சொல்வனம் – தி.ஜானகிராமன் சிறப்பிதழ்

சொல்வனம் இணைய பத்திரிகை ஆரம்பித்து ஐம்பது இதழ்கள் வந்துவிட்டனவாம். ஐம்பதாவது இதழை தி.ஜா.வைப் பற்றி ஒரு சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள்.

கரிச்சான் குஞ்சு, வெங்கட் சாமிநாதன், எம்.வி. வெங்கட்ராம், சிட்டி, சுஜாதா, அ. முத்துலிங்கம், தஞ்சை பிரகாஷ் எல்லாரும் அவரைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதுவும் கரிச்சான் குஞ்சு அவரது நெருங்கிய நண்பர் போலிருக்கிறது. பல பர்சனல் நினைவுகளைப் பற்றி எழுதி இருக்கிறார். எம்விவி கல்லூரி நண்பராம். அவர் பித்துப் பிடித்தாற்போல இருந்தபோது தி.ஜா. செய்த உதவிகளைப் பற்றி வெளிப்படையாகவே எழுதி இருக்கிறார்.

அசோகமித்திரன் பேட்டி கொடுத்திருக்கிறார். மனிதர் மகா நேர்மையானவர் – சிம்பிளாக இன்னும் ஐம்பது வருஷம் போனால்தான் அவருக்கு இப்போது இருக்கும் ஒளிவட்டம் மங்கும், அப்போதுதான் அவரைப் பற்றி விமர்சிக்க முடியும் என்கிறார். தி.ஜா.வே ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். சிலிர்ப்பு, கண்டாமணி ஆகிய கதைகள் எப்படி உருவாயின என்பதைப் பற்றி சொல்லி இருக்கிறார். குழந்தைக்கு ஜுரம், இசைப்பயிற்சி, ஆயிரம் பிறைகளுக்கப்பால் என்று மூன்று கதைகளை வேறு பதித்திருக்கிறார்கள். (பலரும் சிலாகித்த அந்த கண்டாமணி கதையைப் பதித்திருக்கக் கூடாதா? அதை நான் இன்னும் படித்ததில்லை…) குழந்தைக்கு ஜுரம் கதையில் எம்விவியை வைத்து எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கரிச்சான் குஞ்சு, அவரது மகள், மற்றும் பலர் எழுதுவதிலிருந்து தி.ஜா. நன்றாகப் பாடக் கூடியவர் என்று தெரிகிறது. முயன்றிருந்தால் கச்சேரியே செய்திருக்கலாம் என்று தெரிகிறது. சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய அறம் சீரிஸ் கதைகளைப் படித்துவிட்டு தி.ஜா.வுக்கு சங்கீத ஞானம் அதிகம், ஆனால் பாட வராது என்று நினைத்திருந்தேன். ஜெயமோகன் creative license எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. உண்மை மனிதர்களைப் பற்றி எத்தனை தூரம் creative license எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு கேள்வி எழுகிறது.

மிஸ்டர் எஸ் கே முத்து – நாஞ்சில்நாடன் சிறுகதை

சில கதைகளில் நம்மையே, நம் வாழ்க்கையையே காண்கிறோம். நாஞ்சில் நாடனின் இந்த சிறுகதை எனக்கு அப்படித்தான். புலம் பெயர்ந்த NRIs ஓரளவு பண வசதி உள்ளவர்களாக இருந்தாலும் இந்தக் கதையில் தங்களைக் காண வாய்ப்புண்டு. படித்துப் பாருங்கள்…

சந்திரமௌலி இதைப் பற்றி ஜெயமோகன் கருத்தைப் பதிவு செய்யும் மரபைக் காணவில்லையே என்று குறைப்பட்டுக் கொண்டார். சுல்தானின் உதவியுடன்:

மிஸ்டர் எஸ் கே முத்துவின் பம்பாய் வாழ்க்கையில் ஏதாவது பொருள் இருக்குமென்றால் அது இப்படி இந்த ஊருக்கு வந்து செல்லும் கணங்கள் மட்டுமே. வருடம் முழுக்க அவன் உழைத்துச் சேர்த்துவைக்கும் போதெல்லாம் ’சட்டைப் பையில் ரோத்மென்ஸ் கிங் சிகரெட்டுடன் வந்து ஊரில் இறங்குவதன்’ கம்பீரத்துக்காகதானே அவன் அடிமனம் கனவு கண்டு கொண்டிருக்கும். முத்துவின் வாழ்க்கையின் எளிய வரைகோடே இதுதான். சிறுக சிறுக சேர்த்து ஊருக்கு வருதல். மீண்டும் சேர்ப்பதற்க்காக பம்பாய் செல்லுதல்
’நாஞ்சில் நாடனின் கதை மாந்தர்” குறித்து ஜெயமோகன் ”கமண்டல நதி” 44:13

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன்