சத்தியமூர்த்தி

விடுதலைப் போராட்டத்தின் இரண்டாம் நிலை தலைவர்கள் – வ.உ.சி., சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசஃப், திரு.வி.க., நாரிமன், அரவிந்தர், சரத்சந்திர போஸ், பிபின் சந்திர பால், அன்சாரி, புலாபாய் தேசாய், ஜம்னாலால் பஜாஜ், டாக்டர் கிச்லூ போன்றவர்கள் – என்னை fascinate செய்பவர்கள். இவர்கள் அனேகமாக எந்தப் பெரிய பதவியையும் அடையாதவர்கள். சிறு வட்டத்திற்குள் பிரகாசித்தவர்கள். பலரும் விடுதலைக்கு முன்னே இறந்தே போய்விட்டார்கள். இன்று அனேகமாக மறக்கப்பட்டவர்கள். என்ன கிடைக்கும் என்று நினைத்துப் போராடினார்கள்? எதற்காக சிறை சென்றார்கள்? சொத்து சுகத்தை இழந்தார்கள்?

அதுவும் சத்தியமூர்த்தி! அவர் சுகமாக வாழ விரும்பி இருக்கிறார். சுகவாழ்வு என்றால் ருசியான உணவு,  நேர்த்தியான ஆடை, வாசனை திரவியம், சங்கீதக் கச்சேரி, நாடகம்,  மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வீடு, கார் அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. அதற்கே உல்லாசி என்று அன்று திட்டி இருக்கிறார்கள்.

அவரிடம் எந்த போலித்தனமும் இல்லை.  நாலு பேர் என்னை வாழ்த்தினால் எனக்கு உற்சாகம் கிடைக்கிறது என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக புகழ்ச்சிக்கு மயங்குபவர் என்று திட்டு வாங்கி இருக்கிறார்.

பதவி வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். காமராஜே என்ன பதவி கிடைத்தாலும் ஏற்றுக் கொண்டுவிடுவார் என்று சொல்லி இருக்கிறார். தன் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம் அவ்வப்போது சுதந்திர இந்தியாவின் தூதராக இங்கிலாந்தில் பணியாற்ற வேண்டும் என்ற தன் விருப்பத்தை சொல்லி இருக்கிறார். போலித்தனமற்றவர். ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் நேரு தன்னால் எத்தனை முடியுமோ அத்தனை தூரம் காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்பதை எதிர்ப்பேன் என்றாராம். உடனே என்னால் எத்தனை முடியுமோ அத்தனை தூரம் காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்க வேண்டும் என்று போராடுவேன் என்று அதே பொதுக்கூட்டத்தில் மறுத்துப் பேசி இருக்கிறார். இந்த மாதிரி வெளிப்படையாகப் பேசிவிடுவதால் பதவி ஆசை பிடித்தவர் என்றும் திட்டு.

சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட மூத்த மகனான இவர்தான் படித்து குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார். இண்டர்மீடியட் படித்த பிறகு மேலே படிக்க ஆசை ஆனால் நிறைய பணப் பிரச்சினை. ஏதோ நிலத்தை விற்றுத்தான் படித்தார் என்று அவர் தம்பி சொல்கிறார். வக்கீலுக்குப் படித்தாலும் தொழில் நடத்தவில்லை. எஸ். ஸ்ரீனிவாச ஐயங்காரின் உதவியால்தான் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அரசியலில் ஈடுபட முடிந்ததாம். ஐயங்கார் பிரபல வக்கீல், காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார், திரு.வி.க.வுக்கும் உதவி இருக்கிறார். சத்தியமூர்த்தியின் தம்பி மைலாப்பூர் பி.எஸ். பள்ளி ஆசிரியராகத்தான் வாழ்ந்திருக்கிறார். பெரிய வக்கீல் படிப்பு எல்லாம் படிக்கவில்லை. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தை நடத்தவே கொஞ்சம் சிரமப்பட்டாரோ என்று தோன்றுகிறது. அவரைப் பார்க்க நிறைய தொண்டர்கள் வருவார்களாம், சாப்பாடு எல்லாம் போட முடியாதாம், காப்பி கொடுக்கவே கஷ்டமாம். சில சமயங்களில் பணம் பெற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் கேள்வி கேட்டிருக்கிறேன் என்று அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். கே.பி. சுந்தராம்பாள்தான் இவரது நிலையை கவனித்து ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று எங்கேயோ படித்த நினைவு இருக்கிறது. தான் தரித்திரன், அதனால் தன் நேர்மை சந்தேகிக்கப்படுகிறது என்று அவரே வருத்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்.

சுகமாக வாழ ஆசைப்படவர்தான், அவர் ஆசைப்பட்ட மாதிரி வாழ பணம் பற்றவில்லைதான், ஆனால் மீண்டும் மீண்டும் சிறைவாசம். 1931-இலிருந்து இறப்பது வரை நாலு முறை சிறை. ஒவ்வொரு முறையும் உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடைசி முறை அமராவதி சிறையிலிருந்து ஏற்பட்ட உடல் நலப் பாதிப்பிலிருந்து மீளவில்லை, இறந்தே போனார்.

1937-இல் அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள் என்கிறார் சாண்டில்யன். ஆனால் ராஜாஜிக்குத்தான் மேலிடத்தில் நெருக்கம், செல்வாக்கு. காந்தியும் காங்கிரஸ் மேலிடமும் கொடுத்த அழுத்தத்தால் சத்தியமூர்த்தி எப்போதும் போட்டியிடும், சுலபமாக வெல்லும் பல்கலைக்கழகத் தொகுதியையே ராஜாஜிக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையும் அப்படி விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறார். ராஜாஜியே ஒரு பொதுக்கூட்டத்தில் இதற்கு ஏதோ சாக்குப்போக்கு சொன்னதாகவும் அதே பொதுக்கூட்டத்தில் சத்தியமூர்த்தியும் உற்சாகம் இல்லாமல் அதை ஆமோதித்துப் பேசியதாகவும் தி.ஜ.ர. குறிப்பிடுகிறார்.  சத்தியமூர்த்தி அப்போது மத்திய சட்டசபை உறுப்பினர், அதை சாக்காக வைத்து அவருக்கு மாநில அளவில் போட்டி போட வாய்ப்பளிக்கவில்லையாம். அவரை மத்திய சட்டசபைக்கு அனுப்பியது ராஜாஜிக்குப் போட்டி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தால்தான் என்று தெரிகிறது. இதே போலத்தான் பம்பாய் மாநிலத்திலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நாரிமனை விட்டுவிட்டு பி.ஜி. கெர்ரை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக படேல் – முதல்வர் ஆக்கினார், நாரிமன் வெறுத்துப் போய் காங்கிரசை விட்டு விலகிவிட்டார் என்று படித்திருக்கிறேன்.

குறைந்த பட்சம் மந்திரி பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று காமராஜே சொல்கிறார். ராஜாஜி தன்னிடமிருந்து பிணக்கு கொண்டு விலகி மத்திய சட்டசபையில் உறுப்பினராக இருந்த டி.எஸ்.எஸ். ராஜனை அழைத்து மந்திரி பதவி கொடுத்தார், ஆனால் இவரை கண்டுகொள்ளவில்லை. இவருக்கு மந்திரி பதவி கொடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாராம். தனக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்று நினைத்தாரோ என்னவோ. காமராஜுக்கு ராஜாஜி மேல் இருந்த கசப்பு அங்கேதான் ஆரம்பித்தது என்று எங்கோ படித்திருக்கிறேன்.

அந்தத் தருணத்தில் ராஜாஜி திரு.வி.க.வையும் மந்திரி ஆக்கி இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். ராஜாஜி திரு.வி.க.வையும் இதே போல ஓரம் கட்டினார் என்று யாரோ (சக்திதாசன்?) சொன்னதைப் படித்திருக்கிறேன்.

சத்தியமூர்த்திக்கு கிடைத்த அதிகபட்ச பதவி சென்னை மேயர் என்பதுதான். அதுவும் அப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அமலில் இருந்திருக்கிறது, ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் ஒரு மேயர் ஒரு வருஷம் மட்டுமே பதவி வகிக்கலாம் என்று விதியாம். அதனால் ஒரே வருஷம்தான் பதவி. மத்திய சட்டசபை உறுப்பினர், மாநில சட்டசபை உறுப்பினர், கார்ப்பரேஷன் கவுன்சிலர், பல்கலைக்கழக senate உறுப்பினர் என்று சில பொறுப்புகள்.

எப்படி பதவி ஆசை உள்ள ஒருவரால் இப்படி மீண்டும் மீண்டும் தியாகம் செய்ய முடிந்தது? சுகவாழ்வு வாழ விரும்பிய ஒருவரால் எப்படி மீண்டும் மீண்டும் சிறை செல்ல முடிந்தது? காந்தி சொடுக்கு போட்டால், ஆடுரா ராமா, லங்கையைத் தாண்டுரா ராமா என்றால் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்ய இவர்கள் எல்லாம் தயாராக இருந்திருக்கிறார்கள்! அந்தக் கிழவரும் விட்டுக் கொடு, தியாகம் செய் என்று சொல்லத் தயங்குவதே இல்லை.

காந்தியின் மீது பெருமதிப்பு இருந்தாலும் காந்தீயத்தில் முழு நம்பிக்கை இல்லையாம். காந்தியின் பெரும் பங்களிப்பு என்பது மக்கள் எழுச்சியை உண்டாக்கியதுதான், ஆனால் காந்தி தன் விழுமியங்களை அரசியலில் புகுத்தி குட்டையைக் குழப்பக் கூடாது என்று கருதி இருக்கிறார். ஆனால் அப்படி குட்டையை குழப்புவதால்தான் காந்திக்கு பின்னால் ஒளிவட்டம் இருக்கிறது, அந்த ஒளிவட்டத்தால்தான் மக்கள் எழுச்சி உண்டானது என்பதையும் உணர்ந்திருந்ததாகத் தெரிகிறது. சட்டசபை, பதவி என்பது பலம் வாய்ந்த ஆயுதம், காந்தியின் விழுமியங்கள் சில சமயம் காங்கிரசை பலவீனப்படுத்திவிடுகிறது என்று நினைத்திருக்கிறார். ஆனால் யாருடன் முரண்பட்டாலும் – காந்தி, நேருவாக இருந்தாலும் சரி – நேரடியாக தன் கருத்தைச் சொல்லி அவர்கள் மனதை மாற்றத்தான் முயன்றிருக்கிறார். முன்னரே சொன்ன மாதிரி போலித்தனம் அற்றவர்.

சத்தியமூர்த்தி விடுதலை கிடைத்துவிட்டால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நம்பி இருக்கிறார். குறைந்தபட்சம் தன் பிரசங்கங்களில் அப்படித்தான் சொல்லி இருக்கிறார். நல்ல வேளை 47-க்கு முன்னாலேயே போய்விட்டார்.

அவரது பேச்சுக்கள் – சட்டமன்றத்திலும் சரி, பொதுக்கூட்டங்களிலும் சரி – பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய சட்டசபையிலும் சரி, மாநில சட்டசபையிலும் சரி கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருக்கிறார். காந்தி சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஒருவர் இருந்தால் போதும் என்று சொல்லி இருக்கிறார். டி.எஸ்.எஸ். ராஜன் தனக்கு சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அவர்தான் சொல்லிக் கொடுத்தார் என்கிறார். சி. சுப்ரமணியம் வாலிபர்களைக் கண்டால் அவருக்கு குஷி, அவர்களை சேவை செய்ய ஊக்குவிப்பார், ஒரு நாளைக்கு 10-20 கூட்டங்களில் பேசுவார் என்கிறார். சத்தியமூர்த்தியே பஞ்சாயத்து போர்டு தேர்தல் என்றால் கூட என்னைக் கூப்பிட்டு பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள், நான் எங்கே தொழில் நடத்துவது, என் குடும்பம் என்ன வாயு பட்சணமா செய்யும்  என்று அலுத்துக் கொண்டிருக்கிறார். எஸ்.எஸ். வாசன், சிட்டி, பெ.நா. அப்புசாமி, கல்கி, சங்கு சுப்ரமணியம், தி.ஜ.ர. மாதிரி பலரும் அவரது பேச்சைக் கேட்டு புல்லரித்திருக்கிறார்கள். பல வருஷங்களுக்கு முன் கேட்ட பேச்சைக் கூட நினைவு கூர்கிறார்கள். 1937-ஆம் ஆண்டு தேர்தலில் அவரது பேச்சை ஒலிப்பதிவு செய்து எல்லா பொதுக்கூட்டங்களிலும் போட்டார்களாம். முதல்வராகப் போகும் ராஜாஜியின் பேச்சைக் கூட இப்படி பதிவு செய்திருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஓட்டு கேட்க வீடு வீடாகப் போவார் என்கிறார் கல்கி. உண்மையிலேயே பெரிய பிரச்சார பீரங்கியாக இருந்திருக்கிறார்.

வாலிபர்களிடம், மாணவர்களிடம் கிரிக்கெட்டும் டென்னிஸும் ஹாக்கியும் விளையாடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். மலை ஏறுங்கள், சைக்கிளில், கால்நடையாக நாலு இடத்துக்குப் போங்கள், தேசம் பூராவும் சுற்றுங்கள், நாடகம், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள், சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொல்லி இருக்கிறார். இப்படி எல்லாம் ராஜாஜி சொல்லி இருக்க மாட்டார்! அதனால்தான் வாலிபர்களிடம் அவருக்கு செல்வாக்கு அதிகம் இருந்ததோ என்று தோன்றுகிறது. வாலிபர்களை விடுங்கள், வேலை பார்ப்பவர்களும் விடுமுறை எடுத்துக் கொண்டு நாலு இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். கோவில் குளம் அல்ல, மலை வாசஸ்தலம் மாதிரி இடங்களுக்கு போங்கள் என்கிறார். அவரே பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்களில் – குறிப்பாக மனோகரா நாடகத்தில் மனோகரனாகவே நடித்தும் இருக்கிறார்.

கலை பற்றி அவருக்கு சில நவீன எண்ணங்கள் இருந்திருக்கின்றன. புராணங்களையே நாடகமாகவும் திரைப்படமாகவும் நடிக்காதீர்கள், நாடகத்தை பாட்டால் நிரப்பாதீர்கள், சில நாடகங்களை opera போல மாற்றிக் கொள்ளுங்கள், ஆனால் பெருவாரியானவை புதிய கதைகளாகவும் வசனம், காட்சிகள் மூலம் முன் நகர்வதாகவும் இருக்க வேண்டும், தெம்மாங்கு கச்சேரிகளில் பாடப்பட வேண்டும், ஓரிரு பாட்டுகளை பாடகரும் ரசிகர்களும் கோஷ்டியாகப் பாடலாம்…

சத்தியமூர்த்தியைப் பற்றி குறை சொல்பவர்கள் வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு அவர் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்தார் என்பதுதான். நான் படித்த வரையில் அவர் பரத நாட்டியம் ஒழிந்துவிடக் கூடாது என்றுதான் கவலைப்பட்ட மாதிரி தெரிகிறது. அன்றைய “மேல் குலப்பெண்கள்” பரதநாட்டியம் கற்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அதை ஊக்குவித்தும் இருக்கிறார்.

தன் மகள் லட்சுமியிடம் அசாத்தியப் பிரியமாம். லட்சுமி அவருக்கு காலம் தாழ்ந்து – 38 வயதில் – பிறந்தவர். முதல் முறை அவர் சிறை சென்றதை லட்சுமி விவரிப்பது மிகவும் poignant ஆக இருக்கிறது. லட்சுமிக்கு ஐந்தரை வயது இருக்கும்போது கச்சேரிக்கு குடும்பத்தோடு சென்றாராம், இவர் திரும்பவில்லை, கைது. லட்சுமி அவரை கைதியாகப் பார்த்ததை தன்னால் என்றும் மறக்க முடியாது என்கிறார். லட்சுமி அவ்வப்போது சிறைக்கு சென்று அவரைப் பார்ப்பாராம், அப்படி லட்சுமி வரும் நாளெல்லாம் சத்தியமூர்த்திக்குத் திருநாள்தான் என்கிறார் கல்கி. தன் மகள் நாலு நாளில் வரப் போகிறாள், இரண்டு நாளில் வரப் போகிறாள் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொள்வாராம். பதின்ம வயது லட்சுமிக்கு அவர் எழுதிய கடிதங்கள் எல்லாம் அவர்களுக்குள் இருந்த ஆழமான பந்தத்தைக் காட்டுகின்றன. 1941-இல் சிறையில் இருந்தபோது தினமும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்!

சத்தியமூர்த்திக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். வால்டர் ஸ்காட் நாவல்களும் ரொம்பப் பிடிக்குமாம். டிக்கன்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட், ஷெர்லக் ஹோம்ஸ் பிடிக்குமாம். ரயில் பயணங்களில் படிக்க எட்கர் வாலசாம். தமிழில் கமலாம்பாளும் பத்மாவதியும் மட்டும்தானாம். புதுமைப்பித்தனைப் படிக்கவில்லை என்றாலும் கல்கியையும் புறம் தள்ளி இருப்பது வியப்பளித்தது. பாரதி, ஷெல்லி எல்லாம் பிடிக்குமாம்.

இந்தப் பதிவை எழுதக் காரணம் இணையத்தில் கிடைத்த மின்னூல்கள்தான் – குறிப்பாக சத்தியமூர்த்திக்காக டெல்லி தமிழ்ச்சங்கம் 1963-இல் வெளியிட்ட ஒரு இதழ். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  1. டெல்லி தமிழ்ச் சங்கம் இதழ் (1963)
  2. சத்தியமூர்த்தி நூற்றாண்டு சிறப்பிதழ் (1986)
  3. சத்தியமூர்த்தி பற்றி பிரபலஸ்தர்கள் (1944)
  4. சத்தியமூர்த்தி தன் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு (1945)
  5. சத்தியமூர்த்தியின் பேச்சுகள், கட்டுரைகளின் தொகுப்பு (1945)
  6. சத்தியமூர்த்தியின் மகள் – லட்சுமி கிருஷ்ணமூர்த்தி: புத்தகங்களைக் காதலித்தவர்

சாண்டில்யனின் “ஜலதீபம்” – 70% காமம், 25% சாகசம், 5% சரித்திரம்

சமீபத்தில் ஜஞ்ஜீரா கோட்டையைப் பற்றிய இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது. ஜஞ்ஜீராவின் வரலாற்றை விவரிக்கிறது. இப்போது இங்கு யாரும் வாழ்வதில்லையாம்.

ஜஞ்ஜீராவைப் பற்றி நான் அறிந்ததெல்லாம் சாண்டில்யன் மூலம்தான். இன்று யோசித்துப் பார்த்தால் சாண்டில்யனின் முக்கியத்துவமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வரலாற்றை, பண்பாட்டை அறிமுகம் செய்து வைத்ததுதான் என்று தோன்றுகிறது.

ஜஞ்ஜீராவைப் பற்றி அறிமுகம் செய்து வைத்த ஜலதீபம் புத்தகத்தைப் பற்றிய பதிவு கீழே…


ஒரு பத்து வயது வாக்கிலேயே சாண்டில்யன் புத்தகங்கள் அலுத்துவிட்டன. ஆனால் சாண்டில்யன் புத்தகங்களின் வழியாகத் தெரிந்து கொண்ட சரித்திரம் மறந்து போவதே இல்லை. ஒரு வேளை சரித்திரம் குறைவாகவும் சாகசம் அதிகமாகவும் இருப்பதாலோ என்னவோ. சரித்திரத்தை விடுங்கள், சம்பவங்களே ரொம்பக் கம்மி.

ஜலதீபமும் அப்படித்தான். மூன்று பாகம் கதையில் உள்ள சரித்திரம் மூன்று வரி கூட இருக்காது. ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், அபிசீனிய சித்திகள் போன்றவர்களின் போட்டி இருந்தாலும், கனோஜி ஆங்க்ரே அரபிக் கடலின் முடி சூடா மன்னர், மகாராஷ்டிர அரண்மனைப் பூசலில் முதலில் ஷாஹுவுக்கு எதிராகப் போராடினாலும் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் முயற்சியால் ஷாஹுவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டார் என்பதுதான் சரித்திரம். அதை வைத்தே ஆயிரத்துச் சொச்சம் பக்கம்.

கதைச்சுருக்கமும் சில வரிகளில் எழுதிவிடலாம். தமிழன் இதயசந்திரன் தஞ்சையில் ராஜாராமின் ரகசிய மனைவிக்குக் கொடுத்த வாக்குக்காக ஒரு ஆளைத் தேடி மகாராஷ்டிரம் வருகிறான். அப்போது ஷாஹு-தாராபாய் அரசுரிமைப் போட்டி. ஷாஹுவின் தரப்பில் இருக்கும் பானுதேவியிடம் மயங்குகிறான். பானு அவனால் ஈர்க்கப்பட்டாலும் ஷாஹு ஜெயிப்பதற்கு அவனை எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் சதா சிந்திக்கிறாள். சித்திகள் தலைவனிடம் ஒரு பூசல், அதிலிருந்து கனோஜியின் வளர்ப்பு மகள் மஞ்சுவால் காப்பாற்றப்படுவது, மாலுமி ஆவது, ஜலதீபம் கப்பலின் உபதளபதி, சில ஆங்கிலக் கப்பல்களைக் கைப்பற்றுவது, அங்கே காதரினோடு உறவு, ஷாஹுவின் தளபதியோடு தரையில் போர், வெற்றி, ஆனால் திடீரென்று தேடி வந்தவன் அவனாகவே மாட்டிக் கொள்வது, பாலாஜி விஸ்வநாத்தின் சமரசம், மஞ்சுவோடு திருமணம் என்று கதை போகிறது.

காமம் (சாண்டில்யன் கண்ணில்) 70%, சாகசம் 25%, சரித்திரம் 5% என்ற கலவையில் நிறைய காகிதத்தை வீணடித்திருக்கிறார். ஆங்கிலக் கப்பல்களை கைப்பற்றுவது ஒரு அத்தியாயம் என்றால் காதரினோடு குலாவுவது ஐந்து அத்தியாயம் வருகிறது. அவர் எழுதியது அந்தக் காலத்துக்கு கிளுகிளுப்பான வர்ணனையாக இருக்கலாம். இன்று அலுப்பு தட்டுகிறது. எல்லாரும் இதயசந்திரனுக்கு வசதியாக தமிழ் கற்றிருக்கிறார்கள். இதயசந்திரனும் மற்றவர்களும் ஆண்டுகளையும் மாதங்களையும் ஆங்கிலக் கணக்குப்படிதான் – டிசம்பர் 1712 என்றெல்லாம்தான் கணிக்கிறார்கள், இந்திய மரபுப்படி இல்லை. போரைப் பற்றி சாண்டில்யன் வர்ணிப்பது சின்னப்பிள்ளைகளுக்கு கதை சொல்வது போலத்தான் இருக்கிறது. பாலாஜி விஸ்வநாத் சொல்வதை எல்லாரும் அப்படியே கேட்கிறார்கள். முதல் பக்கத்திலேயே அவரை பேஷ்வா ஆக்கி இருந்தால் நாவல் சின்னதாக இருந்திருக்கும்.

சாண்டில்யனின் பலவீனங்கள் தெரிந்தவையே. அவரது பலம் என்ன, ஏன் அலுத்துவிட்டன என்று குறை சொல்லிக் கொண்டே ஜலதீபம் போன்ற புத்தகங்களை இன்னும் படிக்கத் தோன்றுகிறது, நாஸ்டால்ஜியாவைத் தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவலைப் பொறுத்த வரையில் எனக்குத் தெரிவது அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் – கனோஜி, பாலாஜி விஸ்வநாத் மற்றும் அபிசீனிய சித்திகள், ஜஞ்ஜிரா கோட்டை ஆவலைத் தூண்டும் பாத்திரங்கள்+தளங்கள். அவர்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலைக் கிளப்பி விடுகிறார். ஜஞ்ஜீரா கோட்டை இன்னும் இருக்கிறதாம், அதைப் பார்க்க வேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது. இடது பக்கம் இருக்கும் படத்தைப் பாருங்கள், தீவு ஒரு பெரிய மரகதப் பதக்கம் போல ஜொலிக்கிறது! இரண்டாவதாக சாண்டில்யனின் பாத்திரங்கள் caricatures-தான் என்றாலும் ஒரு ஜெகசிற்பியனை விட, அகிலனை விட உயிருள்ள பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

ஜெயமோகன் இதை historical romances-இன் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். சாண்டில்யனின் படைப்புகளில் இது நல்ல நாவல்தான். சரித்திர நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்றுப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாண்டில்யன் நூற்றாண்டு
சாண்டில்யனின் “கன்னி மாடம்”
கனோஜி ஆங்க்ரே பற்றி விக்கி குறிப்பு
பாலாஜி விஸ்வநாத் பற்றி விக்கி குறிப்பு
ஜன்ஜிரா கோட்டை பற்றி விக்கி குறிப்பு
சித்திகள் பற்றி விக்கி குறிப்பு

சாண்டில்யன்

பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு சாண்டில்யன் நாவலை – ஜலமோகினி – மீண்டும் படித்தேன். எளிய நாவல்தான், ஆனால் சிறு வயதில் படிக்க ஏற்றது. கனோஜி ஆங்கரேயின் ஒரு உபதலைவன் ஜஞ்ஜீரா சித்திகளின் ஒரு உபதலைவனை கொஞ்சம் ஏமாற்றி வெல்கிறான். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சாயல் தெரியும்.

அவர் நாவல்களை மறக்க இன்னும் இருபது முப்பது வருஷம், ஒன்றிரண்டு தலைமுறை ஆகும் என்று பத்து வருஷம் முன்னால் மதிப்பிட்டிருந்தேன். இப்போதே மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. புத்தகத்தைப் படிக்கும்போது சாண்டில்யனுக்கு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்த வரவேற்பும் இன்று அவர் அனேகமாக மறக்கப்பட்டிருப்பதும்தான் மண்டையில் ஓடிக் கொண்டே இருந்தது.

அவர் எளிய சாகசக் கதைகளைத்தான் எழுதினார், ஆனால் அவருடைய அடுத்த தொடர்கதைக்காக காத்திருந்த கூட்டம் எல்லாம் இன்று எங்கே போயிற்று? தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று இருந்த நிலை இருபது முப்பது வருஷத்திற்குள் மாறிவிட்டதே! இத்தனை பிரபலமாக இருந்த நட்சத்திர எழுத்தாளரை எப்படி அதற்குள் மறந்தோம்? அந்தத் தலைமுறையே இறந்துவிட்டதா? ஐம்பது அறுபது வயதுக்காரர்களுக்குக் கூட அவர் நினைவிருப்பதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் கடல்புறா, யவனராணி, மலைவாசல், மன்னன் மகள், ராஜமுத்திரை, கன்னிமாடம் போன்றவை இன்றும் சுவாரசியமான, படிக்கக் கூடிய நாவல்கள்தான்.

மேலை உலகில் அவருக்கு சமமாக சொல்லக் கூடிய வால்டர் ஸ்காட்டோ, அவருக்கு சில படிகள் மேலே இருக்கும் அலெக்சாண்டர் டூமாசோ, இன்னும் மறக்கப்படவில்லை. சுமாரான சரித்திர நாவல் எழுத்தாளரே அபூர்வமாக இருக்கும் தமிழ்நாட்டில் அவரை மறந்துவிட்டோம்!

இன்று இருந்தால் அவருக்கு 112 வயது. அவரது நூற்றாண்டை என்னைத் தவிர வேறு யாரும் நினைவு கூர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

யார் மறந்தால் என்ன, என் வாழ்க்கையின் இரண்டாவது நட்சத்திர எழுத்தாளர் அவர்தான் (முதல்வர் வாண்டு மாமா.) முதன்முதலாக நான் விரும்பிப் படித்த பெரியவர் புத்தகங்கள் சாண்டில்யன் எழுதியவைதான். ஏழெட்டு வயதில் படிக்க ஆரம்பித்தவன் இரண்டு வருஷமாவது முழுமூச்சாக நூலகங்களில் கிடைத்த அத்தனை புத்தகங்களையும் படித்தேன், அனேகமாக அவர் எழுதிய எல்லாவற்றையுமே படித்தேன். பலவும் எனக்கு மிகவும் விறுவிறுப்பாக இருந்தன, படிப்பில் வெறி ஏற்பட அவரும் ஒரு காரணம்.

பத்து வயது வாக்கில் அவரைக் கடந்துவிட்டேன், ஆனால் அது புரியவே இன்னும் இரண்டு வருஷம் ஆயிற்று. இரண்டு மூன்று வருஷங்களில் அலுத்துவிட்டார்.  ஒரே சூத்திரத்தை வைத்து எழுதுவது புரிந்த பிறகு ஈர்ப்பு குறைந்துவிட்டது.

அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பிரபலமாக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள். அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு சாகசம் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.

அவர் மூலமாக நான் தெரிந்து கொண்ட வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து தெரிந்து கொண்டதை விட அதிகம். பாடப் புத்தகத்தில் படித்தது பரீட்சை எழுதியதும் மறந்துவிட்டது, இவர் காட்டிய வரலாறு இன்னும் மனதில் நிற்கிறது. இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலைவாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்கரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.

சாண்டில்யன் கிளுகிளு எழுத்தாளரும் கூட. ஆனால் அவர் எழுதுவது porno அல்ல, boreனோ. சும்மா சும்மா கவர்ச்சி பிரதேசம், விம்மி நின்றது, உராய்ந்தார்கள் என்று எழுதினால் யார் படிப்பது? குமுதத்தில் தொடர்கதையாக வந்த விஜயமகாதேவி நாவலில் இது ஆழம், உள்ளே சுலபமாகப் போகும் இல்லை போகாது என்றெல்லாம் காதலனும் காதலியும் பேசுவதாக எழுதி இருந்தார். காதலன் கப்பலையும் கடலையும் பற்றி பேசுகிறான் என்று தாமதமாக உணர்ந்த காதலி வெட்கப்பட்டாள், நீங்கள் கப்பலைப் பற்றியா பேசினீர்கள் என்று கேட்டாள் என்று முடிப்பார். பதின்ம வயதில் காலத்தில் இதைப் படித்துவிட்டு சிறுவர்கள் படிக்கும், குடும்பங்களில் வாங்கப்படும் பிரபல பத்திரிகையில் இந்த மாதிரி பச்சை பச்சையான எழுத்து எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று வியந்திருக்கிறேன்.

எட்டு ஒன்பது வயதில் அவரது கிளுகிளு எழுத்து எனக்கு போரடித்தது, கிடுகிடுவென்று பக்கங்களைப் புரட்டிவிடுவேன். கிளுகிளு எழுத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட்ட பிறகு – 12, 13 வயதில் – அவரைப் படித்தால் ஒரு கிளுப்பும் ஏற்படவில்லை என்பது கொஞ்சம் சோகம்.

சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் போன அத்தியாயத்தில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, நாயகியின் உடல் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.

சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் நாயகன். நாயகன் தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான். 🙂

சாண்டில்யனின் புத்தகங்களில் யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜலதீபம் (இரண்டாம் பாகம் சுத்த தண்டம் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவபூமி, அவனிசுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜலமோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, நாகதீபம் ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி போன்றவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை.

அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். நங்கூரம், செண்பகத் தோட்டம், மனமோகம், மதுமலர் போன்ற சில சமூக நாவல்கள் ஐம்பதுகளில் பத்திரிகை தொடர்கதையாக வெற்றி பெற்றிருக்கும்.

அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthan-இலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.

ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.

அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் பரிந்துரைக்கிறேன். சிறப்பான memoirs. குறிப்பாக அவர் பத்திரிகை நிருபராக இருந்த காலகட்டத்தை சிறப்பாக சித்தரித்திருக்கிறார். என் வீடு என்ற திரைப்படத்திலும் பங்காற்றி இருக்கிறார், அதைப் பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். என் வீடு திரைப்படத்தை தயாரித்தவர் சித்தூர் வி. நாகையா. நாகையாவும் சாண்டில்யனும் அப்போது நெருங்கிய நண்பர்கள். ராண்டார்கை  ஒரு கட்டுரையில் சாண்டில்யனும் சாண்டில்யனின் நெருங்கிய நண்பர் சித்தூர் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் யவனராணி, கடல்புறா, மன்னன் மகள் ஆகிய நாவல்களை historical romances-இன் முதல் பட்டியலிலும் ஜலதீபம், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜமுத்திரை ஆகிய நாவல்களை historical romances-இன் இரண்டாம் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்.

கறாராகப் பார்த்தால் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. பொழுதுபோக்கு சாகச நாவல்கள் மட்டுமே. தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் தமிழர் பிரக்ஞையில் சரித்திர நாவல் ஆசிரியர் என்றால் இன்று கூட சாண்டில்யன்தான். அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் தரத்தில் அன்றைய பிரபல சரித்திர நாவலாசிரியர்கள் எவரும் – அகிலன், ஜெகசிற்பியன்… –  எழுதவில்லை.  2008-இல் அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்க தமிழக அரசு முன்வந்தபோது அவரது வாரிசுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். அப்போது விற்றிருக்க வேண்டும். 15 வருஷங்கள் ஓடிவிட்டன, இப்போதும் விற்கின்றனவா என்று தெரியவில்லை. ஹரன் பிரசன்னா போன்றவர்களைத்தான் கேட்க வேண்டும்.

என்னளவில் முக்கியமான எழுத்தாளர்தான். யவனராணி, கடல்புறா என்று ஆறேழு புத்தகங்களாவது இன்றும் சுவாரசியமாகத்தான் இருக்கும். ஆனால் கறாராகப் பரிந்துரைத்தால் அவரது போராட்டங்கள் என்ற நினைவுக் குறிப்புகளை மட்டுமே பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சுதந்திரப் போராட்ட நாவல்கள்

மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்!

ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே!

கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை)
கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்)
கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி
கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்
கு. ராஜவேலு: 1942
கோவி. மணிசேகரன்: மறவர் குல மாணிக்கங்கள்
சாண்டில்யன்: புரட்சிப் பெண்
சி.சு. செல்லப்பா: சுதந்திர தாகம்
சிதம்பர சுப்ரமணியன்: மண்ணில் தெரியுது வானம்
சுஜாதா: ரத்தம் ஒரே நிறம்
நா.பா.: ஆத்மாவின் ராகங்கள்
ப. சிங்காரம்: கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி
ர.சு. நல்லபெருமாள்: கல்லுக்குள் ஈரம்

இவற்றில் ஊமையன் கோட்டை, கொங்குத் தங்கம், மகுடபதி, மறவர் குல மாணிக்கங்கள், புரட்சிப் பெண் ஆகியவற்றை தவிர்த்துவிடலாம். அலை ஓசை, தியாகபூமி, முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன், மண்ணில் தெரியுது வானம், கல்லுக்குள் ஈரம் எல்லாம் சுமார் ரகம். 1942, ஆத்மாவின் ராகங்கள், கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி, சுதந்திர தாகம் இவற்றை நான் படித்ததில்லை.

இத்தனைதான் ஞாபகம் இருக்கிறது. நிச்சயமாக இன்னும் வந்திருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

சாண்டில்யனின் “மூங்கில் கோட்டை”

மூங்கில் கோட்டை உண்மையில் தனிப்பதிவுக்கு தேவை இல்லாத புத்தகம். சாண்டில்யனைப் பற்றி எழுதும்போது ஒரு வரி எழுதினால் போதும். தனிப்பதிவாக எழுத ஒரே காரணம்தான் – ஜெயமோகன் தன் வரலாற்று மிகுபுனைவு நாவல் பட்டியலில் இதைக் குறிப்பிட்டிருப்பது. அவர் தனது பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை.

மூங்கில் கோட்டையில் உள்ள வரலாறு தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தப்பியதுதான். அதைப் பற்றி கோவூர் கிழார் என்ற புலவர் பாடி இருக்கிறார். அதை அடிப்படையாக வைத்து ஒரு உப்புசப்பில்லாத கதையை எழுதி இருக்கிறார்.

சேர வீரன் இளமாறனை சேர மன்னனை தப்புவிக்க நெடுஞ்செழியனின் ஆசிரியரும், ஆனால் சேர மன்னனை விடுவிக்க விரும்புபவருமான கோவூர் கிழார் ரகசியமாக அழைக்கிறார். என்ன நடக்கும்? கோவூர் கிழாரின் வீட்டில் இளமாறன் ஒரு அழகியை சந்திக்கிறான். ரகசிய அழைப்பாயிற்றே, அடுத்தது என்ன? வந்த இரவே நெடுஞ்செழியனை இளமாறன் சந்தித்து வாட்போர் வேறு புரிகிறான். அழகி யார்? வழக்கமாக நெடுஞ்செழியனின் மகளாக இருக்க வேண்டும், ஆனால் நெடுஞ்செழியனுக்கு இருபது வயதுதான், அதனால் சகோதரி. அடுத்தது என்ன? அழகியும் வீரனும் மதுரையை விட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் சித்தர் என்ற நெடுஞ்செழியனின் இன்னொரு ஆசிரியரிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்தான் போர்த்திட்டங்களை வகுத்து சேரமானைத் தோற்கடித்தவர். அவருக்கு சேரமானிடம் பகை என்று பின்னால் வருகிறது. சேரமானை பகைக்கும் அவர் என்ன செய்வார்? கரெக்ட், அவரே சேரமானை விடுவிக்க முயற்சி செய்யும் இளமாறனைக் கொண்டுபோய் சேரமான் சிறை இருக்கும் மூங்கில் கோட்டைக்கு அருகில் விட்டுவிடுகிறார். பகைவனுக்கருளும் நன்னெஞ்சு அவருக்கு. இதற்குள் முக்கால்வாசி புத்தகம் முடிந்துவிடுகிறது. பிறகு இளமாறன் கோட்டைக்குள் புகுந்து மன்னனைத் தப்புவித்து (எப்படி என்றெல்லாம் சாண்டில்யன பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.) ஆனால் தான் மாட்டிக் கொள்கிறான். இதற்குள் இன்னொரு திடுக்கிடும் திருப்பம் – சித்தர்தான் இளமாறனின் அப்பா!

இதைவிட நல்ல கதைகளை சாண்டில்யன் எழுதி இருக்கிறார். ஏதோ சிறு வயதில் ஜெயமோகனுக்குப் பிடித்திருந்திருக்கும், அவ்வளவுதான். தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

சாண்டில்யனின் “ராஜமுத்திரை”

சாண்டில்யனின் ராஜமுத்திரை சிறு வயதில் (எட்டு, ஒன்பது வயதில்) என்னைக் கவர்ந்த நாவல். செண்டாயுதத்தின் விவரிப்பு இன்றும் நினைவிருக்கிறது. இப்போதும் படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவலே. தமிழுக்கு நல்ல சரித்திர நாவல். வணிக நாவல்களின், வாரப்பத்திரிகை தொடர்கதைகளின் பொற்காலத்தில் எழுதப்பட்ட நாவல். குமுதத்தில் தொடராக வந்தது.

சாண்டில்யனை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டது என்பதால் கதை (ரத்தினச்) சுருக்கம்: சேர மன்னன் உதயரவி மீண்டெழுந்து வரும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பாண்டிய நாட்டை ஒடுக்க முத்துக்களை களவாடுகிறான். அது அப்படியே சுதி ஏறி இளவரசி முத்துக்குமரியையும் சிறைப்பிடிக்கிறான். சுந்தரபாண்டியனின் தம்பி வீரபாண்டியனின் தலைமையில் அவன் காதலி இளநங்கை, நட்பு நாட்டு இளவரசன் இந்திரபானு முத்தையும் இளவரசியையும் மீட்கின்றனர், வீரரவி போரில் இறக்கிறான். வீரரவியின் களவுச் செயலை கண்டிக்கும் சேரநாட்டு குருநாதர் பரதபட்டன் என்று ஒரு பாத்திரம், பட்டன் போரில் முழு மனதாக ஈடுபடாதது சேரர்களை பலவீனப்படுத்திவிடுகிறது.

மீள்வாசிப்பில் வழக்கமான பலங்களும் பலவீனங்களும் தெரிகின்றன. திடுக்கிடும் திருப்பங்களைத் தர வேண்டும் என்ற விழைவு பல இடங்களில் செயற்கையாக முடிகிறது. உதாரணமாக சேரநாட்டு கோட்டை அதிபன் மகள் குறிஞ்சி பாண்டியருக்காக உளவறிகிறாள், பாண்டியர் படையில் உபதளபதியாகவே ஆகிறாள். ஏன்? வீரபாண்டியன் கண்ணில் மட்டும் கரெக்டாக பாதையில் கிடக்கும் கோடரி தென்படுகிறது. இந்திரபானு நினைத்தால் எதிரி அரண்மனைக்குப் போய்விடமுடிகிறது. ஸ்பீட்ப்ரேக்கர் போல காதல்/காம வர்ணனைகள் அவ்வப்போது எரிச்சலையே மூட்டுகின்றன. அதே நேரத்தில் மிகச் சரளமாக செல்லும் கதை ஓட்டம். நல்ல சாகசக் கதை. பதின்ம வயதில் படிக்க ஏற்றது. உண்மையைச் சொல்லப் போனால் சாண்டில்யன் மூலம் தெரிந்து கொண்ட வரலாறுதான் பள்ளிக் காலத்தில் தேர்வுகளுக்குப் பிறகும் நினைவிருந்தது. இதைப் படித்துத்தான் முத்துதான் பாண்டியரின் சொத்து, அதை வாங்க அன்றைய ரோமானியர் பெரும் பணம் கொடுத்தனர், சோழ அரசு பலவீனமானபோது ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் வலிமைப்படுத்தினான் என்று தெரிந்துகொண்டேன்.

ஜெயமோகன் இதை சரித்திர வணிக நாவல்களின் இரண்டாம் வரிசையில் வைக்கிறார். நானும் அதில்தான் வைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

எடிட்டர் எஸ்.ஏ.பி. (குமுதம்)

(திருத்தங்களுடன் மீள்பதிவு)

மறைந்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதத்தை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கியவர். ஆனால் குமுதம் பத்திரிகையின் தரம் என்பது என் கண்ணில் விகடனை விட, கல்கியை விட, கலைமகளை விட கொஞ்சம் குறைவுதான். என் வீட்டில் எது படித்தாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், அதனால் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் குமுதம் கொஞ்சம் lowbrow, சிறுவர்கள் படிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். (அய்யய்யோ என் வயசு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே!)

குமுதம் நன்றாக விற்க வேண்டும் என்பதையே குதிரைக்கு கண்ணில் பட்டை கட்டியதைப் போல இலக்காக வைத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். சுஜாதாவிடம் அவர் “பர்சனாலிட்டி நான் இல்லை, குமுதம்தான்” என்று சொன்னாராம். நிறைய படித்திருந்தும், நல்ல ரசனை இருந்தும், தன் பத்திரிகை ஒரு “பாமரனுக்காக” என்று உறுதியாக இருந்திருக்கிறார், தன் ரசனையை விட்டுவிட்டு சராசரி குமுதம் வாசகன் என்ற ஒரு பிம்பம் என்ன நினைப்பானோ, எதை ரசிப்பானோ அதையே கொடுக்க முயற்சித்திருக்கிறார். உதாரணமாக சோமனதுடி என்ற ஆர்ட் படத்தை பார்த்துவிட்டு மறைந்த சுப்ரமணிய ராஜுவிடம் புகழ்ந்து பேசினாராம். ஆனால் அரசு பதில்களில் இதெல்லாம் ஒரு படமா என்று நக்கல் அடித்தாராம். ஆனானப்பட்ட சுஜாதா எழுதிய தொடர்கதையையே பிரச்சினை என்று வந்ததும் நிறுத்திவிட்டார்.

குமுதத்தில் அவரது சொந்தப் பங்களிப்பான அரசு பதில்கள் பெரும் வெற்றி அடைந்தது. சிறந்த டீம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் அவருக்கு கைகளாக இருந்திருக்கிறார்கள். ஜ.ரா.சு. எழுத்தாளராக உருவானதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு – குறிப்பாக அப்புசாமி கதைகளில் ஜ.ரா.சு.வை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்குவாராம். அவர்களை மிகச் சரியாக பயன்பதயவ்டுத்தினார். அறுபதுகளில் அவரும், ரா.கி.ர.வும் நிறைய கதைகள் எழுதினார்கள். அவர்கள் பாணி எழுத்துகளுக்கு வரவேற்பு குறைகிறது என்று புரிந்துகொண்டார். அவர் எழுபதுகளில், எண்பதுகளில், அவருக்கு அரசு பதில்கள், ரா.கி.ர.வுக்கு லைட்ஸ் ஆன், ஜ.ரா.சு.வுக்கு அப்புசாமி என்று தயவு தாட்சணியமே இல்லாமல் மாற்றிவிட்டார். ரா.கி.ர.வின் மாஸ்டர்பீஸான நான், கிருஷ்ணதேவராயன் விகடனிலோ கல்கியிலோதான் வெளிவந்தது.

சாண்டில்யன், சுஜாதா, ஜெயராஜ் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தினார். சுஜாதாவை சூப்பர்ஸ்டாராக ஆக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ப்ரியா தொடர்கதையாக வந்தபோது, ப்ரியா இங்கிலாந்தில் நடக்கிறது, இங்கிலாந்தைப் பார்த்துவிட்டு வாருங்கள், பின்புலத்தை இன்னும் சிறப்பாக எழுதலாம் என்று சுஜாதாவை இங்கிலாந்துக்கு அனுப்பினாராம்.

அவருக்குப் பிறகு குமுதம் பெருங்காய டப்பாதான். அவருக்கும் அந்தக் கவலை இருந்திருக்கிறது. Transition plan-ஐ உருவாக்கி இருக்கிறார். பிரபஞ்சன் உட்பட்ட பலரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் காலமும் மாறிக்கொண்டிருந்தது. பத்திரிகைகளின் பொற்காலம் போய்விட்டது. ஆனானப்பட்ட சுஜாதா கூட குமுதத்தின் ஆசிரியராக வெற்றி பெறவில்லை.

குமுதம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதே தவிர நல்ல சிறுகதைகளையோ (ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் மாதிரி), நல்ல இலக்கியத்தையோ தர முயன்றதே இல்லை. (ஆனால் அசோகமித்திரன், லா.ச.ரா. ஆகியோரின் எழுத்துகளை சின்ன வயதில் படித்திருக்கிறேன்). என் சம வயது நண்பர்கள் ஓரிருவர் குமுதத்தில் சில கதைகளைப் படித்து பாலியல் கிளர்ச்சி அடைந்ததை சொல்லி இருக்கிறார்கள். (நான் மிஸ் பண்ணிட்டேனே!) சாண்டில்யன் சில சமயம் (யூஸ்லெஸ்) போர்னோ மாதிரி எழுதுவார், அதை எல்லாம் எடிட் செய்ய முயன்றதாகவே தெரியவில்லை. விஜயமஹாதேவி என்ற நாவலில் நாயகன் நாயகியிடம் கப்பல் உள்ளே போக வேண்டும், போகுமா தெரியவில்லை என்றெல்லாம் பேசுவான். நாயகி வெட்கப்பட்டுக் கொண்டே இருப்பாள். கடைசியில் நீங்க நிஜ கப்பல் கடலுக்குள்ளே போவதைப் பற்றி பேசறீங்களா என்பாள். ஜெயராஜின் “கவர்ச்சி ததும்பும்” படங்கள், நடிகைகளின் ஃபோட்டோக்கள், அட்டைப்படத்தில் தவறாமல் பெண்கள், கிசுகிசு என்று அன்றைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போனார். இப்படி ஒரு பத்திரிகையை மலினப்படுத்தினார் என்று கூட அவர் மேல் எந்த விமர்சனமும் யாரும் வைத்து நான் பார்த்ததில்லை. உண்மையை சொல்லப்போனால் அவரைப் பற்றி யாரும் எதிர்மறையாக சொல்லி நான் பார்த்ததே இல்லை. குமுதத்தின் வணிக வெற்றி அவரது எல்லா குறைகளையும் மறைத்துவிட்டது போலிருக்கிறது.

பிரபஞ்சன் குமுதத்தில் பணியாற்றிய காலத்தைப் பற்றி எழுதி இருக்கிறார் – பகவத்கீதையும் பலான படங்களும். ஒழுங்கு ஒழுங்கு என்று பயங்கர ஆபீஸ் rituals நிறைந்த அலுவலகமாம். மீட்டிங்குக்கு போனால் கூட முதலில் பெரிய சீனியர் ரா.கி. ரங்கராஜன் உள்ளே நுழைய வேண்டும், அடுத்தது சின்ன சீனியர் ஜ.ரா. சுந்தரேசன், அப்புறம் சீனியாரிட்டிபடி எல்லாரும், கடைசியில்தான் புதிதாக சேர்ந்த பிரபஞ்சன் அறைக்குள் நுழைய வேண்டுமாம். காலையில் பத்திலிருந்து பத்தரை வரை குமுதம் ஆஃபீஸில் எஸ்.ஏ.பி. தலைமையில் பகவத்கீதை, திருக்குறள் விளக்கமாம். அதற்குப் பிறகு நடிகைகளின் எந்த கவர்ச்சிப் படத்தை இந்த வாரம் போடலாம் என்று பல சைட் போஸ், குனிந்த போஸ் புகைப்படங்களை அளைந்து அளைந்து தேர்ந்தெடுப்பாராம்.

ஆனால் எனக்கென்னவோ இது hippocrisy என்று தோன்றவில்லை. அவர்தான் கீதையை புரிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது!

எஸ்.ஏ.பி.யின் பங்களிப்பு என்பது குமுதமும் அதன் பெருவெற்றியும்தான். ஆனால் அவரும் ஓரளவு எழுதி இருக்கிறார். அவரது சில நாவல்களை ஜெயமோகன் தனது குறிப்பிடத் தக்க வணிக நாவல்கள் பட்டியலில் பரிந்துரைத்துமிருக்கிறார். அவர் எழுதி சின்ன வயதில் ஏதோ படித்திருக்கிறேன். (ஆளவந்தார் என்ற போலி ஆனால் கைராசிக்கார டாக்டர் வரும் கதை ஒன்று யாருக்காவது நினைவிருக்கிறதா? இது ரா.கி. ரங்கராஜன் எழுதியதாம், எஸ்.ஏ.பி. இல்லை. பேர் கையில்லாத பொம்மை) ஆனால் எதுவும் சரியாக நினைவில்லை. ஜெயமோகன் சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகிய நாவல்களை நல்ல social romances என்று குறிப்பிடுகிறார்.

பொதுவாக அவரது நாவல்கள் அறுபதுகளின் உணர்ச்சி பொங்கும் திரைப்படங்கள் போன்ற உணர்வை அளிக்கின்றன. பரிச்சயமான ஒரு சமையல் குறிப்பைப் படித்து ஒன்றன்பின் ஒன்றாக பொருட்களைச் சேர்த்து சமைப்பது போலத்தான் இருக்கிறது. சமையல் குறிப்பை சரியாக செயல்படுத்தினாலும் கலையம்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

அவரது சமையல் குறிப்பு அணுகுமுறைக்கு சரியான உதாரணம் ‘உன்னையே ரதியென்று‘. ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்படும் சம்பவங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, பிறகு ஒன்றன்பின் ஒன்றாக அவை அவிழ்கின்றன. அதுவும் தொடர்கதை வடிவத்துக்கு நன்றாகவே ஒத்துவரும். சம்பவங்கள் நடப்பது இயல்பாக இருப்பதும் சரளமான நடையும்தான் கதையின் பலங்கள். இளம் பெண் சிவராணி; பணக்காரத் தோழி லேகா; லேகாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மாப்பிள்ளை சுந்தரப் பிரசாத். பிரசாத் அவ்வப்போது மது அருந்துபவன். நிச்சயம் ஆனதும் முதல் ஆனதும் மதுவை நிறுத்துகிறான். ஆனால் மது அருந்துபவர்களை வெறுக்கும் லேகாவுக்கு சிவராணி மூலம் சுந்தரப் பிரசாத் மது அருந்துபவன் என்று தெரிகிறது. திருமணம் நிற்கிறது. சிவராணி மேல் ஆசைப்படும் மணிகண்டன் பணம் சம்பாதிக்க திருட ஆரம்பிக்கிறான். சிவராணி மேல் பிரசாத்துக்கும் லேசான ஈர்ப்பு. மணிகண்டனால் சுடப்பட்டு இறக்கும்போது சிவராணிக்கு மணிகண்டன் ஏறக்குறைய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை என்று தெரிந்து மணிகண்டனைக் காப்பாற்றிவிடுகிறான். கதைச்சுருக்கம் எழுதும்போதுதான் சம்பவங்கள் இத்தனை செயற்கையாக இருந்தனவா என்று தோன்றுகிறது. 🙂

நீ சுமாரான வணிக நாவல். எனக்கு அன்றைய வணிக நாவல்கள் மேல் curiosity இல்லாவிட்டால் படித்திருக்கமாட்டேன். இன்று எழுதப்பட்டிருந்தால் புரட்டி இருக்கக்கூட மாட்டேன். காதலி வேறொருவனை மணக்க, காதலன் நீ கன்னியாகவே வாழ வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறான். இதில் எத்தனை செயற்கையாக மூவரும் ஏறக்குறைய ஒரே வீட்டில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்!

பிரம்மச்சாரி போன்ற நாவல்கள் எல்லாம் எல்லாம் குமுதத்தின் பக்கங்களை நிறைக்க எழுதப்பட்டவை.

பூவனம் தளத்தை நடத்தும் ஜீவி எஸ்.ஏ.பி.யை பெரிதும் ரசிப்பவர். எழுத்தாளர் திலகம் என்று இவரை புகழ்கிறார். அவரது நீ என்ற நாவலிலிருந்து ஒரு excerpt-ஐ இங்கே பதித்திருக்கிறார். எழுத்தாளர் கடுகு தன் நினைவுகளை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
பிரபஞ்சனின் கட்டுரை – குமுதத்தின் கதை

சாண்டில்யன் எழுதிய யவனராணி

சாண்டில்யனின் நாவல்களில் மிகவும் பிரபலமானவை யவனராணியும் கடல் புறாவும்தான். எனக்கு முந்தைய தலைமுறையினர் பலரும் யவன ராணியையே ஒரு மாற்று அதிகமாக எடை போட்டார்கள், சாண்டில்யனின் மாஸ்டர்பீஸாக கருதினார்கள்.

யவனராணியைப் படிக்கும்போது எனக்கு எட்டு, ஒன்பது வயதிருக்கலாம். அந்த வயதில் என்னை வெகுவாகக் கவர்ந்த படைப்பு. குறிப்பாக கடலில் மூழ்கும் நாயகன் கடல் ஆமையோடும் சுறாக்களோடும் சண்டையிடும் காட்சி. பிறகு ஆயுதங்களை வீசக்கூடிய யவனப் பொறிகள் என்ற ஐடியாவே த்ரில்லிங் ஆக இருந்தது. பற்றாக்குறைக்கு ஒன்றுக்கு மூன்று பெண்கள், சதிக்கு மேல் சதி என்று அடுக்கிக் கொண்டே போனார். இன்றும் இளவயதினர் படிக்க ஏற்ற புத்தகம், காமிக்ஸாக வெளியிட்டால் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

சாண்டில்யனைப் படித்த தலைமுறைகளுக்கு வயதாகிவிட்டதால் கதைச்சுருக்கத்துக்கு தேவை இருக்கலாம். சோழ அரசன் இளஞ்சேட்சென்னி சதியால் கொல்லப்பட்டவுடன் வாரிசு சண்டை. இளவரசன் கரிகாலனைக் கொல்ல சதி நடக்கிறது. அவன் பக்கம் இருக்கும் படைத்தலைவன் இளஞ்செழியன். இதற்கிடையில் புகார் நகரத்தை யவனர் டைபீரியஸின் தலைமையில் கைப்பற்ற முயல்கிறார்கள். அவர்களின் ராணிக்கு இளஞ்செழியன் மேல் காதல். டைபீரியஸ் இளஞ்செழியனை கப்பலில் ஏற்றி கிரேக்கத்துக்கு அனுப்பிவிடுகிறான். அங்கே தப்பி, அடிமையாக விற்கப்பட்டு, அரேபிய சிறு நாடு ஒன்றில் மாட்டிக்கொண்டு, மீண்டும் தப்பி, தமிழகம் வந்து, டைபீரியஸை சமாளித்து, கரிகாலனை மன்னனாக்க உதவுகிறான்.

இன்று யோசித்துப் பார்த்தால் என்ன இத்தனை பூ சுற்றுகிறாரே என்று தோன்றுகிறது. இளஞ்செழியனை மயக்கமருந்து கொடுத்து கப்பலில் ஏற்றி, அங்கேயே முடிந்தால் கொன்றுவிடுமாறு டைபீரியஸ் உத்தரவிடுகிறான். இவனே கூட கொஞ்சம் விஷத்தைக் கொடுத்திருக்கலாம். தமிழகம் திரும்பும் இளஞ்செழியன் தான் டைபீரியஸுக்கு உதவ வந்திருக்கும் யவனக் கப்பல் படைத்தலைவன் என்று சொல்லிக் கொண்டு டைபீரியஸை பல முறை சந்திக்கிறான். ஆனால் எப்போதும் முகத்தில் கவசத்துடன், அதனால் டைபீரியஸுக்கு இவன்தான் இளஞ்செழியன் என்று தெரியவில்லையாம். கழட்டுடா என்று ஒரு முறை கூடவா சொல்லமாட்டான்? எல்லாவற்றையும் விடுங்கள், எந்த யவனன் (கிரீஸ் நாட்டுக்காரன்) டைபீரியஸ் என்று பேர் வைத்துக் கொள்வான்? டைபர் ஆறு ஓடுவது ரோம் நகரத்தில். சாண்டில்யன் தமிழர்களுக்கு பிற நாடுகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் ரோமாபுரிக்காரர்களைத்தான் யவனர் என்று குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

குமுதம் பத்திரிகையின் பெருவெற்றிக்கு சாண்டில்யனின் தொடர்கதைகள் ஒரு முக்கிய காரணம். யவன ராணி, கடல் புறா போன்றவையே அந்த தொடர்கதைகளில் மக்கள் மனதை அதிகம் கவர்ந்தவை என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

இலக்கியம் அல்லதான்; குறைகள் உள்ள வணிக நாவல்தான். ஆனால் இள வயதினருக்கு படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய நாவல். பதின்ம வயதினரைப் படிக்க வையுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

சாண்டில்யனின் கடல் புறா

சாண்டில்யன் நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது கடல் புறாதான். முதல் முறை படிக்கும்போது எட்டு ஒன்பது வயதிருந்திருக்கலாம். கடலைப் பார்த்தது – கடலை விடுங்கள், நான் பார்த்திருந்த மிகப் பெரிய நீர்நிலையே உள்ளூர் குளம்தான். (ஏரி அதை விடப் பெரியதுதான், ஆனால் அதில் தண்ணீர் இருந்ததில்லை.) கடல், கப்பல், கடற்கொள்ளைக்காரர்கள்,கடற்போர் என்றெல்லாம் கதை விரிந்தது அந்தக் காலத்துக்கு humdinger ஆக இருந்தது. இன்றும் படிக்கக் கூடிய, சுவாரசியம் உள்ள நாவல்தான். வணிக நாவல்களைப் பொருட்படுத்தி எழுதும் ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் இந்த நாவலை சரித்திர மிகுகற்பனை நாவல்களின் முதல் வரிசையில் வைக்கிறார்.

அத்தியாத்துக்கு அத்தியாயம் திடுக்கிடும் திருப்பங்கள். இப்போது பல திருப்பங்கள் உப்புசப்பில்லாமல் இருந்தாலும் பழைய ஞாபகம் மறக்கவில்லை. ஓரளவு சின்னப் பசங்கள் காணும் பகல் கனவு போல இருந்தாலும் சுவாரசியமாகத்தான் போகிறது. சிருங்கார ரசம் சாண்டில்யன் லெவலுக்கு குறைவுதான். நாவலில் சொல்லப்படும் வரலாறு எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை உண்மைதான். குலோத்துங்க சோழனாக பின்னாளில் அரசாண்ட அநபாயன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை (இன்றைய மலேசியா மற்றும் சுமத்ரா, ஜாவா தீவுகள்) வென்று அரசு பூசலைத் தீர்த்து வைத்ததாக வருகிறது.

என்ன கதை? முதல் பாகத்தில் நாயகன் கருணாகர பல்லவன் (இளைய பல்லவன்) எதிரி நாடான கலிங்கத்தில் (இன்றைய ஒரிசா) இருந்து நாயகியும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மீது உரிமை உள்ளவளும் ஆன இளவரசி காஞ்சனாவை பல வீர சாகசங்கள் புரிந்து தப்புவிக்கிறான். இந்த பாகத்தில் கடலே கிடையாது. இரண்டாவது பாகத்தில் ஸ்ரீவிஜயத்தின் ஒரு கடற்கரை கோட்டையான அக்ஷய முனையையும் அடுத்த நாயகியான மஞ்சளழகியின் மனதையும் வெல்கிறான். இதில் துறைமுகம் உண்டு, ஆனால் கடற்கரையைத் தாண்டி கதை போகாது. மூன்றாவது பாகத்தில் கடலில் சோழர் மேலாதிக்கத்தை நிறுவி ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் அரியணையில் காஞ்சனாவின் அப்பாவை உட்கார்த்தி வைக்கிறான். இதில்தான் கடல், இரண்டு மூன்று கடற்போர்கள்.

அன்று படிக்கும்போது மனதை மிகவும் கவர்ந்த பாத்திரங்கள் சீனக் கொள்ளைக்காரனான அகூதா (Aguda), அரபு நாட்டைச் சேர்ந்த உபதலைவன் அமீர். அந்தப் பாத்திரங்களின் அன்னியத்தன்மை (exotic) ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். அகூதா உண்மையில் சீனாவின் அரசராக இருந்தவராம்.

இளைய பல்லவன் – கருணாகரத் தொண்டைமான் – பிற்காலத்தில் கலிங்கத்தை வென்றவன். ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியின் நாயகன். அவனது தலைநகரமான வண்டை இன்றைய வண்டலூர்!

ஏறக்குறைய எல்லா சாண்டில்யன் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். சில சமயம் அவரது பாணி பற்றி அலுத்துக் கொண்டும் இருக்கிறேன். ஒன்று நிச்சயமாகச் சொல்ல முடியும் – அவர் புத்தகங்களை அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது. ரஜினி எப்படி வெற்றிக் கொடி கட்டு என்று ஒரு பாட்டுப் பாடும் வேளையில் பெரும் பணக்காரர் ஆகிறார் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் படையப்பா திரைப்படத்தை ரசிக்க முடியாது.

இந்தப் புத்தகத்தை எல்லாருக்கும் – குறிப்பாக சிறுவர்களுக்கு – பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

சாண்டில்யனின் ‘மன்னன் மகள்’

ரொம்ப நாளாயிற்று சாண்டில்யனின் புத்தகங்கள் பற்றி எழுதி. இரண்டரை வருஷம் முன்னால் மலைவாசல் பற்றி எழுதியதுதான் கடைசி.

சாண்டில்யனின் வெற்றிகளில் மன்னன் மகள் நாவலுக்கு நிச்சயமாக இடமுண்டு. சின்ன வயதில் படித்தபோது புத்தகம் unputdownable ஆக இருந்தது. இன்று படிக்கும்போது திடுக்கிடும் திருப்பம் எதுவும் பத்து பக்கமாக வரவில்லையே என்று அடிக்கடி இளக்கார நினைவு ஒன்று தோன்றிக் கொண்டே இருந்தது உண்மைதான். ஆனால் அரண்மனைச் சதி சரித்திர நாவல்களில் இன்னும் சாண்டில்யனை விஞ்சக் கூடிய எழுத்தாளர் தமிழில் வரவில்லை என்ற எண்ணமும் உறுதிப்பட்டது.

ராஜேந்திர சோழன் கங்கை வரை சென்றது எப்படி என்று ஆறாம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிழக்கு கடற்கரையோரமாகவே சென்று கங்கையை இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தில் அடைந்தான் என்று விளக்கி வாத்தியாரிடம் சபாஷ் வாங்கியதெல்லாம் இந்தப் புத்தகத்தை படித்ததால்தான்.

சோழ-மேலைச் சாளுக்கிய (இன்றைய கர்நாடகம்)-கீழைச் சாளுக்கிய (இன்றைய ஆந்திரா) உறவு வியப்பைத் தருவது. மேலைச் சாளுக்கியர் ஜன்ம விரோதிகள் என்றால் கீழைச் சாளுக்கியர்களோடு மீண்டும் மீண்டும் மண உறவு, ஒரு கட்டத்தில் கீழைச் சாளுக்கியர் வம்சத்தில் வந்த குலோத்துங்கன் சோழ அரசனாகவே அமர்கிறான். இந்தப் பின்புலத்தில் கதை புனைந்திருக்கிறார். வழக்கம் போல ஒரு நாயகன். கரிகாலன். முதல் சந்திப்பிலேயே வேங்கி நாட்டு மன்னன் மகளோடு பரஸ்பர ஈர்ப்பு. ஒரே ஒரு வித்தியாசம், இன்னொரு காதலியைக் கழற்றிவிட்டுவிடுகிறான். சும்மா சதி மேல் சதி. கரிகாலன் யார் பக்கம், சோழ அரசுக்காக பாடுபடுகிறானா, சாளுக்கியருக்கா, இல்லை தான் காதலிக்கும் மன்னன் மகளுக்கா என்று படிப்பவர்களைத் தவிர எல்லாரும் குழம்புகிறார்கள். கரிகாலனின் பிறப்பில் ஒரு மர்மம் என்று ஒரு தனிச்சரடு போகிறது. வழக்கம் போல மன்னன் மகள் நிரஞ்சனா, இன்னொரு காதலி செல்வி இருவர் உடல்களிலும் மேடு, பள்ளம், முன்னழகு, பின்னழகு, சரசம், உரசல், எழில், முத்தாரம் செய்த பாக்கியம் என்ன என்று நாலைந்து அத்தியாயம். ஆனால் விறுவிறுவென்று போகிறது.

நண்பர் ப்ருந்தாபன் இதுதான் குமுதத்தில் சாண்டில்யன் எழுதி வெளியான முதல் நாவல் என்று தகவல் தந்தார். பிறகு அவருக்கே கொஞ்சம் சந்தேகம் வந்து இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கன்னிமாடம்தான் குமுதத்தில் வந்த முதல் நாவல் (1956-57 வாக்கில்), இது இரண்டாவதாக இருக்க வேண்டும், ஜனவரி 58-இல் தொடங்கியது என்கிறார்.

தமிழுக்கு நல்ல சரித்திர நாவல்தான். வணிக நாவல்களைப் பொருட்படுத்தி எழுதும் ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் இதை historical romances-இன் முதல் வரிசையில் வைக்கிறார். இன்றும் படிக்கக் கூடிய நாவல்தான், ஆனால் சிறு வயதில் படித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்