாயை” என்று முனுமுனுத்தபடியே அப்பால் போய்விட்டார். இதற்காக அவர் மனைவி கவலைப்படவில்லை. எதுவுமே நடவாதது போல எழுந்து, கோவிலுக்குள் சென்று, இறைவனை வலம் வரத் தொடங்கினார்” என்று எழுதுகிறார் அ.லெ. நடராஜன். மரபாக சொல்லப்படும் இது போன்ற கதை, இலக்கியமாகும்போது கொற்றவையின் மகதி கதை போல இருக்கும்.

மகதியிடம் கண்ணகி கேட்டாள் “பிறகு உங்கள் கணவனை கண்டீர்களா?”. “ஆம்” என்றாள் மகதி. “அவன் மூதிரவன் ஆகித் துவராடையும் கப்பரையுமாக இவ்வழி ஒரு நாள் வந்தான். வரகரிச் சோற்றை பிச்சையாக ஏற்று இரவில் படுத்தான். அன்றிரவு நான் படுத்த கற்படுக்கையருகே மறுநாள் மென்பூழி மீது அவன் பாதம் வந்து நின்று மீண்ட தடம் தெரிந்தது” என்றாள் மகதி. “அவனிடம் நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றாள் கண்ணகி. “துறப்பதற்கு வீடு விட்டிறங்க வேண்டியதில்லையே” என்றாள் முதுபார்ப்பினி.

madhavi_kovalanசிலம்பில், மாதவி பாடும் கானல்வரி பாடல்களை தவறாக பொருள்கொண்டு, அவள் வேறெவரையோ நினைத்து பாடுகிறாள் என ஐயுற்று, மாதவிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் மீள்கிறான் கோவலன். கொற்றவையிலோ, மாதவியுடன் காமத்தில் திளைத்து, பெண் காமத்தின் ஊற்றுமுகம், குழந்தைக்கான விழைவென என அறிந்து, அதிர்ந்து, மாதவி கருவுற்றதை உணர்ந்துகொண்டபின், அவளிடமிருந்து விலகி, கண்ணகியிடம் மீள்கிறான்.[2] குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்துவிட்டு வரும் கோவலனின் மேல் ஏற்படும் வெறுப்பை தன்னுள் மறைத்து, மரபு வகுத்தபடி பத்தினிகளுக்குரிய அருளும் விழிகளும், சொற்களுமாக அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறாள் கண்ணகி. பின்பு, ஐவகை நிலத்தில் பயனித்து, தமிழ் நிலமெங்கும் பெண்கள் படும் துயரை கண்டும், குலக்கதைகளாக நீலி சொல்லும் கதைகளை (செல்லி, வள்ளி, ஆதிமந்தி, யசோதரை..) கேட்டும் கண்ணகியின் குண இயல்பு மாறுகிறது. கற்பு, நெறி என சொற்களால் கட்டப்பட்டுள்ள சிறையை கண்டு கொள்கிறாள். ஒரு இனமே அடிமைப்பட்டு, அவ்வினத்தின் ஆண்கள் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டும் அவள் கலங்குவதில்லை; “நான் அக்களமர் குலபெண்டிரை எண்ணிச் சற்றே ஆறுதல் கொள்கிறேன். அவர்கள் தங்கள் ஆண்களை நம்பி வாழப்போவதில்லை. ஆகவே இவர்கள் விற்கப்படினும் அவர்கள் இழப்பது ஏதுமில்லை!” என்கிறாள். கற்பு வழுவியர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படும் கன்னியரும், பெண்களும் அக்குலங்களின் தெய்வங்களாகிறார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாரை வானுறையும் தெய்வங்களில் வைக்கும் நம் மரபு, வையத்தில் வாழ்வெடுத்து வாழாது போனவர்களையும் தெய்வங்களாக்குகிறது. குலம்தோறும் ஆற்றியிருக்கும் பெண்களை கண்டு, அவர்கள் துயர் பாடும் தேவந்தியின் பாடலாக ஒலிக்கும்

முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!
ஓரேன்யானும் ஓர்பெற்றி மேலிட்டு
ஆஅல் எனக் கூவுவேன்கொல்!
அலமரல் அசைவிளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!

சங்கப்பாடல் மூலம், பெண்களின் துயர்பாடும் காவியமாகவே விரிகிறது கொற்றவை.

சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதை விளக்க, கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது. [நீலியின் நகைகளை விற்கும்போது, சங்கமனை அரசனிடம் தவறாக காட்டிக்கொடுக்கும் பரதன், இப்பிறவியில் கோவலனாக பிறந்து ஊழ்வினையால் மதுரையில் கொலையாகிறான்]. கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்தை முன் வைக்கவில்லை ஆசிரியர். காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது.

****

உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்கள், தாங்களே உலகின் முதல் குடி என்றும், தங்களிடமிருந்தே பிற கலாச்சாரங்களும், மொழிகளும் தோன்றின என்கின்றன. இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டங்களில் வந்த இனங்கள், பல நூற்றாண்டுகளாக அதிகாரத்திற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் போரிட்டும், கலந்தும் வாழ்கின்றன. போர்களும், இனக்கலப்புகளும், மேல்-கீழ் அடுக்குகளும் தவிர்க்க முடியாதவையும் கூட. அதுபோல மேல்-கீழ் என்பதும் காலத்திற்கேற்ப மாறுபவையும்கூட. பெரும்பாலான தமிழ் மனங்களில் ‘லெமூரியா’, ‘ஆரிய படையெடுப்பு’ போன்றவை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்கிறது. கல்லூரி முடிக்கும்வரை எனக்கும் அது நிறுவப்பட்ட உண்மையே. தமிழகத்தைவிட்டு வெளியே சென்றது முதல் (வேலைக்காக பெங்களூருக்கு), அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொற்றவையில் வரும் ‘நீர்’ பகுதி, கற்பனையிலும், மொழியிலும், தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றிலே சிறந்தது. ஆனால் கருத்தளவில் ‘ஆரிய படையெடுப்பை’ மனநிலையை நீடிக்கச்செய்யக்கூடியது. எனக்கு தனித்தமிழ் தேசியத்தில் உடன்பாடில்லை. ஆனால், தனித்தமிழ் தேசத்திற்கு ஒரு விவிலியம் எழுதினால், கொற்றவையின் “நீர்” பகுதியை அதன் ஆதியாகமமாக வைக்கலாம். [உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில் பல்வேறு இனக் குழுக்களுக்குள் நிகழும் உள்நாட்டுப்போரை கவனித்தாலே, ஆரிய-திராவிடம் இட்டுச் செல்லக் கூடிய முடிவை ஊகிக்கலாம். கண்முன்னே இலங்கை உதாரணமாக உள்ளது]. இருப்பினும், ஒரு புனைவில் என்ன எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய முழுஉரிமை.

****

கொற்றவையும் விஷ்ணுபுரமும் :

சூலமும், சொல்லும், திகிரியும் தாங்கிய மூவர்க்கு ஆயினும்,
காலம் என்று ஒன்று உண்டம்மா

என்ற கம்ப ராமாயண வரிகள் விஷ்ணுபுரத்திற்கானது. இவ்வரிகளுடன் சேர்த்து,

பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு
கைத் தாங்கிய தருமமூர்த்தியும், அங்கையின்
நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?

என்பதும் கொற்றவைக்கான வரிகள்.

vishnupuram சுருக்கப்பட்ட வடிவம் கொற்றவையின் கடைசி பகுதியில் உள்ளது. விஷ்ணுபுர கோயில் போல கொடுங்கோளூர் மாமங்கலை ஆலயம் இருக்கிறது. அக்னிதத்தரின் சொல் விஷ்ணுபுரத்தை ஆள்வது போல, நெடுநாட்கள் கைவிடப்பட்டு கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சங்கரத்திருவடித்தானத்தின் சொல் மாமங்கலை ஆலயத்தை ஆள்வதாக சொல்கிறார் காலசூரி. முகமதியர் படையுடன் இனைந்து கடையர் மக்கள் விஷ்ணுபுரத்தை இடித்ததுபோல, டச்சுப் படையுடன் புலையர்கள் கொடுங்கோளூரை அழிக்கிறார்கள். பெருமூப்பன் சிலை விஷ்ணுவாகவும், ததாகதராகவும் ஆனது போல, குறுமர்களின் கன்னியன்னை மாமங்கலையாகவும், அறிவமர்செல்வியாகவும் ஆகிறாள்.

விஷ்ணுபுரத்தின் முதற்பகுயில் வரும் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றம், பாண்டியன், இரண்டாம் பகுதியில் அஜிதரின் ஞானசபை விவாத வெற்றிக்குப் பின் வரும் நிகழ்வுகள், அஜிதரின் மரணம் என விஷ்ணுபுரத்தில் அமைப்பை சார்ந்த எதுவும் உயர்வாக பேசப்படவில்லை. உயர்வாக சித்தரிக்கப்பட்ட சுடுகாட்டு சித்தன், குறத்தி நீலி போன்றோர் அமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள். ஒப்புநோக்க கொற்றவையில் கண்ணகி, சேரன் செங்குட்டுவன், இளங்கோ, சாத்தன், மணிமேகலை, தேவந்தி, நீலி என நிறைய நேர்நிலை கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுபுர ஞான சபையில் தன் பெருங்காவியத்தை அரங்கேற்றிய பின்னர், சங்கர்ஷணன் மனம் வெறுத்து விஷ்ணுபுரத்தை விட்டு விலகிச் செல்கிறான். தான் இயற்றிய காவியமே பயனற்றது என நினைக்கிறான். கொற்றவையில், இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றி தன் சீடனிடம் தந்து, சேரனின் அவையில் அரங்கேற்றச் சொன்ன பின்னர், சபரண மலையில் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறக்கிறார். விஷ்ணுபுரத்தை ஒப்பிட்டால், கொற்றவையில் “அமைப்பு” ஓரளவிற்கு நேர்நிலையாக சித்தரிப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு விஷ்ணுபுரத்தில் அஜிதர் மரணத்தையும், கொற்றவையில் கண்ணகி மரணத்தையும் ஒப்பிடலாம்.

ஞானத்தின் படிகளில் ஏறி, விஷ்ணுபுரத்தை வென்ற அஜிதர், தன் இறுதி தருணத்தில், ஒரு குவளை நீருக்கில்லாமல், உயிர் துறக்கிறார். அவருடைய அமைப்பினரே அவர் மறைவை, ஒரு மாதம் கழித்து வரும் சித்திரா பௌர்ணமியன்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். ஞானத்தை தேடிவந்த நரோபா பயந்து ஓடுகிறான். வெண்குதிரையின் மீதேறி சொர்க்கம் புகுந்த ஆழ்வார் கதையும் அவ்வாறே. அவர் மறைந்தவுடன், அவரிடத்தை நிரப்ப வேறொரு ஆழ்வார் உருவாக்கப்படுகிறார். ஞானமும், பக்தியும் அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.

கண்ணகி செங்குன்றத்தில் மேழ மாத முழுநிலவு நாளில், பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில் உள்ள கற்பாறையில் கண் மூடியமர்ந்து உயிர் துறக்கிறாள். ஒளிரும் வானில், கார் திரண்டு வெண்ணிற யானை என உருக்கொண்டு மெல்ல அசைந்து வர, அதன்மீது சுடரொளி சிதற நிலவு ஏறியமர்ந்து கொள்கிறது. சேரன், அவன் அமைச்சர்கள், வணிகர்கள் என அனைவரும் சேர்ந்து கண்ணகிக்கு கோயில் கட்டுவதன் மூலம், கண்ணகி நிறுவனப்படுத்தப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்கியம், சமணம் என நான்கு பெருமதங்களும் மங்கலமடந்தையை தங்களவராக கருதுகின்றன. ஆனால், விழாவில் பங்கேற்ற களைப்பில் ஊர் உறங்க, அடுத்த விடியலிலே, கோயில் கருவறை இருளுக்குள் இருந்து கரிய சிலை வெளிவருகிறது. வஞ்சி நகரின் கிழக்கே இருக்கும் புலையர் குடியின் கன்னி சன்னதம் கொண்டு எழுகிறாள். கொற்றவை குறிக்கும் அறம் அமைப்பிற்குள் அடங்காதது என பொருள் கொள்ளலாம்.

kannagi_kovil

சேரன் செங்குட்டுவன் காலத்தில், குறுமர்களை (மலைக் குறவர்கள்) ஆரத் தழுவி நலம் விசாரித்து, தான் மார்பில் அணிந்திருந்த ஆரத்தை அவர்களுக்கு அனிவிக்கிறான். குறுமர்களுக்கு கண்ணகி கோயிலில் முதல் பூசனை நடத்தும் உரிமையிருக்கிறது. பல நூற்றாண்டுகள் சென்றபின், தம்புரான் காலத்தில் குறுமர்கள் தீண்டப்படுவதில்லை. கொடுங்கோளூர் கோயிலில் குறுமர்கள் பூசை முடித்த பின்னர், தீட்டுக் கழிப்பட்ட பின்பே அடிகளும், மறையவர்களும் மீண்டும் கோயிலுக்குள் உள்ளே வருகிறார்கள்

என்கிறது கொற்றவை. விஷ்ணுபுரமும், கொற்றவையும் தலித்துகள் குறித்து கிட்டத்தட்ட ஒரே பார்வையை முன் வைக்கின்றன. இந்து மரபின் மைய படிமங்கள் தலித்துகளுடையது. ‘பிறர்’ அதை அபகரித்துக்கொண்டனர். ஆதியில் இந்து சமூகம் நெகிழ்வுடன் இருந்து, பின்பு நிலவுடைமை காரணிகளால் இறுகிவிட்டது எனும் கருத்து ஜெயமோகனின் இந்துத்துவா திரிபு; தலித்துகள் இந்துக்களல்ல, அவர்கள் எப்பொழுமே ஒடுக்கப்பட்டிருந்தனர், ஜெயமோகன் தன் நாவல்களில் இந்துத்துவத்தை வலிய புகுத்துகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காகவே, முனைவர் வி.ஆர். சந்திரன் எழுதிய “கொடுங்கோளூர் கண்ணகி” ஆய்வுக்கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நூல், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலின் சடங்குகளை விரிவாக விவரிக்கிறது. சடங்குகளில் புலையர்களுக்குரிய முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும் இதுபோன்ற பல நூல்கள் வரவேண்டும். நம் வரலாறை அறிய அவை பெருமளவில் உதவும்.

****

காந்தி போல ஒருவருக்கு, விஷ்ணுபுர சமூகத்தில் இடமிருந்திருக்குமா என்று நினைக்கும்போது, கொற்றவையில் அவருக்கான இடம் தாராளமாக இருக்கிறது. இறுகிய அமைப்பை எதிர்த்து, ஒரு விழுமியத்தை முன்வைத்து போராடுபவர், பின்பு வென்று, அவ்வமைப்பின் முகமாகிறார். காலத்தில் அப்புதிய அமைப்பும், முன்புபோலவே இறுகும்தோறும், புதிதாக போராடுபவர்களுக்கு, அவர் முன்வைத்த விழுமியமே தூண்டுகோலாக இருக்கிறது. [உதா: காலனிய அரசு — காந்தி — சுதந்திர இந்தியா — அண்ணா ஹசாரே] போல [பாண்டிய அரசு — கண்ணகி — கண்ணகிக்கு கோயில் கட்டும் சேர நாடு — சேர நாட்டு புலையர்குடியில் சன்னதம் கொண்டெழும் கன்னி]. செவ்வியல் மறுஆக்கங்களில், கம்பராமாயணம் எப்படி ஒரு உச்சமோ [3], அதுபோல நவீன மறுஆக்கங்களில் கொற்றவை ஒரு உச்சம். எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய க்ளாஸிக் கொற்றவை.

******

பின்குறிப்பு :
[1]. ஜெ., கொற்றவை எழுதுவதற்கு ‘பாலையில் கைவிடப்பட்ட கொற்றவை ஆலயம்’ என்ற படிமம் தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மார்க்குவஸ் தான் புனைவு எழுதுவதற்கும் படிமங்கள் (visual imagery) தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.

[2] சிலம்பிலும் கோவலன் அத்திரியில் பரிசுப்பொருட்களுடன் வந்து தன் குலதெய்வத்தின் பெயரை சூட்டியதாக மணிமேகலைதான் சொல்கிறாரே தவிர, கோவலனும் மாதவியும் சேர்ந்திருக்கும் பாடல்களில் மணிமேகலை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. [கடல்கோளால் அழிந்த காகந்தி நகரின் கதை எதை குறிக்கிறது? காகந்தியும், மதுரையும் இருவேறு முகங்களா? அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது போல, பெண்ணின் தனிமையும் துயரமும் நகரங்களை அழிக்கும் வல்லமை பெற்றதல்லவா? நண்பர்கள் யாராவது தெளிவுபடுத்தலாம்.]

[3]. தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான செவ்வியல் மறுஆக்கம் கம்பராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் மையக் கதை ஒட்டி எழுதப்பட்டாலும், கம்பர், ராமாயண கதாப்பாத்திரங்களை உருமாற்றி, நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றி தன்னுடையை ராமாயணத்தை எழுதியிருக்கிறார். பேரிலக்கியங்களை மறுஆக்கம் செய்து பேரிலக்கியங்களை படைக்கும் மரபு தமிழில் இருந்திருக்கிறது. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்திலும் ஜடாயு, தாரை கதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்க்கலாம்.

ஜடாயு:jatayu_rama
[வால்மீகி] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் ராமன். ஜடாயு ராமனிடம் சரணடைந்து, ராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் ராமன்.

[கம்பன்] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துனையாக, ராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்கப்போகிறேன் என்கிறான் ராமன். ஜடாயு, ராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ ராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழிசொல்லவேண்டாம் என்று ராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். ராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.

வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

தாரை:tara_sugriva_lakshmana
மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று ராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க லட்சுமனனை அனுப்புகிறான் ராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமனனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறார் அனுமன்.

[வால்மீகி] குறைஆடைகள் அனிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, லட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் லட்சுமணன் வெட்கி கோபம் தனிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள்.

[கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், லட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், லட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியை தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டும் லட்சுமணண் நாணுகிறான்.

….
தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50
…..
மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51
……..
‘ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.’ 58
……
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்;…59

வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விசு பதிவுகள்

கலிஃபோர்னியா நாஞ்சில் நாடன் நிகழ்ச்சிகள்

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் .

இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்:

நாஞ்சில்நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு: (நாஞ்சில்நாடன் கம்ப ராமாயணத்தை கரைத்து குடித்தவர். அவரது உரைகளை கேட்டவர்கள் மறக்க முடியாத உரைகள் என்று புகழ்கிறார்கள். தவறவிடாதீர்கள்!)

ஜூன் 20 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – இடம்: 38884 Stillwater Cmn, Fremont, CA
ஜூன் 21 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – இடம்: 4743 Mendocino Ter, Fremont, CA 94555

கம்ப ராமாயண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் strajan123@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜூன் 30 – பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி – எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன் மற்றும் பி.ஏ. கிருஷ்ணன் படைப்புகள் குறித்த உரை, எழுத்தாளர்களின் ஏற்புரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம், ஸ்டீவன்ஸன் புலிவார்ட், பசியோ பாத்ரே சந்திப்பு, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
நேரம்: 2 மணி முதல் 5 மணி வரை

ஜூலை 1 ஞாயிறு காலை – எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி – சாக்ரமெண்டோ நகரம் – சரியான நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜூலை 5 – நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் – இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் – வியாழன் மாலை 7 மணி முதல் – 10 மணி வரை
நேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்களுக்கு ராம்: 310-420-5465 losangelesram@gmail.com மற்றும் ராஜேஷ் 626-848-2102 rajeshmadras@gmail.com ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இப்பகுதி வாழ் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: ராஜன், 510-825-2971, strajan123@gmail.com

பி.கே. சிவகுமாரின் டாப் டென் சிபாரிசுகள்

(மீள்பதிவு)

எனக்கு பி.கே சிவகுமார் பற்றி அதிகம் தெரியாது. லிஸ்ட் பார்த்தேன், அவ்வளவுதான். லிஸ்டில் பாதி என் சொந்த அனுபவத்தில் நானும் பரிந்துரைப்பவை. (காந்தியின் சத்தியசோதனை, நேருவின் Discovery of India, பாரதியாரின் கவிதைகள், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயமோகனின் இலக்கிய முன்னோடிகள் அறிமுகம்) திருவாசகம், கம்ப ராமாயணம் போன்றவற்றின் கற்பூர வாசனை எனக்கு எட்டாவிட்டாலும் பலரும் பரிந்துரைப்பவை. புதிய ஏற்பாடும் அப்படித்தான். Selfish Gene புத்தகம் பக்ஸ் உட்பட பலரது லிஸ்டில் இருக்கிறது. கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பற்றி மட்டுமே நான் கேள்விப்பட்டதில்லை.

பி.கே. சிவகுமாரின் டாப் டென்:

  1. பைபிள் புதிய ஏற்பாடு
  2. கம்பராமாயணம் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் உரையுடன்)
  3. மஹாகவி பாரதியார் கவிதைகள்: பாரதியைப் பற்றி என் எண்ணங்கள் இங்கே.
  4. மஹாத்மா காந்தியின் சத்தியசோதனை
  5. ஜவஹர்லால் நேருவின் The Discovery of India
  6. திருவாசகம்
  7. ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  8. ஜெயமோகன் எழுதிய தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு(கள்)
  9. Francis Wheen எழுதிய “Karl Marx – A Life”
  10. Richard Dawkins எழுதிய “The Selfish Gene

 
தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்
 
தொடர்புடைய சுட்டிகள்:

  • பி.கே. சிவகுமாரின் தளம் (Last update in May 2011)
  • பாரதியார் – ஒரு மதிப்பீடு
  • ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
  • தொடரும் அசோகமித்ரன் சிபாரிசுகள்

    அசோகமித்ரன் சிபாரிசுகள் பதிவில் அவர் நவீனப் புனைவுகளிலிருந்து எதையுமே தேர்ந்தெடுக்காதது வியப்படைய வைத்ததைப் பற்றி எழுதி இருந்தேன். நண்பர் கோபி அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, டாக்டர் பாண்டுரங்கன் மூவரும் நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படைப்புகளைப் பற்றி ஒரு சுட்டி கொடுத்திருந்தார். இதில் பழந்தமிழ் இலக்கியத்தோடு நின்றுவிடாமல் பல நவீன உரைநடைப் படைப்புகளும் குறிப்பிடப்படுகின்றன.

    அவரது முழு பதிவையும் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். இருந்தாலும் வசதிக்காக லிஸ்டை கீழே கொடுத்திருக்கிறேன். லிஸ்டையும் என் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி பதித்திருக்கிறேன். (வேறு ஒன்றுமில்லை, பழந்தமிழ் இலக்கியம், கவிதைகளை ஒரு பகுதியாகவும், நவீன உரைநடை நாவல்களை இன்னொரு பகுதியாகவும் போட்டிருக்கிறேன், எனக்குத் தெரிந்தவரை காலவரிசைப்படுத்தி இருக்கிறேன். தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், திருத்திவிடலாம்.)

    பழந்தமிழ் இலக்கியம்+கவிதைகள்

    1. குறுந்தொகை
    2. கலித்தொகை
    3. புறநானூறு
    4. முல்லைப்பாட்டு – நப்பூதனார்
    5. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
    6. திருக்குறள்
    7. திருவாய்மொழி
    8. திருவாசகம்
    9. திருமந்திரம் – திருமூலர்
    10. சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
    11. கம்ப ராமாயணம்
    12. பெரிய புராணம் – சேக்கிழார்
    13. சிவவாக்கியர்
    14. நந்தன் சரித்திர கீர்த்தனை – கோபால கிருஷ்ண பாரதி
    15. திருவருட்பா – ராமலிங்க சுவாமிகள்
    16. குயில் பாட்டு – பாரதியார்
    17. குடும்ப விளக்கு – பாரதிதாசன்

    நாவல்+சிறுகதைகள்

    1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
    2. பத்மாவதி சரித்திரம் – ஆ. மாதவையா
    3. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
    4. தியாகபூமிகல்கி
    5. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
    6. பொய்த்தேவுக.நா.சு.
    7. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா
    8. மோகமுள் – தி. ஜானகிராமன்
    9. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
    10. சாயாவனம் – சா. கந்தசாமி
    11. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
    12. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
    13. சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்
    14. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி
    15. பதினெட்டாவது அட்சக்கோடுஅசோகமித்ரன்
    16. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
    17. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரான்

    இந்த சிபாரிசுகளில் குயில் பாட்டு எனக்குப் பிடித்த பாரதியார் கவிதைகளில் ஒன்று. (ஆனால் பதின்ம வயதில் படித்தது, மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.) மிச்ச கவிதை இலக்கியத்தைப் பற்றி பேசும் தகுதி எனக்கில்லை.

    நவீன உரைநடை சிபாரிசுகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையே – தியாகபூமி, நாகம்மாள், குருதிப்புனல் தவிர. இவை மூன்றும் இந்த லிஸ்டில் இருக்கக் கூடாது என்பது என் கருத்து. என் டாப் டன்னுக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உண்டு, ஆனால் அவை ரசனை வேறுபாடுகள்.

    தொடர்புடைய சுட்டிகள்:

  • அசோகமித்ரன் சிபாரிசுகள் Part 1
  • கோபியின் பதிவு
  • கோபி அப்பவே பதிக்கச் சொன்னார், எனக்குத்தான் தாமதம் ஆகிவிட்டது. கோபி மன்னிக்க வேண்டும்.

    கம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு

    ஜடாயுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். சிறந்த வாசகர், தமிழ் ஹிந்து தளத்தில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். (அவருடைய அரசியல் கண்ணோட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன்.)

    ஊட்டியில் ஜெயமோகன் முன்னின்று நடத்திய காவிய முகாமில் கம்பன் பாடல்கள் பற்றி ஜடாயு பெரிய உரை நிகழ்த்தி இருக்கிறார். அவர் சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்தபோது இதுதான் சான்ஸ் என்று இங்கேயும் அவரை ஒரு நாள் கம்பன் கவிதைகள் பற்றி பேசுங்களேன் என்று சிலிகான் ஷெல்ஃப் குழுமம் சார்பில் கேட்டோம். அவரும் பிகு பண்ணிக் கொள்ளாமல் சம்மதித்தார். சுந்தர காண்டத்திலிருந்து ஒரு பதினைந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விளக்கினார்.

    என்னதான் எனக்கு கவிதை அலர்ஜி என்றாலும் கவித்துவம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது என்ன என்று என்னால் வரையறுக்க முடிவதில்லை. நல்ல கவிதை என்றால் என்ன என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. சில விஷயங்களை கவிதையாக எழுதினால்தான் ரசிக்க முடிகிறது. அது என்ன விஷயம், எப்போது கவிதை தேவைப்படுகிறது, எப்போது கவிதை பிடிக்கிறது, எப்போது பிடிப்பதில்லை என்றெல்லாம் என்னால் வரையறுக்க முடிவதில்லை.

    குகனொடும் ஐவரானோம் என்பதுதான் எனக்கு உயர்ந்த மானிட தரிசனம். அது கவிதையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன, உரைநடையாக இருந்தால் என்ன குடி முழுகிவிடும் என்று எனக்குப் புரிவதில்லை. அதனால்தானோ என்னவோ, ஒரு கவிதை எனக்குப் பிடிப்பது அபூர்வம். ஆயிரம் கவிதை படித்தால் ஒன்று பிடிக்கலாம். மிச்ச 999 கவிதைகளை ஏன் நிராகரிக்கிறேன் என்று articulate செய்யக் கூடத் தெரியவில்லை. ஒரு கவிதைக்காக ஆயிரம் கவிதை படிப்பது inefficient process ஆகத் தெரிகிறது. எல்லாரும் கம்பன் கம்பன் என்கிறார்களே, ஏதாவது புரிந்துவிடுமோ என்று கொஞ்சம் நப்பாசையோடு இந்த நிகழ்ச்சியை அணுகினேன்.

    மேலும் எனக்கு கொஞ்சம் குதர்க்க புத்தி உண்டு. அடுத்தவர்கள், அதுவும் நண்பர்கள், ரசனை, பக்தி என்று பேசும்போது நான் கிண்டலாக ஏதாவது கமென்ட் அடித்துவிடுவேனோ என்று கொஞ்சம் தயக்கம் இருந்தது.

    ஜடாயு

    கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
    மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே!
    திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
    அறம் புகாது, இந்த அணி மதில் கிடக்கை நின்று அகத்தின்!

    என்று ஆரம்பித்தார். நயம் உள்ள கவிதை. சுழல் காற்றும் வெயிலும் மரணமும் புக முடியாத கோட்டைக்குள் அறம் எப்படிப் புகும் என்று ஹனுமான் நினைப்பதாக எழுதுவதில் கவித்துவம் இருப்பது எனக்கே தெரிகிறது. கதிரவன் ஒளி புகா என்பதை கோட்டையின் பெருமையாக சொல்வதைப் பார்த்ததும் என் குதர்க்க புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. இதை வெய்யிலை உணர்ந்த ஒருவன்தான் பெருமையாகச் சொல்ல முடியும். காஷ்மீரி பண்டிட்டோ, ஸ்வீடன் நாட்டுக்காரனோ சொல்ல முடியாது. 🙂

    எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையிலும் இதே ஐடியா இருக்கிறது. இன்று போய் நாளை வா என்று ராமன் சொன்னதும் ராவணன்

    வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
    நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
    தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
    வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்

    இன்னொரு கவிதை. கல்மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா நல்மருந்து (அரக்கியர் நடுவில் சீதையை ஒரு துளி தண்ணீரைக் கூட காணாத பாறையின் நடுவில் முளைத்திருக்கும் நல்ல மூலிகைச் செடிக்கு ஒப்பிடுகிறார்) என்ற உவமை அழகானது. ஆனால் வேறுள அங்கமும் மெலிந்தாள் என்பதில் கவித்துவம் கீழே போய்விடுகிறது. ஏதோ filler மாதிரி இருக்கிறது.

    வன்மருங்குல் வாழ் அரக்கியர் நெருக்க அங்கிருந்தாள்
    கல்மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
    நல்மருந்து போல் நலன் அர உணங்கிய நங்கை
    மென் மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்

    பல கவிதைகள் சொல் நயத்துக்காக, சந்தத்துக்காக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று நினைக்கிறேன்.

    தோள் ஆற்றல் என் ஆம்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
    வாள் ஆற்றல் கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
    தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என்
    ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே!

    வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தில்
    தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
    வீங்கினள்; மெலிந்தனள்; குளிர்ந்தனள் ; வெதுப்போடு
    ஏங்கினள்; உயிர்த்தனள்; இது இன்னது எனல் ஆமே!

    இந்த மாதிரி பாடல்களை சிவாஜி கணேசன் மாதிரி யாராவது ஒருவர் சிம்மக் குரலில் படித்தால் கேட்க நன்றாக இருக்கும்.

    ஜடாயுவின் உரையில் நான் மிகவும் ரசித்த இடம் அந்த வாங்கினள் என்று ஆரம்பிக்கும் கவிதையையும்

    ஒரு கணத்திரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
    திருமுலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ நின்பால்
    விரகம் என்பதனின் வந்த வெங்கொழுந்தீயில்
    உருகியது; உடனே ஆறி வளைத்தது, குளிர்ப்பு உள் ஊற

    என்ற கவிதையையும் லிங்க் செய்த இடம்தான்.

    மத்துறு தயிர் என்பது இன்னொரு அழகான உவமை.

    மத்துறு தயிர் என வந்து சென்று இடை
    தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளும்
    பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை
    எத்தனை உலா? அவை எண்ணும் ஈட்டவோ?

    பொதுவாக பாட்டுகள் ஜடாயு விளக்குவதற்கு முன்பே ஒரு மாதிரி குன்சாகப் புரிந்துவிட்டது. எப்பவோ எழுதின பாட்டு கோனார் நோட்ஸ் இல்லாமல் இப்போதும் புரிவதில் இப்படி நீண்ட பாரம்பரியம் உள்ள தமிழ் என் தாய்மொழி என்று ஒரு சின்ன பெருமிதம், சந்தோஷம் உண்டானது.

    சின்ன சாம்பிளை வைத்துக் கொண்டு கம்பன் பாடல்களைப் பற்றி தீர்ப்பு எழுதுவது முட்டாள்தனமே. ஆனால் இந்த உரையை வைத்து மட்டும் பார்த்தால் கம்பன் கவிதையை ரசிப்பது என்பது கொஞ்சம் elaborate விதிகள் உள்ள ஒரு விளையாட்டு போல இருக்கிறது. நல்ல உவமை வந்தால் உயர்ந்த கவிதை ஆகிவிடுகிறது, மேற்கோள் காட்டப்படுகிறது. காற்றும் ஒளியும் மரணமும் புகாத கோட்டையில் அறம் எப்படிப் புகும் என்று உயர்வு நவிற்சி அணியில் வியப்பது உயர்ந்த கவிதை ஆகிவிடுகிறது. சொல் நயம் இருந்தால் மேடைப் பேச்சில் உயர்த்திப் பேச முடிகிறது. உதாரணமாக:

    பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
    செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
    அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

    இதுதான் கவிதையா? சொல் நயமோ அல்லது பொருள் நயமோ இருந்தால் அது உயர்ந்த கவிதையா? இதில் எனக்கு மீண்டும் மீண்டும் யோசிக்க என்ன இருக்கிறது? சொல் நயம், சந்தம் மட்டுமே உள்ளவற்றை மொழிபெயர்க்க முடியாது. தமிழனுக்கு மட்டும்தான் அது கவிதையாக இருக்க முடியும்.

    பி.ஜி. வுட்ஹவுஸ் I was not disgruntled, but I was not exactly gruntled either என்று எழுதுவார். அருமையான வார்த்தை விளையாட்டு. அதை நான் உயர்ந்த எழுத்தாக நினைத்த காலம் உண்டு. இன்று தொந்தி சரிந்து மயிரே உதிர்ந்த பின்னும் அதை நினைத்தால் புன்னகைக்கிறேன். ஆனால் அதை பெரிய இலக்கியமாகக் கருதுவதில்லை.

    மனித வாழ்க்கையின் தரிசனம் (Telephone Conversation கவிதையில் How Dark? என்று கேட்கும் இடம்), வாழ்க்கையின் அனுபவத்தை நாலு வரியில் காட்டுவது (குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்) இப்படி ஏதாவது இருந்தால்தான் எனக்கு அது உயர்ந்த கவிதை என்று தோன்றுகிறது.

    ஜடாயுவின் உரையில் எனக்குக் கிடைத்த லாபம் இதுதான். கவிதையைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன், நல்ல கவிதையில் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கு இப்போதுதான் ஓரளவு புரிய ஆரம்பித்திருக்கிறது.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜி ஸ்ரீனிவாசன் எழுதுகிறார்:

    சென்ற வெள்ளிக்கிழமை இரவு, ஆர்வி வீட்டில் ஜடாயு கம்ப ராமாயணத்திலிருந்து சில பாடல்களை வழங்கினார். இருபது பேர் வந்திருந்தனர். ஜடாயு எடுத்துக்கொண்டது சுந்தர காண்டத்திலிருந்து சில பாடல்கள். அருமையாக நடத்திச் சென்றார். ஒவ்வொரு பாடலையும் உரக்க வாசித்து, பொருள் விளக்கி, அதன் நுணுக்கங்களை சுட்டிக்காட்டி, விவாதித்து, அதை ஏன் தேர்ந்தெடுத்தேனென்றும் கூறினார். சில பாடல்களின் மூலமே கம்ப ராமாயணத்தின் பல சிறப்புகளையும் தொட்டுக் காட்டிட முடிந்தது. ஜடாயு மிகவும் confident ஆக, அதே நேரம் எல்லாருக்கும் புரியும் படியாகவும் பேசினார். கம்ப ராமாயணத்தைப் பற்றிய பொதுவான கருத்துக்களும், காளிதாசனின் கவிதைகளுடன் (ரகுவம்சம்) ஒப்பீடும் நன்றாக இருந்தன. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    ஜடாயுவுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பேசிய அத்தனை பாடலையும் இங்கே போடவில்லை. நீங்கள் கொடுத்த காகிதம் எல்லாம் எங்கே போயிற்றோ தெரியாது. முடிந்தால் அவற்றை ஈமெயிலில் அனுப்பினால் இங்கே ஒரு பிற்சேர்க்கையாகப் பதித்துவிடுகிறேன்.
    ஜடாயுவின் உதவியால் பாடல்களை ஒரு அனுபந்தமாகப் பதித்திருக்கிறேன்.

    அனுபந்தம் 1 – ஜடாயு தேர்ந்தெடுத்த எல்லா கவிதைகளும்

    கம்பராமாயணம்: சுந்தர காண்டம் – சில பாடல்கள்

    இலங்கை மாநகர மதிளைக் கண்டு அனுமன் வியத்தல்
    கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா; மறலி
    மறம் புகாது; இனி, வானவர் புகார் என்கை வம்பே;
    திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
    அறம் புகாது, இந்த அணி மதிள் கிடக்கை நின்று அகத்தின். (1)

    இராவணன் அரண்மனையில் உறங்கும் இயக்க மகளிர்
    வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
    தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
    நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்
    தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். (2)

    உறங்கும் இராவணைக் கண்டு அனுமன் எண்ணம்
    தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
    வாள் ஆற்றல் கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
    தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்
    ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே. (3)
    (ஊர்தேடு படலம்)

    அசோகவனத்தில் சீதையின் நிலை
    வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
    கல் மருங்கு, எழுந்து என்றும் ஓர் துளிவரக் காணா
    நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை
    மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். (4)

    சீதையின் தூய்மையை அனுமன் வியத்தல்
    பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மை போல்
    நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
    மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
    காண நோற்றிலன், அவன் கமலக் கண்களால்! (6)

    இராவணன் சீதையை இரத்தல்
    இன்று இறந்தன; நாளை இறந்தன;
    என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
    கொன்று இறந்தபின் கூடுதியோ – குழை
    சென்று, இரங்கி மறம் தரு செங்கணாய்! (7)
    (காட்சிப் படலம்)

    கணையாழியைக் கண்ட சீதை நிலை
    வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
    தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந்தோள்
    வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
    ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? (8)

    இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
    அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
    விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும்
    மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! (9)
    (உருக்காட்டு படலம்)

    அனுமனிடம் சீதை கூறியது
    அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
    எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
    சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
    வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். (10)

    ஆரம் தாழ் திருமாற்பற்கு அமைந்ததோர்
    தாரம் தான் அலளேனும், தயா எனும்
    ஈரம் தான் அகத்து இல்லை என்றாலும், தன்
    வீரம் காத்தலை வேண்டென்று வேண்டுவாய். (11)

    வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
    இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்
    சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
    தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய். (12)

    அனுமன் சீதையைத் தேற்றுதல்
    மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
    தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
    பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
    எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? (13)
    (சூடாமணிப் படலம்)

    இராவணன் அரசவையில் வீற்றிருக்கும் காட்சி
    நரம்பு கண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில்
    நிரம்பு சில்லரிப் பாணியும், குறடும் நின்று இசைப்ப,
    அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல்
    வரம்பு இல் இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க.. (14)
    (பிணி வீட்டு படலம்)

    சீதையைக் கண்டதை அனுமன் இராமனிடம் கூறுதல்
    ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
    திருமுலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ நின்பால்
    விரகம் என்பதனின் வந்த வெங் கொழுந் தீயில் வெந்து
    உருகியது; உடனே ஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற. (15)
    (திருவடி தொழுத படலம்)

    அனுபந்தம் 2 – மேற்கோள் காட்டப்பட்ட எனக்குப் பிடித்த கவிதைகள்

    A Telephone Conversation by Wole Soyinka

    The price seemed reasonable, location
    Indifferent. The landlady swore she lived
    Off premises. Nothing remained
    But self-confession. “Madame,” I warned,
    “I hate a wasted journey—I am African.”
    Silence. Silenced transmission of
    Pressurized good breeding. Voice, when it came,
    Lipstick coated, long gold-rolled
    Cigarette-holder pipped. Caught I was, foully.
    “HOW DARK?”… I had not misheard… “ARE YOU LIGHT
    OR VERY DARK?” Button B. Button A. Stench
    Of rancid breath of public hide-and-speak.
    Red booth. Red pillar box. Red double-tiered
    Omnibus squelching tar. It was real! Shamed
    By ill-mannered silence, surrender
    Pushed dumbfoundment to beg simplification.
    Considerate she was, varying the emphasis —
    “ARE YOU DARK? OR VERY LIGHT?” Revelation came.
    “You mean — like plain or milk chocolate?”
    Her assent was clinical, crushing in its light
    Impersonality. Rapidly, wave-length adjusted,
    I chose. “West African Sepia” — and as afterthought,
    “Down in my passport.” Silence for spectroscopic
    Flight of fancy, till truthfulness clanged her accent
    Hard on the mouthpiece. “WHAT’S THAT?” conceding
    “DON’T KNOW WHAT THAT IS.” “Like brunette.”
    “THAT’S DARK, ISN’T IT?” “Not altogether.
    Facially, I am brunette, but madam, you should see
    The rest of me. Palm of my hand, soles of my feet
    Are a peroxide blonde. Friction, caused —
    Foolishly madam — by sitting down, has turned
    My bottom raven black — One moment madam!” — sensing
    Her receiver rearing on the thunderclap
    About my ears — “Madam,” I pleaded, “wouldn’t you rather
    See for yourself?”

    படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
    குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
    இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
          – பாண்டியன் அறிவுடை நம்பி

    தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    எனக்குப் பிடித்த சில கவிதைகள்
    ஜடாயு கட்டுரைகள்

    அசோகமித்ரன் சிபாரிசுகள்

    விகடனில் அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (ஏப்ரல் 2, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து). நன்றி, விகடன்!

    அசோகமித்திரன் தேர்ந்தெடுத்திருக்கும் படைப்புகளில் ஒன்று கூட என் டாப் டென் லிஸ்டில் வராது. கவிதை, பழந்தமிழ் இலக்கியம் எல்லாம் எனக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திலிருந்து அவர் எதையுமே தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. புதுமைப்பித்தன் இல்லாமல் ஒரு லிஸ்டா?

    1. திருக்குறள் (கழக வெளியீடு) ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்ச தூரம்தான்.
    2. சிலப்பதிகாரம் (உ.வே.சா. நூலக வெளியீடு) இதுவும் தூரம்தான்.
    3. கம்பராமாயணம் (சென்னை கம்பன் கழக வெளியீடு) இதுவும் தூரம்தான்.
    4. சத்திய சோதனை – காந்தி படிக்கப்பட வேண்டிய புத்தகம்.
    5. கண்டுணர்ந்த இந்தியா – நேரு அருமையான புத்தகம்
    6. என் சரித்திரம் – உ.வே. சாமிநாதய்யர் நல்ல புத்தகம், ஆனால் டாப் டென்னில் எல்லாம் இடம் பிடிக்காது.
    7. என் கதை – கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை படித்ததில்லை
    8. பாரதியார் கட்டுரைகள் நல்ல புத்தகம்.
    9. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம் படிக்க ஆசை, கிடைக்க மாட்டேன் என்கிறது.
    10. தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா வெளியீடு) இது படிப்பதற்கில்லை

    தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், புத்தக சிபாரிசுகள்

    பிடித்த கவிதைகள்

    சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் எனக்கு கவிதை அலர்ஜி என்று சொல்லிக் அலட்டிக் கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. அதற்காக எந்த கவிதையுமே பிடிக்காது என்றில்லை. நினைவில் இருக்கும் சில நல்ல கவிதைகள் இங்கே.

    யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    நீயும் யானும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர்போல
    அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
          – செம்புலப் பெயல்நீரார் (அழகான உவமைக்காக)

    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
    முதைச்சுவர் கழித்த முற்றா இளம்புல்
    மூத்த தைவந் தாங்கு
    விருந்தே காமம் பெருந்தோளாயே
          – யார் எழுதியது? (அற்புதமான படிமம்)

    அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
    எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
    இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
    வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
    குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே
          – அங்கவை+சங்கவை? யாம் எந்தையும் இலமே என்ற கடைசி வார்த்தைகள் இந்த கவிதையை எங்கோ கொண்டு போகிறது.

    படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
    குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
    இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
          – பாண்டியன் அறிவுடை நம்பி (உண்மை, முற்றிலும் உண்மை.)

    இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
    செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
    தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
    தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
    மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
    உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
    நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
    கரையவர் மருள, திரையகம் பிதிர,
    நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
    குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
    அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ–
    தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
    இரும் இடை மிடைந்த சில் சொற்
    பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?
          – யார் எழுதியது? (அடுத்த வருஷம் 25 ஆண்டு reunion என்று பேசும்போது இந்த கவிதைதான் நினைவு வருகிறது)

    சுடர்த்தொடீ கேளாய்! தெருவில் நாம் ஆடும்
    மணல் சிற்றில் காலில் சிதையா, அடைச்சிய
    கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
    நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
    அன்னையும் யானும் இருந்தேமா..’இல்லிரே!
    உண்ணுநீர் வேட்டேன்’ எனவந்தாற்கு, அன்னை,
    அடர்பொற் சிரகத்தால் வாக்கி, ’சுடரிழாய்
    உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் என யானும்
    தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
    வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
    ’அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா,
    அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
    ’உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
    தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
    கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
    செய்தான் அக் கள்வன் மகன்.
          – யார் எழுதியது? (காதலில்லாத வாலிபமா என்று தோன்றவைக்கும் அருமையான கவிதை)

    யானை முறித்த கொம்பு என்று வரும் இன்னொரு கவிதையும் அற்புதம். வார்த்தைகள்தான் நினைவு வரவில்லை.

    வையம் தகளியா, வார் கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
    சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
    இடர் – ஆழி நீங்குகவே

    அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
    இன்பு உருகு சிந்தை இடு திரியா – நான் உருகி
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்

    திருக் கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
    அருக்கன் அணி நிறமும் கண்டேன்; – செருக் கிளரும்
    பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்
    என் ஆழி வண்ணன்பால் இன்று
          – முதல் மூன்று ஆழ்வார்கள் (வையம் தகளியா என்பது மிகவும் உன்னதமான படிமம், கடற்கரையில் சூரியோதயம், அஸ்தமனம் காணும்போதெல்லாம் நினைவு வரும் கவிதை)

    கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமமோ
    மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
          – ஆண்டாள் (“சுவை”யான ஆங்கிள்!)

    பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
    செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
    அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
    – கம்ப ராமாயணம் (வார்த்தை நயத்துக்காக)

    வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
    நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
    தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
    வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடிலங்கை புக்கான்
          – கம்ப ராமாயணம் (வீரத்தையும் களத்தில் விட்டுவிட்டு வந்தான் என்று சொல்வது இந்த கவிதையை உச்சத்துக்கு கொண்டு போகிறது)

    வான் நகும் மண் நகும் என்று ஆரம்பிக்கும் இன்னொரு கம்ப ராமாயணக் கவிதை (யார் தன்னைப் பார்த்து சிரித்தாலும் கவலை இல்லை ஜானகி சிரிப்பாளே என்றுதான் ராவணனுக்கு கவலையாம். வார்த்தைகள் நினைவிருப்பவர் அனுப்புங்கள்)

    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண….
          – அருணகிரிநாதர் (சந்தத்துக்காகவே – அதுவும் நடுவில் தொக்குத்தொகு தொகு தொகு என்று வரும் இடம் அபாரம்!)

    தடித்த ஓர் மகனை தந்தையீண்டு அடித்தால, தாய் உடன் அணைப்பாள். தாய் அடித்தால்
    பிடித்து ஒரு தந்தை அணைப்பான், இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
    பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால், என்னை
    அடித்தது போதும் அணைத்திட வேண்டும். அம்மை அப்பா இனி ஆற்றேன்
    – திரு அருட்பா

    சூதர் மனைகளிலே அண்ணே
    தொண்டு மகளிருண்டு
    சூதிற் பணயமென்றே அங்கோர்
    தொண்டச்சி போனதில்லை

    ஏது கருதி வைத்தாய் அண்ணே
    யாரைப் பணயம் வைத்தாய்
    மாதர் குல மகளை அன்பே
    வாய்ந்த வடிவழகை
          – பாரதி, பாஞ்சாலி சபதம், பீமன் தருமன் கையை எரிக்க வேண்டும் என்று சொல்லும் பாடல்

          A Telephone Conversation
    The price seemed reasonable, location
    Indifferent. The landlady swore she lived
    Off premises. Nothing remained
    But self-confession. “Madame,” I warned,
    “I hate a wasted journey—I am African.”
    Silence. Silenced transmission of
    Pressurized good breeding. Voice, when it came,
    Lipstick coated, long gold-rolled
    Cigarette-holder pipped. Caught I was, foully.
    “HOW DARK?”… I had not misheard… “ARE YOU LIGHT
    OR VERY DARK?” Button B. Button A. Stench
    Of rancid breath of public hide-and-speak.
    Red booth. Red pillar box. Red double-tiered
    Omnibus squelching tar. It was real! Shamed
    By ill-mannered silence, surrender
    Pushed dumbfoundment to beg simplification.
    Considerate she was, varying the emphasis —
    “ARE YOU DARK? OR VERY LIGHT?” Revelation came.
    “You mean — like plain or milk chocolate?”
    Her assent was clinical, crushing in its light
    Impersonality. Rapidly, wave-length adjusted,
    I chose. “West African Sepia” — and as afterthought,
    “Down in my passport.” Silence for spectroscopic
    Flight of fancy, till truthfulness clanged her accent
    Hard on the mouthpiece. “WHAT’S THAT?” conceding
    “DON’T KNOW WHAT THAT IS.” “Like brunette.”
    “THAT’S DARK, ISN’T IT?” “Not altogether.
    Facially, I am brunette, but madam, you should see
    The rest of me. Palm of my hand, soles of my feet
    Are a peroxide blonde. Friction, caused —
    Foolishly madam — by sitting down, has turned
    My bottom raven black — One moment madam!” — sensing
    Her receiver rearing on the thunderclap
    About my ears — “Madam,” I pleaded, “wouldn’t you rather
    See for yourself?”
          – Wole Soyinka (HOW DARK? என்று கேட்கும் இடம் அற்புதம்!)

    இன்னும் ஒன்று:
                – பருத்த தொந்தி
    நம்மதென்று நாமிருக்க நாய்நரிகள் பேய்க்கழுகு
    தம்மதென்று தாமிருக்கும்தான்!
          – தாயுமானவரா பட்டினத்தாரா?

    தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்