காஜுலு லக்ஷ்மி நரசிம்ம செட்டியார் – முன்னோடி

காஜுலு லக்ஷ்மி நரசிம்ம செட்டியார் என்ற பேரை நான் முன்னால் கேட்டதே இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். ஆங்கில அரசு நிலைப்ப்படும்போது சட்ட ரீதியாக குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் தாதாபாய் நௌரோஜி என்று சொல்லலாம். கிழக்கிந்திய கம்பெனிக்கும் விக்டோரியா மகாராணிக்கும் பெட்டிஷன் போட்டது, பத்திரிகை நடத்தியது எல்லாம் குறிப்பிட வேண்டியவை. பெட்டிஷன்களில் பத்து பதினைந்தாயிரம் கையெழுத்துக்கள்! அந்தக் காலத்தில் இத்தனை பேரை ஒன்று சேர்த்து குரல் கொடுப்பது எத்தனை கஷ்டமாக இருந்திருக்க வேண்டும்! இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது, ஆனால் எந்த விவரமும் தெரியவில்லை. கூகிள் செய்து பார்த்தேன், மலர்மன்னன் எழுதிய ஒரு கட்டுரையில் இவரைப் பற்றி இரண்டு வரி வந்திருக்கிறது, அவ்வளவுதான். மலர்மன்னன் வார்த்தைகளில்:

அரசு அதிகாரிகள் ஆதரவுடன் மிஷனரிகளின் மத மாற்ற நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதைக் கண்டு ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் காஜுலு லக்ஷ்மநரசு என்ற தெலுங்கு வணிகர் ‘க்ரெசன்ட்’ என்ற பெயரில் 1844-ல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரது முயற்சிக்கு மெட்ராஸ் நேடிவ் அஸோசியேஷன் என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்தது. சென்னை வணிகர்கள் முன்னின்று நடத்திய இச்சங்கம், கிழக்கு இந்தியக் கம்பெனி வர்த்தகத்திற்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. 1858-ல் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அதிகாரத்தை மேற்கொண்டு நேரடியாக ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டதால் க்ரெசென்ட்டின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 1868-ல் லக்ஷ்மநரசு இறந்துவிட, அவரது பத்திரிகையும் நின்று போனது.

ந. சஞ்சீவி எழுதி இருக்கும் “இரு பெரும் தலைவர்” என்ற புத்தகம் ஒன்றும் பேசப்பட வேண்டியதில்லை. காஜுலுகாருவைப் பற்றி விவரங்கள் இல்லை என்றால் இந்தக் குறிப்பே கூட வந்திருக்காது. புத்தகத்தை இணைத்திருக்கிறேன். காஜுலுகாருவைப் பற்றி தெரிந்தவர்கள் எழுதுங்களேன்!

பதிவர் ராமநாதன் காஜுலுகாருவைப் பற்றி இன்னொரு சுட்டி கொடுத்திருக்கிறார், அதில் நிறைய விவரங்கள் இருக்கின்றன. அவருக்கு நன்றி! நானும் இணையத்தில் தேடிப் பார்த்தேன், எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும், நான் தேடியது Kajulu-காரு. அவரோ Gazulu! தெலுகில் z ஒலி கிடையாது, அது என்ன Gazulu என்று தெரியவில்லை.

சஞ்சீவியின் இரண்டாவது பெரிய தலைவர் சேலம் ராமசாமி முதலியார். உ.வே. சாமிநாதய்யரை ஜீவக சிந்தாமணியைத் தேட வைத்ததே இவர்தான். முதலியார் பற்றி உ.வே.சா. தனது சுயசரிதையில் சொன்னதையே சஞ்சீவி ஏறக்குறைய திருப்பி எழுதி இருக்கிறார், அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சஞ்சீவியின் புத்தகம் – மின்னூல்
மலர்மன்னன் கட்டுரை
Madras Ramblings கட்டுரை