நாஞ்சில் நாடனுக்கு சில கற்பித்த சுந்தர ராமசாமி

இந்தக் கட்டுரை தற்செயலாக கண்ணில் பட்டது – எனக்குச் சில கற்பித்தவர் சுந்தர ராமசாமி. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். வேறு ஒன்றும் சொல்லப் போவதில்லை…

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம், சுரா பக்கம்

 

அல்பேர் கம்யூ: Stranger

Stranger (1942) நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.

பல வருஷங்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நாவல்தான். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 30-35 வருஷங்களுக்கு முன் பரிந்துரைத்தார். சின்ன நாவலும் கூட. வாங்கி வைத்தும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஏனோ படிக்க கைவரவில்லை.

ஒரு வழியாக புத்தகத்தைத் திறந்து பத்து பக்கம் படித்ததும் புத்தகம் மனதை மிகவும் கவரப் போகிறது என்று தெரிந்தது. ஒரு வார்த்தையைக் கூட தவறவிடக் கூடாது என்று தோன்றியது. பத்து பத்து பக்கமாகத்தான் இரண்டு மூன்று வாரங்களாகப் படித்தேன்.

நாவலின் நாயகன் மியூர்சால்ட் (Meursalt – எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியவில்லை) தன் அம்மாவின் இறப்பைப் பற்றி தெரிந்து கொள்வதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. மியூர்சால்ட் வாழ்வது அல்ஜியர்ஸ் நகரத்தில் – நாவல் எழுதப்பட்ட காலத்தில் அல்ஜீரியா ஃப்ரான்சின் ஒரு பகுதி. அங்கே ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை. அம்மா இருந்தது வயதானவர்களுக்கான ஒரு விடுதியில் (Home). மியூர்சால்ட்டுக்கு அம்மாவை அடக்கம் செய்ய வேண்டியது ஒரு கடமை, பொறுப்பு, அவ்வளவுதான். அம்மாவுடன் பெரிய பந்தமோ, அம்மா இறந்ததால் பெரிய இழப்போ எதுவுமில்லை. விடுதிக்கு செல்கிறான், பிணத்தின் அருகில் உட்கார்ந்திருக்கிறான், அம்மாவின் சில நண்பர்கள் வருகிறார்கள். அம்மாவுடன் மிகவும் நட்பாக இருக்கும் ஒருவர் உடல்நிலை முடியாமல் இருந்த போதிலும் கஷ்டப்பட்டு நடந்து வந்து இறுதிச் சடங்குகளில் பங்கேற்கிறார். அவருக்கு இருக்கும் துக்கம் கூட மியூர்சால்ட்டுக்கு இல்லை.

இந்தப் பகுதி மிக அழகாக விவரிக்கப்படுகிறது. கம்யூவின் உத்தி மியூர்சால்ட்டின் கண்கள் வழியாக நுண்விவரங்களை அடுக்கிக் கொண்டே போவது. பால் விட்ட காப்பி குடிப்பது, விடாமல் அழும் ஒரு கிழவி, கிழவிகளின் தொப்பைகள், பற்கள் விழுந்துவிட்டதால் குவிந்திருக்கும் வாய்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். அவை அனைத்தும் நமக்கு சொல்வது ஒன்றே. மியூர்சால்ட்டுக்கு எந்த மன அழுத்தமும் இல்லை, அம்மாவை சட்டுபுட்டென்று அடக்கம் செய்துவிட்டு தன் வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதை இத்தனை அருமையாக விவரிக்க முடியுமா!

மியூர்சால்ட் அல்ஜியர்ஸுக்கு திரும்புகிறார். ஒரு காலத்தில் கூட வேலை செய்த மரியோடு உறவு ஏற்படுகிறது. தன் வீட்டு பால்கனியில் நின்று சிகரெடி பிடிக்கிறார். மதிய உணவுக்கு செல்கிறார். பஸ்ஸை துரத்திப் பிடித்து ஏறுகிறார். பக்கத்து வீட்டுக்காரர் சல்மானோ வளர்க்கும் சொறிநாய் ஓடிவிடுகிறது. ரேமண்ட் என்ற “நண்பர்” – பெண் தரகன் என்று நம்பப்படுபவன் – தனது “தோழி” தன்னை ஏமாற்றுவதாகவும் அவளுக்கு பாடம் கற்பிக்க – அதாவது அடிக்க – மியூர்சால்ட்டின் உதவியுடன் அவளை வீட்டுக்கு வர வைக்கிறான். விவகாரம் முற்றி போலீஸ் வரை போகிறது. மியூர்சால்ட் சாட்சி சொல்லி ரேமண்டை விடுவிக்கிறான். நிறுவன முதலாளி பாரிசில் ஒரு கிளை ஆரம்பிக்கப் போகிறேன், அங்கே போகிறாயா என்று கேட்கிறார். நீங்கள் சொன்னால் போகிறேன் என்கிறான். அவனுக்கு பெரிதாக விருப்பமும் இல்லை, போகக் கூடாது என்ற எண்ணமும் இல்லை. முதலாளி கொஞ்சம் ஆர்வமாக இருப்பா என்கிறார். மரி என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க சரி என்கிறான். ஆனால் அவனுக்கு அதிலும் விருப்பமும் இல்லை, வெறுப்பும் இல்லை.

இந்தப் பகுதியிலும் மியூர்சால்ட்டின் சித்திரம் மிகக் கச்சிதமாக காட்டப்படுகிறது. நடப்பது நடக்கட்டும் என்று இருப்பவன். யாராவது எதையாவது கேட்டால் செய்து கொடுப்பான். விருப்பு வெறுப்பால் அல்ல, அதுதான் சுலபம் என்பதால். He goes with the flow, things happen to him, he doesn’t make anything happen.

விடுமுறைக்காக ரேமண்ட், மரி, மியூர்சால்ட் எல்லாரும் ரேமண்டின் நண்பனின் கடற்கரை பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கே ரேமண்டின் “தோழி”யின் சகோதரனை பார்க்கிறார்கள். ஏற்கனவே சின்னத தகராறு இருக்கிறது. இப்போதும் சின்ன அடிதடி. ரேமண்ட் ஏதாவது செய்துவிடக் கூடாது என்று ரேமண்டின் துப்பாக்கியை மியூர்சால்ட் வாங்கிக் கொள்கிறான். திருப்பி வெளியே போகும்போது அந்த சகோதரன் கத்தியைக் காண்பிக்கிறான். நல்ல வெயில் அடிக்கிறது. வியர்வை. மியூர்சால்ட் அவனை சுட்டுவிடுகிறான். முதல் குண்டு பாய்ந்த பிறகு அருகில் சென்று கொஞ்சம் தாமதித்து இன்னும் நான்கு முறை சுடுகிறான்.

இதுவும் ஒரு சிறப்பான பகுதி. ஏன் சுடுகிறான்? கோபத்தால் அல்ல. பகையால் அல்ல. பின் எதற்காக? கடுமையான் வெயிலால்தான்; கண்ணைக் கூட வைக்கும் பிரகாசமான சூரிய ஒளியால்தான்; வியர்வை ஓடுவதால்தான். இதை நீங்களே உணர்ந்தால்தான் உண்டு, வார்த்தைகளில் சொல்லி மாளாது.

கைது. சிறை. இவனுக்காக நியமிக்கப்படும் வக்கீல் அம்மாவைப் பற்றி இவன் விட்டேத்தியாகப் பேசுவதைக் கண்டு கொஞ்சம் அதிர்கிறார். விசாரிக்கும் அதிகாரி இவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, செய்த கொலையைப் பற்றி குற்ற உணர்வும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு நிறையவே அதிர்கிறார். சிறையில் பல மாதங்கள். நடப்பது நடக்கட்டும் என்று இருப்பவன் அல்லவா? அதுவும் பழகிவிடுகிறது.

வழக்கு நடக்கிறது. அம்மாவின் இறப்பு பெரிதாக பாதிக்கவில்லை என்பது முக்கியமான அவதானிப்பாக மாறுகிறது. மனசாட்சியே இல்லாதவன் என்று அரசு தரப்பு வக்கீல் வலுவாக வாதிடுகிறார். கம்யூவின் வார்த்தைகளிலேயே:

I summarized The Stranger a long time ago, with a remark I admit was highly paradoxical: In our society any man who does not weep at his mother’s funeral runs the risk of being sentenced to death. I only meant that the hero of my book is condemned because he does not play the game.

மியூர்சால்ட்டுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அவனை தன் குற்றத்தை உணரச் செய்ய ஒரு பாதிரியார் முயல்கிறார். கடைசிப் பக்கங்களில் மியூர்சால்ட் முதல் முறையாக ஒரு உணர்ச்சியை – கோபத்தை – வெளிப்படுத்துகிறான். உனக்குத் தெரிந்தவற்றை விட சாவின் விளிம்பில் இருக்கும் எனக்கு அதிகமாகவே தெரியும் என்கிறான்.

மியூர்சால்ட்டின் வாழ்க்கை வெறுமையானதா? என்னைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நாயகத் தன்மை உடையவன் என்றுதான் சொல்வேன். வாழ்க்கையின் என்னென்னவோ நடக்கிறது, அவ்வளவுதான். ஏன் நடக்கிறது, எதற்காக கொலை செய்தான் என்று கேள்விக்கெல்லாம் அர்த்தமே இல்லை. வெறுமையான வாழ்க்கை போல சித்தரித்துவிட்டு அப்படி வாழ்பவன் நாயகன் என்று உணர வைப்பதில்தான் கம்யூவின் திறமை இருக்கிறது.

படிக்கும்போது எனக்கு ஒரு கேள்வி இருந்தது. இந்த நாவலில் காலனிய மனப்பான்மை வெளிப்படுகிறதா? ரொம்ப யோசித்த பிறகும் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. இறந்தவன் ஒரு அரேபியன். அவ்வளவுதான். அவன் ஃப்ரெஞ்சுக்கார வெள்ளையனாக இருந்தாலும் கதையில் எந்தக் குறைவும் இருக்காதுதான். ஆனால் அந்த பெயரில்லாத அரேபியனின் அர்த்தமற்ற சாவு என்பதில் கம்யூவின் அடிமனதில் காலனிய மனப்பான்மை அவரை அறியாமலே வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அதே போல கமேல் தாவூத் என்ற அல்ஜீரிய எழுத்தாளருக்கும் தோன்றி இருக்கிறது. இறந்து போன அரேபியனின் கண்ணோட்டத்திலிருந்து The Meursalt Investigation என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

படிக்கும்போது எனக்கு நாஞ்சில் நாடனின் கதைகள் – குறிப்பாக சதுரங்க குதிரை – நினைவு வந்து கொண்டே இருந்தன. சதுரங்க குதிரையின் நாராயணனுக்கு மியூர்சால்ட் ஆக மாற நிறையவே வாய்ப்புண்டு.

கம்யூ நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (1957)

க்ளாசிக் என்று நான் சில புத்தகங்களைத்தான் வகைப்படுத்துவேன். அவற்றில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கம்யூ பக்கம்

நாஞ்சில்: சூடிய பூ சூடற்க

சூடிய பூ சூடற்க 2010-க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று அவரே சொல்லி இருக்கிறார். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹமி காணார்” என்று சொன்னதை – சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள் – அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம். நாஞ்சிலுக்கு எனக்குத் தெரிந்ததை விட நன்றாகவே ஹிந்தி/மராத்தி தெரியும் என்பதும் உண்மைதான், தவறாக நான் புரிந்து கொள்ளத்தான் வாய்ப்பு அதிகம்.

எனக்கு மிகவும் பிடித்தது கதை எழுதுவதின் கதை என்ற கும்பமுனிக் கதை. Tour de force. மனிதருக்கு நக்கல் அதிகம், அதுவும் ஜெயமோகன் எழுதியதை நாஞ்சில் தன் பெயரில் போட்டுக் கொள்கிறார் என்கிறார் பாருங்கள், நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.

தன்ராம் சிங் நல்ல சிறுகதை. நாம் பலரும் பார்த்த, வீடுகளையும், கடைகளையும் ராக்காவல் காக்கும் கூர்க்காவை உயிர் பெற வைத்திருக்கிறார்.

வளைகள் எலிகளுக்கானவை இன்னொரு நல்ல சிறுகதை. மஹாராஷ்டிரத்திலிருந்து பாரதத்தில் பல மூலைகளுக்கு தீர்த்தயாத்திரை செல்லும் கிழவ்ர்கள், பத்து மைல் தூரம் கூட பயணிக்காத தமிழர்களை அழகாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.

பிற கதைகளும் படிக்கக் கூடியவைதான். ஆனால் கதை எழுதுவதின் கதை, யாம் உண்பேம், தன்ராம் சிங் இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சில் நாடனின் மிதவை

நாஞ்சில் நாடனின் நாவல்களில் (படித்த வரை) என்னை மிகவும் கவர்ந்த நாவல் இதுதான். தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை, சதுரங்க குதிரை எல்லாவற்றையும் விட ஒரு மாற்று மேலாகவே மதிப்பிடுவேன்.

ஒரு மாலை தற்செயலாக புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க உட்கார்ந்தேன். கீழே வைக்கவே இல்லை.நாஞ்சில் எதிரிலே இருந்திருந்தால் அவர் காலில் விழுந்திருப்பேன். படித்து முடித்தபின் மனம் கலங்கி இருந்தது.

ஏன் மனம் கலங்கியது என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன். சண்முகத்தின் நிலையிலிருந்து நான் சில இன்ச் தூரத்தில் தப்பியதால் மட்டும்தானா? என் தனிப்பட்ட அனுபவங்களுக்கு, உணர்வுகளுக்கு அருகில் இருப்பதால் மட்டும்தானா? கொஞ்சம் நிலை மாறி இருந்தால் இந்த மாதிரி வாழ்க்கையில் வீழ்ந்திருப்பேன், தப்பித்தேன் என்ற எண்ணத்தினாலா? இல்லை, சதுரங்க குதிரை நாராயணன் நிலைக்கு இன்னும் அருகிலே இருந்திருக்கிறேன். ஆனால் சதுரங்க குதிரையில் கூறியது கூறல் இருக்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. என் வாழ்க்கைக்கு இன்னும் அருகே உள்ள புத்தகத்தில் நொட்டை சொல்பவனை இந்தப் புத்தகம் இப்படி தாக்குகிறது என்றால் அது என் அனுபவங்களுக்கு அருகில் இருக்கிறது என்பதனால் மட்டுமாக இருக்க முடியாது; சண்முகத்தின் இடத்தில் என்னை வைத்து பார்க்க முடிகிறது என்பதால் மட்டும் இருக்க முடியாது.

அதிலும் இந்தக் கதையை எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் பொருத்திப் பார்க்கலாம். மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து விவசாயக் கூலி வேலை பார்ப்பவர்கள்; சட்டபூர்வமாக H1-விசா பெற்றும் ஏறக்குறைய அடிமை வேலை பார்க்கும் பல IT பணியாளர்கள்; 1908-இல் கதிராமங்கலத்திலிருந்து சென்னைக்கு குடியேறி சட்டக் கல்லூரியில் குமாஸ்தா வேலை பார்த்து, மனைவிக்கும் தனக்கும் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் இறந்த என் தாத்தா; நகரங்களுக்கு சாரிசாரியாக குடியேறி எப்படியோ பிழைக்கும் கோடிக்கணக்கானவர்கள்; இரவில் உலா வரும் கூர்க்கா; கட்டிட வேலை செய்யும் பிஹாரி; டாஸ்மாக்கில் சலம்புபவன்; சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை பேரையும் ஒரே ஒரு மனிதன் சோற்றுக்கும் கழிப்பதற்கும் அல்லாடுவதை வைத்துக் காட்டிவிடுகிறார்.

சண்முகத்தின் தேவைகள் அதிகமில்லை. ஊரில் இருக்கும் குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டும். அப்படி பணம் அனுப்ப சம்பாதிக்க வேண்டும். சம்பளத்தில் சோற்றுக்கும், படுக்கைக்கும் கொஞ்சம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் சம்பாதிக்க முடியாது. தேவைகளுக்கும் சம்பாத்தியத்துக்கும் இருக்கும் தூரம், பற்றாக்குறைதான் கதை. கதை முழுவதும் தின்பதிலும் கழிப்பதிலும் படுப்பதிலும் உள்ள சிரமங்கள்தான். இதனால் ஏற்படும் மன அழுத்தம், வெறுமை பற்றி அவர் ஒரு வார்த்தை எழுதவில்லை. ஆனால் கதை முழுவதும் வியாபித்திருப்பது அவைதான்.

நாஞ்சிலுக்கு இது கை வந்த கலை. ஹிந்தியில் பை(ன்) ஹாத் கா கேல் என்பார்கள். அவருக்கு இதற்கு இடது கை சுண்டுவிரலே போதும். சதுரங்க குதிரை, தன்ராம் சிங், கடன் வாங்கி கிராமத்துக்கு வந்து பந்தா காட்டி பிறகு கடனை அடைக்க உழைக்க வேண்டி இருக்கும் ஒருவன் (கதை பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது) என்று நிறைய இருக்கிறது. அந்தக் கலை இந்த நாவலில்தான் தன் உச்சத்தை அடைந்திருக்கிறது. கதை முழுவதும் புறவயமான தளத்திலேதான் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் சண்முகத்தின் உடலை, புற உலகத்தைக் காட்டுகிறார். அவர் எழுதாத கோடிக்கணக்கான வார்த்தைகள் சண்முகத்தின் உள்ளத்தை, அக உலகத்தைக் காட்டுகின்றன. அதில்தான் அவர் என் மனதையும் அசைத்துவிட்டார்.

கதை சுருக்கமாக; எழுபதுகளின் கிராமத்து, முதல் தலைமுறை பட்டதாரி. வேலை கிடைக்கவில்லை. பெரியப்பாவிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. துணிந்து பம்பாய்க்கு போகிறான். வேலை கிடைக்கிறது, ஆனால் முன்னால் சொன்ன மாதிரி பற்றாக்குறை. உண்பதிலும் கழிப்பதிலும் உள்ள சிரமங்கள்தான் கதை.

வாழ்க்கை மிகவும் எளிமையானது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. நமக்கு என்ன வேண்டுமோ, எது நம்மை திருப்திப்படுத்துகிறதோ, எது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதை மட்டும் செய்தால் போதும். ஆனால் அது ஏன் சுலபமாக இருப்பதில்லை? நம் மீது நமக்கு இருக்கும் பிம்பமும் உண்மை நிலையும் ஏன் இத்தனை மாறுபடுகின்றன? காந்தி போல வாழ்வது மிகச் சுலபமாக இருக்க வேண்டும்; ஏன் நேருவாலும், படேலாலும், ராஜாஜியாலும் கூட அவ்வளவு சுலபமான வாழ்க்கை வாழ முடியவில்லை? Moon and Six Pence நாவலின் நாயகன் தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்கிறான். குடும்பம், மனைவி, சமூக விழுமியங்கள் எதுவும் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. அப்படி வாழ்வது ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது? சண்முகத்தால் ஏன் தன் கிராமத்துக்கு திரும்ப முடியவில்லை? அல்லது குடும்பத்தை மறந்து ஏன் சௌகரியமாக வாழ முடியவில்லை? இந்த வாழ்க்கை எங்குதான் முடியும்? விடிவுண்டா?

நாஞ்சிலின் உச்சம் இதுதான். (படித்த வரை) கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: நாஞ்சிலே தன் நாவல்களை தரவரிசைப்படுத்தியபோது மிதவைக்கு மூன்றாம் இடம்தான் கொடுத்திருந்தார். சதுரங்க குதிரைக்கு இரண்டாம் இடம்; எட்டுத்திக்கும் மதயானைக்கு முதல் இடம்.

பின்குறிப்பு 2: மிதவை புத்தக அட்டையில் தாடியோடு நாஞ்சில்!

பின்குறிப்பு 3: ஜெயமோகன் மிதவையை சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (முழு வெற்றி அடையாத, ஆனால் சிறந்த நாவல்கள்) சேர்த்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

ஆ. மாதவன் – அஞ்சலி

மாதவன் மறைந்து ஒரு மாதத்திற்கு மேலாயிற்று. அவரை நான் அதிகம் படித்ததில்லை. நல்ல வேளையாக அவர் எழுதிய புனலும் மணலும் புத்தகம் அலமாரியில் இருந்தது. அதைப் படித்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தேன். கெட்ட நேரம், அலுவலக வேலைப் பளுவும் அதிகமாக இருந்தது. சின்னப் புத்தகம்தான், ஆனால் படித்து முடிக்கவும் எழுதவும் ஒரு மாதம் ஆகிவிட்டது.

மாதவனின் நாயனம் சிறுகதை ஒன்றைத்தான் நான் முன்னால் படித்திருந்தேன். Minimalist எழுத்து என்றால் அதுதான். எளிய ஒற்றை வரி முடிச்சை எத்தனை சிறப்பாக வடித்திருக்கிறார்! கச்சிதமான எழுத்து. சும்மாவா ஜெயமோகனும் எஸ்ராவும் இதை அவரவர் போட்ட தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்!

ஆனால் ஆ. மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோதுதான் அவரைப் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டது. (ஜெயமோகனையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.) புனலும் மணலும் எல்லாம் அதற்குப் பிறகுதான் வாங்கினேன், படிக்க இத்தனை வருஷமாயிற்று. அவர் இருந்திருந்தால் இப்படி எழுத்தாளர் இறந்த பிறகுதான் அவர் எழுதிய புத்தகங்களைப் படித்து அஞ்சலி எழுதும் வாசகன் என்ற கருவை வைத்தே இன்னொரு பிரமாதமான சிறுகதை எழுதி இருப்பார்.

சரி முதலில் புனலும் மணலும் பற்றி:


புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம் நாஞ்சில் நாடன் நினைவுதான் வந்து கொண்டே இருந்தது. ஆ. மாதவனுக்கு நாஞ்சில்தான் மிகவும் பிடித்த அடுத்த தலைமுறை எழுத்தாளர். நாஞ்சிலுக்கு ஆ. மாதவன் குரு ஸ்தானத்தில் உள்ளவர். இருவரும் தங்களையே அடுத்தவர் எழுத்தில் கண்டார்களோ என்னவோ.

புனலும் மணலும் ஆற்றை, ஆற்றில் மணல் வாரப்படும் தொழிலை பின்புலமாகக் கொண்டது. நாவலுக்கு பொருத்தமான பேரை வைத்திருக்கிறார். மெய்நிகர் அனுபவத்தை தருவது இலக்கியத்தின் ஒரு முக்கியத் தகுதி. அந்த அனுபவத்தை முழுமையாகத் தரும் எதார்த்தவாத, வட்டார வழக்கு நாவல்.

ஒரு வரியில் கதையை சுருக்கிவிடலாம். தனக்கு மகள் முறை உள்ள, குரூபியான இளம் பெண்ணை வெறுக்கும் அப்பா, அவ்வளவுதான் கதை. பின்புலம் முன்னே சொன்ன மாதிரி “புனலும் மணலும்”. கதையின் பின்புலம் – ஆறு, ஆற்றையும், ஆற்று மணலையும் நம்பி வாழும் பலர் அருமையாக சித்தரிக்கப்படுகிறது. அப்பா அங்குசாமியின் backstory – அவர் விரும்பி மணக்கும் தங்கம்மை, அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள காதல், தங்கம்மையின் அவலட்சண மகள் பங்கி, ஆரம்பத்திலிருந்தே பங்கியை ஒரு தடங்கலாக, இடையூறாக, பல்லில் நிரடும் சிறு கல்லாகப் பார்க்கும் அங்குசாமி, பங்கியை மட்டுமே வெறுக்கும் அங்குசாமி, ஏதோ ஒரு அனாதை தாமோதரனை ஆதரித்து வளர்க்கும் அங்குசாமி, தாமோதரனுக்கும் பங்கிக்கும் இடையே உருவாகும் சகோதர உறவு, அங்குசாமி பங்கியைக் கரித்துக் கொட்டும்போதெல்லாம் வருந்தும் தங்கம்மை, அவளை ஆதரித்துப் பேசும் தாமோதரன், தங்கம்மையின் மரணம், அங்குசாமிக்கு ஏற்படும் கைக்காயம், கைக்காயத்திற்கு பிறகு கஞ்சிக்கும் பங்கி சம்பாத்தியம் தேவைப்படும் நிலை எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. இறுதிக் காட்சியில் பங்கியின் மரணமும் நல்ல அழுத்தமான முடிச்சு.

வட்டார வழக்கும் மிக அருமையாக வந்திருக்கிறது. மிகவும் ரசித்துப் படித்தேன். நாவலின் இறுதியில் நானும் அடிக்கடி “கொள்ளாமே!” என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் என் கண்ணில் இந்த நாவல் குறையுள்ள படைப்பே. 150 பக்கத்தில் 50 பக்கமாவது அங்குசாமி பங்கியை வெறுக்கிறார் என்று திருப்பித் திருப்பி வருகிறது. அது காட்சிகளால் பெரிதாக வேறுபடுத்தப்படவில்லை. அது ஒரு தொழில் நுட்பக் குறைவாகவே பட்டது. உண்மையைச் சொல்லப் போனால் என் புனைவுகளில் எனக்கு ஒரு முடிச்சை இரண்டு முறை கூட பெரிதாக வேறுபடுத்தி சொல்லத் தெரியவில்லை. என்னடா இவருக்கும் இதே பிரச்சினையா என்றுதான் தோன்றியது. நாவலின் பின்புலமும், வட்டார வழக்கும், வாழ்க்கையின் போக்கும்தான் நாவலைக் காப்பாற்றுகிறது.

ஜெயமோகன் தனது சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இந்த நாவலைக் குறிப்பிடுகிறார். எஸ்ராவின் பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

புனலும் மணலும் நாவலை 1974-இல் முதலில் வெளியிட்டது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம்!


மாதவனின் சுவாரசியமான ஆளுமையாக இருந்திருப்பார். பூர்வீகம் செங்கோட்டை. என் அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே வயதுதான். திருவனந்தபுரத்தில் பிறந்து, வளர்ந்து, வணிகராக வாழ்ந்திருக்கிறார். ஜெயமோகன் தளத்தில் அவரது விரிவான பேட்டி (பகுதி 1, 2, 3) வந்திருக்கிறது, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அவரது ஆளுமையைப் புரிந்து கொள்ள ஜெயமோகனின் இந்தப் பதிவைப் படியுங்கள். அவரது இந்தப் பேட்டியும் உதவலாம்.

அந்த வணிகப் பின்புலத்தை வைத்து நிறைய சிறுகதைகள் எழுதி இருக்கிறார். கடைத்தெரு கதைகள் முக்கியமான சிறுகதைத் தொகுப்பாம். நாயனத்தைத் தவிர பூனை, பதினாலுமுறி, புறா முட்டை, தண்ணீர், அன்னக்கிளி ஆகிய சிறுகதைகளை ஜெயமோகன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்ரா பட்டியலில் நாயனம் மட்டும்தான்.

கிருஷ்ணப்பருந்து (1980) அவருடைய சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. எஸ்ரா அவரது சிறந்த 100 தமிழ் நாவல்கள் பட்டியலில் இதைச் சேர்த்திருக்கிறார். அ. முத்துலிங்கம் நாவலைப் படித்த அனுபவத்தை இங்கே விவரிக்கிறார். ஜெயமோகன் வார்த்தைகளில்:

திருவனந்தபுரம் காலை பஜாரில் கடை வைத்திருக்கும் ஆ.மாதவன் நாற்பது வருடங்களாக திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே எழுதுபவர். தெருவில் வாழும் ‘உயிர் வாழ்தல் போட்டி’, அதன் ஆழத்து இருள் சலனங்கள். இந்நாவலும் அதுவே. இந்நாவலில் வரும் சாமியார் தன் வீட்டில் மாட்டியுள்ள நிர்வாணப் பெண்ணின் படத்திலிருந்து நாவலை மீண்டும் புதிதாகப் படிக்கலாம். ஆ.மாதவனின் சாதனை என்றால் இப்படைப்புதான்.

தி.ஜா.வும் இந்த நாவலை பெரிதாகப் பாராட்டி மாதவனுக்கே 1982-இல் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்திலிருந்து:

இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள், இவற்றை அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். என் போன்றவர்களுக்கு இது புதிய அனுபவம். வெறும் புறத்தை மட்டுமின்றி இந்த சங்கமத்தின் ஆழங்களை, சிரத்தையோடும் உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டி இருப்பது சும்மா புகைப்படம் போல் இல்லாமல் ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்படுத்தும் திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது. படித்து முடித்து நினைக்கும்போது, அங்கெல்லாம் மீண்டும் ஒருமுறை வந்து தங்க ஆசை எழுகிறது. குருஸ்வாமியும் அவர் இதயமும்தான் இந்த நாவலின் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம், உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லாவிட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல் வெற்றி பெறுகிறது.

மாதவனின் பாச்சி, சாத்தான் திருவசனம் ஆகிய சிறுகதைகள் அழியாச்சுடர் தளத்தில் கிடைக்கின்றன. பாச்சி சிறுகதையில் நாணுக்குட்டனுக்கு இனி வேலையும் மாதச் சம்பளமும் உண்டா என்ற கேள்வியைப் பற்றி ஒரு வரி கூட கதையில் கிடையாது, ஆனால் கதை முழுவதும் அந்தக் கேள்வியின் அழுத்தம்தான் விரவிக் கிடக்கிறது. மிகத் திறமையான எழுத்து.

மாதவனுக்கு 2015-க்கான சாஹித்ய அகடமி விருது – இலக்கியச் சுவடுகள் என்ற திறனாய்வு நூலுக்காக – கிடைத்தது. தேர்ந்தெடுப்பவர்கள் கமிட்டியில் நாஞ்சில் நாடனும் இருந்தார்!

மாதவனின் படைப்புலகத்தை அணுக, புரிந்து கொள்ள அவருடைய இந்தப் பேட்டி, நாஞ்சில் எழுதிய இந்தப் பதிவு, எஸ்ரா எழுதிய கட்டுரை, சுகுமாரன் எழுதிய பதிவு, விகடனில் இந்தக் கட்டுரை ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆ. மாதவன் பக்கம், அஞ்சலிகள்

கம்ப ராமாயணம் படிக்க

என் கல்லூரி நண்பன் கணேஷின் மகன் ஆதித்யன் கொஞ்சம் விசித்திரப் பேர்வழி. பதின்ம வயதில் கம்ப ராமாயணம், பாஞ்சாலி சபதம் என்று படிக்க விரும்புகிறான். கணேஷ் நல்ல உரை ஏதாவது இருந்தால் சொல்லு என்று என்னைக் கேட்டான். நானோ . இப்போதுதான் குறுந்தொகை, நற்றிணை என்று ஆரம்பித்திருக்கிறேன்.

சிலிகன் ஷெல்ஃப் தளத்தின் மூலம் எனக்குக் கிடைத்த பெரிய கொடை வாசகர்களின் நட்புதான். எனக்குத் ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் ஒரு பிரச்சினையுமில்லை, தெரிந்தவர்கள் நாலைந்து பேராவது இருப்பார்கள். உதாரணமாக நாஞ்சில் நாடன். அவர் கம்பராமாயணத்தை மும்பையில் ஒரு தமிழறிஞரிடம் பாடமாகப் படித்தவர். கம்பனின் அம்புறாத்தூணி என்று புத்தகமே எழுதியவர். ஜடாயு கற்பூர வாசனை தெரியாத எனக்கே கம்பராமாயணத்தில் கொஞ்சம் ஆர்வத்தை உருவாக்கியவர். விசு இரண்டு வருஷமாக கம்ப ராமாயணத்தை வரிவரியாகத் உரைகளின் உதவியோடு தானே படித்தவன். இவர்களிடம் கேட்டேன. விசு, ஜடாயுவிடம் கிடைத்த பதில்களை எல்லாருக்கும் பயன்படும் என்று ஒரு பதிவாகத் தொகுத்திருக்கிறேன்.

நாஞ்சில் ஒரு படி மேலேயே போய் என் நண்பனைக் கூப்பிட்டு 15 நிமிஷம் பேசி இருக்கிறார். மேன்மக்கள்! கணேஷும் ஆதித்யனும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

  • வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – விசு, ஜடாயு இருவரும் பரிந்துரைக்கும் புத்தகம்
  • கம்பன் கழகம் – அ.ச.ஞானசம்பந்தன் உரை இணையத்தில் கிடைக்கிறது – விசுவின் பரிந்துரை
  • இணையத்தில் இன்னொரு உரை (ஜடாயு)
  • ஜடாயு, ஹரிகிருஷ்ணன் இருவரும் உள்ள பெங்களூர் இலக்கிய அமர்வுகளின் வீடியோக்கள் – கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாஞ்சாலி சபதம்
  • பாஞ்சாலி சபதம், ஹரிகிருஷ்ணன் உரை

என் இளமைக்காலத்தில் தமிழகத்தில் கம்பனைப் பற்றி மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். காரைக்குடி கம்பன் கழகம் செயலாக இருந்தது. கவிதைகளில் ஆர்வமில்லாத நானே சா. கணேசன், மு.மு. இஸ்மாயில் என்று பலரும் கம்பன் பற்றி எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. கம்பன் கழகம் செயலாக இருந்ததும் கம்பன் விழா என்று ஒன்று நடந்ததும் மங்கலாக நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் அப்படி கம்பனில் ஊறித் திளைத்திருக்கும் தமிழறிஞர்கள் யாரும் இல்லையா?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

நாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை”

நாஞ்சில் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களன் நான் என் சொந்த அனுபவத்தில் நன்கறிந்தது. அவர் விவரிக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் என் வாழ்க்கையோடு என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நம்பகத்தன்மை அதிகம் உள்ள சித்தரிப்பு. இந்த நாவலை என்னால் சீர்தூக்கிப் பார்த்து நாலு வார்த்தை எழுதிவிட முடியும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.

நாயகன் ஏழ்மையிலிருந்து தப்பிக்க மும்பைக்கு வேலை தேடி வருகிறான். (நான் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க வேலை தேடி அமெரிக்கா வந்தவன்.) வேலையில் திறமைக்காரன், ஆனால் வேலையைத் தவிர மும்பையில் வேறு பிடிப்பு இல்லை. வெறுமை நிறைந்த வாழ்க்கை. சொந்த ஊர், உறவுகளோடு உள்ள பந்தம் பலவீனம் அடைந்து கொண்டே போகிறது. (அதே வெறுமை, பலவீனமாகிக் கொண்டிருக்கும் உறவுகளைக் கண்டு எனக்கு ஒரு காலத்தில் அச்சம் இருந்தது.) நாற்பத்து சொச்சம் வயதான நாயகன், திருமணம் செய்துகொள்ளவில்லை. இன்று திருமணத்தைக் கண்டும் பயம், மனைவி, குழந்தைகள், குடும்பம் எதுவும் இல்லாத எதிர்காலத்தைக் கண்டும் பயம். எனக்கு அவ்வளவுதான் takeaway.

நாவலின் பலம் நம்பகத்தன்மை. மிகப் பிரமாதமான சித்தரிப்புகள். மாமாவோடு உள்ள உறவாகட்டும், இன்று திருமணமான மாமா பெண்ணிடம் உன்னைக் கட்டிக் கொள்ளும்படி கேட்டிருந்தால் கட்டி இருப்பேன் என்று சொல்லும் இடமாகட்டும், அலுவலகத்தின் weak friendships ஆகட்டும், உறவுகளோடு வெடிக்கும் சண்டை ஆகட்டும், வேலையில் வரும் சிக்கல்கள் ஆகட்டும், அந்த சிக்கல்களை கடக்கும் விதம் ஆகட்டும் எல்லாமே மிகப் பிரமாதமாக சித்தரிக்கப்படுகின்றன. வாழ்க்கை பொருளிழந்து கொண்டிருப்பது மிக அருமையாக வந்திருக்கிறது. சிறப்பான “எதார்த்தவாத” நாவல்.

என்னைப் பொறுத்த வரையில் பலவீனமும் அதன் எதார்த்தவாத அணுகுமுறைதான். ஆமாம், வாழ்க்கையின் வெறுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் நாராயணனின் வாழ்க்கை வெறுமை அடைந்தால் வாசகனுக்கு என்ன போச்சு? So what? என்ற கேள்விக்கு பதிலே இல்லை. மாஸ்லோவின் theory of needs-தான். சோற்றுக்கு அல்லாடும்போது வேலை தேவைப்பட்டது. இப்போது வேலை ஸ்திரமாக இருக்கிறது, வாழ்க்கையின் வெறுமை என்று அடுத்த தேடல். அவ்வளவுதானே?

இரண்டு இடங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நாராயணனிடம் எத்தனை பாண்ட், எத்தனை சட்டை, எத்தனை ஜட்டி இருக்கிறது, ஜட்டிக்கு இன்னும் எத்தனை நாள் ஆயுள் இருக்கிறது என்று கணிக்கும் இடம். நாராயணனின் வாழ்வின் பொருளின்மையை நாலு வரியில் உணர வைத்துவிடுகிறார். இன்னொன்று பயணம் போன இடத்தில் வெள்ளம் வந்து ரோடுகள் துண்டிக்கப்பட்டு நாராயணன் அல்லாடி திண்டாடி மும்பை திரும்பும் இடம். (இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எனக்கும் இருக்கிறது.) பயண சித்தரிப்புகள் எல்லாமே பிரமாதமாக வந்து விழுந்திருக்கின்றன.

சதுரங்க குதிரை நாவலை ஜெயமோகன் தன் இரண்டாம் பட்டியலில் வைக்கிறார்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

நாஞ்சில் நாடன் நான் தவறவிட்ட தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பத்து வருஷம் முன்னால் வரை நான் பேரைக் கூட கேட்டதில்லை. அந்த காலகட்டத்தில் அவரைப் பற்றிய பில்டப் நிறைய ஆரம்பித்தது. ஜெயமோகன், நண்பர் ராஜன் மாதிரி நிறைய பேர் அவரை சிலாகித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் பரிந்துரையின் மேல் படித்த இடலாக்குடி ராசா என்னை பெரிதும் கவர்ந்த ஒரு சிறுகதை. போதாதா? அவர் எழுதிய எண்பத்து சொச்சம் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை ராஜனிடமிருந்து ஆர்வத்தோடு தள்ளிக் கொண்டு வந்தேன்.

எப்போதெல்லாம் பில்டப் அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் நான் அனேகமாக ஏமாற்றம் அடைகிறேன். சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம், ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் இரண்டையும் உதாரணமாக சொல்லலாம். என் மனதின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிவிடுகின்றன என்று நினைக்கிறேன். இப்போதும் எனக்கு அப்படித்தான் ஆயிற்று. படித்த கதைகள் நன்றாகத்தான் இருந்தன, ஆனால் என் எதிர்பார்ப்புகள் இன்னும் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஒரு பத்து இருபது கதைகள் படித்த பிறகு என் மனநிலையை மாற்ற வேண்டும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது கொஞ்சம் கஷ்டமான காரியம். புத்தகத்தை எடுத்து மூலையில் வைத்துவிட்டேன். அப்புறம் ஒரே மூச்சாக படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தேன்.

நாஞ்சிலிடம் நான் என்ன எதிர்பார்த்தேன், ஏன் ஏமாற்றம் அடைந்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். நாஞ்சில் நேரடியாக கதை சொல்கிறார். அதுவே அவரது பலம் என்று புரிந்து கொள்ள எனக்கு நேரம் பிடித்தது. விட்டுவிட்டுப் படிக்கும்போது நன்றாகத்தானே எழுதி இருக்கிறார், அப்படி என்னதான் எதிர்பார்த்தேன் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் என்றே இன்று கருதுகிறேன்.

சிறந்த சிறுகதைகள் என்று லிஸ்ட் போட்டால் நினைவு வருவன:

இடலாக்குடி ராசா வாழ்வில் களைப்பு ஏற்படும்போதெல்லாம் இதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு ஏற்படலாம். அந்தஸ்து, பொருளாதாரம் என்ற வகைகளில் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அழகாக எழுதி இருக்கிறார்.

வனம். பஸ்ஸில் போகும் அவஸ்தைகளை விவரித்துக் கொண்டே வந்து கடைசியில் “போ மோளே பெட்டென்னு” என்று முடித்த விதம் ஒரு மாஸ்டருக்கு மட்டுமே கைவரும்.

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. சைவப் பிள்ளைமார் பின்புலத்தில் எழுதப்படும் கதைகளில் சும்மா பிய்த்து உதறிவிடுகிறார்.

பாம்பு குறிப்பிட வேண்டிய சிறுகதை. மனிதருக்கு தமிழ்ப் பேராசிரியர்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை. இந்த மாதிரி நக்கல் அவருக்கு மட்டுமே கைவந்த கலை.

சாலப்பரிந்து இன்னும் ஒரு சிறந்த சிறுகதை. இதே கருவை வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதையிலும் தமயந்தியின் அனல்மின் மனங்கள் சிறுகதையிலும் கூட பிரமாதமாகக் கையாண்டிருப்பார்கள்.

இந்த ஐந்து சிறுகதைகளையுமே நாஞ்சிலின் மிகச் சிறந்த கதைகளாகக் கருதுகிறேன். இவற்றில் நான்கை ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார்.

ஜெயமோகன் தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்த ஐந்து சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று நினைக்கிறேன். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹம் காத்தேன்” என்று சொல்லி இருக்கலாம், சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள். அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம்.

எஸ்ரா இந்நாட்டு மன்னர் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். நான் இந்தக் கதையை பெரிதாக ரசிக்கவில்லை.

கிழிசல் சிறுகதையை விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். ஹோட்டலில் பில் கொடுக்காமல் ஏமாற்றும் அப்பாவை பையனின் கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் கதை. நல்ல சிறுகதை, ஆனால் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று சொல்லமாட்டேன்.

இவற்றைத் தவிர இந்தக் கதைகளையும் குறிப்பிடலாம்.

விலாங்கு ஒரு கண்ணோட்டத்தில் இது வலியவன் எளியவரிடம் ஆட்டையைப் போடும் கதைதான். நுண்விவரங்கள்தான் இந்தக் கதையை உயர்த்துகின்றன.

துறவு மாதிரி ஒரு கதையைத்தான் நான் எழுத ஆசைப்படுகிறேன். கடைசி வரியில் கதையின் உலகத்தையே மாற்றிவிடுகிறார்.

பேச்சியம்மை என் மனதைத் தொட்ட சிறுகதைகளில் ஒன்று. என் குற்ற உணர்வை அதிகரிக்கும் சிறுகதை. ஊருக்கு போகாமல் இருக்க பணச்செலவு, விடுமுறை இல்லாமை என்று ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவை அம்மாவின் மகிழ்ச்சி என்ற ஒரு காரணத்துக்கு சமமாகாது என்பதை உணர வைக்கும் சிறுகதை. இதுவாவது என்னைத் திருத்துகிறதா என்று பார்ப்போம்…

எசுருக்கமாகச் சொன்னால் நாஞ்சிலின் சிறுகதைகள் தவறவிடக் கூடாதவை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

நாஞ்சில் பேட்டி

nanjil-nadanநாஞ்சில் நாடனுடைய ஒரு பிரமாதமான பேட்டி. அவரது ஆளுமையை நன்றாக வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்ட விருப்பமாக இருக்கிறது. ஏதோ இந்தக் கணத்தில் தேர்ந்தெடுத்த மேற்கோள் கீழே.

Of late, எனக்கு அந்த நம்பிக்கை வலுவா இருக்கு. எனக்கு ஏதோ ஒரு guiding force இருக்கு. இப்ப வாழ்கைல, கடந்த ஒரு பத்து வருஷம், இருபது வருஷம், எனக்கு சோத்துக்குப் பஞ்சம் இல்ல. துணிமணிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனா எப்பவுமே பண நெருக்கடி இருந்திருக்கு. இந்த வீடு கட்டிக் குடிவந்ததுக்கப்புறம் – என் பையன் பெரும் பணம் செலவு பண்ணிக் கட்டியிருக்கான் – பின்னாடி வரக்கூடிய செலவுகள் இருக்கே, குடிநீர் இணைப்பு எடுக்கணும், அதுக்கு மோட்டர் வாங்கணும், ப்ளம்பர் 8000 கேட்கிறானோ,10000 கேட்கிறானோ! நான் ஐநூறு ரூபாய் நோட்டுப் பார்த்தே பல நாள் ஆச்சு. அதுக்காக பஸ்ல போகும்போது, கண்டக்டர்கிட்டப் பார்த்ததில்லையான்னு கேட்கக்கூடாது. இது ரெண்டு விதமா மனித மனதை இயக்குது. உங்களைத் தோற்றுப் போகச் செய்யும். தோல்வி மனப்பான்மையைப் பெருக்கும். உங்கள வலுவிழக்கச் செய்யும். நான், by nature, diehard species. வடிவேலு சொல்வாரில்லையா, எத்தனை வாட்டி அடிச்சாலும் அழமாட்டேங்கிறான்னு மறுபடி அடிச்சாங்க. ரொம்ப நல்லவன்டா இவன். அந்த ஜோக் மாதிரித்தான் இது.

கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

1000, ஆயிரம், ஹசார், தௌசண்ட்

1000wala


இது இந்தத் தளத்தின் ஆயிரமாவது பதிவு.

ஐந்து வருஷங்களில் ஆயிரம் பதிவுகள் என்றால் குத்துமதிப்பாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு. பரவாயில்லை.

ஆனால் இதைத் தொடர முடியுமா என்று தெரியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு நூறு பேர் இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள். சமநிலை (equilibrium) வந்துவிட்டது என்று நினைக்கிறேன், இதற்கு மேலும் நிறைய பேர் வந்து படிப்பார்கள் என்றெல்லாம் எனக்கு நினைப்பு இல்லை. நான் பதிவுகளை எழுதுவது எனக்கு அது விருப்பமான செயலாக இருப்பதால்தான் என்றாலும், நூறு பேர்தான் படிக்கிறார்கள் எதற்கு மாய்ந்து மாய்ந்து எழுதுகிறோம் என்ற அலுப்பு சில சமயம் எழத்தான் செய்கிறது.

விடாமல் எழுதியதன் ஒரே லாபம் நண்பர்கள்தான். அனேகரை இன்னும் பார்த்தது கூட இல்லை, இருந்தாலும் நண்பர்கள்தான். கேசவமணி, ரெங்கசுப்ரமணி, ராஜ் சந்திரா, சிவா கிருஷ்ணமூர்த்தி, பாஸ்டன் பாலா, நட்பாஸ், எம்.ஏ. சுசீலா, கௌரி+கிருபானந்தன் ஆகிய பேர்கள் இந்தக் கணத்தில் நினைவு வருகின்றன. பல பேர்களை விட்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியும்.

bags_rv_jeyamohanஎழுத்தாள நண்பர்களும் உண்டு. தளத்தின் மீது நிறைய தாக்கம் உள்ளவர் என்றால் அது ஜெயமோகன்தான். நீ ஏன் ஜெயமோகன் என்ற கண்ணாடி வழியாகவே எதையும் பார்க்கிறாய் என்று ஆரம்ப காலத்தில் தோழி சாரதாவும் விமலும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் எனக்கு ஒரு reference என்று புரிய வைப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. மேலும் ராட்சஸன் போல எழுதுகிறார், பத்து எழுதினால் ஒன்றாவது என்னை யோசிக்க வைக்காதா? இந்தத் தளத்தின் மீது அவரது தாக்கம் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.

p_a_krishnan பி.ஏ. கிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் நாடனின்nanjil-nadan தாக்கம் இந்தத் தளத்தில் ஜெயமோகன் அளவுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இருவரையும் நெருக்கமானவர்களாக உணர்கிறேன். அந்த நெருக்கத்துக்கு இந்தத் தளமும் ஒரு காரணம்.

விடாமல் தொடர படிக்கும் ஆர்வமும் தேடலும் கொண்ட எங்க ஏரியா சிலிகன் ஷெல்ஃப் என்ற சிறு குழு தரும் ஊக்கம் ஒரு முக்கியமான காரணம். இவர்களோடு பேசுவதும் கலாய்ப்பதும் சண்டை போடுவதும் எப்போதுமே ஜாலியான விஷயம்தான். ஏறக்குறைய கல்லூரிப் பருவ விடலைகள் மாதிரிதான் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தளத்தின் support structure இவர்கள்தான். அடுத்த முறை இந்த கும்பல் கூடும்போது ஒரு புகைப்படம் எடுத்து இந்தப் பதிவில் போடுகிறேன்…

இந்தத் தள வாசகர்களுக்கு இவர்கள் யாரும் தெரியாதவர்கள் இல்லை, இருந்தாலும் சுருக்கமான அறிமுகத்துக்கு இது உகந்த தருணம்.

VisuMuthukrishnanஎன்னை ஆச்சரியப்படுத்தும் இளைஞர்கள் முகினும் விசுவும். எனக்கு அவர்கள் வயது இருக்கும்போது இத்தனை அறிவோ, ஆழமான படிப்போ, தேடலோ இல்லை. இப்ப மட்டும் என்ன வாழுது என்று முகினின் மைண்ட வாய்ஸ் கேட்கிறது.

Balaji_fremontபாலாஜி நான் மட்டும் என்ன கிழவனா என்று கேட்பார். அவரது ஆழமான+அகலமான படிப்பு அவரது வயதையும் கொஞ்சம் உயர்த்திக் காட்டுகிறது. இப்படி எழுதியதற்காக பாலாஜியின் மனைவி அருணா என்னை அடுத்த முறை பார்க்கும்போது இரண்டு அடி போடப் போகிறார்!

SV_fremontசுந்தரேஷ் தீவிர ஹிந்துத்துவர். சில சமயம் இலக்கியத்தையும் ஹிந்துத்துவ கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது எங்களுக்குள் அடிதடி சண்டை நடக்கும். அவரது மனைவி நித்யாவும் தீவிர வாசகி. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடமும் நன்றாகப் பேசுவார். ஆனால் பாருங்கள் உலகக் கன்னட மாநாட்டுக்கு போன வருஷம் பைரப்பா வந்தபோது அவரது சொற்பொழிவை எழுதித் தருகிறேன், சிலிகன் ஷெல்ஃபில் போடலாம் என்று சொன்னார். சிலிகன் ஷெல்ஃபில் பதிவைப் போடுவதகு பதிலாக அந்த வார்த்தையை அவர் வீட்டு ஷெல்ஃபில் – பரணில் – போட்டுவிட்டார்!

சுந்தரேஷ் தீவிர ஹிந்துத்துவர் என்றால் ராஜன் அதிதீவிர ஹிந்துத்துவர். இலக்கியம் மட்டுமல்ல, எல்லாவற்றையுமே ஹிந்துத்துவ கண்ணாடி வழியாகத்தான் பார்ப்பார். எனக்கு வழுக்கை, அவருக்கு தலை நிறைய முடி என்றால் அதற்கும் நான் மோடிக்கு எதிரான அரசியல் நிலை எடுப்பதும் அவர் மோடியை ஏறக்குறைய தெய்வமாக வழிபடுவதும்தான் காரணம் என்பார். எங்களுக்குள் சில சமயம் இல்லை, பல சமயம் அடிதடி சண்டை நடக்கும். அவரை சிலிகன் ஜில்லா தமிழ் ஆர்வலர்களின் உந்துவிசை என்றே சொல்லலாம். விடாமல் இலக்கியவாதிகளை அழைத்து வந்து, திட்டமிட்டு, பணம் சேர்த்து… அவரது உழைப்பைக் கண்டு பொறாமைப்படுகிறேன். எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. ஜெயமோகனோடு ஏற்பட்ட சமீபத்திய கசப்பு அவரையும் பாரதி தமிழ் சங்கத்தையும் முடக்கிவிடக் கூடாது. எனக்கு ராஜனோடு சண்டை போடுவதிலேயே நேரம் போய்விடும், அதனால் அவரது மனைவி செல்வியோடு பேசுவது கொஞ்சம்தான். ஆனால் அந்தக் கொஞ்சப் பேச்சிலேயே அவருடைய வாசிப்பும் சிறப்பானது என்று உணர முடிகிறது.

பத்மநாபன் புத்தகங்களைப் பற்றி பேச தவறாமல் வருபவர். பேசுவதும் தெளிவாக, சிறப்பாக இருக்கும்.

காவேரியால் எல்லா நேரமும் வரமுடிவதில்லை. ஆனால் வரும்போதெல்லாம் பிய்த்து உதறுவார். பழைய தமிழ் இலக்கியம், சங்கப் பாடல்கள் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.

arunaநான் மிகவும் மிஸ் செய்வது தோழி அருணாவைத்தான். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் இந்தியா திரும்பிவிட்டார். ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ளவர். மடை திறந்தது போல பேசுவார்.

bags_fremontஆரம்பத்திலிருந்தே கூட இருப்பவன் பக்ஸ்தான். முப்பது வருஷத்துக்கு மேலாகப் பழக்கம். அவனிடமும் சரி, அளந்தே பேசும் அவன் மனைவி சித்ராவிடமும் சரி, உரிமையோடு பழகலாம். அவனிடம் என்னை கடுப்படிக்கும் விஷயம் ஒன்றுதான் – எனக்கு தொந்தி சரிந்து மிச்சம் மீதி இருக்கும் மயிரே வெளிர்ந்து தந்தம் அசைந்து முதுகே வளைந்தும், அவன் காலேஜில் பார்த்த மாதிரியேதான் இருக்கிறான்! கூட எழுதுகிறேன் என்று ஆரம்பித்தான், ஆனால் வருஷத்துக்கு ஒன்றிரண்டு பதிவு மட்டுமே எழுதுகிறான். நல்லா இருடே!

என் படிப்பு ஆர்வத்துக்கு ஊற்றுக்கண் என் அம்மாதான். அம்மாவின் தேடல்தான் என்னிடமும் ஒட்டிக் கொண்டது. ஆனால் அம்மாவுக்கு கம்ப்யூட்டர் இன்னும் பிடிபடவில்லை, இதையெல்லாம் படிப்பதில்லை…

கடைசியாக என் மனைவி ஹேமா – ஹேமாவுக்கு நான் படிப்பில் மூழ்கி மிச்ச விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுகிறேன் என்று சில சமயம் (நியாயமான) கோபம் வரும். ஆனால் எனக்கு இது முக்கியம் என்பதால் எனக்கு முழு சப்போர்ட்தான். சிலிகன் ஷெல்ஃபிற்கு என்று ஏதாவது பெருமை இருந்தால் பாதியாவது அவளைச் சேர வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்