ஆ. மாதவன் – அஞ்சலி

மாதவன் மறைந்து ஒரு மாதத்திற்கு மேலாயிற்று. அவரை நான் அதிகம் படித்ததில்லை. நல்ல வேளையாக அவர் எழுதிய புனலும் மணலும் புத்தகம் அலமாரியில் இருந்தது. அதைப் படித்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தேன். கெட்ட நேரம், அலுவலக வேலைப் பளுவும் அதிகமாக இருந்தது. சின்னப் புத்தகம்தான், ஆனால் படித்து முடிக்கவும் எழுதவும் ஒரு மாதம் ஆகிவிட்டது.

மாதவனின் நாயனம் சிறுகதை ஒன்றைத்தான் நான் முன்னால் படித்திருந்தேன். Minimalist எழுத்து என்றால் அதுதான். எளிய ஒற்றை வரி முடிச்சை எத்தனை சிறப்பாக வடித்திருக்கிறார்! கச்சிதமான எழுத்து. சும்மாவா ஜெயமோகனும் எஸ்ராவும் இதை அவரவர் போட்ட தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்!

ஆனால் ஆ. மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோதுதான் அவரைப் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டது. (ஜெயமோகனையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.) புனலும் மணலும் எல்லாம் அதற்குப் பிறகுதான் வாங்கினேன், படிக்க இத்தனை வருஷமாயிற்று. அவர் இருந்திருந்தால் இப்படி எழுத்தாளர் இறந்த பிறகுதான் அவர் எழுதிய புத்தகங்களைப் படித்து அஞ்சலி எழுதும் வாசகன் என்ற கருவை வைத்தே இன்னொரு பிரமாதமான சிறுகதை எழுதி இருப்பார்.

சரி முதலில் புனலும் மணலும் பற்றி:


புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம் நாஞ்சில் நாடன் நினைவுதான் வந்து கொண்டே இருந்தது. ஆ. மாதவனுக்கு நாஞ்சில்தான் மிகவும் பிடித்த அடுத்த தலைமுறை எழுத்தாளர். நாஞ்சிலுக்கு ஆ. மாதவன் குரு ஸ்தானத்தில் உள்ளவர். இருவரும் தங்களையே அடுத்தவர் எழுத்தில் கண்டார்களோ என்னவோ.

புனலும் மணலும் ஆற்றை, ஆற்றில் மணல் வாரப்படும் தொழிலை பின்புலமாகக் கொண்டது. நாவலுக்கு பொருத்தமான பேரை வைத்திருக்கிறார். மெய்நிகர் அனுபவத்தை தருவது இலக்கியத்தின் ஒரு முக்கியத் தகுதி. அந்த அனுபவத்தை முழுமையாகத் தரும் எதார்த்தவாத, வட்டார வழக்கு நாவல்.

ஒரு வரியில் கதையை சுருக்கிவிடலாம். தனக்கு மகள் முறை உள்ள, குரூபியான இளம் பெண்ணை வெறுக்கும் அப்பா, அவ்வளவுதான் கதை. பின்புலம் முன்னே சொன்ன மாதிரி “புனலும் மணலும்”. கதையின் பின்புலம் – ஆறு, ஆற்றையும், ஆற்று மணலையும் நம்பி வாழும் பலர் அருமையாக சித்தரிக்கப்படுகிறது. அப்பா அங்குசாமியின் backstory – அவர் விரும்பி மணக்கும் தங்கம்மை, அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள காதல், தங்கம்மையின் அவலட்சண மகள் பங்கி, ஆரம்பத்திலிருந்தே பங்கியை ஒரு தடங்கலாக, இடையூறாக, பல்லில் நிரடும் சிறு கல்லாகப் பார்க்கும் அங்குசாமி, பங்கியை மட்டுமே வெறுக்கும் அங்குசாமி, ஏதோ ஒரு அனாதை தாமோதரனை ஆதரித்து வளர்க்கும் அங்குசாமி, தாமோதரனுக்கும் பங்கிக்கும் இடையே உருவாகும் சகோதர உறவு, அங்குசாமி பங்கியைக் கரித்துக் கொட்டும்போதெல்லாம் வருந்தும் தங்கம்மை, அவளை ஆதரித்துப் பேசும் தாமோதரன், தங்கம்மையின் மரணம், அங்குசாமிக்கு ஏற்படும் கைக்காயம், கைக்காயத்திற்கு பிறகு கஞ்சிக்கும் பங்கி சம்பாத்தியம் தேவைப்படும் நிலை எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. இறுதிக் காட்சியில் பங்கியின் மரணமும் நல்ல அழுத்தமான முடிச்சு.

வட்டார வழக்கும் மிக அருமையாக வந்திருக்கிறது. மிகவும் ரசித்துப் படித்தேன். நாவலின் இறுதியில் நானும் அடிக்கடி “கொள்ளாமே!” என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் என் கண்ணில் இந்த நாவல் குறையுள்ள படைப்பே. 150 பக்கத்தில் 50 பக்கமாவது அங்குசாமி பங்கியை வெறுக்கிறார் என்று திருப்பித் திருப்பி வருகிறது. அது காட்சிகளால் பெரிதாக வேறுபடுத்தப்படவில்லை. அது ஒரு தொழில் நுட்பக் குறைவாகவே பட்டது. உண்மையைச் சொல்லப் போனால் என் புனைவுகளில் எனக்கு ஒரு முடிச்சை இரண்டு முறை கூட பெரிதாக வேறுபடுத்தி சொல்லத் தெரியவில்லை. என்னடா இவருக்கும் இதே பிரச்சினையா என்றுதான் தோன்றியது. நாவலின் பின்புலமும், வட்டார வழக்கும், வாழ்க்கையின் போக்கும்தான் நாவலைக் காப்பாற்றுகிறது.

ஜெயமோகன் தனது சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இந்த நாவலைக் குறிப்பிடுகிறார். எஸ்ராவின் பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

புனலும் மணலும் நாவலை 1974-இல் முதலில் வெளியிட்டது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம்!


மாதவனின் சுவாரசியமான ஆளுமையாக இருந்திருப்பார். பூர்வீகம் செங்கோட்டை. என் அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே வயதுதான். திருவனந்தபுரத்தில் பிறந்து, வளர்ந்து, வணிகராக வாழ்ந்திருக்கிறார். ஜெயமோகன் தளத்தில் அவரது விரிவான பேட்டி (பகுதி 1, 2, 3) வந்திருக்கிறது, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அவரது ஆளுமையைப் புரிந்து கொள்ள ஜெயமோகனின் இந்தப் பதிவைப் படியுங்கள். அவரது இந்தப் பேட்டியும் உதவலாம்.

அந்த வணிகப் பின்புலத்தை வைத்து நிறைய சிறுகதைகள் எழுதி இருக்கிறார். கடைத்தெரு கதைகள் முக்கியமான சிறுகதைத் தொகுப்பாம். நாயனத்தைத் தவிர பூனை, பதினாலுமுறி, புறா முட்டை, தண்ணீர், அன்னக்கிளி ஆகிய சிறுகதைகளை ஜெயமோகன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்ரா பட்டியலில் நாயனம் மட்டும்தான்.

கிருஷ்ணப்பருந்து (1980) அவருடைய சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. எஸ்ரா அவரது சிறந்த 100 தமிழ் நாவல்கள் பட்டியலில் இதைச் சேர்த்திருக்கிறார். அ. முத்துலிங்கம் நாவலைப் படித்த அனுபவத்தை இங்கே விவரிக்கிறார். ஜெயமோகன் வார்த்தைகளில்:

திருவனந்தபுரம் காலை பஜாரில் கடை வைத்திருக்கும் ஆ.மாதவன் நாற்பது வருடங்களாக திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே எழுதுபவர். தெருவில் வாழும் ‘உயிர் வாழ்தல் போட்டி’, அதன் ஆழத்து இருள் சலனங்கள். இந்நாவலும் அதுவே. இந்நாவலில் வரும் சாமியார் தன் வீட்டில் மாட்டியுள்ள நிர்வாணப் பெண்ணின் படத்திலிருந்து நாவலை மீண்டும் புதிதாகப் படிக்கலாம். ஆ.மாதவனின் சாதனை என்றால் இப்படைப்புதான்.

தி.ஜா.வும் இந்த நாவலை பெரிதாகப் பாராட்டி மாதவனுக்கே 1982-இல் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்திலிருந்து:

இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள், இவற்றை அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். என் போன்றவர்களுக்கு இது புதிய அனுபவம். வெறும் புறத்தை மட்டுமின்றி இந்த சங்கமத்தின் ஆழங்களை, சிரத்தையோடும் உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டி இருப்பது சும்மா புகைப்படம் போல் இல்லாமல் ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்படுத்தும் திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது. படித்து முடித்து நினைக்கும்போது, அங்கெல்லாம் மீண்டும் ஒருமுறை வந்து தங்க ஆசை எழுகிறது. குருஸ்வாமியும் அவர் இதயமும்தான் இந்த நாவலின் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம், உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லாவிட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல் வெற்றி பெறுகிறது.

மாதவனின் பாச்சி, சாத்தான் திருவசனம் ஆகிய சிறுகதைகள் அழியாச்சுடர் தளத்தில் கிடைக்கின்றன. பாச்சி சிறுகதையில் நாணுக்குட்டனுக்கு இனி வேலையும் மாதச் சம்பளமும் உண்டா என்ற கேள்வியைப் பற்றி ஒரு வரி கூட கதையில் கிடையாது, ஆனால் கதை முழுவதும் அந்தக் கேள்வியின் அழுத்தம்தான் விரவிக் கிடக்கிறது. மிகத் திறமையான எழுத்து.

மாதவனுக்கு 2015-க்கான சாஹித்ய அகடமி விருது – இலக்கியச் சுவடுகள் என்ற திறனாய்வு நூலுக்காக – கிடைத்தது. தேர்ந்தெடுப்பவர்கள் கமிட்டியில் நாஞ்சில் நாடனும் இருந்தார்!

மாதவனின் படைப்புலகத்தை அணுக, புரிந்து கொள்ள அவருடைய இந்தப் பேட்டி, நாஞ்சில் எழுதிய இந்தப் பதிவு, எஸ்ரா எழுதிய கட்டுரை, சுகுமாரன் எழுதிய பதிவு, விகடனில் இந்தக் கட்டுரை ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆ. மாதவன் பக்கம், அஞ்சலிகள்

ஆ. மாதவனுக்கு சாஹித்ய அகடமி விருது

aa. madhavanஇந்த வருஷத்துக்கான சாஹித்ய அகடமி விருது ஆ. மாதவனுக்குக் கிடைத்திருக்கிறது. வரவர அகடமி திருந்திவிட்டாற்போல இருக்கிறது. தேர்ந்தெடுத்த ஜூரிகள் நாஞ்சில், (சிலம்பொலி? பேராசிரியர்) செல்லப்பன், சிற்பி பாலசுப்ரமணியம். எனக்கென்னவோ இது நாஞ்சிலின் கைங்கர்யம் என்றுதான் தோன்றுகிறது. 🙂

அவரது இலக்கியச் சுவடுகள் என்ற கட்டுரை நூலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். மூன்று வருஷங்களுக்கு முன் வெளியான படைப்புக்குத்தான் விருது தரப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் இந்தப் புத்தகத்துக்கு என்று அறிவித்திருக்கிறார்களாம். அவரது சிறுகதைகள் – குறிப்பாக ‘கடைத்தெரு கதைகள்‘ – மற்றும் இரண்டு நாவல்கள் – கிருஷ்ணப்பருந்து (1982), புனலும் மணலும் (1974) – ஆகியவைதான் அவரது முக்கியமான படைப்புகள் என்று நினைக்கிறேன்.

நான் கிருஷ்ணப்பருந்தை ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னால் நிறைய தேடி இருக்கிறேன், கிடைக்கவே இல்லை. திலீப்குமாரின் கடையில் கூட கிடைக்கவில்லை. நண்பர்களிடமும் கிடைக்கவில்லை. இன்று வரை படிக்க முடியவில்லை. இந்த விருதுக்கு அப்புறமாவது அவரது புத்தகங்கள் மீண்டும் பதிக்கப்பட வேண்டும்.

நானெல்லாம் மாதவனின் எழுத்துக்களை இணையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்ததுதான். அவரது நாயனம் சிறுகதை பரவலாகப் பேசப்படும் ஒன்று. ஜெயமோகனது சிறுகதைப் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று, ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பட்டியல் மீது எனக்கு முழு நம்பிக்கை இல்லை. என் சீர்தூக்கிப் பார்த்தலில் அடிப்படையில் நான் இந்தச் சிறுகதையைப் பரிந்துரைக்கிறேன். ஆனால் நான் எனது டாப் நூறு தமிழ்ச் சிறுகதைகள் என்று தொகுத்தால் அதில் வராது.

அவரது இன்னும் இரண்டு சிறுகதைகள் – பாச்சி, சாத்தானின் திருவசனம் – அழியாச்சுடர்கள் தளத்தில் கிடைக்கின்றன. இன்னொரு சிறுகதை – திருடன் – அவரது தளத்தில் கிடைக்கிறது. எல்லாவற்றையும் நான் பரிந்துரைக்கிறேன்.

முதல் விஷ்ணுபுரம் விருது பெற்றவரும் மாதவன்தான்.

மாதவனுக்கு ஒரு தளமும் இருக்கிறது. ஜெயமோகன் அவரை பேட்டி கண்டது, நாஞ்சில் கிருஷ்ண்ப்பருந்தைப் பற்றி எழுதி இருப்பது, வேதசகாயகுமார் அவரது சிறுகதைகளைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று, எஸ்ராவின் கட்டுரை ஒன்று என்று பல சுவாரசியமான பதிவுகள் அங்கே கிடைக்கின்றன.

தெலுங்கில் வோல்கா பரிசு பெற்றிருக்கிறார். வோல்காவின் பேரையாவது நான் கேட்டிருப்பது கௌரி கிருபானந்தனின் புண்ணியத்தில்தான். கௌரி அவரைப் பற்றி எழுதிய அறிமுகக் கட்டுரைதான் அடுத்த பதிவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆ. மாதவன் பக்கம், விருதுகள்