தி. ஜானகிராமனின் “நளபாகம்”

நண்பர் ஒருவர் சொன்னார் – மோகமுள்ளை இப்போது படிக்க முடியவில்லை, அலுப்பாக இருக்கிறது என்று. தி.ஜானகிராமன் போன்ற icon அலுத்துப் போகிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். கரெக்டாக இந்த நாவலும் அப்போது கிடைத்தது. சரி என்று படிக்க ஆரம்பித்தேன்.

தி.ஜா.வின் மீது எனக்கு எப்போதும் உள்ள விமர்சனம் மனிதர் அரைத்த மாவையே அரைக்கிறார் என்பதுதான். எப்போதும் அந்த தஞ்சாவூர் பண்ணையார் அல்லது அக்ரஹாரம் வாழ்க்கை, எப்போதும் ஏதோ ஒரு “தவறான” உறவு. தோசை, மசால் தோசை, ஊத்தப்பம், பெசரட், வெங்காய தோசை என்று மாற்றி மாற்றிப் போட்டாலும் அந்த மாவின் லேசான புளிப்பு சுவைதானே மீண்டும் மீண்டும்!

இதைப் படிக்கும்போதும் அதே விமர்சனம்தான். அதே தஞ்சாவூர் கிராமம். இந்த முறை “தவறான” உறவு மனரீதியாக மட்டும். அதே மாதிரி தி.ஜா. டைப் மனிதர்கள். அதே மாதிரி பேச்சு. சுமாரான கதைப்பின்னல்.

இந்த முறை ஊரின் பேர் நல்லூர். நல்லூர் ரங்கமணி அம்மாள் குடும்பத்தில் எப்போதும் ஸ்வீகாரப் பிள்ளைதான், குழந்தை பிறப்பதே இல்லை. ரங்கமணி யாத்திரை போகும்போது சமையல்கார காமேஸ்வரனை சந்திக்கிறாள். ஏறக்குறைய தன் மகனாக வரித்துக் கொள்கிறாள். அதே யாத்திரையில் ஜோசியர் முத்துசாமி ரங்கமணியின் தத்துப் பிள்ளை மற்றும் மருமகள் இல்லை இல்லை மாட்டுப்பெண் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்கள் பையனுக்கு குழந்தை கிடையாது, மாட்டுப்பெண்ணுக்கு உண்டு என்கிறார். சரி வழக்கமான முடிச்சைப் போட்டுவிட்டார் என்று நினைத்தேன்.

ரங்கமணி காமேஸ்வரனை தன் வீட்டுக்கு வந்து இருக்கும்படி அழைக்கிறாள். காமேஸ்வரனும் போகிறான். நியோக முறைப்படி காமேஸ்வரன் மூலமாக தனக்கு ஒரு பேரனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரங்கமணிக்கு ஒரு ஐடியா இருக்கிறது. மருமகள் பங்கஜத்துக்கும் காமேஸ்வரன் மேல் ஈர்ப்பு இருக்கிறது. காமேஸ்வரனுக்கு ரங்கமணியின் ஐடியா தெரியாவிட்டாலும் தி.ஜா.வின் வழக்கமான அழகான பெண்கள் மீது வழக்கமாக ஏற்படும் ஈர்ப்பு பங்கஜத்தின் மேல் இருக்கிறது. இரண்டு பேரும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காமேஸ்வரன் மெதுமெதுவாக குடும்பத்தில் ஒருவராக ஆகிறான்.

காமேஸ்வரனுக்கு விஷயம் தெரியும்போது அதிர்கிறான். தற்செயலாக பங்கஜத்தை தனியாக சந்திக்க நேரிடுகிறது. பங்கஜத்துக்கும் ஆசை உண்டு என்று தெரிகிறது. ஆனால் கையைத் தொடுவதற்கு மேல் போகவில்லை. அது என்னவோ ஒரு catharsis மாதிரி பங்கஜத்துக்கு – அவள் தன் கணவன் துரையோடு ஒன்று சேர்கிறாள். இங்கே என்னவோ தி.ஜா. கணவன் மனைவி இது வரை சேராதது மாதிரி ஒரு ஃபில்ம் காட்டுகிறார். எப்படி சார்? பங்கஜம் கர்ப்பம் ஆகிறாள்.

காமேஸ்வரனுக்கு ஊரில் நட்பு வட்டம் பெருகுகிறது. தி.க.வைச் சேர்ந்த இளங்கண்ணன் முதற்கொண்டு நண்பர்கள். உள்ளூர் ஸ்கூலில் அனேகமாக தலித் மாணவர்கள் சாப்பிடும் மதிய உணவின் தரத்தைக் காணும் காமேஸ்வரன் பிடி அரிசி என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறான். உலை போடும் முன் ஒரு பிடி அரிசியைத் தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும். நன்கொடை வசூலிக்கிறான். எல்லாரும் சேர்ந்து நல்ல மதிய உணவை மாணவர்களுக்கு போடுகிறார்கள். (இந்த பிடி அரிசி திட்டம் மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களின் ஐடியாவாம். நல்ல ஐடியாவாக இருக்கிறதே! ஏன் அவ்வளவாக வெளியே தெரியவில்லை?)

ஆனால் ஊரில் தன்னையும் பங்கஜத்தையும் வைத்து அபவாதம் இருப்பதை உணரும் காமேஸ்வரன் நல்லூரை விட்டு வெளியேறுகிறான். அத்தோடு கதை முடிகிறது.

கதையின் பலம் வழக்காமானவைதான்: மொழி, சரளம், கதாபாத்திரங்கள். அது என்னவோ தி.ஜா.வின் நடை கோடைக்காலத்தின் மெல்லிய குளிர்ந்த காவேரியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. தி.ஜா.வின் மனிதர்கள் – இளங்கண்ணன், ஜோசியரின் மனைவி, காமேஸ்வரன் குடியிருக்கும் அறையின் வீட்டு ஓனர் என்று பலர் மிக நல்ல சித்திரங்கள்.

பலவீனங்கள் என்று பார்த்தால் பையனுக்கு குழந்தை இல்லை, மருமகளுக்கு மட்டும்தான் குழந்தை என்று ஒரு முடிச்சு போட்டார். அதை அவிழ்க்கவே இல்லையே? முத்துசாமி ஜோசியர் இப்படி அபவாதம் வந்ததைத்தான் சொன்னேன் என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டாக இருக்கிறது. அப்புறம் என்னதான் பாயின்ட்?

சில சமயம் எனக்குத் தோன்றுகிறது – தி.ஜா.வின் எந்தக் கதையை முதலில் படித்தாலும் அது பிடித்துப் போகும். அதற்கப்புறம் படிக்கும் கதைகளில் ஒரு மாதிரி deja vu உணர்வு ஏற்பட்டு அலுக்க ஆரம்பித்துவிடும் என்று. ஒரு சூழல் மீண்டும் மீண்டும். பி.ஜி. உட் ஹவுசின் 46-ஆவது கதையைப் படிக்கிற மாதிரி.

படிக்கலாம். நிச்சயமாக above average. சுவாரசியமான பாத்திரங்கள், நடை உள்ள கதை. ஆனால் repetitive தி.ஜா.

இதுதான் தி.ஜா.வின் கடைசி நாவலாம். கணையாழியில் தொடர்கதையாக வந்ததாம்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 135 ரூபாய்.