நாஞ்சில்நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”

இதே கருவை ஒரு லக்ஷ்மியோ சிவசங்கரியோ பாலகுமாரனோ கையாண்டிருந்தால் கதையின் ஓட்டம், சம்பவங்கள் இதே மாதிரிதான் இருந்திருக்கும், ஆனாலும் அது எனக்கு இலக்கியம் ஆகி இருக்காது. நாஞ்சில்நாடன் எழுதினால் மட்டும் ஏன் இலக்கியம் ஆகிறது? அவரை நான் சந்தித்திருக்கிறேன், அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்பதாலா என்று எனக்கே ஒரு சந்தேகம்.

அப்புறம் தோன்றிய காரணங்கள்:

 • நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள் – சிவதாணு, பார்வதி, மாமனார் சொக்கலிங்கம் பிள்ளை, கொழுந்தியாள் பவானி, நண்பர்கள் ராமநாதன்+காந்திமதி, பெரியவர் சண்முகம் பிள்ளை என்று எல்லாருமே நாம் பார்க்கக் கூடிய, நம்மவர்கள். அவர்களின் உணர்ச்சிகள், வினைகள்+எதிர்வினைகள் எல்லாமே நாம் அனுபவித்தவை, அனுபவிக்கக் கூடியவை.
 • நுட்பமான சித்தரிப்புகள் – கோலப்பப் பிள்ளை கலகம் மூட்ட முயற்சிக்கும் ஒரு இடம் போதும்.
 • நுட்பமான அவதானிப்புகள் – சைவப் பிள்ளைமார்களின் பல பழக்க வழக்கங்களை கவனமாக எடுத்தாண்டிருக்கிறார். கொழுந்தியா சமைஞ்சது, துஷ்டியின் முக்கியத்துவம் எல்லாம் இன்றைக்கு குறைந்து போயிருக்கலாம், ஆனாலும் அவற்றை தத்ரூபமாக சித்தரித்திருக்கிறார்.
 • ஆனாலும் எனக்கு குறைகள் தெரியத்தான் செய்கின்றன. இது ஓரளவு கீழ்மட்டத்திலேயே நின்றுவிடுகிறது. செண்டிமெண்ட் மெலோட்ராமா என்ற நிலையிலிருந்து ஒரு மயிரிழையில்தான் தப்பிக்கிறது. வாரப் பத்திரிகைகளில் வந்திருந்தால் பெருவெற்றி பெற்றிருக்கும். ஒரு சிவாஜி கணேசன் நடித்து அறுபதுகளில் வந்திருந்தால் நன்றாக ஓடி இருக்கும். ஏன் இப்போது கூட ஒரு மெகாசீரியலாக வந்தால் வெற்றி பெறும். தரிசனம் என்று ஒன்று இல்லவே இல்லை.

  சுருக்கமாகச் சொன்னால் மிகவும் promising படைப்பு. எப்போதும் நினைவில் இருக்கும் படைப்பு, சுலபமாக மறந்துவிடாது. ஆனால் உங்கள் சொந்த அனுபவங்களோடு ஒத்துப் போனால் ஒழிய மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கும் படைப்பு இல்லை.

  தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன், ரதி, பிரமிட் நடராஜன், ஜனகராஜ் நடித்து “சொல்ல மறந்த கதை” என்று திரைப்படமாகவும் வந்தது. பச்சான் இதை வன்னியர் பின்புலத்துக்கு மாற்றி இருந்தார்.

  ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். அவரது வார்த்தைகளில்:

  சமத்காரம் மிக்க கதை சொல்லியான நாஞ்சில் நாடனின் கூரிய அவதானிப்பு கதாபாத்திரங்களையும் சூழலையும் கண் முன் நிறுத்த, அங்கதம் அதில் ஊடுருவிச் செல்லும் படைப்பு இது. வேளாள வாழ்வின் பெருமிதமும், சரிவும், செழிப்பும், அற்பத்தனமும் மாறி மாறித் தெரிந்து நமது புதையுண்ட ஞாபகப் பதிவுகளை கிளர்த்துகின்றன. தங்கைகளை கரையேற்ற பணக்கார வீட்டில் பெண்ணெடுத்த சிவதாணு வீட்டோடு மாப்பிள்ளையாகி படும் அவமானங்களில் நாஞ்சில்நாடனின் பாசத்திற்குரிய கருவாகிய, ’வறுமையின் அவமானம்’ கூர்மை கொள்கிறது.

  எஸ்.ரா.வும் இதை தமிழின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார்.

  புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 225 ரூபாய்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்